25.5.06

கலப்புமண வாரிசு - ஜாதி?



சில நாட்களுக்கு முன்னர் திரு.பத்ரி நாராயணன் தனது ‘எண்ணங்கள்’ வலைப்பதிவில் இட ஒதுக்கீடு பற்றி எழுதியிருந்த பதிவில் ‘இட ஒதுக்கீடு பற்றி எழுதப்படும் பலவித கருத்துகளில் கலப்பு மணம் பற்றி, ஏன் விவாதம் ஏதும் இல்லை’ என்ற வியப்பினை எனது பின்னூட்டத்தில் தெரிவித்திருந்தேன். யாரும் இது வரை ஏதும் தெளிவான விவாதம் எதனையும் முன்னெடுக்காததினால், ‘தனது, தனது பிள்ளைகள் திருமண விடயத்தில் சாதி சார்ந்த இட ஒதுக்கீட்டினை கடைபிடிக்கும் யாருக்கும் கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீட்டினை மறுக்க உரிமை கிடையாது’ என்ற எனது நிலைப்பாட்டில் இதுவரை மாற்றமில்லை.

கலப்பு மணம் இட ஒதுக்கீட்டு பிரச்னையை போக்க உதவுமா? என்றால் கட்டாயம் உதவும் என்பது எனது அனுமானம். எனது மேற்கூறிய பின்னூட்டத்திலேயே, கலப்புமணம் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு தந்தை அல்லது தாய் இருவரில் ஒருவருடைய ஜாதியினை தேர்ந்தெடுக்கலாம் எனவும் குறிப்பிட்டிருந்தேன்.

ஆதிரை என்பவரின் ‘உள்ளல்’ என்ற வலைப்பதிவில் எனது பின்னூட்டம் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தாலும், கலப்பு மணம் குறித்து நான் கூறியது ஏதும் இல்லை. ஆனால், ஆதிரை எனது பின்னூட்டத்தினை முழுவதுமாக படிக்கவில்லை என நினைக்கிறேன், ‘கலப்புமணம் யாருடைய ஜாதிக் கணக்கில் வரும்?’ என்ற கேள்வியினை பொதுவில் எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த ‘வவ்வால்’ என்ற வலைப்பதிவாளர் கலப்பு மணத்தின் வாரிசுக்கு தந்தையின் ஜாதியே தரப்படும் என்று ஒரே போடாக போட்டிருந்தார். இதனை அவர் எங்கு படித்தார் என்று தெரியவில்லை. ஆனால் அந்த தகவல் நானறிந்த வரையில் தவறு என்று சுட்டிக்காட்டவே இப்பதிவு.

தமிழ்நாடு அரசு 27.06.75 தேதியிட்ட தனது அரசாணை எண் 477ன் மூலம் கலப்புமண தம்பதிகள் தங்களில் யாராவது ஒருவருடைய ஜாதியினை தங்களது குழந்தைகளுக்கு தேர்ந்தெடுக்க அனுமதியளிக்கிறது. ஆனால், அனைத்து குழந்தைகளும் ஒரே ஜாதியினைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். தமிழக அரசு பின்னர் தனது 16.08.94 தேதியிட்ட அரசாணை எண் 17ன் மூலம் ஒரு திருத்தத்தினை கொணர்ந்தது. அதாவது, அட்டவணை வகுப்பினரைப் பொறுத்தவரை அந்தக் குழந்தைகள் அந்த வகுப்பினரால் தங்களில் ஒருவராக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும். அட்டவணை வகுப்பு என்று சான்றிதழ் பெற இந்த ஒரு தகுதியும் பெற வேண்டும். அட்டவணை வகுப்பினரைப் பொறுத்தவரை மத்திய அரசிற்கே அதிகாரம் உண்டு. எனவே இந்த திருத்தம் மத்திய அரசின் அறிவுரையின் பெயரில் ஏற்ப்படுத்தப்பட்டது. இதற்கான காரணம் தற்பொழுது தேவையில்லை. நாம், தெரிந்து கொள்ள வேண்டியது ‘கலப்பு மணம் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் தங்களில் யாராவது ஒருவரின் ஜாதியினை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்’ என்பதே!

மேலும் கலப்பு மணத்தினை ஊக்குவிக்கும் வண்ணம் ஊக்கத் தொகை போன்ற பிற பயன்களையும் அரசு அளிக்க முன்வருகிறது. முக்கியமாக 28.12.76 தேதியிட்ட தமிழக அரசு அரசாணை எண் 188ல் வேலை வாய்ப்பில் கூட முன்னுரிமை வழங்கப்படுகிறது.

காவியட்...

பல சமயங்களில் சில வக்கீல்கள் சட்டம் தெரிந்து சம்பாதிப்பதை விட சட்டம் தெரியாமல் சம்பாதிப்பது அதிகமாக இருக்கும். அதுவும் நமக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்களில் தலையிடும் பொழுது இப்படி அடிக்கடி நடப்பதுண்டு. புலி பசித்தால் சிறிது புல்லையும் தின்ன வேண்டியது போல சிவில் வழக்கறிஞர்கள், கிரிமினல் வழக்குகளையும் எடுத்துக்கொள்வதுண்டு. ஆனால் கிரிமினல் வக்கீல்கள் சிவில் கோர்ட்டுகள் பக்கம் தலை வைத்துப் படுப்பது எப்பவாவது குறிஞ்சிப்பூ பூப்பது போலத்தான் நடப்பதுண்டு.

சிவில் வழ்க்குகள் நடத்தியர்வர்கள் காவியட் (CAVEAT) என்ற வார்த்தையினை கேள்விப்பட்டிருக்கலாம். யாரவது நம்மீது வழ்க்கு தொடர்ந்து, நமக்கு தெரியாமல் ஏதாவது ஆர்டர் (ORDER) வாங்கிவிடுவார்கள் என்று எதிர்பார்த்தால், நாம் ஒரு நாலு எழுத்து மனுவை எழுதி, இல்லை இதற்கென பிரிண்ட் செய்யப்பட்ட பாரம் உண்டு, அதனை நிரப்பி கோர்ட்டில் தாக்கல் செய்து விடலாம். எல்லாம் சேர்த்து செலவு ஐம்பது ரூபாய்க்கு மேல் ஆகாது. இந்த சம்பவம் நடந்த காலமான சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்னர் ஒரு முன்னூறு ரூபாய் செலவில் காவியட் தாக்கல் செய்து விடலாம். இதனால் பெரிய பலன் ஒன்றும் இல்லை. எதிராளி வழக்கு தாக்கல் செய்தால் உங்களுக்கு முன்னரே தெரிவிக்க வேண்டும். வக்கீல்களின் சில்லறை செலவுகளை கவனிப்பதற்கென்றே இப்படி சில வசதிகள் சட்டத்தில் உண்டு.

ஒரு நாள் எங்களுக்கெல்லாம் நன்கு தெரிந்த அந்த வக்கீல் அவசரமாக வந்தார். சிவில் கோர்ட் வாசனையே அறியாத கிரிமினல் வக்கீல் அவர். வந்தவர் நேரடியாக என் சீனியரிடம் சென்றார்.

"அணணாச்சி காவியட்டுனா என்ன?"

"என்னல! உங்க காலேஜ் வாத்தியார்ட்ட கேக்கறத இங்க வந்து கேக்கற..."

இந்த 'ஏல' விளிச்சொல் என்னுடைய சீனியரிடம் கிடைக்கக்கூடிய அதிகபட்ச மரியாதை. இதர வார்த்தைப் பிரயோக்ங்களை விவரிப்பது நாகரீகமாக இருக்காது. நானும் மும்பை, டெல்லி வரை பார்த்து விட்டேன். வழக்கறிஞருகளுக்கு ஜட்ஜ்மெண்ட், அப்பீல் போன்ற வார்த்தைகள் எவ்வளவு இலகுவோ அதை விட சுலபமாக சில நான் இங்கு எழுதத்தயங்கும் சொற்பிறயோகங்கள் தெறித்து வரும்.

"இல்ல அண்ணாச்சி, எனக்கு ஒரு காவியட் ஃபைல் பண்ணணும். என்ன செய்யணும் சொல்லுங்க..."

"அங்க செல்லப்பா இருக்கான். அவன்ட்ட போயி...பேரு, அட்ரெஸ்லாம் சொல்லி ஒரு நூறு ரூபா கொடு. ஃபைல் பண்ருவான்." சீனியருக்கோ அவருடைய வேலை கெடுகிறதே என்று கவலை. செல்லப்பா எங்கள் கிளார்க்.

"அவ்வளவுதானா, கோர்ட்டுல ஒண்ணும் இல்லயா! அவ்வளவுதானா" நண்பருக்கு நம்பிக்கையில்லை.

"அவ்ளவுதான். வேலய கெடுக்காத. எடத்த காலி பண்ணு".

"இல்ல அண்ணாச்சி. என்னோட க்ளையண்ட்தான். வந்து கேட்டப்ப எனக்கு ஒண்ணும் தெரியல. முதல்ல ஐயாயிரம் ஆகும்னேன். கொடுத்துட்டுப் போய்ட்டான்"

"என்னது" சீனியர் நிமிர்ந்து உட்கார்ந்தார். வந்த நண்பரை ஏற இறங்க பார்த்தார்.

"ஏல செல்லப்பா...இவன்ட ஐநூறு ரூபா வாங்காம கேவியட் ஃபைல் பண்ணிராத..”

(எனது மனைவியின் சகோதரி பெரிய கார்ப்பரேட் ஃப்ர்ம்மில் பங்குதாரராக உள்ளார். சில சமயம் காவியட் தாக்கல் செய்ய வேண்டி மதுரை, எர்ணாகுளம் என்று விமானத்தில் அவர் பறக்கையில் இந்த சம்பவம் நினைவுக்கு வரும்)

24.5.06

ஐந்து ரூபாய்...



சுவராசியத்துக்கு பஞ்சமில்லாத தொழில் ஒன்று உண்டென்றால் இந்த வக்கீல் தொழிலைப் போல வேறு ஒன்றும் இல்லையென்று அடித்துச்சொல்லி விடுவேன். ஆனால் கிணற்றுத் தவளை தனது கிணற்றை பற்றிப் பெருமையடித்தது போல ஆகி விடலாமென்ற எச்சரிகையின் காரணமாக தொழில்களில் ஒன்று என்று நிறுத்திக் கொள்கிறேன். நான் இப்படி சொல்வதற்கு காரணம் கூட என்னால் சொல்ல முடியும். மனித மனம் மற்றும் செயல்கள் யாரலும் அறுதியிட்டுக் கூற முடியாத மகாக்குழப்பம். அத்தகைய இரண்டு, ஏன் அதற்கு மேலும் அதிகமான மனங்களின் போராட்டத்தின் முடிவினை யாரால்தான் அனுமானிக்க முடியும். வேகமாக விளையாடப்படும் செஸ் போல எத்தனை இயக்கங்கள், சூதுகள் மற்றும் திட்டங்கள். எனவேதான் நான் மொபசல் கோர்ட்டுகளில் அனுபவித்த சுவராசியங்கள் ஹைகோர்ட் போன்ற மேல் கோர்டுகளில் இல்லை. அப்பீல் கோர்ட்டுகளில் வாதி, பிரதிவாதிகளோடு புழங்குவதை விட கேஸ் கட்டுகளோடு மன்றாடுவதுதான் அதிகம். அப்பீல் கோர்ட்டுகளில் விசாரணையோ, குறுக்கு விசாரணையோ கிடையாது. எல்லாம் கீழ்கோர்ட்டுகளில் நடந்து முடிந்து ரிக்கார்டுகளாக்கப்பட்டு, வீங்கிப்போன கட்டுகளை புரட்டிப் போடுவதோடு சரி. பல சமயங்களில் கட்சிக்காரரின் முகம் கூட தெரியாமல் தபாலில் வந்த கட்டுகளையும் அதனோடு இணைத்து அனுப்பப்பட்ட டிமாண்டு டிராப்டையும் வைத்து கேஸ் நடந்து முடிந்து விடும். இதில் என்ன சுவராசியம் இருக்கப் போகிறது. ஆனால் நான் எற்கனவே சொன்னபடி டிரையல் கோர்ட்டுகளில் அப்படியல்ல. எப்போது என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது. எப்போது யாருக்கு அதிஷ்டம் அடிக்கும் என்பதையும் சொல்ல முடியாது.


எனக்குத் தெரிந்த வக்கீல் ஒருவருக்கு இப்படி ஒரு அதிஷ்டம் அடித்தது. அவர் ஒரு நல்ல கிரிமினல் வக்கீல். பதினைந்து வருஷம் இருக்கும். ஒரு பெயில் சம்பந்தமாக ஆஜரானார். பெயிலும் கிடைத்தது. கைதானவரின் அப்பாவுக்கு பெரிய சந்தோஷம்.


"ரொம்ப தேங்ஸ், பீஸ் தரணும் உங்களுக்கு....எவ்வளவு"


"என்ன... ஒரு அஞ்சு ரூபா கொடுங்க" வக்கீல் நண்பர்.


ஐநூறை அஞ்சாக சொல்வதில் ஒரு சலிப்பும் கலந்திருந்தது, இதெல்லாம் ஒரு பீஸா என்று. வழக்கு சாதகமாக முடிந்தால் வக்கீல்களின் பேச்சில் ஒரு சின்ன அலட்சியம் தென்படுவது கோர்ட்டுக்கு சென்றவர்களுக்குத்தான் தெரியும்.


"கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கே...மூணு ரூபாயா வாங்கிக்கங்க. அடுத்த தடவ பாக்கலாம்."


பதறினார் வக்கீல்," பாய்...அதுக்கெல்லாம் அப்பியரானா கஷ்டம். சரி நாலு ரூபாயா தந்துருங்க..."


பாய் யோசித்தார். நண்பருக்கு கவலை...ஒரு நல்ல கட்சிக்காரரை இழந்து விடுவேமோ என்று. இந்த மனப்போராட்டங்களெல்லாம் ஒரு சில நொடிப்பொழுதில் நடந்து முடிந்து, வக்கீல் வாய் திறப்பதற்குள், கட்சிக்காரர் "இந்தா..பிடிங்க, மனசா வாங்கிக்கங்க..." பணத்தை நீட்டினார்.


வாங்கிய வக்கீல் நண்பருக்கு அதிர்ச்சி...பின்ன பாய் மூவாயிரத்தோடு ஒரு ஐநூறை சேர்த்து, முவாயிரத்து ஐநூறாக அல்லவா தந்திருந்தார். நண்பர் ஐநூறை ஐந்தாக்க, வந்த பாயோ ஐயாயிரமாக நினைத்திருக்கிறார்.

23.5.06

வளர்ச்சியின் விலை?


சுரங்கத் தொழிலாளர்களின் ‘குமாரா ரேஸ்கோர்ஸ்’ சுற்றுலா ஏறக்குறைய அனைத்து குடும்பங்களும் பங்கெடுக்கும் வைபவம். ‘ஸ்டில்வாட்டர் ரயில்நிலைய’த்தில் இருந்து அந்த 14 பெட்டிகள் கொண்ட ரயில் கிளம்புகையில் அநேகமாக மாவட்டத்திலுள்ள அனைத்து தொழிலாளர் குடும்பங்களும் அதில் ஆஜராகியிருப்பார்கள். அந்த நாள் ரயில் பயணம் செய்யும் அனைவரும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்களாகத்தான் இருப்பார்கள். சிறுபிள்ளைகளான நாங்கள் அனைவரும் சுற்றுலா நாளை, அது எப்போது வரும் என்று மிக்க ஆவலாக எதிர்பார்த்திருப்போம். பெண்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து ஊர்வம்பு பேசிக் கொண்டிருப்பார்கள். ஆண்கள் தனியே வேறொரு பெட்டியில் அமர்ந்து கொண்டு பியர் அருந்திக் கொண்டு....அவர்கள் ஒன்றாகச் சேர்ந்தால் வழக்கமாக எதைப் பேசுவார்களோ, அதைப் பேசிக்கொண்டிருப்பார்கள். பிள்ளைகள் தங்களது உற்சாகத்தை அடக்கமுடியாமல் ரயிலுக்குள் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருப்பார்கள். எனக்கென்னவோ ஜன்னல் வழியாக வெளியே கடந்து மறையும் காட்சிகளைக் காணத்தான் பிடிக்கும்.


அந்த நாட்களில் ரயில் ஒரு பெரிய சைத்தான்...பிசாசு போல இருக்கும். நீராவியில் ஓடும் அந்த ரயில் குடியிருப்புகள் ஏதுமில்லாத நிலப்பரப்புகளினூடே கடந்து செல்லும். ரயில்பாதை கடற்கரையோரமாக நீண்டு கிடக்கும். கடற்பறவைகள் மீன்களுக்காக கடலினுள் வேகமாக கீழிறங்குவதைப் பார்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும், சில சமயம் அலைகளின் மேலாக துள்ளும் டால்பின்களும் தென்படும். பயணத்தில் இறுதியில் குமாரா ரேஸ்கோர்ஸ¤க்கு ஒரு பெரிய கூட்டமாக வந்து இறங்குவோம். புல்வெளியில் தட்டுத்தடுமாறி அங்குமிங்கும் ஓடி, கீழே விழுந்தும் நல்ல இடங்களைத் தேடுவோம். அனைவரும் ஒரு வழியாக ஆங்காங்கே ஒருவழியாக கூடியமர்வார்கள். விரைவிலேயே மற்ற நிகழ்ச்சிகள் ரம்பித்துவிடும்.


எப்போதும் முதலில் ‘சாக்கு ரேஸ்’தான் இருக்கும். முதலாவது வரும் அதிஷ்டசாலிக்கு ஏழு ஷில்லிங்ஸ் பரிசாக கிடைக்கும். நான் இரண்டு முறை வென்றிருக்கிறேன். வயதுவாரியாக எங்களை நிற்க வைத்து ஓட விடுவார்கள். அந்த சாக்குகள் வேறு பெரிதாக சில சமயம் எங்கள் நாடியைக் கூட மூடும் வண்ணம் இருக்கும். ரேஸ் நடத்துபவர் விசில் ஊதியதுதான் தாமதம், அந்த சாக்குக்குள் நாங்கள் முடிந்தமட்டும் இப்படியும் அப்படியும் முடிந்தமட்டும் துள்ளி துள்ளி தட்டுத் தடுமாறி ஓடுவோம்...


அடுத்தப் போட்டி ‘மூன்று கால் ரேஸ்’. பங்கு கொள்ளும் பிள்ளைகளானும் சரி, பார்த்துக் கொண்டிருக்கும் பெற்றோர்களானாலும் சரி...இந்தப் போட்டிதான் அதிகம் பிடித்தது. இந்தப் போட்டியில் கலந்து கொள்வதற்கு எங்களுக்கு உருவத்தில் எங்களுக்கு சம அளவில் இருக்கும் கூட்டாளியைத் தேடிக் கொள்வோம். கூட்டாளிகள் இருவரும் அடுத்தடுத்து நின்று தங்கள் கால்கள் ஒன்றோடொன்றை சாக்ஸ் வைத்து இருக்கக் கட்டிக் கொள்ள வேண்டும். விசில் ஊதியவுடன் கூட்டாளிகள் இருவரும் தங்களது மூன்று கால்களில் ஓட வேண்டும். இந்தப் போட்டியில் வெற்றி பெறுவதன் ரகசியம், போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர் கொஞ்சம் பயிற்சி செய்து கொள்ளுதல். அதனால் இருவரும் ஒரே சீராக ஓட இலகுவாக இருக்கும். அடுத்த முக்கிய விஷயம், சிரித்து விடக்கூடாது. சிரிக்க ஆரம்பித்தால் அவ்வளவுதான் கீழே விழ வேண்டியதுதான்.


