18.5.11

‘எண்ணைத் தொட்டி’யின் விஞ்ஞானம்...



தமிழக தலைமைச் செயலகம் மீண்டும் கோட்டைக்கு மாற்றப்படுவதை எதிர்த்தும் ஒரு பொதுநல வழக்கு!  



புதிதாக மக்களின் ஏகோபித்த ஆதரவோடு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரின் விருப்பத்திற்கு மாறாக இறுதி நீதிமன்ற ஆணை எதுவும் வரப்போவதில்லை. தலைமைச் செயலகம் எங்கு செயல்பட வேண்டும் என்பது எல்லாம், நிர்வாகம் (Executive) எடுக்க வேண்டிய ஒரு முடிவு. பொதுமக்களின் அடிப்படை உரிமை பாதிக்கப்படாத வரையில் நீதிமன்றங்கள் அந்த முடிவில் தலையிடாது.



எனவே இந்த வழக்கும் அரசுத் தரப்பில் விளக்கம் தரப்பட்டவுடன் முடித்து வைக்கப்படும். உயர்நீதிமன்றம் தற்பொழுது கேட்டுள்ள விளக்கமும், ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்காத சூழ்நிலையில், யாருடைய உத்தரவின் பெயரில் தலைமைச் செயலகம் மாற்றப்பட்டது எனபது குறித்துதான் என நினைக்கிறேன். முதல்வர் தற்பொழுது ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவை ஏற்றுக் கொண்டு (Ratify) புதிதாக ஒரு அரசாணை பிற்ப்பித்து விட்டால் பிரச்னை தீர்ந்துவிடும்.

***



தலைமைச் செயலகத்தை மாற்றுவதற்கு புதிய முதல்வருக்கு அதிகாரம் இருப்பது போலவே, தமிழக அரசின் தலைமைச் செயலகத்திற்காக எப்படிப்பட்ட வடிவமைப்பை தேர்ந்தெடுப்பது என்ற அதிகாரம் முன்னாள் முதல்வருக்கும் இருந்தது.



அழகு என்பது பார்ப்பவரின் கண்களில் உள்ளது. சிலருக்கு ஒரு வடிவம் பிடிக்கவில்லை என்பதற்காக, பெரும்பான்மை தனது விருப்பத்தை மாற்றிக் கொள்ள வேண்டுமென்பதல்ல. அந்த வடிவத்தை விமர்சிக்க யாருக்கும் உரிமை உள்ளது. ஆனால், நிராகரிக்க உரிமை இல்லை!



ஆள்பவர்களின் ரசனைக்கேற்ப அமையும் கட்டிடங்கள், ஆண்டவர்களின் மனப்போக்கை விளக்கும் கண்ணாடிகள். நமது சந்ததிகள், இவற்றின் மீதான தீர்ப்பினை எழுதட்டும்.

***


ஆனால், தமிழ்பதிவுலகத்திலோ, (பழைய) தலைமைச் செயலகம் எண்ணைத் தொட்டி என கிண்டலடிக்கப்படுகிறது. நியாயம்தான். ஆனால், வட்ட வடிவ கட்டிடம் வாஸ்து படி சரியல்ல என்றும் சொல்லப்படுவதும்தான் அதீதமாக படுகிறது.



சில வருடங்களுக்கும் முன்பு கூட ஏதோ ஒரு வாஸ்து நிபுணர்(?) இந்திய பாராளுமன்ற கட்டிடம் வட்ட வடிவில் கட்டப்பட்டதுதான், இந்திய மக்களாட்சியில் நிலவும் அனைத்து குழப்பங்களுக்கும் காரணம் என்று கூறியதை படிக்க நேர்ந்தது. உடனடியாக எனக்கு அப்பொழுது நினைவுக்கு வந்த ஒரு விடயம்தான், தற்பொழுதும் நினவுக்கு வருகிறது.





பல்வேறு வர்த்தக நிறுவனங்களின் கட்டிடங்கள் வட்ட வடிவில் கட்டப்படுகின்றன. வாஸ்து நிபுணர்களை(!) நம்பினால் அடுத்த முறை பங்குப்பத்திரம் வாங்கும் முன், அந்த நிறுவனத்தின் கட்டிடங்கள் என்ன வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது என்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.



அப்படியாயின், எண்ணைக் கம்பெனிகளின் பங்கு, அதோகதிதான்...



மதுரை
19/05/11

11.5.11

இனி (Hereafter 2010)



ஹியராஃப்டர் (Hereafter). கிளிண்ட் ஈஸ்ட்வுட் இயக்கத்தில் மாட் டாமன் நடித்து வெளிவந்திருக்கும் ஹாலிவுட் திரைப்படம். NDE என்று அழைக்கப்படும் மரணத்தின் வாயிலை எட்டிப்பார்த்து வருபவர்கள் தங்களுக்கு நிகழ்ந்ததாக கூறும் அனுபவங்கள் மற்றும் இறந்தவர்களுடன் உரையாடும் சக்தி படைத்தவர்களைப் (Psychic) பற்றிய படம். உலகின் வெவ்வேறு மூலையில் உள்ள மூன்று காதாபாத்திரங்கள் எப்படி உச்சகாட்சியில் (Climax) ஒருவரையொருவர் சந்திக்க நேர்வதன் மூலம் தங்கள் வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்ந்து கொள்கிறார்கள் என்பதுதான் கதை!

மற்றபடி சுவராசியமான எவ்விதமான திருப்பமோ, காட்சிகளோ இல்லை. உச்சகாட்சி கூட சாதாரணமாக் முடிந்து விடுகிறது. என்றாலும், இறுதிவரை இனி சுவராசியமாக ஏதோ நடக்கப் போகிறது என்ற ரீதியில் படத்தோடு நம்மை ஒன்ற வைத்ததில் இயக்குஞரின் திறமை வெளிப்படுகிறது.

