12.12.10

சீமான் விடுதலை சொல்லாத செய்தி...

உண்மைத் தமிழன் என்ற பதிவரின் ‘சீமான் கைது சொல்லும் செய்தி...’ என்ற பதிவில் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் (National Security Act) அவரை சிறையில் வைக்க அதிகாரம் இல்லாத அதிகாரி கையெழுத்திட்ட உத்தரவு செல்லாது என்று உயர்நீதிமன்றத்தால் சீமான் விடுவிக்கப்பட்டதை சுட்டிக் காட்டி, ‘ஏன், இந்த சட்ட மீறல் முன்னரே அரசு வழக்குரைஞருக்குத் தெரியாதா? இந்த உத்தரவு சட்ட விரோதமானது என்று அரசுக்கு சுட்டிக் காட்டியிருக்கலாமே’ என்று கேள்வி எழுப்பி உள்ளார். அவரது பதிவில் காணப்படும் விடயங்கள் குறித்து சில விளக்கங்கள்...


தேசிய பாதுகாப்பு சட்டம் (NSA), அந்நியச் செலவாணி மற்றும் கடத்தல் தடுப்புச் சட்டம் (COFEPOSA) மற்றும் தமிழக அரசால் இயற்றப்பட்டுள்ள குண்டர்கள் சட்டம் (The Tamil Nadu Prevention of Dangerous Activities of Bootleggers, Drug-offenders, Forest-offenders,Goondas, Immoral Traffic Offenders, Slum-grabbers and Video Pirates Act,1982) போன்ற சட்டங்கள் ஒரு குற்றம் செய்ததற்காக தண்டனையை அளிக்கவல்ல சட்டங்கள் என்பதை விட, ஒரு குற்றம் நிகழாமல் இருக்கவும் பொது ஒழுங்கைக் காப்பதற்குமான சட்டங்கள் என்றுதான் கூற முடியும்.

அதாவது மற்ற குற்றவியல் சட்டமுறைகளினால், ஒரு குற்றம் நிகழ்வதை தடுக்க இயல்வதில்லை என்ற அடிப்படையில், குறிப்பிட்ட சில வகை குற்றங்கள் நிகழ்வதை தடுக்கும் பொருட்டு சம்பந்தப்பட்ட நபரை குறிப்பிட்ட காலம் சிறையில் அடைத்து வைக்கும் நோக்கத்துடன் இயற்றப்பட்ட சட்டங்கள்.

அடிப்படையில் இந்த மாதிரியான சட்டங்கள் நமது நாடு ஏற்றுக்கொண்ட குற்றவியல் சட்டமுறைகளுக்கு விரோதமானதுதான். ஆனால், இவை போன்ற சட்டங்கள் நமது நாட்டின் அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது என்று நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்ட பொழுதெல்லாம், நமது நீதிமன்றங்கள் இந்தச் சட்டங்களை வேறு வழியின்றி ஏற்றுக் கொண்டன. இல்லை, ‘என்கவுண்டர்’தான் ஒரே முடிவு என்று காவல்துறை கருதுவதாலும் இருக்கலாம்.

முதலில் கைது செய்யப்படுகையில், சீமான் செய்ததாக கூறப்பட்ட குற்றங்கள் சாதாரண வகையைச் சார்ந்தவை. எளிதில், அவர் பிணையில் வந்து விடலாம். எனவே அவர் வெளியில் இருந்தால், தேசப்பாதுகாப்புக்கு அல்லது பொது ஒழுங்கிற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்ளலாம் என்று அரசு ‘நினைத்ததால்’ அவர் தேச பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். எனவே சீமான் சிறையில் அடைக்கப்பட்டது, செய்த குற்றத்திற்காக அல்ல. மாறாக, செய்யக்கூடும் என்று கருதப்பட்ட செயலுக்காக!

