30.12.07

மேலும் கேள்விகள், ஆங்கிலத்தில்



கடந்த பதிவில் கேள்வி கேட்டிருந்த நண்பர் மேலும் சில கேள்விகளை கேட்டிருந்தார். ஒரு ஆவணமாக இருக்கட்டுமே என்று எனது பதிவிலியே பதில்களை தருகிறேன்.

சுவராசியமாக ஏதும் இருக்காது, ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மலையுச்சியிலுள்ள முதலியார் ஊத்து என்ற இடத்தில் எடுக்கப்பட்ட இந்த படத்தை தவிர...


Question : Is the photographs/video taken using Mobile phones/Digital
cameras are accepted by Indian evidence act?

Answer : Indian Evidence Act deals with photographs as Secondary Evidence. It can be accepted as evidence, subjecting the person who took the photograph to examination. However it is to be shown that the picture is foolproof or otherwise it would not be relied by the Court. I don’t think any court would believe a digital photo, as the same could be manipulated easily.

I saw in Trichy, a Traffic Police clicking the number plates of the bikes, violating red signal.

I read in newspaper that in Pramod Mahajan's case, an expert using a laptop and net connection demonstrated before the court that it was even possible to tamper with the sms messages stored in a cellphone.

***


Question :As per Cr. P.C - Sec 39, it is defining the sections of offences of IPC, for a public can give information to police. IPC sec 159-160 offence of affray) is not there. So a public cannot inform to police, if he saw an affray. Am I right?

Answer : Kindly read the section again. Section 39 makes it compulsory for every person to give information. That does not mean you cannot give information regarding the commission of the offences not listed therein.

In respect of those offences listed in Section 39 you are legally bound to give information. Hence failure to give information will attract the offence defined under Section 202 of IPC.

***


Question : As per Cr. P.C - Sec 43, any private person may arrest or cause to be arrested any person who in his presence commits a non-bailable and cognizable offence. So no private person (X) can make a private arrest of a person (Y), if he (Y) commits an offence of affray (IPC-160) which is bailable and cognizable . Am I right?

Answer : For a private person to effect arrest, the offence must have been both cognizable and non bailable. Since affray is bailable offence, private person cannot effect arrest.

Madurai

301207



பயணம் 1 - வேட்டங்குடி


Vettangudi Birds Sanctuary

மதுரை - மேலூர் - திருப்பத்தூர் சாலையில், திருப்பத்தூருக்கு சில கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது வேட்டங்குடி பறவைகள் சரணாலயம். அதிக அளவில் பிரபலமாகாத இந்த சரணாலயத்திற்கு குழந்தைகளை அழைத்துக் கொண்டு இருநாட்களுக்கு முன்பு போனது நல்ல அனுபவம்.

பறவைகளைப் பார்ப்பதற்கு வசதியாக உயரமான கண்காணிப்பு கோபுரம் உள்ளது. சரணாலயத்தை ஒட்டி உள்ள குடியிருப்பினை விட வேறு மனித இடையூருகள் இருக்காது. பறவைகளுக்கு தொந்தரவு என, கிராம மக்களும் தீபாவளிக்கு வெடி கூட வெடிப்பதில்லை.


Rest in Nest

மதுரை மேலூர் 30கி.மீ. பின்னர் மேலூரிலிருந்து சுமார் 25கி.மீ ரம்மியமான சாலையில் பயணம் செய்தால், வேட்டங்குடி வந்துவிடும். ஆனால், வழியில் ரொட்டித்துண்டினை பாதியாக வெட்டியது போன்று குன்றுகளை அறுத்து கிரானைட் கற்பாளங்களாக மாற்றுவதை காணும் அவலத்தினை தவிர்க்க இயலாது!



Ascent

கடைகள் ஏதும் இல்லை என்பதால், உணவுப் பொருட்களும், தண்ணீரும் கொண்டு செல்வது நல்லது. பிளாஸ்டிக் தவிர்க்க இயலாது எனில், கையுடன் திரும்பக் கொண்டு வந்து விடவும்.


Descent

படங்களை பெரிதாக பார்க்க, படத்தின் மீது க்ளிக்கவும்!

24.12.07

மீண்டும் மீண்டும் மரணதண்டனை!



The mood and temper of the public with regard to the treatment of crime and criminals is one of the most unfailing tests of the civilizations of any country

-Winston Churchill


வின்ஸ்டன் சர்ச்சில் மீது எனக்கு பெரிய அளவில் மரியாதை ஏதும் இல்லையெனினும், தனது எண்ணங்களை சிறந்த முறையில் வெளியிடும் அவரது ஆற்றல் குறித்து வியப்பு கலந்த மதிப்பு உண்டு. கடந்த நூறு ஆண்டுகளில் தோன்றிய அரசியல் தலைவர்களில் புகழ் மிக்க communicatorகளாக விளங்கிய மிகச் சிலரில் அவரும் ஒருவர்.

உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில், சர்ச்சிலின் மேற்கண்ட ஆங்கில வரிகள் அலசப்பட்டது என்பது அவரது மேதமைக்கு ஒரு சான்று!

அவரது இந்த வாக்கியத்தினை பல்வேறு பரிமாணங்களில் பார்க்கலாம் என்றாலும், சமீபத்தில் மதறாஸ் உயர்நீதிமன்றத்தான் ‘தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில்’ உறுதி செய்யப்பட்ட தூக்குத் தண்டனையினை இந்த வரிகளால் எவ்வாறு அணுகுவது என்பதை அவரவர் யூகத்திற்கே விடுகிறேன்.



மரணதண்டனை குற்றங்களை விட குற்றவாளிகளின் தகுதி ஓரளவிற்கும், பாதிக்கப்பட்டவரின் தகுதி பெருமளவிற்கும் தீர்மானிப்பதாக மரணதண்டனை எதிர்ப்பாளர்கள் ஒரு வாதத்தினை எடுத்து வைக்கிறார்கள். எனக்கு உடனடியாக மனதில் தோன்றும் பில்லா, ரங்கா பின்னர் கல்கத்தாவில் சமீபத்தில் தூக்கிலிடப்பட்டவர் வழக்கிற்கும் தர்மபுரி வழக்கிற்கும் ஒரு ஒற்றுமை உள்ளது.

தற்பொழுது உள்ள சூழ்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தண்டனை குறைக்கப்படும் வாய்ப்பு அதிகம். அதுதான், இறந்தவர்களுக்கு செலுத்தக்கூடிய பொருத்தமான அஞ்சலியாக இருக்கும்.

***

சில சமயங்களில், இப்பதிவுகளை படிக்கும் நண்பர்கள் தங்களது சந்தேகங்கள் குறித்து மின்னஞ்சல் அனுப்புவார்கள். அவ்வாறு கடந்த வாரம் மின்னஞ்சலில் நண்பர் ஒருவர் கேட்ட கேள்விகளுக்கான பதில்களை இங்கேயே தருகிறேன்.

கேள்வி : ஆயுள் தண்டனை என்பது ஆயுள் வரை என்று குறிப்பிட்டிருந்தீர்கள். ஆனால் குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 31(அ) எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அப்படிப்பட்ட நபருக்கு 14 ஆண்டுகளுக்கு மேலான தண்டனை அளிக்க கூடாது என்று கூறப்பட்டுள்ளதே?

பதில் : பிரிவு 31னை முழுவதும் படித்தால் இந்த குழப்பம் தீரும்.

ஒரே செயலில் பல குற்றங்கள் இணைந்து வரும். உதாரணமாக வெடிகுண்டு வீசி ஒருவரை காயப்படுத்தினால் கொலை முயற்சி குற்றமும் வரும். வெடிப்பொருள் சம்பந்தப்பட்ட குற்றமும் வரும். இரண்டிற்கும் தனித்தனி தண்டனை வழங்கப்படும். நீதிபதி நினைத்தான் இந்த தண்டனைகளை குற்றவாளி ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என்று கூற இயலும். ஆனால் அவ்வாறாக ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்கையில் மொத்த தண்டனைக் காலம் 14 ஆண்டுகளுக்கு மிகக்கூடாது என்பதுதான் இந்தப் பிரிவு கூற வருவது.

ஆனால் ஆயுள் தண்டனையினைப் பொறுத்தவரை நீதிபதி கூறினாலும், கூறாவிட்டாலும் மற்ற தண்டனைகள் அதனுடன் சேர்ந்தே அனுபவிக்கப்படும். எனவே இந்தப் பிரிவு ஆயுள் தண்டனையினைப் பொருந்தவரை, பொறுத்தமற்றது.

***

மரணதண்டனைக்கேதுவான குற்றத்தினைப் புரிந்தவர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டால், அவர் 14 ஆண்டுகளை சிறையில் கழிக்காமல் அவரது தண்டனைக் காலத்தை அரசு குறைக்க முடியாது என்று Cr.P.C. பிரிவு 433A கூறுகிறது.

ஆனால் சீர்திருத்தப்பள்ளிகளில் சேர்க்கப்படும் (Borstal School) சிறார்களுக்கு (Adolescents) (16 முதல் 21வயதுடையவர்கள்) இந்த விதி பொருந்துமா என்று மதுரை உயர் நீதிமன்ற கிளையில் விவாதிக்கப்பட்டு தீர்ப்பினை எதிர்நோக்கியுள்ளார்கள்.

***

ஆண்டிப்பட்டி மலைபகுதியில் பழங்கால குகை ஓவியங்கள் உள்ளன என்று குமுதத்தில் ஒருவர் எழுதியதை வைத்து, நாங்களும் பளியர் ஒருவர் துணையுடன் சித்திரப்புடவு எனப்படும் புடவிற்கு சென்றால், ஓவியங்களை காணவில்லை. ஆனால், 500 மீட்டர் உயரமுள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் அருமையான ஒரு நடைப்பயணம்!

முக்கியமாக எங்கள் பார்வையில் சிக்கிய படத்தில் நீங்கள் காணும் நபர்!!

மதுரை
24.12.07

1.12.07

மலர்கள்-புகைப்பட போட்டிக்காக...

என் வீட்டுத் தோட்டத்தில்...





Canon Powershot S5IS
Auto
Ex 1/250sec
ISO200
AV F 2.71
FL 6.0mm
Super Macro





என் வீட்டுப் பக்கத்தில்...




Manual
Ex 1/1600 seconds
ISO 800
AV F 4.51
FL 6.00 mm
Macro




இவை பறிப்பதற்கல்ல...





மதுரை
011207




8.11.07

சின்னதாய், ஒரு மின்னல்!

ஏறக்குறைய 500 வருடங்களுக்கு முன்னர் நடந்த கதை. மார்ட்டின் கெரி பிரஞ்சு தேசத்தை சேர்ந்த பெரிய ஒரு நிலச்சுவாந்தாரின் மகன். மார்ட்டினுக்கும் பெட்ராண்டே டி ரால்ஸ் என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றதென்றாலும், திருமண வாழ்க்கை அவ்வளவு மகிழ்ச்சிகரமானதாக இல்லை. சில வருடங்களாகியும் அவர்களுக்கு குழந்தையில்லை. மார்ட்டினுக்கு பாலியல் ரீதியான குறைபாடுகள் இருந்ததே காரணம் என்று சொல்லப்பட்டது. ஒரு கிராம வைத்தியப் பெண்ணிடம் ஆலோசனை கேட்க, பின்னர் என்ன நிகழ்ந்ததோ மார்ட்டினுக்கு புத்திர பாக்கியம் அமைந்தது.

சில காலம் கழித்து, மார்ட்டினுக்கும் அவரது தந்தைக்கும் குடும்ப சொத்து விவகாரமாக சச்சரவு எழ, வீட்டை விட்டு தனியே வெளியேற்றப்பட்டார் மார்ட்டின். பின்னர் அவர் தனது தந்தையின் பூர்வீக நாடான ஸ்பெயின் தேசத்துக்கு சென்றதாகவும், அங்கிருந்த ராணுவத்தில் கூலிப்படையாக சேர்ந்து விட்டதாகவும் சொல்லப்பட்டது.

எட்டு ஆண்டுகள் ஓடி மறைந்தன. மார்ட்டினின் தந்தை மறைந்திருந்தார். அவருடைய அளப்பறிய சொத்துக்கள் அவரது உறவினர்களின் மேற்பார்வையில். பெட்ராண்டேவோ உறவினர்களின் பாதுகாப்பில் தனது குழந்தையுடன் தனியே அதே கிராமத்தில் வசித்து வந்தார்.

திடீரென ஒரு நாள் வாசலில் மார்ட்டின்! பெட்ராண்டேவையும் குழந்தையையும் தேடி!!

முதலில் அனைவருக்கும் சந்தேகம். பின்னர் வந்தவருக்கு உருவ ஒற்றுமை இருந்தது. முன்னர் நடந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் நினைவு கூறவும் முடிந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக பெட்ராண்டேவுக்கு வந்த மார்ட்டினை மிகவும் பிடித்து விட்டது, முக்கியமாக மார்ட்டினிடம் இந்த எட்டு ஆண்டுகளில் தென்பட்ட பெரிய மாற்றம். மார்ட்டினுக்கோ காதல் காத தூரம். வந்தவனோ அதில் வல்லவனாக இருந்தான். திருமணமான பின்னர் முதன் முறையாக மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள் பெட்ராண்டே.

மார்ட்டினின் வருகையும், மனைவியுடனான புதிய வாழ்க்கையும் மற்ற உறவினர்களை சங்கடப்படுத்தியது. அவர்கள் இத்தனை நாட்கள் அனுபவித்து வந்த சொத்துக்களுக்கல்லவா வேட்டு வந்து விட்டது. அவர்கள் பெட்ராண்டேவின் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக விஷம் விதைத்தனர். 'வந்தவன் அவளையும் சொத்துக்களையும் திருட வந்தவன்' என்று சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லி வந்தனர். பெட்ராண்டேவுக்கோ தர்ம சங்கடம். அவள் கஷ்டம் அவர்களுக்கு எங்கே தெரியப் போகிறது?

பெட்ராண்டே வந்தவனை மார்ட்டின் என்று நம்பினாலும், வேறு வழியில்லாமல் உறவினர்களுடன் சேர்ந்து விரும்பாத ஒரு வழக்கை தாக்கல் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார். ஆனால் நீதிமன்றம், வழக்கின் இறுதியில், வந்தவன் ஒரு போலி என்று நிரூபிப்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்ற நிலைக்கு வந்தது.

நீதிபதி தீர்ப்பினை 'வந்தவன் மார்ட்டின். அவர் அவருக்கு சொந்தமான சொத்துக்களை கையகப்படுத்தலாம்' என்ற தனது தீர்ப்பினை வாசிக்க ஆரம்பித்து விட்டார். பெட்ராண்டேவுக்கோ உள்ளுக்குள் மகிழ்ச்சி...

தீடீரென செயற்கையான கட்டைக் கால்களுடன் ஒரு நபர், நீதிமன்றத்திற்குள் வந்தார்....பார்த்தால் மார்ட்டின்!!!

வந்தவன், மார்ட்டினுடன் ஸ்பெயின் கூலிப்படையில் பணியாற்றிய பன்செட்டே. பல்குரல் மன்னன் மற்றும் சிறந்த நடிகன். மார்ட்டினை சிநேகம் பிடித்த அவன், மார்டினின் முழுக்கதையும் கேட்டு அறிந்து பின்னர் மார்ட்டினாக உருமாறியிருந்தான். இருவரும் நன்கு பரிசோதிக்கப் பட்டு, பன்செட்டே போலி என்பது உறுதியானது.

இறுதியில் பன்செட்டே தான் போலி என்பதை ஒத்துக் கொள்ள...சில நாட்களில் தூக்கிலிடப்பட்டான்.

(One Author named Natalie Zemon Davis has written this story into a book titled The Return of Martin Guerre (1983). This has also been made into a film)


(இதே போன்றதொரு இந்திய வழக்கினைப் பற்றி எழுதுவதற்காக, இணையத்தில் தேடியதில் கிடைத்த சுவராசியமான மற்றொரு சம்பவம் இது. இந்திய வழக்கு ‘நான் யார்?’ என்ற பதிவில்)


(குஜராத் படுகொலைகளில் மோடியின் பங்கு பற்றி தெஹல்கா ஆய்வுகளை படித்த, பார்த்த எனக்கு, முன்பு நான் எழுதிய ‘விஷம் கக்கிய பாம்பு’ என்ற அமெரிக்க வழக்கு ஒன்றும் ஞாபகம் வந்தது)

நீதிபதிகள் கடவுள் அல்ல!

‘நமது விமானப் பணிப்பெண்களில் பலர் மிகத் தடிமனாக இருக்கிறார்களே’

‘ஆம், அதனால்தான் அவர்கள் இருக்கைகளுக்கிடையே நடக்க சிரமப்படுகிறார்கள் போல’


சுமார் 15 வருடங்களுக்கு முன்னர், கேலியும் கிண்டலுமான மேற்கண்ட உரையாடலை நான் கேட்டது ஏதோ கேளிக்கை விடுதியிலில்லை! தங்கள் உரிமைகளின் கடைசிப்புகலிடமாக மக்கள் கருதும், சென்னை உயர்நீதிமன்றத்தில். அதுவும் பின்னர் உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றிய நீதிபதிக்கும், சென்னையின் முக்கியமான சட்ட நிறுவனம் ஒன்றின் வழக்குரைஞருக்கும் இடையே, திறந்த நீதிமன்றத்தில் நடைபெற்ற உரையாடல்.

பலர் இந்த உரையாடலில் மகிழ்ந்து சிரித்தாலும், உயர்நீதிமன்றத்தில் புதிதாக தொழிலை ஆரம்பித்திருந்த எனக்கு சற்று வியப்பாக இருந்தது!

ஆயினும் இந்த சொல்லாடல்கள் (comments) எனக்கு இன்றும் மறக்கால் இருப்பதற்கு ‘that’s what they find it difficult to walk between the aisles’ என்று நுனி நாக்கு ஆங்கிலத்தில் அந்த வழக்குரைஞர் கூறியதை வைத்து aisle என்ற வார்த்தையினை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று கற்றுக் கொண்டதும் ஒரு காரணம்.

***

இந்த உரையாடல் நடைபெற்ற காலகட்டத்தில் இந்தியன் ஏர்லைன்ஸ் மட்டும்தான் இருந்தது என்பதை விடவும், இன்று போல தனியார் தொலைக் காட்சிகள் இல்லை என்பது இங்கு முக்கியம். ஏனெனில், இவ்வாறு தொலைக்காட்சிகள் வந்த பின்னர்தான், நீதிமன்றத்தின் ஒவ்வொரு நடவடிக்கையும் தொலைக்காட்சி தவிர பிற அச்சு ஊடகங்களாலும் பெரியதொரு பூதக்கண்ணாடி கொண்டு பார்க்கப்படுகின்றன என்பது எனது அனுமானம்.

இன்றைய சூழ்நிலையில் இதே போன்றதொரு கிண்டலை திறந்த நீதிமன்றத்தில் கூற ஏதாவது நீதிபதி தைரியம் கொள்வாரா என்பது கேள்விக்குறியது. ஏனெனில், அடுத்த நாளே, ‘விமானப் பணிப்பெண்கள் தடிமனாக இருக்கிறார்கள் - சென்னை உயர்நீதிமன்றம் வருத்தம்’ என்று தலைப்புச் செய்தி வெளியாகி, அந்த நீதிபதி பின்னர் பத்திரிக்கை கடிதங்களில் கிழித்து எறியப்படும் சாத்தியக் கூறுகள் அதிகம்.