இந்தப் படத்தினைப் பற்றி நான் எழுத முக்கிய காரணம், அதன் முதல் ஐந்து நிமிடங்களில் வரும் சுனாமி காட்சி!

எப்படித்தான் எடுத்தார்களோ என்று நம்பவே முடியாத அளவில் மினியேச்சரும், கிராபிக்ஸும் இணைந்து பிரமாண்டமாக அத்தனை தத்ரூபமாக் அமைந்துள்ளது. இந்தப் படத்தில் வருவது, நமது இந்தியாவையும் தாக்கிய பழைய சுனாமி. சமீபத்தில் ஜப்பானை தாக்கிய சுனாமி பற்றிய படத்தொகுப்பினை இணையத்தில் பார்த்தேன். நிஜத்திற்கும் நிழலுக்கும் வித்தியாசமே இல்லை. நமது ரசிகர்கள் பலர், ‘அந்தப் பாடல் காட்சிக்கே காசு செத்துதுஎன்று பேசக் கேட்டிருக்கிறேன். படத்தின் சுனாமி காட்சி முடிந்ததும் எனக்கு அப்படித்தான் தோன்றியது.

***

ஆனால் ஹாலிவுட்டுக்கு முன்னரே, நமது கமலஹாசன் சுனாமியை காட்சிப்படுத்த நினைத்த துணிச்சலை பாராட்ட வேண்டும். ஏதோ, அவரது செலவுக்குள் ஓரளவு எடுத்திருந்தார். மிகவும் மெனக்கெட்டிருப்பார் என்றாலும், அந்தக் காட்சி அவர் நினைத்த அளவிற்கு விமர்ச்னங்களில் சிலாகிக்கப்படவில்லை என்று நினைக்கிறேன்.

எப்படியோ, வழக்கமாக ஹாலிவுட்டை நமது திரைப்படத்துறையினர் தொடரும் பொழுது, கமலஹாசன் முந்திக் கொண்டது ஆறுதலளிக்கும் விடயம்.

பிரமாண்டங்களை, அதற்க்கான வகையில் செலவளிக்க வசதியுள்ள ஹாலிவுட்காரர்களிடம் தள்ளிவிட்டு விட்டு நம்மவர்கள் ‘அழகர்சாமியின் குதிரை’ என்று எடுப்பது நலம்.

***

ஆனாலும் சில சமயங்களில் நம்மவர்கள் பிரமாண்டத்தில் ஹாலிவுட்டையும் மிஞ்சி விடுவதுண்டு. எந்திரனில்!

ஹாலிவுட் படங்களுக்கு இணையான தொழில்நுட்பம் என்று எந்திரன் விளம்பரப்படுத்தப்பட்ட பொழுது, ‘300 கோடியில் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக படமெடுக்க முடியுமென்றால், அந்த முட்டாள்கள் ஏன் 3000 கோடி செலவளிக்க வேண்டும்என்று நினைத்தேன்.

ஆனால் ‘The Yes Men Fix the World (2009)என்ற படத்தினைப் பார்த்த பொழுது, ‘அடடா இத்தனை அமெச்சூராக உள்ள ஒரு காட்சி, எந்திரனில் எவ்வளவு பிரமாண்டமாக எடுத்துள்ளனர்என்று நினைத்தேன். இந்த ஆமாம் சாமி எனப்படுவோர் பெரிய தொழில் நிறுவனஙகள் எப்படி சந்தைப் பொருளாதாரம் என்ற பெயரில் மக்களை சுரண்டுகின்றன என்பதை வெளிப்படுத்துகிறோம் என்ற பெயரில் அடிக்கும் கூத்துகளின் தொகுப்புதான் இந்தப் படம்.



கூத்துகள் என்றால் சாதாரண கூத்துகள் என்று நினைத்து விடாதீர்கள். ’டெள கெமிக்கல்ஸ் பேச்சாளர்’ (Spokesperson for the Dow Chemicals) என்று பிபிசி (BBC) யே ஏமாற்றி போபால் விபத்து வருடாந்திர நினைவு தினம் ஒன்றில், பிபிசியின் சர்வதேச செய்தி சானலில் தோன்றி, ’டெள கெமிக்கல்ஸ் போபால் விசவாயு விபத்துக்கு பொறுப்பேற்பதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் போதிய நஷ்ட ஈடு வழங்க முடிவெடுதுள்ளதாக’ அறிவித்து உலகை உலுக்கிய கூத்து! இந்தக் கூத்தினை கண்டுபிடித்து டெள கெமிக்கலஸ் விளக்கமளிக்கும் சில மணி நேரத்திற்குள் டெள கெமிக்கல்ஸின் பங்குகள் 2 பில்லியன் டாலர்கள் வீழ்ச்சியடைந்து விட்டது. ’பிபிசி’ யின் நூற்றாண்டு கால சரித்திரத்தில் வேறு யாரிடமும் இந்த அளவிற்கு ஏமாந்திருக்காது...

சரி, அது என்ன இதை விட எந்திரனில் சிறப்பாக எடுத்திருந்தார்கள்?



அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹாலிபர்ட்டன் நிறுவன நிர்வாகிகள் போல, அந்த நிறுவனம் சர்வைவர் பால் (Survivor Ball) என்ற பலூன் போன்ற ஒன்றினை தயாரித்திருப்பதாகவும், தட்பவெப்ப நிலை மாறுதல்களினால் (Climatic Change) பேரழிவுகள் ஏற்ப்படும் பொழுது  அதனை அணிந்து கொண்டால், தப்பித்துவிடலாம் என்றும் ஒரு கண்காட்சியில் செய்முறை விளக்கம் காண்பித்து, ஏமாற்றியது அடுத்த கூத்து.

