"ஒரு சாதாரண மன்னிப்பு போதும். கடைசி தடவையும் இதைத்தான் கூறினோம். நாங்கள் கூறுவதை யோசித்துப் பாருங்கள்”
இப்படி, ‘ஒரு மன்னிப்பை பெயருக்கு நீங்கள் கேட்டுவிட்டால், நாங்களும் இத்துடன் பிரச்னையை முடித்துக் கொள்வோமே’ என்று இறைஞ்சிக் கொண்டிருப்பது உச்ச நீதிமன்ற நீதிபதிகள்! இறைஞ்சப்படும் நபர் ‘வழக்குரைஞர் பிரசாந்த் பூசன்’. முன்னாள் சட்ட அமைச்சரும், மூத்த வழக்குரைஞருமான சாந்தி பூசனின் மகன்!!
இப்படி நடக்கும் என்பது நான் முன்பே அறிந்திருந்ததுதான்.
பிரசாந்த் பூசன், நீதித்துறையில் ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என்று போராடி வருபவர். தெஹல்கா நாளிதழுக்கு அளித்த பேட்டி ஓன்றில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் தானறிந்தவரை 8 நீதிபதிகள் ஊழல்வாதிகள் என்று பேட்டியளித்தார். உடனே உச்ச நீதிமன்றத்தின் செல்லப்பிள்ளையான ஹரீஷ் சால்வே, பிரசாந்த் பூசன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட வேண்டும் என்று முறையீட, விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் உச்ச நீதிமன்றம் பிரசாந்த் பூசன் மீது அவமதிப்பு வழக்கு (criminal contempt) தொடர்ந்தது.
வழக்குரைஞர் தொழில் தர்மங்களை (Professional Ethics) காற்றில் பறக்கவிடும் ஹரீஷ் சால்வேயா என்னைப் பற்றி குறை கூறுவது என்று வெகுண்டெழுந்த பிரசாந்த் பூசன், நீதிமன்றத்தில் தான் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் (affidavit) ஹரீஷ் சால்வேயின் யோக்கியதையை வெளுத்துக் கட்டினார்.
உச்ச நீதிமன்றத்திற்கு அப்பொழுதுதான், தான் பிடித்திருப்பது புலி வால் என்பது புரிய ஆரம்பித்தது. ஆனால், வேறு எதுவும் செய்வதற்கு முன்பாக நடந்ததுதான் வேடிக்கை!
'என் மகனையா குற்றவாளி கூண்டில் நிறுத்துகிறீர்கள்?' என்று பொங்கி எழுந்த சாந்தி பூசன், ‘அவன் என்ன 8 தலைமை நீதிபதிகள் என்றுதானே கூறினான். இந்தா புடித்துக் கொள்! இந்த இந்த தலைமை நீதிபதி, இன்ன இன்ன ஊழல் புரிந்தார் என்று ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்து...முடிந்தால் என் மீது அவமதிப்பு வழக்கு தொடர்ந்து பார்’ என்று உச்ச நீதிமன்றத்திற்கு பகிரங்கமாக சவால் விடுத்தார்.
"இது என்னடா குட்டி எட்டடி பாய்ந்தால், தாய் பதினாறு அடி பாய்கிறது’ என்று அஞ்சிய நீதிபதிகள்...சாந்தி பூசன் இப்படி ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்து தங்களுக்கு சவால் விட்டதை கண்டு கொள்ளாதது மாதிரி, பிரசாந்த் பூசனைப் பார்த்து கெஞ்சிக் கொண்டு இருக்கிறார்கள்.
***
நேற்று நீதிபதிகள் பிரசாந்த் பூசனின் வழக்குரைஞரான ராம் ஜேத்மலானியிடம் இவ்வாறு கெஞ்சிக் கொண்டிருந்த பொழுது கூட சாந்தி பூசன், என் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்ற எனது மனுவை விசாரிக்க வேண்டும் என்று கேட்ட பொழுது நீதிபதி கபீர், ‘அதெல்லாம் தேவையில்லை’ என்று பூசி மெழுகி விட்டார்.