***

சில வருடங்களுக்கு முன்னர் மும்பையில் தொழில் புரிகையில், பரபரப்பான வழக்கு ஒன்றில் தினசரி நீதிமன்றத்தில் நடக்கும் வாத பிரதிவாதங்களோடு, நீதிபதிகளின் சொல்லாடல்களையும் (comments) பத்திரிக்கைகள் வெளியிட, அதனால் மக்களுக்கு தவறான செய்தி சென்று சேருவதாக புகார் செய்யப்பட, நீதிபதிகள் அந்த வழக்கில் நீதிமன்ற சொல்லாடல்களை வெளியிடக் கூடாது என்று தடை செய்தனர். ஆயினும், இந்த தடை சட்டத்திற்கு புறம்பானது என்பது எனது கருத்து.

***

நீதிமன்ற சொல்லாடல்கள் தீர்ப்புகள் அல்ல. பல சமயங்களில் அவை நாம் நினைப்பது போல, நீதிபதிகளில் மனதில் உள்ள கருத்தின் வெளிப்பாடும் அல்ல. எனது தனிப்பட்ட அனுபவத்தில், நீதிபதிகள் தங்களுடைய மனதினை என்னுடைய வழக்கின் பக்கம் திருப்பிய பின்னர், மேலும் வேகமாக என் வழக்கிற்கு எதிரான கேள்விகளை எழுப்புவதை பார்த்திருக்கிறேன். ஏனெனில், இருக்கும் கொஞ்ச நஞ்ச சந்தேகத்திற்கும் என்னால் பதில் அளிக்க முடிந்தால்...தீர்ப்பினை எவ்வித குறைபாட்டிற்கும் வழியின்றி எழுதலாம் என்ற ஆதங்கமே தவிர வேறல்ல!

ஆனால், வழக்கினை கவனித்துக் கொண்டிருக்கும் கட்சிக்காரருக்கோ, ‘என்ன நீதிபதி நம்முடைய வழக்குரைஞரை இப்படிப் போட்டு குடைகிறார். நம் பக்கம் சாதகமாக இல்லையோ?’ என்று கவலை ஏற்படுவதுண்டு!

சில அவசரகுடுக்கை கட்சிக்காரர்கள், நிலைமை புரியாமல் வேறு தவறான யூகங்களுக்கு உட்பட்டு முட்டாள்தனமான சில முடிவுகளுக்கு தங்களை இட்டுச் செல்வார்கள்.


***

சமீப காலமாக பொது நலம் சார்ந்த வழக்குகளில், இவ்வாறு நீதிமன்றங்களில் நடக்கும் சொல்லாடல்கள், ஊடகங்களால் பரபரப்பாக்கப்பட்டு, நீதிமன்றங்களின் நம்பகத்தன்மையினையே கேள்விக்குறியாக்கும் நிலமைக்கு இட்டுச் சென்றுள்ளன.

உதாரணமாக, சமீபத்தில் வாதப் பிரதிவாதம் முடிந்த இட ஒதுக்கீடு வழக்கில் நீதிபதிகள் எழுப்பும் கேள்விகள் ஏதோ, அவர்களின் தீர்ப்பு போல பத்திரிக்கைகளால் முன்னிலைப்படுத்தப்பட்டதாகவே உணர்கிறேன். நான் தவறாமல் படிக்கும் ‘இந்து’வில் இந்த செய்திகளுக்கு அளிக்கப்பட்ட தலைப்புகள் இவ்வாறான எண்ணத்தை என்னுள் தோற்றுவித்தது.

நீதிபதிகள் மனிதர்கள். அவர்களுக்கு தனிப்பட்ட வெறுப்பு விருப்புகள் (bias) உள்ளது உண்மைதான். அவ்வித விருப்புகள் அவர்களது நீதிமன்ற சொல்லாடல்களில் வெளிப்படுவதும் எதிர்பார்க்கக்கூடியதே! ஆயினும், அந்த விருப்பினை தீர்ப்பாக வடிப்பது கடினம். அவ்விதமான விருப்பு சார்ந்த தீர்ப்புகள், பிரபலப்படுத்தப்படுவதும், விமர்சிக்கப்படுவதும் தவறு இல்லை...தேவையானதும் கூட!

ஆனால், சொல்லாடல்கள் (comments) அவ்வளது தீவிரமாக எடுத்து அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராயப்பட வேண்டியவை அல்ல!

காலை முதல் மாலை வரை, மதிய இடை வேளை தவிர மற்ற நேரங்களில் ஒரு தேநீருக்காக கூட இருக்கையிலிருந்து எழ இயலாத ஒரு நீதிபதி, இறுகிய முகத்துடன் சேரியமாக ஒரு வழக்கினை கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது, சேடிஸம். நான்கு பேர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதால், அவர்கள் தங்கள் பணியில் இயல்புத் தன்மையற்று இருக்க வேண்டுமென்பது, சலிப்பூட்டும் ஒரு அலோசனன.

அசதி அதிகமானால், எழுந்து அல்லது உட்கார்ந்தபடியே கைகளை பின்னுக்கு தள்ளி சோம்பல் முறித்துக் கொள்வது ஒரு காவல்காரருக்கு கூட இயலுவது போல ஒரு உயர்நீதிமன்ற நீதிபதிக்கு இயலாது.

ஆயினும் ஊடகங்களை மட்டும் நான் குறை கூறவில்லை. நீதிபதிகளும் விஞ்ஞானத்தின் வளர்ச்சியினை புரிந்து கொண்டு தங்கள் வார்த்தைகளை சற்று கவனமுடன் தேர்ந்தெடுக்க வேண்டிய கால கட்டத்தில் உள்ளனர்.

‘தமிழக பந்த்’ வழக்கில் முதலில் நீதிபதி அவசரத்தில் தெளித்த வார்த்தைகளை, ஏதோ ‘ஆட்சியினைக் கலைக்கும் சர்வ அதிகாரம் அவரது கையில் இருப்பதைப் போலவும், தமிழக அரசு அதோ கதி’ என்ற ரீதியிலும் ஆங்கில தொலைக்காட்சி ஊடகங்கள் அன்று திரும்ப திரும்ப ஓட்டிக் கொண்டேயிருந்தன!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு என்பது அவ்வளவு எளிதல்ல. தகுந்த அறிவிப்பு வழங்கப்பட்டு, விசாரிக்கப்பட்டு பல்வேறு காரணிகளை கவனத்தில் கொண்டே பின்னர் தீர்ப்பு வழங்க முடியும். எனவே அன்று கூறிய வார்த்தைகள், அவரது பணியின் இடையே நடைபெற்ற தனிப்பட்ட சொல்லாடல் என்ற அளவிலேயே நாம் பார்க்க வேண்டும், என்பதே எனது கருத்து.

ஆனால், ஏதோ ஒரு தீர்ப்பினைப் போல பெரிய முக்கியத்துவம் அளித்து, நீதிமன்ற நடவடிக்கைகளை பெரிதும் அறிந்திராத மக்களிடம் தேவையற்ற விவாதத்தினை எழுப்பியதில் ஊடகங்களும் ஒரு காரணமாகி விட்டன!

‘Let the Judges be judged by their Judgements but not on their casual outbursts...they are after all humans like you and me’

பிரபு ராஜதுரை
08.11.07

3.11.07

கண்ணீர்த்துளி, கட்டிடமாக!


தாஜ்மகாலைப் பார்க்க வேண்டுமென்ற ஆர்வம், பெரிதாக எதுவும் எனக்கு இருந்ததில்லை. தாஜ்மகால் படங்களை சிறுவனாக இருக்கையில் காண்கையில், இதில் என்ன அப்படி உலக அதிசயம் இருக்க முடியும் என்று நினைப்பேன். பின்னாட்களில், தாஜ்மகால் சென்றவர்கள் கொணரும் புகைப்படங்களில், அதன் பீடத்தின் மீது நிற்கும் மனிதர்களின் உருவ அளவோடு ஒப்பிடுகையில், தாஜ்மகாலின் பரிணாமம் புரிய, ‘முழுவதும் சலவைக்கல்லிலான, பிரமாண்டமான ஒரு கட்டிடத்தினை நேரில் பார்க்கையில் வியப்பாகத்தானே இருக்கும்... அதுதான் அதன் சிறப்பு போல’ என்று நினைத்தேன்.

ஆயினும் இதே காலகட்டத்தில் எகிப்திய பிரமீடுகள், சீனப் பெருஞ்சுவர் ஆகியவற்றின் பிரமாண்டங்களைப் பற்றி மேலும் அறிந்ததில், தாஜ்மகால் எனது அதிசய பட்டியலில் இல்லை.

கடந்த வாரம், ஒரு வழக்கு விடயமாக தில்லி சென்ற பொழுது, கூட வந்த நண்பர் ‘தாஜ்மகாலினைப் பார்க்காமல் திரும்பக் கூடாது’ என்று கூறிய பொழுது, ஒரு நாள் தாஜ்மகாலுக்காகவா என்று சலிப்பாகத்தான் இருந்தது.

ஆனால், சிவப்புக் கற்களாலான முகப்புக் கட்டிடத்தை கடந்து உள்ளே செல்கையில் மெல்ல தன்னை வெளிக்காட்டிய தாஜ்மகால்...

சுற்றிலும் முரட்டுக் காவலர்கள் சூழ்ந்து நிற்க நடுவே மெளனமாக ஒரு பெண் நின்றிருப்பதை காண்பது போன்ற இனந்தெரியாத சோகம் என்னைக் கவ்வியது. ‘காலத்தின் கன்னத்தில் வழிந்த கண்ணீர்த்துளி’ என்று தாஜ்மகாலை தாகூர் கூறியதுதான் உடனடியாக நினைவுக்கு வந்தது.

கட்டிடங்களையும் ஆண் பெண் என பிரிக்க முயன்றால், நடுவே நிற்கும் சலவைக்கல் மாளிகையை பெண்ணாகவும், அதன் மூன்று பக்கங்களிலும் உள்ள சிவப்பு கட்டிடங்களை ஆணாகவும் எளிதில் கூற முடியும். எனக்கு அவ்வாறுதான் தோன்றியது!

உண்மையில் அன்று தாஜ்மஹாலினை காணும் வரை ஷாஜகானையும் அவன் காதல் மனைவியையும் நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. ஆனால், தாஜ்மஹாலினை கண்ட மாத்திரத்தில் ஷாஜகானும், மும்தாஜும் சோக சித்திரமாக என்னை நிறைத்திருந்தனர்.

காதலை, மனிதர்கள் கவிதையாகவும், நடனமாகவும், பாடலாகவும், இசையாகவும் ஏன் சித்திரமாகவும் வெளிப்படுத்தியிருக்கின்றனர். ஷாஜஹானோ கட்டிடக் கலைப் பிரியன். தன் மனைவி மீது கொண்ட அளவற்ற காதலையும், அதன் பிரிவுத் துயரையும் ஒருவன், கட்டிடமாக வெளிப்படுத்தினால்...தாஜ்மகாலை விட அழகாகவும், பொருத்தமாகவும் யாராலும் வெளிப்படுத்த முடியாது.

‘if one wants to express his love in the form of a structure, I am standing before it’ தாஜ்மஹாலின் பீடத்தின் அடியிலிருந்து என் மனைவியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட என்னை மறந்து கூறிய வார்த்தைகள்.


***

ஷாஜஹானின் காதலின் வெளிப்பாட்டிற்காக செலவழிந்தது எண்ணற்ற கலைஞர்களின் உழைப்பும், அளவற்ற பொருட் செல்வமும். அவுரங்கசீப்பிற்கு இவை எரிச்சலூட்டியிருக்கலாம். அவரது பார்வையில் அது நியாயமாக கூட இருக்கலாம்...

ஆனால், வாழ்வின் மகிழ்வுகள் வெறுமே உணவிலும், உடையிலும் மட்டும் இருப்பதில்லையே!

‘a thing of beauty is a joy for ever’ என்ற ராபர்ட் ப்ரோஸ்டின் வரிகள்தான் தாஜ்மஹாலின் தேவையினை நியாயப்படுத்துகின்றன!


***

பலர் என்னைக் கிண்டல் செய்தது போல தாஜ்மகால் நண்பரோடு போகக் கூடிய இடமல்ல. நான் கவனித்தவரை பெண்கள் தாஜ்மகால் மீது அதீத ஆர்வம் காட்டுகிறார்கள். பெண்களின் கண்களில் வியப்பு பொங்கி வழிய, கூட வரும் ஆண்களில் கண்களில் கொஞ்சம் பொறாமையிருந்தது!

மதுரை
03.11.07

28.10.07

கலைஞர், ஞாநி மற்றும் சுந்தரமூர்த்தி

நேற்று டிவியில் சேகர் குப்தாவின் வாக் த டாக் நிகழ்ச்சி...கருணாநிதி வாக்காமல் சோபாவில் சாய்ந்தபடி பேசினார். கனிமொழி மோசமாக கருணாநிதி கூறுவதை சேகருக்கு மொழிபெயர்த்தார். முதலாம் பகுதி போன வாரம் வெளிவ்ந்ததாம். எப்படியோ நான் பார்த்தவரை புரிந்தது, கருணாநிதி இல்லாமல் திமுக அவ்வளவுதான் என்று!

பலமுறை பலர் கூறியதுதான்...தனது சாதுரியம், முக்கியமாக நகைச்சுவை உணர்வால் பேட்டியின் இறுக்கமான சூழ்நிலையினை எளிதில் அவரால் தளர்த்த முடிகிறது. மேலும், பேட்டியாளரையே வசியப்படுத்துவதன் (charm) மூலம், அவரால் சங்கடப்படுத்தக்கூடிய கேள்வியினை தவிர்க்க முடிகிறது. தமிழகத்தின் வேறு எந்த அரசியல் தலைவருக்கும் இல்லாத ஒரு திறமை அவரிடம் உள்ளது. இவ்விஷயத்தில் திமுகவில் வேறு யாரையும் அவருக்கு அருகில் கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை!

கனிமொழி மீது எனக்கு இருந்த நம்பிக்கை கூட அவரது சமீபத்திய அரசியல் நடவடிக்கைகளாலும், இந்தப் பேட்டியில் அவர் தடுமாறியதை வைத்தும் போய் விட்டது. தயாநிதிக்கும் இனி திமுகவில் எதிர்காலம் இருக்கிறதா என்று புரியவில்லை!


***

தமிழக அரசியலில் கலைஞர் இல்லாமல் போவது அவரது எதிரிகளுக்கு மகிழ்ச்சியளிக்கலாம். ஆனால், அதன் விளைவுகள் அவர்களுக்கு சாதகமாக இருக்கப் போவதில்லை! தமிழகத்தில் தீவிரவாதத்தினை நோக்கி சென்றிருக்க வேண்டிய பல இளைஞர்களை, மட்டுப்படுத்தி ஜனநாயக பாதைக்கு இழுத்ததில் முழுப்பங்கு திராவிட இயக்கங்களுக்குத்தான் என்பது என் எண்ணம்.

இன்றும் கலைஞர் மட்டுமே, தடுமாறும் உள்ளங்களை மட்டுப்படுத்தும் ஒரு காரணியாக இருக்கிறார். கலைஞரை விட்டால், திமுகவில் அதன் ஆதர்ச கொள்கைகளான இறை மறுப்பையும், இட ஒதுக்கீட்டினையும், பார்ப்பனீய எதிர்ப்பினையும் பற்றிப் பேசுவதற்கு யார் இருக்கிறார்கள்?

கலைஞருக்குப் பின் இவ்வகையான கொள்கைகளில் ஈர்க்கப்படும் படித்த இளைஞர்கள் ம.க.இ.க போன்ற தீவிர இயக்கங்களில் தஞ்சமடையப்போகிறார்கள் என்பது எனது அனுமானம்.


***

அரசியலுக்காக பல சமரசங்களைச் செய்து கொண்ட கலைஞரிடம், மனதின் ஆழத்தில் பழைய உணர்வுகள் பதுங்கியிருக்கின்றன என்று ராமர் விஷயத்தில் அவரிடம் தோண்டித் தோண்டித் துருவிய சேகரிடம், உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இரு முறை ‘சடார்’ என அவர் பதிலளித்ததில் புரிந்தது. எவ்வித ஜாக்கிரதை உணர்வுமின்றி மனதில் இருந்து வெளிப்பட்ட பதிலாக இருந்தது.

டிப்ளோமேட்டிக்காக பதிலளித்து வந்தவரிடம் துருவித் துருவி, ‘இது பெரியார் நாடு. இங்கு பிஜேபிக்காரர்கள் கூறுவதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்’ என்று கூற வைத்த சேகரை பாராட்ட வேண்டும்.

கொல்லன் தெருவில் ஊசி விற்பதைப் போல, ‘நீங்கள் ராமாயணம் படித்திருக்கிறீர்களா?’ என்று சேகர் ஆச்சரியமாக வினவ...’வால்மீகி ராமாயணம் மட்டுமல்ல. ஆறு வகையான ராமாயணத்தையும் படித்திருக்கிறேன்’ என்று கூறி வாயடைக்க வைத்தார்.

அடுத்த கட்ட திமுக தலைவர்கள் கடந்த வார குமுதம் படித்திருந்தாலே ஆச்சரியம்!

மதுரை
28.10.07

(எனது வலையக நண்பர் சுந்தரமூர்த்தியின் பதிவுக்கு எதிர்வினையாக எழுதியது. கொஞ்சம் அதிகமானதால் தனிப்பதிவாக இங்கு)

26.10.07

கட்டாய திருமணப் பதிவு!

பொதுநலம் குறித்த விடயங்களில் நமது நீதிமன்றங்களின் செயல்பாடு ‘படித்த நடுத்தர மக்கள்’ என்று வகைப்படுத்தப்படும் மக்கள் கூட்டத்தின் பொதுவான கண்ணோட்டத்திலேயே அமைகிறது என்ற எண்ணம், எப்போதுமே எனக்கு உண்டு. ஒடுக்கப்படும் மக்களுக்காக அரசு கொணரும் நலத்திட்டங்களின் பலன்கள், இறுதியில் மத்தியதர மக்களால் அபகரிக்கப்படுவதைப் போலவே நீதிமன்றத்தின் முன் தங்களின் குரல்களை ஒலிக்கவியலா மக்களுக்காக ஏற்றுக் கொள்ளப்பட்ட பொதுநல வழக்குகள், இன்று மத்தியதர மக்களால், தங்கள் ஆதங்கங்களை கொட்டும் ஒரு ஊடகமாக கைப்பற்றப்பட்டுள்ளது.

அரசின் மற்ற இரு அங்கங்களான நிர்வாகம் (executive) சட்டமியற்றுதல் (legislature) ஆகியவற்றின் முன் வைக்கப்பட வேண்டிய அனைத்து கோரிக்கைகளும் இன்று, பொதுநல வழக்குகளாக நீதிமன்றத்தின் முன் தாக்கல் செய்யப்படுவதில் எரிச்சலுறும் நீதிபதிகள் சமயங்களின் அடித்தட்டு மக்களின் (voiceless people) பிரச்னைகளை தாங்கி வரும் வழக்குகளையும் தூக்கிக் கடாசி விடுகின்றனர்.

திருமணங்களை கட்டாயமாக பதிவு செய்வது சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவும், இன்றைய சூழ்நிலையில் அத்தியாவசியமான ஒன்றா என்பது கேள்விக்குறியதே!


