“அப்பா, ஹாரி போட்டர் புத்தகம் வேணும்”
“சரி”
“முதல் நாளே வேணும்”
“ம்ம்...பார்க்கலாம்”
“அப்ப கண்டிப்பா வாங்கித்தருவீங்களா?”
“சரி...வாங்கலாம்”
“எனக்கு ஒன்று, அக்காவுக்கு ஒன்று”
உரையாடலை தொடராமல் எனது மகளையே சிறிது நேரம் பார்த்தேன்...
***
“இந்த ரெளலிங் எப்படி உன்னை ஒரு முட்டாளாக்கி வச்சிருக்கா, பார்த்தியா? முதல் நாள் ஹாரி போட்டர் புத்தகத்தின் விலை ஆயிரம் ரூபாய். ஒரு வாரம் வெயிட் பண்ணினால், பிளாட்பாரத்தில் பைரேட்டட் எடிஷன் நூறு ரூபாய்க்கு கிடைக்கும். அல்லது பேப்பர் பேக் எடிஷன் நானூறு ரூபாய்க்கு கிடைக்கும். புத்தகத்தை வெளியிட இத்தனை நாள் ஆனதே, இன்னும் ஒரு வாரம் தள்ளிப்போனது என்று நினைத்துக் கொண்டால் ஐநூறு ரூபாய் மிச்சப்படுத்தலாம் என்று உன்னை யோசிக்க விடாமல் தடுப்பது அவர்களது வியாபார தந்திரம்”
“சரி, முதல் நாளே வாங்க வேண்டும் என்பது கூட அதிகபட்சமான ரசிகத்தன்மை என்று எடுத்துக் கொள்ளலாம். ஒரே வீட்டில் இருக்கும் இரண்டு பேருக்கும் ஆளுக்கு ஒரு புத்தகம் வாங்க வேண்டும் என்ற எண்ணம், முட்டாள்தனமின்றி வேறென்ன?”
“வேறு எந்த பொருட்களுக்கும் இல்லாத ஒரு தன்மை புத்தகங்களுக்கு உண்டு. புத்தகத்தை, எத்தனை முறை வேண்டுமானாலும் படிக்கலாம், எத்தனை நபர்களும் படிக்கலாம். It can be consumed any number of time, without diminishing its utility. எனவேதான் எந்த புத்தகத்திற்கும் விலை நிர்ணயிக்க முடியாது. இப்படி அக்காவும் தங்கையும் ஒரே நாளில் ஒரே புத்தகத்தை வாங்குவோம் என்பது, புத்தகத்தின் இந்த மதிப்பையே குறைப்பதாகாதா?”
“ரெளலிங்கிற்கு உன்னைப் போன்ற ஏழ்மையான நாடுகளைச் சேர்ந்த குழந்தைகள் மீது உண்மையிலேயே அக்கறையிருந்தால், மூன்றாம் உலக நாடுகளில், குறைந்த விலைக்கு விற்கட்டுமே! தெரியுமா? இந்திய நாட்டில் பெரும்பான்மையோரின் ஒரு மாத சம்பளம் ஆயிரம் ரூபாயினை தொடுவதில்லை என்பது”
“இந்த வியாபாரிகள் உன்னை சிந்திக்க விடுவதில்லை. ஹாரி போட்டர் வெளியாகும் நாளில், ஏதோ உலகமே மாறி விடப்போகிறது என்ற மாயத்தோற்றத்தினை உருவாக்குகிறார்கள். இவர்களுக்காக இப்படியான கருத்தாக்கத்தை உன் போன்ற சிறுமிகளிடம் உருவாக்குவதற்கு பெரிதும் உதவுவது ஊடகங்கள்...”