எனவேதான் தடுப்புக் காவல் என்பது, நாகரீகமான குற்றவியல் சட்டமுறைக்கு எதிரான முறை என்று மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அடுத்தது நீதிமன்ற தீர்ப்பு. சீமான் தேசபாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கும் செயலை புரியலாம் என்பது, சம்பந்தப்பட்ட அலுவலரின் (காவல்துறை ஆணையாளர்) உள்ளார்ந்த திருப்தியை (subjective satisfaction) பொறுத்தது. அது சரியா அல்லது தவறா என்ற கேள்விக்குள் நீதிமன்றம் அதிகம் செல்லாது. எனவேதான் தடுப்புக் காவல் (preventive detention) வழக்குகளில், நுட்பமான காரணங்களை (technical reasons) வைத்தே சிறை வைக்கப்பட்டவரை விடுவிக்க இயலும். அதாவது, அவருக்கு அளிக்கப்பட்ட ஆவணங்கள் நேர்த்தியாக நகலெடுக்கப்படவில்லை அல்லது அதனை கையளிக்க ஒருநாள் தாமதமாகி விட்டது போன்ற காரணங்கள் கூட எடுத்துக் கொள்ளப்படும். சீமான் வழக்கில், ஆணையாளர் இல்லாமல், அவரது பொறுப்பில் இருந்தவர் கையெழுத்திட்டவர் செல்லாது என்ற காரணத்தால் அவர் விடுவிக்கப்பட்டார்.

ஆனால், இதற்கும் அரசு தீர்ப்பினைப் பற்றி என்ன நினைக்கும் என்று கவலைப்படாத நீதிபதியினை தேடி சீமானின் வழக்குரைஞர்கள் ஓட வேண்டியிருந்தது என்பது வேதனையான உண்மை!

எனினும், தடுப்புக் காவலில் வைக்கப்படுபவர், குற்றம் ஏதும் செய்ததற்காக சிறை வைக்கப்படாதலால், நுட்ப காரணங்களை காட்டி அவர்களை விடுதலை செய்வது நீதிபதிகளுக்கும் திருப்தியளிக்கும் செயலாகவே இருக்கும்.

காவலர்களுக்கும் திருப்திதான். ஏனெனில், வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்வதை தாமதப்படுத்தி, தங்களுடைய நோக்கத்தில் வெற்றி பெற்று விடுவார்கள். தடுப்புக் காவல் ஓராண்டு வரைதான். வழக்கு முடிவதற்குள் ஐந்து மாதம் முடிந்து விடும். போதுமே!

எனவே நுட்ப தவறுகளைப் பற்றி அரசு கவலைப்படுவதில்லை. தினமும் உயர்நீதிமன்றங்களில் பல தடுப்புக் காவல் வழக்குகள் ஏற்கனவே கூறப்பட்ட தீர்ப்புகளின் (precedents) அடிப்படையில்தான் ரத்து செய்யப்படுகின்றன. சிறை வைக்கப்பட்டவர்களும் ‘ஆளை விட்டால் போதும்’ என்று ஓடி விடுவார்கள்.

சீமான் வழக்கில் நட்ட ஈடு கேட்டு வழக்கு தொடரப்போவதாக கூறப்படுகிறது. அதற்கு அதிகாரி தவறு செய்துள்ளார் என்பதோடு, கெட்ட எண்ணத்துடன் (malafide intention) செயல்பட்டுள்ளார் என்பதையும் நிரூபிக்க வேண்டும்.

பார்க்கலாம் என்ன நடக்கிறது என்பதை...

மதுரை
12/12/10


பிகு : ஈழத்தில் போர் தீவிரமடைந்த நிலையில், இங்கிருந்து வெடிமருந்துகள் கடத்தியதாக கைது செய்யப்பட்டவர்கள் பின்னர் தேசப்பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட பொழுது, இந்தியாவின் பாதுகாப்புக்கோ அல்லது இங்கு பொது ஒழுங்கிற்கோ அது பாதகமான செயலல்ல என்று வாதிடப்பட்டு நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

8.12.10

உச்ச நீதிமன்றம் பிடித்த புலிவால்!

"ஒரு சாதாரண மன்னிப்பு போதும். கடைசி தடவையும் இதைத்தான் கூறினோம். நாங்கள் கூறுவதை யோசித்துப் பாருங்கள்”

இப்படி, ‘ஒரு மன்னிப்பை பெயருக்கு நீங்கள் கேட்டுவிட்டால், நாங்களும் இத்துடன் பிரச்னையை முடித்துக் கொள்வோமே’ என்று இறைஞ்சிக் கொண்டிருப்பது உச்ச நீதிமன்ற நீதிபதிகள்! இறைஞ்சப்படும் நபர் ‘வழக்குரைஞர் பிரசாந்த் பூசன்’. முன்னாள் சட்ட அமைச்சரும், மூத்த வழக்குரைஞருமான சாந்தி பூசனின் மகன்!!