***

பெரும்பான்மையான திருமணங்கள் இங்கு பதிவு செய்யப்படாமல் போவதால், பின்னர் ஏற்படும் பிரச்னைகளை கவனத்தில் கொண்டு உச்ச நீதிமன்றம், திருமணங்களை கட்டாயமாக பதிவு செய்யும் வண்ணம் குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் விதிகளை (Rules) வகுக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

வழக்கம் போலவே, முஸ்லீம் பெர்ஸனல் லா போர்டு (Muslim Personal Law Board) தனது மெல்லிய எதிர்ப்பினை தெரிவித்துள்ளது. விடயம் என்னவென்று புரியாமலே, மீண்டும் தனிநபர் சட்டம் (Personal Law) பொது சிவில் சட்டம் போன்ற பிரச்னைகளை கிளப்பப்படும் அபாயம் உள்ளது.


***

பத்திரிக்கைச் செய்திகளை படிக்கையில், உச்ச நீதிமன்றா உத்தரவு ஏதோ இஸ்லாமியர்களின் உரிமையில் தலையிடுவது போன்ற பயத்தினை (apprehension) ஏற்ப்படுத்துகிறது என்றாலும் இப்படி ஒரு விதியினால் பிரச்னை இஸ்லாமியர், கிறிஸ்தவர் அல்லாத மற்றவர்களுக்கே உள்ளது.

கிறிஸ்தவர்களில் திருமணங்கள் தேவாலயங்களில் பதிவு செய்யப்படுகின்றன. இஸ்லாமியர்களின் திருமணங்களும் அவர்கள் சார்ந்திருக்கும் ஜாமாத்தில் பதிவு செய்யப்படுகின்றன. பிறப்பு, இறப்புகள் எவ்வாறு சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் மூலம் உள்ளாட்சி அமைப்புகளிடம் தெரிவிக்கப்பட்டு பதிவு செய்யப்படுகின்றனவோ, அவ்வாறே தேவாலயங்களும், ஜமாத்துகளும் பதிவாளர் அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டலாம்.

ஆனால் மற்றவர்கள்?

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நடத்தப்படும் திருமணங்களை பதிவு செய்ய அங்கேயே ஏற்பாடு செய்யலாம். எழுதப்படிக்கவே தெரியாதவர்கள் பூசாரிகளாக இருக்கும் குக்கிராம கோவில்களில், திருமணங்களை எப்படி பதிவது? கூடி வாழ்வதற்கு கோவில்களை கூட நாட முடியாத மக்களை என்ன செய்வது?

படித்த நடுத்தர மக்களை திருமணங்களை பதிவு செய்ய கட்டாயப்படுத்தலாம். பெருவாரிய மக்கள் கூட்டம் இங்கு அன்றாட உணவுக்கே அல்லல்படுகையில், திருமணப் பதிவிற்காக அவர்கள் மெனக்கெடப் போவதில்லை!

***

திருமணப் பதிவினை எப்படி கட்டாயப்படுத்துவது?

சொத்துப் பத்திரம் என்றால், பதியாவிட்டால் சொத்து உங்களுடையதில்லை எனலாம். திருமணம் செல்லாது என்று கூற முடியாது. இவ்வாறாக திருமணங்களை கட்டாயமாக பதிவு செய்ய விதிகளை வகுக்க கூறும் இந்து திருமண சட்டத்தின் பிரிவு 8ல், பதிவு செய்யாவிட்டால் ‘இருபத்தி ஐந்து’ ரூபாய் அபராதம் விதிக்கலாம் என்று இருக்கிறது. அவ்வளவுதான் முடியும்.

இருபத்தி ஐந்து ரூபாய் அபராதம் விதிப்பதற்காக வழக்கு தொடருவதற்கு, அரசு இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் செலவு செய்ய வேண்டியிருக்கும்.

***

கடந்த வாரம் தில்லியிலிருந்து ஆக்ராவிற்கு காரில் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. போகும் வழியில் நான் பார்த்த எந்த ஒரு டிராக்டருக்கும் முன்னாலும் சரி, பின்னாலும் சரி பதிவு எண்...இல்லை பதிவு எண் எழுதியிருக்கும் போர்டு கூட இல்லை!

எந்த டிரைலரிலும் பின்னால் சிவப்பு விளக்கு வேண்டாம், சற்றே தெளிவாக தெரியும் பெயிண்ட் கூட அடிக்கப்பட்டிருக்கவில்லை!

சூப்பர் ஹைவேயான தில்லி-ஆக்ரா சாலையில் இரவில் சற்று கவனக்குறைவாக இருந்தாலும், முன்னால் செல்லும் டிராக்டருடன் மோதக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம். பொதுமக்களின் உயிரோடு விளையாடும் இவ்வகை சட்ட மீறல்களை, நாட்டின் தலைநகருக்கு அருகிலேயே நம்மால் தடுக்க முடியவில்லை. திருமண பதிவை கட்டாயப்படுத்துவதாவது!

மக்களால் கேலிக்கூத்தாக்கப்படும் ஒரு விதியினை இயற்றுவதற்கு பதிலாக, அரசினை உச்ச நீதிமன்றம் வேறு உருப்படியான வேலைகளை பார்க்க உத்தரவிட்டிருக்கலாம்.

மதுரை
26.10.07

22.9.07

நீதிமன்ற அவமதிப்பு - நீதிக்கு அவமரியாதை?

கடந்த வெள்ளிக்கிழமை, மும்பை ‘மிட் டே’ பத்திரிக்கையாளர்கள் சிலரை, நீதிமன்றத்தின் மாண்பினை குறைப்பது போல செயல்பட்டதாக கூறி டெல்லி உயர்நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின்படி (Contempts of Courts Act’1971) தண்டனையளித்துள்ளது.

தண்டிக்கப்பட்டவர்கள் ‘நாங்கள் உண்மையைத்தானே கூறினோம்’ என்ற வாதத்தினை ஏற்றுக் கொள்ளாததின் மூலம் நீதிமன்றம் தனது கடிகார முள்ளினை இருபது ஆண்டுகள் பின்னோக்கி திருப்பியுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளைப் பொறுத்தவரை ‘உண்மை’ என்பதை எதிர்வாதமாக (truth as a defence) ஏற்றுக் கொள்ளத்தக்க வகையிலாவது அதன் கடுமையினை குறைக்க வேண்டும் என்று பரந்த நோக்குள்ளவர்கள், குறிப்பாக பத்திரிக்கையாளர்கள் பலரும் எழுப்பிய கோரிக்கையினை கொள்கையளவில் இல்லையென்றாலும், மனதளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்ற நிலையில் டெல்லி நீதிமன்றம்...நமது நீதித்துறை, நாட்டின் அனைத்து துறைகளிலும் ஏற்ப்பட்டுள்ள அசுரத்தனமான தொழில்நுட்ப வளர்ச்சியினை காண விரும்பாமல் தனது கண்களை இன்னமும் இறுகக் கட்டியுள்ளது போல தோன்றுகிறது.

இன்று இணையத்தில் காணக்கிடைக்கும் அவதூறான என்பதன் எல்லையையும் தாண்டி வைக்கப்பட்டுள்ள பல்வேறு விமர்சனங்களோடு ஒப்பிடுகையில் ‘மிட் டே’யின் விமர்சனம் ஒரு தாலாட்டு!

உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற ‘டெல்லி சீலிங்’ வழக்கு பற்றியும், டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் தனது உத்தரவுகள் மூலம் கொடுத்த நெருக்கடிகளையும் பத்திரிக்கை படிக்கும் வழக்கமுள்ளவர்கள் அறிந்ததுதான்.

அந்த வழக்கு நடைபெறும் பொழுதே, அப்போதைய தலைமை நீதிபதி சபர்வாலின் மகன்கள், நீதிபதியின் வீட்டினை தங்களது வியாபாரத்திற்கு பயன்படுத்தியதைத்தான் ‘மிட் டே’ கிண்டலடித்து கருத்துப்படம் வெளியிட்டது. இந்த செய்தியில் உண்மையில்லை என்று இதுவரை ஏதும் கூறப்படவில்லை!

கருத்துப்படம் வெளியிடுகையில் சபர்வால் நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். எனவே அவரைப் பற்றி கூறப்படும் விமர்சனம் நீதிமன்ற அவமதிப்பாகாது என்ற வாதத்தினையும் நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால், இப்படியொரு நுட்பமான (technical) வாதத்தினை மிட் டே வைத்திருக்கவே தேவையில்லை. தங்கள் செய்தி உண்மைதான் என்ற அளவோடு, துணிச்சலாக நின்றிருக்கலாம்.


***

சபர்வால் ஓய்வு பெற்றவுடன், ‘வாக் த டாக்’ என்ற நிகழ்ச்சியில் பேட்டியளித்தார். அப்போது அவர் சாதாரணமாக குறிப்பிட்ட ஒரு விஷயம் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது!

அதாவது சீலிங் வழக்கு நடைபெற்ற பொழுது, பாதிக்கப்பட்ட அவரது உறவினர் ஒருவர் அவரை சந்தித்து, வழக்கில் மெத்தனப் போக்கை கடைபிடிக்க வேண்டியதாகவும், ஆனால் தான் அவ்வாறு நடந்து கொள்ளாததால் உறவினர் அவருடன் பேச்சு வார்த்தையினை நிறுத்தியதாகவும் கூறினார்.

மிகச் சாதாரணமாக, சற்றுப் பெருமையுடன் கூறிய இந்த விடயத்தில் என்னை வியப்பில் ஆழ்த்தியது, இந்திய நாட்டின் தலைமை நீதிபதியுடன் வழக்கில் சம்பந்தப்பட்ட வழக்கு பற்றி பேச தைரியம் கொள்ளமுடியும் என்பது மட்டுமல்ல!

அவ்வாறு பேசியது கிரிமினல் சட்டப்படியும், நீதிமன்ற அவமதிப்பு சட்டப்படியும் தண்டிக்கப்படக்கூடிய ஒரு குற்றச்செயல் என்பதை அறிந்திருந்தும் நீதிபதி அதை கண்டு கொள்ளாமல் விட்டது மட்டுமல்லாமல் அதை சாதாரணமாக வெளியே கூறியது!!


***

எப்படியாயினும், தனது பெயரினை காப்பாற்றிக் கொள்வதற்காக ‘உண்மை’ என்பதை ஒரு வாதமாக உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளும் சாத்தியக்கூறுகள் அதிகம்.

பல்வேறு நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில், உச்ச நீதிமன்றம் எத்தகையை குற்றச்சாட்டினையும் தாங்கிக் கொள்ளும் பரந்த தோள்கள் தனக்கு உள்ளது எனபதை வெளிப்படுத்தியுள்ளது.

டெல்லி உயநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக ‘மிட் டே’ பத்திரிக்கையாளர்கள் தாக்கல் செய்யும் மேல் முறையீட்டில், உச்ச நீதிமன்றம் இன்னமும் பரந்த மனதுடன் தன்னை வெளிப்படுத்துதல் காலத்தின் அவசியம்.

மதுரை
21.09.07

மும்பை மிட் டே பத்திரிக்கை பற்றி எழுத வேண்டும்

15.9.07

கலீல் கிப்ரானும், குழந்தை வளர்ப்பும்!

திரைப்படப் பாடல்கள் எத்தனையோ கேட்கிறோம்…ஆயினும் கவித்துவமான வரிகள் உடனடியாக மனதில் பதிவதில்லை. ஆனால், முக்கியமான ஒரு சம்பவத்தோடு வரிகள் தொடர்பு கொள்ளும்போதுதான் அவற்றின் முழு அர்த்தமும் புரிகிறது. அல்லது யாரேனும் ஒருவர் அந்த வரிகளை எடுத்துக் கூறும் பொழுது…

லியோனி போன்றவர்கள் திரைப்படப் பாடல்களை வைத்து நடத்தும் பட்டிமன்றங்கள், சாதாரண மக்களிடம் அதிக வரவேற்பினை பெறுவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என நினைக்கிறேன். ஏனெனில் அந்த சாதாரணர்களில் நானும் ஒருவன்!

சமீபத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு எழுதிய தீர்ப்பினை படிக்க நேரிட்டது. பிரிந்து வாழும் கணவனுக்கும் மனைவிக்குமான, குழந்தை யாரிடம் இருப்பது என்ற வழக்கமான பிரச்னைதான். ஆனால் நீதிபதி முன் வந்த பிரச்னை, குழந்தை தந்தைக்கு சார்பாக பிரமாண பத்திரம் (affidavit) தாக்கல் செய்ய முடியுமா? என்பதுதான். முடியாது என்று தனது தீர்ப்பில் கூறிய நீதிபதி, இறுதியில் கலீல் கிப்ரானின் கவிதையொன்றினை மேற்கோள் காட்டியிருக்கிறார்.

படித்த நான் வியந்து விட்டேன்! அந்தக் கவிதையில் வெளிப்படும் மனோதத்துவம் (child psychology) ஏதோ கடந்த பத்து வருடங்களில் தோன்றிய கருத்தாக்கம் என நினைத்திருந்தேன்…

அப்படியே ஆங்கிலத்தில் தருகிறேன். மூலத்திலிருந்து நேரடி தமிழாக்கம் கிடைத்தால் மகிழ்வேன்!

Your children are not your children.
They are the sons and daughters of Life's longing for itself.

They come through you but not from you,
And though they are with you yet they belong not to you.

You may give them your love but not your thoughts,
For they have their own thoughts.

You may house their bodies but not their souls,
For their souls dwell in the house of tomorrow, which you cannot visit,
not even in your dreams.

You may strive to be like them, but seek not to make them like you.
For life goes not backward nor tarries with yesterday.

You are the bows from which your children as living arrows are sent forth.
Let your bending in the Archer's hand be for gladness

கலீல் கிப்ரான் கவிதைப் புத்தகத்தினை வாங்கிப் படித்திருந்தால், இந்தக் கவிதையின் அர்த்தத்தினை மனம் முழுவது வாங்கியிருக்காது. நீதிபதி சந்துரு தனது தீர்ப்பில் பொருத்தமாக இதனை கையாண்டது, என்றும் எனது மனதில் இந்த வரிகளை ஏற்றி விட்டது! அவருக்கு நன்றி!!

மதுரை
14.09.07

ஆனால், நீதிபதிகள் தாங்கள் எழுதும் தீர்ப்பில், கவிதையோ, கருத்தோ தங்கள் சுயவிருப்பில் ஏற்றுவது எவ்வளது தூரம் சரியான செயல் என்பதில் எனக்கு சந்தேகமுண்டு!

நீதிபதி ஸ்ரீவத்ஸவா கூட இப்படித்தானே!

10.9.07

கர்ப்பிணிக்கு மரண தண்டனை!

ரஜினிகாந்தும், பிரபுவும் இணைந்து நடித்த திரைப்படம். பெயர் ஞாபகம் இல்லை. இருவரும் சிறையில் கைதிகள். அதே சிறையில் பாண்டியன் தூக்குத் தண்டனையினை எதிர்நோக்கியிருக்கும் கைதி. பாண்டியன் நிரபராதி என்று அறியும் ரஜினியும் பிரபுவும் சிறையிலிருந்து வெளியே சென்று உண்மையான குற்றவாளியினை கண்டுபிடிப்பதென்று தீர்மானம் செய்கின்றனர்.

அதற்குள் பாண்டியனுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டால்?

அதற்காக, இருவரும் சேர்ந்து பாண்டியனின் காலை உடைத்து விடுவார்கள். அதாவது, உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவரை தூக்கிலிட முடியாது என்று கூறுவார்கள். இது சரியாக இருக்க முடியுமா என்ற சந்தேகம் என்னை வெகுநாட்களாக தொடர்கிறது.

கதாசிரியர் ஒருவேளை சிறைச்சாலை சட்டத்தில் (Prision Act) உள்ள ஒரு பிரிவினை தவறாக புரிந்து கொண்டிருக்கலாம் என நினைக்கிறேன். சிறைச்சாலை சட்டத்தில் சிறைக் குற்றங்கள் என சில வரையறுக்கப்பட்டு அதற்கு சிறைக்குள்ளேயே தண்டனை வழங்கலாம் என்று இருக்கிறது. அதாவது Penal Diet எனப்படும் உணவினை கொடுப்பது முதல் சவுக்கடி போன்ற தண்டனைகள். ஆனால், சிறைச்சாலை சட்டத்தின் பிரிவு 50, அவ்வாறான தண்டனை கொடுப்பதற்கு முன்னர் சிறை மருத்துவர், கைதிக்கு அவ்வாறான தண்டனையினை தாங்கக் கூடிய உடல் வலிமை உள்ளதா என்று சான்றிதழ் அளிக்க வேண்டும். எனவே, சிறைக்குற்றங்களுக்கான தண்டனைகளுக்குத்தானே தவிர மற்ற தண்டனைக்கு அல்ல.


***

ஏனெனில், மற்ற தண்டனைகளை குறித்து சிறை அலுவலர்கள் முடிவெடுக்க இயலாது. முக்கியமாக மரண தண்டனையினை தள்ளிப்போடும் அதிகாரம் உயர்நீதிமன்றங்களுக்கே (High Court) உள்ளது. குற்றம்சாட்டப்பட்டவரை விசாரித்து முதலில் தண்டனை தருவது அமர்வு நீதிபதி (Sessions Judge) என்றாலும், மரண தண்டனையினை உயர்நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு உறுதி செய்து அந்த உத்தரவினை பெறும் அமர்வு நீதிபதி 28 நாட்களுக்குள் தண்டனை தேதியினை நிர்ணயித்து நிறைவேற்றுதல் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.


***

உயர்நீதிமன்றம் இரு சந்தர்ப்பங்களில்தான் தண்டனையினை தள்ளிப்போட இயலும். குற்றவாளி உச்ச நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்ய விரும்பினால் அல்லது குற்றவாளி ஒரு கர்ப்பிணிப் பெண்ணாய் இருக்கும் பட்சத்தில்.

நண்பர் டாக்டர் புரூனோ மருத்துவ மேற்படிப்பிற்கான நுழைவுத்தேர்வில் இது குறித்து கேட்கப்பட்ட வினாவினை சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தார். குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின் பிரிவு 416 ‘தள்ளிப் போட வேண்டும்’ (shall postpone) என்றுதான் குறிப்பிடுகிறதே தவிர எவ்வளவு நாள் என்று கூறவில்லை!

எனவே நீதிமன்றம் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப அதனை தீர்மானிக்கலாம். தள்ளிப்போட வேண்டும் என்று கூறும் அதே பிரிவு ‘ஆயுள் தண்டனையாக குறைக்கலாம்’ (may commute) என்றும் கூறுகிறது. பயன்படுத்தப்படும் பதம் may என்று இருப்பினும் சட்டத்தின் நோக்கம் புரிவதால், நான் தேடிய வரை இந்திய நீதிமன்றங்களால் கர்ப்பிணிப் பெண்ணுக்கு குழந்தை பிறந்த பின்னரும் ஏதும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட அல்லது அது குறித்த வழக்கு ஏதும் இல்லை!

ராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நளினிக்கும், ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது குற்றத்தில் அவரது பங்கினை அடிப்படையாக வைத்துதானே தவிர, காவலில் அவருக்கு குழந்தை பிறந்ததை வைத்து அல்ல…

Jail Manual எனப்படும் சிறைச்சாலைக்கான நடைமுறை விதிகளில் சிறையில் அடைக்கப்படும் கர்ப்பிணிப் பெண்களைப் பற்றிய நடைமுறைகள் இருப்பதாக அறிகிறேன் என்றாலும், கர்ப்பிணிக்கான தூக்குத் தண்டனையினை தள்ளிப்போடுதல் பற்றி கூறப்படும் வாய்ப்பில்லை. சட்டமே அளிக்காத ஒரு உரிமையினை நடைமுறை விதிகள் அளிக்க முடியாது.