அதோடு விடாமல், எப்படி பெரிய இயற்கைப் பேரழிவுக்ள் ஏற்ப்படும் பொழுது எப்படி அந்தப் பந்தினை அணிந்த மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் தங்களை இணைத்துக் கொண்டு ராட்சத மனித உருவம் போல மாறி எங்கும் உலா வர முடியும், ஏன் நடனமாடக் கூட முடியும் என்று காட்டுவதற்கு ஒரு கிராபிக்ஸ் விளக்கப்படம் வேறு!

இப்பொழுது புரிந்திருக்குமே, எனக்கு அந்த விளக்கப்படத்தினைப் பார்த்த பொழுது, எந்திரனின் உச்சகாட்சி நினைவுக்கு வந்திருக்கும் என்பது.

‘ஆனால், பிரமாண்டமான பன்னாட்டு நிறுவனங்களின் மறுபக்கத்தை புரட்டிக் காண்பிக்கும் கூத்துகள், அதுவும் போபாலில் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்காக இந்த ‘ஆமாம் சாமிகள் எடுத்த ரிஸ்க்கான முயற்சிக்காகவாவது, நம்மவர்கள் இதனைப் பார்க்க வேண்டும்

தரவிறக்கம் செய்யவும் தயங்க வேண்டாம். ஏனெனில் அமெரிக்க வர்த்தக மையம் (American Chamber of Commerce) இவர்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளதால், இணையம் மூலம் படத்தினை அனைவருக்கும் கொண்டு செல்லுமாறு அவர்களே வேண்டுகின்றனர்.

நீங்களும் அவசியம் பாருங்கள்....

மதுரை
12/05/11

10.5.11

சாய்பாபா எழுதிய ஹேபியஸ் கார்பஸ் தீர்ப்பு!

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு் நீதிபதி இருந்தார். குற்றவியல் வழக்குகளில் பழுத்த அனுபவமும், சிறந்த அறிவும் உடையவர். வாதப்பிரதிவாதங்கள் முடிந்தவுடனே, அதே வேகத்தில் தீர்ப்பினை டிக்டேட் செய்ய ஆரம்பித்து விடுவார். அனால், தீர்ப்பினை முடித்த கையோடு ‘God is Great’ என்றபடி கடவுள் மீது பாரத்தை போடுவார்.

‘இதெல்லாம் நான் சொல்லவில்லை. மேலேயிருந்து வருது என்று மேலே கையை காண்பித்தபடி வழக்குரைஞர்களுக்கு நினைவூட்டியபடி இருப்பார்.

ஒருநாள் எனது சீனியர், ‘பேசாம இனிமே இவர் சம்பளத்தை லார்ட் முருகனுக்கே அனுப்ப சொல்ல வேண்டும். அவர்தானே தீர்ப்பு சொல்றார்என்றார்.

எனது சீனியர் கூறுவதுபடி பார்த்தால், பல நீதிபதிகளின் சம்பளத்தையும் மேலேதான் அனுப்ப வேண்டும் என நினைக்கிறேன். போன வாரம் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.என்.பகவதி ‘என்னுடைய ஒவ்வொரு தீர்ப்பினையும் எனது கடவுள் சாய்பாபாதான் எழுதினார்என்று டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

பி.என்.பகவதி பொதுநல வழக்கு சம்பந்தமான அவரது பல்வேறு புரட்சிகரமான தீர்ப்புகளுக்காக கொண்டாடப்பட்டாலும், பல சட்ட நிபுணர்களுக்கு பகவதி என்றவுடனே ஏ.டி.எம்.ஜபல்பூர் வழக்குதான் நினைவுக்கு வரும்.

