28.1.07

விரலிடுக்கில் நழுவும் தருணங்கள்...

திருநெல்வேலியில் எனது சீனியராக இருந்த வழக்குரைஞர், தனது நண்பர் ஒருவரின் கதையை கூறினார். நண்பருடைய தலையில் ஏதோ காயம் இருக்க, 'என்ன அது?' என்று கேட்டாரம். நண்பர் 'இன்று காலையில் தவறுதலாக சுத்தியலால் தலையில் அடித்துக் கொண்டேன்' என்றாராம். 'சுத்தியலால் எப்படியப்பா தலையில் அடித்துக் கொண்டாய்?' என்று கேட்க, நண்பர் பெரிதாகச் சிரித்து 'பல வருடங்களுக்கு முன் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி எதிர்பாராமல் நினைவுக்கு வந்தது. எத்தனை பெரிய முட்டாள் நான் என்று நினைத்து, என்னையறியாமல் கையில் இருந்த சுத்தியால் தலையில் அடித்துக் கொண்டேன்' என்றாராம்.

நடந்தது வேறொன்றுமில்லை. ஒரு நாள் இரவு நண்பர் ஒரு பெண்ணுக்கு தனது வீட்டில் தங்க இடம் கொடுக்க நேர்ந்ததாம். அந்தப் பெண்ணை தனது அறையில் படுக்கச் சொல்லி நண்பர் முன்னறையில் சோபாவில் படுத்தாராம். நண்பர் கண்ணயரும் நேரம் அந்தப் பெண் வந்து, 'உங்களுக்கு இங்கு சிரமாயிருக்கிறதென்றால் உள்ளறையிலேயே வந்து படுக்கலாம்' என்றாராம். நண்பர் அப்பாவியாக, 'இல்லை எனக்கு இங்கேயே வசதியாக இருக்கிறது. நீங்கள் கவலைப்பட வேண்டாம்' என்றாராம். பல வருடங்கள் கழித்து எதோச்சையாகத்தான் நண்பருக்கு அந்தப் பெண் கேட்டதன் பொருள் விளங்கியிருக்கிறது. துரதிஷ்டவசமாக கையில் ஒரு சுத்தியல் இருக்க தன்னையறியாமல் தலையில் அடித்துக் கொண்டாராம். தலையில் உள்ள காயத்திற்காக காரணத்தைக் கூறிய நண்பர், "I was alert on that day but not artistically alert" என்று முடித்தாராம்.

எனக்கும் கூட சுஜாதாவின் கணேஷ், வசந்த் கதைகள், பெரிமேஸன் கதைகள் போன்றவற்றை படிக்கும் பொழுதும் திரைப்படங்கள் சிலவற்றை காணும் பொழுதும் 'ஹ¥ம், கதைகளிலும், படங்களிலும்தான் இப்படி 'damsel in distress' எல்லாம் சாத்தியம். நமக்கெல்லாம் வாய்க்கது இப்படியொரு சந்தர்ப்பம்' என அங்கலாய்த்துக் கொள்வேன். ஆனால் சிந்தித்துப் பார்த்தால், கடவுள் அப்படியெல்லாம் நம்மை காய விடுவதில்லை என்பது புரிகிறது. சந்தர்ப்பங்களைத் தருகிறார். 'பேக்கு' மாதிரி நாம்தான் அதை பிடிக்க மறந்து புலம்புகிறோம்.

சென்னையில் பணியாற்றுகையில் அலுவலக வரவேற்பறையில் காலைப் பொழுதிலேயே தயக்கத்துடன் வந்து நின்ற அந்தப் பெண்ணைப் பார்த்ததுமே நினைத்து விட்டேன், இன்று நாள் நன்றாக இருக்கப் போகிறதென! அந்தப் பெண்ணை உள்ளே அழைத்த சீனியர், என்றுமில்லாத நாளாக ஆங்கிலத்திற்கு மாறினார். அந்தப் பெண்ணின் தாய், தந்தை அயர்லாந்தில் இருக்க அவர் சென்னையில் தனியே தங்கியிருக்கிறாராம். அவளது தந்தை ஒருவரிடம் பணம் கடன் கொடுத்திருக்க அவர் தரும் வட்டி இந்த பெண்ணுக்கு செலவுக்கு போதுமானதாக இருந்தது. தற்பொழுது கடன் வாங்கியவர் ஏதோ தகறாறு செய்ய, பிரச்னையை சமரசமாக தீர்க்க அந்தப் பெண்ணுடன் நான் சென்று அதை முடிக்குமாறு கூறினார். கரும்பு தின்ன கூலியா என்று உண்மையிலேயே நினைத்தேன்.

அடுத்த மூன்று நாட்களும் அந்தப் பெண்ணுடன் காலையில் நான் ஆட்டோவில் பயணித்து சம்பந்தப்பட்டவர்களை பார்ப்பதும், பிரச்னையை பேசுவதும் எவ்வாறு சமரசம் செய்வது என்பதிலேயே கழிந்தது. அந்நாட்களில் எனக்கும் சீனியருக்குமிடையே கூட கனத்த இறுக்கம் நிலவியது. அலுவலகத்தில் வேறு யார் கண்ணிலும் கூட அந்தப் பெண் படாத வண்ணம் கவனமாக இருந்தேன். 'ஐ, டேய்...மச்சண்டா உனக்கு' என்ற வார்த்தைகளைக் கேட்க வெட்கமாக இருந்தது. மும்பையிலென்றால் சாதாரணம். சென்னை தரத்திற்கு அந்தப் பெண் பேரழகு!

அவர்களது தந்தை கர்நாடகத்தை சேர்ந்தவர். மருத்துவர். அம்மா, ஐயர்லாந்தை சேர்ந்தவர். அங்கேயே பிறந்து வளர்ந்த அந்தப் பெண் படிப்பதற்காக இங்கு வந்திருந்தார். பெண்கள் விடுதிகளில் இடம் கிடைக்காதலால் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்தார். மூன்று நாட்களில், தன்னைப் பற்றிய விபரங்கள் பலவற்றையும் பகிர்ந்து கொள்ளுமளவுக்கு நெருக்கமானார். அதீத மயக்கத்தில் நானும் எனக்குத் தெரிந்த தமிழர் பெருமை, தொன்மை, நாட்டுப்புற பாடல்கள் என அப்போதுதான் ஓரளவுக்கு பேச வந்திருந்த ஆங்கிலத்தில் வெளுத்து வாங்கினேன். அவ்வப்பொழுது அவரை கொஞ்சம் கேலி செய்து சிரிப்பு மூட்டவும் மறக்கவில்லை. ஆனால் அதற்குள் பிரச்னையும் எளிதில் முடிய எனக்குள் ஒரு சின்ன வருத்தம். அதை விட வருத்தம் அப்போதுதான் எனக்கு திருமணமாகியிருந்தது. சே! எனக்கு அவசரம் என்று நினைத்துக் கொண்டேன்.

மனைவியின் முகம் கண் முன்னேயே இருந்தாலும், சும்மா பேசத்தானே செய்கிறோம் என்று மனதை தேற்றிக் கொள்வேன். எல்லாம் முடிந்து நாங்கள் பயணித்த ஆட்டோ ஏறக்குறைய அலுவலகத்தை நெருங்கிய பொழுதுதான், டிரைவர் பின்னே திரும்பி, 'சார், இந்த அம்மா சினிமால நடிக்கறவங்கதானே' என்றார். நான் 'சேச்சே' எனவும் அந்தப் பெண் என்னிடம் கிசுகிசுப்பாக, 'என்ன சொன்னார் டிரைவர்' என்று மீண்டும் மீண்டும் கேட்டார். நான் டிரைவர் கேட்டதைக் கூறியதும் பெரிதாகச் சிரித்து 'உண்மைதான்' எனவும் எனக்கு பெரிய ஆச்சரியமாகப் போனது. அதற்குள் டிரைவரே, 'அப்படித்தானே சார், மணிரத்னம் படம்... இதயத்தை திருடாதேன்னு பெயர்' என்றார். உடனே எனக்கு பொறி தட்டியது. நான் கல்லூரி முடித்த காலத்தில் வெளியானது. ஆனால் அதை நான் பார்த்ததில்லை. அதன் கதாநாயகியும் தெரியாது.....

'எனக்கு ஏன் விடுதியில் இடம் கிடைக்கவில்லை என்று புரிகிறதா?' என்று அவர் கேட்டது என் காதில் விழவில்லை. ஆஹா, சுஜாதா கதை நடக்கிறது..... நான் வசந்த்....என்று நினைத்துக் கொண்டிருக்கையிலேயே எனது அலுவலகமும் வந்து விட்டது. 2500ரூபாய்க்கு ஒரு காசோலையை என்னிடம் திணித்தபடி என் சீனியரிடம் 'என்னை அவருடன் அனுப்பியதற்காக' நன்றி தெரிவித்தவாறே விடைபெற்றுச் சென்றார். அத்தோடு முடிந்தது எனக்கு வாய்த்த ஒரே சந்தர்ப்பம்!


நீதி: அலர்ட்டாக இருப்பது மட்டுமே நிம்மதி...ஹூம்!

25.1.07

நான் யார்?

அசாதாரண நிகழ்ச்சி

"உன் பெயர் என்ன?"

அந்த ஜெய்தேபூர் கிராம ஜமீந்தாரினி பங்களாவின் வாசலில் ஜமீந்தாரினி, அவரது மகன், ஜமீன் அலுவலர்கள், வேலையாட்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் குழுமியிருக்க அவர்கள் நடுவே நின்றிருந்த அவனைப் பார்த்துதான் அப்படி ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

கேள்வியை கேட்டது, அந்த பங்களாவுக்கு வெளியே கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டத்திலிருந்த யாரோ ஒருவர். கூட்டத்தில் வேறு எந்தவித முணுமுணுப்பும் இல்லை. எல்லோர் மனதில் இருந்ததும் அந்தக் கேள்விதான். அவனோ முகத்தில் எவ்வித சலனமும் இன்றி வெளிறிய கண்களோடு கூட்டத்தையே பார்த்துக் கொண்டு இருந்தான். ஜடாமுடி, நீண்ட தாடி இடுப்பை மட்டும் மூடிய அரைகுறை ஆடை என்று இலக்கின்றி சுற்றித்திரியும் சன்னியாசி போல இருந்தாலும் அந்தக் கூட்டம் இதையெல்லாம் கடந்து அவனது வெள்ளை சருமத்திலும் முக தேஜஸிலும் வேறு எதையோ தேடியது. அவனது சாம்பல் அள்ளிப் பூசப்பட்ட தேகத்தின் ஒவ்வொரு சதுர அங்குலத்தையும் குண்டூசிகள் போல ஆயிரக்கணக்கான கண்கள் துளைத்துக் கொண்டு இருந்தது.

"ராமேந்திர நாராயணன் ராய செளத்ரி" தீர்மானமாக பதில் வந்தது.

"உன் தந்தையின் பெயர்?"

"ராஜா ராஜேந்திர நாராயண் ராய செளத்ரி" இந்த முறை உடனடியாக வந்தது பதில்.

"உன் தாயின் பெயர்?"

"ராணி பிலாஸ்மணி தேவி"

கூட்டத்தில் அமைதி குலைந்து ஒரு சலசலப்பு எழுந்தது. எல்லாவற்றையும் அடக்கி ஒரு குரல் ஓங்கி ஒலித்தது.

"ராஜா, ராணி பெயரெல்லாம் எல்லாருக்கும் தெரியும். இதுல என்னப்பா ஆச்சர்யம். சொல்லு. உன்னோட தாதி பெயர் என்ன?"

"அலோகா"

ஆச்சர்யங்களையே எதிர்பார்த்தே காலத்தை ஓட்டும் மக்கள் கூட்டத்துக்கு மேலும் பொறுமையில்லை. "வெற்றி! வெற்றி!!" என்று அர்த்தம் கொள்ளும் "ஹல்லுதானி! ஜெயதானி!!" என்ற குரல்கள் விண்ணை எட்டியது.

"மெஜோ குமார் வாழ்க" என்ற கூக்குரல்கள் எழுந்தன. பெண்கள் குலவையிட்டனர். இந்த ஆரவாரத்தில் உணர்ச்சியின் விளிம்பில் நின்று கொண்டிருந்த அவன் மயங்கிச் சரிந்தான்.........

***

அடுத்த நாள், மே மாதம் 5ம் தேதி, 1921ம் வருடம் கிழக்கு வங்காளத்தில் உள்ள பவால் ஜமீனை நிர்வகிக்க அரசால் நியமிக்கப்பட்ட மேலாளர் F.W. நீதம், ஜெய்தேபூரில் இருந்து டாக்கா மாவட்ட கலெக்டர் லிண்ட்ஸேக்கு அனுப்பிய ரகசிய தாக்கீது இவ்வாறாக தொடங்குகிறது.

'அன்பார்ந்த லிண்ட்ஸே, மிகவும் அசாதாரணமான மற்றும் விநோதமான நிகழ்ச்சியொன்று இங்கு நடைபெற்று, ஜமீனின் உள்ளேயும் வெளியேயும் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது...............'