எனவே டாக்டர் குறிப்பிட்ட மருத்துவ மேற்படிப்பில் கேட்கப்பட்ட கேள்வி தெளிவான ஒரு கேள்வி இல்லை என்றே நினைக்கிறேன்.

மதுரை
10.09.07

சிறையில் குழந்தை பெறும் பெண்கள் மற்றும் அவர்களோடு அடைக்கப்படும் குழந்தைகள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்று நமது உச்ச நீதிமன்றம் பொது நல வழக்கு ஒன்றில் பல்வேறு கட்டளைகளை (directions) பிறப்பித்துள்ளது.

8.9.07

முனைவர்களும் டாக்டர்களும்...

நடிகர் விஜய், ஜேப்பியார் போன்றவர்களுக்கு சமீபத்தில் தமிழக பல்கலைக்கழகம் ஒன்று ‘கெளரவ டாக்டர்’ பட்டங்களை வழங்கியது. எதிர்பார்த்தது போல கேலியுடனே இந்தச் செய்தியானது அணுகப்பட்டது. கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்களுக்கு வழங்கப்பட்ட டாக்டர் பட்டங்களும், இழுத்து வைத்து கிண்டலடிக்கப்பட்டது.

உலகம் முழுவதும், இவ்வாறாக பல்கலைக் கழகங்கள் ஏதேனும் சுயலாபத்திற்காகவும், விளம்பரத்திற்காகவும் ‘கெளரவ டாக்டர்’ பட்டங்கள் வழங்குவது பல்கலைக் கழகங்கள் தோன்றிய நாள் முதல் உள்ள வழிமுறைதான். அதைப் போலவே, இவ்வாறான பட்டங்கள் சர்ச்சைக்குள்ளாவதும் உலகளாவிய ஒரு விடயம்தான். மார்கரெட் தாட்சர் முதல் ஜியார்ஜ் புஷ் வரை யாரும் இதற்கு விதிவிலக்கல்ல.

ஆயினும், கெளரவ டாக்டர் பட்டங்களை மற்ற டாக்டர் பட்டங்களோடு ஒப்பிடுவது அறியாமையே அன்றி வேறல்ல. மேலும் மோசம், மருத்துவர்களை குறிப்பிடும் ‘டாக்டர்’ என்ற அடைமொழியோடு ஒப்பிடுவது. மருத்துவர்கள் டாக்டர் என்ற பொதுவான ஒரு பதத்தினை தங்களது தொழிலினை அடையாளப்படுத்த குறிப்பிட்டுக் கொண்டால், டாக்டர் என்ற பதம் தனது அர்த்தத்தினை இழந்துவிட வேண்டுமா என்ன?

சரி, பல்கலைக்கழகங்கள் டாக்டர் பட்டம் வழங்குவது ஏதோ பலனை எதிர்பார்த்து என்றாலும், பட்டங்களை பெறுபவர்கள் கிண்டலடிக்கப்படுவதும், மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் அறியாமை தவிர வேறல்ல.

முனைவர் என்று தமிழில் பொருத்தமாக குறிப்பிடப்படும் டாக்டர் பட்டங்களே ஒரு துறையில் புதுமையாக ஏதாவது சாதனை படைப்பாளர்களுக்குத்தான் என்றால், முறையான கல்வி அதற்கு ஒரு முட்டுக் கட்டையாக இருப்பது அநியாயமில்லையா?

‘அறிவு என்பது ஒரு வருட பாடத்திட்டத்தினை ஒரு வார காலத்தில் மனப்பாடம் செய்து மூன்று மணி நேரத்தில் எழுதிக் குவிப்பதுதான்’ என்றால் நிச்சயம் நான் கூற வருவது தவறாக இருக்கலாம்…

ஆனால் அறிவும், சாதனையும் கல்விக்கூடங்களுக்கு வெளியேயும் கொட்டிக்கிடக்கிறது என்பதுதான் உண்மை.


***

கடந்த பொதுத் தேர்தலின் பொழுது, இந்தியாவின் அறிவுச் சுரங்கங்களாக கருதப்படும் ஐஐடியில் பயின்ற மாணவர்கள் சிலர் நன்கு திட்டமிட்டு தேர்தலில் போட்டியிட்டனர். அனைத்து தொகுதிகளிலும் இல்லை. ஒன்றிரண்டு தொகுதிகளில்தான்.

என்னவாயிற்று?

காப்புத் தொகையினை கூட பெறவில்லை என்று நினைக்கிறேன். இவர்கள் டாக்டர் பட்டங்களுக்கு தகுதியானவர்கள் என்றால், பெரும்பான்மை தொகுதிகளில் அநாயசமாக வெற்றி பெரும் கருணாநிதியோ, ஜெயலலிதாவோ பட்டங்களைப் பெறுவதற்கு தகுதியானவர்கள் இல்லையா?

சரி, தேர்தல்தான் இப்படி…அந்தக் கட்சியினையாவது தொடர்ந்து நடத்த முடிந்ததா? தேர்தல் முடிந்து ஒரு மாத காலத்திற்குள் பிளவு!

அண்ணாதுரை மறைவின் பொழுது மூன்றாவது இடத்தில் இருந்த கருணாநிதி, தலைமைக்கு வந்து ஏறக்குறைய நாற்பது ஆண்டு காலம் கட்சியினை காப்பாற்றி வரும் அறிவு, அரசியல் விஞ்ஞானம் முதுகலை பட்டம் பெறுபவரின் அறிவினை விட அதிகம்தான்.

அதே போல, எம்ஜிஆரின் மறைவிற்கு பின்னர் ஜானகி, ஜெயலலிதா என்று சமபலத்தில்தான் இருந்தனர். ஜானகியிடம் ஆட்சியும், வீரப்பன் போன்ற அனுபவசாலிகளும் இருந்தனர். ஆயினும், கட்சி முழுவதையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த ஜெயலலிதா புதுமை படைத்தவரில்லையா?

கருணாநிதி கல்லூரி சென்று படித்தவரல்ல. ஆனால் அவரது தமிழறிவு இன்று தமிழக கல்லூரிகளில் முதுகலை தமிழ் படிக்கும் எந்தவொரு மாணவருக்கும் குறைந்ததாயிருக்காது. பல்கலைக் கழகங்கள் அவரை கெளரவிப்பதால் தங்களை தாழ்த்திக் கொள்வதில்லை.

பில் கேட்ஸுக்கு ஆமதாபாத் ஐஐஎம்மில் இடம் கிடைத்திருக்காது. ஆனால், இன்று அங்கு படிக்கும் மாணவர்கள் அவரது வியாபாரத்திறமையினை ஆராய்கின்றனர். வியாபார நிர்வாகத்தில் டாக்டரேட் அளிக்க முதுகலை பட்டம் பெறாத பில் கேட்ஸ் தகுதியானவர்தானே!

ஜேப்பியார்?

கான்ஸ்டபிளாக தனது வாழ்வினை துவக்கியவர்…..அரசியல் கட்சியின் நிர்வாகத்தில் தனது திறமையினை வெளிப்படுத்தியன் காரணமாகத்தானே, இன்று ஒரு கல்விக் கழகத்தினை நிர்வகிக்கிறார். முறையான கல்வியின் பெறும் ஒரு நபர் இந்திய ஆட்சிப்பணியிலமர்ந்து ஒரு அரசு நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் அமருவதை தனது லட்சியமாகக் கொள்கிறார். அதே போன்ற ஒரு பணியினை எங்கோ ஒரு மீனவக் குடும்பத்தில் பிறந்த ஜேப்பியாரும் கைப்பற்ற முடிந்ததென்றால், அதற்கு அவரது அதிஷ்டம் காரணம் என்றால் அது வயிற்றெரிச்சல் அன்றி வேறில்லை!

விஜய்?

விஜய் மோசமான ஒரு நடிகராக இருக்கலாம். ஆனால், தமிழ் திரையுலகில் ரஜினி, கமலுக்கு பின்னர் விநியோகஸ்தர்களால் நம்பப்படும் ஒரு நடிகர். இந்நிலைக்கு அவர் உயர்ந்தது, சந்திரசேகருக்கு மகனாக பிறந்தது மட்டுமா?

பல திரைப்பட நடிகர்களும், தயாரிப்பாளர்களும், இயக்குஞர்களும் தங்கள் வாரிசுகளை களமிறக்குகிறார்கள். அனைவரும் ஜெயிப்பதில்லை.

தனது ஆரம்ப காலத்தில், அவர் சந்தித்த கிண்டலும் கேலியும் பழைய ஊடகங்களை புரட்டியவர்களுக்கு தெரியும். அவரை அறிமுகப்படுத்தியதில் சந்திரசேகருக்கும், விஜயகாந்திற்கும் பங்கிருக்கலாம். புதிய பாதையினை காட்டியதில் பாசிலுக்கு பங்கிருக்கலாம்…பின்னர் வெற்றியினை தக்க வைத்துக் கொண்டதும், வேகமான் ஒரு ஸ்டைலினை தனக்கென உருவாக்கிக் கொண்டதும் அவரது திறமையின்றி வேறில்லை!

எனவே, இவர்கள் சாதனையாளர்களே….இவர்களது சாதனைகள் சமுதாயத்திற்கு எவ்வளவு தூரம் பயனுள்ளது என்பது கேள்வியில்லை! ஆனால் கெளரவ டாக்டர் பட்டம் இல்லை….முனைவர்கள் என்று தமிழில் அழைக்கத் தகுந்த பட்டத்திற்கு தகுதியானவர்கள்தாம்.


***

நான், மதுரையில் தொழிலினை தொடங்கிய புதிதில் நாகர்கோவிலில் இருந்து ஒரு நபர் என்னிடம் வந்தார். அங்கு புதிதாக ஆரம்பிக்கப்படும் மருத்துவக் கல்லூரியில் தற்காலிக பணியாக ‘அலுவலக உதவியாளர்கள்’ தேர்ந்தெடுக்கப்படுவதாகவும், தனக்கு அந்த வேலையில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் கூறினார். காரணம், அவரது நிலம் முன்பு ரயில் நிலையத்திற்காக அரசால் ஆர்ஜிதம் செய்யப்பட்டதாம். அதற்கு ரயில் நிர்வாகம் அளிக்கும் வேலையில் முன்னுரிமை வழங்க கோரலாம் என்று தெரிவித்தேன்.

பேச்சு வாக்கில் அவரது கல்வித் தகுதி என்ன என்று கேட்டேன். முதுகலை விலங்கியல் என்றவர், மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் டாக்டரேட் கூட வாங்கியிருக்கிறேன் என்று கூறினார்.

இன்றும் மனதில் வலித்துக் கொண்டிருக்கிறது!


மதுரை
08.09.07

26.8.07

சட்டப்படி சரியான தீர்ப்பா?

சட்டம் குறித்தான விழிப்புணர்வினை மக்களிடையே ஏற்ப்படுத்தும் நோக்கத்துடன் நடத்தப்படும் ‘மக்கள் சட்டம்’ என்ற வலைப்பதிவில் மோட்டார் வாகன விபத்து குறித்து, சமீபத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மீதான விமர்சனத்தைக் கண்ணுற்றேன். அப்பாவி பயணிகளுக்கு, தீர்ப்பினால் ஏற்ப்படக்கூடிய பாதிப்பினைக் குறித்தான எச்சரிக்கையினை உடனடியாக மக்கள் முன் வலைப்பதிவு மூலம் வைத்தது நன்றியுடன் பாராட்டப்பட வேண்டிய செயல்.

விமர்சனத்தை, ‘ சட்டப்படி பார்த்தால், இந்த தீர்ப்பு சரியானதாக தோன்றலாம்’ என்று மக்கள் சட்டம் தொடங்கினாலும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டப்படி சரியானதுதானா என்பது சந்தேகமே!

வாகன விபத்து காப்பீடுகளைப் பொறுத்து நான் அறிந்த வரையில், ‘இந்த தீர்ப்பு சட்டத்தின் பயணத்தினை பல ஆண்டுகள் பின்னோக்கி செலுத்தியுள்ளது’ என்பதே என் எண்ணம்!

***

நேஷனல் இன்ஸூரன்ஸ் கம்பெனி எதிர் அஞ்சனா ஷ்யாம் என்ற இந்த வழக்கில் 42 நபர்கள் மட்டுமே பயணம் செய்ய அனுமதி (permit) பெற்ற பேருந்தில் 90 நபர்கள் பயணம் செய்கையில் விபத்து ஏற்ப்பட்டு சிலர் மரிக்க பலர் காயமடைகின்றனர்.

இவ்வாறு மோட்டார் வாகனத்தின் மூலமாக மரணமோ, காயமோ ஏற்ப்படுகையில் பாதிக்கப்படும் நபர்களுக்கு வண்டியின் உரிமையாளர் தகுந்த நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.

ஆனால், நஷ்ட ஈட்டினை வழங்குவதற்கு உரிமையாளரின் பொருளாதாரம் பல சமயங்களில் இடம் கொடுப்பதில்லை. எனவேதான் மோட்டார் வாகனங்களை இயக்க கண்டிப்பாக வண்டிக்கு மூன்றாம் நபர் காப்பீடு அவசியம் (Third Party Insurance). அதாவது, இழப்பீட்டினை உரிமையாளர் சார்பாக காப்பீடு நிறுவனங்கள் நேரிடையாக வழங்கும்.

எனவே, எவ்வளவு காப்புத் தொகை (premium) செலுத்தப்பட்டிருப்பினும், வண்டிக்கு காப்பீடு என்று ஒன்று இருந்தால், அதில் யார் யாருக்கான காப்பீட்டினை கண்டிப்பாக காப்பீடு நிறுவனம் வழங்க வேண்டும் என்று மோட்டார் வாகன சட்டத்தின் (Motor Vehicles Act’1988) 147ம் பிரிவு குறிப்பிடுகிறது.

147ம் பிரிவில் குறிப்பிடப்படாத நபர்களைப் பொறுத்தவரை தனியே காப்புத் தொகை (premium) செலுத்தாமல் காப்பீடு வழங்கப்பட வேண்டியதில்லை. அவர்களுக்கான காப்பீடு கட்டாயம் இல்லை என்பதால், வண்டி உரிமையாளர்கள் மூன்றாம் நபர் காப்பீடு மட்டுமே வாங்குவது இல்லை. காப்பீடு நிறுவனங்களும் அதை வலியுறுத்துவது இல்லை.

***

பிரிவு 147(1)(b)(ii)ல் ‘பொதுச் சேவை வண்டியின் பயணிக்கும் எந்த ஒரு பயணிக்கும் ஏற்ப்படும் மரணம் அல்லது காயத்திற்கான இழப்பீடு’ (against the death of or bodily injury to any passenger of a public service vehicle) என்று இருப்பதால், பேருந்தில் பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும் காப்பீடு உண்டு என்றே இதுவரை நம்பப்பட்டு வந்தது.

அதாவது வண்டியின் அனுமதியில் குறிப்பிடும் நபர்களுக்கும் அதிகமான அளவில் நபர்களை ஏற்றிச் சென்றால், அது மோட்டார் வாகன சட்டத்தின் பிற பிரிவுகளில் குறிப்பிடப்பட்டிருக்கும்படி உரிமையாளரை அனுமதியினை ரத்து செய்வது போன்ற முறையில் தண்டிக்கலாமே தவிர ‘மூன்றாம் நபர் காப்பீடுகளுக்கும்’ அதற்கும் சம்பந்தமில்லை என்றே கருதப்பட்டது.

ஏனெனில், இவ்வாறான காப்பீடு வழக்குகளில், ஒரு காப்பீடு நிறுவனம் சட்டத்தின் பிரிவு 149(2)(a)(b)ல் குறிப்படப்படும் காரணங்களுக்காக மட்டுமே காப்பீட்டினை மறுக்கலாம். அதாவது வண்டிக்கு சிவப்பு சாயம் பூசப்படக்கூடாது என்ற ஒரு நிபந்தனை காப்பீட்டில் இருப்பினும், சட்டம் அனுமதிக்காதலால் அதனை மீறியதாக கூறி காப்பீட்டினை மூன்றாம் நபர்களுக்கு மறுக்க இயலாது.

இந்தப் பிரிவில் தகுந்த உரிமம் இல்லாத ஓட்டுநர் ஓட்டுவது உட்பட பல காரணங்கள் கூறப்படினும், வண்டியின் அனுமதியில் கூறப்பட்டுள்ள நபர்களுக்கு மேலான நபர்கள் பயணம் செய்தல் என்ற காரணம் கூறப்படவில்லை!

ஓரளவிற்கு கிட்டே வருவது 149(2)(a)(i)(c) என்ற பிரிவு!

அதாவது வண்டியின் அனுமதிக்கப்பட்ட உபயோகத்திற்கு அன்றி வேறு உபயோகத்திற்கு பயன்படுத்துதல் (for a purpose not allowed by the permit under which the vehicle is used, where the vehicle is a transport vehicle)

அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்வது இந்தப் பிரிவின் கீழ் வராது. அதாவது விவசாயத்திற்காக அனுமதி பெற்ற ஒரு டிராக்டரில் குடி தண்ணீர் ஏற்றிச் செல்வது வேறு உபயோகம். ஆனால், அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்வது வேறு உபயோகம் என்று கூற முடியாது. அனுமதியினை மீறியது என்று மட்டுமே எடுத்துக் கொள்ள முடியும்.


***

ஆனால் உச்ச நீதிமன்றம், ஒரு சட்டத்தின் பிரிவுகளை இவ்வாறு தனியே படித்தல் கூடாது மாறாக முழுச் சட்டத்தினையும் ஒரு சேர படித்து பொருள் கொள்ள வேண்டும் என்று இந்த தீர்ப்பில் கூறியிருக்கிறது. அதாவது சட்டத்தின் பிற பிரிவுகளில் வாகனத்தின் அனுமதித்த அளவுதான் நபர்களை ஏற்ற வேண்டும் என்று இருப்பதால், எந்தவொரு பயணி (any passenger) என்பது அனுமதிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே தவிர மற்றவர்கள் இல்லை என்று கூறுகிறது.

மேலும் அனுமதிக்கும் அதிகமான பயணிகளைப் பொறுத்தவரை காப்பீடே (insurance cover) இல்லையென்பதால் 149ம் பிரிவினை கருத்தில் கொள்ளவே தேவையில்லை என்கிறது. ஏனெனில் 149ல் குறிப்பிடப்படும் நிபந்தனைகள் காப்பீடு இருந்தால் மட்டுமே பயன்படும்.

எனவே இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிகமாக உள்ள 46 இழப்பீடுகளை மட்டும் காப்பீடு நிறுவனம் கொடுத்தால் போதும், அதனை 90 வழக்கில் வழங்கப்பட்ட இழப்பீட்டிலும் விகிதாச்சார முறையில் பகிர்ந்து கொடுக்க வேண்டும். மீதித் தொகையினன பாதிக்கப்பட்டவர்கள், வண்டி உரிமையாளரிடம் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது!


***

பிரிவு 149 பற்றி உச்ச நீதிமன்றம் கூறியது சரிதான் எனினும், 147வது பிரிவில் கண்ட ‘any passenger’ என்பதற்கு தந்த விளக்கம் சரியான முறையில் அமையவில்லை.

ஏனெனில், வண்டியின் உரிமையாளரிடம் இழப்பீட்டினை பெறுவது என்பது நடைமுறையில் பெரும்பாலும் சாத்தியமல்ல. எனவே இழப்பு இறுதியில் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு. இதன் மூலம் ‘மூன்றாம் நபர் காப்பீடு’ என்பதே அர்த்தமற்றுப் போகிறது.