***

1975ம் ஆண்டு. பிரதமர் இந்திரா காந்தி,  அவசரநிலை பிரகடனம் செய்தார். தொடர்ந்து மிசா ( Maintenance of Internal Security Act) என்ற சட்டத்தின் மூலம் தகுந்த காரணமேயில்லாமல் பல்வேறு அரசியல் தலைவர்கள், பத்திரிக்கையாளர்களை, சமூக ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். மிசா சட்டத்தின் கீழ் பிணை (Bail) கிடையாது என்பதால், அவர்களை விடுவிக்க நாட்டின் பல்வேறு உயர்நீதிமன்றங்களில் ஆட்கொணர்வு மனு (Writ of Habeas Corpus) தாக்கல் செய்யப்பட்டது.
நாட்டின் குடிமக்களுக்கு, அவர்களது சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 21ல் கூறப்பட்ட வாழ்வதற்கான அடிப்படை உரிமை (Fundamental Right to Life and Liberty) என்ற உரிமையானது அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டதால் ரத்து செய்யப்பட்டுள்ளதால், கைது செய்யப்பட்டவர்களை, அதற்கான காரணமேயில்லை என்றால் கூட விடுவிக்க நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லைஎன்பதுதான் அரசின் பதில்!
தெளிவாக கூற வேண்டுமென்றால், கேரளாவில் ராஜன் என்ற கல்லூரி மாணவரை காவலர்கள் பிடித்துச் சென்று, சித்திரவதைப் படுத்தி கொன்று போட்டனர் ஏன் கொலை செய்தீர்கள் என்று கேட்க இயலாது. ஏனெனில், பின்னர் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்த பொழுது, ‘ஒருவரின் உயிரை பறித்தால் கூடவா, நீதிமன்றம் கேள்வி கேட்க முடியாது?’ என்ற நீதிமன்றத்தின் கேள்விக்கு அரசு மூத்த வழக்குரைஞர் அளித்த பதில், ‘சட்டத்திற்கு புறம்பாக ஒருவரின் உயிரைப் பறித்தால் கூட நீதிமன்றங்களால் எதுவும் செய்ய இயலாது
ஆனால், உயர்நீதிமன்றங்கள் அரசின் வாதத்தினை ஏற்கவில்லை. அவசரநிலை பிரகடனத்தின் பொழுதும் தகுந்த காரணமில்லாமல் கைது செய்யப்படும் நபரை, விடுவிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டு என்று தீர்ப்பு கூறப்பட்டது. அந்த தீர்ப்புகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மேல்முறையீட்டில் உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய மன்றம் கூறிய தீர்ப்புதான், ’இந்திய நீதித்துறை வரலாற்றின் அவமானகரமான பகுதி’ என்று வர்ணிக்கப்படும் (Addl.District Magistrate Vs Shivakant Shukla) ஏடிம் ஜபல்பூர் தீர்ப்பு!
பி.என்.பகவதி உட்பட நான்கு நீதிபதிகள், ‘அவசரநிலை பிரகடனத்தின் பொழுது காரணமின்றி கைது செய்யப்படுவதற்கு எதிராக எவ்வித உரிமையும் இல்லைஎன்று கூறி உயர்நீதிமன்ற தீர்ப்புகளை நீக்கம் செய்தனர்.
பின்னர் ஜனதா அரசு அமைந்த பின்னர், அவசரநிலை பிரகடனத்தின் பொழுதும், பிரிவு 21ல் கூறப்பட்ட அடிப்படை உரிமை ரத்து செய்யப்படாது என்ற சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டு உச்சநீதிமன்றத்தால், தனிமனித சுதந்திரத்திற்கு வந்த ஆபத்து நீக்கப்பட்டது.
பி.என்.பகவதியிடம் பல்வேறு கேள்விகளை கேட்ட டைம்ஸ் ஆப் இந்தியா, ‘வரலாற்றின் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட இந்த தீர்ப்பினையும் பாபாதான் எழுதினாரா’ என்று கேட்கவில்லை.

மதுரை
10/05/11
ஏடிஎம் ஜபல்பூர் வழக்கினை விசாரித்த ஐந்து நீதிபதிகளில், ஹெச் ஆர் கன்னா என்ற ஒரு நீதிபதி மட்டும் அரசுக்கு எதிரான தீர்ப்பினை எழுதினார். அதற்கான் பலன் உடனடியாக அவருக்கு கிடைத்தது. ஆம், தலைமை நீதிபதி ரே பணிமூப்பு அடைந்ததும் சீனியரான கன்னா புறம்தள்ளப்பட்டு அரசுக்கு சாதகமாக தீர்ப்பு எழுதிய எம் ஹெச் பெக் என்பவர், ஜூனியராக இருப்பினும் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கன்னா உடனடியாக நீதிபதி பதவியை ராஜினாமா செய்தர். பெக்கை தொடர்ந்து வழக்கில் அரசுக்கு சாதகமாக தீர்ப்பு எழுதிய சந்திரசூட், பகவதி ஆகியோரும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பு ஏற்கும் வாய்ப்பு கிடைத்தது.

6.5.11

இலவசமா, மிக்ஸி கிரைண்டர் மற்றும் பிரிட்ஜ்கள்?

நடந்து முடிந்த தேர்தலுக்கு முன்னதாக, அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கைகளை வெளியிட்ட நேரம். வழக்குரைஞர் ஒருவர் என்னை அணுகி ‘தேர்தல் அறிக்கையில் இலவச மிக்ஸி, கிரைண்டர் மற்றும் பிரிட்ஜ் போன்றவற்றை கொடுப்பதாக கூறுவதை தடுக்க தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி தான் தாக்கல் செய்ய இருக்கும் நீதிப்பேராணை மனுவில் அவருக்காக நான் வாதிட வேண்டும் என்று கேட்டார்.

சில வருடங்களுக்கு முன்னர், தமிழக அரசு இலவச தொலைக்காட்சி வழங்கிய திட்டத்தினை எதிர்த்து தற்பொழுது பஞ்சாப் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றும் கண்ணன் அவர்கள் வாதிட்ட நீதிப்பேராணை மனு தள்ளுபடியான விபரத்தை அவருக்கு நினைவு படுத்தினேன்.

அந்த வழக்கை தாக்கல் செய்ததாலேயே கண்ணன் அவர்கள் நீதிபதியாக நியமிக்கப்படுவது காலதாமதமானது என்பதும் பின்னர் காவல்துறை மூத்த அதிகாரி ஒருவரின் தலையீட்டினால் ஏற்ப்பட்ட சமசர ஏற்பாட்டின்படி அவர் பதவி ஏற்றதும் பஞ்சாப் மாநிலத்துக்கு மாற்றப்படுவார் என்ற அடிப்படையில் அவர் நியமிக்கப்பட்டார் என்பதும் நீதிமன்ற வளாகங்களில் கிசுகிசுக்கப்பட்ட இரகசியம்!

வந்தவரோ விடவில்லை. ‘அந்த வழக்கு அரசு திட்டச் செலவுகளைப் பற்றியது. இந்த வழக்கு, இவ்வாறு அறிவிப்பது வாக்காளர்களுக்கு அளிக்கப்படும் லஞ்சம் என்ற ரீதியில் தாக்கல் செய்யப்படுகிறது என்றார்.

‘இது பொதுநல வழக்கு. ஓரளவிற்காவது, இதன் நோக்கங்களோடு தனிப்பட்ட வகையில் நான் ஒத்துப் போனாலொழிய எப்படி இந்த வழக்கில் வாதிடுவது?என்று கேட்டேன்.