ஆம் அது உண்மையிலேயே அசாதாரணமான நிகழ்ச்சிதான். மனித குல வரலாறு அறிந்தவரை நான்கோ அல்லது ஐந்து முறையேதான் இப்படிப்பட்ட அசாதாரணங்கள் நிகழ்ந்துள்ளன. பின்னர், இறந்து எரிக்கப்பட்டவர் திரும்பவும் உயிருடன் அதுவும் 12 ஆண்டுகள் கழித்து வருவதாக சொல்வது சாதாரண நிகழ்ச்சியா என்ன?

இந்திய நீதித்துறைக்கே பெரிய சவாலாக விளங்கி இன்று வரை விடையே காணப்படாத கதை இது.



பவால் ஜமீன்

பவால் ஜமீன், வங்காள தேசத்தின் தலைநகரான டாக்காவின் கிழக்குப் பகுதியில் அமைந்திருந்த செல்வாக்கு மிகுந்த ஒரு ஜமீன். சொல்லப் போனால் சுதந்திரத்திற்கு முன்பு, கிழக்கு வங்காளம் என்று அழைக்கப்பட்ட மாகாணத்தில் இருந்த பெரிய ஜமீன்களில் அதுவும் ஒன்று. ஆயிரத்து தொள்ளாயிரத்து முப்பதுகளில் ஜமீன் சொத்துக்களில் இருந்து வந்த வருட வாடகையே சுமார் ஆறரை லட்ச ரூபாய்கள்.

ஜமீனின் மாளிகை, டாக்காவில் இருந்து 20 கி.மீ. தொலைவிலுள்ள ஜெய்தேபூர் என்ற சிறிய கிராமத்தில் அமைந்திருந்தது. பவால் ஜமீனின் சொத்துக்கள் பல நகரங்களில் பரந்து விரிந்திருந்தது. பவால் ஜமீந்தார் ராஜேந்திர நாராயண் ராய், பவால் ராஜா என்றே அழைக்கப்பட்டார். அவருக்கு டாக்காவில் பங்களா இருந்தாலும், ஜெய்தேபூரில் இருந்த பெரிய ஜமீன் மாளிகையிலேயே வசித்து வந்தார்.

பவால் ராஜாவின் மனைவி ராணி பிலாஸ்மதேவி. ஜமீன் தம்பதிகளுக்கு முதல் இரண்டும் மகள்கள். பின்னர் மூன்று மகன்கள். கடைசி ஒரு பெண். மகன்கள் மூவரும் பரோ குமார், மெஜோ குமார் மற்றும் சோட்டோ குமார் என்று மக்களால் அழைக்கப்பட்டனர். இரண்டாவது மகனான மெஜோ குமார்தான் ராமேந்திர நாராயண் ராய். இவர்களோடு ராஜாவின் தாய் ராணி சத்யபாமா மற்றும் சகோதரியும் குடும்ப உறுப்பினர்களாக ஜெய்தேபூர் மாளிகையிலேயே வசித்து வந்தனர்.

இப்படிப்பட்ட அப்போதைய கிழக்கு வங்காளத்தின் மிகப்பெரிய நிலச்சுவான்தாரான பவால் ராஜா 1901ம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி மரித்துப் போனார்.

பவால் ராஜா மரிக்கும் போது மேஜோ குமாருக்கு சுமார் 17 வயது. ராஜா விட்டுச் சென்ற உயிலின் படியும், அப்போதய சட்டப்படியும் ஜமீன் சொத்துக்கள் முழுவதும் அவரது மூன்று மகன்களையுமே சமபங்காக சென்று சேர்ந்தது. ஆனாலும், ராஜாவின் உயில்படி ராணி அவரது வாழ்நாள் முழுவதும் ஜமீன் சொத்துக்களை மூன்று மகன்களுக்கான டிரஸ்டியாக இருந்து நிர்வகிக்க வேண்டியிருந்ததால், ராணி அவர் மறைந்த தினமான 21 ஜனவரி 1907ம் ஆண்டு வரை ஜமீன் சொத்துக்களுக்கான டிரஸ்டியாக இருந்தார்.

இதற்கிடையில், மூத்த குமாருக்கு அவரது தந்தை இறந்த வருடமான 1901ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
மெஜோ குமாருக்கு 1902ம் ஆண்டும் சோட்டோ குமாருக்கு 1904ம் வருடமும் திருமணம் நடந்தது. இவர்களது மூன்று சகோதரிகளுக்கும் அடுத்தடுத்து திருமணம் நடக்க, அனைவரும் ஜெய்தேபூர் மாளிகையிலேயே கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர்.


தொடர்ந்த மரணங்கள்

பொதுவாக நல்ல நிலைமையுடனும், புகழுடனும் விளங்கிய பவால் ஜமீனுக்கு அதன் ராணி மறைந்த பின்னர் துயரங்கள் ஒர் சாபம் போல அடுத்தடுத்து தொடர்ந்தன. இந்திய ராஜகுமாரர்களுக்கான, குறிப்பாக ஆங்கில ஆட்சியின் போது அதிகமாக இருந்த, பொதுவான சில குணங்கள் மெஜோ குமாரையும் விட்டு வைக்கவில்லை. இளம் வயதிலேயே தந்தையை இழந்த மெஜோ குமாருக்கு விலங்குகளை வேட்டையாடுவதில் இருந்த பிரியம் பெண்களை வேட்டையாடுவதிலும் இருந்தது. விளைவு, ஆங்கிலேயர்கள் நமக்கு அளித்த கொடைகளில் ஒன்றான 'பறங்கி நோய்' என்று தமிழகத்தில் அழைக்கப்பட்ட 'சிபிலிஸ் நோய்' அவரை தொற்றிக் கொண்டது.

அது சிபிலிஸ் ஆட்கொல்லி நோயாக இருந்த காலம். பெனிஸிலின் கண்டுபிடிக்கப்பட்டது 1928ம் வருடமாக இருந்தாலும் அது ஒரு மருந்தாக தயாரிக்கப்பட்டது முப்பதுகளின் கடைசியில். மேலும் சிபிலிஸுக்கு பெனிஸிலின் சிறந்த மருந்து என்று அறியப்பட்டது 1943ல். ஆனால் குமாருக்கு இந்த நோய் பீடித்த ஆண்டோ, துரதிஷ்டவசமாக 1905.

நான்கே ஆண்டுகளில் மெஜோ குமாருக்கு 'Tertiaray Stage' என்று சொல்லப்படும் நோய் முற்றிய நிலை. இத்தகைய ஒரு லையில் கும்மாஸ் (gummos) என்று சொல்லப்படும் கொப்புளங்கள் தோலுக்கு அடியிலான திசுக்களில் ஏற்படும். பின்னர் எலும்புகள் பாதிக்கப்பட நோயானது ஈரல், கிட்னி மற்றும் இதயத்தை தாக்கி மரணத்தை விளைவிக்கக் கூடியது. குமாருக்கும் ஏற்கனவே கால்கள் மற்றும் கைகளில் முழங்கைக்கு மேல் கொப்புளங்கள் தோன்றி புண்களாய் வெடித்திருந்தது. வேறு மருத்துவ நடவடிக்கைகள் இன்றி, ஏதாவது மலை வாசஸ்தலத்தில் சென்று ஓய்வெடுக்கும்படி அவருக்கு ஆலோசனை சொல்லப்பட்டது.

1909ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18ம் தேதி மெஜோ குமார், தனது மனைவி, குடும்ப மருத்துவர் அஷுடோஷ் தாஸ்குப்தா மற்றும் 21 வேலையாட்கள் சகிதமாக டார்ஜிலிங் நோக்கி பயணமானார். அவருடன் சென்ற மற்றொறு முக்கியமான நபர் குமாரின் மைத்துனர் சத்தியேந்திரா. அவர்தான் பயணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தவர்.

ரயிலில் குமார் டார்ஜிலிங் சென்று சேர்ந்தது 20ம் தேதி. அங்கு மைத்துனாரால் வாடகைக்கு பிடிக்கப்பட்ட 'ஸ்டெப் அஸைட்' என்ற பங்களாவில் தங்கினார். டார்ஜிலிங் வந்த சில நாட்களிலேயே உடல் நிலை மோசமடைய மே மாதம் 8ம் தேதி பவால் ஜமீனின் இரண்டாவது வாரிசு மெஜோ குமார் தனது 25ம் வயதில் மரித்துப் போனார். மெஜோகுமாருக்கு சிகிச்சை அளித்த ஆங்கிலேய மருத்துவர் நோயாளி இறந்துவிட்டார் என்று அறிவிக்க மறுநாளே மெஜோகுமாரின் உடல் தகனம் செய்யப்பட்டது. 8ம் தேதி இரவு கிடைத்த 'குமார் கவலைக்கிடம். உடனே கிளம்பவும்' என்ற தந்தியால் 9ம் தேதி டார்ஜிலிங்கிற்கு ரயிலேறிய சோட்டோ குமாரின் வண்டி பாதியிலேயே றுத்தப்பட்டு அவருக்கு குமார் மரித்த சேதி சொல்லப்பட, இனி டார்ஜிலிங் செல்வது தேவையில்லை என்று நினைத்த அவர் மாளிகைக்கு திரும்பி விட்டார்.

12ம் தேதி சத்தியேந்திரா, இளம் விதவையும் தனது தங்கையுமான பீபாபட்டியையும் மற்ற அனைவரையும் அழைத்துக் கொண்டு ஜெய்தேபூர் திரும்பினார். 8ம் தேதி நள்ளிரவு குமார் இறந்து போனதாகவும் மறுநாள் காலை அவரது பூத உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு டார்ஜிலிங்கிலுள்ள புதிய இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டதாகவும் சொல்லப்பட்டது.


இறந்த குமாருக்கு சடங்குகள் அனைத்தும் ஜெய்தேபூரில் நடைபெற்றது. விரைவில் பீபாபட்டியின் சகோதரர் சத்யேந்திரா அவள் சார்பில், மெஜோ குமாருக்கு சொந்தமான சொத்துக்களை பாதுகாக்கும் பொருட்டு ஜமீன் நிர்வாகத்தில் தலையிட அது பல பிரச்னைகளை கிளப்பியது. பல சட்ட புணர்களை அது சம்பந்தமாக அவர் ஆலோசிக்க, அதில் ஏதும் பலனின்றி விரைவில் அவர் கல்கத்தாவுக்கு குடியேறி விட்டார். தனது சகோதரியை தன்னுடன் வருமாறு அவர் வற்புறுத்தியும் பீபாபட்டி அவருடன் செல்லவில்லை.

பீபாபட்டிக்கு கிடைத்ததென்னவோ மெஜோகுமாரின் காப்பீடு பணமான 30,000 ரூபாயும், மாத அலவன்ஸான ரூபாய் 1100ம்தான். பின்னர் அவருக்கு மெஜொகுமார் பங்கு சொத்திலிருந்து ரூபாய் 35,000 அளிக்கப்பட ஜெய்தேபூரில் இருந்து அவரும் கல்கத்தாவில் சொந்தமாக வீடு வாங்கி குடியேறிவிட்டார். அதன் பிறகு அவர் ஜெய்தேபூர் திரும்பவேயில்லை.

***

இதற்கிடையில் பவால் ஜமீனை பிடித்த சாபம் அதனை விடவில்லை. மெஜோகுமார் இறந்த அடுத்த வருடம் மூத்த குமார் தனது 28 வயதில் இறந்து போனார். பின்னர் பாவல் ஜமீனில் கடைசி ஆண் வாரிசான சோட்டோ குமார் 1913ம் வருடம் தனது 26ம் வயதில் இறந்து போனார். அடுத்தடுத்து பவால் ஜமீன் இளவரசர்கள் குறைந்த வயதில் வாரிசு எதுவும் இன்றி இறந்து போனது விதியின் விநோத விளையாட்டுகளில் ஒன்று.

இளவல்களின் சொத்துக்களுக்கு ஆண் வாரிசு ஏதும் இல்லாமையால் ஒன்றன் பின் ஒன்றாக ஜமீன் சொத்துக்கள், வாரிசு இல்லாத ஜமீனை நிர்வகிக்கும் எஃப்.டபிள்யூ.நீதம் (F.W.Needham) என்ற ஆங்கிலேய எஸ்டேட் அலுவலரின் நிர்வாகத்தின் கீழ் வந்தது. இதன் மூலம், கிழக்கு வங்காளத்திலேயே பெரிய ஜமீனான பவால் ஜமீன் வாரிசு இல்லாத மூன்று விதவைகளை உள்ளடக்கி ஆனால் யாருடைய நிர்வாகத்திலும் இல்லாமல் ஆங்கிலேய அரசு அலுவலரின் கைகளுக்கு சென்று விட்டது.

விரைவில் ஜமீன் பெண்கள் அவரவர் இடங்களில் சென்று வசிக்க ராஜாபாரி என்று அழைக்கப்பட்ட பவால் ஜமீன் மிக்க செல்வாக்குடன் கோலோச்சிய ஜெய்தேபூர் மாளிகை காலியாகிப் போனது. வயாதான ராணி சத்யபாமா கூட மாளிகையில் வசிக்காமல் தனது பேத்திகளுடனே வசித்து வந்தார்.