ஏனெனில், இந்தப் பெயரினை வைத்தே, இவ்வகையான காப்பீட்டிற்கும், மற்ற காப்பீட்டிற்குமான வித்தியாசத்தை புரிந்து கொள்ள முடியும்.

ஆம், மற்ற காப்பீடுகளைப் போல அல்லாமல், மூன்றாம் நபர் காப்பீட்டின் பயனாளி, அவரது முகத்தினைக் கூட அறியாத வண்டி உரிமையாளர். ஆனால், உச்ச நீதிமன்றம் இந்த வித்தியாசத்தினை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. எனவே பயனாளி தவறு ஏதும் புரியாத பொழுது, அவர் தண்டிக்கப்படுவது நீதியின் பொருட்டு சரியான செயலாக இருக்க முடியாது. பயணிகள் பயணம் செய்யக்கூடாத சரக்கு வாகனத்தில் பயணம் செய்யும் ஒருவருக்கு காப்பீடு மறுக்கப்படுவதில் ஓரளவுக்கு நியாயம் உள்ளது. ஆனால், அனைத்து பயணிகளும் ஒரே கட்டணம் செலுத்தி பயணம் செய்கையில் எப்படி அவர்களுக்கு காப்பீட்டினை மறுக்க முடியும்?

மேலும் பல மோட்டார் வாகன விபத்துகளில், இந்தச் சட்டம் ஒரு சமுதாய நலனுக்கான சட்டம் (social welfare legislation) எனவே, இந்தச் சட்டத்தின் பிரிவுகளை, விபத்தில் பாதிக்கப்படுபவரின் நலனை கருத்தில் கொண்டு, அவருக்கு சாதகமாக அர்த்தம் (interpretation) கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது.

மேலும் 147ல் கண்ட பிரிவு தெளிவாகவே இயற்றப்பட்டுள்ளது. நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளபடியென்றால், அந்தப் பிரிவில் passenger என்பதற்கு முன்பாக any என்ற வார்த்தை தேவையில்லை. முக்கியமாக, நலன் தரும் சட்டங்களில் (beneficial legislation) குறுகலான அர்த்தம் (narrow interpretation) கொள்ளக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம்தான் கூறியிருக்கிறது.

உச்ச நீதிமன்றம் பி.வி.நாகராஜு எதிர் ஓரியண்டல் இன்ஸூரன்ஸ் (1996 ACJ 1178) என்ற வழக்கில் வழங்கப்பட்ட தனது தீர்ப்பினை கருத்தில் கொள்ளவில்லை. அந்த வழக்கில் சரக்கு வாகனத்தில் அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்கிறார் ஒருவர். சரக்கு வாகனத்தில் பயணிகள் செல்வது தவறு என்பதுடன் அனுமதிக்கப்பட்ட நபர்களுக்கும் அதிகம் பயணித்தனர். விபத்துக்குள்ளான வண்டிக்கான சேதத்தினை உரிமையாளர் காப்பீடாக கேட்கையில் மறுக்கப்பட்டது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அவ்வாறு அதிக நபர்களை ஏற்றிச் சென்றது விபத்துக்கான காரணமாக இல்லாத பட்சத்தில், அந்த மீறலை ஒரு அடிப்படையான மீறலாக எடுத்துக் கொண்டு காப்பீட்டினை மறுக்கக் கூடாது என்று கூறியுள்ளது.

இறுதியாக, இந்த வகையான பிரச்னைகளில் கிரிஜா பிரசாத் அகர்வால் எதிர் பார்வதி தேவி (2005 (2) TNMAC 65) என்ற வழக்கில், ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளை கொண்ட புல் பெஞ்ச் (Full Bench) தீர்ப்புதான் சரியானதாக இருக்கக் கூடும். இவ்வாறான விதி மீறல்கள் மூன்றாவது நபர்களை பாதிக்க கூடாது. வேண்டுமாயில் அதிகமான நபர்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டினை, காப்பீடு நிறுவனங்கள் வண்டி உரிமையாளரிடம் இருந்து வசூலித்துக் கொள்ள வேண்டியது என்பதுதான் சட்டப்படி மட்டுமல்ல நீதியின்பாலும் சரியான தீர்ப்பாக இருக்க முடியும்!

மதுரை
25.08.07


மோட்டார் வாகன விபத்து காப்பீடு குறித்து மேலும் அறிய...
http://marchoflaw.blogspot.com/2007/01/1.html

24.8.07

உச்ச நீதிமன்றத்தில் இடப்பங்கீடு!

கடந்த 21ம் தேதியன்று, தமிழகத்தினை சேர்ந்த நீதிபதி திரு.சதாசிவம் உச்ச நீதிபதியாக பதவியேற்றது, தமிழக நீதித்துறையினை பொருத்தவரை முக்கியமான ஒரு நிகழ்வாகும். தமிழர் ஒருவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுவது இயல்பான நிகழ்வுதான் என்றாலும், திரு.சதாசிவத்தின் நியமனம் முக்கியத்துவம் பெறுவது, அவர் தொடர்ந்து பணியில் நீடிக்கும் பட்சத்தில் வரும் 2013ம் வருடத்தில் இந்தியாவின் தலைமை நீதிபதியாக பதவியேற்ப்பார்.

அதாவது, திரு. பதஞ்சலி சாஸ்திரி இந்தியாவின் தலைமை நீதிபதியாக 1951-54 ஆண்டுகளில் பணியாற்றியதற்குப் பிறகு 2013ம் ஆண்டில் ஒரு தமிழர் தலைமை நீதிபதியாக பதவியேற்கும் நிலை ஏற்பட்டுள்ளது!

மதறாஸ் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்ட திரு.சுப்பாராவ் கூட இந்தியாவின் தலைமை நீதிபதியாக பணியாற்றினார் என்றாலும், அவர் ஆந்திராவை சேர்ந்தவர். மேலும், ஆந்திராவிற்காக தனி உயர்நீதிமன்றம் ஏற்பட்ட பிறகு அங்கு பணியாற்றினார்.

எவ்வாறாயினும், தமிழ்நாட்டுக்கு மட்டுமே மதறாஸ் உயர்நீதிமன்றம் என்றான பிறகு தலைமை நீதிபதியானவர்கள் என்று எடுத்துக் கொண்டால், திரு.சதாசிவம் முதல் தமிழர் என்ற பெருமை பெறுவார்!

உயர் நீதிமன்ற நீதிபதி ஓய்வு பெறும் வயது 62 என்றாலும், உச்ச நீதிமன்றத்திற்கு சென்றால் 65 வயதில்தாலன் ஓய்வு பெறுவர்.

***

நீதிமன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து கவனிப்பவர்களுக்கு சதாசிவத்தின் நியமனத்தில் ஒரு விடயம் வியப்பூட்டியிருக்கலாம். அதாவது மதறாஸ் உயர் நீதிமன்றத்தில் பணியாற்றும் தலைமை நீதிபதியான ஏ.பி.ஷா மற்றும் மகோபத்யாயா ஆகியோர் திரு.சதாசிவத்தினை விட சீனியர்கள்!

சமீபத்தில் சதாசிவம் பஞ்சாப், ஹரியானா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது, அங்கு தற்பொழுது தலைமை நீதிபதியாக பணிபுரியும் நீதிபதிக்கு கீழே இரண்டாமிடத்தில் பணிபுரியத்தான்...ஏன், தற்பொழுது ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பணிபுரியும் கற்பகவிநாயகம் சதாசிவத்தின் சீனியர்!

உச்ச நீதிமன்றத்தில் பணிபுரியும் நீதிபதிகள் தலைமை நீதிபதியாக பதவியேற்பது, இந்திரா காந்தி காலத்தில் ஒரு முறை மீறப்பட்டாலும் முழுக்க முழுக்க பணிமூப்பு (seniority) அடிப்படையில்தான் என்றாலும், உச்ச நீதிமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவது பணிமூப்பு அடிப்படையில் மட்டுமல்ல.

தகுதி ? திறமை ?

பணிமூப்பினைப் போலவே அதுவும் ஒரு காரணியே தவிர முழுக்காரணமல்ல. நமது தலைமை நீதிபதி ஏ.பி.ஷா போன்றவர்கள் திறமை குன்றியவர்கள் என்றும் அர்த்தமல்ல.

பின்னர் காரணம்?

தமிழகத்தினை சேர்ந்த ஏ.ஆர்.லட்சுமணனின் ஓய்விற்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தில் தமிழர் எவரும் இல்லையென்பதுதான் காரணம். உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்படுவதற்கு மாநிலம், மொழி, மதம், பால் (sex) ஒரு காரணமல்ல என்றாலும், எந்த ஒரு பிரிவினரும் தங்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லையென்ற மனக் கசப்படைந்து விடக்கூடாது என்ற வகையில் ஒரு சமரச நிலை, நீதிபதி நியமனங்களில் பின்பற்றப்படுகிறது.

தற்பொழுது உச்ச நீதிமன்றத்தில் பெண் நீதிபதி எவரும் இல்லையென்ற நிலையில் தமிழகத்தினை சேர்ந்த பிரபா ஸ்ரீதேவன் அல்லது ஆந்திராவினை சேர்ந்த மீனாகுமாரி அவர்களுக்கு வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது.

இதே நிலையில் முன்பு கேரளாவினை சேர்ந்த இஸ்லாம் மதத்தினை சேர்ந்தவரான பாத்திமா பீவி, உயர்நீதிமன்ற நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் உச்ச நீதிபதியாக நியமிக்கப்பட்டதும் கவனிக்கத்தகுந்தது.

***

நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு தேவை என்ற விவாதங்கள் தற்பொழுது எழுப்பப்படுகின்றன...வகுப்புவாரி இட ஒதுக்கீடு இருக்கிறதோ இல்லையோ மற்ற இடப் பங்கீடுகள் அங்கும் எழுதப்படாத விதியாக பின்பற்றப்படுவதுதான் உண்மை!

எது எப்படியாயினும், சென்னை உயநீதிமன்றத்தில் நீதிபதியாக பணியேற்ற நாளிலிருந்து இங்கிருந்து மாற்றாலாகிச் சென்ற காலம் வரையிலும் எந்த ஒரு வழக்குரைஞர் மீதும் கடுஞ் சொல் ஏதும் பிரயோகிக்காத, பணியாற்றிய ஒவ்வொரு நாளிலும் தனது பணியில் முழுக்கவனம் செலுத்தி, பல்வேறு வழக்குகளில் சிறப்பான தீர்ப்பினை அளித்து இன்று தனது கடுமையான உழைப்பின் மூலம் நீதித்துறையில் மேன்நிலையினை அடைந்திருக்கும் நீதிபதி சதாசிவம் நம் அனைவரின் பாரட்டுக்கும் உரியவர்.

மதுரை
24.08.07


நீதிபதி கற்பகவிநாயகம் சீனியராக இருப்பினும் ஏன் தேர்ந்தெடுக்கப்படவில்லை? இந்த கேள்விக்கு விடை கிடைக்காது. ஏனெனில் நீதிபதிகளை தேர்ந்தெடுப்பது பற்றிய காரணங்களை, தகவல் அறியும் சட்டத்தின் (Right to Information Act’ 2005) மூலமும் பெற முடியாது!

19.8.07

இலவசமாக ஆற்றல்!

“ஓடும் ரயிலி இருந்து மின்சாரம் - விருதுநகர் மாணவர்கள் கண்டுபிடிப்பு” என்ற கொட்டை எழுத்து தலைப்பில் இன்றைய தினகரனில் ஒரு செய்தி. பொம்மை ரயிலுடன் மாணவர்கள் நிற்கும் வண்ணப்படம் மேலும் கண்களை ஈர்த்தது.

அதாவது, ரயில் பெட்டிகளின் மீது காற்றாலைகளை அமைத்து ரயில் ஓடும் பொழுது எதிர்த்திசையில் அடிக்கும் காற்றின் விசையால் மின்சாரத்தைப் பெறலாமாம்!

செய்தி அளிக்கும் புள்ளி விபரங்கள் நம்மை அப்படியே சந்தோஷ காற்றில் மிதக்க விடுகின்றன. ஒரு ரயிலில் தினசரி 320 கிலோ வாட் மின்சாரம், நாட்டில் ஓடும் ரயில்களில் இருந்து 50 நகரங்களுக்கு தேவையான மின் சக்தி, ரயில்களில் சிறு மாறுதல் செய்தால் மேட்டூர் அணையில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைப் போல 8 மடங்கு மின்சாரம்...இன்ன பிறவுமாக!!

சீக்கிரம், யாராவது பிரதமரின் விஞ்ஞான ஆலோசகருக்கு கூறினால், 123 ஒப்பந்தத்தினை தூக்கி கிடப்பில் போட்டுவிட்டு அரசினை காப்பாற்றிவிடலாம்.

***
தவறு எங்கேயிருக்கிறது?

எனக்குப் புரியவில்லை. பன்னிரெண்டாம் வகுப்போடு பெளதீக அறிவினை நிறுத்திக் கொண்ட என்னிடமா இல்லை நான் கற்ற பெளதீக விதிகளிலா?

அல்லது நமது ஆசிரியர்களிடமா இல்லை இலவசமாக ஏதாவது கிடைத்து விடாதா என்றலையும் நமது அற்பத்தனத்திலா?

‘If wishes are horses, beggers would ride on it’ என்று கூறியது யார்?

மதுரை
190807

யா.பெரல்மானின் பொழுது போக்கு பெளதீகத்தினைப் படித்தவர்கள், ஓயாமல் இயங்கும் இயந்திரத்தினை கண்டுபிடிக்கிறேன் பேர்வழி என்று ஐரோப்பாவில் அலைந்தவர்களின் வேடிக்கையான இயந்திரங்களைப் பற்றி அறிந்திருப்பார்கள்.

18.8.07

விருமாண்டியும் மரணதண்டனையும்

முன்பு நான் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட ‘விருமாண்டி’ படம் பார்க்கும் வாய்ப்பு நேற்று வாய்த்தது. துரதிஷ்டவசமாக, முக்கால்வாசிப் படம்தான் பார்க்க முடிந்தது. எனவே, கதை இறுதியில் பயணிக்கும் பாதையினை அனுமானிக்க முடியவில்லை!

எனினும் உறுத்திய சில விஷயங்கள்...

மரண தண்டனைக்கு எதிரான படம் என்று கூறப்பட்டதனை வைத்து, படம் வெளி வரும் முன், இவ்வாறான விவாதங்களை அனைத்து மக்களிடமும் கொண்டு செல்லும் படங்கள் வரவேற்க்கப்பட வேண்டும் என்று பதிவெழுதினேன்.

ஆனால்...

உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக மட்டுமே பணியாற்றிய திரு.வி.ஆர்.கிருஷ்ண ஐயரினை ‘Former Chief Justice, Supreme Court of India” என்று அறிமுகப்படுத்தியதில் முதல் சறுக்கல் தொடங்கியது.

இரண்டாவது, மரண தண்டனையினை எதிர்நோக்கியிருக்கும் தலைமையாசிரியரின் அறிமுகம், மரண தண்டனைக்கெதிரான விவாதத்தினையே கேலிக்குள்ளாக்குவது.

அதாவது, தவறு செய்யும் மாணவனை தலைமையாசிரியர் அடிக்க அவன் சுருண்டு விழுந்து செத்துப் போகிறான். மரண தண்டனை கொடுத்து விட்டார்களாம். மேலும், இறந்த சிறுவன் பள்ளித்தாளாளரின் மகன் என்பதும், தற்கொலைக்கு முயன்றேன் என்பதும் கவனிக்கக்தகுந்தது.

இவ்வாறான குற்றங்களுக்கு மரண தண்டனையினை பரிந்துரைக்கும் அளவிற்கு நமது சட்டங்கள் கொடூரமானவையும் அல்ல...நீதிபரிபாலான முறையும் மோசமானது அல்ல. உண்மையில் தலைமையாசிரியருக்கு ஆயுள் தண்டனை கூட வழங்கப்படமாட்டாது!

முக்கியமாக, மரண தண்டனைக்கெதிரான விவாதம் இதுவல்ல...ஏனெனில், மரண தண்டனனக்கு எதிரான குரல்கள், குற்றம் பெரிதா, சிறிதா அல்லது தெரிந்து செய்யப்பட்டதா, தெரியாமல் நிகழ்ந்ததா அல்லது குற்றவாளி இரக்கத்திற்கு உரியவனா அல்லது கொடூரனா என்று பார்ப்பதில்லை. நாதுராம் கோட்சே என்றாலும் சரி ஓசாமா பின் லேடனாக இருந்தாலும் சரி, மரண தண்டனை கூடாது என்றுதான் கூறுகிறார்கள்.

பல சமயங்களில், மரண தண்டனை எதிர்ப்பாளர்களை மடக்குவதற்காக வைக்கப்படும் கேள்வி, ‘சிறுமிகளை பாலியல் கொடுமைக்குட்படுத்தி கொலை செய்தவனுக்கு கூடவா, மரண தண்டனை கூடாது?’ என்பதாகும்.

எனவே விவாதம் மரண தண்டனை தேவையா இல்லையா என்பதுதானே தவிர, யாருக்கு என்பதல்ல!


ஏனெனில் யாருக்கு என்பதில்தால் பாரபட்சம் (discrimination) காட்டப்படுவதாக குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.

மேலும், ஏஞ்சலா காத்தமுத்து (வலிய வரவழைத்துக் கொண்ட பெயரா?) ‘திருத்தி எழுதப்பட முடியாத தீர்ப்பு உண்டு, அதாவது மரண தண்டனை’ என்பதும் மரண தண்டனையினை எதிர்ப்போர் கைக்கொள்ளும் வாதமல்ல!

சில சமயம், அப்பாவிகளும் (innocents) தவறுதலான தீர்ப்புகளால், மரண தண்டனைக்கேதுவாகிறார்கள் என்பதல்ல, மரண தண்டனைக்கு எதிரான வாதம்...உண்மையில் குற்றவாளிக்கும் அல்ல என்பதுதான் அவர்களது வாதம்!!

மூன்றாவது, ஏஞ்சலா காத்தமுத்து?

அது என்ன, டாக்டர் இன் சிவில் லா? இயக்குஞர் கதாபாத்திரங்களுக்காக மெனக்கெட்டது இவ்வளவுதானா? மேலும் ‘கற்பழிப்பு’ என்ற பதம், பொலிடிக்கலி இன்கரக்ட் என்பது கூட புரியாதா, டாக்டரேட்டா?

சரி, கதையின் முடிவென்ன? கமலஹாசன் நிரபராதி என்பதா இல்லை அவருக்கு மரதண்டனை தேவையில்லை என்பதா? எப்படியாயினும், தமிழ்ப்பட ஹீரோயிச கிளீஷேயிலிருந்து, தப்பிக்க முயன்று தோற்ற மற்றொரு படம் என்பது புரிகிறது!

இவ்வாறு இரு வேறுபட்ட பார்வைகளில் திரைக்கதையினை நகர்த்துவது என்பது தமிழ் திரைப்படத்திற்கு புதிது...ஆனால் இவ்வகையான திரைக்கதைகளின் வெற்றி, உண்மையென்பது, பொய்க்கும் மெய்க்கும் நடுவே இருப்பது என்ற வகையில் அதனை ரசிகர்களின் யூகத்தில் விடுவதில் இருக்கிறதேயன்றி, இவன் கதாநாயகன் இவன் வில்லன் என்று விளக்குவதில் இல்லை...