அதற்கடுத்தப் போட்டிக்கு முன்னதாக அனைவரும் தாகசாந்திக்கு கூடி விடுவார்கள். பொதுவாக ‘ஸ்நோ•ப்ளேக்’ ஐஸ்கிரீம் மற்றும் சோடா மாதிரி குளிர் பானங்கள் இருக்கும். உடனடியாக அடுத்த போட்டி தொடங்கி விடும். தள்ளுவண்டி ரேஸ். இதற்கு கொஞ்சம் கவனம் தேவை. அவரவர் சொந்த ரிஸ்க்கில்தான் கலந்து கொள்ள முடியும். கலந்து கொள்ளும் சிறுவர்கள் கொஞ்சம் திடகாத்திரமாக இருத்தல் நல்லது. பொதுவாக சிறுமிகள், அவர்களது உடை இந்தப் போட்டிக்கு அவ்வளவு பொருத்தமாக இருக்காதென்பதால் கலந்து கொள்வதில்லை. இந்தப் போட்டிக்கும் கூட்டாளி தேவை. ஒருவர் தரையில் கைகளால் ஊன்றிக் கொள்ள மற்றவர் அவரது கணுக்காலைப் பிடித்து தூக்கிக் கொண்டு தள்ளுவண்டியை தள்ளிச் செல்வது போல ஓட வேண்டும். முதல் பரிசாக பத்து ஷில்லிங் கிடைக்கும், இரண்டு பேருக்கும் சேர்த்துதான்...


அடுத்த போட்டி வேடிக்கையானது! நாங்களெல்லாம ஆளுக்கொரு ஸ்பூனில் அவித்த முட்டையை வைத்து கொண்டு வரிசையாக நிற்போம். பின்னர் அப்படியே ஓடுகளத்தை ஒரு முறை சுற்றி வர வேண்டும். முட்டையை ஸ்பூனில் இருந்து கீழே விழாமல் முதலில் வருபவருக்கு பரிசு. இன்னும் கூட நிறைய போட்டிகள் இருக்கும், முக்கியமாக ‘கம்-பூட்’ எறியும் போட்டி. இந்தப் போட்டியில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். எங்கள் அம்மாக்கள் எல்லோரும் பூப்போட்ட •ப்ராக்குகள், முழுக்கை ஸ்வெட்டர், முத்து நெக்லஸ், ஹை ஹீல் ஷ¥க்கள், ஸ்டாக்கின்ஸ் சகிதம் போட்டிக்கு சம்பந்தமேயில்லாத விதவித உடைகளில் போட்டியில் கலந்து கொள்ள முன்வந்து, வரிசையில் நிற்பதே வேடிக்கையாக இருக்கும். ஆனால், அவர்களே நன்றாக எறிவார்கள். நானும் கூட சில சமயம் வென்றிருக்கிறேன். ஏனோ தெரியவில்லை, எனக்கு இந்தப் போட்டியில் நல்ல திறமையிருந்தது.


வேறு வேடிக்கை விளையாட்டுகளும் இருக்கும். கயிறு இழுத்தல், மரக்கட்டையை பிளத்தல்...இன்னும் சில, எல்லோருக்கும் ஏதாவது கிடைக்கும் வண்ணம். பொதுவாக அனைவருக்குமே சாக்கலேட் பார் பிற மிட்டாய்கள் என ஏதாவது பரிசு கிடைத்துவிடும். அந்தநாளின் ஒவ்வொரு நிகழ்ச்சியுமே எனக்கு மிக மிக முக்கியமானதாக இருக்கும்.


மதிய உணவு பிரமாதமாக இருக்கும். ஒவ்வொரு வீட்டிலிருந்தும் மற்றவர்களுக்கு போட்டியாக விதவிதமாக சமைத்து கொண்டு வருவார்கள். அம்மாவின் உணவு, சுத்தமான கசங்கலில்லாத வெள்ளை நிற மேசை விரிப்பு, தட்டு, கத்தி மற்றும் முள்கரண்டி என பாரம்பரியமான முறையில் இருக்கும். ரொட்டி, பழ கேக்குகள், ஸ்கான், பேஸ்டிஸ், ஸ்வாண்டிச்கள், ஊறுகாய், பலவகை இறைச்சி வகைகள், சாலட்கள்...பின்னர் நியூசிலாந்தின் வழக்கமான உணவாக எப்போதும் இருக்கும் சாஸேஜ்கள் மற்றும் அனைத்து வகை உணவுகளும் இருக்கும். சூடான தேநீருடன் இந்த உணவுகள் ஒன்றன்பின் ஒன்றாக காலியாகும். காப்பி அப்போதெல்லாம் வழக்கத்தில் இல்லை. ஆனால், ‘பெரியவர்களுக்கானது’ என்று கூறி எங்களுக்கு தேநீர் குடிக்க அனுமதியிருக்காது. சோடா பானங்கள்தான். எனது ஃபேவரிட் ராஸ்பரி சோடா!


எப்படித்தான் ஓடியது என்று தெரியாமலேயே அந்த நாள் வேகமாக கடந்து முடிந்துவிடும். மாலையில் ரயிலில் அனைவரும் ஏறிக்கொள்ள, காலையில் இருந்த உற்சாகம் இருக்காது. பிள்ளைகள் எல்லாம் உறங்கிப் போக காலையில் ரயிலில் இருந்த சத்தமும் இருக்காது. ஆண்கள் வழக்கமாக மதுமயக்கத்தில் கிடக்க பெண்கள் தங்களது ஊர்வம்புகளை விடாது நடத்துவார்கள். அடுத்த நாள் காலை எழும் போதுதான் நானும் வீடு வருமுன்னே உறங்கியிருப்பது தெரியும்...


கார்கள் வந்தபின்னர் இந்த சுற்றுலாக்கள் தொழிலாளர்களிடையே கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து போனது. அப்போதெல்லாம் கார்கள் பலரால் நினைத்துப் பார்க்க முடியாத ஆடம்பரப் பொருள். நாளாவட்டத்தில், கார்களில் விலையும் குறைந்தது. தொழிலாளர்களில் சம்பளமும் கூடிப்போக முக்கியமாக...முன்னேற்றத்தின் ஆதிக்கதில்...எங்கள் சுற்றுலாக்கள் இல்லாமலேயே போயிற்று. பொருளாதார முன்னேற்றத்திற்காக நாம் அளிக்கும் விலையா?
ஏன்...முன்னேற்றமென்பது இப்படித்தானிருக்குமா?




21.5.06

அவர்கள் மாறவேயில்லை...


இன்று மாலை அப்பாவுடன் போனில் பேசிக்கொண்டிருந்தேன். நாங்கள் பேசியதைவிட சிரித்ததுதான் அதிகம். அவருக்கு புற்று நோயாம், இன்னும் மூன்று நாட்களில் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேரவேண்டுமாம். அதைப் பற்றி அவர் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. தனது சுரங்கத் தொழில் நாட்களைப் பற்றி சிரிக்க சிரிக்க பேசிக் கொண்டேயிருந்ததில் எனக்கும் எந்த கவலையும் தெரியவில்லை. இறுதியில் நானும், "அப்பா இது நல்லது. பைபிளில் கூட இப்படித்தான், 'நகைச்சுவை, இதயத்திற்கு மருந்தினை விட களிப்பான ஒன்று' என்று இருக்கிற்து" என்றேன்.

கிறிஸ்மஸ¤க்கு சுரங்கத் தொழிலாளர்களுக்கு நான்கு வார விடுமுறை. விடுமுறையினை விட முக்கியமானது, அதன் தொடக்கத்தில் அளிக்கப்படும் விடுமுறைக் கொடை. அந்த ஒரு மாத விடுமுறையினைக் கொண்டாட அது போதும். பெருந்தொகையினை சுமந்து அனைவரும் தங்கள் தங்கள் வீட்டுக்கு உற்சாகமாக புறப்பட்டு விடுவர். அனைவரும் என்றால் எல்லோருமே அல்ல. சிலருக்கு வீட்டிற்கு போவதை விட நாற்பத்தைந்து மற்றும் போக்கர் சூதாட்டம்தான் முக்கியம். வீடெல்லாம் அதற்குப்பிறகுதான்....

அதற்கிடையில் சுரங்கத்தின் குளியல் கூட கண்காணிப்பாளர், 'இந்த அழுக்குப் பிடித்த சுரங்கச் சீருடையினை எல்லாம் வீட்டுக்கு எடுத்துச் செல்கிறீர்கள? அல்லது நான் தூர எறியட்டுமா?' என்று கத்துவார். தெள்¢வுடனிருக்கும் ஒரு சிலரைத் தவிர வேறு யாரும் அதைச் சட்டை செய்வதில்லை. 'உன் இஷ்டம்' என்னும் அவர்களது கவனம் ஆட்டத்தில் இருக்கும் அல்லது வீட்டுக்கு செல்லும் உற்சாகத்திலிருக்கும். கையிலிருக்கும் பணத்துக்கு புதுச் சீருடை வாங்கிக் கொள்ளலாமே! பழைய சீருடையினை வாங்கிச் செல்லும் சிலரை மற்றவர்கள் அற்பமாகப் பார்ப்பார்கள்.

குளியல் கூட தொழிலாளி அவர்களை திட்டிக் கொண்டே பழைய சீருடைகளை எடுத்துப் போய், குளியலறைக்கு பின்புறமாக உள்ள புதர்களடர்ந்த சதுப்புக் காட்டில் தனக்கு முடிந்தமட்டும் முழுச் சக்தி கொண்டு வீசி எறிவான்.

நான்கு வார விடுமுறை சீக்கிரமாகவே ஓடி விடும். மறுபடியும் ஷிப்ட் தொடக்கத்துக்கான சங்கொலிக்கு அனைவரும் ஆஜராகி விடுவர். அனைவரும் என்றால் எல்லோருமே இல்லை. சிலர் குளியலறைக்கு பின்புறமாக உள்ள புதர்களடர்ந்த சதுப்புக் காட்டில், அவசர அவசரமாக எதனையோ தேடிக் கொண்டிருப்பர். இறுதியில் அனைத்து தொழிலாளர்களும் வந்து ஒரு சேர நிற்கும் போது அது ஒரு வேடிக்கையான காட்சியாக இருக்கும்.

பலர் புத்தம் புதிய பளபளக்கும் சீருடையில் நிற்பர். மற்ற சிலரின் உடைகள்தான் வினோதமானதொரு கலவையில் இருக்கும். குள்ளமான ஒருவர் தனது கால்சாராயினை கீழே மடித்து விட்டிருப்பார். ஆறு அடி உயரத்துக்கும் மேலான நெட்டையானவரோ, தனது முட்டிக்கு கீழே சிறிது தூரத்தில் நின்று போன கால்சாராயோடு பரிதாபமாக காட்சியளிப்பார். வேறு சிலர் ஒரு காலில் எட்டாம் நம்பர் அளவுள்ள ஷ¤வும் மறு காலில் பத்தாம் நம்பர் ஷ¤வுமாக, அழுக்குப் பிடித்த, பொத்தலாய், கந்தலான ஸ்டாக்கின்ஸ¤டனும் அதை விட கந்தலான் பனியனுடனும் பார்ப்பதற்கே கோரமாய் நின்று கொண்டிருப்பார்.

வருடம்தோரும் தவறாமல் நடக்கும் நிகழ்ச்சியாம் இது. இதைச் சொல்லி விட்டு அப்பா பெரிதாகச் சிரித்தார், "ஒரு போதும் இந்த சுரங்கத் தொ'ழிலாளர்கள் மாறவேயில்லை" என்றார்.....


20.5.06

சர்ஜிகல் கத்தி!

ஞாயிற்றுக் கிழமை அப்பாவுடன் போனில் பேசிக் கொண்டிருந்த போதும் வழக்கம் போலவே சிரிப்புதான். கெல்லியினைப் பற்றி சொல்லிக் கொண்டிந்தார். கெல்லி ஐரிஷ்காரர். அவர்தான் சுரங்கம் தோண்டும் கோடாலி போன்ற உபகரணங்களுக்கான பொறுப்பாளி மற்றும் 'ஸ்டோர் கீப்பர்'.

அப்பாவுக்கு அன்று நல்ல ஒரு கோடாலி தேவைப்பட்டது. சுரங்கத்தின் உட்புற சுவர்களைத் தாங்கும் மரத்தாலான உத்திரத்தினை செதுக்க வேண்டியிருந்தது. கெல்லியின் அறையில் நல்ல கூர்மையான ஒரு கோடாலி அப்பாவின் கண்களில் பட்டது. அதனை எடுக்க குனிகையில் பாய்ந்து வந்தார் கெல்லி, 'இல்லை. இல்லை... எடுக்காதே! அது எனது சர்ஜிகல் கத்தி'

ஆம், சுரங்கத் தொழிலாளர்களின் பார்வையில் உண்மையிலேயே அது ஒரு சர்ஜிகல் கத்திதான். தொழிலாளர்களுக்கு பணமுடையாயிருபின் அவர்கள் போகுமிடங்களில் ஒன்று கெல்லியின் அறை. ஒரு தேர்ந்த மருத்துவரைப் போல நேர்த்தியாக, கெல்லி அவரது 'சர்ஜிகல் கோடாலி' கொண்டு, தொழிலாளியின் விரல்களில் ஒன்றை துண்டாக்கி விடுவான். பின்னர் தொழிலாளி, சுரங்கத் தொழில் விபத்துக்கான நீதிமன்றத்தினை அணுக, இரக்கமுள்ள நீதிபதியும் சும'ர் 500 பவுண்டுகள் வரை, விரலை இழந்த தொழிலாளியின் 'வலி மற்றும் வேதனை'களுக்காக ஈட்டுத் தொகையினை அளிக்க உத்தரவிடுவார்.

இந்த சர்ஜரி தொழிலினால் கெல்லிக்கு நல்ல உபரி வருமானம். ஈட்டுத் தொகையில் 20 சதவிகிதமல்லவா அவரது கமிஷன். அதிகம்தான் என்றாலும் வாங்கிய பணத்துக்கு நிகரான, திறமை அவரிடம் இருந்ததாம். ஆனாலும் ஒரு முறை ஒரு துரதிஷ்டமான தொழிலாளியின் இரண்டு விரல்களை ஒரே வீச்சில் துண்டித்து விட்டாராம். செய்வதையும் செய்துவிட்டு சாதரணமாக சொன்னாராம், 'இன்றைக்கு எனக்கு நாள் சரியில்லை. அதான் இப்ப்டி...'

அப்பாவின் நண்பர் டான்க் ப்ராம்லியின் கதைதான் இன்னும் சோகமானது. அவருக்கு கெல்லியிடம் நம்பிக்கையில்லை. ஏற்கனவே மற்றொரு விரலுக்காக கெல்லியிடம் அநியாய தண்டம் அழுததில் அவருக்கு கொஞ்சம் அவர் மீது கோபம் இருந்தது. எனவே தானாகவே ஒரு விரலை செதுக்கிக் கொண்டார். பின்னர் வழக்கம் போல 'கிரேமவுத் (Greymouth) மாவட்ட நீதிமன்றத்தில் நஷ்டஈட்டு வழக்கில் ஆஜராக வேண்டியிருந்தது. அதற்கிடையின் நீதிபதிக்கு டாப்ஸன் சுரங்கத்தினைப் (Dobson Mine) பற்றியும் அதன் வழக்கத்துக்கும் அதிகமான 'விரல் துண்டிப்பு' விபத்துக்களைப் பற்றியும் சந்தேகம் வந்து விட்டது. நீதிமன்றத்திலேயே, டாப்ஸன் சுரங்கத்திலிருந்து விரல்கள் துண்டிக்கப்பட்டு நஷ்ட ஈட்டுக்காக தாக்கல் செய்யப்படும் வழக்குகள், நியூஸிலாந்தின் இதர அனைத்து சுரங்கங்களை விட அதிகமாக இருப்பதாக' கூறி, அதனைப் பற்றி விசாரிக்க வேண்டும் என்றும் பணித்திருந்தார்.

டான்க் ப்ராம்லியின் வழக்கு விசாரணைக்கு வந்தது. தான் கோடாலியினைத் தாங்கியபடி ஏணியில் ஏறிக்கொண்டிருக்கையில் திடீரென வழுக்கி விழுந்து விட்டதாகவும் அவரது கையிலிருந்த கோடாலி நழுவி அவரது விரலின் மீது விழுந்து விரலை துண்டித்து விட்டதாக கூறினார்.

நீதிபதி இந்த முறை ப்ராம்லியின் விளக்கத்தை நம்ப தயாரில்லை. சுரங்க மருத்துவரின் அறிக்கையினை சமர்ப்பிக்கும்படி கூறிவிட்டார். அதில் விரல் துண்டிக்கப்பட்டதனைத் தவிர வேறு சிராய்ப்புக் காயங்கள் கூட எதுவும் கூறப்படவில்லை. அதனை வைத்து அந்த இரக்கமற்ற நீதிபதி, 'ஏணியில் ஏறுகையில் கீழே விழுந்ததாக சொல்லும் ப்ராம்லியின் கூற்றில் உண்மையில்லை' என்று சொல்லி வழக்கை தள்ளுபடி செய்து விட்டாராம்.

பாவம் ப்ராம்லிக்கு நீதிமன்றத்திலிருந்து எவ்வித பணமும் கிடைக்காமல் வரவேண்டியதாகி விட்டது. விரலும் போயிற்று. அந்த விரல் ஏற்கனவே போன விரலோடு சேர்த்து இரண்டாவது விரல்.

இதைச் சொல்லி விட்டு அப்பா, 'இரண்டு கைகளிலும் ஒவ்வொரு விரலை இழந்த டாப்ஸன் சுரங்கத் தொழிலாளர்களைப் பார்ப்பது ஒன்றும் அரிதான விஷயமில்லை' என்றார். நானும் அப்படிப் பார்த்திருக்கிறேன், அப்பாவின் நண்பர் ப்ராம்லி உருவத்தில்.

