12.9.10

படித்தவன் சூதும் வாதும் பண்ணினால்...

செய்தித்தாள்களில் அடிக்கடி புதிது புதிதாக எதையாவது கண்டுபிடித்த விவசாயி, மெக்கானிக், மாணவர் என்று செய்தி வரும். அவற்றைப் படிக்கும் பொழுதெல்லாம், ‘தொலைக்காட்சி ரிமோட் தொலைந்து போனால் அதனைக் கண்டுபிடிக்கும் கருவியை யாராவது கண்டுபிடிக்கக் கூடாதா’ என்று தோன்றும்.


ஏனென்றால், எங்கள் வீட்டில் ரிமோட் சோபா இடுக்கில் இருந்து, சமையலறை மசாலா சாமான்களுக்கு இடையில் என்பது வரை எங்கிருந்து வேண்டுமானாலும் கிடைக்கும். எப்பொழுதும் தேடிக் கண்டுபிடித்ததில்லை. இரண்டு நாட்கள் கண்ணாமூச்சி ஆடிய பிறகு, வேறு எதையோ தேடும் பொழுது ‘போதும் இந்த விளையாட்டு’ என்று அதுவாகவே வெளிப்படும்.


அதாவது பரவாயில்லை, தொலைக்காட்சியை போட்டுவிட்டு சோபாவில் சாய்ந்த பிறகுதான், ரிமோட்டை தொலைக்காட்சி அருகிலேயே வைத்து விட்டு வந்தது புரியும். அந்த மாதிரி சந்தர்ப்பங்களில், ‘தொலைக்காட்சிக்கு அருகிலிருக்கும் ரிமோட்டை சோபாவிலிருந்தபடியே இயக்கும் ஒரு ரிமோட் கண்டுபிடித்தால் நன்றாக இருக்குமே’ என்றும் தோன்றுவதுண்டு!


‘இந்த தொல்லை எல்லாம் வேண்டாமே’ என்று தொலைக்காட்சியினை நிறுத்தி விட்டால், நேற்றிலிருந்து எனது கைப்பேசியை காணவில்லை. வீட்டிற்குள்ளாகத்தான், ஒரு அரைமணி நேரத்தில் காணாமல் போய்விட்டது. அடிக்கடி எங்காவது மறந்து வைத்துவிடுகிறேன் என்பதற்காகத்தான் இருப்பதிலேயே குறைந்த விலையில் கிடைக்கும் கைப்பேசியை வாங்குவது. ஆனால், கைப்பேசி தொலைந்து போனால் கண்டுபிடிக்கும் கருவி கிடைத்தால் உடனே வாங்கி விடத் தயாராக இருக்கிறேன். அதற்காகவாவது, யாராவது அதனை கண்டுபிடிக்கலாம்.


அல்லது, ஒரே எண் உள்ள இரு சிம்கார்டுகளை கண்டுபிடிக்க தொலைபேசி நிறுவனங்களை கேட்டுக் கொள்ள வேண்டும்.


-oOo-


ஆனாலும், தொலைந்து போவதற்கு முன்பு அந்தக் கைப்பேசி ஒரு சிறு உபகாரம் செய்து விட்டுப் போயிருக்கிறது. எனக்கு ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண் கட்சிக்காரர் உண்டு. அவரது அலுவலகத்தில் பதவி உயர்வு சம்பந்தமாக வழக்கு. வழக்கு சாதகமான நல்ல வழக்கு என்றாலும் நீதிபதிகள் பற்றாக்குறை இருப்பதால், வழக்கினை விசாரணைக்கு கொண்டு வர இயலவில்லை. அடிக்கடி தொடர்பு கொண்டு அழாத குறையாக புலம்பி எடுப்பார்கள். அவர்களிடம் இருந்து தொலைபேசி வந்தாலே எனக்கு பயம் வந்து விடும்.