இப்படி நடக்கும் என்பது நான் முன்பே அறிந்திருந்ததுதான்.

பிரசாந்த் பூசன், நீதித்துறையில் ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என்று போராடி வருபவர். தெஹல்கா நாளிதழுக்கு அளித்த பேட்டி ஓன்றில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் தானறிந்தவரை 8 நீதிபதிகள் ஊழல்வாதிகள் என்று பேட்டியளித்தார். உடனே உச்ச நீதிமன்றத்தின் செல்லப்பிள்ளையான ஹரீஷ் சால்வே, பிரசாந்த் பூசன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட வேண்டும் என்று முறையீட, விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் உச்ச நீதிமன்றம் பிரசாந்த் பூசன் மீது அவமதிப்பு வழக்கு (criminal contempt) தொடர்ந்தது.

வழக்குரைஞர் தொழில் தர்மங்களை (Professional Ethics) காற்றில் பறக்கவிடும் ஹரீஷ் சால்வேயா என்னைப் பற்றி குறை கூறுவது என்று வெகுண்டெழுந்த பிரசாந்த் பூசன், நீதிமன்றத்தில் தான் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் (affidavit) ஹரீஷ் சால்வேயின் யோக்கியதையை வெளுத்துக் கட்டினார்.

உச்ச நீதிமன்றத்திற்கு அப்பொழுதுதான், தான் பிடித்திருப்பது புலி வால் என்பது புரிய ஆரம்பித்தது. ஆனால், வேறு எதுவும் செய்வதற்கு முன்பாக நடந்ததுதான் வேடிக்கை!

'என் மகனையா குற்றவாளி கூண்டில் நிறுத்துகிறீர்கள்?' என்று பொங்கி எழுந்த சாந்தி பூசன், ‘அவன் என்ன 8 தலைமை நீதிபதிகள் என்றுதானே கூறினான். இந்தா புடித்துக் கொள்! இந்த இந்த தலைமை நீதிபதி, இன்ன இன்ன ஊழல் புரிந்தார் என்று ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்து...முடிந்தால் என் மீது அவமதிப்பு வழக்கு தொடர்ந்து பார்’ என்று உச்ச நீதிமன்றத்திற்கு பகிரங்கமாக சவால் விடுத்தார்.

"இது என்னடா குட்டி எட்டடி பாய்ந்தால், தாய் பதினாறு அடி பாய்கிறது’ என்று அஞ்சிய நீதிபதிகள்...சாந்தி பூசன் இப்படி ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்து தங்களுக்கு சவால் விட்டதை கண்டு கொள்ளாதது மாதிரி, பிரசாந்த் பூசனைப் பார்த்து கெஞ்சிக் கொண்டு இருக்கிறார்கள்.

***

நேற்று நீதிபதிகள் பிரசாந்த் பூசனின் வழக்குரைஞரான ராம் ஜேத்மலானியிடம் இவ்வாறு கெஞ்சிக் கொண்டிருந்த பொழுது கூட சாந்தி பூசன், என் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்ற எனது மனுவை விசாரிக்க வேண்டும் என்று கேட்ட பொழுது நீதிபதி கபீர், ‘அதெல்லாம் தேவையில்லை’ என்று பூசி மெழுகி விட்டார்.

ஜேத்மலானியும் தன் பங்குக்கு, ‘பூசனின் பிரமாண பத்திரத்தில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எவ்விதமான மறுப்பும் இல்லை. எனவே அவர் உண்மை என நம்பி கூறியவை குறித்து அவமதிப்பு வழக்கு தொடர முடியாது’ என்று வாதிட வழக்கு மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

***

போன வாரம்தான் தலைமை கண்காணிப்பாளர் (Chief Vigilence Commissioner) மாசற்ற நேர்மையானவராக இருக்க வேண்டும் என்று உறுமிய பொழுது, அரசு தலைமை வழக்குரைஞர் ‘அப்படியானால், நீதிபதிகள் நியமனத்தையும் அதே அளவுகோலில் அளக்க நேரிடும்’ என்று ஏறக்குறைய ஒரு மிரட்டலை விடுத்தார்.