ஜேத்மலானியும் தன் பங்குக்கு, ‘பூசனின் பிரமாண பத்திரத்தில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எவ்விதமான மறுப்பும் இல்லை. எனவே அவர் உண்மை என நம்பி கூறியவை குறித்து அவமதிப்பு வழக்கு தொடர முடியாது’ என்று வாதிட வழக்கு மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
***
போன வாரம்தான் தலைமை கண்காணிப்பாளர் (Chief Vigilence Commissioner) மாசற்ற நேர்மையானவராக இருக்க வேண்டும் என்று உறுமிய பொழுது, அரசு தலைமை வழக்குரைஞர் ‘அப்படியானால், நீதிபதிகள் நியமனத்தையும் அதே அளவுகோலில் அளக்க நேரிடும்’ என்று ஏறக்குறைய ஒரு மிரட்டலை விடுத்தார்.
எந்த நீதிபதியும், ‘பிரச்னை இல்லை. எங்களையும் மாசற்ற நேர்மை (impeccable integrity) என்ற அளவு கோலில் அளக்கலாம்’ என்று தலைமை வழக்குரைஞரின் சவாலை ஏற்றுக் கொள்ளவில்லை. முன்னாள் நீதிபதி கிருஷண ஐயர்தான், தலைமை வழக்குரைஞர் எப்படி அவ்வாறு கூறப்போயிற்று என்று ஹிந்துவில் எழுத, தலைமை வழக்குரைஞர் தான் ‘அப்படியொரு அர்த்தத்தில் கூறவில்லை’ என்று ஒரு விளக்கமளித்தார்.
***
சமீபத்தில்தான், ஜேத்மலானி உச்ச நீதிமன்றத்தில் வேறு ஒரு குண்டினை வீசினார். குஜராத் படுகொலைகள் சம்பந்தமான விசாரணை குறித்து உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவினை கூறியிருந்தது. ஆனால் உத்தரவினை கூறிய நீதிபதி ‘வைப்பு நிதி ஊழலில்’ (Provident Fund Scam) சம்பந்தப்பட்டவர் என்று பரவலான பேச்சு இருந்தது. பின்னர் அந்த நீதிபதி ஒய்வு பெற்று விட்டார். ஆயினும் குஜராத் வழக்கு எடுத்துக் கொள்ளப்படுகையில், ஜேத்மலானி, ‘சிபிஐ விசாரணை வளையத்திற்குள் இருக்கும் ஒரு நீதிபதி, சிபிஐ சம்பந்தப்பட்ட வழக்கில் கூறிய தீர்ப்பு செல்லாது’ என்று ஒரே போடாக போட்டார்.
இந்த தொடர் தாக்குதல்களில் உச்ச நீதிமன்றத்தின் மாண்பு (dignity) வெலவெலத்துப் போயிருக்கிறது என்பதுதான் உண்மை.
சாந்தி பூசனின் பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டவைகளுக்கு எவ்வித மறுப்பும் இல்லை. அவை உண்மையெனில், குற்றம் சாட்டப்பட்ட தலைமை நீதிபதிகள் மீது குற்ற வழக்கு தொடரப்பட வேண்டும். உண்மை இல்லை எனில் சாந்தி பூசன் மீது குற்ற வழக்கு தொடரப்பட வேண்டும்.
"ராசாவை ஏன் இன்னமும் விசாரிக்கவில்லை’ என்று உறுமும் உச்ச நீதிமன்றம், ‘ஏன் அந்த எட்டு தலைமை நீதிபதிகள் மீது இன்னமும் குற்ற வழக்கு தொடரப்படவில்லை’ என்று உறுமும் நாள் வந்தால்தான், அந்த மாண்பு காப்பாற்றப்படும்.