‘இப்படி ஒரு அறிக்கையோடு நீங்கள் எபப்டி ஒத்துப் போக இயலும். இது மக்களை ஏமாற்றி சோம்பேறிகளாக்கும் மோசடி இல்லையா?என்றார்.

நீங்கள் என்ன பள்ளியில் படித்தீர்கள்?

‘அரசு உதவி பெற்ற தனியார் பள்ளியில்

‘அப்படியாயின் நீங்கள் பெற்ற கல்வி இலவசம்தானே! சட்டக் கல்லூரியில் கூட நீங்கள் செலுத்திய சொற்ப கட்டணத்தை வைத்து, பேராசிரியர்களின் சம்பளத்தை கொடுத்திருக்க முடியுமா?

அது கல்வி. அந்தச் செலவோடு இந்த தண்டச் செலவான தொலைக்காட்சியை ஒப்பிட முடியுமா?

ஏன் உங்கள் வீட்டில் நீங்கள் தொலைக்காட்சி வைத்திருக்கிறீர்கள்தானே? அதனை வாங்குவது உங்களுக்கு தண்டச்செலவாகப் படவில்லையேஎன்றேன்.

‘அது எப்படி சார், எனது பிள்ளைகளின் கல்விக்கு செலவிட்டது போக எஞ்சியிருக்கும் பணத்தில்தான் நான் தொலைக்காட்சி வாங்கியுள்ளேன். தொலைகாட்சியா, கல்வியா என்றால் நான்கல்விக்குத்தான் முதலிடம் கொடுப்பேன்

‘அப்படியா, உங்கள் மகள் படிக்கும் பள்ளியில் கட்டணம் எவ்வளவு?

‘காலாண்டிற்கு பதினைந்தாயிரம்

‘நம்ம ஊரில் காலாண்டிற்கு இருபத்தைந்தாயிரம் கட்டணம் வசூலிக்கும் பள்ளி உள்ளது. ஏன் அங்கு சேர்த்திருக்கலாமே!

‘எது அந்த ஏ.சி.கிளாஸ்ரூம் உள்ள பள்ளியா? நம்ம வசதிக்கு இது போதும்

‘ஏன், நீங்கள் உங்களது வீட்டிலுள்ள தொலைக்காட்சி, மிக்ஸி, கிரைண்டர், பிரிட்ஜ் போன்றவற்றை வாங்காமலிருந்தால் அந்தப் பள்ளிக்கு உங்கள் மகளை அனுப்பலாமேஎன்றேன்.

‘சார், இது என்ன விதண்டாவாதம்? எனக்கு கிடைக்கும் வ்ருமானத்தை இன்னின்ன வகைக்கு இவ்வளவு என்று பிரித்து செலவளிக்க எனக்கு புத்தியில்லையா?

‘அதுவேதான், அதே வகையான புத்தி இந்த இலவச தொலைக்காட்சி பெறும் பயனாளிக்கு இல்லை என்று நீங்கள் எப்படி கருத முடியும்?

’என்ன சொல்ல வருகிறீர்கள்? அவர் என்ன அவரது வருமானத்திலிருந்தா தொலைக்காட்சியை வாங்குகிறார்?. அரசாங்கம் ஏன் இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதுதான் கேள்வி

‘சரி, உங்கள் மகள் படிக்கும் தனியார் பள்ளியில் உள்ள வாட்ச்மேனுக்கு என்ன சம்பளம் இருக்கும்?

‘இரண்டாயிரம் அல்லது மூவாயிரம் இருக்கலாம்

‘ஆசிரியருக்கு?

‘ஐயாயிரம் என்று நினைக்கிறேன்

‘இதே வாட்சுமேனும், ஆசிரியரும் அரசுப் பள்ளி அல்லது அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் வேலை பார்த்தால் அவர்களுக்குறிய சம்பளம் பத்தாயிரம் மற்றும் இருபதாயிரத்தை தாண்டும் இல்லையா?

‘ஆம்

‘அரசு ஊழியர்களின் சம்பளத்தை எப்படி நிர்ணயிக்கிறார்கள்?

‘அவர்களது கல்வித் தகுதி, செய்யும் வேலை, மற்றும் விலைவாசி ஆகியவற்றை கணக்கில் எடுத்து நிர்ணயிக்கிறார்கள்

‘ஆக, நியாயமாக இருபதாயிரம் ரூபாய் பெற வேண்டிய ஒரு ஆசிரியர் ஐந்தாயிரம் மட்டும் பெற்றுக் கொண்டு உங்கள் மகளுக்கு பாடம் எடுக்கிறார். பத்தாயிரம் பெற வேண்டிய காவலாளி...

‘நீங்கள் கூற வருவது புரிகிறது. எனது மகளின் கல்வியும் இலவசம் என்றுதானே. சந்தையில் ஏகப்பட்ட காவலாளிகள் கிடைக்கிறார்கள். சந்தையே அவர்களது சம்பளத்தையும் நிர்ணயிக்கிறது. மேலும் இந்த இலவசம் அரசு தரும் இலவசமல்லவே!

‘அதுவேதான் நான் கூற வருவது. சந்தையில் நிர்ணயிக்கப்படுவதால், அந்த காவலாளிக்கு நியாயமாக போக வேண்டிய எழாயிரம் ரூபாய் தடுக்கப்படுகிறது இல்லையா?

‘சரி, அப்படியே எடுத்துக் கொள்வோம். அதனாலென்ன?

‘அதனாலாயே அந்த காவலாளி தனது மகளுக்கு கல்வியையாவது தர வேண்டி தான் வாங்க ஆசைப்படும் தொலைக்காட்சியை வாங்கமலிருக்கிறார் என்று வைத்துக் கொள்வோமா?

‘ம்...