1920ம் வருடம் ஜமீன் மூத்த பெண்ணும் ஜமீனிலேயே வசித்து வந்த அவரது அத்தையும் இறந்து போனார்கள்.


அழகிய சன்னியாசி

கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் டாக்காவின் 'பக்லாண்ட் பண்ட்' (Buckland Bund) காலை மாலை நடைக்காகவும் மற்றும் பொழுது போக்கிற்காகவுமான சிறந்த அழகிய இடம். பூரிகங்கா (Buriganaga) நதிக்கரையோரம் அமைந்த பொதுவழி. அநேக மக்கள் மாலைவேளையில் ஓய்வுக்காக தேர்ந்தெடுக்கும் இடம் அது.

உடல் இளைப்பாறுவதற்காக 'பக்லாண்ட் கரை' சென்ற டாக்கா மக்கள் அங்கு சில காலமாக காலை மாலை இரவு என என்நேரமும் ஒரே இடத்தில் அமர்ந்திருந்த சன்னியாசியை கவனிக்க தவறவில்லை. அவன் எப்போது வந்தான் என்று யாருக்கும் சரியாகத் தெரியவில்லை. 1921 ஜனவரி அல்லது மிஞ்சிப் போனால் 1920 டிசம்பர் முதல் அங்கு அமர்ந்திருக்க வேண்டும்.

சந்யாசிகளுக்கே உரிய வாரப்படாத அழுக்குப் படிந்த ஜடாமுடி, நீண்ட பெரிய தாடி, இடுப்பை மட்டுமே மூடிய சிறிய து. உடல் முழுவதும் முகம் உட்பட சாம்பலை அள்ளி பூசியிருந்தான். சிறிய நெருப்பு முன்னே எரிய மழையோ வெயிலோ அவன் அந்த இடத்தை விட்டு நகரவேயில்லை.

எல்லா சந்யாசிகளுக்கு கூடுவது போலவே அவனைச் சுற்றியும் மக்கள் கூட்டம் கூடியது. அவன் மக்களை ஈர்த்ததற்கு ஒரு முக்கிய காரணம், அழுத்தப் பூசிய சாம்பலையும் மீறி தெரிந்த அவனது வெள்ளை நிறம் மற்றும் வடிவான முகம்.

மக்கள் அவனைப் பற்றி பல கேள்விகள் கேட்டாலும், சில சமயமே அதுவும் ஹிந்தியில் அவன் பேசினான். பஞ்சாபில் தனது மனைவி ,குழந்தைகளை விட்டு சந்யாசம் பூண்டதாக சொன்னான். அநேகர் அவனை பூஜித்து நோய்களை தீர்க்க மருந்து வேண்டினார்கள். அப்படிக் கேட்பவர்களுக்கு
தன் உடலில் பூசிய சாம்பலை சிறிதளவு கொடுத்தானேயொழிய வேறு எந்தவித பரிகார காரியங்களிலும் அவன் ஈடுபடவில்லை.

கடந்த நான்கு மாதங்களில் அந்த சந்யாசியை தரிசித்தவர்களில் சில ஜெய்தேபூர்வாசிகளும் அடக்கம். அப்படிப்பட்டவர்கள் டாக்கவிலிருந்து ஊர் திரும்பும் போது சில சந்தேகங்களையும் சுமந்து சென்றனர். மெஜோகுமார் டார்ஜிலிங்கில் இறந்து எரிக்கப்பட்டதிலிருந்தே பவால் ஜமீனை ஆக்கிரமித்துள்ள 'மெஜோகுமார் சாகவில்லை. எங்கோ சாமியாரக சுற்றி வருகிறார்' என்ற வதந்த்திக்கு வலு சேர்க்கும் சந்தேகம் அது.

'அந்த சந்யாசி மெஜோகுமாராக இருக்குமோ?' என்ற சந்தேகம்தான் அது. போதாதா? மெஜோகுமார் இறந்ததை நம்ப மறுத்து வந்த ஜெய்தேபூர் முழுவதும் அழகான முகத்துடனும், வெள்ளை சருமத்துடனும் டாக்கா 'பக்லாண்ட் கரை'யில் குடி கொண்டிருக்கும் சந்யாசி மெஜோகுமார் என்ற வதந்தி பரவியது.

மெஜோகுமார் இறந்தது முதலே அப்படிப்பட்ட வதந்திகள் ஜமீன் முழுவதும் பரவியிருந்தது. பொதுவாக நமது மக்கள் தங்களைக் கவர்ந்த தலைவர்கள் மற்றும் அரசர்கள் இறந்ததை நம்ப மறுப்பது இயல்பு. அதுவும் கண்காணாத இடத்தில் ஒருவர் மரித்துப் போகும் போது, இப்படிப்பட்ட சந்தேகங்கள் எழுவது
உறுதி.

ஆனால் பவால் ஜமீனிலோ ஆயிரம் வதந்திகள்! அதனால் ஒருமுறை மெஜோகுமாரின் பாட்டி ராணி சத்யபாமா, மெஜோகுமார் இறந்த அதே தினம் டார்ஜிலிங்கில் இருந்த புர்ட்வான் (Burdwan) மகாராஜாவுக்கு தனது பேரன் மரணத்தைக் குறித்து அவர் அறிந்ததை சொல்லுமாறு ஒரு கடிதம் எழுதினார்கள். மகாராஜா பதிலுக்கு, அவர் டார்ஜிலிங்கிலிருந்த போது மெஜோகுமாரின் மரணத்தை பற்றிக் கேள்விப்பட்டதாகவும் உடனே தனது ஆட்கள் மூலம் கங்கை தீர்த்தமும், துளசி இலைகளையும் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்ததாகவும் வேறு எதுவும் தனக்கு அது பற்றித் தெரியாது எனவும்சொன்னார்.



நான் அவனில்லை!

காரியங்கள் பின்னர் மளமளவென்று நடந்தன. மெஜோகுமாரின் மூத்த சகோதரி ஜோதிர்மாயியின் மகன் 'புத்து' (Buddhu) சில நபர்களை அழைத்துக் கொண்டு டாக்கா சந்யாசியை காணச் சென்றார். சந்யாசியை பார்த்ததும் அவருக்கு தனது மாமா ஞாபகம் வந்தது. முக சாயல் ஒத்தே இருந்தது. அவனுக்கு பின்னால் ன்ற சிலர், 'இது மெஜோ குமாரேதான்..நம்ப இரண்டாவது குமார்' என்று முணுமுணுக்க, புத்துவால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.

ஏப்ரல் 5ம் தேதி 1921ம் வருடம் காசிம்பூர் கிராமத்தை சேர்ந்த பவால் ஜமீன் குடும்பத்தவரான அதுல் பிரசாத் டாக்கா சந்யாசியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அவர் தனக்கு குழந்தை வேண்டி சந்யாசியை பூஜை செய்யச் சொல்லவே, சந்யாசி அப்படி எதுவும் தனக்குத் தெரியாது என்று மறுத்துவிட்டான். அதுல் பிரசாத் மெஜோ குமாருக்கு மிகவும் நெருங்கியவர். ஒரு வாரம் கழித்து யானை மீது அமர வைத்து சந்யாசியை அவர் ஜெய்தேபூர் அனுப்பி வைத்தார்.

யானை ஜெய்தேபூருக்கு வரும் போது மாலை நேரமாகிவிட்டது. அது நேராக ராஜாபாரி செல்ல, சந்யாசி அங்கிருந்த மாதாபாரி என்று அழைக்கப்பட்ட வழிப்போக்கர்களையும், சந்யாசிகளையும் போஷிக்கும் வீட்டின் எதிரே இருந்த காமினி மரத்தின் கீழ் அமர்ந்து விட்டான். இறந்த மெஜோகுமார் என்று சந்தேகிக்கப்பட்ட சந்யாசியை பார்ப்பதற்கு ஜமீனுக்கு நெருங்கிய உறவினர்கள் யாரும் இல்லை அப்போது. ஜெய்தேபூரில் வசித்து வந்த தூரத்து உறவினர்களும், சில ஜமீன் அலுவலர்களுமே சந்யாசியை காண வந்தனர். எல்லோரும் இடுப்பைத் தவிர வேறு எங்கும் மறைக்கப்படாத சந்யாசியின் உடம்பை கூர்மையுடன் பார்த்தனர். ஆனால் உடல் முழுவதும் மூடிய சாம்பலும் முகம் முழுவதும் மூடிய அழுக்கடைந்த முடியும் அவர்களை எந்த முடிவுக்கும் செல்ல விடவில்லை.

மறு நாள் காலை, பவால் ஜமீன் காரியதரிசியும் ஜோதிர்மாயியின் சம்பந்தியுமான யோகேந்திரநாத் ராஜாபாரி வந்தார். சந்யாசியை முழுவதும் கண்காத்தவர், சந்யாசியின் பழுப்பு கண்கள், பார்க்கும் முறை மற்றும் அமரும் முறை அனைத்தும் மெஜோகுமாரை ஞாபகப்படுத்துவதாக அறிந்தார்.

ஆனாலும் 'இது மிகவும் சிக்கலான பிரச்னை. இன்னும் கொஞ்சம் காத்திருக்க வேண்டுமென' தீர்மானித்துக் கொண்டார். பின்னர் ஜோதிர்மாயியின் வீட்டுக்கு அவரது விருப்பப்படி சந்யாசியை அழைத்துச் செல்வதென முடிவாயிற்று.

மாலை தனது பங்களாவில் இருந்த ஜோதிர்மாயிக்கு சந்யாசி வந்து விட்டார் என்று அறிவிக்கப்பட்டது. பங்களாவின் தாழ்வாரத்துக்கு வந்தவர் அங்கு சந்யாசி ஜமீன் உறவினர்கள் புடை சூழ ஒரு பாயில் உட்கார்ந்திருந்ததைப் பார்த்தார். சந்யாசி தலையை குனிந்து ஒரக்கண்ணால் அவரைப் பார்த்தான்.

'தம்பி அப்படித்தான் பார்ப்பான்' ஒரு கணம் அவரது மனம் துள்ளியது. அவனருகே அமர்ந்து சந்யாசியின் கண்கள், காதுகள், உதடுகள், கை கால்கள், முக பாவனை என ஒவ்வொன்றாக கவனித்தார்.

சிறிது உண்டபின் பிரம்மபுத்திராவில் ஸ்நானம் செய்யவேண்டுமென அவன் போய்விட்டான். அவனது நடையும் கூட தம்பியுடையது என்று ஜோதிர்மாயி நினைத்தார். மறுநாள் காலை மறுபடியும் சந்யாசியை அழைத்து வருவதென தீர்மானித்தார்கள்.

மறுநாள் காலை சந்யாசி, ராஜாபாரிக்குள் சென்று அங்குள்ள வரவேற்பறையில் உலாவியதாகவும் அருகிலிருந்த குளியலறைக்குச் சென்று குளித்ததாகவும் சிலர் சொன்னார்கள். அன்று ஜோதிர்மாயியின் வீட்டுக்கு வந்தவன், நேராக உள் அறைக்குச் சென்று அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டான். உறவினர்கள் எல்லாம் சுற்றி அமர, நாற்காலியில் அமர்ந்திருந்த வயதான ரா சத்யபாமாவை வசதியாக திவானில் அமர்ந்து கொள்ளுமாறு சொல்லி அவர் அவ்வாறு அமரவும் கைத்தாங்கலாக உதவி செய்தான்.

"இந்தப் பாட்டி மிகவும் துக்கத்தில் இருக்கிறார்கள் போல" என்று ஹிந்தியில் அவன் முணுமுணுத்தது அனைவருக்கும் கேட்டது. பின்னர் அங்கிருந்த உறவுக்காரப் பெண்களையெல்லாம் ஒவ்வொருவராக யாரென்று கேட்டுக் கொண்டே வந்தவன் இறந்து போன மூத்த அக்காவின் மகளைப் பார்த்ததும் திடீரென பொங்கி அழுதான்.

பின்னர், மறைந்த மெஜொகுமாரின் புகைப்படம் அவனுக்கு காட்டப்பட்டது. அதனைப் பார்த்ததும் அவன் மேலும் அழுதான். ஜோதிர்மாயி அவனிடம், 'முற்றும் துறந்த சந்யாசியாகிய நீங்கள் அழலாமா?' என்று கேட்டாள். அதற்கு அவன்,'இல்லை எனது தொலைந்து போகாத விருப்பங்களை (மாயை) எண் அழுகிறேன்' என்றான்.

'எதன் மீதான மாயை?' ஜோதிர்மாயியின் கேள்விக்கு அவன் பதில் சொல்லவில்லை. ஆனால் அவள் மெஜோகுமாரின் கதையை அவனுக்கு விரிவாக சொன்னாள். அவள் முடிக்குமுன்னே அவன், 'இல்லை. இல்லை. அவன் சாகவில்லை. அவனது உடலும் எரியூட்டப்படவில்லை. அவன் உயிரோடு இருக்கிறான்' என்று கத்தினான்.