“ஏதோ ஹாரி போட்டருக்காக இந்தியாவே ஏங்கிக் கிடப்பது போன்ற ஒரு தோற்றத்தினை, இவ்வாறு முழுப்பைத்தியம் பிடித்து அலையும் ஒரு சிறு கூட்டத்தினைக் காட்டி மற்றவர்களையும் முட்டாளாக்குகிறார்கள். முதல் நாளே வாங்கிப் படிக்காவிடில், போச்சு...என்ற நினைப்பினை உனக்கு ஊட்டி விடுகிறார்கள். அவ்வளவுதான்”
***
“ஒரு புத்திசாலி நுகர்வோர் எப்படியிருப்பான்? சந்தைக்கு வரும் ஒரு பொருளில் தரம் நன்றாக இருக்கிறதா என்பதை அறிந்து, பின்னரே வாங்க முடிவெடுப்பான். ஆனால், உன் போன்ற ரசிகர்கள்? பொருள் தரமோ, இல்லையோ...அது எப்படியிருக்கிறது என்று பார்ப்பதற்காக வாங்க முடிவெடுக்கிறீர்கள்”
“இவ்வாறு உங்களை முடிவெடுக்க வைப்பதில்தால், இந்த வியாபாரிகள் வெற்றி பெறுகிறார்கள். அதற்க்காகத்தான் முதல் இரண்டு மூன்று நாட்களிலே விற்றுத் தீர்த்துவிட வேண்டும் என்று இவர்கள் அலைகிறார்கள். ஏனென்றால் சரக்கு மோசமாக இருந்து, அந்த எண்ணம் வெளியே பரவி விட்டால்?”
“பார்த்துக் கொண்டேயிரு, இதோ ஹாரி போட்டர் சாகிறான் இல்லை பிழைக்கிறான், இதுதான் கதை, அடுத்த மாதம் வெளிவருகிறது என்று சரடு விட்டுக் கொண்டு ஒரு போதை நிலைக்கு உங்களைப் போன்றவர்களை கொண்டு சென்று விட்டார்கள். ஆனால், எழுதி வைத்துக் கொள். ஹாரி போட்டர் வெளியான மூன்று நாட்களில் உன்னைச் சுற்றியுள்ள உலகம் முன்பு போலவே சுழன்று கொண்டிருக்கும்”
“நீ புத்திசாலி வாசகியா அல்லது முட்டாளா? என்பதை நீயே தீர்மானிக்கலாம்”
“சரி ஒரு புத்தகமே போதும்”
பிரபு ராஜதுரை
12.08.07
பின் குறிப்பு : தலைப்பில் ஏன் சிவாஜி.? கடந்த சில வாரங்களாக, சிவாஜிதானே ஹாட் டாபிக். மற்றபடி சிவாஜிக்கும் ஹாரி போட்டருக்கும் ஒற்றுமையில்லை!
இதுவெல்லாம் பிஸினென்ஸ் ஸ்டிராடஜி என்று மேனேஜ்மெண்ட் மாணவர்கள் வியக்கலாம். முன்னாபாய் படத்தில் நோயாளியை சப்ஜெக்ட் என்று சொல்லும் மருத்துவருக்கும், இண்டிபெண்டஸ் டே படத்தில், “ in the past twenty four hours, it has become very exciting” என்று வேற்று கிரக வாசிகளின் தாக்குதலை ஜனாதிபதியிடம் வியக்கும் விஞ்ஞானிக்கும் அவர்களுக்கும் ஒற்றுமை உண்டு!!
8 comments:
அன்பு பிரபு ராஜதுரை,
நல்ல அலசல். எனது நண்பர்கள் பலரும் ஹாரிபோட்டர் புத்தகத்தை முதல்நாளே வாங்கவேண்டுமென தவித்தனர். வாங்கி படித்த பின்னர் கதை பற்றிய சர்ச்சைகள் இன்னும் ஓடிக்கொண்டே இருக்கிறது. ஆஸ்திரேலிய நண்பியின் உறவினர் குழந்தை ஒன்று ஒரே நாளில் ஹாரிபாட்டர் புத்தகத்தை படித்து முடித்ததாம்.
ஹாரிபோட்டர் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை குழந்தைகள் முதல் பெரியவர் வரை உருவாக்குவது என்னமோ உண்மை தான். கதை சொல்லும் செய்தியை பற்றி யாருக்கும் கவலையிருப்பதாக தெரியவில்லை.
இது போன்ற பதிவுகள் இன்னும் வரவேண்டும்.
நானும் ஆரி பாட்டர் ஃபேன். புத்தகத்த மொதநாளே வாங்கிப் படிச்சிட்டேன். ஆனா ஆப்புக்கு ஆப்பூ அண்டத்துலயும் உண்டுன்னு தெரியுந்தானே. எத்தனை நாள் வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டுன்னு சொல்றது. புத்தகம் வந்து ஒரு மணி நேரத்துல மின்வடிவம் வந்துருச்சு. அத நானே நாலு பேருக்கு அனுப்புனேன். பின்னே காசு கொட்டி புக்கு வாங்கீருக்குல்ல. :)
மன நிறைவான பதிவு தோழரே.