‘எனவே, நீங்கள் தர மறுக்கும் பதினைந்தாயிரத்தை அரசு வரியாக எடுத்து ஆசிரியர் வாங்க நினைக்கும் தொலைக்காட்சியாக அவருக்குத் தருகிறது. அவ்வளவுதான்

அப்படியாயின், அது சந்தையின் செயல்பாட்டில் அரசு தலையிடும் செயலல்லவா?

இல்லை, இதுவும் சந்தையின் செயல்பாடுதான். எப்படி பெற்றோர்கள் அனைவரும் சேர்ந்து காவலாளிக்கு மூவாயிரம் என்று தீர்மானிக்கிறீர்கள். காவலாளிகள் அனைவரும் சேர்ந்து தேர்ந்தெடுக்கப்படும் அரசு ஏழைகளுக்கு இலவசமாக தொலைக்காட்சி தர வேண்டும் என்று தீர்மானிக்கிறார்கள்’.

‘ஏழைகள் அதிகமாக இருக்கிறார்கள் என்பதற்காக, அவர்கள் அனைவரும் சென்று ஓட்டு போடுவதால் மட்டும் அரசு அவர்கள் சார்பாக நடந்து கொள்ள வேண்டும் எனபதற்காக, இது தார்மீக அடிப்படையில் சரியில்லையே!

அந்தக் காவலாளியும் சரி, நீங்களும் சரி ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம்தான் உழைக்கிறீர்கள். அவர் மாதம் ஐயாயிரம் தாண்ட முடியாது. நீங்கள் ஐம்பதாயிரம் பெறுகிறீர்கள். இது என்ன தார்மீக அடிப்படையில் என்றால் சந்தையை காரணம் காட்டுகிறீர்கள். நம்மைப் போல வழக்குரைஞர்கள் எல்லாம் சேர்ந்து இதுதான் கட்டணம் என்று  நிர்ணயிக்கிறோம். காவலாளிகளும் தேர்தலில் ஒன்று சேர்ந்து கொள்கிறார்கள். அதுவும் சந்தைதானேயொழிய சந்தைக்கு இடையூறு செய்வதல்ல.

‘அதற்காக என்னுடைய வரிப்பணம் பாழாக்கப்பட்டால், கேள்வி கேட்க எனக்கு உரிமையில்லையா?

‘இது சரியான செயல். மக்களாட்சியில் அனைத்து மக்கள் கூட்டங்களுக்கும் அவரவர்கள் நலனை பாதிக்கும் எந்த அம்சத்தையும் கேள்வி கேட்க உரிமை உண்டு. கேளுங்கள். சட்டத்திற்குட்பட்ட வகையில் தடுக்கவும் பாருங்கள். ஆனால், தங்களுக்கு நலன் என்பதை கேட்டுப் பெறுவதற்கு மற்ற மக்கள் கூட்டத்திற்கும் உரிமை உண்டு என்பதை ஒத்துக் கொள்ளுங்கள். மக்களாட்சி சந்தை எவருடைய குரல் வலிமையானது என்பதை தீர்மானிக்கட்டும்.

‘சரி, ஓரளவுக்கு கல்வியை உயர்நிலைப் பள்ளி வரையாவது அனைவருக்கும் அரசு கொடுக்கிறது. ஆனால், இந்த வீண் செலவை தவிர்த்தால் ஏழைகளுக்கு தேவையான் குடிநீர், கழிப்பிட வச்திகளை அரசு செய்ய முடியுமே. அதற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள்

‘முதலில் ஏழை மக்களுக்கான குடிநீர், கழிப்பிட வசதி என்று சும்மா சொல்லாதீர்கள். உங்கள் மனதில் நிசமாகவே ஓடுவது, நாற்கர சாலை போல நவீன சாலைகளை போடலாமே, இன்னும் இரண்டு மின்சார உற்பத்திச்சாலைகள உருவாக்கலாமே என்றுதானே......இந்தச் சாலை, மின்வெட்டு இதனால் காவலாளிகளை விட வசதிகளுக்கு பழகிவிட்ட நமக்குத்தான் பாதிப்பு அதிகம். காவலாளிகள் நாற்கர சாலையில் பறப்பதில்லை. மின்சாரம் பெருகி தொழில்வளம் பெருகினால் காவலாளிகளின் வாழ்க்கைத் தரம் தன்னாலேயே கூடும் என்பதெல்லாம், இந்தியாவில் நடக்காது. தாராளமயாக்கல் கொள்கையை புகுத்தி இருபது ஆண்டுகளுக்கு மேலாகிறது. இன்னமும் நாம் குறைந்தபட்ச கூலிச்சட்டம் வைத்திருக்கிறோம்.

குடிநீர், கழிப்பிட வசதி?

‘அவை அடிப்படை உரிமை. அதைக் கேளுங்கள். எந்த அரசாவது இலவச தொலைக்காட்சி கொடுப்பதால், கழிப்பிடம் கட்ட பணம் இல்லை என்று கூற முடியுமா?

‘வாதத்திற்கு சரி, நடைமுறையில்?

‘முதலில் ஏழைகள் தங்களுடையதை கேட்டுப் பெற்றுக் கொள்வார்கள். அதற்கான வழிமுறைகளும் உள்ளது. வட்டம், குட்டம் என்று அடிமட்ட அரசியல்வாதிகளை நீங்கள் கேலி செய்யலாம். எம் எல் ஏ என்றாலே ரவுடி என்று தெலுங்குப் பட ரேஞ்சில் குற்றம் சாட்டலாம். ஆனால் அவர்களுக்கும் ஏழை மக்களுக்கும் உள்ள தொடர்பு உங்களுக்கு புரியாது. ரொம்பவும் ஏழைகளுக்காக ஆதங்கப்பட்டால், இன்னும் அதிகமாக வரி கட்ட தயாராக இருக்கிறீர்களா?  