எல்லோரும் அவனையே நோக்க, அமைதியாக ஜொதிர்மாயி, ''உன்னைப் பார்த்தால் என் தம்பி மாதிரியே இருக்கிறது. நீ அவனா?"

"இல்லை இல்லை. எனக்கும் உங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை"

அவன் உணவருந்தும் போது ஜோதிர்மாயி கவனித்தாள். உணவை வாய்க்குள் எடுத்துச் செல்கையில் ஆள்காட்டி விரல் தனியாக நீட்டிக் கொண்டிருப்பதாக. மேலும் நாக்கினை சிறிது வெளியே நீட்டி உணவை விழுங்கினான். மெஜொகுமாரேதான். ஜோதிர்மாயி நினைத்தாள். ' சிறு வயதிலிருந்து ஒன்றாக விளையாடிய தம்பியை எப்படி மறக்க முடியும்? '

'பற்கள் கூட அவனைப் போலவே, அழகான வரிசையில்'. அங்கம் அங்கமாக அவனை கவனித்துக் கொண்டே இருந்தாள். குரல் கூட அவனைப் போலத்தான். ' அனால், இப்படி நீண்ட தாடி, ஜடாமுடி மற்றும் உடம்பெல்லாம் சாம்பலைப் பூசி மறைத்துள்ளானே? '

ஜோதிர்மாயி எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் அவன் டாக்கா செல்வதாக சொல்லி போயே விட்டான்.

ஆனால் பின்னர் அவன் டாக்காவிலும் காணப்படவில்லை. இரண்டு வாரங்களுக்குப் பிறகு மீண்டும் தனது பழைய 'பக்லாண்ட் கரை' யில் அவன் அமர்ந்திருந்தான்.

புத்து அவனை வற்புறுத்தி டாக்காவிலுள்ள தனது உறவினரின் வீட்டிற்கு அழைத்துச் செல்ல அங்கு ஜோதிர்மாயியின் ஏற்பாட்டின் பேரில், மெஜோகுமாரின் கடைசி தங்கை அவனைப் பார்த்தாள்.

ஏப்ரல் மாதம் 30ம் தேதி அவன்ஜெய்தேபூரில் உள்ள ஜொதிர்மாயியின் வீட்டுக்கு மறுபடி அழைத்துச் செல்லப்பட்டான். ஜோதிர்மாயி வேண்டியும் அவன் உடலில் பூசிய சாம்பலை அகற்ற மறுத்து விட்டான். அவனைப் பார்க்கவோ மக்கள் கூட்டம் அதிகமாக வந்த வண்ணம் இருந்தது.

மூன்றாம் நாள் குளித்து விட்டு வரும் போது அவன் உடலில் சாம்பல் இல்லை. ஜோதிர்மாயி அவன் தேக வண்ணத்தில் தனது சகோதரனைப் பார்த்ததாக கூறுகிறார். அவளது 'மற்ற உறவினர்கள், முக்கியமாக ரா சத்யபாமாவும் அவன் மெஜோகுமார் என்பதாகவே நினைத்தனர்' என்கிறார்.

அடுத்த நாள் மே மாதம் 4ம் தேதி, ஜோதிர்மாயியின் விருப்பத்தின் பேரில் புத்து அவன் உடலிலுள்ள அடையாளங்கள் அனைத்தும் பார்க்க சந்யாசி ஒப்புக் கொண்டான். அதற்கிடையில் வெளியே அதிகமான மக்கள் கூட்டம் கூடிவிட்டது. அவர்கள் முகத்தில் எல்லாம் கட்டுப்படுத்த முடியாத ஆர்வம். ஜோதிர்மாயி சந்யாசியை தனியாக அழைத்துச் சென்றாள்.

"உன் உடலிலுள்ள அடையாளங்கள், தோற்றம் எல்லாமே எனது இரண்டாவது சகோதரன் போலவே இருக்கிறது. நீ அவன்தான். நீ யாரென்பதை எங்களுக்கு சொல்ல வேண்டும். நீ யார்?"

"நான் ஏற்கனவே சொல்லி விட்டேன். நான் அவனில்லை. ஏன் என்னை தொந்திரவு செய்கிறீர்கள்?"


நான், ராமேந்திர நாராயண் ராய்செளத்ரி

ஜோதிர்மாயி சந்யாசி சொன்னதை ஒத்துக் கொள்ளும் நிலையில் இல்லை, "நீ யாரென்பதை எங்களுக்கு சொல்லித்தான் ஆக வேண்டும்."

வெளியே கூடியுள்ள மக்கள் கூட்டம் ஆயிரத்தை தொட்டது. பெரும்பாலும் ஜமீன் குடிகள். அதற்குள் புத்து வெளியே உள்ள மக்களிடம் சந்யாசியிடம் மெஜோகுமாரின் அங்க அடையாளங்கள் காணப்படுவதாக சொல்லிக் கொண்டிருந்தான்.

ஜோதிர்மாயி சந்யாசியிடம், "நீ எனது சகோதரன் என்பதை நான் அறிவேன். நீ அதனை பொதுவில் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். இல்லையெனில் அதுவரை நான் சாப்பிடவே போவதில்லை" என்றாள் உறுதியாக!

சந்யாசியோ பேசாமல் இருந்தான். சரியாக மெஜோகுமார் இறந்ததாக சொல்லப்பட்ட தினத்திலிருந்து 12 ஆண்டுகள் கடந்திருந்தது. மத்தியானத்திற்கெல்லாம் பொறுமை இழந்த மக்கள் கூட்டம் 2500ஐ தொட்டது.

ஜோதிர்மாயியும் புத்துவும் கூடவர சந்யாசி வெளியே மக்கள் கூட்டத்தைக் காண அழைத்து வரப்பட்டான்.

"உன் பெயர் என்ன?" மக்கள் கூட்டத்திலிருந்து எழுந்தது ஒரு கேள்வி.

"ராஜேந்திர நாராயண் ராய்செளத்ரி" சிறிது யோசிப்புக்கு பின் வந்தது பதில்.

பிறகு நடந்ததுதான் இந்தக்கதையில் முதல் அத்தியாயத்தில் சொல்லப்பட்டது. சந்யாசி மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லி மயங்கி விழுந்தாலும் மக்கள் கூட்டம் அங்கிருந்து கலைய மறுத்தது.

அடுத்த நாள் 'அன்பார்ந்த லிண்ட்ஸே' என்று கலெக்டருக்கான தனது தாக்கீதை தொடங்கிய ஜமீனின் அரசு மேலாளர் F.W.நீதம் தனது கடிதத்தை இவ்வாறு முடிக்கிறார்,

'காலையிலிருந்தே சாதுவை பார்ப்பதற்கான மக்கள் கூட்டம் குவிந்த வண்ணம் இருக்கிறது. மக்களிடையே காணப்படும் பரபரப்பும் ஆரவாரமும் கட்டுக்கடங்காமல் போய் ஏதாவது அசம்பாவிதமான சம்பவம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் உடனடியாக ஏதாவது நடவடிக்கை எடுத்தாக வேண்டும். தங்கள் உத்தரவு வேண்டி'

கடிதத்தின் நகல் மெஜோகுமாரின் மனைவி உட்பட மூன்று விதவை ஜமீந்தாரினிகளுக்கும் அனுப்பப்பட்டது.

மக்கள் கூட்டமோ தொடர்ந்து சாதுவை பார்க்க வந்த வண்ணம் இருந்தது. ஆனால் இப்போது அவன் சாது போல இல்லை. நீண்டமுடியும் தாடியும் இருந்தாலும் சராசரி உடைகளை அயத் தொடங்கி விட்டான். தினமும் வீட்டிற்கு முன் நாற்காலி போட்டு அமர்ந்து ஜமீன் மக்களிடம் பழைய நினைவுகளை பேசினான். சில சமயம் எதையோ நினைத்து அழுவான். பெரும்பாலான மக்கள் அவன் தங்கள் மெஜோ குமார் என்றே நம்பினர்.

மே மாதம் 15ம் தேதி ஜெய்தேபூர் ராஜாபாரிக்கு வெளியே பெரிய கூட்டமொன்று பவால் ஜமீன் குடிகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் முறையாக சந்யாசி பவால் ஜமீனின் இரண்டாவது குமார் என்று அறிவிக்கப்படுவார் என்று நம்பப்பட்டதால் பெருந்திரளான கூட்டம் காலையிலிருந்தே கூடத் தொடங்கிவிட்டது.

ரயில்வே கம்பெனி சிறப்பு ரயில்கள் விட்டும் ரயிலில் ஏற கூரையில் கூட இடமில்லை. மதியத்தில் கூட்டம் ஐம்பதாயிரத்தை தொட்டு விட்டது.

ஜமீனின் தாலுக்தார் அதிநாத் பேசினார். மெஜோகுமாரின் முழுவரலாற்றையும், சந்யாசியின் கதையையும் சொல்லி எப்படி அவர் உடல் மற்றும் அதில் உள்ள அடையாளங்கள் அவரை மெஜோகுமார்தான் என்று உறுதிபடுத்துவதாகவும் சொன்னார்.

"சில உறவினர்கள் தங்களது சுயலாபத்துக்காக இவரை மறுத்தாலும், ஜமீனின் குடிகளாகிய நாம் அனைவரும் இவர் குமார் ராமேந்திர நாராயண் ராய் என்பதை உறுதியாக நம்புகிறோம். எங்கே இவர் ராமேந்திரா என்று நம்புபவர்கள் அனைவரும் கை தூக்குங்கள்"

பல்லாயிரக்கணக்கான கைகள் ஒரு சேர உயர்ந்தன.

"யராவது இவர் ராமேந்திரா இல்லை என்று சந்தேகிக்கிறீர்களா?"

எங்கும் நிசப்தம் நிலவியது.

வந்திருக்கும் சந்யாசி பவால் ஜமீனின் இரண்டாவது குமாரான ராமேந்திர நாராயண் ராய் என்று ஒரு தீர்மானம் இயற்றப்பட்டு அனைத்து அரசு அலுவலர்களும் அனுப்புவது என்று முடிவாயிற்று.

பின்னர் குமார் யானை மீதேறி புறப்பட்ட போது, 'இரண்டாவது குமார் வாழ்க' என்ற மக்களின் கூக்குரல் விண்ணைப் பிளந்தது. ஆம், உண்மையிலேயே காற்றடித்து பெருமழை கொட்டியது. அனைவரும் மகிழ்ச்சியுடன் கலைந்தார்கள்.


தாவாவின் ஆரம்பம்

மே மாதம் 21ம் தேதி 1921ம் ஆண்டு தன்னை இரண்டாவது குமாராக பிரகடனபடுத்திக் கொண்ட சந்யாசி தனது வக்கீல்கள் இருவருடன் டாக்கா மாவட்டக் கலெக்டரை சந்தித்தான்.

அவன் கலெக்டரிடம் தான் இறந்ததாக சொல்லப்படும் நாளுக்கு சில நாட்களுக்கு முன்னர் நிமோனியா காய்ச்சலால் அவதிப்பட்டதாகவும், தன்னுடைய கைகளில் ஒரு கொப்புளத்தை தவிர வேறு எதுவும் அப்போது இல்லையெனினும், தான் டார்ஜிலிங்கில் நோய்முற்றி மயங்கிவிட்டதாகவும் கூறினான். மேலும் அவன் தனக்கு உணர்வு வந்த போது ஒரு மலைக்காட்டில் பின்னர் தனது குருவாகிப் போன சாதுவின் பராமரிப்பில் இருந்ததாகவும், அவர், அவன் அவ்வாறு மூன்று நாட்கள் மயக்கத்தில் இருப்பதாக கூறியதாகவும் கூறினான். தன்னை அந்த சாது இடுகாட்டுத்தரையில் மிகவும் நனைந்து போய் யாரோ வீசிவிட்டுப் போன நிலையில் பார்த்ததாக கூறியதாகவும் தனக்கு தனது பழைய வாழ்க்கை எல்லாம் மறந்து போனது என்றும் கூறினான்.


சந்யாசியின் வக்கீல்கள் கலெக்டரிடம், 'ஜமீன் சொத்துக்கள் குறித்து, முக்கியமாக வாடகைதாரர்களுக்கு பயனுள்ள வகையில் சில ஏற்பாடுகள் செய்ய வேண்டும்' என்றதற்கு கலெக்டர், 'இதனை நேரடியாக வருவாய் துறை ஒத்துக் கொள்ள முடியாது. எனவே குமார் நீதிமன்றத்தை அணுகி தகுந்த ஆணையைப் பெறும் நிலையில் தன்னால் உதவி செய்யமுடியும்' என்று கூறிவிட்டார்.

ஐந்து நாட்களில் கலெக்டரின் உத்தரவின் பெயரில் வருவாய்த்துறை ஒரு அறிவிப்பை பவால் ஜமீன் முழுவதும் வெளியிட்டது.