விருமாண்டியில், கமல்ஹாசன் தமிழ் திரைக்கதையினை அந்த அளவிற்கு உயர்த்தியுள்ளாரா என்பது படத்தினை முழுவதும் பார்க்கும் பாக்கியம் வாய்த்தவர்கள்தான் கூற வேண்டும்.

மதுரை
18.08.078

ஒரு சமயம், ஏஞ்சலா, தனது பிறந்த ஊராக ‘கீழவெண்மணி’ என்று குறிப்பிடுவதன் காரணம் என்ன?

13.8.07

ஹாரி போட்டரும் சிவாஜியும்

“அப்பா, ஹாரி போட்டர் புத்தகம் வேணும்”

“சரி”

“முதல் நாளே வேணும்”

“ம்ம்...பார்க்கலாம்”

“அப்ப கண்டிப்பா வாங்கித்தருவீங்களா?”

“சரி...வாங்கலாம்”

“எனக்கு ஒன்று, அக்காவுக்கு ஒன்று”

உரையாடலை தொடராமல் எனது மகளையே சிறிது நேரம் பார்த்தேன்...


***

“இந்த ரெளலிங் எப்படி உன்னை ஒரு முட்டாளாக்கி வச்சிருக்கா, பார்த்தியா? முதல் நாள் ஹாரி போட்டர் புத்தகத்தின் விலை ஆயிரம் ரூபாய். ஒரு வாரம் வெயிட் பண்ணினால், பிளாட்பாரத்தில் பைரேட்டட் எடிஷன் நூறு ரூபாய்க்கு கிடைக்கும். அல்லது பேப்பர் பேக் எடிஷன் நானூறு ரூபாய்க்கு கிடைக்கும். புத்தகத்தை வெளியிட இத்தனை நாள் ஆனதே, இன்னும் ஒரு வாரம் தள்ளிப்போனது என்று நினைத்துக் கொண்டால் ஐநூறு ரூபாய் மிச்சப்படுத்தலாம் என்று உன்னை யோசிக்க விடாமல் தடுப்பது அவர்களது வியாபார தந்திரம்”

“சரி, முதல் நாளே வாங்க வேண்டும் என்பது கூட அதிகபட்சமான ரசிகத்தன்மை என்று எடுத்துக் கொள்ளலாம். ஒரே வீட்டில் இருக்கும் இரண்டு பேருக்கும் ஆளுக்கு ஒரு புத்தகம் வாங்க வேண்டும் என்ற எண்ணம், முட்டாள்தனமின்றி வேறென்ன?”

“வேறு எந்த பொருட்களுக்கும் இல்லாத ஒரு தன்மை புத்தகங்களுக்கு உண்டு. புத்தகத்தை, எத்தனை முறை வேண்டுமானாலும் படிக்கலாம், எத்தனை நபர்களும் படிக்கலாம். It can be consumed any number of time, without diminishing its utility. எனவேதான் எந்த புத்தகத்திற்கும் விலை நிர்ணயிக்க முடியாது. இப்படி அக்காவும் தங்கையும் ஒரே நாளில் ஒரே புத்தகத்தை வாங்குவோம் என்பது, புத்தகத்தின் இந்த மதிப்பையே குறைப்பதாகாதா?”

“ரெளலிங்கிற்கு உன்னைப் போன்ற ஏழ்மையான நாடுகளைச் சேர்ந்த குழந்தைகள் மீது உண்மையிலேயே அக்கறையிருந்தால், மூன்றாம் உலக நாடுகளில், குறைந்த விலைக்கு விற்கட்டுமே! தெரியுமா? இந்திய நாட்டில் பெரும்பான்மையோரின் ஒரு மாத சம்பளம் ஆயிரம் ரூபாயினை தொடுவதில்லை என்பது”

“இந்த வியாபாரிகள் உன்னை சிந்திக்க விடுவதில்லை. ஹாரி போட்டர் வெளியாகும் நாளில், ஏதோ உலகமே மாறி விடப்போகிறது என்ற மாயத்தோற்றத்தினை உருவாக்குகிறார்கள். இவர்களுக்காக இப்படியான கருத்தாக்கத்தை உன் போன்ற சிறுமிகளிடம் உருவாக்குவதற்கு பெரிதும் உதவுவது ஊடகங்கள்...”

“ஏதோ ஹாரி போட்டருக்காக இந்தியாவே ஏங்கிக் கிடப்பது போன்ற ஒரு தோற்றத்தினை, இவ்வாறு முழுப்பைத்தியம் பிடித்து அலையும் ஒரு சிறு கூட்டத்தினைக் காட்டி மற்றவர்களையும் முட்டாளாக்குகிறார்கள். முதல் நாளே வாங்கிப் படிக்காவிடில், போச்சு...என்ற நினைப்பினை உனக்கு ஊட்டி விடுகிறார்கள். அவ்வளவுதான்”

***

“ஒரு புத்திசாலி நுகர்வோர் எப்படியிருப்பான்? சந்தைக்கு வரும் ஒரு பொருளில் தரம் நன்றாக இருக்கிறதா என்பதை அறிந்து, பின்னரே வாங்க முடிவெடுப்பான். ஆனால், உன் போன்ற ரசிகர்கள்? பொருள் தரமோ, இல்லையோ...அது எப்படியிருக்கிறது என்று பார்ப்பதற்காக வாங்க முடிவெடுக்கிறீர்கள்”

“இவ்வாறு உங்களை முடிவெடுக்க வைப்பதில்தால், இந்த வியாபாரிகள் வெற்றி பெறுகிறார்கள். அதற்க்காகத்தான் முதல் இரண்டு மூன்று நாட்களிலே விற்றுத் தீர்த்துவிட வேண்டும் என்று இவர்கள் அலைகிறார்கள். ஏனென்றால் சரக்கு மோசமாக இருந்து, அந்த எண்ணம் வெளியே பரவி விட்டால்?”

“பார்த்துக் கொண்டேயிரு, இதோ ஹாரி போட்டர் சாகிறான் இல்லை பிழைக்கிறான், இதுதான் கதை, அடுத்த மாதம் வெளிவருகிறது என்று சரடு விட்டுக் கொண்டு ஒரு போதை நிலைக்கு உங்களைப் போன்றவர்களை கொண்டு சென்று விட்டார்கள். ஆனால், எழுதி வைத்துக் கொள். ஹாரி போட்டர் வெளியான மூன்று நாட்களில் உன்னைச் சுற்றியுள்ள உலகம் முன்பு போலவே சுழன்று கொண்டிருக்கும்”

“நீ புத்திசாலி வாசகியா அல்லது முட்டாளா? என்பதை நீயே தீர்மானிக்கலாம்”

“சரி ஒரு புத்தகமே போதும்”


பிரபு ராஜதுரை
12.08.07


பின் குறிப்பு : தலைப்பில் ஏன் சிவாஜி.? கடந்த சில வாரங்களாக, சிவாஜிதானே ஹாட் டாபிக். மற்றபடி சிவாஜிக்கும் ஹாரி போட்டருக்கும் ஒற்றுமையில்லை!

இதுவெல்லாம் பிஸினென்ஸ் ஸ்டிராடஜி என்று மேனேஜ்மெண்ட் மாணவர்கள் வியக்கலாம். முன்னாபாய் படத்தில் நோயாளியை சப்ஜெக்ட் என்று சொல்லும் மருத்துவருக்கும், இண்டிபெண்டஸ் டே படத்தில், “ in the past twenty four hours, it has become very exciting” என்று வேற்று கிரக வாசிகளின் தாக்குதலை ஜனாதிபதியிடம் வியக்கும் விஞ்ஞானிக்கும் அவர்களுக்கும் ஒற்றுமை உண்டு!!

16.6.07

ஜாதி என்ன?

பல வருடங்களுக்கு முன்னர் நடிகர் கமல்ஹாசன் ‘தனது மகளை பள்ளியில் சேர்க்க சென்ற பொழுது, மகளின் பள்ளி ஆவணத்தில் ஜாதி, மதம் என்ற இடத்தில் இந்தியன் என்று குறிப்பிட வேண்டியதாகவும், பள்ளி நிர்வாகிகள் ஜாதி, மதம் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும் என்று கூறியதாக’ ஊடகங்களில் செய்தி வெளியானது.

ஏன் தற்பொழுது கூட தமிழ் ஊடகங்களில் பலமுறை ‘ஜாதியை ஒழிக்கப் போவதாக அரசு கூறினாலும், பள்ளிகளில் குழந்தைகளில் சேர்க்கப் போனால் முதலில் ஜாதியைத்தானே குறிப்பிடச் சொல்கிறார்கள்’ என்று எழுதப்படுவதை படிக்க நேர்கிறது.

இத்தகைய செய்திகளால், ஏதோ தாங்கள் விரும்பாவிட்டாலும், அரசு மக்களின் மீது ஜாதியினை திணிக்கிறது என்று மக்கள் மத்தியில் ஒரு எண்ணம், முற்றிலும் தவறான எண்ணம் ஊட்டப்பட்டுள்ளது.

நானறிந்த பல குழந்தைகளின் பள்ளி ஆவணங்களில் மதம் குறிப்பிடப்பட்டிருந்தாலும், ஜாதி குறிப்பிடப்படவில்லை என்பதை அறிவேன்.

ஆயினும், எந்தப் பள்ளியிலாவது, குழந்தையின் ஜாதி, மதம் போன்றவற்றை குறிப்பிட கட்டாயப்படுத்தினால் அவர்களிடம் ‘தமிழக அரசு இந்தப் பிரச்னை குறித்து வெளியிட்ட அரசாணை எண்.1210 தேதி 02.07.73’ஐ சுட்டிக்காட்டவும். இந்த அரசாணையின்படி பள்ளிச் சான்றிதழ்களில் ஜாதி, மதம் போன்ற இடங்களை காலியாக விடவோ அல்லது இல்லை என்று குறிப்பிடவோ உரிமை உண்டு என்று அரசு கூறுகிறது.

இவ்வாறு கட்டாயப்படுத்தக் கூடாது என்று பள்ளிகளுக்கு ஆணையிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நீதிப் பேராணை மனுவில் (writ petition) ‘இவ்வாறு ஏற்கனவே ஒரு அரசாணை இருப்பதால் உத்தரவு எதுவும் தேவையில்லை’ என்று சமீபத்தில் தீர்ப்புக் கூறப்பட்டுள்ளது.

மதுரை
16.06.07

2.6.07

ஏன் நிகழவில்லை, அதிசயம்?

இந்தியாவின் சிறந்த பொருளாதார மேதைகளில் ஒருவராக கருதப்படும், பிரதமர் மன்மோகன், இன்று தனிமையில் தனக்குள்ளே சிந்திக்கும் கேள்வி இதுவாகத்தான் இருக்க முடியும். இந்தக் கேள்விக்கு விடை காண முடியாத விரக்தியிலேயே, அவர் இந்திய தொழிலதிபர்களைப் பார்த்து ‘உங்கள் லாப விகிதத்தை கொஞ்சம் குறைத்துக் கொள்ள முடியாதா?’ ‘உங்கள் நிர்வாகிகள் தங்களுக்கு வானளாவிய சம்பளம் அளித்துக் கொள்ள வேண்டுமா?’ என்று கெஞ்சும் நிலைக்கு வந்திருக்கிறார்.

ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர், மக்கள் ஆதரவு என்ற எவ்வித கட்டுப்பாடுமின்றி தனக்கு கிடைத்த சுதந்திரத்தை அன்றைய பிரதமர் நரசிம்மராவ் இன்றைய பிரதமர் மன்மோகனுக்கு அளிக்க, பின்னவரோ ‘தேங்கிக் கிடக்கும் இந்தியாவின் பொருளாதாரத்தை முடுக்கிவிடும் ஒரே வழி ‘தாராளமயமாக்கலே’ என்று முடிவெடுத்ததற்கு உத்வேகமளித்தது, ‘புதிய பொருளாதாரத்தின் பலன்கள் இந்தியாவின் கடைசி குடிமகன் வரை சென்று அடையும்’ என்ற நம்பிக்கைதான். ஆனால், செல்வத்தின் அந்த கீழ் நோக்கி கசியும் தன்மை (trickling effect) இந்தியாவில் தேவையான வேகத்தில் நிகழவில்லை என்பதே இன்றைய நிலையில் பலரது கருத்தாக இருக்கிறது.

***

நான் கண்ணுற்றுணர்ந்த ஒரு உதாரணத்தைக் கூற முடியும். எனது உறவினர், நண்பர்கள் வீடுகளுக்கு செல்கையில் பத்தாண்டுகளுக்கு முன்பிருந்ததற்கு இன்று சலவைக்கல் பதித்த தரைகள், கார், ஏர் கண்டிஷனர் என்று வாழ்க்கை வசதிகளின் முன்னேற்றம் வெளிப்படையாக தெரிகிறது. ஆனால் விவசாயத்தை தொழிலாக கொண்டிருப்பவர்களைப் பார்த்தால் குறிப்பிடத்தக்க எந்த முன்னேற்றமும் தெரிவதில்லை, அவர்கள் எத்தனை ஏக்கர் நிலங்களுக்கு சொந்தக்காரர்களாக இருப்பினும் சரி!

மன்மோகன் நினைத்தது என்ன? செல்வத்தைப் பெருக்கும் தொழிலதிபர்களால் காகித பணத்தினை சாப்பிட முடியாது...ஆனால் பணம் பெருக பெருக தேவைகளும் பெருகும். அவற்றை பூர்த்தி செய்ய அந்தப் பணம் மற்றவர்களுக்கும் வந்துதானாக வேண்டும் என்பதுதான். தண்ணீரைப் போல செல்வமும் அதன் போக்கில் விட்டால் மேலிருந்து கீழே பாய்ந்துதானாக வேண்டும் என்று நினைத்தால், அது பெளதீக விதிகளை மீறி, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பிருந்தை விட இன்று இடைவெளிகள் அதிகரித்திருப்பது போல தோன்றுகிறது.

இந்தியாவில் இந்த பதினைந்து ஆண்டுகளில் மாபெரும் வளர்ச்சியடைந்துள்ள தொழிலதிபர்களின் செல்வத்தினையும் மறுபக்கம் நிகழ்ந்து கொண்டிருக்கும் விவசாயிகளின் தற்கொலைகளையும் பார்த்தால், இந்தியாவும், கட்டுப்பாடற்ற பொருளாதாரத்தை பின்பற்றும் சில லத்தீன், தென் அமெரிக்க நாடுகளைப் போல பொருளாதாரத்தின் இரு எல்லைகளையும் தொட்டு நிற்கும் நிலை வருமோ என்ற அச்சம் ஏற்ப்படுகிறது.

***

மன்மோகன், நல்லெண்ண அடிப்படையிலேயே பொருளாதாரத்தை தாரளமயமாக்கினார். ஆனால், அடிப்படையான சில இந்திய குணங்களை அவர் புரிந்து கொள்ளவில்லை என்றே நான் நினைக்கிறேன்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் பொருளாதார நிபுணர் சுவாமிநாத ஐயர் சுவராசியமான ஒரு கருத்தினை கூறினார். அதாவது அமெரிக்காவில் தொழிலதிபர்களின் வாரிசுகள், நிறுவனம் தங்கள் கைக்கு வந்தவுடன் செய்வது, பங்குகள் அனைத்தையும் விற்று உல்லாச படகுகள், பிரயாணங்கள் என வாழ்க்கையை அனுபவிக்க கிளம்பி விடுவார்களாம். நிறுவனமும், புதிய நிர்வாகிகளின் வேறுபட்ட ஐடியாக்களினால், மாறுபட்ட முயற்சிகளை மேற்கொள்ள முயலுமாம். இந்தியாவிலோ பிர்லா போன்ற நிறுவனங்கள் ஒரு குடும்பத்தின் பிடியிலேயே வளர்ச்சியில் தேக்க நிலையில் உள்ளதாம்.

ஏறக்குறைய இதே கருத்து, ஏன் செல்வம் இங்கு கீழிறங்கவில்லை என்பதையும் விளக்கலாம். செல்வத்தைப் பெருக்க வழிவகை செய்த மன்மோகன், ‘அந்த செல்வத்தை ஆள்வதற்கு நம் மக்கள் தயாராக இருக்கிறார்களா’ என்று சிந்திக்கவில்லை.

பொதுவாகவே இந்தியர்கள் பாதுகாப்பு உணர்வு மிக்கவர்கள். தனக்கு மட்டுமின்றி, தன் கண் முன்னே வாழப்போகும் தனது மகன், பேரன் வரை வருமானம் ஏதுமின்றி போனாலும், பொருளாதார வசதிக்குறைவு ஏற்படக்கூடாது என்று அவர்களுக்கும் சேர்த்து சேமிக்கும் குணம் உள்ளது. எத்தனை சிறுகச் சிறுக எனினும், அத்தனை வழியிலும் பணத்தினை சேமிக்கவே முயல்கிறார்கள்.

***

நான் சிறுவனாயிருக்கையில் எனது அம்மா, ஆச்சி போன்றவர்கள் எவ்வாறு பணத்தினை எண்ணி எண்ணி செலவழித்தார்கள் என்று பார்த்திருக்கிறேன். பணத்திற்கான முழு மதிப்பினை பெருவதில் (cost consciousness) நம்மவர்களின் ஆர்வம் தெரிந்த விடயம்தான். ஆனால், எழுபதுகளில் நிலவிய பொருளாதார தேக்கத்திலிருந்து விடுபட்டு வெகுதூரம் வந்து விட்டோம் என்று நாம் உணரவில்லை.

அமெரிக்காவில் பொறியாளராக இருக்கும் ஒருவரை வழியனுப்ப ரயில் நிலையம் செல்கையில், சாதாரண சம்பளம் பெரும் ஒரு இந்தியரைப் போலவே போர்ட்டரிடம் பேரம் பேசிக் கொண்டிருந்தார். ஐம்பது ரூபாயினை மிச்சப்படுத்தும் வேகத்தை விட, ‘விட்டா தலையில மொளகா அரைச்சுடுவானுங்க’ என்ற பழைய கோபமே இப்பொழுதும் பேரமாக வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.

அமெரிக்கா என்ன, தற்பொழுது இந்தியாவிலிலேயே வசதியான சம்பளம் பெற முடிகிறது. ஆனால், எத்தனை ஆயிரம் சம்பளம் பெற்றாலும், வீட்டில் தேங்கும் பழைய செய்தித்தாள்களை பெற்றுச் செல்ல வருபவருக்கு, இலவசமாகக் கூட அதைத் தர முடியும் என்பது இதுவரை நினைத்துக் கூட பார்க்கப்பட்டதில்லை!

இவ்வாறு உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போக முடியும்.

***

நடுத்தர வர்க்கத்தினரின் இக்குணாதியசங்களா இந்திய பொருளாதாரத்தை நிர்ணயிக்கின்றன? என்றால் எனது பதில், ‘கீழ் நோக்கி வடிய வேண்டிய செல்வம் மத்தியில் உள்ள இந்த பாறைத்திட்டோடு நின்று மன்மோகனின் நம்பிக்கையினை பொய்யாக்கியுள்ளது’ என்பதுதான்.

தாராளமயமாக்கலில் பயன் பெரும் ஒரு நிறுவனம், அதன் பலன்களில் ஒரு பகுதியினை தனது நிர்வாகிகளுக்கு சம்பளமாக அளித்தால், அடுத்த அடுக்குகளில் இருப்பவர்கள் அதற்கும் கீழ் அடுக்குகளுக்கு அதை கசியவிடும் மனநிலை இங்கு இல்லை.