'மரத்தில் இருக்கும் பலாய்க்காய்க்கு (பண்க்காய்க்கு) கையில் இருக்கும் களாக்காயே (கைவிரல்களே) மேல்' என்ற பழமொழிதான் ஞாபகம் வருகிறது...
(நியூசிலாந்து நாட்டிலிருந்து நண்பரொருவர் எனக்கு சுவராசியமான மடல்களை எழுதுவார். சுரங்க தொழிலாளியான அவரது தந்தை தனது அனுபவங்களை ஒலிநாடாவில் பதிந்து வைத்திருக்கிறார். அவர் கூறிய விஷயங்களை வைத்து எனக்கு வந்த மடல்கள் சிலவற்றை மொழிபெயர்த்தேன். இம்மடல்களை நான் இங்கு பதிய காரணம், தற்பொழுது சோஷியல் செக்கியூரிட்டி என்ற பெயரில் உழைக்காமல் காலத்தை ஓட்டுபவனுக்கும் பணத்தத இறைக்க இயலும் வண்ணம் நியூசிலாந்து போன்ற நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப சொந்த நாடுகளை விட்டு தொலைதூர தேசத்தில் வந்து குடியேறிய மக்களின் உழைப்பினை நினைவு கூறுவதே! இந்த பதிவும் இதனை தொடரும் அடுத்த இரண்டு பதிவுகளும் எனது நண்பருக்கு சமர்ப்பணம்.)

17.5.06

அட்லாண்டிக்கு அப்பாலும்...



ஜெரால்ட் ஜான்சன் என்பவர் எழுதிய 'தி சுப்ரீம் கோர்ட்' என்ற கையடக்கமான புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன். பழைய புத்தகக்கடையில் எதேச்சையாகப் பார்த்த 1963ம் வருட புத்தகம். சுப்ரீம் கோர்ட் என்பது அமெரிக்க உச்ச நீதிமன்றம். சாமான்யர்களுக்காக (lay persons) எளிமையான மொழியில் அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதன் வரலாறு, செயல் முறை, அதிகாரம் இவற்றைப் பற்றி எழுதியுள்ளார். அரசின் மற்ற இரு தூண்களான சட்டமன்றம் (legislature) அமைச்சகம் (executive) ஆகியவற்றைப் பற்றியும் இது போன்ற இரு நூல்கள் எழுதியிருக்கிறார்.

புத்தகத்தில் 'த பவர் ·ப் த சுப்ரீம் கோர்ட்' என்ற பாகம் சுவராசியமானது. செப்டம்பர் 11 நிகழ்வுக்குப் பிறகு அமெரிக்கர்கள் அட்லாண்டிக் சமுத்திரத்திற்கு அப்பாலும் நாகரீகமடைந்த ஒரு உலகம் இருப்பதை அதிகமாக உணர்கிறார்கள் என்ற போதிலும், இந்தப் புத்தகம் எழுதப்பட்ட 1962ம் ண்டு அவர்களின் உலக நோக்கு எவ்வாறாக இருந்தது என்பதற்கு அமெரிக்க உச்ச நீதிமன்றத்தி அதிகாரங்களைப் பற்றி எழுத விழைந்த ஆசிரியரின் பார்வை ஒரு சான்று.

"நாகரீகமடைந்த அனைத்து நாடுகளிலும் ஏதாவது ஒரு வகையான மேல்நிலை நீதிமன்றங்கள் இருந்தாலும், நீதிமன்றப்பணிகளுக்கும் அப்பாற்பட்ட கடமை, உரிமையினை தன்னகத்தே கொண்டதினால் அமெரிக்க உச்ச நீதிமன்றமானது மற்ற அனைத்து நாட்டு நீதிமன்றங்களிலிருந்தும் வித்தியாசப்படுகிறது. அது அரசின் மூன்றின் ஒரு பங்காகும். முக்கியமாக, நாடு இன்று எப்படி இருக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பதோடு, நாளை எவ்வாறு இருக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கிறது."

"மற்ற நாட்டு நீதிமன்றங்கள் சட்டம் என்ன என்பதை தீர்மானிப்பதோடு தங்கள் பணியினை முடித்துக் கொள்கின்றன. ஆனால் அமெரிக்க உச்ச நீதிமன்றமோ ஒன்றல்ல, பல தடவைகள் சட்டமன்றத்தின் பணியாகிய சட்டம் எவ்வாறு இருக்க வேண்டும் எனவும் தீர்மானித்துள்ளன"

ஜெரால்ட் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தனித்தன்மை வாய்ந்த அதிகாரமாக கூறுவதை நாம் 'நீதிபதியால் ஏற்படுத்தப்படும் சட்டம்' எனக் கூறலாம். அதாவது சட்டத்தில் மூன்று முக்கிய வகைகள் உள்ளன. முதலாவது எழுதப்படாத சட்டம். பக்கத்து வீட்டுக்காரரின் நாய் வேலியை தாண்டிக் குதித்து வந்து உங்களைக் கடித்து வைத்தால் உங்களுக்கு அவர் நஷ்ட ஈடு தர வேண்டும் என்று எந்த சட்டமன்றமும் எழுத்த்¢ல் எழுதி நிறைவேற்றவில்லை. ஆனால் தர வேண்டும். முக்கியமாக பிரிட்டிஷ் அரசியலமைப்புச் சட்டமே எழுதப்படாததுதான். இரண்டாவது எழுதப்பட்ட சட்டம். இதற்கு அனைவருக்கும் தெரிந்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உதாரணமாக கூறலாம். மூன்றாவதுதான் ஜெரால்ட் கூறும் 'நீதிபதி ஏற்படுத்தும் சட்டம்' (Judge Made Law). அதாவது நீதிபதி கூறும் எதுவும் சட்டமாகக் கூடிய அபாயம்!

ஜெரால்ட் இதற்கு உதாரணமாக கூறுவதைப் பார்க்கலாம். அமெரிக்காவில் இனப்பாகுபாடு சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட காலம் இருந்தது. இதன்படி ரயிலில் வெள்ளையர்களும், பிற நிறத்தவர்களும் பயணம் செய்ய தனித்தனி பெட்டி இருந்தது. வெள்ளையர்கள் பயணம் செய்யும் பெட்டியில் மற்றவர்கள் பயணம் செய்ய முடியாது. இந்தப் பிரச்னை நீதிமன்றத்தில் 'பிளேஸி வழக்கு' என்ற வழக்கில் எழுகையில் 1896ம் ஆண்டு அமெரிக்க உச்ச நீதிமன்றம் 'இரு வெவ்வேறு பெட்டிகள் இருப்பதில் தவறில்லை. ஆனால் இரு பெட்டிகளும் ஒரே மாதிரி இருக்க வேண்டும்' என்று கூறி 'பாகுபாடு ஆனால் சமநிலை' (separate but equal) என்ற சட்டக் கொள்கையை வரையறுத்தன. அதற்குப் பிறகு ரயிலில் மட்டுமல்லாது மற்ற அனைத்து வகைகளிலும் இந்த கொள்கை பின்பற்றப்பட்டது. ஆனால் சமத்துவத்தை வலியுறுத்தும் அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தில் இந்த 'சமநிலையான பாகுபாடு' என்று எதுவும் கூறப்படாடத நிலையிலேயே நீதிபதிகள் ஏற்படுத்திய சட்டம் அமுலுக்கு வந்ததை ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

தொடர்ந்து ஜெரால்ட் இந்த சட்டக் கொள்கையின் அடுத்த நிலையினையும் உதாரணப்படுத்துகிறார். 'சமநிலையான பாகுபாடு' நிலை ஐம்பெத்தியெட்டு ஆண்டுகள் தொடர்ந்தது. எந்தவித சட்டத் திருத்தமும் ஏற்படவில்லை. ஆனால், மீண்டும் இந்தப் பிரச்னை 1954ம் ண்டு நீதிமன்றம் சென்றது. இந்த முறை பிர்சனை அரசு நடத்தும் பள்ளிகளில் வெள்ளையர் குழந்தைகளோடு மற்ற இனத்தவரின் குழந்தைகளும் சேர்ந்து படிப்பதைப் பொறுத்தது. அரசால் சமாளிக்க முடியாத சிக்கலான பிரச்னை என்றால் நீதிமன்றங்களிடம் தள்ளிவிட்டு கைகட்டிக் கொள்ளும் நமது இன்றைய அரசுகளைப் போலவே அரசு கைகட்டி வேடிக்கை பார்க்க, நீதிமன்றங்கள் 'ஒருங்கிணைப்பு' என்ற புதிய சட்டக் கொள்கையை வடிவமைத்தன. இதன்படி அரசுப் பள்ளிகளில் (public schools) அனைத்து இனக்குழந்தைகளும் ஒன்றாகப் படிக்க வேண்டும் என்பதாகும். ஆக, இந்த இரு கொள்கைகளை வடிவமைக்கையிலும் அரசோ, சட்டமன்றமோ ஏதும் செய்யவில்லை. இதுதான் சட்டம் என்பதை நீதிமன்றங்கள்தான் தீர்மானித்தன. இதுதான் நீதிபதியால் ஏற்படுத்தப்படும் சட்டம். இதைத்தான் ஜெரால்ட் அமெரிக்க நீதிமன்றங்களின் தனித்தன்மை என்கிறார். இதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்க முடியும்?

ஜெரால்ட் இந்தப் புத்தகத்தை எழுதியதற்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு நடைமுறைக்கு வந்து விட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை கொஞ்சம் சிரமம் எடுத்து படித்திருப்பாராயின் இவ்விதம் எழுதியிருக்க மாட்டார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 141வது பிரிவு இந்திய உச்ச நீதிமன்றம் வரையறுக்கும் சட்டமானது அதன் கீழ் உள்ள அனைத்து நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்தும் எனக் கூறுகிறது. இதே மாதிரியான அதிகாரம் உயர் நீதிமன்றங்களுக்கும் உண்டு. உண்மையில் இந்திய உச்ச நீதிமன்றத்தின் அதிகாரம் வானளாவியது என்றால் அது மிகையான ஒரு கருத்தாக இருக்க முடியாது. பாராளுமன்றம் இயற்றும் எந்த ஒரு சட்டத்தையும் அது எத்தனை பெரிய மெஜாரிட்டியால் நிறைவேற்றப்பட்டிருந்தாலும் 'அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது' என செல்லா காசாக்கலாம். ஜனாதிபதியால் நியமிக்கப்படும் எந்த ஒரு அரசுப் பணியாளரையும், ஏன் ஜனாதிபதியையே தகுதியில்லாமல் பணியிலிருக்கும் பொருட்டு நீக்கலாம்...இன்னும் என்னன்னவோ!

பலமுறையல்ல எண்ணிலடங்கா முறை இந்திய உச்ச நீதிமன்றம் இதுதான் சட்டம்...இந்த முறையில்தான் சட்டம் பயணம் செய்ய வேண்டும் என்பதை வரையறுத்துள்ளன. முக்கியமான சமீபத்திய உதாரணம் கூற வேண்டுமென்றால் 'அசோசியேஷன் பார் டெமாக்ரடிக் ரிபார்ம்ஸ்' என்ற அமைப்பு தாக்கல் செய்த வழக்கில் 'வேட்பாளர்களிடம் இருந்து அவர்களது கல்வி, சொத்து விபரம், கடன்கள் மற்றும் குற்ற வழக்குகள் ஆகியவற்றைப் பற்றிய விபரங்களை கோர வேண்டும்' என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டதை தொடர்ந்து இத்தகைய உத்தரவினை தேர்தல் ஆணையம் பிறப்பித்தது. பதறிப்போன பிஜேபி அரசு உடனடியாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் புது சட்டப்பிரிவுகளை ஏற்படுத்தியது. இதன்படி, ஒரு வேட்பாளர் இந்த சட்டத்தில் கேட்கப்பட்டுள்ள விபரங்களை மட்டுமே அளித்தல் போதுமானது. இதற்கு மேலாக எந்த நீதிமன்ற தீர்ப்போ அல்லது தேர்தல் ஆணைய உத்தரவோ வேண்டிய விபரங்களைத் தர வேண்டியதில்லை. ஆக, உச்ச நீதிமன்றம் ஏற்படுத்திய சட்டத்தை ஒன்றுமில்லாமல் செய்ய பாராளுமன்றத்தால் ஒரு சட்டம். 'விட்டேனா பார்' என்றது நீதிமன்றம் பியூசிஎல் (PUCL) தொடர்ந்த வழக்கில். 'அரசின் சட்ட திருத்தம் அரசியலமைப்புச் சட்டத்தால் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள பேச்சுரிமையை பறிப்பதாக இருக்கிறது' என்று கூறி அரசு சட்டம் செல்லாது என அறிவித்து விட இறுதியில் நீதிபதிகளின் சட்டமே வென்றுள்ளது. இதன் பலன்களை விரைவில் நடைபெறப் போகிற தேர்தலில் நாம் பார்க்கலாம்.

ஜெரால்டுக்கு தெரியுமா? அட்லாண்டிற்கு அப்பாலும் நாகரீகங்கள் இருக்கின்றன. அங்கும் நீதிமன்றங்கள் இருக்கின்றன. அவையும் சட்டத்தின் ஆட்சியை போற்றுகின்றன என்று. அதெற்கெல்லாம் அவருக்கு நேரம் ஏது? இந்தியா என்றாலே பசுக்கள் திரியும் சாலையும், அழுக்கு குழந்தைகளும் என்றல்லவா அவர்களது எண்ணமாக இருந்திருக்கிறது. 'பாவம் ஆசிரியர், இப்படி கரித்துக் கொட்டுகிறேனே' என்பவர்களுக்காக அவர் மேலும் எழுதுகிறார்.

"இவ்விதமாக 1954ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டாலும், அதனால் சட்டத்தை மாற்ற இயன்றதேயொழிய சமூகக் கொள்கையை முற்றிலும் மாற்ற முடியவில்லை. அது ஒரு சமூக பழக்கம். உச்ச நீதிமன்றத்திற்கு சமூக பழக்கத்தினை மாற்றுவது சட்டத்தினை மாற்றுவதை விட கடினமான காரியம். அந்தப் பணியில் அமெரிக்க உச்ச நீதிமன்றம் முழு வெற்றி பெற வில்லையெனினும் அநேக நாடுகளில் உள்ள பிற நீதிமன்றங்கள் அவ்விதம் முயலுவதை சிந்தித்துக் கூட பார்ப்பதில்லை"

முதலில் ஜெரால்ட் இனவெறியினை சமூக கொடுமை எனக்கூறவேயில்லை. சமூகப் பழக்கம் என்கிறார். அடுத்து, சமூக ஒருங்கிணைப்பு தேவை என்பதையும் வலியுறுத்தவில்லை. சமூக ஒருங்கிணைப்பு நீதிமன்றங்களில் போராடும் வழக்குரைஞர்களின் கவலை என்கிறார். இந்தப் புத்தகத்தின் நோக்கம் சமூக ஒருங்கிணைப்பு என்பதல்ல என்றாலும், ஆசிரியரின் முகம் தெரிகிறது. அடுத்து அநேக நாடுகளைப் பற்றிய அவரது அறிவு! Most Courts என்ற பதத்தினைப் பயன்படுத்துகிறார். எனக்குத் தெரிந்து 1954ல் மக்களிடையே இனப்பாகுபாடு பேணிய மற்றொரு நாடு தென் ஆப்ரிக்கா மட்டும்தான். இங்கு நாம் மதப்பாகுபாட்டை இனப்பாகுபாட்டுடன் குழப்பிக் கொள்ளக் கூடாது. பாக்கிஸ்தானில் ஒரு இந்து முஸ்லீமாக மதம் மாறி அதன் ஜனாதிபதியாகலாம் (ராணுவத்தில் சேர்ந்து அரசை கவிழ்க்க வேண்டும் என்பது மற்றொரு தகுதி என்பது இருக்கட்டும்) ஆனால் ஒரு கறுப்பர் வெள்ளையராக மாறவே முடியாது. எப்படியோ, இந்திய நீதிமன்றங்கள் 'சமூக பழக்கம்' என்றெல்லாம் தங்களைப் போட்டு குழப்பிக் கொள்ளாமல் பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்தே இவை சமூகக் கொடுமைகள் என்று ஒவ்வொரு சமயத்திலும் தலையிட்டு சட்டத்தை வரையறுத்த வரலாற்றை யாராவது ஜெரால்ட் ஜான்சனுக்கு எடுத்துச் சொல்லியிருக்கலாம்.

பெருமைக்காக கூறவில்லை. நாகரீகமடைந்த நாடு என்று கூறிக் கொண்ட அமெரிக்காவின் 1954ம் வருட இனப்பாகுபாடு வழக்கு இதே காலகட்டத்தில் இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டிருந்தால் 'அனைவருக்கும் ஒரே பள்ளி' என்பதோடு இந்திய நீதிமன்றம் நின்றிருக்காது. 'இது என்ன காட்டுமிராண்டித்தனம்?' என்று நமது நாகரீகத்தையே சந்தேகப்பட்டிருக்கும்.

மும்பை
12.01.04





16.5.06

விதிவிலக்குகள்



‘இவங்க திருச்சியில் இருந்து வந்துருக்காங்க...’ எனது சீனியர் அட்வோகேட் சுட்டிக்காட்டிய பெண்ணை, இருக்கையில் மேலும் வசதியாக அமர்ந்தபடி நேராகப் பார்த்தேன். வயது முப்பத்தி ஐந்துக்கு அதிகமாக இருக்காது. முகப்பவுடர் தேவையேயில்லாத நல்ல சிவந்த நிறம் என்றாலும், அதிகமாக முகபவுடர் கவனம் எடுத்துக் கொண்டு பூசியிருந்தது போலத் தோன்றியது. குண்டு என கணிக்கலாம் என்றாலும் உயரத்தைக் கணக்கில் எடுக்கையில், ‘நல்ல தாட்டியான உடம்பு’ என்பதுதான் சரியாக இருக்கும். வடிவான முகம். ஒரு வழக்குரைஞரின் அலுவலகத்துக்குப் சற்றும் பொருத்தமில்லாத வகையில் அளவுக்கு மிஞ்சிய நகைகள் கழுத்திலும் கைகளிலும் பளபளத்தன. ஏதோ நேர்முகத்தேர்வுக்கு வந்திருப்பவரைப் போல கண்களில் ஒரு மிரட்சியுடன், இருக்கையின் விளிம்பில் அமர்ந்து மேசையில் கையூன்றியிருந்தார். நான் அந்த அறையின் வாசலைப் பார்த்தபடி சீனியரின் மேசையின் பக்கவாட்டில் இருக்கும் வழக்கமான எனது நாற்காலியில் அமர்ந்திருந்தேன். அந்த அறைக்கும் சாலையில் முகம் பதித்திருந்த முன்பக்க அறைக்கும் இடையே வாசல்தான். கதவு எதுவும் கிடையாது. சாலையில் இருந்து அலுவலகத்துக்குள் நுழையும் எவரும், என் கண்ணோடு கண் பொருத்தாமல் உள்ளே வர முடியாது. பல சமயங்களின் இந்த நாற்காலி இருக்குமிடத்தின் முக்கியத்துவம் கருதி, புதிதாக வரும் கட்சிக்காரர்கள், எதிரே இருக்கும் சீனியரை கவனிக்காமல் ‘நான்தான் பெரிய வக்கீல்’ என்ற எண்ணத்தில் என்னிடம் பேச ஆரம்பித்து விடுவதுமுண்டு.