"பவால் ஜமீன் வாடகைக் குடி அனைவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால், பவாலின் இரண்டாவது குமார் பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்து டார்ஜிலிங்கில் எரியூட்டப்பட்டது ஆதாரபூர்வமான உண்மை. எனவே இந்த சந்யாசி ஒரு போலி. அவரிடம் யாராவது வாடகைப்பணம் செலுத்தினால் அது அவர்களது சொந்த நஷ்டத்தின் பெயரிலேயே செலுத்தப்பட்டதாக கருதப்படும்"

சந்யாசி தற்போது தான் இரண்டாவது குமார் என்று வழக்குத் தொடர வேண்டியது அவசியமாகிப் போனது.



விந்தை வழக்கு

டாக்கா மாவட்ட நீதிமன்றத்தில் ஆரம்பித்து லண்டன் பிரிவி கவுன்சிலில் (Privy Council) முடிந்த வழக்கு, இந்திய சிவில் வழக்குகளிலேயே மிகவும் பிரச்சித்து பெற்றதென கூறலாம். இந்திய சாட்சிச் சட்டத்தின் முக்கிய கூறுகள் இந்த வழக்குக்காக அலசப்பட்டன. வழக்கின் முக்கிய கட்டமான 'டிரையல்' என்று சொல்லப்படும் சாட்சி விசாரணை மற்றும் வாதம் நடைபெற்ற நாட்களே அறுநூற்றைத் தாண்டிவிட்டது.

இந்தியாவில் அதிகமான சாட்சிகள் விசாரிக்கப்பட்ட சிவில் வழக்கு இதாகத்தான் இருக்க முடியும். பெங்கால் மாகாணத்தில் இந்த வழக்கினை பற்றி அறியாதவர்களும் அதன் போக்கினை பற்றியும் சந்யாசி உண்மையான குமாரா? இல்லையா? என்பதை விவாதிக்காதாவர்களும் இல்லை என்று சொல்லி விடலாம்.

வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே இரண்டாவது குமாரைப் பற்றிய பாடல்கள், பிரச்சாரங்கள், கதைகள் ரயில்கள், தெரு முனைகள் மற்றும் மக்கள்
கூடும் இடங்களில் எல்லாம் பாடப்பட்டன. துண்டுப் பிரசுரங்கள் வியோகிக்கப்பட்டன.

சந்யாசிக்கு அரசின் எதிர்ப்பை சந்திப்பது பெரிய பிரச்னை இல்லை. எதிர்ப்பு வந்தது ஜமீனின் மூன்று விதவைகளிடம் இருந்து, குறிப்பாக இரண்டாவது குமாரின் (தனது!) மனைவியான பீபாபட்டியிடம் இருந்து!
அவர் சந்யாசியை தனது கணவரான குமார் என்பதை ஏற்றுக் கொள்ள அறவே மறுத்து விட்டார்கள். அதற்கு முன்னரே அவரது சகோதரர் சத்யேந்திரா குமார் இறந்தது அதனை அவருக்கு சிகிச்சையளித்த ஆங்கிலேய மருத்துவர் உறுதிப்படுத்தி சான்றிதழ் அளித்தது, குமாரின் இறுதி ஊர்வலத்தில் தானும் மற்ற நண்பர்களும் கலந்து கொண்டது அனைத்தும் கலப்படமற்ற உண்மை என்று பத்திரிக்கைகளுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

1930ம் ஆண்டு ஜூலை மாதம் 24ம் தேதி சந்யாசி, டாக்கா நீதிமன்றத்தில் தனது மனைவி மற்றும் தனது சகோதரர்கள் மனைவியர் மீதும் வழக்கு தொடர்ந்தார்.

'வாதியாகிய தான் பவாலின் இரண்டாவது குமராகிய ராமேந்திர நாராயண ராய் என்று அறிவிக்க வேண்டியும் பவால் ஜமீன் சொத்துக்களில் தனக்குறிய மூன்றில் ஒரு பங்கினை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும்' என்பதுதான் வழக்கு.

சந்யாசிக்கு மறுபுறம் முதல் பிரதிவாதியாக பீபாபட்டி!

சந்யாசியின் வாதம், 'பீபாபட்டி சொல்வது போலன்றி தான் இறந்து போனதாக அறிவிக்கப்பட்டது ஏழு அல்லது எட்டு மணியளவில் என்றும் உடனடியாக அதனை தகனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது ஆனால் உடல தகனம் செய்வதற்காக பழைய இடுகாட்டில் வைக்கப்பட்டு இருந்தபோது பெருங்காற்றுடன் மழை பெய்ததால் அனைவரும் உடலை விட்டு ஓடி விட்டனர்' என்பதாகும்.

மேலும் 'மழை நின்ற பின்னர் உடலை காணாதலால், வேறு உடல் கண்டெடுக்கப்பட்டு மீண்டும் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு மறுநாள் காலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு புதிய இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது' என்றும் ' முதல் நாள் மழையின் போது இடுகாட்டில் சத்தம் கேட்டு வந்த சில சந்யாசிகள் குமாரை உயிருடன் கண்டதால் தங்களுடனே எடுத்துச் சென்று விட்டதாகவும், பின்னர் உணர்வு வந்த பிறகும் பழைய னைவுகள் மறந்து அவர்களுடனே சாமியாராக அலைந்து திரிந்ததாக' என்றும் வாதத்தில் கூறப்பட்டது.

பீபாபட்டியின் சார்பின் அனைத்து வாதங்களும் வன்மையாக மறுக்கப்பட்டது.

சந்யாசியின் சார்பில் சில விலைமாதர்கள் கூட சாட்சியாக அவரது உடலில் உள்ள அடையாளங்களை குறிப்பிடும்படி நீதிமன்றம் முன் நிறுத்தப்பட்டனர். சந்யாசியின் இடது கையில் ஒரு தழும்பும் வலது கையில் இரண்டு தழும்பும் முழங்கைக்கு மேல் காணப்பட்டது. இது குமாருக்கு இருந்ததாக சொல்லப்பட்ட தழும்புகளைவிட குறைவுதான் என்றாலும் நீதிமன்றம் இதுவே போதுமென கருதியது.

குமாருக்கு சாதகமான முக்கியமான சாட்சி அவரது சகோதரியான ஜோதிர்மாயி மற்றும் குமார் இறந்ததாக சொல்லப்பட்ட நேரத்தில் டார்ஜிலிங்கில் ஒரு கிளப்பில் அமர்ந்திருந்த நான்கு நபர்கள். அவர்களுக்கு பல விஷயங்கள் மறந்திருந்தாலும், எட்டு மணி வாக்கில் ஒரு வேலையாள் ஒடி வந்து, 'பவால் ஜமீன் இரண்டாவது குமார் இறந்து விட்டதாகவும் ஈமக்கிரியைகளுக்கான உதவிகள் புரியுமாறு வேண்டியதாகவும்' கூறினர். மற்றும் அவர்கள் அன்று பெய்த பெரிய மழையையும் உறுதிப்படுத்தினர். இது குமார் இறந்ததாக சொல்லப்பட்ட நேரத்தினைப் பற்றிய பிரச்னையில் சந்யாசிக்கு பெரிய சாதகமாக அமைந்தது.

சந்யாசிக்கு எதிரான மிகப்பெரிய சோதனை, பீபாபட்டியின் சாட்சி மற்றும் குமாரது காப்பீடு பத்திரம். அதனோடு இணைக்கப்பட்ட மருத்துவரின் அறிக்கையில் குமாரின் கண் நிறம் சாம்பல் (grey) என்று குறிப்பி டப்பட்டிருந்தது. சந்யாசியின் கண் நிறமோ பழுப்பு (brown). ஆனால் குமார் மரித்த பின்னர் அவருக்கு மிகவும் நெருக்கமான வித்தியாசாகர் என்பவர் காப்பீட்டு நிறுவனத்துக்கு அளித்த பிரமாண பத்திரத்தில் (affidavit) குமாரின் கண் பழுப்பு நிறம் என்று குறிப்பிட்டிருந்தார். ஆக ஆவணத்துக்கு ஆவணம் சரியாகப் போயிற்று.

அடுத்து சந்யாசியிடம் சிபிலிஸ் நோய்க்கான அறிகுறி எதுவும் இல்லை. தனக்கு சந்யாசிகள் எதுவும் மருந்து தரவில்லை என்பதனையும் அவன் ஒத்துக் கொண்டான். மேலும் மருத்துவ சாட்சியான K.K.சாட்டர்ஜி கையிலும் காலிலும் பெரிய புண்கள் ஏற்பட்டு அவை கழுவி சுத்தப்படுத்தப் படாத பட்சத்தில் நோயாளி மூன்று மாதங்களுக்கு மேல் புண்கள் புரையோடிப் போகாமல் உயிர் பிழைத்திருப்பது நடவாத காரியம் என்று கூறியிருந்தார்.

ஆனால் மருத்துவ சாட்சி அறிக்கைதானே தவிர முழுமையானதல்ல.

இந்தியவின் தலைசிறந்த வழக்கறிஞர்கள் ஈடுபட்ட இந்த வழக்கின் தீர்ப்பினை 1936ம் வருடம் ஆகஸ்ட் 24ம் தேதி இந்தியரான டாக்கா மாவட்ட நீதிபதி வழங்கினார்.

'வாதி பவால் ஜமீனின் இரண்டாவது குமார் என்று அறிவிக்கிறேன். பவால் ஜமீனின் சொத்துக்களில் மூன்றில் ஒரு பங்கு அவருக்கு வழங்கப்பட வேண்டும்'

பீபாபட்டி கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு (appeal) தாக்கல் செய்தார். மீண்டும் இந்தியாவின் பெரிய வக்கீல்கள் வாதிட, மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்சு மேல் முறையீட்டு வழக்கினை விசாரித்து 1940ம் வருடம் நவம்பர் மாதம் 25ம் தேதி தனது தீர்ப்பினை வழங்கியது.

பிஸ்வாஸ் என்ற இந்திய நீதிபதியும் காஸ்டெல்லோ என்ற ஆங்கிலேய நீதிபதியும் வாதிக்கு சாதகமாக டாக்கா நீதிமன்ற தீர்ப்பினை உறுதி செய்ய சந்யாசிக்கு மீண்டும் வெற்றி!

லாட்ஜ் என்ற ஆங்கிலேய நீதிபதி மற்ற இரு நீதிபதிகளின் தீர்ப்புக்கு எதிராக அதாவது சந்யாசிக்கு எதிராக வழங்கிய தீர்ப்பின் (dissenting judgement) வாசகம் கவனிக்கத்தக்கது.

'குமார் இறந்த பின்னர் லவிய வதந்திகள் மக்களை குமார் உயிருடன் இருக்கிறார் என்று யார் வந்து சொன்னாலும் நம்பத்தகுந்த வகையில் தயார்படுத்தி வைத்திருந்தது. இப்படியாகப்பட்ட சூழ்லையில் குமாரை உருவத்தில் ஒத்த யாரும் இப்படிப்பட்ட காரியத்தை வெற்றிகரமாக செய்யக்கூடிய சாத்தியங்கள் அதிகம்'

ஆனால் வதந்திகளைப் பற்றிய இந்த கருத்து இருபுறமும் வெட்டக்கூடிய ஒரு வாள். நெருப்பில்லாமல் புகையாது. குமாரின் ஈமக்கிரியையின் போது ஏதோ அசாதரணமாக நடந்திருக்க வேண்டும். அதனை யாராவது வேலையாள் ஜெய்தேபூரில் யார் காதிலோ ஓத, இந்த வதந்திகள் ஆரம்பித்திருக்கலாம்.

ஆக பெரும்பான்மைத் தீர்ப்பினால் (majority judgement) பீபாபட்டிக்கு மறுபடியும் தோல்வி. இப்போது நமக்கு டெல்லியில் உச்ச நீதிமன்றம் இருப்பது போல அப்போது லண்டனில் உள்ள பிரிவி கவுன்சிலை (privy council) அணுகலாம். உச்ச நீதிமன்றம் போலவே, பிரிவி கவுன்சிலிலும் மேல் முறையீடு செய்வதை நமக்குள்ள உரிமையாக கோர முடியாது. வழக்கில் சட்ட சம்பந்தமான பிரச்னை இருக்கும் போது அல்லது கீழ் கோர்ட்கள் சாட்சிகளை சட்டத்துக்கு புறம்பான வகையில் எடுத்தாள்கையில்தான் அவை ஒரு தீர்ப்பினை மறு பரிசீலினை செய்ய அனுமதிக்கும். முக்கியமாக ஒரு கழ்வு சம்பந்தமான பிரச்னை இரண்டு கோட்டிலும் ஒரே மாதிரியாக தீர்க்கப்படும் நேரத்தில் அதனை மாற்றியமைக்க நினைக்காது.

சந்யாசி குமாரா? இல்லையா? என்பது கழ்வு சம்பந்தமான (quesion of fact) ஒரு கேள்வி. இரு நீதிமன்றங்கள் அதனை ஒரேமாதிரி தீர்த்தபின்னர் பீபாபட்டியின் மேல் முறையீடு கடினம்தான். ஆனாலும் பிரிவி கவுன்சிலுக்கு சென்றார் பீபாபட்டி.