எந்த நீதிபதியும், ‘பிரச்னை இல்லை. எங்களையும் மாசற்ற நேர்மை (impeccable integrity) என்ற அளவு கோலில் அளக்கலாம்’ என்று தலைமை வழக்குரைஞரின் சவாலை ஏற்றுக் கொள்ளவில்லை. முன்னாள் நீதிபதி கிருஷண ஐயர்தான், தலைமை வழக்குரைஞர் எப்படி அவ்வாறு கூறப்போயிற்று என்று ஹிந்துவில் எழுத, தலைமை வழக்குரைஞர் தான் ‘அப்படியொரு அர்த்தத்தில் கூறவில்லை’ என்று ஒரு விளக்கமளித்தார்.

***

சமீபத்தில்தான், ஜேத்மலானி உச்ச நீதிமன்றத்தில் வேறு ஒரு குண்டினை வீசினார். குஜராத் படுகொலைகள் சம்பந்தமான விசாரணை குறித்து உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவினை கூறியிருந்தது. ஆனால் உத்தரவினை கூறிய நீதிபதி ‘வைப்பு நிதி ஊழலில்’ (Provident Fund Scam) சம்பந்தப்பட்டவர் என்று பரவலான பேச்சு இருந்தது. பின்னர் அந்த நீதிபதி ஒய்வு பெற்று விட்டார். ஆயினும் குஜராத் வழக்கு எடுத்துக் கொள்ளப்படுகையில், ஜேத்மலானி, ‘சிபிஐ விசாரணை வளையத்திற்குள் இருக்கும் ஒரு நீதிபதி, சிபிஐ சம்பந்தப்பட்ட வழக்கில் கூறிய தீர்ப்பு செல்லாது’ என்று ஒரே போடாக போட்டார்.

இந்த தொடர் தாக்குதல்களில் உச்ச நீதிமன்றத்தின் மாண்பு (dignity) வெலவெலத்துப் போயிருக்கிறது என்பதுதான் உண்மை.

சாந்தி பூசனின் பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டவைகளுக்கு எவ்வித மறுப்பும் இல்லை. அவை உண்மையெனில், குற்றம் சாட்டப்பட்ட தலைமை நீதிபதிகள் மீது குற்ற வழக்கு தொடரப்பட வேண்டும். உண்மை இல்லை எனில் சாந்தி பூசன் மீது குற்ற வழக்கு தொடரப்பட வேண்டும்.

"ராசாவை ஏன் இன்னமும் விசாரிக்கவில்லை’ என்று உறுமும் உச்ச நீதிமன்றம், ‘ஏன் அந்த எட்டு தலைமை நீதிபதிகள் மீது இன்னமும் குற்ற வழக்கு தொடரப்படவில்லை’ என்று உறுமும் நாள் வந்தால்தான், அந்த மாண்பு காப்பாற்றப்படும்.

கவனிக்கவும், ஊழல்வாதிகள் என்று குறிப்பிடப்படுவது, எட்டு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அல்ல. எட்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள்!! நூறு கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டுக்கான தலைமை நீதிபதிகளின் யோக்கியதையே இப்படி என்றால், மற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள்......உயர்நீதிமன்ற நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள், சார்பு நீதிபதிகள், குற்றவியல் நடுவர்கள் (Judicial Magistrates) ஆகியோரின் நேர்மை?

ஆண்டவன் என்று ஒருவன் இருந்தால் அவன் இந்த நாட்டைக் காப்பாற்றட்டும்

மதுரை
08/12/10

3.12.10

திடீர் சைலேந்திரபாபுகள்…


இந்த நிதிபதி எத்தனை லஞ்சம் கொடுத்து, வாங்கி இந்த பதவிக்கு வந்தாரோ!...


என்னைக்கு நாடு உருப்பட போவுதோ??? இந்தமாதிரி நீதிபதி இருந்தா லஞ்சம் வாங்குறதுல இந்திய no 1 ஆய்டும்......