என் கண்கள் அந்தப் பெண்ணின் மீது பதிந்திருந்தாலும், மனது, அவர் என்னைப் பார்த்து கைகூப்பியதையோ, அவருக்கு அடுத்த நாற்காலியில், அந்தப் பெண்மணியின் தோற்றத்துக்கு சற்றும் பொருத்தம் இல்லாமல் சாதாரண சட்டை வேட்டியில் கறுத்த நிறத்தில், கிராமத்து மனிதரைப் போல இருந்தவர் தானும் சற்று எழுந்தபடியே கைகூப்பியதையோ பொருட்படுத்தாமல், இன்னமும், முன் அறையில் இருந்த பெஞ்சில் ஏறி விளையாடிக்கொண்டிருந்த அந்தச் சிறுமியின் மீதே பதிந்திருந்தது.

சற்று நேரம் முன்பு, சிறிது தாமதமாக அலுவலகத்துக்குள் ஒருவித சலிப்போடு நுழைந்த எனக்கு ‘வீட்டுத்தோட்டத்தில் எதிர்பாராமல் பூத்த மலரைப்’ போல உற்சாகத்தைத் தந்தது அந்தச் சிறுமிதான். வழக்குரைஞர் அலுவலகங்களில் எப்போதாவதுதான் இப்படிப் பூ பூப்பதுண்டு. ஆர்வம் பொங்க, அவ்வறையில் இருந்த எல்லாப் பொருட்களையும் தொட்டு தொட்டுப் பார்த்துக் கோண்டிருந்தவள் திடீரென என்னை அருகில் பார்த்ததில் முகத்தில் ஒரு சின்ன திகைப்பு காட்டி நின்றாள். ஆறு வயது இருக்கும். அந்த் முகத்தில் பொங்கிய குழந்தைத் தனத்தை விட அவளது உடைதான் வேடிக்கையாக இருந்தது. வெள்ளை அரைக்கால் சாராய்க்குள் பொருத்திய வெள்ளை சட்டை, காலைப் பிடித்த காலுறை, கேன்வாஸ் ஷ¥ சகிதமாக, விளையாட்டுப் பயிற்சிக்கு போகும் ஒரு சிறுவனைப் போல இருந்தாலும் சிறிதாக வைக்கப்பட்ட சிவப்பு பொட்டும், காதிலாடிய கம்மல்களும் அவளை ஒரு பெண்ணாக அடையாளம் காட்டின. எப்படியோ குழந்தை! அதுவும் அலுவலகத்துக்குள்!! அவள் தலைமுடியை லேசாக கோதியபடியே உள்ளே நுழையும் போதுதான், இதோ, என் முன் அமர்ந்திருக்கும் பெண்ணை முதன் முதலாகப் பார்த்தேன். சீனியரிடம் கண்ணால் ஒரு வணக்கம் சொல்லியவாறே எனது இருக்கையில் அமர்ந்தவனிடம், அதுவரை எனது வருகைக்கு காத்திருந்தது போல ‘அவங்க திருச்சியிலிருந்து வந்திருப்பதாக’ ஆரம்பித்தார்.

‘சரி கொஞ்சம் இவங்க என்ன சொல்றாங்க, கேளு’ என்றபடி எனது கவனத்தை மீண்டும் ஈர்த்த சீனியர் அந்தப் பெண்ணைப் பார்த்து, ‘இப்ப சொல்லுமா’ என்றார். புதிய இடம், விநோத சூழல், அந்நிய மனிதர்கள்...முகத்தில் வேர்வை அரும்பியிருக்க சிறிது நேரம் தரையே பார்த்தபடி இருந்த அந்தப் பெண் திடீரென, ‘டாக்டருக்கும் எனக்கும் பழவாசலில் வச்சு கலியாணம் ஆச்சு’ என்று ரம்பித்தார்.

“டாக்டரா? யார்?” நான்.

“நீ இரும்மா. நான் சொல்றேன்” என்றவாறு இடைமறித்தார் அருகே அமர்ந்திருந்தவர்.

“நீங்க யாரு?”

“நான் இவளோட தாய்மாமங்க....எங்களுக்கு ஊரு தேனி பக்கம் கிராமங்க. இந்தப் பொண்ணு டாக்டர்கிட்ட மெடிக்கல் லேப் வேலை பாத்துதுங்க”

மீண்டும் டாக்டர் யார் என்பதைக் கேட்பதை விட வந்தவர்களை பேச விடுவது உத்தமம் என நினைத்து நான் பேசாமல் இருந்தேன். எனது எண்ணவோட்டத்தைப் புரிந்தவராக எனது சீனியர் சிகரெட்டை கையிலெடுத்தவாறு இடைமறித்தார், “ராமலிங்கமுன்னு திருச்சியில தனியா கிளினிக் வச்சுருந்தாரு. நம்ம கானா.மூனாவோட மருமகன்”

எனக்கு இப்போது கானா.மூனா யார் என்பதில் குழப்பம் நிலவியது. ஆனாலும் பேசாமல் தலையாட்டினேன். வந்தவரே தொடர்ந்தார், “ ரெண்டு வருஷம் அவர்கிட்ட இருந்துருக்குங்க. அதுக்குள்ள ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் இஷ்டப்பட்டுகிட்டு கலியாணம் கட்டிக்கிட்டாங்க’ என்றார். முதலில் அந்தப் பெண் ‘டாக்டரை தான் கலியாணம் செய்து கொண்டதாக’ கூறியது, எனது சீனியர் கானா.மூனாவோட மருமகன் என்று சொல்லியதோடு பொருந்தாமல் எங்கோ இடித்தது.

வந்தவரை இப்போது கையமர்த்தி எனது சீனியரே தொடர்ந்தார். “கேளு. டாக்டருக்கு ஏற்கனவே கலியாணம் ஆகி, தஞ்சாவூரில் மெடிக்கல் படிக்கும் ஒரு பையன் இருக்கிறான். ஆறு வருஷத்துக்கு முன்னால அவர்கிட்ட லேப் டெக்னீஷியனாக இருந்த இந்த அம்மாவோட தொடர்பு ஏற்பட்டுருக்கு. அந்தக் குழந்தை இவருக்கும் டாக்டருக்கும் பிறந்ததுதான். பின்னால கலியாணம் செஞ்சுகிட்டதா சொல்றாங்க. எப்படியோ, இதனால டாக்டர் வீட்டில பிரச்னை. என்ன ஆச்சோ, பழநிக்கு சாமி கும்பிடன்னு போன டாக்டர், அங்கே சூசைடு பண்ணிகிட்டாரு. வெளியெல்லாம் டாக்டர் ஹார்ட் அட்டாக்கில செத்துட்டதா சொல்றாங்க. ஆனா உண்மையில சூசைடுதான் பண்ணிகிட்டாரு’

சீனியர் சாதாரணமா சொன்ன இந்த வாக்கியத்தில் அதிர்ந்து போனேன். கண்கள் வெளியே எங்களது குமாஸ்தாவுடன் இப்போது எதையோ பேசிக்கொண்டிருந்த குழந்தையை தேடியது.

ஓரளவுக்கு விஷயம் புரிபடுவது போல இருந்தாலும் கேட்டேன், “சரி கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க. கலியாணம் எப்படி செஞ்சுகிட்டீங்க. ரிஜிஸ்டர் பண்ணீங்களா?”

“ரிஜிஸ்டரெல்லாம் பண்ணல. டாக்டர் அதுக்கெல்லாம் சம்மதிக்க மாட்டாரு. னா பழவூர் கோவிலில எனக்குத் தாலி கட்டினாரு. பூசாரிதான் நடத்தி வச்சாரு.”

“சரி, கலியாணம் முக்கியமில்லை. இந்தப் பொண்ணோட பர்த் சர்டிபிக்கட்டில அவர் பெயர் இருக்கா?”

“இல்லீங்க. அவர் பெயரை மாற்றிக் கொடுத்தார். அவருக்கு அதில ரொம்ப பயங்க. ஸ்கூல்ல கூட அவர் பெயரைக் குடுக்கக் கூடாதுன்னுட்டார். ரொம்ப அப்புராணிங்க அவரு” என்றார் பரிதாபமாக.

“ஆனா, நிறைய் பேருக்கு டாக்டர் இவங்க கூட இருந்ததும், இது அவர் குழந்தைதாங்குறது தெரியுமுங்க” கூட வந்தவர் அவசரமாக கூறினார்.

“ஆமாம். ஆமாம்” அந்தப் பெண் வேகமாக தலையாட்டினார்.

“சரி சொல்லுங்க, டாக்டருக்கு சொத்து, கித்து இருக்கா?” வந்தவர்களின் நோக்கத்தை புரிந்து கொண்டு நேரடியாக விஷயத்துக்கு வந்தேன்.

“அது நிறைய இருக்குதுங்க. திருச்சியிலேயே நிறைய வீடு, நிலம் இருக்குதுங்க. இங்க மதுரையில கூட இருக்கு” தாய்மாமன் பதிலளித்தார்.

“அதெல்லாம் ஒண்ணும் வேணாம். நான் சொல்றங்க...” என்றவாறு அந்தப் பெண் தொடர்ந்தார்.

“டாக்டர் வீட்டம்மா அவ்வளவு சரியில்லங்க. அடிக்கடி எங்கிட்ட சொல்லி அழக்கூட செய்திருக்காரு. பின்னால எனக்கும் அவருக்கும் பிடிச்சுப்போயி இவ உண்டாயிட்டாங்க. எங்க மாமா எல்லோரும் சொல்லி டாக்டர் என்னை கலியாணம் செய்துகிட்டாரு. அதுக்கப்புறம் நான் டாக்டர்கிட்ட வேலை பாக்கல. பொன்மலையில அவரோட வீடு ஒன்னு இருக்குது. அங்கதான் நாங்க இருந்தோம். எங்க விஷயம் தெரிஞ்சு போயி டாக்டர் வீட்டில ரொம்ப பிரச்னையாயிருச்சு. அடிக்கடி வந்து அழுவாரு”

அந்தப் பெண், எழுதி வைத்ததை வாசிப்பது போல எந்தவித தயக்கமுமில்லாமல் சொல்லிக்கொண்டே வந்தார். என் கண்கள் அவ்வப்போது முன்னறைக்கு அலைபாய்ந்தாலும் உன்னிப்பாக அவர் சொல்வதை கேட்டுக்கொண்டே வந்தேன்.

“இந்தப் பொண்ணு கூட வளர்ந்துட்டுது. நிறைய பீஸ் கொடுத்து பெரிய பள்ளிக்கூடத்துல எல்லாம் சேர்த்தாரு. நல்லா செல்வழிப்பாருங்க! அதுல எதுவும் குறையே வைக்கல. இந்த நகையெல்லாம் அவர் வாங்கிக் கொடுத்ததுதான்”

“ஆமாம் பெருசா பண்ணிப்புட்டாரு” தாய்மாமன் தனக்குள் முணுமுணுத்தார். அதைப் பொருட்படுத்தாமல் அந்தப் பெண் தொடர்ந்தார், “இந்தப் பொண்ணு ஸ்கூலுக்குப் போன பிறகுதான் டாக்டர்கிட்ட நாங்க இருக்கிற வீட்டை என் பெயருக்கு எழுதித்தர சொன்னேன். செய்யிற வேலையையும் விட்டாச்சு. ஒரு பொம்பளைப் புள்ளையும் ஆச்சு. எனக்குன்னு என்னங்க பாதுகாப்பு. அதனாலதான் கேட்டேன். டாக்டர் அவரோட சம்சாரத்துக்கிட்ட இதப்பத்தி சொன்னப்போ அந்தம்மா அவரைப் போட்டு பாடாப்படுத்திட்டாங்க. அவங்களோட ‘டார்ச்சர்’ தாங்க முடியாம பழநிக்கு சாமி கும்பிடப் போறன்னு போனவர் அங்கயே செத்துப் போயிட்டாருங்க” கண்களில் பொங்கிய கண்ணீர் அவரை மேலும் பேச விடவில்லை. நாங்கள் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தோம்.

இதற்குள் தனது சிகரெட்டை முடித்திருந்த சீனியர் என் பக்கம் திரும்பி, “இப்ப டாக்டர் சம்சாரம் திருச்சியிலிருந்து இங்க மதுரைக்கு வந்துட்டாங்க. இப்ப அங்க திருச்சியில இருக்குற டாக்டரோட சொத்தையெல்லாம் கிரயம் பண்ண ஏற்பாடு செய்யிறாங்களாம். அதான் ஏதாவது செய்யுங்கன்னு இங்க வந்திருக்காங்க”

“இவ இருக்கிற வீட்டையும் விக்கிறாங்களாம். யாராரோ வந்து மிரட்டிட்டுப் போறாங்க. அதுவும் போச்சுன்னா இந்தப் பொண்ணும் புள்ளையும் நடுத்தெருவிலதான் நிக்கணும்” என்றார் தாய்மாமன் வேகமாக.

“சரி, நீங்க இப்போ வீட்டுச் செலவுக்கு என்ன பண்ணுறீங்க?” அவர் இவ்வளவு சொன்னதை நம்பாதது போல ஒலித்தது எனது கேள்வி.

“எனக்கு இப்போ வேலை ஒண்ணும் இல்லீங்க. அவர் வாங்கிக் கொடுத்த நகைகளை வித்துதான் காலத்தை தள்ளுறேன். வேற் ஏதும் வழியில்லைன்னா இவளைக் கூட அந்த ஸ்கூலிலிருந்து எடுக்கணும்” விதி தன்னைச் சுற்றி கோரமாக ஆடுவதை அறியாத அந்தக் குழந்தையோ இன்னமும் வெளியே விளையாடிக் கொண்டு இருந்தது.

“சரி, என்ன சொல்ற. இவங்க ‘ரைட்’ என்ன?” சீனியர் என் முகத்தைப் பார்த்தார். “இருங்க சொல்றன்” பின்னால் எட்டி புத்தகத்தை எடுத்தேன். அடுத்த அரை மணி நேரமும் புத்தகங்களோடு கழிந்தது. இந்துக்களுக்கான சொத்துரிமை பற்றிய சட்டப்புத்தகத்தில் கிடைக்க வேண்டிய விடை ‘திருமணச் சட்டத்தில்’ இருந்தது.

“இதைப் பாருங்க. நைண்டீன் செவண்டி சிக்ஸ் அமெண்ட்மெண்ட்” என்றவாறு புத்தகத்தை சீனியரின் கைகளில் திணித்தேன். அவர் அதைப் படித்துக் கொண்டிருக்கையிலேயே தொடர்ந்தேன், “ நல்லவேளை இந்த புரொவிஷனை எழுவத்தி ஆறில் திருத்தியிருக்காங்க. இல்லையென்றால் அவ்வளவுதான்” என்றவன் அந்தப் பெண்மணி பக்கம் திரும்பி, “ஒருத்தர் ஏற்கனவே கல்யாணம் கியிருக்கும் போது திரும்பவும் பண்ணிகிட்டா, அது சட்டப்படி செல்லாது. அதனால உங்க கல்யாணமும் செல்லாது. ஆனா, சட்டப்படி செல்லாத கல்யாணம் மூலம் பிறக்குற குழந்தைகளும் மற்ற குழந்தைகள் மாதிரிதான். ஆனால் அப்படிப்பட்ட குழந்தைகள் அதனோட அப்பா, அம்மா சுயமா சம்பாதித்த சொத்தில் மட்டும்தான் மற்ற குழந்தைகள் போலவே பங்கு கேட்க முடியும். நீங்கள் உங்களுக்கு சொத்து எதுவும் கேட்க முடியாது ஆனால் வேற ஒன்று இருக்கு” என்று சிறிது மூச்சு வாங்கியவன், “உங்களுக்கு சொத்தில் உரிமை இல்லைன்னாலும், சாகும் வரை டாக்டருடன் தொடர்ந்து ஒரு மனைவி மாதிரியே வாழ்ந்ததை நிரூபித்தால்...டாக்டருடைய சொத்தில் இருந்து வரும் வருமானத்தில் இருந்து மாதாமாதம் மெயிண்டெனன்ஸ் கேட்க முடியும். சட்டத்தில இப்படி தெளிவா இல்லைன்னாலும், நிறைய தீர்ப்பு இதுக்கு சாதகமா இருக்கு...” என்றேன் உற்சாகமாக. அவர்கள் இருவரும் என் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தனர், எதுவும் பேசத் தோன்றாமல். நான் பேசுவதை அவர்கள் புரிந்து கொண்டார்களா என்ற சந்தேகம் திடீரென தோன்ற, சட்டென்று நிறுத்தி, “ஆமா, டாக்டருடைய தனிப்பட்ட பெயரில் எத்தனை சொத்துக்கள் இருக்கும்?” என்றேன்.

“அது நிறைய இருக்கும் சார்...ரெண்டு மூணு கோடி மதிப்பு இருக்கும்” என்றார் தாய்மாமன் இளக்காரமான ஒரு தொனியில்.

“சரி, டாக்டருக்கு ஒரு மகந்தானே”

“மாம். ஒரு பையந்தான். போன வருஷந்தான் மெடிக்கல் சேந்தாரு”

புத்தகத்தில் இருந்து தலையை தூக்கிய சீனியரிடம், “ஸ்டெரியிட் கேஸ். இந்தம்மா கல்யாணம் பண்ணிக்கிட்டு, அது டாக்டரோட குழந்தைன்னு புரூவ் பண்ணிட்டா போதும். மூணுல ஒரு பங்கு இவங்க குழந்தைக்கு. கோர்ட் பீஸ் கூட கட்ட வேண்டாம். பாப்பர் கேஸா போட்டுரலாம்” சொத்துக் கணக்கை வைத்து என் மனதில் பீஸ்கணக்கு ஒன்று தனியாக ஓடிக் கொண்டு இருந்தது.

பேசாமல் இருந்த சீனியரை மேலும் உற்சாகப்படுத்துவதாக நினைத்து, “கேஸ் முடியற வரைக்கும் எல்லாம் காத்திருக்க வேண்டாம். உடனே ஒரு சூட்டை பைல் பண்ணிட்டு எந்தச் சொத்தையும் விக்கக்கூடாதுன்னு ‘இண்டெரிம் இன்ஜக்ஷன்’ ஒன்னு வாங்கிரலாம். தன்னால வழிக்கு வந்துருவாங்க”

“எல்லாச் சொத்தும் இல்லீங்க. அந்த வீடுதான்...வாங்கிக் கொடுத்துட்டீங்கன்னா போதும்” அந்தப் பெண்.

“அட நீங்க வேற! உங்க பொண்ணுக்கு டாக்டருடைய எல்லா சொத்தில இருக்குற ஒவ்வொரு சதுர அங்குலத்திலும் மூணுல ஒரு பங்கு ரைட் இருக்கு. அவங்க ஒண்ணும் பண்ண முடியாது”

அதற்கு மேலும் பொறுக்க முடியாத சீனியர், “இல்லடா! அவங்க சமரசம் பேச சொல்றாங்க. கானா.மூனா நம்ம டிஸ்ட்ரிபியூட்டர் அசோசியேஷன் தலைவர் இல்லையா? அதான்” இப்போது எனக்கு கானா.மூனா யாரென்று தெரிந்தது. தென்மாவட்டங்களில் திரைப்பட விநியோகத்தில் முக்கியமான புள்ளி. சீனியர் மீது மரியாதை வைத்திருப்பவர்.