கவனிக்கவும், ஊழல்வாதிகள் என்று குறிப்பிடப்படுவது, எட்டு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அல்ல. எட்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள்!! நூறு கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டுக்கான தலைமை நீதிபதிகளின் யோக்கியதையே இப்படி என்றால், மற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள்......உயர்நீதிமன்ற நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள், சார்பு நீதிபதிகள், குற்றவியல் நடுவர்கள் (Judicial Magistrates) ஆகியோரின் நேர்மை?
ஆண்டவன் என்று ஒருவன் இருந்தால் அவன் இந்த நாட்டைக் காப்பாற்றட்டும்
மதுரை
08/12/10
12 comments:
எந்த 8 தலைமை நீதிபதிகள் ஊழல்வாதிகள் என்ற சாந்தி பூசனின் அபிடவிட் இங்கு
http://www.judicialreforms.org/files/sb_application_contempt_case_15092010.pdf
வழக்கிற்கு அடித்தளமிட்ட பிரசாந்த் பூசனின் தெஹல்கா பேட்டி
http://www.judicialreforms.org/files/Tehelka%20interview%20with%20Prashant%20Bhushan.pdf
உச்ச நீதிமன்றத்தில் பிரசாந்த பூசன் தாக்கல் செய்த பதில் அபிடவிட்
http://www.judicialreforms.org/files/Prashant_contempt_reply.pdf
பிரசாந்த் பூசனின் இரண்டாவது பதில் அபிடவிட்
http://www.judicialreforms.org/files/pb_contempt_case_additional_affidavit_15092010.pdf
//
ஆண்டவன் என்று ஒருவன் இருந்தால் அவன் இந்த நாட்டைக் காப்பாற்றட்டும்
//
:-(
இன்னிக்குத்தான் உங்க ப்ளாக் பக்கம் மொதமொதல்ல வர்றேன். ரொம்ப நல்லாருக்கு!
//ஆண்டவன் என்று ஒருவன் இருந்தால் அவன் இந்த நாட்டைக் காப்பாற்றட்டும்// நீங்களே இப்படி சொன்னா என்ன செய்யறது?
உயர்நீதி மன்ற, உச்ச நீதி மன்ற நீதிபதிகள் மீது குற்றம் சுமத்தப் பட்டால் அதை உடனே விசாரிக்கும் அப்பழுக்கற்ற மூன்று ஓய்வு பெற்ற நீதிபதிகள் குழு ஒரு மாதத்தில் முடிவு தெரிவிக்கும் படி ஏற்படுத்தப் பட வேண்டும்.
நீங்கள் கூறுவதில் உண்மை இருந்தாலும் , தற்போதைய சூழலில் உச்சநீதிமன்ற மாண்பு குறித்து
பேசுவதன் மூலம் டெலிகாம் ஊழலில் இருந்து தள்ளி செல்கிறோம்.
இப்படியே மாத்தி மாத்தி சொல்லி கடைசியில் யாரும் யாரையும் கேள்வி
கேட்காமல் இருந்து விட்டால் அதோ கதிதான். :(
Good info. Thanks
மீண்டும் வழக்கு ஜனவரிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது...பிரசாந்த் பூசன் உயிரோடிருக்கும் வரைக்கும் இந்த வழக்கு இழுக்கப்படும் போல!
Reckless remarks will weaken judiciary, says Supreme Court
http://www.thehindu.com/todays-paper/tp-national/article2699997.ece
பிரசாந்த் பூசன் மீதான வழக்கு இன்னமும் முடிவுக்கு வரவில்லை. அந்த வழக்கோடு ஒப்புமைப்படுத்துதல் முறையன்று என்றாலும், சென்னை உயர்நீதிமன்றம் தன்பங்குக்கு ஒரு வாலை பிடித்துள்ளது. பிடித்தது புலிவாலா அல்லது எலிவாலா என்று அடுத்த மாதம் தெரியும்
http://www.thehindu.com/news/states/tamil-nadu/article2876284.ece
Post a Comment