ஐயா, கணம் நீதிபதி அவர்களே, இந்திய குட்டிச்சுவராய் ஆவதற்கு தங்களின் தீர்ப்பு ஒன்றே போதும். இனி அரசு ஊழியர்களை யாரும் கட்டுப்படுத்த முடியாது. நீதியரசர் அந்த அரியணையில் இருந்து கூறுகிற ஒவ்வொரு வார்த்தைகளும் ஒரு தீர்ப்பு என்றே கருதப்படும் என்கிற அடிப்படை விசயமே தெரியாத ஒருவரை அரசு இருத்தி இருக்கிறது என்றே நினைக்கத் தோன்றுகிறது. நன்றி. வளரட்டும் லஞ்சம்! நாசமாகட்டும் இந்தியா!! நிறையட்டும் உங்கள் கை !!!...


இந்தியா நீதி செத்து விட்டது இரண்டாவது முறையாக 1 . பாப்ரி மஸ்ஜித் வழக்கு 2. லஞ்ச வழக்கு . இந்தியன மானம் எங்க?...


அய்யா, நீதி மான்!!!!!! அவர்களே உங்கள் வீட்டில் முதலில் ரெய்டு நடத்த வேண்டும் அய்யா, எவ்வளவு லஞ்சம் கொடுத்து நீதி மான்!!!!!!! ஆநீர்களோ வெட்கம் கெட்ட தீர்ப்புக்கு அதரவு வேறு? வெட்கம் கெட்ட செயலுக்கு அதரவு வேறு?...


நாடே குட்டிசெவரா போகுதுன்க்ராதுக்கு இது நல்ல உதாரணம். நீதிபதி லஞ்சம் கொடுத்து வந்திருப்பருன்னு தோணுது....


இதை சொல்ல எவ்வளவு லஞ்சம் வாங்கினீங்க ? அப்போ மக்கள் வரி கட்டாமல் இருக்கலாம்னு சொல்லுங்க ? இல்லே அவங்களக்கு சம்பளம் இல்லேன்னு சொல்லுங்க.....


இவரு எங்கியோ நல்ல லஞ்சம் வாங்கறாரு போல. அதா மறைக்க இப்படி ஒரு தீர்ப்பு , மக்களே உஷாரு...


நான் இந்தியன் என்று சொல்வதற்கு வெட்க படுகிறேன். இப்படி ஒரு சட்டம் எந்த நாட்டிலும் இருக்காது. இப்படி ஒரு தீர்ப்பை இந்த உலகத்தில் எந்த ஒரு நீதிபதியும் தரமாட்டார்.


mr judge you are not make country proud there is nothing different between you and terrorist

***

மேற்கண்ட அனைத்து அர்ச்சனைகளுக்கும் உரிய, நீதிபதி தற்பொழுது நீதித்துறையில் லஞ்ச லாவண்யத்தை ஒழிக்க சாட்டையை சுழற்றியிருக்கும் ‘ஹீரோ’ மார்கண்டேய கட்ஜு என்றால் ஆச்சரியமாக இருக்கலாம்.

தமிழகத்தின் முக்கியமான தினசரிகளில் ஒன்றான ‘தினமலர்’ கட்ஜூ அவர்கள் வேடிக்கையாக நீதிமன்றத்தில் கூறிய ‘ஜோக்’கை ஏதோ அவர் கூறிய சேரியமான (serious) கருத்து என்பது போல தனது வாசகர்களுக்கு கடத்த, அந்த பத்திரிக்கையின் ‘படித்த’ ‘வெளிநாடுகளில் வசிக்கும்’ பல்வேறு வாசகர்கள் கூறிய முன்னிகைகளின் சில துளிகள்.

சந்தேகமிருந்தால், ‘அரசு அலுவலகங்களில் வேலை நடக்க லஞ்ச தொகை நிர்ணயம்? சுப்ரீம் கோர்ட் கருத்து’ என்ற இந்த செய்தினை படிக்கவும்.