“கானா மூனாவோட பேசினேன். அவரானால்...எதுவானாலும் எம்மகதான். நான் அவள் விஷயம் எதிலும் தலையிட முடியாதுன்னுட்டார்” சீனியர். சில நிமிடங்கள் இப்போது உள்ளே வந்து அப்பெண்ணின் மடிமீது அமர்ந்த குழந்தையையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

“எனக்கொரு யோசனை. அந்தப் பையன் மெடிக்கல் படிக்கிறதா சொன்னீங்களே. அவனோட முதல்ல நாம பேசுவோம். பின்னால அவன் மூலமா அவங்க அம்மாகிட்ட பேசுவோம். அவனை இங்கே கூப்பிட முடியுமா?” நான்.

“சரி, கானா மூனாட்ட சொல்லி அவனை இங்க நாளைக்கு அனுப்ப சொல்றேன். பார்க்கலாம்” என்று சொல்லி முற்றுப் புள்ளி வைத்தார் சீனியர். அவர்கள் கிளம்புவதற்கு முன்னர் குமாஸ்தாவிடம் சொல்லி, ஒரு சாக்லேட் பார் வாங்கி வரச் செய்து அந்தக் குழந்தையிடம் கொடுத்தேன். நான் கொஞ்சம் ஓவராக போகிறேனோ என்று சீனியர் நினைத்துக் கொள்ளப்போகிறார் என்று சிறிது பயமாகவும் இருந்தது.

***
அடுத்த நாளும் அந்தக் குழந்தை அதே மாதிரி வெள்ளை உடையில். வேறு உடைகள் இல்லையா? இல்லை எடுத்து வரவில்லையா? என்று சந்தேகமாக இருந்தது. எப்படியோ நன்றாகத்தான் இருந்தது. சிறிது நேரத்திலேயே கானா மூனாவின் மானேஜர், டாக்டருடைய மகனை அழைத்து வந்து விட்டார். எனது எதிர்பார்ப்புக்கு மாறாக ‘பால் வடியும் அப்பாவித்தனமான’ முகம் கொண்ட சிறுவன். கண்கள் அலைபாய்ந்தபடி இருந்தன. ‘நானே பேசுகிறேன்’ என்று சீனியரிடம் சொல்லி அவனை முன்னறைக்கு அழைத்துச் சென்றேன். நான் இந்தத் தொழிலுக்கு வந்து சுமார் ஒரு வருட காலமே கழிந்திருந்ததால், திரைப்படங்களில் காண்பது போல வியத்தகு திருப்பங்கள் வாழ்க்கையிலும் ஒரு விநாடி நேரத்தில் நிகழ்வது சாத்தியம் என்று நினைத்திருந்தேன். நன்றாக மூச்சை வாங்கிக் கொண்டு, நான் படித்த ச்¢ல கதைகள், பார்த்த திரைப்படங்களை மனதில் நிறுத்தி சீரான குரலில் ஆரம்பித்தேன், “தம்பி, இந்தக் குழந்தையை பாருங்கள். இது அந்தம்மாவுக்கு பிறந்ததாக இருக்கலாம். னால் இது உங்க அப்பாவுடைய குழந்தை. இதை யாரும் மறுக்க முடியாது. மேலும் அனைவருக்கும் இதை டாக்டர் ராமலிங்கம் மகள் என்றுதான் தெரியுமேயொழிய அந்தம்மாவின் மகள் என்று சொல்ல மாட்டார்கள். உங்களுடைய ரத்தம். உங்களுக்கும் வேறு தங்கை தம்பி கிடையாது. இது உங்கள் தங்கைதானே?”

முகத்தில் வேறு சலனமின்றி நான் பேசுவதை உன்னிப்பாக கேட்டுக் கொண்டு வந்ததால், நான் சொல்வதை அவர் மோதிக்கிறாரா என்றெல்லாம் கவலைப்படாமல் மேலும் தைரியம் கொண்டு நான் தொடர்ந்தேன், “உங்களுக்கும் தெரிந்திருக்கும். உங்க அப்பா இதை நல்ல ஸ்கூலில் படிக்க வைத்து வசதியாக வைத்திருந்திருக்கிறார். ஆனால் இன்று இந்தப் பிள்ளைக்கு வேறு வழியில்லை. உண்மையில் இவளுக்கு உங்க அப்பா சொத்தில் மூன்றில் ஒரு பங்கு உரிமை இருக்கிறதென்றாலும், இவர்கள் கேட்பது, அவர்கள் இருக்கும் அந்த வீடும், ஒரு லட்ச ரூபாயும். இந்தக் குழந்தைக்காகத்தான் அதுவும். நாளை வாழ வழியின்றி மோசமான நிலைக்கு இந்தப் பிள்ளை தள்ளப்பட்டால் அது உங்க அப்பாவுக்குத்தன் அசிங்கம். இன்று இந்தக் குழந்தை நல்ல டிரெஸ் போட்டிருக்கு. நாளை முடியுமா என்பது உங்கள் கையில்தான். உங்கள் தங்கையை கஷ்டப்பட நீங்கள் விடக்கூடாது..அது உங்கள் அப்பாவுக்கு செய்யும் மரியாதை”

நான் பேசியதில் எனக்கு மிகுந்த திருப்தியாக இருந்தது. எங்கும் இடறாமல், தடங்கலின்றி எதிராளி எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமலேயே சீராக பேசி விட்டேன். பெரிய மனிதனைப் போல மற்றவருக்கு அலோசனை சொல்லி சமசர முயற்சியை கைக்கொள்ளுவதில் பெருமையாகவும் இருந்தது. வந்த சிறுவனோ பேசும் போது என் கண்களையே கவனித்து வந்தவன், வீட்டிற்கு போய் அவன் அம்மாவிடம் கேட்டுச் சொல்வதாக மட்டும் கூறி விட்டு சென்றான்.

சீனியரை அந்தப் பெண்ணுடனும், அவளது மாமனுடனும் பேச விட்டு நான் அந்தக் குழந்தையும் விளையாடிக் கொண்டிருந்த அடுத்த அரை மணி நேரத்தில் கானா மூனாவின் வீட்டிலிருந்து தொலைபேசி! அவரது மானேஜர்தான் சுருக்கமாக நான்கே வரிகள் சீனியருடன் பேசி வைத்து விட்டார். ‘டாக்டரின் மனைவி ‘ஒரு தம்படிக்காசு கூட இந்தப் பெண்ணுக்கோ அல்லது இவரது குழந்தைக்கோ தானாக கொடுக்க மாட்டராம். மூணு பங்கோ நாலு பங்கோ, இந்தம்மா கோர்ட்டில கேஸ் போட்டு வாங்கட்டுமாம். அவர்கள் கவலைப்படவில்லையாம்’

இதைச் சொல்லிவிட்டு சீனியர் அந்த்ப் பெண்ணின் மாமனிடம் திரும்பி, “வேறு வழியில்லை. அவர் பேசுவதைப் பார்த்தால் டாக்டர் பொண்டாட்டி இவங்க மேல ரொம்ப கோவமா இருக்காங்க போல இருக்கு. கொஞ்சம் விடாப்பிடியான பொண்ணுன்னு கானா மூனா கூடச் சொன்னார். எனவே கேஸ் போட்டுடலாம். திருச்சியில இல்ல இங்க மதுரையில போடலாம். என்ன சொல்றீங்க?” என்றார்.

மாமனோ அந்தப் பெண்ணைப் பார்த்தார். கலங்கிய கண்களுடன் தலையை தூக்கியவர், “கேஸ் எங்க போடணும்னு சொன்னீங்க?” என்று நேரடியாக சீனியரின் கண்களைப் பார்த்து கேட்டார்.

“திருச்சியலதான் போடணும். அதுதான் நல்லது. பையனே வந்து பைல் பண்ணி எல்லாம் பாத்துக்குவான். நான் டிரையலுக்கு வரேன்”

ஒரு நிமிடம் மெளனமாக இருந்தவர் திடீரென கண்களை நன்கு துடைத்துக் கொண்டார். நிமிர்ந்து நன்றாக உட்கார்ந்தபடி தெளிவான குரலில், “ரொம்ப நன்றிங்க சார். டாக்டர் பெயரை திருச்சியிலோ மதுரையிலோ இருக்கிற கோர்ட்டில் இழுப்பது அவருக்கு நான் செய்யிற துரோகம். அதை நான் செய்ய முடியாது. அவர் பெயர் வெளிய வராம கோர்ட்டில் போடாமல் ஏதாவது செய்ய முடியும்னா சொல்லுங்க. மற்றபடி எதுவும் வேண்டாம்”

ஏதோ பதில் சொல்ல வாயெடுத்தவன், சீனியரே பேசாமல் இருப்பதைப் பார்த்து நிறுத்திக் கோண்டேன். சீனியரின் மெளனத்திலேயே அவரது பதிலைப் புரிந்து கொண்டவராக அந்தப் பெண், “அப்போ நாங்க வாரோம். தேங்ஸ்...வாங்க மாமா போகலாம்” என்று எழுந்து எங்கள் பதிலுக்கு காத்திருக்காமலேயே அவரது குழந்தையின் கையைப் பிடித்து, அவரது மாமன் பின் தொடர கூட்டிச் சென்று விட்டார்.

அதற்குப் பிறகு அவர்கள் மூவரையும் நான் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பார்க்க நேரிட்டதில்லை என்றாலும், அடிக்கடி அவர்களை நினைக்க மறப்பதில்லை.....

***
பி.கு. சம்பந்தப்பட்டவர்களின் நலன் கருதி அவர்களது பெயர்களையும், ஊர்களையும் மாற்றியுள்ளேன். மற்றபடி எதுவுமே கற்பனையில்லாத உண்மைச் சம்பவம் இது.


12.5.06

இறைக் கடமை?

கடந்த வாரம், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நவராத்திரி கொண்டாட்டங்களை தொலைக்காட்சி செய்தியில் பார்க்க நேரிட்டது. கோயம்புத்தூரில் நடந்ததாக காட்டப்பட்ட ஒரு சடங்கு என்னை, சில மாதங்களுக்கு முன்னர் மும்பையில் பார்த்த இஸ்லாமிய முகரம் ஊர்வலத்தையும் தொடர்ந்து நேரிட்ட ஒரு சுவராசியமான சம்பவத்தையும் ஞாபகப்படுத்தியது.

கோவையில் இது பல வருடங்களாக நடந்து வரும் சடங்கா அல்லது முகரம் ஊர்வலங்களுக்கு பதிலடியாக ஏற்படுத்தப்பட்ட வன்முறையா என்று தெரியவில்லை. அதாவது, இளைஞர்கள் சட்டையில்லாமல் சுற்றி நின்று கொண்டு இரு கைகளிலும் வாள் போன்ற நீண்ட கத்திகளைக் கொண்டு மாற்றி மாற்றி தங்கள் புஜங்களைக் காயப்படுத்திக் கொள்கின்றனர். ஒரே ரத்தக் களறி!

முகரம் ஊர்வலத்திலும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. பெரியவர் முதல் சிறியவர் வரை, முனையில் கூர்மையான கத்தி போன்ற ஆயுதம் இணைக்கப்பட்ட சவுக்கினைக் கொண்டு இரு தோள்கள் மீதாக முதுகிலும் மார்பிலும் மாறி மாறி அடித்துக் கொண்டு சென்றனர். ரத்தம் சிந்தலில் கோவை சடங்கிற்கு சற்றும் பஞ்சமில்லை.

முகரம் ஊர்வலத்தை முதலில் தொலைக்காட்சியில் பார்த்த போது அதிர்ந்து விட்டேன். ஆனால் என் மனதில் ஏற்பட்ட வலி கூட ஓங்கி ஒலிக்கப்பட்ட மந்திரங்களின் தாளத்திற்கேற்ப மார்பிலும் முதுகிலும் அந்த சிறிய சவுக்கினால் அடித்துக் கொண்டே சென்றவர்களிடம் காணப்படவில்லை. அந்த ஊர்வலத்தில் சென்ற சிறுவர்களையும் சேர்த்தே கூறுகிறேன். தாங்கள் செய்யும் காரியத்தில் மிக்க திருப்தியுடையவர்களாகவே அவர்கள் காணப்பட்டனர்.

இதே போல வெவ்வேறு காரணங்களால், ஏறக்குறைய அனைத்து மதங்களும் பக்தர்களின் உடல் வருத்துதலை போற்றி வருகிறது. கிறிஸ்தவர்கள், இயேசு சிலுவையில் அறையப்படும் நாளுக்கு முன்னர் நாற்பது நாட்கள் விரதம் இருந்ததை நினைவு கூறும் வகையில் பல்வேறு வகையில் தங்களை வருத்திக் கொள்கின்றனர். நமது நாட்டில் பலர் மாமிசம் உண்ணுவதில்லை. சிலர் ஒரு வேளை உணவை தியாகம் செய்வர். என் உறவினர் ஒருவரோ மிக எளிதாக, முகசவரம் செய்து கொள்வதில்லை. இதையெல்லாம் மிஞ்சி, பிலிப்பைன்ஸ் நாட்டில் சில இளைஞர்கள் வருடம் தோறும் புனித வெள்ளியன்று தங்களை சிலுவையில் அறைந்து கொள்கின்றனர்!

கடந்த முகரம் அனுசரிப்பின் போது, புனித வெள்ளிக்கு முந்தைய உபவாசக் காலம். எனது மனைவி மாமிசம் சாப்பிடுவதில்லை என்று விரதம் (?) பூண்டிருந்தார்கள். நான் அவர்களைக் கேலி செய்து கொண்டிருந்தேன். பதிலுக்கு என்னை ‘லூசிபர்’ என்று அழைத்தார்கள். லூசிபர் சாத்தான்களுக்கெல்லாம் தலைவன். கடவுளுக்கு எதிரி மற்றும் இந்த உலகத்தின் அட்டூழியங்களுக்கு காரணகர்த்தா. இந்த நேரத்தில்தான் முகரம் ஊர்வலத்தை பார்க்க நேரிட்டது. கொஞ்சம் முதலில் அதிர்ந்தாலும் பின்னர் நான் சொன்னேன், " மதங்கள் சில விஷயங்களை செய்யவும், சிலவற்றை செய்யாகூடாதென்றும் சொல்கின்றன. ஆனால் மதத்தலைவர்கள் எது எளிதோ அதை செய்யத்தூண்டி, எது கடினமோ அதைப் பற்றி எதுவும் கண்டு கொள்வதில்லை".

"அது எப்படி இப்படி ரத்தக்களறியாக்கிக் கொள்வது அவ்வளவு எளிதா?"

"எது கடினம். இப்படியாகப்பட்ட வெறியேறிய நிலையில், கோஷங்களின் தாளத்தில் உடம்பைப் புண்ணாக்கிக் கொள்வதா? அல்லது டிக்கட்டுக்காக வரிசையில் நிற்கையில், நண்பர் ஒருவர் வந்து, டிக்கட் கொடுப்பவரை எனக்குத் தெரியும். என்னுடன் அறைக்குள் வா. டிக்கட் வாங்கித் தருகிறேன் என்று சொல்லும் போது வேண்டாம் வரிசையிலேயே நின்று கொள்கிறேன் என்று சொல்லும் நேர்மையா?"

மதச்சடங்குகளுடன், டிக்கட் வரிசையில் நிற்பதை ஒப்புமைப் படுத்தியது கற்றறிந்த மனிதர்களால் ஆழ்ந்து ராயப்படும் மறை பொருளை எளிமையாக அல்லது மேற்போக்காக பார்க்கும் ஒரு செயல் என்பதை நான் அறிவேன். ஆனால் மதக்கடமையினை நமது தினசரி வாழ்க்கையின் சின்ன சின்ன விஷயங்களில் பார்க்கவே நான் ஆசைப்படுகிறேன். ஆன்மீகவாதிகளின் வியாக்கியானங்களை என்னால் புரிந்து கொள்ள முடிவதில்லை.

எல்லா மதங்களுமே மனிதர்களின் சக்திக்கும் அறிவுக்கும் மீறிய தெய்வ சக்தியை போதிக்கிறது. மானிட வாழ்க்கையின் நிலையாமையினையும்...இந்த ஆத்மாவின் பயணத்தில் இந்த மானிட வாழ்க்கையில் அதன் சஞ்சரிப்பு ஒரு சிறு துளி என்றும் நம்புகின்றன. இந்த உலக வாழ்க்கை ஒரு பரீட்சைக் களம் போலவும் முடிவில்லா நீண்ட ஒரு பயணத்திற்கான முதல் படியாகவும் அல்லது இன்னமும் என்னன்னவோ போலவும் கூறுகின்றன. ஆனால் சாதாரண என்னைப் போல மனிதர்களுக்கு இவையெல்லாம் விளங்க முடியாத புதிர்கள். எனவே அவற்றைப் பற்றி நாங்கள் அதிகம் கவலைப் படுவது இல்லை. மத தலைவர்களின் பேச்சினைக் கேட்டு வெளியே வந்தவுடன், மறந்து போகும் விஷயங்கள் அவை. ஏனென்றால் என்னைப் போன்றவர்களுக்கு தினசரி வாழ்க்கைக் கவலைகள் அநேகம் உண்டு. இந்த உலக பிரச்னைகளிலிருந்து விடுபட ஒரு மாற்றாகவும், அதில் ஒரு சிறு விடிவு வந்து விடாதா? என்ற ஏக்கங்களுடன்தான் கடவுளுக்கும் எங்களுக்குமான தொடர்பு.

உலகின் நிலையாமை பற்றி மதங்கள் பேசினாலும், மதத்தலைவர்கள் இந்த உலக வாழ்க்கையின் மேல் மக்களுக்கு உள்ள பிடிப்பை வைத்துத்தான் காலத்தை ஓட்டுகிறார்கள். அதற்காகத்தான் அவர்கள் டிக்கட் வரிசையினை நாம் மீறுவதை கண்டு கொள்வதில்லை. அசாருத்தீன் ஷூ விளம்பரத்திற்காக தனது கையெழுத்தை காலணியில் பதித்த போது பெரிய குரல்கள் எழுந்தன. அது இஸ்லாத்துக்கு எதிரானது என்று. அதே போல ஷபனா ஆஸ்மி ஒரு திரைப்படத்திற்காக தலையினை மழித்துக் கொண்ட போதும் நிகழ்ந்தது. ஆனால் அதே அசாருத்தீன் லஞ்சம் பெற்றது அல்லது தாவூது இப்ராகிம் போதைப் பொருளை கடத்துவது இஸ்லாத்துக்கு விரோதம் என்ற ஆட்சேபங்கள் எழுந்ததாக எனக்குத் தெரியவில்லை. காலணியில் கையெழுத்துப் போடாமல் இருப்பதோ அல்லது தலையினை மழித்துக் கொள்ளாமல் இருப்பதோ எளிது. ஆணிகளால் வருடத்திற்கு ஒரு நாள் சிலுவையில் அறைந்து கொள்வது கூட எளிதுதான். ஆனால் தினசரி டிக்கட் வரிசையினை மீறும் ஆசையினைத் துறப்பது எளிதல்ல.