அவரது வழக்கறிஞ்ர் வன்மையாக வாதிட்டார். இறுதியில் ஒரு இந்திய நீதிபதியை உள்ளடக்கிய பிரிவி கவுன்சில் 1946ம் வருடம் ஜூலை மாதம் 30ம் தேதி தனது தீர்ப்பினை வழங்கியது.

'டாக்கா மாவட்ட நீதிமன்றம் மற்றும் கல்கத்தா உயர் நீதிமன்ற தீர்ப்புகள் உறுதி செய்யப்படுகின்றன. மேல் முறையீடு தள்ளுபடியாகிறது'

இப்படியாக குமாரின் மரணத்தினைப் பற்றிய சந்தேகம் அவர் இறந்த 35 வருடங்கள் கழித்து முடிவுக்கு வந்து விட்டதாக அனைவரும் கருதினர். ஆனால் காலம் வேறு விதமான பதிலை வைத்திருந்தது.

முடிவில்லா கதை

தீர்ப்பு விவரம் ஜெய்தேபூரை எட்டியதுமே பெரிய கொண்டாட்டம். அடுத்த நாள் இரண்டாவது குமாராகிய சந்யாசி அருகிலுள்ள தந்தனிய காளி கோவிலுக்கு பூஜை செய்ய போனார். இருபத்தைந்து வருடங்களாக நடைபெற்ற போராட்டம் ஒரு முடிவுக்கு வந்து விட்ட மகிழ்சியில் பெரிய பூஜை நடைபெற்றது. பூஜை முடிந்து குமார் ஜெய்தேபூர் திரும்பவில்லை!

வரும் வழியிலேயே வாதம் தாக்கி அவரது பிணம்தான் ஜெய்தேபூரை வந்து
சேர்ந்தது.

குமாராகிய சந்யாசியின் மரணத்தை கேள்விப்பட்ட அவரது மனைவி என்று கருதப்பட்ட பீபாபட்டி, "மனிதர்களின் நீதிமன்றத்தில் வேண்டுமென்றால் நான் தோற்றிருக்கலாம். இறைவனது கடைசியான நீதிமன்றத்தில் இறுதியில் நான் வென்று விட்டேன்"

இந்த வழக்கின் இறுதியான தீர்ப்பு எது? என்பது இன்றுவரை யாராலும் விடை காணப்படாத கேள்வி!

***

(இந்த வழக்கின் தீர்ப்பு பிரிவி கவுன்சிலின் வலைத்தளத்தில் கிடைக்கிறது)

16.1.07

பின் தொடரும் ஆ...பத்து! - முடிவு

அலட்சியம் தரும் ஆபத்து!


இறுதியியாக யாருடைய கையிலும் அடங்காத ஒரு ஆபத்து உள்ளது. அது வாகன உரிமையாளர்களின் அலட்சியத்தால் விளைவது. அதாவது, வாகனத்திற்கு காப்பீடு செய்ய மறப்பது.


பலமுறை விபத்து நடந்த பிறகு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இடியென காதில் இறங்கும் ஒரு செய்தி, வாகனத்திற்கு காப்பீடே இல்லாதிருப்பது அல்லது காலாவதியாகியிருப்பது. இவ்வாறான நிலைகளில் விபத்தில் நிர்க்கதியாக்கப்படும் ஒரு குடும்பத்தின் வயிற்றெரிச்சலை சுமப்பதன் குற்ற உணர்ச்சிதான், வாகன உரிமையாளருக்கு மிச்சம்!


சில சமயங்களில், வாகன உரிமையாளர் கவனமாக இருந்தாலும், காப்பீடு நிறுவன முகவர்களின் தவறான தகவலாலும், காப்பீடு இல்லாத நிலை ஏற்ப்படும். அவற்றை குறித்து வாகன உரிமையாளர்கள் கவனமாக இருப்பது நல்லது.


அதாவது, உங்களிடம் இருந்து பணத்தினை பெற்றவுடனே ‘வண்டியை எடுக்கலாம் சார்’ என்று கூறிவிட்டு போய் விடுவார்கள். ஆனால், காப்பீடு நிறுவனம் பணம் பெற்றதால் மட்டுமே காப்பீடு ஒப்பந்தம் ஏற்ப்பட்டதாக கருத முடியாது என்று சமீபத்திய நீதிமன்ற தீர்ப்புகள் கூறுகின்றன!


எனவே காப்பீடு சான்றிதழ் (Certificate of Insurance) பெறும் வரை காத்திருக்கவும். பாலிசி வருவதற்கு நாள் எடுக்குமென்பதால், சில காப்பீடு நிறுவனங்கள் ‘கவர் நோட்’ (Cover Note) என்ற பெயரில் ஒரு இடைக்கால காப்பீட்டினை அளிக்கிறது. இவ்வாறு கவர் நோட் அளிக்கப்பட்டால் பாலிசி கொடுக்கப்படும் வரை காப்பீடு உண்டு. ஆனால் சிறு கவனம் தேவை.


என்னிடம் சமீபத்தில் வந்த ஒரு வழக்கில் ‘கவர் நோட்’ டானது 11ம் தேதி வழங்கப்பட்டிருந்தாலும் அதில் காப்பீடானது 13ம் தேதியிலிருந்து தொடங்கும் என்ற வகையில் குறிப்பு உள்ளது. இடையில் 12ம் தேதி விபத்து நடைபெற, சிக்கல்தான்!


ஆக, பணத்தினை 11ம் தேதியே கொடுத்து, கவர் நோட்டும் அதே தேதியில் வழங்கப்பட்டிருந்தாலும் 12ம் தேதி நடந்த விபத்திற்கு காப்பீடு வழங்கப்பட முடியாது என நான் வாதிட......நீதிபதி ‘இரக்கமற்றவன்’ என்று என்னை முறைத்துக் கொண்டிருக்கிறார்.


இந்தப் பிரச்னையினை தவிர்க்க, வாகனத்தை காப்பீடு செய்கையில் சிறு கவனமாயிருத்தல் நலம். துர்நிகழ்வுகள் யாருக்கும், எந்த நேரத்திலும் சம்பவிக்கலாம் என்ற சிறு பயமும் தேவை!



முடிவுரை


மீண்டும் கூற விரும்புகிறேன்! இதனை ஒரு பதிவு என்ற அளவோடு நிற்காமல், இந்தியாவின் வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், பயணிகள் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய விடயங்கள் என்ற உள்ளார்ந்த ஆதங்கத்தோடு பதிவிடுகிறேன்.


சில சமயங்களில் கீழமை நீதிமன்றங்களில் இழப்பீடு உத்தரவு கிடைத்த பின்னரும், உயர்நீதிமன்ற மேல் முறையீட்டில் சில நுட்பமான காரணங்களுக்காக மறுக்கப்படுகையில், பாதிக்கப்பட்டவர்கள் சிந்தும் கண்ணீரை உணர்ந்த குற்ற உணர்ச்சியின் வெளிப்பாடுதான் இந்த பதிவு!

***

பின் தொடரும் ஆ...பத்து! - 6

மூன்றாம் நபர், யார்?

அரசியல் மாநாடுகளுக்கு லாரிகளில் ஆட்களை கொண்டு வந்து குமிக்கும் வழக்கம் தற்பொழுது முன்பு இருந்த அளவுக்கு இல்லை என்றாலும், சரக்கு வாகனங்களில் சரக்குகள் ஏற்றப்படும் அளவிற்கு மனிதர்களையும் ஏற்றிச் செல்லும் வழக்கம் இங்கு சர்வ சாதாரணம்.

சில நாட்களுக்கு முன்னர் கூட சரக்கு ஏற்றிச் செல்லும் மினிடோர் வண்டியின் பின்புறத்தில் சுமார் பதினைந்து சிறுமிகள் பள்ளிக்கு செல்லும் காட்சியை நாளிதழில் பார்த்தேன்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் கூட இவ்வாறு சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்வதை எப்படித் தடுப்பது என்று ஒரு பொது நல வழக்கு நிலுவையில் உள்ளது. வழக்கில் வாதாடிய பலரும் பல்வேறு ஆலோசனைகளை முன் வைத்தாலும், அடிப்படைக் காரணம் இங்கு நிலவும் ஏழ்மைதான் என்பதுதான் நிதர்சனமான உண்மை!

ஆனால், சட்டத்துக்கு இது புரிய வேண்டுமே!

புரிந்திருந்தால் மூன்றாவது நபர் என்று கூறப்படும் நபர்களில் வாகன உரிமையாளரைத் தவிர அனைவரும் அடக்கம் என்று தெளிவாக கூறியிருக்கலாம். சரக்கு வாகனங்களில் பயணம் செய்யும் பயணிகளை மனிதர்களாக சட்டமும் மதிக்கவில்லை. எனவே, அவர்களைப் பொறுத்து காப்பீடு இல்லை என்பதும் ஒரு அதிர்ச்சி தரும் உண்மை.

மூன்று வருடங்களுக்கு முன்பு வரை உச்ச நீதிமன்றம் மூன்றாம் நபர் காப்பீடு என்பது வாகன உரிமையாளரைத் தவிர மற்ற அனைவரையும் குறிக்கும் என்றுதான் கூறி வந்தது. பின்னர் மீண்டும் சட்டத்தினை தெளிவாக பரிசீலித்த உச்ச நீதிமன்றம் ‘சரக்கு வாகனத்தில் பயணிக்கும் பயணிகள் மூன்றாவது நபர் இல்லை’ கூறியதால் தற்பொழுது சரக்கு வாகனத்தில் பயணிக்கும் மனிதர்களுக்கு எவ்வித காப்பீடும் இல்லை. ஒரே விதிவிலக்கு, சரக்குடன் பயணம் செய்யும் உரிமையாளர் அல்லது அவரது சார்பாக பயணிக்கும் நபர்.

தனியார் வாகனத்தில் பயணம் செய்யும் நபருக்காவது கட்டாயம் இல்லையெனினும் காப்பீடு செய்யும் வாய்ப்புண்டு. ஆனால், சரக்கு வாகனத்தில் பயணம் செய்பவருக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை. வாகனத்தின் உரிமையாளர் வசதியானவராக இருந்தால்தான் இழப்பீடு!

எனவே இக்கட்டுரையின் முன்னுரையில் கூறப்பட்ட மூன்றாவது சம்பவத்தில் ஏதும் விபத்து நடந்தால், பாதிக்கப்படுபவர்களுக்கு இழப்பீடு கொடுத்தே கடும் உழைப்பால் முன்னேறிய நபர் போண்டியாக வேண்டியதுதான்.

இந்த ஆபத்தினை தவிர்ப்பது என்ற ஆலோசனை என்னிடம் இல்லை. ஏனெனில், அதற்கு இந்த நாட்டின் பொருளாதாரம் முன்னேற வேண்டும். அரசியல் கட்சிகளுக்கு தொண்டர்கள் அனைவரையும் ஆம்னி பஸ்ஸில் கொண்டு வரும் வசதி வேண்டும்!

குறைந்த பட்சம், பள்ளி செல்லும் ஏழை மாணவிகள் டிராக்டரில் தொற்றிக் கொள்ளாமல் இருக்க அவர்களுக்கு ஒரு மிதி வண்டியாவது வேண்டும்!!

to be continued...

15.1.07

பின் தொடரும் ஆ...பத்து! - 5

தனியார் வாகனம், கவனம்!


கடந்த பெருமழையின் பொழுது, சென்னையை உலுக்கிய சம்பவம் ஒன்று உண்டென்றால், அது மூன்று நண்பர்கள் பூட்டிய காருக்குள் இறந்து கிடந்த சம்பவம். அதாவது, சாலையில் ஏற்ப்பட்ட நீர்ப்பெருக்கினால் தங்களது காரினை சாலையிலேயே நிறுத்தி அதற்குள் குளிரூட்டியினை (Air Conditioner) ஓட விட்டபடி அமர்ந்திருந்த அந்த மூன்று நபர்களும் தங்களுக்கு என்ன சம்பவிக்கிறது என்பதை அறியாமலேயே இறந்து போயிருந்தனர்.

இழப்பீடுகளுக்கான, மோட்டார் வாகன சட்டப் பிரிவுகளின்படி நடைபெற்றது ஒரு வாகன விபத்தாகவே கருதப்படும்.

எனவே, இறந்து போன மூவரின் வாரிசுகளுக்கும் இழப்பீடு உண்டு!

இறந்து போனவர்கள், கணிசமாக சம்பாதித்துக் கொண்டிருந்த மென்பொருள் வல்லுஞர்கள், அதுவும் இளைஞர்கள். எனது கணிப்பில் அவர்களுக்கு மொத்தமாக வழங்கப்படக்கூடிய இழப்பீடு குறைந்தது ஐம்பது லட்சமாவது இருக்கும்.

ஆனால் இழப்பீட்டினை கொடுக்க வேண்டிய நபர், காப்பீடு நிறுவனம் அல்ல மாறாக வண்டி உரிமையாளர் என்ற செய்தி பலருக்கு அதிர்ச்சி தரலாம்!