‘நான் ஏற்கனவே வரியாக அழும் தண்டம் போதாதா?

‘தண்டம் என்று யார் சொன்னது? இந்த இலவசங்களின் பலன் கடைசியில் உங்களுக்குத்தான் தெரியுமா?

‘அது எப்படி?

‘இலவசமாக தொலைக்காட்சியை பெறும் காவலாளி சம்பள உயர்வு கேட்கும் வாய்ப்பு குறைவு. சம்பள உயர்வுக்கான பொறி வீட்டில் மனைவியின் நச்சரிப்பில், குழந்தைகளின் கெஞ்சலில் தொடங்குகிறது. சம்பள உயர்வு கேட்கவில்லையெனில், பள்ளியினை நடத்தும் பொருட்செலவு குறைகிறது. உங்கள் மகளின் கட்டணமும் கூடாது

‘இது ரொம்ப ஓவர்...

‘இதுவே ஓவரென்றால்...உங்கள் பாதுகாப்பு செலவு மிச்சப்படுவதை எதில் சேர்ப்பது?

நீங்கள் மட்டும் தொலைக்காட்சி் தொடர்களைப் பார்த்துக் கொண்டிருந்தால், தொலைக்காட்சி வாங்க முடியாத ஒரு ஏழை இளைஞன் அதை உங்கள் வீட்டிலிருந்து எடுக்க எண்ணம் கொண்டால்...

‘என்ன மிரட்டுறீங்க.....அப்ப நகை திருடுராங்கன்னு இலவச நகை கொடுக்க சொல்வீங்க போல

‘ஒரு யூகம்தான். இந்த மாதிரி சமூக நல ஏற்ப்பாடுகள் மற்றும் திட்டங்கள் எல்லாமே, நாட்டில் வாழும் அனைத்து தரப்பு மக்களும், இந்த நாட்டில் நானும் ஒரு அங்கம். இதன் வளத்தில் எனக்கும் பங்கு உண்டு என்ற எண்ணப்பாட்டினை தோற்றுவிக்கவே செயல்படுத்தப்படுகின்றன. பொருளாதார முன்னேற்றம், வளர்ச்சி என்று ஒரு பக்கம் விளம்பரபடுத்திக் கொண்டே அதன் பலனை பெருந்திரளான ஒரு மக்கள் கூட்டத்துக்கு மறுத்துக் கொண்டே இருந்தால், அவர்களின் எதிர்பார்ப்பு நம்மைப் போன்ற சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பாக மாறி விடாமல் தடுக்கவும்தான் இது போன்ற ஏற்ப்பாடுகள்

கம்யூனிச புரட்சியா?’

‘ஏழைகளின் வெறுப்பு ஒட்டுமொத்த புரட்சியாகத்தான் வெடிக்க வேண்டும் என்பதில்லை. அதற்கான சாத்தியக் கூறுகளும் இங்கில்லை. ஆனால், வன்முறை, கிளர்ச்சி, சூறையாடுதல் என்று எத்தனையோ வடிவங்களில் இருக்கலாம். நாம் இதை பலமுறை பார்த்ததுதான். எனவே, இந்த செலவினங்கள் எல்லாம், நம்மை பாதுகாத்துக் கொள்ளும் இன்சூரன்ஸ் போலவும் எடுத்துக் கொள்ளலாம்.

இந்தக் கருத்து அதீதமான யூகமாக இருக்கிறது

ஏன் சந்தைப் பொருளாதாரத்தில் அதிக நம்பிக்கை கொண்டுள்ள ஐக்கிய அமெரிக்க நாட்டிலேயே சமூகப் பாதுகாப்பு ஏற்ப்பாடுகளுக்கு கணிசமான தொகை செலவிடப்படுகிறது. வேலையற்றோருக்கு கிடைக்கும் பாதுகாப்புத் தொகை முதல் உணவு கூப்பன் வரையில். இவ்வாறான பாதுகாப்புகளே பல்வேறு பொருளாதார வீழ்ச்சிகளில் பாதிக்கப்படும் அமெரிக்கர்களை சந்தைப் பொருளாதாரத்தில் நம்பிக்கையிழக்காமல் இருக்கச் செய்கிறது. உதாரணமாக, ரொனால்டு ரீகன் எவ்வளவுதான் சமூக பாதுகாப்பு ஏற்ப்பாடுகளுக்கு ஏதிராக பேசி வந்தாலும், அவரது பிரபல்யத்துக்கு பங்கம் வராமல் இருந்ததற்கு முக்கிய காரணம் அவரது ஆட்சிக் காலத்தில் சமூக பாதுகாப்பு செலவினங்கள் குறைக்கப்படவில்லை மாறாக அதிகரிக்கப்பட்டது, என்று சொல்வார்கள்

‘சார், என்னைப் பேச விடாமல் இந்த உரையாடலை உங்கள் இஷ்டத்திற்கு ஏற்றது போல எங்கோ கொண்டு சென்று விட்டீர்கள். மனதை தொட்டுச் சொல்லுங்கள். நீங்கள் ஆட்சி செய்தால், இருக்கும் பணத்தைக் கொண்டு கழிப்பிடம் கட்டுவீர்களா? இல்லை தொலைக்காட்சி கொடுப்பீர்களா?

உங்களுக்காகத்தான் ஏகப்பட்ட நபர்கள் ஏற்கனவே பேசி விட்டனரே...நான் இப்படித்தான் பேச வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கக் கூடாது இல்லையா? அது போலவே கழிப்பிடம் கட்ட வேண்டுமா அல்லது மிக்ஸி கொடுக்க வேண்டுமா என்பதை பதவி ஏற்கப்போகும் தமிழக் முதல்வரும், அவருக்கு ஓட்டுப் போட்ட பெருவாரியான மக்கள் கூட்டமும் தீர்மானிக்கட்டும்

போங்க சார், இது சப்பைக்கட்டு....நீங்கள் இயலாததை நிறுவப் பார்க்கிறீர்கள்

Advocacy is an art of managing impossible இல்லையா?