இப்படித்தான் ஏதேதோ நினைத்துக் கொண்டே, முகரம் ஊர்வலத்தை பார்த்த இரண்டாவது நாளில் மும்பை புறநகர் ரயிலில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தேன்.

மும்பை புறநகர் ரயில்களின் முதலாம் வகுப்பில் எழுதப்படாத விதி ஒன்று உண்டு. மூன்று நபர்கள் அமரும் இருக்கையில் மூன்று பயணிகள்தான் அமர வேண்டும். அந்தப் பயணி ஒரு சிறுவனாயிருந்தாலும் சரி, நின்று கொண்டிருப்பவர் வயோதிகராயிருந்தாலும் சரி 'மூன்றென்றால் மூன்று பேர்தான்'. இதற்கு எதிர்மாறான மற்றொரு எழுதப்படாத விதி இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் உண்டு. அங்கு மூன்று நபர்கள் அமரும் இருக்கையில் நான்காவது பயணி முழு உரிமையுடன் அமர இடம் கோரலாம், ஏற்கனவே அமர்ந்திருக்கும் பயணிகளின் பின்புறங்கள் இருக்கைக்கு வெளியே பிதுங்கி வழிந்தால் கூட. அன்று ஒரு நண்பருக்காக வேண்டி இரண்டாம் வகுப்பில் பயணித்துக் கொண்டிருந்தேன்.

மூன்று நபர்களுக்கான இருக்கையில் மூன்றாவது பயணியாக நான். மற்ற இருவரும் உறவினர்கள் போல. ஜன்னலோரம் அமர்ந்திருந்தவர், இளைஞர். மடியில் ஏதோ புத்தகத்தை விரித்து வைத்து, அதன் மீது குனிந்தவாறு இருந்தார். நடுவில் இருந்தவர் சற்று வயோதிகர். அடுத்த நிறுத்துமிடத்தில் பலர் ஏற, ஒருவர் எனது அருகே வந்து தான் உட்காருவதற்கு தோதாக சற்றே நகர்ந்து கொள்ளுமாறு கண்களிலேயே வினவினார். நான் லேசக உள்ளிழுக்க, கிடைத்த இரண்டரை இன்ச் இருக்கையில் ஒருவாராக அமர்ந்து கொண்டார்.

நிச்சயமாக அப்படிப்பட்ட நிலையில் ஒருவர் அமர முடியாது. வெகுதூர ரயில்களில் இருக்கை கிடைத்தவுடன் 'அப்பாடா' என்று பற்றிக் கொண்டு அடுத்து படுக்கைக்கு பரிசோதகரிடம் மெல்ல அடி போடுவது போல எனக்கு அடுத்து இருந்தவர்களிடம், கொஞ்சம் நகர்ந்து கொள்ளுமாறு வலது கையினை எனக்கு குறுக்கே நீட்டிச் சொன்னார்.

'இன்னும் எப்படி நகருவது. நாங்கள் மூன்று பேருமே நன்கு தடினமான நபர்கள்" எனக்கு அடுத்து இருந்த வயதானவர் சொல்ல, அதனை ஆமோதித்து அவருக்கு அடுத்து இருந்த இளையவரும் ஏதோ கூறியது போல கேட்டது எனக்கு.

'தடினமான நபர்கள்' என்று என்னையும் அவர் சேர்த்துக் கொண்டது பாராட்டா அல்லது கிண்டலா என்பது அவர் சொன்ன தொனியில் இருந்து தெரியாவிட்டாலும், எனக்கு அது பிடிக்கவில்லை. மேலும் அவர் சொன்னது பொய். என்னைப் பற்றி தெரியாது. அவர்களை தடினமான நபர்கள் என்று என்னால் ஒத்துக் கொள்ள முடியாது.

"கால்களை சேர்த்து வைத்து உட்காருங்கள். இடம் இருக்கும்" நான்காவது நபர் அடுத்த எழுதப்படாத விதியை நீட்டினார். அவர் சொன்னது சரிதான். கால்களை ஆங்கில ‘வி’ போல விரித்து வைத்து உட்காருகையில் நான்கு பயணிகளை அந்த இருக்கையில் சமாளிப்பது சற்று சிரமம். அந்த இருவருமோ கால்களை அகட்டியே வைத்திருந்தனர்.

'இது ஏதடா வம்பு' என நான் சற்று முன்னால் நகர்ந்து அமர, நான்காம் நபர் கிடைத்த இடைவெளியில் இன்னும் சற்று இருக்கைக்கு உள்ளாக தள்ளி உட்கார்ந்து கொண்டார். ஏறக்குறைய அவரது முக்கால்வாசி பின்புறம் இருக்கைக்கு உள்ளே வந்துவிட சற்றே தன்னை ஆசுவாசப் படுத்தியவர், விடவில்லை. புன்னகைத்தவாறே அவர்களைப் பற்றி கிண்டலாக ஏதோ அவர்கள் காதில் விழும்படியே முணுமுணுத்தார். எனக்கு அடுத்து இருந்த வயதானவரும் பதிலுக்கு சொல்ல...இது வரை இந்த விதி மீறல்களை எரிச்சலுடன் பார்த்துக் கொண்டிருந்த எதிர்வரிசை பயணிகளும் நான்காவது நபருக்கு சாதகமாக சேர்ந்து கொண்டனர். இந்த மும்முனைத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட நான் இரு உள்ளங்கைகளிலும் கன்னத்தை தாங்கி குனிந்து தூங்க முயற்சித்தேன். ஆனால் இந்த எதற்குமே கவலைப் படாமல், ஜன்னல் பக்கம் அமர்ந்திருந்த நபரோ, 'என்னமும் சொல்லிக் கொள்ளுங்கள்' என்பது போல இன்னமும் கால்களை அகட்டியே வைத்து அதன் மீதான புத்தகத்தை தாங்கி... தலை குனிந்து கருமமே கண்ணாயிருந்தார்.

இருக்கையின் முன்னால் நகர்ந்து அமர்ந்திருந்த நான், 'அப்படி என்னடா விஷயம், தன்னைச் சுற்றி எழும் சொல்லம்புகளை விடவும் முக்கியமாக என்று சிறிது தலையை திருப்பி எட்டிப் பார்த்தால்.....மனிதர், தனது அகட்டிய கால்களுக்கு நடுவே வைக்கப்பட்ட நோட்டுப் புத்தகத்தில் அக்கறையாக ஒரு சிவப்பு பால் பாயிண்ட் பேனாவால் மும்முரமாக, 'ஸ்ரீராம ஜெயம்' எழுதிக் கொண்டு இருந்தார்.

அந்த நோட்டின் தடிமனைப் பார்க்கையில் அவர் கைவிரல்களை கணிசமான அளவு வருத்திக் கொண்டிருப்பார் என்று தோன்றியது!.

வண்டியின் வியர்வைப் புழுக்க எரிச்சலிலும் ஏனோ நான் எனக்குள் புன்னகைத்தேன்!!

மும்பை
2002

10.5.06

காஷ்மீர்...

'ரிவர் ஆ·ப் எமோஷன் பர்ஸ்ட்ஸ் ஆன் எல்.ஓ.சி' என்று 22ம் தேதி ஏசியன் ஏஜ் நாளிதழின் முதல் பக்கத்தில் கட்டம் கட்டி வெளிவந்த செய்தியினை எத்தனை இந்தியர்கள் படித்தார்களோ தெரியாது. ஆனால், நிச்சயம் இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிக்கும் அரசியல்வாதிகள் படிக்க வேண்டும். படிக்க நேரமில்லையென்றால் குறைந்தபட்சம் காஷ்மீரத்து நீலம் நதியின் இருபுறமும் நடுக்கும் குளிரிலும், கொட்டும் மழையிலும் கூடியிருக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் புகைப்படத்தையாவது காண வேண்டும். யார் இவர்கள்? ஏன் இந்தத் தவிப்பு இவர்களிடம்?

நீலம் நதியின் இரு கரைகளுக்குமான தூரம் என்னவோ இருபது அடிதான். ஆனால் அதன் இரு கரைகளிலும் உள்ள மக்களுக்கிடையேயான தூரமோ, அவர்களைப் பொறுத்தவரை ஒருவரையொருவர் அணுகவே முடியாத இரு வேறு உலகங்களுக்கான தூரம் என்பது வரலாற்றுச் சதி! இரு வேறு உலகங்கள் என்பது உயர்வு நவிற்சியென்றால்.... இரு வேறு நாடுகள் என்பது உண்மை!! ஆம், நதிக்கு அந்தப் பக்கம் சுதந்திரமடைந்த காஷ்மீர் என பாகிஸ்தானியர்களாலும் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் என இந்தியர்களாலும் அழைக்கப்படும் பகுதி. நதிக்கு இந்தப் பக்கம் இந்தியா ஆக்கிரமித்த காஷ்மீர் என பாகிஸ்தானியர்களாலும், இந்தியாவின் மாநிலம் என இந்தியர்களும் அழைக்கும் பகுதி. இந்த குழப்பத்தில் அந்த மக்களுக்கோ தாங்கள் எந்த நாடு என்பதே புரிந்திராத நிலை. செய்தியினைப் படிக்கையில் அந்த 'நாட்டுக் கவலையெல்லாம்' அவர்களுக்கிருக்குமா என்பதே சந்தேகம்தான். பதினான்கு ஆண்டுகள் கழித்து தனது தாயை மறுகரையில் பார்த்து துள்ளிக் குதிக்கும் 26 வயது ஹாஜிரா பீபிக்கும், மகள் கையில் தனது ஒரு வயது பேத்தியைப் பார்த்த சந்தோஷத்தில் இதயத்தை உறைய வைக்கும் குளிந்த தண்ணீரில் குதித்து அக்கரைக்கு செல்ல முயன்ற ஹாஜிராவின் அம்மாவுக்கும் வேறு என்ன நாட்டுக் கவலை இருக்கப் போகிறது? தனது சகோதரனை மறுகரையில் கண்டதும் தனது அன்பளிப்பாக கொண்டு வந்திருந்த தேங்காயை எறிந்த ஐம்பது வயது மொகமது கரீமுக்கும் அந்த தேங்காயை பிடிக்கிறேன் பேர்வழி என்று ஏறக்குறைய தண்ணீரில் விழப்போய் மற்றவர்களால் காப்பாற்றப்பட்ட முஜித்துக்கும் வேறு என்ன நாட்டுக் கவலை இருக்கப் போகிறது? ஒருவருக்கொருவர் செய்திகளை கற்களில் வைத்துக் கட்டி எறிய ...அதிலும் பல செய்திகள் துரதிஷ்டவசமாக நீரில் விழுந்து ஓடி மறைய 'அழுகையும், கூச்சலும் ஆரவாரமும் எங்கும் நிறைந்திருந்ததாக' பத்திரிக்கை எழுதுகிறது.

இத்தனை களோபரத்திற்கும் காரணம் பேராசை பிடித்த சில மனிதர்கள்! அவர்களால் நிகழ்ந்த ஒரு சண்டை!! தொடர்ந்து நிகழும் பயங்கரவாதம்!!! ஐம்பது வருடங்களுக்கு முன்னர் நடந்த சண்டையில் இந்தப்பக்கம் கொஞ்சம் அந்தப் பக்கம் கொஞ்சம் என பிரிந்து போனது இரு கிராமங்கள். ஏதோ அவ்வப்பொழுது பிரிந்தவர்கள் ஒருவருக்கொருவர் பைனாகுலர் மூலமாகவாவது எப்போதாவது பார்த்துக் கொண்டதும் காஷ்மீர் போராட்டம் பெரிய அளவில் வெடித்த பிறகு நின்று போனது. கடந்த பதினான்கு ஆண்டுகளாக நதியை ஒட்டி ஓடும் சாலைக்கு 100 மீட்டர் தூரத்திற்குள் யாராவது வந்தாலே இந்திய காவல் கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து இயந்திரத் துப்பாக்கி சீற ஆரம்பித்து விடுமாம். யார் செய்த புண்ணியமோ இரண்டு வாரம் முன்பு சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட நீலம் நதி சாலை திறக்கப்பட்டதாக அறிவிப்பு ஏதும் வெளியாக வில்லையென்றாலும் அவ்வாறு மக்களிடையே செய்தி பரவ இருபுறமும் ஏற்பட்ட மக்கள் எழுச்சியைக் கண்டு ராணுவமும் அதைத் தடுக்க முயலவில்லை. அங்கிருந்த சில ராணுவ வீரர்களும் மக்கள் ஆர்வமிகுதியில் ஆற்றுக்குள் பாய்வதை தடுக்கும் பணியில்தான் ஈடுபட்டிருந்தார்களாம்....இவர்களுக்கெல்லாம் வேறு என்ன கவலை இருக்கப் போகிறது?

முகமது முஜித் கூறுவது போல, 'இது ஒரு சாதாரண தேங்காயாக இருக்கலாம். ஆனால் எனக்கு இதுதான் உலகமே! பதினான்கு வருடம் கழித்து எனது சகோதரனை சந்திக்கிறேன். ஏதோ அவனைப் பார்த்தேன். அவனருகே நின்று பேசும் ஒரு நாளும் வரும்' என்பது மட்டும்தானே இவர்களது கவலையாக இருக்க முடியும்.

நிலவில் இந்தியன், செவ்வாயில் இந்திய ரோபோட் எனவும் அப்துல் கலாம் கனவு காணலாம். ஒரு சாதாரண இந்தியனான எனது கனவு இதுதான்.

தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பில் புதிய அங்கத்தினராக காஷ்மீர் நுழைய வேண்டும். சார்க் அமைப்பின் அலுவலகங்கள் அனைத்தும் காஷ்மீரத்தில் அமைந்திடல் வேண்டும். சுவிட்சர்லாந்தினைப் போல ராணுவம் இல்லாத நாடாக காஷ்மீரம் இருத்தல் வேண்டும். இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீர பாதுகாப்புக்கு பொறுப்பாளியாக வேண்டும். காஷ்மீரம் எந்த நாட்டு கலகத்திலோ, சண்டையிலோ சார்பு நிலை எதுவும் எடுக்கவியலாத அயல்நாட்டுக் கொள்கையை அதன் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை ஷரத்தாக அமைக்க வேண்டும். முழுக்க முழுக்க மதச்சார்பற்ற நாடாக அதன் அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்படல் வேண்டும். அதில் சிறுபான்மையினருக்கு நம் நாட்டு சட்டம் போலவே சிறப்புரிமை அளிக்கப்படல் வேண்டும். நாடு திரும்ப விரும்பும் பண்டிட்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளல் வேண்டும். அவர்களுக்கு குடியிருப்பு மனை வழங்க வேண்டும். விரும்பாதவர்களுக்கு அவர்களின் இழப்புக்கு தகுந்த நஷ்ட ஈடு வழங்க வேண்டும் அல்லது இருநாட்டு குடியுரிமை வழங்கப்படல் வேண்டும்.

மேலும், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையான ஷரத்துகளை மாற்றம் செய்ய எந்த காஷ்மீர் அரசாவது முயன்றால்...இந்தியாவோ அல்லது பாகிஸ்தானோ அதனைத் தடுக்க ஐநா உதவியுடன் பலப்பிரயோகம் செய்யலாம். இதற்கான முத்தரப்பு ஒப்பந்தம் இந்தியாவும் பாகிஸ்தானும் கையெழுத்து செய்து அதனை காஷ்மீர மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களா என்று அறிய ஒரு வாக்கெடுப்பும் (ரெபரெண்டம் அல்லது பிளீபிசைட்) நடத்தலாம். இதன் மூலம் காஷ்மீர மக்கள் தங்களது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையான ஷரத்துகளை மாற்றவியலாத வண்ணம் செய்யலாம். சிறுபான்மையினர் உரிமைகள் பேணப்படுகிறதா என்பதை கண்காணிக்கவும் தீர்மானிக்கவும் சர்வதேச ஆணையம் ஒன்றினை ஏற்படுத்தலாம்.

பிறகு சீனாவிடமும் 'உனக்கு இன்னாபா பிரச்னை. பிசாத்து ரெண்டரையணா நிலம்தானே.....இங்க அது நிறையவே இருக்கு. உனக்கு வேண்டியத எடுத்துக்கோ. விடு என்னை. நான் பாட்டுக்கு இந்த டாங்கு பாங்குன்னு செய்யறத விட்டுட்டு கூட ரெண்டு ஸ்கூலு கட்டுற வழியப் பாக்குறேன்னு' சொல்லலாம். இன்னும் என்னன்னவோ செய்யலாம் போங்க......

தெற்காசிய கூட்டமைப்பை ஐரோப்பிய கூட்டமைப்பு அளவுக்கு வலுப்படுத்தி...பலரது அகண்ட பாரத கனவினையும் வைக்கேறியசாக நிறைவேற்றலாம். குறைந்த பட்சம் ஹாஜிரா பீபிக்கு தனது அம்மாவின் கைகளில் தனது மகளைக் கொடுத்து பெருமைப்படவாவது ஒரு வாய்ப்பை ஏற்படுத்த முடியாதா?


இக்கட்டுரை, அதில் கூறப்பட்ட செய்தியினை படித்த உணர்வினால் உந்தப்பட்டு ஒரு மடலாக மூன்று வருடங்களுக்கு முன்னர் மரத்தடி குழுமத்திற்காக எழுதப்பட்டது. ஆனால், நான் எதிர்பார்த்திராத எழுத்தாளர் ஒருவர் தனது இருவரி பாராட்டினை தனிமடலில் அனுப்பியிருந்தார். எனவே இதனை எனது வலைப்பதிவில் பதிவது நன்று என நம்புகிறேன்.

9.5.06

ஷரியா?

ஷரியா மட்டும்தானா?
தமிழ் இணைய உலகில் தாராள எண்ணங்களுக்கு ஆதரவாக நிற்கும் மிகச் சிலரில் திரு.பத்ரி நாராயணன் முதன்மையானவர். எவ்வித தீவிரமான எண்ண நிலைப்பாட்டிற்கும், ஆதரவளிக்கிறாரோ இல்லையோ அவ்விதமான எண்ண வெளிப்பாட்டிற்கு தகுந்த மதிப்பளிக்கக்கூடியவராக இருக்கும் இவர் தனது சமீபத்திய வலைப்பதிவில் ‘பிரிட்டனில் ஷரியா - சரியா?’ என்ற தலைப்பில் கூறியிருக்கும் சில கருத்துகள் எனக்கு ஆச்சரியமளிப்பதாக இருந்தது.

மாறி வரும் உலக சூழ்நிலையில், பிரிட்டனில் வசிக்கும் கணிசமான இஸ்லாமிய மக்கள் ஷரியா சட்டத்தை தாங்கள் வசிக்கும் பகுதியில் வரவேற்க தயாராக இருப்பதாக வந்த நாளிதழ் செய்தியினைப் பற்றி எழுத முயன்றவர் தனது பதிவின் இறுதியில் “ஷரியா விதிகள் நடைமுறைக்கு ஒவ்வாதவை. எந்த மதக்குழுவும் தனக்கென சிவில் சட்டங்களை எதிர்பார்ப்பதும் அதற்கென போராடுவதும் சரியாகத் தெரியவில்லை......................இந்தியாவிலும் இது போன்ற தனிச் சட்டங்கள் ஒழிக்கப்பட வேண்டும்” என்று குறிப்பிடுவதுதான் என் வியப்பிற்கு காரணம்.