முன்னர் ஆடம்பரம் என்று கருதிய வசதிகளையெல்லாம் நடுத்தர வர்க்கம் வாங்கிக் குமிக்கவில்லையா? உண்மைதான். தொலைபேசியே ஆடம்பரமாக கருதப்பட்ட காலத்தை விட்டு இன்று ஏர் கண்டிஷனர்கள் கூட சாதாரணமாகிப் போன கால கட்டத்திற்கு வந்துள்ளனர். ஆனால், இவ்வகையான செலவுகளும் செல்வத்தை தட்டையான பாதையில் செலுத்துகிறதே தவிர கீழே செலுத்துவதில்லை.

பத்தாண்டுகளுக்கு முன்னர் முப்பது ரூபாய்க்கு சாதாரண செருப்பினை வாங்கியவர்கள் இன்று மூவாயிரம் ரூபாய்க்கு ரீபோக் ஷூ வாங்குகிறார்கள். ஆனால், ரீபோக் கடையில் வேலை செய்யும் சிப்பந்தியின் சம்பளத்தை கேட்டுப் பார்த்தால், அது பண வீக்கத்திற்கு நிகரான முன்னேற்றமே அடைந்திருக்கும். ஒரு ஷூ வாங்குவதற்கு கொடுத்த மூவாயிரம் ரூபாயில் ஆகக் குறைந்த சதவிகிதம், தொழிலாளிக்கு போக செல்வம் முழுவதும் மீண்டும் தொழிலதிபரின் கையிலே சென்று சேர்கிறது. ஆக செல்வம் இந்த இரு மட்டங்களையும் தாண்டி வேறு நிலைகளுக்கு இங்கு கசிவதில்லை என்பதே உண்மை!

‘war is too serious to be left only with the generals’ என்று சொல்வார்கள். அதே போல ‘economy is too serious to be left with the people’ என்றும் கூறலாம்

மதுரை
01.06.07

எவ்வித பொருளாதார ஆதாரங்களும், அறிவுமின்றி பத்திரிக்கைகளில் வாசித்ததையும், சொந்த அனுபவங்களையும் வைத்து சில கருத்துகளை முன் வைக்கிறேன். தவறான புரிதல்களை சுட்டிக்காட்டவும். இது குறித்து மேலும் அதிகம் எழுத விரும்புகிறேன். நேரமின்மையால் பின்னர்.

29.5.07

விகடன் - உண்மைக் கலைஞனின் கோபம்

திரைப்பட நடிகர்களின் பின்னே விசிறி என்று சுற்றுவது முட்டாள்களின் வேலை என்று முகத்திலடிக்கும்படி கூறுகிறார் பிரகாஷ்ராஜ். ‘ஸ்பேடை ஸ்பேட்’ என்று கூறக்கூடிய ஒரு நடிகர் தமிழ் திரையுலகில் இருப்பது அதிசயம். ஆனந்த விகடனில் வெளிவரும் பிரகாஷ்ராஜின் கட்டுரைகள் பற்றி கடந்த கிறிஸ்துமஸ் ஆராதனையில் பாதிரியார் குறிப்பிட்டார். அவ்வப்போது படிக்கையில் அவர் மீதான மதிப்பு கூடும். தற்பொழுது இன்னும் தன்னை உயர்த்திக் கொண்டுள்ளார்.

முட்டாள்தனம் என்பதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. அவ்விதமான அறியாமைகளுக்கு மன்னிப்பும் இல்லை என்று அண்டன் செகோவ் கதையை உதாரணம் காட்டுகிறார்.

பிரகாஷ்ராஜ் தனது திறமையினை நம்புகிறார். பிறகு ஏன் ரசிகர் என்ற சோம்பேறிக் கூட்டங்கள் என நினைத்திருக்கலாம். பல நடிகர்களுக்கு அவ்வாறு தோன்றலாம். தங்கள் மீது கொண்ட அவநம்பிக்கையின் காரணமாக இவற்றை பொறுத்துக் கொள்கிறார்கள் என்பது எனது அனுமானம். முன்பு ஒருமுறை குறிப்பிட்டேன். சரக்கு குறையும் இடத்திலெல்லாம், இவ்விதமான விளம்பர யுக்திகள் தேவைப்படும் என்று. சரக்கு எவ்வளவு தூரம் குறைகிறதோ அவ்வளவு தூரம் ரசிகர்களை முட்டாளாக்குவதும் அதிகமாகும். எம்ஜிஆர் - சிவாஜி, ரஜினி - கமல் என்று தொடர்பு படுத்திப் பார்த்தால் விளங்கலாம்.

கமலஹாசன் அவ்வப்போது, தன்னை இப்படியான கூட்டங்களிலிருந்து விடுபடுத்திக் கொள்ளப்பார்ப்பார். பின்னர் தனது வெற்றியின் மீது நம்பிக்கையில்லாமல் நற்பணி மன்றம் என்று காம்பிரமைஸ் செய்து கொள்வார். குருதிப்புனல் படத்தில், கமலுக்கும் நாசருக்கும் இடையே நடக்கும் உரையாடல்களில், தீவீரவாதமெல்லாம் இங்கே செல்லாது என்று நாசருக்கு புரிய வைக்க ‘ரசிகர் பட்டாளங்களைப்’ பற்றி சில கூறுவார். எவ்வித வெட்கமுமின்றி அந்த வசனங்களுக்கு தேவி தியேட்டரில் ரசிகர்கள் கைதட்டிக் கொண்டிருந்தார்கள்.

பிரகாஷ்ராஜ் வேண்டாம், கவுண்டமணியிடம் இருந்தாவது தமிழக ஹீ(ஜீ)ரோக்கள் கற்றுக் கொள்வது நல்லது.

விகடன் - புரட்சிக் கலைஞரின் கோபம்

ஆனந்த விகடன் பேட்டியில் தனது திருமண மண்டபம் இடிக்கப்பட்டதைப் பொறுத்து பொங்கிப் பொறுமியிருக்கிறார் விஜயகாந்த்!

ஏதோ மற்ற அரசியல்வாதிகளும், நீதிமன்றங்களும் இணைந்து சதி செய்து அவரது திருமண மண்டபத்தினை இடித்தது போல தோற்றத்தினை உருவாக்க நினைக்கிறார். நில ஆர்ஜித சட்டங்களைப் (Land Acquisition Laws) பற்றி அறிந்தவர்களுக்கு, இந்த இடிப்பு ஒன்றும் பெரிய விஷயமில்லை. அரசு குறிப்பிட்ட ஒரு நிலம் வேண்டும் என்று நினைக்கையில், நீதிமன்றங்களால் பொதுவாக இயலக்கூடியது நில உரிமையாளருக்கு போதிய இழப்பீடு கிடைக்கிறதா என்று பார்ப்பது மட்டுமே!

அகில இந்திய அளவில் செயல்படுத்தப்படும் ஒரு திட்டத்தில், விஜயகாந்த் இழந்தது ஒரு துளி. அவ்வளவே! இந்தியா முழுவதும், இச்சாலை அமைப்பதினால், எத்தனை ஆயிரம் நபர்கள் தங்கள் விவசாய நிலங்களை இழக்கின்றனர். அனைவரிடமும் மாற்றுத் திட்டம் உண்டு! இவ்வாறு ஒவ்வொருவரிடமும் மாற்றுத்திட்டம் பெற்று அதனை பரிசீலித்துக் கொண்டிருந்தால் சாலையினை வங்காள வளைகுடாவில்தான் போட வேண்டும்!

சமீபத்தில் மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு. கூடங்குளம் அணுமின் நிலையம் அமைப்பதில் பொதுமக்களிடம் கருத்து கேட்கும் ஒரு கூட்டம், திருநெல்வேலி கலெக்டர் அலுவலகத்தில் நடத்தாமல், பாதிக்கப்படும் கூடங்குளம் மக்கள் கலந்து கொள்ளும் வகையில் கூடங்குளத்திலேயே நடத்த வேண்டும் என்ற கோரிக்கைக்காக. அதற்காக இலவசமாக ஒரு மண்டபமும் தர தயாராக இருந்தனர். இருந்த பொழுதும் நீதிமன்றம் தலையிட மறுத்து விட்டது.

கேவலம், கூட்டம் நடைபெறும் இடத்தினை மாற்றவே அதிகாரிகள் தயாராக இல்லாத பொழுது...திட்ட இடத்தினை மாற்றுவதாவது.


பொதுவாகவே பெரிய திட்டங்களை அரசு செயல்படுத்த முயல்கையில், அது சர்தார் சரோவர் அணைக்கட்டாயினும் சரி, சேது சமுத்திர திட்டமானாலும் சரி, கூடங்குளம் அணுமின்நிலையமானாலும் சரி...நீதிமன்றங்கள் அதில் ஓரளவுக்கு மேல் கேள்வி கேட்பதில்லை. விஜயகாந்தின் கலியாண மண்டபம் எம்மாத்திரம்.

சர்தார் சரோவர் திட்டத்தினால் பாதிப்படையும் பழங்குடிகள், சேது சமுத்திர திட்டத்தினால் பாதிப்படையலாம் என அஞ்சும் மீனவர்கள், கூடங்குளம் அணு உலைக்கு தங்கள் நிலங்களை இழந்த விவசாயிகளின் இழப்பு விஜயகாந்திற்கு ஏற்ப்பட்ட இழப்பிற்கு சற்றும் குறைந்ததில்லை!

கலியாண மண்டபம் இடிக்கப்பட்டாதால் பாதிப்படைந்தது, மற்றவர்களைப் போல தனக்கு வாழ்வாதரப் பிரச்னையில்லை என்று விஜயகாந்த் ஆறுதலடைவது நன்று!

விகடன் - கலைஞரின் கோபம்

சில தினங்களுக்கு முன்னர் ‘திருப்பிக் கொடுத்தால் தாங்குவதற்கு பலம் இருக்கிறதா?’ என்று ஏறக்குறைய தினகரன் சம்பவத்தினை ஞாபகப்படுத்தும் தோரணையில் முதல்வர் கலைஞர், ஆனந்த விகடன் பத்திரிக்கையின் ஒரு நையாண்டியினைப் பற்றி எரிச்சலோடு குறிப்பிட்டதைப் படித்ததும், ‘ஏதோ ஆனந்த விகடன் அரசியல் நையாண்டியில் இதுவரை துக்ளக் கூட தொடாத உச்சத்தை எட்டிவிட்டது போல’ என்று நினைத்தேன். ஆனந்த விகடனை வாங்கிப் பார்த்தால், எவ்வித புத்திசாலித்தனமும் இல்லாத வழக்கமான நகைச்சுவைதான்.

இவ்வளவு தூரம் கடுமையான ஒரு பதிலினைக் கூறும் வகையில், வரம்பு மீறிய நக்கல், நையாண்டி ஏதும் அதில் இல்லை! முதல்வரின் மனைவிகள் அரசியலில் கொஞ்சம் கூட பங்கு பெறுவதில்லையா? தயாளு அம்மாள், ராஜாத்தி அம்மாள் பற்றி விமர்சனம் கூடாது என்றால் சகிகலா குடும்ப உறுப்பினர் பற்றியும் விமர்சனம் கூடாதுதான்.

முதல்வரோடு தங்களை நெருக்கமாக காட்டிக் கொள்வதில், ஆனந்த விகடன் போன்ற பத்திரிக்கைகள் பெருமை அடைவது உண்டு. அதற்கு கொடுக்கும் விலைதான் இத்தகைய எதிர்வினைகள். தன்னிடம் இவ்வாறு உரிமை எடுத்துக் கொள்ளும் பத்திரிக்கைளில் இருந்து வரும் சிறு விமர்சனமும் முதல்வரை அதிகம் பாதிக்கிறது.

தமிழகத்தின் முதுபெறும் அரசியல் தலைவர் என்ற தகுதியினை அடைவதற்கு முதல்வர் தனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது நன்று!

24.5.07

ஏப்ரல் மாத முதல் தேதி கதை....(மெளன ராகம்)

சட்டம், நீதிமன்றங்களைப் பற்றி மக்கள் எவ்வளவு தூரம் அறிந்திருக்கிறார்களோ தெரியாது. ஆனால் வக்கீல் நோட்டீஸ் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. திரைப்படங்களில் கூட வக்கீல் நோட்டீஸைப் பெறுபவர், ஏதோ எமனது பாசக்கயிறு தன் மீது வீசப்பட்டது போல அதிர்ந்து புலம்புவதைப் பார்த்திருக்கலாம்.

ஆனால் இந்த நோட்டீஸ் எல்லாம் 'சும்மா குஸ்திக்கு முன்னர் அப்படியே வீடு கட்டுவதைப்' போலத்தான். பெரிய விளைவுகள் ஏதும் இல்லை. என்றாலும், வழக்குரைஞர் ஆவதற்கு முன்னரே நானும் எனது நண்பனும் அனுப்பிய ஒரு நோட்டீஸ் எங்கள் கல்லூரியில் கிளப்பிய பீதி!

***

கல்லூரி ஆண்டு மலரில் அந்தக் கதையைப் படித்தவுடனேயே எனக்கு பொறி தட்டியது, 'இதை எங்கோ படித்திருக்கிறோமே' என. பொதுவாக கல்லூரி மலர்களில் புகைப்படங்களை மட்டும் பார்த்து விட்டு தூர எறிவதுதான் வழக்கம் என்றாலும், கதையைப் படிக்க வைத்தது அதை எழுதியவர்.

எங்களூர் மாணவி!

தனது நெருங்கிய தோழிகள் இருவரைத் தவிர யாருடனும் பேசுவதில்லை. கூட்டாக கொண்டாடும் எதிலும் பங்கெடுப்பதுமில்லை. அந்த நான்கு வருடங்களில் என்னிடம் ஒரு தடவை கூட பேசியதில்லை. இத்தனைக்கு ஐந்தாவது வகுப்பு வரை நானும் அவர்களும் கிளாஸ் மேட்!

உடனே கதைகளில் ஓரளவுக்கு பரிச்சயமுள்ள என நண்பரிடம் கூறினேன். அவரும் 'மாட்னாடா' என்றார். என் அண்ணனுக்கு கல்லூரியில் தமிழில் சிறப்பு பாடமாக சக்தி-சிவம் என்பவர்கள் எழுதிய சிறுகதைத் தொகுதியில்தான் படித்த ஞாபகம்.

விடக்கூடாது என்று ஒரு திட்டம் தீட்டினோம். அதற்காக அந்த கதைத் தொகுதியைத் தேடி நானும் எனது நண்பரும் மதுரையில் அலையாத இடம் இல்லை. கிடைக்கவில்லை.

சரி, இனி நேரத்தை வீணாக்கக் கூடாது என்று நானே பேனாவும் கையுமாக உட்கார்ந்து விட்டேன். மதுரை பல்கலைக்கழகத்தில் பேராசியராக பணிபுரியும் தனது கட்சிக்காரராரின் கதையை திருடி ஆண்டு மலரில் அந்தப் பெண் எழுதியுள்ளதாகவும், அதற்கு நஷ்ட ஈடாக 20,000 ரூபாய்(ஞாபகமில்லை) தர வேண்டுமெனவும் ஒரு நோட்டீஸ் எழுதினோம்.

யார் பெயரில் அனுப்புவது?

தான் பயிற்சி எடுக்கும் வழக்குரைஞரின் லெட்டர் பேடை நண்பர் கொண்டு வந்து...பதட்டமேயில்லாமல் அவரது கையெழுத்தையும் இட்டாயிற்று. நாங்கள் அதை பதிவுத் தபாலில் கல்லூரி விலாசத்துக்கு அனுப்பியது எங்களிருவரைத் தவிர யாருக்கும் தெரியாது.

கல்லூரி தினமும் இரண்டு மணி நேரம்தான். ஆனாலும் அனைவரும் உட்கார்ந்து அரட்டை கச்சேரி நடத்தினாலும், இந்தப் பெண் தங்குவதில்லை. எனவே முதல் நாள் தபால்காரர் வருகையில் அவர்கள் இல்லை. இரண்டாம் நாள், நாங்கள் தள்ளியிருந்து கவனிக்க அந்தப் பெண் தனது தோழிகளுடன் லாபியிலேயே கடிதம் எதிர்பார்த்து உலாத்திக் கொண்டிருந்தார்.

ஆச்சு, தபால்காரர் வந்ததும் கையெழுத்திட்டு அதை பிரித்து மாற்றி மாற்றி மூன்று பெண்களும் படிக்கிறார்கள். அப்படியே சுற்றுமுற்றும் அவர்கள் பார்க்க, 'மாட்டிக் கொண்டோம்' என நாங்கள் இருவரும் அறைக்குள் ஒளிந்து கொண்டோம். நான் எழுதிய நோட்டீஸில் எனக்கு நம்பிக்கை இல்லை.

சிறிது நேரம் கழித்து மெல்ல வெளியே சென்றால், ஒரு பெரிய கூட்டமே அங்கிருந்தது.
நாங்களும் நல்லபிள்ளையாக அருகே சென்றால், அங்கே பெரிய விவாதம் நடைபெற்று
கொண்டிருந்தது.....'யார் இப்படி எழுதி அனுப்பியது என்றில்லை. மாறாக, நோட்டீஸை எப்படி எதிர்கொள்வது என’

எங்களுக்கு ரொம்ப குஷியாகிப் போனது, 'அட ஒரு கூட்டமே ஏமாறுவதற்கு தயாராக
இருக்கிறதென'

"இதப் பாத்து எல்லாம் பயப்பட வேண்டாம். ஐடெண்டிட்டி ஆப் தாட்னு (identitiy of thought) ஒன்று இருக்கு அதன்படி இருவருக்கு ஒரே நேரத்தில் ஒரே எண்ணங்கள் தோன்றலாம்" என்று நான் அடித்து விட்டேன். அப்படி ஒன்றும் இல்லை என்று மறுக்கும் நிலையில் யாரும் இல்லை. அந்தப் பெண் ஏறக்குறைய அழும் நிலையிலிருந்தார்.

"நானே ஸ்காலர்ஷிப்பில் படிக்கிறேன். என்னால் எப்படி இவ்வளவு பணம் கட்ட முடியும்" என்று புலம்பியபடி இருந்தவரை அங்கு குழுமிய ஆண்களும், பெண்களும் தேற்ற, நிலைமை எங்களை மீறிச் சென்று விடாமல் காப்பாற்ற வேண்டி நான், "சரி கொடுங்க, நாங்கள் எங்கள் வக்கீலிடம் சென்று பதில் நோட்டீஸ் தயார் செய்கிறோம்.

அப்புறம் அவங்கெல்லாம் பெரிய புரொபசருங்க....சும்மாத்தான் நோட்டீஸ் அனுப்பியிருப்பாங்க. போய் ஒரு மன்னிப்பு கேட்டுட்டா போதும் என்றேன்"

இதைக் கேட்டவர் "நான் மீனாட்சி அம்மன் கோவிலில் வச்சி சத்தியம் பண்றேன், நான்தான் எழுதினேன்னு. ஐயோ, எங்க வீட்டில எல்லாம் நான் எப்படி பெருமையா சொன்னேன்" என்று அழுதே விட்டார். பெண்கள் கூட்டத்திலிருந்து சில மோசமான வசவுகளும் பேராசிரியர் சிவத்துக்கு கிடைத்தது.