மதுரை
05/05/11


3.5.11

தமிழகத்திலும் மோடி ஆட்சி!

சமீப காலமாக இணையத்திலும் பத்திரிக்கைகளிலும், ‘தமிழக உருப்படுவதற்கு ஒரே வழி, மோடி ஆட்சிதான்என்று பலராலும் திரும்பத் திரும்ப கூறப்படும் வேளையில், கடந்த வாரம் இணையத்தில் படித்த செய்தி ஒன்றினால், ‘தமிழ் நாட்டில் உண்மையிலேயே மோடி ஆட்சி மலர்ந்து விட்டதா?என்ற சந்தேகம் வந்து விட்டது.

இந்தியாவிலுள்ள பெரிய 20 மாநிலங்களில் பொருளாதார சுதந்திரம், அபரிதமான செல்வம், மனித வள மேம்பாடு ஆகிய துறைகளில் முதன்மை வகிக்கிறது என்று இந்திய மாநிலங்களில் பொருளாதார சுதந்திரம் 2011என்ற அறிக்கை கூறுவதாக ஐபிஎன் லைவ், பிஸினஸ் ஸ்டாண்டர்டு ஆகிய வலைத்தளங்களின் செய்தியை படித்தால், ‘குஜராத்தும் தமிழ்நாடும்அங்கே இங்கே முன்னே பின்னே இருந்தாலும் பொதுவில் ஒன்றாகத்தான் இருப்பதைப் பார்த்தால் தமிழ்நாட்டையும் தூக்கி ‘மோடிகையில் குடுத்து விட்டார்களோ என்று ‘அச்சமாகஇருக்கிறது.

***

கம்யூனிஸ்டுகளைக் (போலி மற்றும் ஹோலி) கேட்டால் ‘ஆம், குஜராத்தும், தமிழகமும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்தானே என்பார்கள். கம்யூனிஸ்ட் (இடது/போலி) கட்சியின் அதிகாரபூர்வமற்ற பத்திரிக்கையான ஹிந்து, ‘குஜராத்தில் தனி நபர் வருமானம் வேண்டுமாயில் பெருகியிருக்கலாம். ஆனால், பசி கூடியுள்ளது’ என்றும் ‘அதிகமாகிவரும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள்தான் அதற்கு காரணம்’ என்று எச்சரிக்கிறது.

***
தமிழகத்தில் மோடி ஆட்சி நடைபெறுகிறதுஎன்று பேசினால், கம்யூனிஸ்டுகள் கருணாநிதியை தாக்குவதாக எடுத்துக் கொண்டு கை தட்டுவார்கள். அதே மேடையில் அமர்ந்திருக்கும் சீமான், ‘பேசுவது யார் விஜயகாந்தா?என்பார்.
Politics makes strange bedfellows என்று சும்மாவா சொன்னார்கள்.
தமிழ் வெறியர், தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரானவர் என்று ஒரு காலத்தில் விமர்சிக்கப்பட்ட கருணாநிதி, தேசிய ஒருமைப்பாட்டை கட்டிக்காப்பதாக சொல்லப்படும் காங்கிரசுடன்! தீவிரவாதத்தை (விடுதலைப்புலிகள்?) இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி தமிழகத்திலிருந்து விரட்டியதாக ‘சோஅவர்களால புகழப்பட்ட ஜெயலலிதா, விடுதலைப்புலிகளின் அனுதாபிகளுடன்!!
தமிழகத்தில் அமையப் போவதாக அரசியல் நோக்கர்கள் அனைவராலும் நம்பப்படும் அதிமுக ஆட்சியில் முதல் மூன்று ஆண்டுகளுக்குள் இரு கைதுகளை நான் எதிர்பார்க்கிறேன். ஒன்று சீமான்! அடுத்தது விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ்!!
***  
ஏன் இங்கு அரசியல் பதிவு என்றால் வேறு எதுவும் எழுதுவதற்கு இல்லை என்பது காரணமாக இருக்கலாம். Politics is the last refuge of a Scoundrel இல்லையா?
நீ என்ன ஸ்கெளண்ட்ரலா என்றால் நேற்று எனக்கு அப்படித்தான் தோன்றியது. அனைவரும் இங்கிலாந்து இளவரசர் வில்லியம் கேட் திருமணத்தை வியந்து கொண்டிருக்கையில் எனக்கு மட்டும் அந்த சந்தேகம் வந்தது. சார்லஸ் டயானா திருமணத்தின் பொழுது டயானாவிற்கு கன்னித்தன்மை சோதனை நடத்தப்பட்டது. சிலர் அதனை விமர்சிக்கவும் செய்தனர்.
கேட்-மிட்டில்டன்னுக்கு அப்படி நடத்தப்பட்டதா? என்ற சந்தேகம் வந்தால்... அது கூடப் பரவாயில்லை. அப்படி ஒரு சோதனை நடந்து, அவரது கன்னித்தன்மை நிரூபிக்கப்பட்டிருந்தால், வில்லியமின் ஆண்மைத்தன்மை மீது சந்தேகம் வந்திருக்குமே, என்று நினைத்தால் ஸ்கெளண்ட்ரல் என்று சொல்லாமல் பின்ன எப்படிச் சொல்வதாம்!
It seems the Royal Family is drifting away from the Church in its quest to getting closer to Jesus

மதுரை
03/05/11