கார் மட்டுமல்ல, மோட்டார் பைக், ஸ்கூட்டர் போன்ற தனியாருக்கு சொந்தமான எந்த ஒரு வாகனத்திலும் பயணம் செய்பவருக்கு, விபத்தினால் ஏற்ப்படும் இழப்பிற்கு அளிக்கப்பட வேண்டிய இழப்பீட்டிற்கு காப்பீடு கிடையாது என்ற அதிர்ச்சிகரமான உண்மை பல வழக்குரைஞர்கள் ஏன் காப்பீடு நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கே தெரியாது.

பலர் ‘வண்டிக்கு ‘முழுமையான காப்பீடு’ (Comprehensive Policy) எடுத்திருக்கிறேன், எனவே எல்லா இழப்பினையும் காப்பீடு நிறுவனம்தான் தர வேண்டும்’ என்று சமாதானம் கூறுவார்கள். நீதிமன்றங்கள் கூட சில சமயங்களில் முழுமையான காப்பீடு என்று அழைக்கப்படுவதை அவ்வாறே தவறாக அர்த்தம் கற்பிக்கின்றனர். ஆனால், காப்பீடு நிறுவனங்களால் ‘முழுமையான காப்பீடு’ என்ற தவறான பதத்தால் அழைக்கப்படும் காப்பீட்டில், இங்கு முன்பு கூறப்பட்ட மூன்றாம் நபர் காப்பீடு ( Act Policy) மற்றும் வண்டிக்கு ஏற்ப்படும் இழப்பு மட்டுமே காப்பீடு செய்யப்படுகின்றன!

ஏன் இவ்வாறு?

ஏனெனில் சட்டத்தால் கட்டாயமாக்கப்பட்டுள்ள காப்பீடானது அதில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களுக்கு மட்டுமே! பேருந்து போன்ற பொது வாகனங்களில் பயணம் செய்யும் அனைவருக்கும் காப்பீட்டினை கட்டாயமாக்கிய சட்டம், தனியார் வாகனங்களில் பயணம் செய்பவர்களுக்கு அவ்விதமான சட்டப்பாதுகாப்பினை அளிக்கவில்லை.

சரி, கட்டாயம் கிடையாது. காப்பீடு நிறுவனங்கள் தனியார் வாகனத்தில் பயணம் செய்யும் நபர்களுக்கு தனியே கட்டணம் (Premium) வாங்கி காப்பீடு அளிக்கலாமே என்றால், செய்யலாம்தான். ஆனால், என் அனுபவத்தில் எந்த காப்பீடு நிறுவனமும் அவ்விதம் கூடுதல் கட்டணம் வாங்கி பாதுகாப்பு அளிக்க முன் வருவதில்லை.

காரணம், கட்டணத்தை நிர்ணயிக்க திறன் இல்லை. இந்தியாவில் வாகன காப்பீட்டிற்கான கட்டணங்களை ஒழுங்குபடுத்துவதற்கு உள்ள அமைப்பினால் கட்டணங்கள் வரையறுக்கப்படுகின்றன. அவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்கள், சட்டத்தால் கட்டாயமாக்கப்பட்டுள்ள நபர்களுக்கு மட்டுமே உள்ளது. எனவே நீதிமன்றங்கள் அவ்வாறு கூடுதல் கட்டணம் வாங்கலாம் என்று கூறினாலும் காப்பீடு நிறுவனங்கள் வாங்குவதில்லை!

ஆனால் சமீபகாலங்களில், காப்பீடு நிறுவனங்கள் தனியார் வாகன பயணிகளுக்காக தனியே தனி நபர் காப்பீடு (Personal Accident Policy or PA) அளிக்கின்றன. சமீபத்தில் நான் எனது காரினை காப்பீடு செய்கையில் ஐந்து நபர்களுக்கு இவ்வாறு காப்பீடு அளித்தது. ஆனால், ஆபத்தினை தவிர்க்க இது போதாது. ஏனெனில் ஒவ்வொருவருக்கும் அதிக பட்சமாக காப்பீடு ஒரு லட்சம் வரைதான் வழங்கப்படும். மிஞ்சிய தொகையினை வாகன உரிமையாளர்தான் தர வேண்டும்!

அதுவும் பல சமயங்களில் வாகன உரிமையாளர் கட்ட வேண்டிய கட்டணத்தினை குறைத்து சொல்வதற்காக, காப்பீடு நிறுவன முகவர்கள் இந்த தனி நபர் காப்பீட்டினை சேர்ப்பதில்லை. வாகன உரிமையாளர்களும் ‘முழுமையான காப்பீடு’ என்ற பெயரில் மயங்கி ஆபத்தில் சிக்கிக் கொள்கின்றனர்.

அப்படியே தெரிந்தால் கூட பலர், எனக்கு விபத்து ஏற்ப்படாது என்ற இந்தியர்களுக்கேயுரிய அசட்டுத்தனமான நம்பிக்கையினால் தனி நபர் காப்பீடு கூட எடுப்பதில்லை.

எனவே, காப்பீடு இருந்தும், வாகனம் சட்டப்பிரகாரம் கையாளப்பட்டிருந்தும் ஆபத்து வாகன உரிமையாளரை தொடர்கிறது.....சற்றே ஆபத்திலிருந்து விலகியிருக்கும் ஒரு வழி நம்பிக்கையில்லையெனில், யாரையும் தங்களது காரிலோ அல்லது இரு சக்கர வாகனத்திலோ அழைத்துச் செல்லாமல் இருப்பது மட்டுமே!

to be continued...

குறிப்பு: இந்தியாவில் உள்நாட்டு விமான விபத்தில் ஏற்ப்படும் மரணத்திற்கு கூட அதிகபட்சம் ரூ.ஐந்து லட்சம்தான் இழப்பீடு வழங்கப்படுகிறது. ஆனால், மோட்டார் வாகன பயணிக்கு வானமே எல்லை!

13.1.07

பின் தொடரும் ஆ...பத்து! - 4

ஓட்டுநர் உரிமை (Driving License)

நாகராஜன், கன்னியாகுமரியில் காய்கறி வியாபாரி. காய்கறி வியாபாரத்தின் மூலம் கிடைத்த சொற்ப வருமானத்தில் ஏதோ குடும்பம் ஓடிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் படித்து முடித்த மகனுக்கு ஒரு வேலை கிடைத்தால், மகளுக்கு கலியாணத்தை நடத்தி முடித்து விடலாம் என்ற கனவில் இருப்பவர். செலவுக்கு சொந்தமாக உள்ள ஒரே வீட்டினை நம்பியிருக்கிறார். அந்த நம்பிக்கைக்கு இடியென வந்தது, அந்த வீட்டினை ஏலத்தில் விட வேண்டுமென்று நீதிமன்றத்தில் இருந்து வந்த நோட்டீஸ்!

விடயம் இதுதான். ஐந்து வருடங்களுக்கு முன்னர் நாகராஜன் ஒரு வாடகைக் கார் வைத்திருந்தார். ஒரு விபத்தில் கார் அப்பளமாக நொறுங்கி விட பயணி ஒருவர் மரணம். மரித்தவரின் வாரிசுகள் இழப்பீடு கேட்டு தாக்கல் செய்த வழக்கில் பங்கு பெற நாகராஜனுக்கு நீதிமன்றத்தில் இருந்து அழைப்பாணை (summons) வந்தது. அதுதான் வண்டியை காப்பீடு செய்திருக்கிறீர்களே, வழக்கினை அவர்களே பார்த்துக் கொள்வார்கள் என்று கூறப்பட அழைப்பாணையினை அலட்சியம் செய்தார் நாகராஜன்.

ஆனால், நீதிமன்றத்தில் காப்பீடு நிறுவனம் வண்டி ஓட்டுநருக்கு தகுந்த உரிமம் இல்லை என்று கூறி அதனை ஓரளவுக்கு நிரூபணம் செய்ய, நீதிமன்றம் காப்பீடு நிறுவனத்தை இழப்பீட்டினை அளித்து பின்னர் அதனை நாகராஜனிடம் வசூலித்துக் கொள்ள உத்தரவிட்டுள்ளது. எனவே, காப்பீடு நிறுவனம் சுமார் ஐந்து லட்ச ரூபாயினை நாகராஜனின் வீட்டினை விற்று தர வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு செய்துள்ளது.

வழக்கினை உயர்நீதிமன்றத்திற்கு எடுத்து வந்தார் நாகராஜன்.

“என்ன இது? தகுந்த உரிமம் இல்லாத ஓட்டுநரிடம் வண்டியினைக் கொடுத்ததற்க்கு, அவரது வாழ்வினையே குலைக்கும் அளவிற்கு இவ்வளவு பெரிய தண்டனையா?” என்று நீதிபதி வினவினார்.

“வேறு வழியில்லை! அவர் மீது பரிதாப்படுகிறேன். என்னால் இயலக்கூடியது அவ்வளவுதான்” என்றேன்.

இத்தனைக்கும் நாகராஜனின் ஓட்டுநரிடம் இலகு ரக வாகனம் (Light Motor Vehicle LMV) ஓட்டக்கூடிய உரிமம் உள்ளது. ஆனால், விபத்துக்குள்ளானது வாடகைக் கார். அதனை ஓட்டும் ஓட்டுநர் அவரது உரிமத்தில் அதற்கான முத்திரையினை (endorsement or badge) பெற வேண்டும். எனவே அவரிடம் இருந்தது தகுந்த உரிமம் இல்லை என்று கருதப்பட்டது.


***

காப்பீடு இருந்துமா இவ்வாறு என்றால், அப்படித்தான். வாகன காப்பீட்டினை கட்டாயப்படுத்தும் வாகன சட்டம், சில காரணங்களுக்காக காப்பீடு நிறுவனங்கள் காப்பீடு அளிக்க மறுக்கலாம் என்று கூறியுள்ளன. அவற்றில் ஒன்றுதான் தகுந்த உரிமம் இல்லாத நபர் வண்டியினை ஓட்டுதல்.

தற்பொழுது இக்கட்டுரையின் (முதல் பகுதியின்) ஆரம்பத்தில் கூறப்பட்ட சம்பவத்தைக் கவனியுங்கள். நம்மில் யாவருமே அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தில் ஈடுபட்டிருப்போம். மேலும், நான் உட்பட எனது நண்பர்கள் யாருமே, உரிமம் வாங்கியபின் இரு சக்கர வாகனங்கள் ஓட்டியவர்கள் அல்ல. அவ்வாறு உரிமம் இன்றி இரு சக்கர வாகனத்தை எடுத்துச் செல்கையில் ஏதாவது விபத்து ஏற்படுகிறது என்றால், இறுதியில் இழப்பீடு கொடுத்த காப்பீடு நிறுவனம் அதனை திரும்பிப் பெற உங்களிடம் வந்தால், உங்களது நிலை என்ன?

உதாரணமாக, நீங்கள் ஒரு வங்கியில் பெரிய அதிகாரியாக இருக்கிறீர்கள் என்றால், உங்களது சம்பளத்தின் கணிசமான பகுதியினை உங்களது ஓய்வு பெறும் காலம் வரை இழப்பீடாக செலுத்த வேண்டி வரும்.

இரு சக்கர வாகனம் மோதி மரணம் ஏற்ப்படாது என்பது இல்லை. எனது இரு வருட அனுபவத்தில் டிவிஎஸ் மொபெட் மோதி மரணம் சம்பவித்த இரு வழக்குகளை சந்தித்திருக்கிறேன்!


***

சில வருடங்களுக்கு முன்பு வரை, உரிமம் இல்லாதிருப்பின் நீதிமன்றங்கள் பாதிக்கப்பட்டவரை நேரிடையாக இழப்பீட்டினை வாகன உரிமையாளரிடம் வாங்கிக் கொள்ள உத்தரவிடுவார்கள். அப்பொழுது கூட அவ்வளவு பிரச்னையில்லை. பாதிக்கப்பட்டவர்கள் வாகன உரிமையாளரை தேடி அவர் மீது உத்தரவினை செயல்படுத்த சிரமப்பட்டு அப்படியே விட்டுவிடுவார்கள்.

ஆனால், தற்பொழுது உச்ச நீதிமன்றம் ‘உரிமம்’ சம்பந்தப்பட்ட பிரச்னையினை தீர ஆராய்ந்து காப்பீட்டு விதிகளை (Policy Conditions) வாகன உரிமையாளர் மீறுவதால், பாதிக்கப்படும் மூன்றாவது நபர் பாதிக்கப்படக் கூடாது என்று கூறி, இவ்வாறு காப்பீடு நிறுவனம் அந்த இழப்பீட்டினை அளித்து வாகன உரிமையாளரிடம் அதனை பெற்றுக் கொள்வதை சட்டமாக உறுதிப்படுத்தியுள்ளது. எனவே, காப்பீட்டு நிறுவனங்கள் தங்களது நிறுவன பலத்தினை வைத்து வாகன உரிமையாளர்கள் மீது தங்களது கவனத்தை செலுத்துகின்றன!