ரெளலிங் சாதாரணமாக குழந்தைகளுக்காக எழுதத் தொடங்கினாலும் பெரியவர்களும் இன்றைக்கு அவரின் போதையில் சிக்குண்டு கிடக்கின்றனர் என்பதுதான் உண்மை.
நான் வாசித்த வரையில் என்னை பெரிதாக ஒன்றும் அசைத்துப் பார்க்க முடியவில்லை ரெளலிங்கால்.
எல்லாமும் காசு கொடுத்து வாங்காமல் திருட்டுத் தனமாக தரவிறக்கியே பார்த்தேன். அவரின் எல்லா புத்தகங்களும் இருக்கின்றன. வேண்டுமெனில் மடலில் தொடர்பு கொள்ளுங்கள். மின்நூலாக அனுப்பி வைக்கிறேன்.
என்னமோ ரௌலிங் உங்க வீட்டுக்கு வந்து உங்க குழந்தைகளுக்க கிட்ட கான்வாஸ் பண்ணீட்டு போன மாதிரி எழுதி இருக்கீங்க.
ஹாரிப் பாட்டர் நூலுக்கு விளம்பர செலவுங்கறது அதனுடைய ரசிகர்கள் தான்.
வெளியிடும் முன்னாலேயே 30 லட்சம் புத்தகம்(UK USA மட்டும்) வெளியிட்ட நாளில் 1.1 கோடி புத்தகம்(UK USA மட்டும்) வெளியிட்ட 10 நாளில் 15 கோடி புத்தகம் விற்கும் வியாபார தந்திரம் ஹாரிப் பாட்டர் வெளியீட்டாளர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது என்றால் அந்த வியாபாரத் தந்திரத்திற்காக மட்டுமே அவர்களைப் பாராட்ட வேண்டும்.
புத்தகம் வெளியாகும் அதே நாள் லைப்ரரிகளுக்கு அனுப்பி வைக்கப் பட்டு விட்டது. ஏழைக் குழந்தைகளுக்கு வெளியாகும் நாளிலேயே இலவசமாக புத்தகம் கிடைத்திருக்கும்
http://www.lib.pg.bc.ca/events/past/harrypotter
என்னமோ ஹாரிப் பாட்டருக்கு முன்னால் ரௌலிங் பெரிய கோடீஸ்வரி போலவும் Bloomsberry உலகின் பெரிய புத்தக வெளியீட்டாளர் போலவும் பலர் இது வியாபாரத் தந்திரம் என்று பேசுகிறார்கள். அதாவது 1 கோடி செலவு செய்து 2 கோடி எடுத்திருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.
போலந்தில் டீச்சர் வேலையை விட்டு விட்டு இங்கிலாந்து வந்து வேலை இல்லாமல் இங்கிலாந்து அரசு தரும் மானியத்தில் சில காலம் வாழ்க்கையை ஓட்டியவர் ரௌலிங்.
Bloomsberry ஹாரிப் பாட்டருக்கு முன்னால் குழந்தைகள் புத்தகங்களை வெளியிட்டுக் கொண்டிருந்த ஒரு இரண்டாந்தர புத்தக நிறுவனம்.
ஹாரிப் பாட்டருக்காக ரௌலிங்கு முதன் முதலில் கிடைத்த சம்பளம் 8000 பவுண்டுகள். 2ம் புத்தகம் வெளியாகும் வரை ரௌலிங் தான் பார்த்து வந்த ஆசிரியர் பணியை விட வில்லை.
டீவிக்கு அடிமையாகிக் கொண்டிருந்த சிறுவர்களை மறுபடியும் படிக்க வைத்திருப்பது ஹாரிப் பாட்டர் தான்(என்னமோ வியாபார ஸ்டண்ட் போல இருந்தாலும் இது உண்மை பி.கு எனக்கு சொந்த பப்ளிஷிங் கம்பெனி கிடையாது எனக்கு ஹாரிப் பாட்டர் மூலமாக எந்த ஒரு லாபமும் கிடையாது.)