அடுத்த நாள், எனது நோட்டீஸுக்கு நானே ஒரு பதில் நோட்டீஸ் தயார் செய்ய வேண்டியதாயிற்று. அதை எடுத்துக் கொண்டு கல்லூரி சென்றால், அந்தப் பெண் மதுரையில் பெரிய வக்கீல் ஒருவரின் மகனாக பிறந்ததால், தானும் அதற்குள்ளாகவே பெரிய வக்கீலாகி விட்டது போல படம் காட்டும் ஒரு மாணவருடன் பேசிக் கொண்டிருந்தார். 'ஆஹா, இவன் வேற வந்து மூக்கை நுழைச்சுட்டானா...இனி விளங்குனாப்லதான்" என்று நினைத்தேன்.

அந்த மாணவரால் காரியம் கெட்டுவிடுவது உறுதி என்று நினைத்தோம். பின்னர் என்னிடம் வந்த அந்த மாணவி, எனது பதில் நோட்டீஸை வாங்கியதும், வேறு எதுவும் பேசாமல் பெண்கள் அறைக்கு சென்று விட்டார். கண்கள் இரவு முழுவதும் அவர் தூங்கவில்லை என்பதை உணர்த்தியது.

அறைக்குள் சென்றவர் ஆளையே காணோம் என்றதும் பயம் வந்தது, 'மாட்டிக் கொண்டோம்' என்று. அறையின் கதவை திறந்தால் சுற்றிலும் மற்றவர்கள் அமர்ந்திருக்க நடுவே அவர் அழுது கொண்டிருந்தார்.

என்னவென்று கேட்டால் வக்கீல் மகன், 'நோட்டீஸ் எதுவும் வேண்டாம். தானே நேரடியாக சென்று, பேராசிரியரிடம் பேசுவதாக' கூறியிருக்கிறார். அதுதான் 'அவர் சொல்படி கேட்பதா இல்லை எங்கள் சொல்படி கேட்பதா என்ற குழப்பமாம்'.

சின்ன மீனுக்கு வலை போட்டால் இவ்வளவு பெரிய மீன் வந்து மாட்டியிருக்கிறதே என்ற திருப்தியில் போதும் இத்துடன் முடித்துக் கொள்வோமென அவர் கையிலிருந்த நோட்டீஸை வாங்கி கிழித்துப் போட்டேன்.

நாடகம் இத்துடன் முடிந்தது என்று நினைத்தால், என் நண்பன் என்னுடன் பெரிதாக சண்டை பிடித்தான், 'எப்படி நான் கிழிக்கப் போயிற்றென்று' பதில் நோட்டீஸ் தயாரித்த வக்கீல் ரொம்ப பெரிய வக்கீலாம் (!). இலவசமாக அவர் தயாரித்த நோட்டீஸை நான் எப்படி கிழிக்கப் போயிற்றென்று.

முதலில் குழம்பிய நான்...நண்பனை புரிந்து கொண்டு பதிலுக்கு கத்தினேன். கடைசியில் 'அவருக்காக நாஙக்ள் சண்டையிட வேண்டாம்' என்று அந்தப் பெண் மேலும் அழ, எனக்கு மிகவும் சங்கடமாகிவிட்டது. 'கவலைப்படாதீர்கள். இந்த முதல் நோட்டீஸே நாங்கள்தான் அனுப்பினோம்' என்று குட்டை உடைக்க, முதலில் ஒரு கணம் என்ன செய்வது என்பது தெரியாமல்....அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கே ஐந்து நிமிடமாயிற்று.....வகுப்பு பெண்களெல்லாம் எங்களை 'பிலு பிலு' வென பிடித்துக் கொள்ள, அன்று அனைவரையும் சமாதானப் படுத்த போதும் போதும் என்று ஆகியது....

ஆனால் இன்றும் என் சந்தேகம் தீரவில்லை. அந்தக் கதையை ஏற்கனவே நான் படித்திருக்கிறேன். ஆனால், அந்தப் பெண் அந்த இரு நாட்களில் பலமுறை நாங்கள் கேட்காமலேயே சத்தியம் செய்தார்.

ஏன் அவர் ஒரு கதைக்காக பொய் சொல்ல வேண்டும்?

நன்றி: வலைப்பூ 01.04.07

(இங்கும் பலர் ஒத்துக் கொள்ள மறுக்கிறார்கள்! ‘மெளன ராகம்’ என்று ஒரு படம் எடுத்து இயக்குஞர் மணிரத்னம் வெளிச்சத்துக்கு வந்தார். இன்று வரை அந்த படத்தினை நான் பார்த்ததில்லை. ஏனெனில், படத்திற்கான விமர்சனத்தைப் படித்ததும், அனைத்து விமர்சனங்களிலும் வெகுவாக புகழப்பட்ட அதன் உச்சகட்ட காட்சி (climax) ஜெயகாந்தன் எழுதிய ‘கோகிலா என்ன செய்து விட்டாள்?’ என்ற குறுநாவலைப் போல இருந்ததால்...

எனது தாயாரும் இதனை என்னிடம் கூறினார்கள். ஒரு முறை இணையத்தில் குறிப்பிட்ட பொழுது, ஜெயகாந்தனின் alter ego வாக அறியப்படும் ஒருவர், தனக்கும் அவ்வாறு தோன்றியதாக தனியே மடல் எழுதியிருந்தார். எனது சந்தேகத்திற்கான மிகப் பெரிய அங்கீகாரம் என்று அவரது மடலினை கருதினேன்)

22.5.07

தலித்துகளுக்கு தமிழக அரசு மறுக்கும் உரிமை

இட ஒதுக்கீடு பிரச்னையில் அகில இந்திய அளவில் தமிழக அரசு ஒரு முன்னோடி மாநிலமாக கூறப்பட்டாலும், ஆட்சியாளர்களுக்கு தெரிந்தோ, தெரியாமலோ தொடர்ந்து பல வருடங்களாக தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு இங்கு ஒரு விடயத்தில் மறுக்கப்படுகிறது. இவ்விதமான மறுக்கப்படும் உரிமை பற்றி தாழ்த்தப்பட்டவர்களுக்கான அமைப்புகள் கூட அறியவில்லை போலும்.


இட ஒதுக்கீடு என்பது கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் என்று நாம் பொதுவாக அறிந்திருப்பது. இட ஒதுக்கீடு என்பதே இன்னாருக்கு இன்ன வேலைதான் என்ற பாகுபாடு ஒழிக்கப்பட்டு, அனைவருக்கும் அனைத்து தொழில்களிலும் போதுமான பங்கு கொள்ள வழி வகுக்க வகை செய்ய வேண்டும் என்ற பரவலான கோட்பாட்டின்படி அமைந்ததாகும். எனவே, கல்வி, வேலை வாய்ப்பினை தவிர்த்து பிற தொழில்களும் அனைத்து வகுப்பினரும், குறிப்பாக தாழ்த்தப்பட்டவர்கள் மேற்கொள்ள வழி வகை செய்தல் அவசியமான ஒன்றாகும்.


இதனை கருத்தில் கொண்டே மோட்டார் வாகன சட்டத்தில் 1978ம் ஆண்டு ஒரு திருத்தம் இந்திய அரசால் கொண்டு வரப்பட்டது.


மோட்டார் வாகன சட்டம் (Motor Vehicles Act) இந்திய அரசால் 1939ம் ஆண்டு இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் பிரிவு 47(3)ன் படி மாவட்ட கலெக்டர் (Regional Transport Authority) அவரது அதிகார வரம்பிற்குள் எத்தனை பயணிகள் வாகனம் (stage carriage) இயக்கப்படலாம் என்று நிர்ணயிக்கலாம்.


1978ம் ஆண்டு மோட்டார் வாகன சட்டமானது திருத்தப்படுகிறது. அவ்வாறு திருத்தப்படுவதன் முக்கியமான நோக்கமானது, இவ்வகையான வாகனங்கள் இயக்கும் அனுமதியின் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் (Scheduled Castes and Tribes), பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கும் (Economically weaker sections) இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டுமென்பதாகும்.


இதன்படி பிரிவு 47(1A) மற்றும் (1B) கொண்டுவரப்பட்டு ‘அரசு வேலை வாய்ப்புகளில் எத்தனை சதவீதம் தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு உள்ளது அதே அளவு பயணிகள் வாகன உரிமங்களிலும் இட ஒதுக்கீடு மாநில அரசுகள் அளிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டது. இதே போன்று (1C) பிரிவானது பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று கூறுகிறது.


ஆனால், இந்த இரு வகையான இட ஒதுக்கீட்டிற்குமான முக்கியமான வித்தியாசம் முதலாவதில் ‘shall’ என்ற பதமும், இரண்டாவதில் ‘may’ என்ற பதமும் பயன்படுத்தப்படுகின்றன. அதாவது தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடானது மாநில அரசுகள் கண்டிப்பாக அளிக்க வேண்டுமென்பதுதான் இந்த சட்டத்தின் நோக்கம்.


***

இவ்வாறு வாகன உரிமையில் அளிக்கப்பட்ட இட ஒதுக்கீடானது எவ்வளவு தூரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உச்ச நீதிமன்றம் கருதியது என்பதை Rameshwar Prasad Vs State of UP (1983) 2 SCC 195 என்ற வழக்கின் மூலம் அறியலாம்.


1981ம் ஆண்டு உத்திரபிரதேசம் ஒரு அறிவிப்பின் மூலம் வாகன உரிமை எண்ணிக்கைக்கான உச்ச வரம்பினை முழுமையாக தளர்த்தியது. அதாவது, யார் வேண்டுமென்றாலும், உரிமம் பெற்று எத்தனை வாகனங்களையும் இயக்கலாம்.


இந்த அறிவிப்பினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற மேற்கூறிய வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறிய கருத்து கவனிக்கத்தக்கது. ‘வாகன எண்ணிக்கையில் உச்ச வரம்பு இருந்தால்தான் இட ஒதுக்கீடு என்பதற்கு பயன். இல்லை, யார் வேண்டுமானாலும் எவ்வளவு வாகனம் வேண்டுமானாலும் இயக்கலாம் என்றால், இட ஒதுக்கீடானது அர்த்தமற்றுப் போகும்’ என்று கூறிய உச்ச நீதிமன்றம் அந்த அறிவிப்பு செல்லாது என்று தீர்ப்பு கூறியது.


குறிப்பிட்ட எண்ணிக்கையில் வாகனம் இருந்தாலே, தாழ்த்தப்பட்டவர்களும் வாகன தொழில் புரிய முடியும். வரம்பினை எடுத்தால், பெரிய பண முதலைகளோடு அவர்களால் போட்டியிட முடியாது என்பதே உச்ச நீதிமன்றம் கூறிய தீர்ப்பின் தாத்பரியம்.


***

1988ம் ஆண்டு பழைய சட்டம் நீக்கப்பட்டு முற்றிலும் புதிய மோட்டார் வாகன சட்டம் அமுலுக்கு வந்தது. மோட்டார் வாகன பதிவு எண் 1989ம் ஆண்டுக்கு பின்னர் வேறு வடிவம் எடுத்ததன் காரணம் இவ்வாறு புதிய சட்டம் இயற்றப்பட்டதுதான்.


1939ம் ஆண்டு சட்டத்தின் 47(3)ம் பிரிவில் கலெக்டர்களுக்கு வாகன உரிம எண்ணிக்கையினை நிர்ணயிக்க அளிக்கப்பட்ட அதிகாரம் புதிய சட்டத்தில் இடம் பெறவில்லை. ஆகவே, எவ்வளவு உரிமம் வேண்டுமென்றாலும், யார் வேண்டுமானாலும் பெறலாம்.


ஆயினும், இந்த புதிய சட்டத்தின் பிரிவு 71(3)(a)ன் படி மாநகரங்களைப் பொறுத்தவரை மத்திய அரசின் கட்டளையின்படி மாநில அரசானது அதிகபட்ச உரிம எண்ணிக்கையினை நிர்ணயிக்கலாம். பிரிவு 71(3)(b)ன் படி அவ்வாறு நிர்ணயிக்கையில் தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது.


சுருக்கமாக கூற வேண்டுமென்றால், எப்போது மோட்டர் வாகன உரிமமானது குறிப்பிட்ட எண்ணிக்கையில் வழங்கப்படுகிறதோ, அப்போது இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது இதன் தாத்பரியம்!


***

சரி, தமிழகத்தினைப் பொறுத்தவரை மாநகரமோ, நகரமோ அல்லது கிராமமோ பேருந்து உரிமம் என்பது குறிப்பிட்ட அளவில்தான் கொடுக்கப்படுகிறது. உதாரணமாக சிற்றுந்துகளை எடுத்துக் கொண்டால், ஒரு மாவட்டத்திற்கு 250 உரிமங்கள்தான் கொடுக்கப்படுகின்றன. அப்படியாயின் இட ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறதா, என்றால் இல்லை என்பது வருத்தமளிக்கும் ஒரு செய்தி!


இன்றைய நிலையில் ஒரு தலித் தொழிலதிபரை பார்ப்பது என்பது ஒரு தலித் கலெக்டரை பார்ப்பதை விட அரிதான ஒரு காரியம். ஏனெனில் அவ்விதமான பங்கீட்டினை சட்டம் அளிக்க முன் வந்தாலும் அரசு, அதனை செயல்படுத்த முன்வரவில்லை என்பதுதான் உண்மை!


எவ்வாறு அரசு, இட ஒதுக்கீட்டினை மறுக்கிறது?


***

தமிழகத்தினைப் பொருத்தவரை, இட ஒதுக்கீடு சட்டத்திருத்தம் 1978ம் ஆண்டு அமுலுக்கு வரும் முன்னரே பயணிகள் பேருந்து அரசுடமையாக்கப்பட்டது. இவ்வாறு அரசுடமையாக்கப்பட்ட பேருந்துகள் பிற தனியார் வாகனங்களோடு போட்டியிடுவது என்பது கடினம். எனவே பழைய சட்டத்தில் பிரிவு 68-C, புதிய சட்டத்தில் பிரிவு 99 ஆகியவற்றின்படி மாநில அரசானது தனக்கு வேண்டும் வழித்தடங்கள் (route) அல்லது பகுதியினைப் (area) பொருத்து ஒரு திட்டம் தயாரிக்கலாம் (scheme).


இத்திட்டத்தின்படி மாநில அரசானது தனக்கு வேண்டும் பகுதியில் பிற தனியார் வாகனங்கள் இயங்குவதை முழுமையாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலோ கட்டுப்படுத்தலாம். மேலும் இவ்வாறு ஒரு திட்டத்தினை செயல்படுத்த மாநில அரசுகளுக்கு அதிகாரம் அளிக்கும் சட்டப்பிரிவினை மோட்டார் வாகன சட்டத்தின் பிற பிரிவுகள் எவ்வகையிலும் கட்டுப்படுத்தாது.இந்த அதிகாரதினைப் பயன்படுத்தி தமிழக அரசானது தமிழகம் முழுவதும் திட்டப்பகுதியாக அறிவித்து, அத்திட்டம் இன்று வரை அமுலில் உள்ளது. எனவே தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வழித்தடத்திலும் அதிகபட்சம் எத்தனை தனியார் வாகனங்கள் இயங்கலாம் என்று மாநில அரசு நிர்ணயிக்கும்.


இவ்வாறு தமிழகம் முழுவதும் திட்டப்பகுதியானதால், வாகன உரிமம் கட்டுப்படுத்தப்பட்டாலும், தமிழகம் இட ஒதுக்கீட்டினைப் பற்றி சிந்திக்கவேயில்லை.


பழைய சட்டத்திலும் புதிய சட்டத்திலும் இவ்வாறு திட்டம் தயாரிக்க அரசிற்கு அதிகாரம் அளிக்கும் சட்டப்பிரிவினை, இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டப்பிரிவு கட்டுப்படுத்தாது. சட்டப்படி சரிதான். ஆனால், தார்மீகப்படி?

***

தார்மீகப்படி நிச்சயம் தமிழக அரசின் செயல் சரியானதாக இருக்க முடியாது.

ஏனெனில், முதலில் திட்டம் தயாரிக்க அதிகாரம் அளிக்கும் சட்டப்பிரிவானது, அரசு பேருந்துகளை தனியார் போட்டியிலிருந்து பாதுகாக்கும் எண்ணத்துடனே இயற்றப்பட்டது. வேறு காரணம் ஏதும் அந்தப்பிரிவின் நோக்கமாக கூறப்படவில்லை. இவ்வாறு அரசு பேருந்துகளை பாதுகாக்கும் வண்ணம் திட்டம் தயாரிக்கும் அதிகாரத்திற்கு வேறு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக, மோட்டார் வாகன சட்டத்தின் வேறு எந்த பிரிவும் அதனை கட்டுப்படுத்தாது என்று கூறப்பட்டது. இட ஒதுக்கீடு அளிக்க கோரும் பிரிவானது பின்னர் கொண்டு வரப்படுகிறது. எனவே இரண்டையும் சேர்த்துப் படிக்கையில், இவ்வாறான திட்டத்தின் கீழ் தனியார் வாகனங்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவில் உரிமம் வழங்கையில் அதில் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும் என்பதுதான் சரியான செயலாக இருக்க முடியும்.

இட ஒதுக்கீடு என்பது குறிப்பிட்ட அளவில் இயங்க அனுமதிக்கப்படும் தனியார் வாகனங்களுக்குள்ளே மட்டுமே தவிர, அரசு பேருந்துகளை எவ்விதத்திலும் பாதிப்பதில்லை.

உதாரணமாக திட்டத்தின்படி நெல்லை-மதுரை வழித்தடத்தில் 10 தனியார் வாகனங்களுக்கு உரிமம் அளிக்கப்பட்டால், அந்த பத்து வாகனங்களில் போதுமான உரிமங்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். அதனால் அரசு பேருந்துகளுக்கு பாதிப்பில்லை.


என்னுடைய அனுமானத்தில், இட ஒதுக்கீடு அளிக்கும் சட்ட திருத்தம் கொண்டு வரப்படுகையில், அது விரிவாக விவாதிக்கப்படவில்லை என்றே தோன்றுகிறது. இல்லையெனில் இந்த குறைபாட்டினை போக்க போதிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும்.


சட்டத்தின் நோக்கம் என்ன? உரிமம் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வழங்கப்படுகையில், இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். அரசு பேருந்துகளை பாதுகாக்கும் எண்ணத்தில் தனியார் வாகனங்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே உரிமம் வழங்கப்படுகிறது. அப்போது இட ஒதுக்கீடு அளிப்பதுதானே முறை?



***


கடந்த திமுக ஆட்சியில் அரசின் திட்டமானது மேலும் மாற்றப்பட்டு சிற்றுந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. சிற்றுந்துகளை எந்த அரசு நிறுவனமும் இயக்கவில்லை. முழுக்க முழுக்க தனியார்தான். அரசு பேருந்துகள் இயக்கப்படும் வழித்தடங்களில் அவற்றை இயக்க முடியாது. ஆயினும் அரசு அவற்றிற்கான அதிக பட்ச எண்ணிக்கை ஒவ்வொரு மாவட்டத்திற்கு இவ்வளவு என்று நிர்ணயித்தது.சிற்றுந்து அனுமதியிலாவது, இட ஒதுக்கீட்டினை அமுல்படுத்தியிருக்கலாம். அரசு நல்ல வாய்ப்பை பயன்படுத்தவில்லை.


இந்த ஒரு காரணத்திற்காக அரசின் திட்டத்தினை (scheme) எதிர்த்து பொது நல வழக்கு தாக்கல் செய்தால், திட்டத்தில் தனியார் வாகனங்களுக்குள் இட ஒதுக்கீட்டினை அமுல்படுத்த நீதிமன்றம் அரசிற்கு உத்தரவிடும் வாய்ப்புகள் அதிகம்...


அந்தக் கல்லினை எறியப்போகிறவர் யார்?

மதுரை
22.05.07