எனவே, இதுவரை மோட்டார் வாகன நீதிமன்றங்களில் (Motor Accidents Claims Tribunal) நாகராஜனைப் போல நமக்கு ஏதும் வராது என்று வராமலேயே இருந்து (exparte) வந்த பல வாகன உரிமையாளர்கள் உயர் நீதிமன்றத்தின் கதவினை தட்ட ஆரம்பித்துள்ளார்கள். இந்த நிலை யாருக்கும் வர வாய்ப்பு உள்ளது.


***

மேலே கூறப்பட்ட உரிமம் குறித்தான உச்ச நீதிமன்ற தீர்ப்பு வாகன உரிமையாளர்களுக்கு பல பாதுகாப்புகளை வழங்கியுள்ளது. அதாவது, வாகன உரிமையாளர் தெரிந்தே இவ்வாறு வாகனத்தை உரிமம் இல்லாத நபரிடம் கொடுத்தார் என்பதை காப்பீடு நிறுவனங்கள் நிரூபிக்க வேண்டும் என்று கூறுகிறது. ஆனால், பின்னர் வந்த தீர்ப்பில் இது வலியுறுத்தப்படவில்லை. எனினும், ஏன் வம்பு?


***

மேலும் சில மீறக்கூடாத விதிகள் உண்டு என்றாலும், முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டியவை இரண்டு. அதாவது, இரு சக்கர வாகனத்தில் பக்க வண்டியை (side car) இணைப்பது மற்றும் தனியார் உபயோகத்திற்கான வண்டியை வாடகைக்கு விடுவது. எனவே, இந்த வகையான செயல்கள் கூடாது என்று கூறப்பட்டிருக்கிறதா என்று உங்களது வாகன காப்பீட்டினை கவனமாக படித்துப்பாருங்கள்.

எப்படியோ அதி முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியது, உங்கள் வாகன ஓட்டிக்கு தகுந்த உரிமம் இருக்கிறதா என்பதை சரி பார்ப்பதே!

to be continued...


குறிப்பு : ஒரு காப்பீடு நிறுவனம், ‘தனது மோட்டார் பைக் காணாமல் போய்விட்டது. காப்பீடு வேண்டும்’ என்று ஒருவர் கோரியுள்ளதாகவும், அவர் ஒரு பார்வையற்றவர் என்பதால் அவரிடம் உரிமம் இல்லை என்று கூறி அதனை நிராகரிக்க முடியுமா என்று ஆலோசனை கேட்டது.

‘அய்யா, வண்டி ஓட்டிக்குத்தான் உரிமம் தேவையே தவிர உரிமையாளருக்கு அல்ல, மேலும் வண்டி காணாமல் போவதற்கும் உரிமத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்’ என்று பதில் எழுதினேன்.

12.1.07

பின் தொடரும் ஆ...பத்து! - 3

வாகன காப்பீடு

வாகன காப்பீடுகளும் மற்ற காப்பீடுகளைப் போலவே என்றாலும், முக்கியமான ஒரு வித்தியாசம் உள்ளது. மற்ற காப்பீடுகளில் காப்பீட்டின் பலன் சென்று சேர்வது காப்பீடு செய்தவருக்கு அல்லது அவரது வாரிசுகளுக்கு. உதாரணமாக மருத்து காப்பீட்டின் பலன் காப்பீடு செய்தவருக்கும், ஆயுள் காப்பீட்டின் பலன் அவரது வாரிசுகளுக்கும் கிடைக்கும்.

ஆனால் வாகன காப்பீட்டின் பலன் இறுதியில் சென்று சேர்வது விபத்தில் காயமடையும் சம்பந்தமில்லாத மூன்றாவது நபர். எனவே இவ்வாறு மூன்றாவது நபர்களுக்காக காப்பீடு செய்வதில் வாகன உரிமையாளர்களுக்கு ஆர்வம் இருப்பதில்லை. எனவே வாகன காப்பீடானது கட்டாயமான ஒரு விஷயம்...அதாவது எந்த ஒரு வாகனமும் காப்பீடு செய்யப்படாமல் பயன்படுத்துதல் கூடாது.

அடுத்த ஒரு முக்கியமான விஷயம், வாகன காப்பீட்டினைப் பொறுத்து அதற்காக எவ்வளவு கட்டணம் (premium) செலுத்தப்பட்டிருந்தாலும் சிலரைப் பொறுத்தவரை கண்டிப்பாக காப்பீடு அளிக்கப்பட வேண்டும் என்ற சட்டப்படியான கட்டாயம் உண்டு. இந்த வகையான காப்பீடுகளை மூன்றாம் நபர் காப்பீடு (A Policy or Act Policy or commonly as Third Party Policy) என்று அழைக்கிறார்கள்.

உதாரணமாக பேருந்து, டாக்ஸி, ஆட்டோ போன்ற வாடகை வண்டிகளில் (Public Service Vehicles) பயணம் செய்யும் அனைத்து பயணிகளும் அவர்களுக்கு அளிக்க வேண்டிய இழப்பீடு, அது எத்தனை கோடியானாலும் சரி, அந்த வண்டிக்கு காப்பீடு என்று ஒன்று இருந்தால் கண்டிப்பாக காப்பீடு நிறுவனமே அளிக்க வேண்டும்.

இவ்வாறு ஏறக்குறைய அனைத்து நபர்களுக்கும் கட்டாயமாக காப்பீடு செய்யப்பட்டிருக்க வேண்டுமானாலும், சில நபர்களைப் பொறுத்தவரை கட்டாயமல்ல. அப்படிப்பட்டவர்களுக்கு வாகன உரிமையாளரே இழப்பீடு வழங்க வேண்டும். இங்குதான் முதலில் எச்சரித்த ஆபத்துகளில், முக்கியமான ஆபத்து உள்ளது.

மேலும் சில ஆபத்துகள் உள்ளன...அவற்றை வாகன உரிமையாளர் ஒவ்வொருவரும் அறிந்திருந்தல் அவசியம்!

to be continued...

குறிப்பு : எனது முந்தைய பதிவுகளில் பாவத்தின் சம்பளம் என்ற தலைப்பில் மோட்டார் இன்ஸுரன்ஸ் குறித்து முக்கியமான சில விபரங்களை எழுதியுருக்கிறேன். சுவராசியமான பதிவு என்பதை விட வாகன காப்பீடு குறித்த அதிக புரிதல்களுக்கு அது உதவும் என நம்புகிறேன்.

11.1.07

பின் தொடரும் ஆ...பத்து! - 2

வாகன விபத்து இழப்பீடு

வாகன சட்டமானது (Motor Vehicle Act) இந்தியாவில் முதன் முதலில் 1939ம் ஆண்டு இயற்றப்பட்டு பின்னர் 1988ம் ஆண்டு புதிய சட்டமாக மீண்டும் இயற்றப்பட்டது. 1994ம் ஆண்டு முக்கியமான சில மாறுதல்கள் கொண்டு வரப்பட்டன. மோட்டார் வாகனம் குறித்த பல நிகழ்வுகளுக்கான சட்டமாக இது இருப்பினும், வாகன விபத்துகளால் ஏற்ப்படும் இழப்பீடு குறித்தும் உள்ள சில பிரிவுகள் முக்கியமானவை.

சுருக்கமாக கூறினால், இந்த சட்ட பிரிவுகளின்படி ஒரு வாகனத்தினை பயன்படுத்துவதன் மூலம், யாருக்கும் உடற்காயமோ, மரணமோ அல்லது பொருட் சேதமோ ஏற்ப்பட்டால் அந்த மோட்டார் வாகனத்தின் உரிமையாளர் அல்லது வாகனத்தின் காப்பீடுதாரர் (Insurer) தகுந்த நஷ்ட ஈட்டினை வழங்க வேண்டும்.

இழப்பீட்டின் அளவானது, உதாரணமாக ஒருவருக்கு மரணம் சம்பவித்தால் அவரது வயது, சம்பாத்தியம் மற்றும் சில சமயங்களில் அவரை சார்ந்திருக்கும் நபர்களை வைத்து கணக்கிடப்படுகிறது. அமெரிக்காவில் மருத்துவராக பணியாற்றும் ஒரு இந்தியருக்கு ஏற்ப்பட்ட மரணத்திற்கான இழப்பீடு சுமார் பத்து கோடி இந்திய ரூபாய்களை எட்டி விட்டதிலிருந்து, இங்கு வழங்கப்படும் இழப்பீட்டின் அளவினை புரிந்து கொள்ளலாம். சமீபத்திய தீர்ப்புகளின் படி சிறு குழந்தைக்கான மரணத்திற்கான நஷ்ட ஈடானது இரண்டு லட்சம் ரூபாயினையும் தாண்டிச் செல்கிறது.

காயம் ஏற்ப்படுகையிலோ, அவரது முழுமையான மருத்துவச் செலவு முதற்கொண்டு காயத்தின் தன்மையால், அவரது வேலை செய்யும் திறன் பாதிக்கப்படும் அளவு வரை பல்வேறு காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது. தண்டுவடத்தில் ஏற்ப்படும் காயத்தால், முழு இயக்கமும் அற்றுப் போனவர்களுக்கான நஷ்ட ஈடு சில சமயங்களில் ஐம்பது லட்சத்தினை தாண்டுகிறது.

முக்கியமாக கவனிக்க வேண்டியது, இழப்பீட்டினை வழங்க வேண்டியது தவறு செய்யும் வாகன ஓட்டியல்ல. மாறாக, வாகனத்தின் உரிமையாளர்!

விபத்தினால் காயமுற்றவர்களை, இவ்வாறு வாகன உரிமையாளரிடம் நஷ்ட ஈட்டினை வாங்குமாறு பணிப்பது சரியா? எனவேதான் வாகன காப்பீடு!

பின் தொடரும் ஆ...பத்து! - 1

முன்னுரை

“மாமா, யமாஹா பைக் புதுசா? பிரமாதமா இருக்கே?”
“ஆமாம், ஓட்டிப் பார்க்கிறாயா? அப்படியே ‘ஜிவ்’னு பறக்கிற மாதிரி இருக்கும்”

***
“ஹாய், தினேஷ் இங்க எங்க நிக்கிறே! வா, காருல ஏறு”
“ரொம்ப தாங்ஸ்டா, பாண்டி பஜாரில் இறக்கி விடு போதும்”

***
“நமக்கு யார் கிட்டயும் கை கட்டி சம்பளம் வாங்குறதெல்லாம் பிடிக்காது. இரண்டு லாரியோட தொழிலை ஆரம்பித்தேன்...இப்ப இருபது லாரியா பெருகிப் போச்சு! இன்றைக்கு ஆயுத பூஜையாச்சா? அதான், கிராமத்திலிருக்கிற எல்லாரையும் லாரியில அள்ளிப்போட்டுகிட்டு மலைக்கோயிலுக்கு போய்க்கிட்டு இருக்கேன், நீயும் வருகிறாயா?”

***
இவை சாதாரணமாக, நமது தினசரி வாழ்க்கையில் கேட்கக்கூடிய வார்த்தைகள்தான், நிகழக்கூடிய சம்பவங்கள்தான்! ஆனால், இதற்குப் பின்னர், யாரும் தனது வாழ்நாட்கள் முழுவதும் ஓடி ஓடிச் சம்பாதித்த செல்வங்கள் அனைத்தையும் இழக்கக்கூடிய அபாயம் இருப்பது தெரியுமா?

இந்த ஆபத்தினை புரிந்து கொள்ள, நம்மில் அனைவருமே இயந்திர வாகன விபத்துகளினால் (Motor Vehicle Accident) ஏற்ப்படும் உடற்காயம் அல்லது மரணம் போன்ற இழப்புகளுக்காக அளிக்கப்பட வேண்டிய இழப்பீடு (Compensation) குறித்தும், அவற்றை அளிக்கும் பொறுப்பினை ஏற்க்கும் காப்பீடுகள் (Insurance) குறித்தும் அறிந்திருத்தல் அவசியம்.

ஏதோ சட்டம் பற்றிய ஒரு கட்டுரையினை எழுதுகிறோம் என்ற அளவில் இல்லாமல், நம்மில் பலரையும் பின் தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு ஆபத்தினைப் பற்றி கூடுமானவரை சிலருக்காவது எடுத்துக் காட்டி, அந்த ஆபத்திலிருந்து தற்காத்துக் கொள்ள வகை செய்ய வேண்டும் என்று வெகுநாட்களாக நான் கொண்டிருக்கும் ஆதங்கத்தின் வெளிப்பாடே இந்தப் பதிவு!

இந்த ஆபத்துகளைப் பற்றி நம்மில் பலர் அறியாமல் இருக்கிறோம் என்று கூற நான் தைரியம் கொண்டது, வாகன காப்பீடு கழகங்களுக்காக வழக்கு நடத்தும், கடந்த இரு வருட காலத்தில்தான் நானும், இவற்றை பற்றி முழுமையாக அறிந்து கொண்டது, மற்றும் வாகன இழப்பீடு வழக்குகளில் முக்கியமான சில தீர்ப்புகள், சமீப காலத்தில் வழங்கப்பட்டதாலுமே!

to be continued...