1000 ரூபாய் சட்டை எதுக்கு உனக்கு 100 ரூபா சட்டை வாங்கீட்டு 900 ரூபாயை தானம் தந்துட்டீன்னா அப்படியே உலகத்தில் உள்ள எல்லாரும் யோசிக்க ஆரம்பிச்சாங்கன்னா உலகத்தில பசி பட்டினி எதுவுமே இருக்காதில்லையா என்பது போன்ற சிந்தனைகள் Ideal உலகத்தில் தான் work out ஆகும். நாம் Ideal உலகத்தில் இல்லை ஆகவே வயிற்றெரிச்சல் படும் முன்னால் நாம் Idealஆ என்று பார்ப்பது நல்லது.
அருமையான பதிவு.... தலைப்பு மிக பொருத்தம்.
கல்கி, அகிலன் போன்ற எழுத்தாளர்களின் தொடர்கதைகள் வெளி வந்த காலங்களில், வீட்டில் யார் முதலில் படிப்பது என்ற போட்டி இருக்குமாம். படிக்க தூண்டும் ஆர்வத்தை எற்படுத்துவது ஒரு எழுத்தாளரின் திறமை. ஆனால் ஹாரி மரணமடைவானா என்ற கேள்வியை எழுப்பி, அதை விட மோசம் - ஹாரிக்கு உயிர் கொடுக்க - ஒரு இயக்கம் வேறு ஆரம்பித்து, என்னவோ முதல் நாளில் இந்த புத்தகத்தை படிக்காவிட்டால் உலகமே இருட்டாகி விட்டது என்ற தோற்றம் திட்டமிடப்பட்டு ஏற்படுத்தப்பட்டது.
ஒரு பொருள் (அல்லது சேவை) விற்பனைக்கு அறிமுகப்படுத்தும் பொழுது விலை குறைப்பது அல்லது சில நேரங்களில் இலவசமாக அளிப்பது என்பது தான்இது நாள் வரையில் கடைபிடிக்கப்பட்ட உத்தி...... உதாரணம் - ஒரு மாததிற்கு இலவசமாக உபயோகிக்கக்கூடிய மென்பொருள்கள் (30 day evaluation trial) மற்றும் குமுதம் ரிப்போட்டர், நாணயம் விகடன் போன்ற புத்தகங்களின் அறிமுகம்
வழக்கமாக, புத்தக விற்பனையை அதிகப்படுத்த அறிமுக நாளில் விலை குறைப்பார்கள். அல்லது முன்னதாக pre order செய்பவர்களுக்கு 33% முதல் 40% வரை reduction தரப்படும்.
அதை விடுத்து அதற்கு நேர் எதிர் திசையில் முதல் நாளில் விலை அதிகமாக வைத்து அனைவரையும் (முட்டாளாக்கி) வாங்க வைத்த (பதிப்பகத்தின்) புத்திசாலிதனத்தை பாராட்டத்தான் வேண்டும். !!!
Sane Voice Mate..Kudos :)
ஹேரி பொட்டருக்கு அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். ஜேகே ரெளலிங் சிறுவர்களுக்காகத்தான் முதலில் கதையை எழுதினார். ஆனால் பின்னர் பெரியவர்களும் அதில் மனதைப் பறிகொடுத்தனர். அந்த அளவுக்கு அது மனதைக் கவர்ந்தது.
அவரின் நாவல்களை பெரிய இலக்கியத்தரம் வாய்ந்தது என்று சொல்ல முடியாது. என்னவோ எல்லாருக்கும் பிடித்து இருக்கிறது. புத்தக வாசம் குறைந்து வரும் இக்காலத்தில் அனைவரையும் படிக்கத் தூண்டிய ரெளலிங்கை பாராட்டித்தான் ஆகவேண்டும்.
ஹேரிபொட்டர் மாதிரி இல்லாவிட்டாலும் பரபரப்பாகப் பேசப்படும் மற்ற புத்தகங்களும் இன்னும் வந்து கொண்டுததன் இருக்கின்றன. காலிட் ஹுசைனி என்பவர் டாக்டர். அமெரிக்க கலிபோர்னியாவில் இருக்கிறார். ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இவர் ஆப்கன் பெண்களின் வாழ்க்கைச் சிரமங்களைச் சித்தரித்து ஒளிசிந்தும் ஆயிரம் சூரியன்கள்( A thousand Splendid Suns) என்ற நாவல் சென்ற மேமாதம் வெளிவந்து விற்பனையில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது என்பது தெரியுமா? அனைத்தும் விற்றுத் தீர்ந்து நாற்பது லட்சம் பிரதிகள் புதிதாக அச்சடிக்கப்படுகிறதாம்!
Post a Comment