நன்கு படித்த, கணணி உபயோகித்து செய்தியினைப் படிக்கும் அளவிற்கு வசதியுள்ள வாசகர்களே இப்படியென்றால், உடனடியாக யாரையும் மோகன்ராஜாகவும், சைலேந்திரபாபுவாகவும் மாற்றுவது நமது ஊடகங்களுக்கு எவ்வளவு என்பது புரியலாம்.

மதுரை
03/12/10

1.12.10

ஏன் கூடாது என்கவுண்டர்கள்...

அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி மீதான உச்சநீதிமன்ற நீதிபதியான கட்ஜுவின் பாய்ச்சலை, ’ஜுடீசியல் எனகவுண்டர்’ என்று குறிப்பிட்டதாலோ என்னவோ, கட்ஜூ என் ஹீரோ’ ‘அந்த மாட்டில் தேவையான ஒன்றுதான்’ என்ற எதிர் வினைகள்.


உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்சு தீர்ப்பினைப் பற்றி கவலைப்படாமல், அதற்கு எதிராக தீர்ப்பு கூறிய பின்னர், அதனை ஏற்றுக் கொள்ளாத மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்சு, தனது தீர்ப்பில் ‘ஐந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்சின் தீர்ப்பு அவருக்கு எதிராக இருப்பினும், நீதிபதி கட்ஜு வேறு பலன்களை எதிர்பார்த்து இப்படி ஒரு தீர்ப்பு எழுதியுள்ளார்’ என்று குறிப்பிட்டிருந்தால், அடுத்த நாள் செய்தித் தாள்களில் இவ்வாறு செய்தி வந்திருக்கும்


‘உச்ச நீதிமன்ற நீதிபதி லஞ்சத்திற்கு மயங்கி ஐந்து நீதிபதிகள் பெஞ்சு தீர்ப்பிற்கு புறம்பாக தீர்ப்பு எழுதியுள்ளார்...மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்சு கடும் கண்டனம்’


செய்தியினை படிக்கும் வாசகர்களுக்கு, கட்ஜுவையும் தெரியாது. அவர் என்ன தீர்ப்பு கூறினார் என்றும் தெரியாது. ஆனால், ’இவனை எல்லாம் இப்படித்தான் போட்டுத் தள்ளனும். உச்ச நீதிமன்றமா? கொக்கா? என்று கை தட்டியிருப்பார்கள்’


***

கட்ஜூ தனது தீர்ப்பில் மேலும், ‘சில நீதிபதிகள் தங்களது சொந்த பந்தங்களை அதே நீதிமன்றத்தில் (அல்காபாத்) வழக்குரைஞர்களாக பணியாற்ற வைக்கிறார்கள். பணியாற்றத் தொடங்கிய சில வருடங்களிலேயே, நீதிபதிகளின் மகன்களும் உறவினர்களும் கோடீஸ்வரர்களாகி விடுகிறார்கள். பெரிய வீடு, ஆடம்பர கார்கள் மற்றும் அளப்பறிய வங்கிச் சேமிப்பு என சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர்’ என்றும் கூறுகிறார்.


இதே கருத்தை பல ஆண்டுகளாக வழக்குரைஞர்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள். பொது மக்களும் கூறலாம். ஆனால் அவை யாவும் குற்றச்சாட்டுகள். அவ்வளவுதான். அவற்றை ஒருவர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது கிடையாது. ஆனால் குற்றச்சாட்டுகள் தீர்ப்பாக உருமாறு முன்னர், அந்த தீர்ப்பு யாருக்கு எதிரானதோ அவரது கருத்து கேட்கப்பட வேண்டும். இல்லை அந்த தீர்ப்பு இல்லாநிலையது (void). ஏனெனில் தீர்ப்பு ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய ஒன்று. அதுவும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு இறுதியானது.


நீதிமன்ற தாள்வாரங்களில் பேசப்படும் கிசுகிசுக்களை தனது தீர்ப்பில் கட்ஜு நுழைத்தால், அதுவும் அதிகார துஷ்பிரயோகமே!


***

கட்ஜு, உண்மையிலேயே ஹீரோவாக இருந்திருந்தால் என்ன செய்திருக்க வேண்டும். ‘ஏன், தங்கள் பதவிக்கு பெருமை சேர்த்த பல உயர்நீதிமன்ற நீதிபதிகளால் உச்ச நீதிமன்றத்திற்குள் நுழைய முடியவில்லை’ என்பதற்கான காரணத்தை, தனது தீர்ப்பில் அல்ல, தான் அவ்வப் பொழுது எழுதும் பத்திரிக்கை கட்டுரைகளில் தெரிவித்திருக்கலாம்.