முதன் முதலில் வழக்கையும், கட்டணத்தையும் அளிக்க வரும் பொழுது தேவதூதர்களாக காட்சியளிக்கும் கட்சிக்காரர்களின் முகம் நாளாக நாளாக அரக்கர்களைப் போல மாறிவிடும்!


அதனாலேயே நேற்று அந்த பெண்மணியிடமிருந்து குறுஞ்செய்தி வந்ததும் கிலி பிடித்தது. ஆனாலும் ஒரு நிம்மதி, குறுஞ்செய்திதானே என்று. அந்த நிம்மதி வெகுநேரம் நீடிக்கவில்லை. பின்னர் ‘Neengalthan en suvasam, ennam saappadu ellame’ என்று இருந்தால்...


ஆயினும், அந்தப் பெண்ணின் உருவத்திற்கும், அதீதமாக வெளிப்பட்டிருந்த காதலுணர்வுக்கும் என்னால் சம்பந்தப்படுத்த இயலாதலால், அவர்கள் வீட்டில் யாரோ ஒரு சிறு பெண் யாருக்கோ பதட்டத்தில் அனுப்பிய குறுஞ்செய்தி வழிதவறியதாகவே நினைத்தேன்.


கொஞ்ச நேரத்தில் மற்றொரு செய்தி ‘sir, sorry earlier message mistakenly sent’ என்று.


பின்னர்தான் புரிந்தது, ‘இனி அந்த அம்மாள் எப்படியும் என்னை அடுத்த ஒரு மாதத்திற்காகவாவது தொடர்பு கொள்ள மாட்டார்கள்’ என்று. ‘அட! இப்படிக் கூட ஒரு சாத்தியக் கூறு உள்ளதா’ என்று குஷியாக இருந்தது.


-oOo-


போனவாரம் ஞாநி எங்களது சங்கத்தில் பேச அழைக்கப்பட்டிருந்தார். ‘படித்தவன் சூதும் வாதும் பண்ணினால்...’ என்பது தலைப்பு. சிறு அறிவிப்பு ஒன்றினை நகலெடுத்து ஆங்காங்கே ஒட்டியிருந்தார்கள். யாரோ ஒரு குறும்புக்கார வழக்குரைஞர் பேனாவில், படித்தவனுக்கு முன்னால் BL என்று எழுதி கீழே ‘ஜட்ஜ் ஆவான்’ என்று எழுதியிருந்தார்.


நான் கூட்டத்திற்கு போகவில்லை. கூட்டத்தில் பேசிய வழக்குரைஞர் ஒருவர் இதனை தனது பேச்சில் குறிப்பிட்ட பொழுது பெரிய கரகோஷமாம்!


எழுதியது யார் என்று எனக்குத் தெரியும். ஆனால் கூற மாட்டேன். சிரிக்கத் தெரியாத சில நீதிபதிகள் இருக்கின்றனர்...


-oOo-

வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என்று நான்கு நாட்கள் நீதிமன்றம் விடுமுறை. இம்மாதிரி விடுமுறை வரும் பொழுது எல்லாம், தேங்கிக் கிடக்கும் பல வேலைகளை முடித்து விட வேண்டும் என்ற உத்வேகம் பிறக்கும். கடைசி நாள் பார்த்தால், அப்படியேதான் இருக்கும்.


நாளை மீண்டும் நீதிமன்றம். ஏதோ சூன்யம் நிறைந்தது போல உள்ளது. இந்த மாதிரி தொடர் விடுமுறைகளுக்குப் பின்னர் மீண்டும் வேலை தொடங்கும் நாளும் கண்டிப்பாக விடுமுறையாக இருத்தல் வேண்டும். அடுத்த முறை நீதிமன்ற புறக்கணிப்பிற்காக, வழக்குரைஞர்கள் காரணம் தேடும் பொழுது இந்தச் சிறு கோரிக்கையையும் சேர்த்து விட வேண்டும்.


மதுரை
12/09/10