சமீபத்தில் ஒரு உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்படுகையில், குறிப்பிட்ட இரு நபர்கள் நீதிபதிகளாக தேர்ந்தெடுக்கப்படக்கூடாது என்று கொலேஜியத்தில் பங்கு வகித்த நேர்மையான ஒரு நீதிபதி எழுத்து மூலம் தெரிவித்த எதிர்ப்பினையும் (dissenting note) மீறி அந்த நபர்களை நீதிபதிகளாக எப்படி உச்ச நீதிமன்றம் அனுமதிக்கிறது என்று கேட்டிருக்கலாம்.


இன்று, ‘ராசாவை ஏன் இன்னமும் விசாரிக்கவில்லை’ என்று உறுமும் உச்ச நீதிமன்றம் ‘ஏன் வைப்பு நிதி ஊழலில் சம்பந்தப்பட்ட உச்ச நீதிமன்ற நீதிபதியை விசாரிக்கவில்லை’ என்று மைய புலனாய்வு அமைப்பைப் பார்த்து அன்று உறுமவில்லை என்று விளக்கியிருக்கலாம்.


சாந்தி பூசன், தனக்குத் தெரிந்து எட்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் ஊழல்வாதிகள் என்பதோடு நில்லாமல், யார் யார் என்ன என்ன ஊழல் செய்தார்கள் என்ற விபரத்தை சத்திய பிரமாண பத்திரமாக தாக்கல் செய்து ’முடிந்தால் என் மீது அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்து கொள்’ என்று சவால் விட்ட பிறகும் அவரை ஒன்றும் செய்யாமல் உச்ச நீதிமன்றம் பதுங்கி பின் வாங்குவது ஏன் என்று மற்ற நீதிபதிகளிடம் சண்டை பிடித்திருக்கலாம்.


அல்லது, இப்படி வெளிப்படையாக கூறிய பின்னரும் ஏன் அந்த தலைமை நீதிபதிகள் மீது குற்ற வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை என்று மத்திய அரசை சாடியிருக்கலாம்.


விஜிலன்ஸ் கமிசனர் வழக்கில், மத்திய அரசு வழக்குரைஞர் ‘ இப்படிப் பட்ட பதவி வகிப்பவர்களுக்கு ‘மாசற்ற் நேர்மை’ (impeccable integrity) இருக்க வேண்டுமென்று கூறினால், அதே அளவுகோலில் நீதிபதி பதவி வகிப்பவர்களையும் அளக்க வேண்டியிருக்கும்’ என்று பூடகமாக ஒரு மிரட்டல் விட்டதை ஏதோ அவர் கூறியது காதிலேயே விழவில்லை என்பது போல உச்ச நீதிமன்றம் நடிப்பது ஏன்? என்பதை வியந்திருக்கலாம்.


’மிஸ்டர் அட்டார்னி ஜெனரல், நாங்கள் அப்பழுக்கில்லாதவர்கள். வேண்டுமென்றால், எங்களை சோதித்துப் பாருங்கள்’ என்று எந்த நீதிபதியிடமிருந்தும் குரல் வரவில்லையே’ என்று வருத்தப்பட்டிருக்கலாம்.


இந்த கிருஷ்ண ஐயர் வேறு, சமய சந்தர்ப்பம் தெரியாமல், ’அட்டார்னி ஜெனரல் எப்படி அப்படி சொல்லப் போயிற்று, விடாதே அவரை ஒன்றில் இரண்டு பார்த்து விடு’ ஹிந்துவில் கட்டுரை எழுதி உசுப்பி விட்டுக் கொண்டிருக்கிறார். அவரிடமாவது ‘ஐயா நாங்க கைப்புள்ள... எவ்வளவு நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது’ என்று கொஞ்சம் அழுதிருக்கலாம்...


இதையெல்லாம், செய்திருந்தா அது ஹீரோயிசம்!


மதுரை
02/12/10