‘காமன் சிவில் கோடு’ என்று நம்மில் பலரால் அறியப்பட்ட பொது உரிமையியல் சட்டம் பற்றிய விவாதமே வீண் வேலை என்பது எனது கருத்தாயினும், இங்கு நான் எழுத விழைந்தது, ‘பொது சிவில் சட்ட’ மாயையில் தாராள எண்ணம் கொண்டவர்களும் எளிதில் சறுக்குகிறார்கள், என்ற எனது எண்ணம் வலுப்பட்டதைத்தான். ஷரியா என்றாலே நம்மில் பலருக்கு மனதில் தோன்றுவது ‘கண்ணுக்கு கண்’ ‘பல்லுக்கு பல்’ என்ற மோசேயின் விதிதான். வேடிக்கை என்னவென்றால் இந்த விதியினை மோசே மூலமாக மனித குலத்துக்கு அளித்ததே ‘பிதா குமாரன் பரிசுத்த வி’ என்று டோனி பிளேர் தினமும் வணங்கும் திரித்துவத்தின் முதலாமவரான பிதாதான். வேடிக்கை இருக்கட்டும், ஒரு இந்தியனாக பிறந்து, வளர்ந்து, பயின்ற சூழலில் எனக்கு ‘கண்ணுக்கு கண்’ என்ற சட்டம் ஒரு மனித உரிமை மீறலாகத் தெரிகிறது. ஆனால், மரண தண்டனைக் கைதி சாகடிக்கப்படுவதை நாற்காலி போட்டு அமர்ந்து வேடிக்கை பார்க்க அனுமதிக்கும் அமெரிக்க சட்டங்களும் அதே அருவருப்பை ஏற்படுத்துகின்றன. கார்களில் ஸ்பிரே பெயிண்ட் வைத்து கிறுக்கிய சிறுவனுக்கு சவுக்கடி கொடுத்த சிங்கப்பூர் சட்டமும், ஒரு இந்தியனின் பார்வையில் சகிக்க முடியாததாக இருக்கிறது. ‘தண்டனை என்பது மன மாற்றத்திற்குத்தானேயொழிய பழி வாங்குவதற்கல்ல’ என்ற இந்திய சட்ட முறைகளை பயின்ற எனக்கு இந்த மூன்று சட்டங்களுக்கும் அதிக வித்தியாசம் தெரியவில்லை. ‘ஷரியா விதியினை எதிர்பார்ப்பதே அபத்தம்’ என்று பத்ரி அவர்களைப் போலவே நம்மில் பலரும் எளிதில் கூறிவிடுகிறோம். ஆனால் மற்ற அபத்தங்கள் நம்மில் பலருக்கு கண்ணில் படுவதில்லை. நமது இந்திய ஸ்மிருதிகளில் கூட பாலியல் குற்றங்களைப் பொறுத்தவரையில் எந்த உறுப்பினால் சம்பந்தப்பட்ட குற்றம் புரியப்பட்டதோ அதனை அறுக்க வேண்டும் என்று இருக்கிறது. இஸ்லாமியர்களைப் பற்றிய தவறுதலான பொதுப்படுத்துதலுக்கு ‘ஷரியா மட்டுமே அபத்தம்’ என்று எளிதில் தீர்ப்பெழுத நம்மால் முடிவதும் ஒரு உதாரணமாக குறிப்பிடலாம்.


ஷரியா நடைமுறைக்கு ஒவ்வாதவையா?
ஷரியா குற்றவியல் மட்டுமல்லாது உரிமையியல் சட்டங்களையும் உள்ளடக்கியது. இரு வேறு மதங்களைச் சார்ந்த மக்கள் வசிக்கும் நாட்டில் ஷரியா குற்றவியல் முறையினை நடைமுறைப்படுத்துவது சாத்தியமல்ல. எனவே பிரிட்டனில் நடந்ததாக கூறப்படும் கருத்துக் கணிப்பில் கலந்து கொண்ட மக்கள் உரிமையியல் சட்டங்களைப் பற்றிதான் கருத்து கூறியிருக்கிறார்கள் என அனுமானிக்கிறேன்.

குற்றவியல் வழக்குகளைப் பொறுத்தவரை அரசு வழக்கு தொடுப்பவராகவும், நடத்துபவராகவும் இருக்கிறது. பாதிக்கப்பட்டவரின் பங்கு இந்திய, இங்கிலாந்து சட்டப்படி மிக மிக குறைவு. பெரிய குற்றங்களைப் பொறுத்தவரை பாதிக்கப்பட்டவர் விரும்பினாலும், குற்றம் செய்தவரை விடுவிக்க இயலாது. எனெனில் குடிமக்களின் பாதுகாப்புக்கான உத்தரவாதத்தினை அரசு நமக்கு அளித்து, அந்த உத்திரவாதம் காப்பாற்றப்பட தன்னால் இயன்றதை செய்ய குற்றவியல் சட்டம் மூலம் முயல்கிறது. தனிப்பட்டவரின் மதத்திற்கு இங்கு வேலையில்லை. மேலும் குற்றவியல் வழக்குகளைப் பொறுத்தவரை பாதிக்கப்பட்டவரோ அல்லது அத்துமீறியவரோ வேறு மதத்தை சார்ந்தவராகவும் இருக்கலாம். எனவே அவர் மீது ஷரியாவை திணிக்க முடியாது. கவே, திரு.பத்ரி (அவர் இங்கு ஒரு உதாரணம்தான்) எழுதியதில் என்னை ஆச்சரியப்படுத்தியதாக நான் கூறுவது உரிமையில் சட்டங்களைப் பற்றிய அவரது கருத்துகள்தான்...

முதலில் ‘ஷரியா விதிகள் நடைமுறைக்கு ஒவ்வாதவை’ என்று எதன் அடிப்படையில் குறிப்பிடுகிறார் என்று தெரியவில்லை. இஸ்லாமிய திருமண, விவாகரத்து சட்டங்கள் முறையாக கைக்கொள்ளப்பட்டால் பிற திருமண சட்டங்களை விட முற்போக்கான கருத்துகளைக் கொண்டுள்ளதாக எண்ணுகிறேன். திருமண வைபவம் எளிதானது. நடைமுறைக்கு உகந்தது. முக்கியமாக வரதட்சணை என்பது நடைமுறையில் எப்படியோ, ஷரியாவில் இல்லை. திருமணம் என்பது ஒப்பந்தமே என்று அடித்துச் சொல்லி சிக்கலில்லாத விவாகரத்திற்கும் வழிகாட்டுகிறது.

இங்கு நமக்கு வரும் சந்தேகம், இஸ்லாமிய சட்டத்தில் ‘நாலு பெண்களை மணப்பதற்கு உள்ள அனுமதி’ மற்றும் ‘கணவனை நம்பியுள்ள விவாகரத்தான பெண்ணுக்கு கிடைக்க வேண்டிய பொருளாதார பாதுகாப்பு’ பற்றியது. பொதுவாக இவ்விரண்டு முறைகளே இஸ்லாமிய சட்டத்தினை விரட்டி விரட்டி அடிப்பதற்கான அகில்லஸின் குதிகால்கள். இரண்டு பிரச்னைக்கும் உள்ள எளிய தீர்விற்கு, ‘இஸ்லாமிய மதசட்டமானது இரு தார மணத்தினை குற்றமாக கருதும் இந்திய தண்டனைச் சட்டத்தினையும், பெற்றோர், குழந்தைகள், மனைவிக்கு ஜீவனாம்சம் பெற்றுத் தரும் இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 125வது பிரிவினையும் கட்டுப்படுத்தாது’ என்று கூறிவிட்டாலே போதுமானது. அதாவது ஷரியா சிவில் சட்டங்கள் மட்டும்தான் செல்லும். குற்றவியல் சட்டங்களைப் பொறுத்தவரை செல்லாது என்று கூறுவதே முறையானது.

அதாவது ஒருவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டால் அந்த திருமணம் செல்லும். ஆனால் திருமணம் புரிந்தவர் தண்டிக்கப்படலாம். இதே முறை இந்து சட்டத்திலும் உள்ளது. ஒருவர் இரண்டாவது திருமணம் புரிந்தால், குற்றவியல் வழக்கில் தண்டிக்கப்படுவார். ஆனால், இரண்டாவது திருமணம் செல்லாது என்றாலும் அந்தப் பெண்ணுக்கு ஜீவனாம்ச உரிமை உண்டு. அதே போல அத்தகைய திருமணத்தின் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு சொத்துரிமையும் உண்டு. மேலும் ஒரு எளிய உதாரணம். இரு இந்து குழந்தைகளுக்கு மணம் செய்வித்தால் அது தண்டிக்கப்படக்கூடிய குற்றம். ஆனால் இந்து திருமண சட்டத்தின்படி அந்த திருமணம் செல்லும்.

இரு தார மணத்தினை குற்றமாக்கினால், இஸ்லாமியர்கள் ஒத்துக் கொள்வார்களா? ஒரு இஸ்லாமியர் ஒரு மனைவியை மட்டும் திருமணம் செய்வதினால் இறைவனுக்கு எதிராக பாவம் ஏதும் செய்கிறாரா என்ன? இறைவன் தடை செய்ததை செய்யுமாறு சட்டம் நிர்பந்தித்தால் அது தவறு. இறைவன் ‘வேண்டினால் செய்து கொள்’ என்று அனுமதித்ததை மற்றவர்களோடு இசைந்து வாழும் சூழல் கருதி செய்ய வேண்டாம் என்று சட்டம் கூறினால் தவறு ஏதும் இல்லை என்பதே என் கருத்து. இதனை இஸ்லாமியர்களும் ஏற்றுக் கொள்வார்கள் என்பது எனது நம்பிக்கை. ஏனெனில் உங்களுக்கும் எனக்கும் தெரிந்த நடுத்தட்டு மக்களிடையே இரண்டாவது மணம் என்பது இல்லாத ஒன்று. கீழ்த்தட்டு மக்கள்தான் பிடிக்காத மனைவியை பழிவாங்கும் ஒரு கருவியாக இரண்டாவது மணம் புரிகின்றனர். இறை கடமையை நிறைவேற்றுவதற்காக யாரும் அவ்வாறு மணம் புரிவதாக தெரியவில்லை.

பம்பாய் உயர்நீதிமன்ற தீர்ப்பினால் ஜீவனாம்ச பிரச்னையும் புத்திசாலித்தனாமாக தீர்க்கப்பட்டுள்ளது (பார்க்க முந்தைய பதிவான ‘ஷாபானு’). அடுத்தது விவாகரத்து. விவாகரத்து விதிகளும் முறையாக கைக்கொண்டால் அவை முற்போக்கானதும், நடைமுறைக்கு உகந்ததுமானது. பெண்ணுக்கும் அத்தகைய விவாகரத்து உரிமை வேண்டுமென்றால் ஷரியாவில் கை வக்க வேண்டாம். முஸ்லீம் பெண்கள் விவாகரத்து சட்டத்தில் விவாகரத்துக்கான காரணங்களை எளிதாக்கிவிட்டால் ஆணும் பெண்ணும் விவாகரத்து பிரச்னையில் சம உரிமை படைத்தவர்களாகிவிடுவர். சிறிது சிறிதாக இந்து சட்டம் அதைத் தொடர்ந்து கிறிஸ்தவர்களுக்கான சட்டமும் ஷரியா அனுமதிக்கும் அளவிற்கு எளிதான விவாகரத்தினை நோக்கி முன்னேறிக் கொண்டு இருக்கிறது. சொத்துரிமையிலும் ஷரியாவில் பெண்கள் பெரிய அளவில் வஞ்சிக்கப்படவில்லை.

ஆக, ‘ஷரியா நடைமுறைக்கு ஒவ்வாதது’ என்று பத்ரி அவர்கள் கூறுவது ‘தீவிரவாதிகள் என்றாலே இஸ்லாமியர்கள்தான்’ என்ற தவறுதலான பொதுப்படுத்துதலுக்கு இணையான ஒரு கருத்து என்பது எனது எண்ணம்.

மதச் சட்டங்கள் ஒழிக்கப்பட வேண்டியவையா?
ஷரியா நவீன காலத்துக்கு உகந்ததா இல்லையா என்பதல்ல உண்மையில் நான் எழுத விரும்பியது. மாறாக ஒரே நாட்டில் வாழும் மக்களுக்கு வெவ்வேறு சட்டங்கள் ஏன்? என்று எழும் கேள்வியினைப் பற்றியே சில கருத்துகளை கூற முனைகிறேன்.

திருமணம், விவாகரத்து, சொத்துரிமை, ஜீவனாம்சம் மற்றும் தத்தெடுத்தல் பற்றியே தனித்தனி மத சட்டங்கள் (Personal Laws) உள்ளன. பிற அனைத்து சிவில் சட்டங்களும் அனைவருக்கும் பொதுவானவை. உதாரணமாக ஒப்பந்தச் சட்டம் (Contract Act), சொத்துரிமை மாற்றுச் சட்டம் (Transfer of Property Act) என்பவை அனைத்து மதத்தினருக்கும் பொதுவானவை. அவற்றை பொது சிவில் சட்டம் எனலாம். சரி, திருமணத்திற்கு. அதற்கும் ‘சிறப்பு திருமண சட்டம்’ (Special Marriage Act) என்ற பொது சட்டம் உள்ளது. எந்த மதத்தினை சேர்ந்தவரும் இதன்படி எவ்வித சடங்கு சம்பிரதாயங்களுக்கு தங்களை ஆட்படுத்திக் கொள்ளாமல் பதிவாளர் முன்பு திருமணம் செய்து கொள்ளலாம். விவாகரத்திற்கு இந்திய விவாகரத்து சட்டம் (Indian Divorce Act) சொத்துரிமைக்கு? அதற்கும் உள்ளது இந்திய வாரிசுரிமை சட்டம் (Indian Succession Act). நீங்கள் பதிவு திருமணம் செய்து கொண்டவரா? இனி உங்களது சொத்து விபரங்களை தீர்மானிக்கப் போவது இந்திய வாரிசுரிமைச் சட்டமே! விவாகரத்திற்கு அணுக வேண்டிய சட்டம் இந்திய விவாகரத்து சட்டம். மைனர்கள் பாதுகாப்பு மற்றும் தத்து எடுத்தல் சம்பந்தமாக ‘கார்டியன்ஸ் அண்ட் வார்ட்ஸ் க்ட்’ உள்ளது. ஆக இந்தியாவில் தற்பொழுதே பொது சிவில் சட்டம் நடைமுறையில் இருப்பதுதான். மதச் சட்டத்தினை ஒழித்து பொதுவான சட்ட முறைக்குள் வர விரும்புகிறீர்களா? திருமணத்தில் இருந்து ஆரம்பிக்கலாம். எனவே ‘தாங்கள் எந்த மதமுமாக இல்லையென்றாலும் நாடு உங்களை இந்து மதமாக எழுதிக் கொள்கிறது’ என்பது இல்லை. மதமின்றி இருப்பதற்கு யாருக்கும் முழு உரிமை உண்டு!

இந்து மத சட்டம் படி திருமணம் செய்து கொண்டால்...இந்து மத சட்டம்படியே விவாகரத்து, ஜீவனாம்சம், மைனர்கள் பாதுகாப்பு என்பதே முறையானது. ஆனால் உங்கள் சொத்துகள் இந்து மத சட்டப்படி பிரிக்கப்பட வேண்டாம் என்று நினைக்கிறீர்களா...யார் யாருக்கு சொத்து சென்று சேர வேண்டுமென்று உயில் எழுதி வைக்கலாம். உயில்களைப் பற்றிய விதிகளைக் கூறும் இந்திய வாரிசுரிமைச் சட்டத்திற்குள் வந்து விடுவீர்கள். எனவே பொது சிவில் சட்டத்தினை விரும்பினால் யாரும் இங்கு தேர்ந்தெடுக்கலாம்.

பின்னர் மத சட்டங்கள் ஏன்? எனது கேள்வி ஏன் இருக்க கூடாது என்பதுதான். இந்திய அரசியலமைப்பு சட்டம் (Constitution of India), உச்ச நீதிமன்றம், சட்ட அறிஞ்ர்கள் அனைவரும் பொதுவான சிவில் சட்டம் வேண்டும் என்று கோரினாலும், இதுவரை எனக்கு ஏன் என்பது புரியவில்லை. முன்பு இதற்கான விவாதம் தேசிய அளவில் நடந்த பொழுது எழுதப்பட்ட தலையங்களை படித்தால் ‘மதங்களால் பிரிவுபட்டிருக்கும் மக்களை ஒருங்கிணைக்க உதவும்’ என்பதுதான் காரணமாக கூறப்படுகிறது. தனித் தனி சட்டங்கள் இருப்பதுதான் மக்கள் வெவ்வேறு மத எண்ணங்களில் வாழ்கிறார்கள் என்பது என்னைப் பொறுத்தவரை ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. அடுத்து தேசிய ஒருமைப்பாட்டைப் பேண பொதுச் சிவில் சட்டம் உதவும் என்பதும் நகைப்பிற்குறியது. தேசம் ஒன்றுபட்டு இருக்கத் தேவையானவை மக்கள் நலனில் அக்கறை கொண்ட ஆட்சியாளர்களும், சுபிட்சத்தை நோக்கி மக்களை நடத்தும் வண்ணம் அரசு எடுக்கும் முடிவுகளும் செயல்படுத்தும் திட்டங்களே தவிர வெறும் சட்டங்களும் கோஷங்களும் அல்ல.

இந்துத்வா அமைப்புகளாவது தங்களது ‘ஒரே நாடு ஒரே காலாச்சாரம்’ என்ற நோக்கத்தினை அடையும் கருவியாக ஒரே சிவில் சட்டம் என்ற கோரிக்கையினை பார்க்கிறார்கள் என அறிகிறேன். தாராள எண்ணவாதிகளால் இந்துத்வா இயக்கங்களின் ஒரே கலாச்சார நோக்கத்தினை ஏற்றுக் கொள்ள இயலுமா? இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது. இந்து சட்டத்திலேயே அனைத்து இந்துக்களுக்கும் பொருந்தக் கூடிய பொதுவான சட்டம் கிடையாது. உதாரணமாக முற்படுத்தப்பட்ட வகுப்பினரிடையே வழக்கமான சடங்குகல் இல்லாமல் திருமணம் செய்தால் அது செல்லாது. னால், தாழ்த்தப்பட்ட மக்கள் எவ்வித சடங்கும் இன்றி திருமணம் செய்து கொள்கின்றனர். விவாகரத்திலும் முதலாமவர் ஏகத்துக்கும் மெனக்கெட இரண்டாமவர் சுலபமாக ‘அறுத்து கட்டிக்கொள்கிறார்’கள். சொத்துரிமை சட்டத்திலும் இவ்வாறு பிரிவுகள் உள்ளன. பழங்குடி மக்கள் காலங்காலமாக பின்பற்றி வரும் அவர்களுக்கே உரித்தான பழக்க வழக்கத்தினை பொது சிவில் சட்டம் என்ற பெயரில் தூக்கி குப்பையில் போட முனையும் செயலுக்கும், அருவருப்பானவர்கள் என்று ஜிப்ஸிக்களை கொன்று குவித்த ஹிட்லரின் செயலுக்கும் அதிகம் வித்தியாசமில்ல¨.

பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் நிலை என்ன என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அங்குள்ள அரசுகள் திருமணம், சொத்துரிமை போன்றவற்றில் தனிச் சட்டங்களை தனது குடி மக்களுக்கு மறுத்தால், அதனை ஒரு மோசமான மனித உரிமை மீறலாகவே நான் கருதுவேன். பிரிட்டானியர்கள் இங்கு குடியேறிய பொழுது தங்களுக்கென்று தனி திருமண, சொத்துரிமை சட்டங்களை ஏற்படுத்தவில்லையா? இதுவரை அது தவறு என்று யாராவது சுட்டு விரலை நீட்டியிருப்போமா? ஆனால் இஸ்லாமியர்கள் பிரிட்டனில் ஷரியா சட்டத்தினை எதிர்பார்த்தாலே, ‘அதற்காக போராடுவது சரியல்ல’ என்று உடனடியாக நம்மால் கூற முடிகிறது.

இரு தனி நபர்கள் ஒப்பந்தம் செய்து கொள்கையில், ஒப்பந்த விதிகள் பொதுவான நியாயங்களுக்கு (Public Policy) விரோதமாக இல்லையெனில் மற்றவர்களுக்கு அங்கு தலையிட ஏதுமில்லை. அது அவர்களது தனிப்பட்ட பிறச்னை. மற்றவர்களை அது பாதிப்பதில்லை. அது போலவே மத சட்டங்களும், அந்தந்த மத குழுக்கள் தங்களுக்குள் இசைந்து ஏற்றுக் கொள்கையில் மற்றவர்களுக்கு ஏதும் பாதிப்பில்லை. ஒரு இஸ்லாமியர் நான்கு பெண்களை திருமணம் செய்து கொண்டால் பாதிக்கப்படும் நபர் ஒரு இஸ்லாமிய பெண்மணியே தவிர எந்த இந்துவுமல்ல...

மத சட்டங்கள் என்பவை பிற சட்டங்களைப் போன்றதல்ல. இந்துக்கள் கோவிலிலும், இஸ்லாமியர்கள் பள்ளிவாசலில் தொழுவது அவரவர் மத விதிகள் பற்றியது. அவர்களது திருமணம், ஜீவனாம்சம் மற்றும் சொத்துரிமை போன்றவையும் அவரவர் விரும்பி ஏற்றுக் கொள்ளும் வசதிகள். அனைவரும் ஒரே கோவிலில் ஒரே முறையில்தான் தொழ வேண்டும் என்று கூறுவது இயலாதோ...அதே போல அனைவரும் ஒரே முறையில்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் கூற இயலாது.

எந்த நாட்டிலும் இல்லாத வகையில் பல மொழிகள் பேசும் மக்கள் கூட்டம் இங்கிருப்பதாகவும், பல மதங்களை அவர்கள் பின்பற்றுவதாகவும் வேற்றுமையில் ஒற்றுமையை பேணுவதாக நாம் பெருமைப்படவில்லையா? அதே போல அனைவருக்கும் அவரவர் தனிப்பட்ட உரிமையினை பாதுகாக்கும் வண்ணம் பல மத சட்டங்கள் இருப்பதை நாம் பெருமையாக கருதலாகாதா?

தனி மத சட்டங்கள் என்பவை, அவர்களது மத உரிமை, கடமைகளுக்கு அரசு ரீதியில் அளிக்கப்படும் அங்கீகாரம். இத்தகைய மத சட்டங்கள் இன்றி ஒருவர் தனது மதத்தினை பின்பற்றுதல் இயலாது. ஒரு கிறிஸ்தவர் தனது கோவிலில் முறையான பூசையின் நடத்தி பாதிரியார் முன்பாக திருமணம் செய்ய நினைக்கிறார் என்றால் அது அவரது மத கடமை. அதனை கைக்கொள்ள இந்திய அரசியலமைப்புச் சட்டம் அதற்கு தகுந்த உத்தரவாதம் தருகிறது. தனிச் சட்டங்களை ஒழிக்கிறோம் பேர்வழி என்ற பெயரில் அவ்வாறு திருமணம் செய்வது தடுக்கப்பட்டால் அந்தச் செயல் அரசியலமைப்புச் சட்டம் அளித்துள்ள எந்த மதத்தினையும் பின்பற்றும் அடிப்படை உரிமைக்கு எதிரானதாகும். ஒரு பாஸிஸ்ட் அரசே அவ்வாறு நடந்து கொள்ள இயலும்.

தற்பொழுது நிலுவையிலுள்ள சட்ட முறைகளிலேயே அவ்வப்போது தேவையான மாற்றத்தினை ஏற்படுத்திக் கொள்வதே புத்திசாலித்தனமான காரியமாக இருக்கும்.
The beauty of life lies in its inequalities!

மதுரை
200306
இந்தக் கட்டுரைக்கான பதிலை திரு.பத்ரி நாராயணன் அவரது பதிவில் எழுதியிருக்கிறார்.

7.5.06

ஷாபானு?



நான் சிறு பையனாக இருந்தபோது ‘வாட்டர் கேட் ஊழல்’ என்ற வார்த்தைகளை அடிக்கடி மற்றவர்கள் பேசக் கேட்டிருக்கிறேன். இந்த ஊழலில் சிக்குண்ட அமெரிக்க ஜனாதிபதி நிக்சன் ராஜினாமா செய்து, அவருக்குப் பின்னர் பதவியேற்ற ஜெரால்ட் ஃபோர்ட் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி நிக்சனுக்கு மன்னிப்பு அளித்தார். தன் முன் மண்டியிட்ட நிக்சனுக்கு ஃபோர்ட் (பாவ)மன்னிப்பு வழங்குவது போல அப்போது வந்த (தினத்தந்தி?) கருத்துப்படம் எனக்கு நினைவிருக்கிறது. இந்த மன்னிப்பு(அம்னெஸ்டி) சில கண்டனங்களுக்குள்ளானது. ஃபோர்ட் தனது சுய சரிதையில் ‘அமெரிக்க மக்கள் தங்களது முன்னாள் ஜனாதிபதியை சிறைக்கம்பிகளுக்கு பின்னர் பார்க்க சகிக்க மாட்டார்கள்’ என்று தனது செயலுக்கு காரணம் கூறியிருந்தார். பல வருடங்கள் கழித்து ‘அது என்ன வாட்டர் கேட் ஊழல்?’ என்பதை நான் தெரிந்து கொண்ட போது ‘சப்’பென்று கிவிட்டது. ‘இவ்வளவுதானா? நம்ம வீராணம், சுடுகாட்டு ஊழலுக்கு முன்னர் இது எம்மாத்திரம்?’ என்று இருந்தது. ஸ்காண்டல் என்ற ஆங்கில வார்த்தையை ஊழல் என்று மொழிபெயர்த்ததால் வந்த வினை!

இந்த வாட்டர்கேட் தந்த அனுபவம், நமது நாட்டில் ‘ஷாபானு வழக்கு’ என்ற பதமும் மக்களிடையே பல தவறான அபிப்பிராயங்களை ஏற்படுத்தியிருக்குமோ என்ற கவலை எனக்கிருக்கிறது. எனெனில் இந்தியாவில் மதவாதத்தை ஏற்படுத்திய முக்கிய காரணியாக இவ்வழக்கு குற்றஞ்சாட்டப்படுகிறது. அதாவது இந்து மதவாதம் நமது நாட்டில் தழைத்தோங்க, இவ்வழக்குதான் காரணம் என்ற வகையில், ‘சிறுபான்மை இனத்தவர் ஏதோ மிகப்பெரிய சலுகையை அரசை மிரட்டிப் பெற்றுவிட்டதாக’ பலர் கருதும் வகையிலேயே இது இன்றளவும் சுட்டிக்காட்டப்படுகிறது. இந்தியாவின் அரசியல் சரித்திரத்தையே ஒரளவு, உண்மையிலேயே புரட்டிப் போட்ட இவ்வழக்கின் அடிப்படை வெறும் 179 ரூபாய் என்பது வேதனைக்குறிய ஒரு தகவல்.

ஒரு இஸ்லாமிய ஆணுக்கு தனது பிள்ளைகள், அம்மா, தாத்தா பாட்டி ஏன் உறவினர்களைக் கூட காப்பாற்றும் கடமை இருக்கிறது. அதே போல மனைவியையும் காப்பாற்றும் கடமையும் இருக்கிறது. ஆனால், விவாகரத்துக்கு பின்னர் ‘இதத்’ என்னும் காலம் முடியும் மட்டும்தான் காப்பாற்றும் மதரீதியிலான கடமை இருக்கிறது. இதத் என்பது விவாகரத்து முடிந்து மூன்று மாத காலங்கள். அதாவது, விவாகரத்துக்கு முன்னர் அப்பெண் கருத்தரித்து...பின்னர் தகப்பன் யார் என்ற கேள்வி எழுந்து விடக்கூடாது என்ற காரணத்திற்காக இந்த ‘இதத்’ காலம். இக்காலத்துக்குள் அப்பெண் மறுவிவாகம் செய்ய இயலாது.

இஸ்லாமிய மதக் கோட்பாடுகள்படி திருமணம் என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான ஒப்பந்தமே தவிர என்றும் அறுத்துப் போடவியலாத ஒரு ‘புனிதமான சடங்கு’ இல்லை. எனவே, விவாகரத்துக்குப் பின்னரும் ‘ஒரு ஆணிடமிருந்து ஒரு பெண் பணம் பெறுவது நற்செயலல்ல’ என்ற என்ற கோட்பாட்டில் விளைந்ததுதான் இந்த ஜீவனாம்ச பிரச்னை.

இவ்வாறாக இந்துக்கள், கிறிஸ்தவர்கள் என அனைவரும் தத்தம் மதச்சட்டங்களில் மனைவி கணவனிடம் இருந்து ஜீவனாம்சம் பெற வழி இருக்கிறது. இத்தகைய ஜீவனாம்சத்தில் அதிகபட்ச தொகை என்பது எதுவும் இல்லை. திருமணக்காலத்தில் மனைவி வாழ்ந்த வசதியைப் பொருத்தும், கணவனின் வருமானத்தைப் பொருத்தும் அது மாறுபடும்.

இந்த மதச்சட்டங்களோடு சம்பந்தப்படாத வேறொரு சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம். 1898ம் ண்டு முதலே நடைமுறையிலிருக்கும் இந்தச் சட்டம் குற்றவியல் வழக்குகள் எவ்விதம் நடத்தப்படவேண்டும் என வரையறுக்கும் ஒரு சட்டம். விநோதமாக இந்தச் சட்டத்தில், ஒரு பிரிவு ஒரு ஆணின் மனைவி, மைனர் பிள்ளைகள், பெற்றோர் அந்த ஆணால் காப்பாற்றப்பட வேண்டுமெனவும், இல்லை அவர்கள் அந்த ஆண் மீது வழக்கு தொடர்ந்து ஜீவனாம்சம் கேட்க முடியும் என்கிறது. ஒருவரை காப்பாற்றமால் நடுத்தெருவில் விடுவது ‘அடிப்பது, உதைப்பது’ போன்ற உடல்ரீதியிலான வன்முறை என்ற வகையிலேயே இப்படி ஒரு பிரிவு இங்கு சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். இங்கு மனைவி என்பது விவாகரத்து அடைந்த மனைவியையும் உள்ளடக்கும். எனவே ஒரு பெண் தனது கணவன் மீது மதச்சட்டத்தின் படி சிவில் வழக்கும், இச்சட்டத்தின்படி கிரிமினல் வழக்கும் ஜீவனாம்சத்திற்காக தொடரலாம். ஆனால், சிவில் வழக்கில் ஜீவனாம்சம் வழங்கப்பட்ட பின்னர், கிரிமினல் வழக்கில் தரப்பட்ட ஆணை செல்லாது. சிவில் வழக்கில் ஆணைக்கு கீழ்ப்படியாவிட்டால் கணவனது சொத்துக்கள் ஏலத்துக்கு வரும்...எனவே அது குரைக்கும் நாய். கிரிமினல் வழக்கிலோ சிறைத்தண்டனை. மேலும் வழக்கு எடுத்துக் கொள்ளப்படும் நாள் முழுவதும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். எனவே அதிக பட்சம் ஐநூறு ரூபாய் என்றாலும் அது கடிக்கும் நாய் (தற்பொழுது ஏதும் அதிக பட்ச தொகை இல்லை).

எனினும் கிரிமினல் வழக்கு சமூகத்தில் மிகவும் ஏழைகளாக, வசதி வாய்ப்புகள் உள்ளவர்களே பயன்படுத்துவர். நடுத்தர வர்க்கத்தினர் கூட அந்தப்பக்கம் தலை வைத்துப் படுப்பதில்லை. அப்படி ஒரு ஏழைதான் இந்திய சரித்திரத்தில் இடம் பெற்றுவிட்ட ஷாபானு. திருமணம் முடிந்து 43 ண்டுகள் வாழ்க்கைக்கு பின்னர் அவரது கணவர் வேறு திருமணம் செய்து கொண்டார். முதலில் மாதாமாதம் கணவர் ஷாபானுவுக்கு ரூ.200 கொடுத்து வந்தார். ஆனால் மாதம் ரூ.500 கேட்டு ஷாபானு கிரிமினல் நீதிமன்றத்தில் கணவர் மீது வழக்கு தொடர்ந்தார். வழக்கிலிருந்து தப்பிக்க வழி என்ன என்று யோசித்த கணவர், ஷாபானுவை விவாகரத்து செய்துவிட்டு (இஸ்லாமிய மதத்தவர்கள் நீதிமன்றத்தை நாடாமலேயே ‘தலாக்’ என்ற முறைப்படி விவாகரத்து செய்ய இயலும்) ‘மெகர்’ என்று அழைக்கப்படும் தொகையினை நீதிமன்றத்தில் செலுத்திவிட்டு, ‘ஷாபானு தன்னுடைய மனைவி இல்லையென்பதால் ஜீவனாம்சம் தனது மதச்சட்டத்தின்படி வழங்க வேண்டியதில்லை’ என்று வாதிட்டார். ஆனால் நீதிமன்றம் அவரது வாதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனெனில் அது ஒன்றும் புதிய வழக்கல்ல. ஏற்கனவே பல இஸ்லாமிய பெண்கள் இப்படி கிரிமினல் வழக்கு தாக்கல் செய்து ஜீவனாம்சம் பெற்றுள்ளனர். ஷாபானுவுக்கு கிடைத்த ஜீவனாம்சம் மாதம் ரூ.25!!!

ஷாபானு இந்த ஜீவனாம்ச தொகையை எதிர்த்து மேல் முறையீடு செய்தார். தொகை ரூ.179க உயர்த்தப்பட்டது. கணவர், இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திற்குப் போக விதி விளையாடியது. ‘கிரிமினல் ஷரத்துப் படி மனைவியென்பவள் எப்போதும் மனைவிதான். மதச்சட்டம் இதில் தலையிட முடியாது’ என்று கூறி கணவரின் அப்பீலை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் வழக்கம் போலவே சில அறிவுரைகளை வழங்கி, செய்தித்தாள்களில் இவ்வுத்தரவு செய்தியானது. இந்தியா பற்றிக் கொண்டது!!

பல வழக்குகளில் இஸ்லாமியப் பெண்கள் ஜீவனாம்சம் பெற்றதெல்லாம் மறந்து போய், அனைவருமே மத வல்லுஞர்களாகவும், சட்ட வல்லுஞர்களாகவும் மாறி தீயை வளர்த்தனர். போராட்டம். சில நகரங்களில் கலவரம் வெடித்தது. விஷயம் பாராளுமன்றத்தையே உலுக்கி, இறுதியில் அன்றைய பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி பணிந்து பாராளுமன்றம், ‘இஸ்லாமியப் பெண்கள் (விவாகரத்தின் போது பாதுகாப்பு) சட்டம்’1986 என்ற சட்டம் நிறைவேற்றியது. காங்கிரஸின் அசுரத்தனமான மெஜாரிட்டி இதற்கு பயன்பட்டது. யாருக்கும் எவ்வித பலனும், முக்கியாக இஸ்லாமியர்களுக்கு இல்லாத இந்த சட்டம் இந்துத்வா சக்திகளை உசுப்பிவிட்டது. சிறுபான்மையினர் தாங்கள் விரும்பியதை கேட்டுப் பெற்றுக் கொள்கிறார்கள் என்ற அபிப்பிராயம் பரப்பப்பட்டு இந்தியாவின் அரசியல் சதுரங்கம் வேகமான பல திருப்பங்களை பின்னர் சந்தித்தது. வேடிக்கை என்னவென்றால் இந்துத்வா சக்திகளை உசுப்பி விட்ட இந்தச் சட்டம் இஸ்லாமிய பெண்களின் உரிமையைப் பறிப்பதாக இன்றளவும் பேசப்படுகிறது. இந்த சட்டத்தை எதிர்த்து ராஜீவ் அமைச்சரவையில் இருந்த ஒரு இஸ்லாமிய அமைச்சர் பதவி விலகினார். ஆக, இஸ்லாமியர்களின் உரிமையை பறித்ததாக கருதப்படும் ஒரு சட்டம்...இந்துத்வா சக்திகளை வீறு கொண்டு எழ வைத்தது நமது இந்திய அரசியலில் மட்டுமே நிகழ்ந்த ஒரு ஆச்சர்யம்!

அரசு என்பவர் ஒரு பெரிய சவுக்கை வைத்திருக்கிறார். சிறுபான்மை அதனிடம் சென்று, ‘என்னை அடி. வலிதான் எனக்கு சுகம்’ என்கிறது. பொறுக்க முடியாத அரசு சவுக்கை சொடுக்குகிறது. பெரும்பான்மை, ‘இது என்ன அவன் கேட்டதையெல்லாம் செய்கிறாய். நான் என்ன மாற்றாந்தாய் பிள்ளையா?’ என்கிறது. அரசு உடனே, ‘அப்படியா, நீ எங்கோ பூசை செய்ய வேண்டுமென்று ரொம்ப நாளாக கேட்டுக் கொண்டிருந்தாயே. போ! போய் செய்து கொள்’ என்றது. நாடு ரத்தக் களறியானது.

ஆனாலும் அரசின் சவுக்கின் ‘சுளீர்’ சிறுபான்மைக்கு தற்போது உறைக்காமல், உறை போட்டு தடுத்தது சில புத்திசாலி நீதிபதிகள். அதைப் பார்ப்போம். இந்த புதிய சட்டத்தின் படி இஸ்லாமியப் பெண்கள் விவாகரத்துக்குப் பின்னர், கணவரும் சம்மதித்தாலே கிரிமினல் வழக்கு தொடர முடியும். இல்லை அவர்கள் தங்களது பெற்றோர்களை அணுக வேண்டும். அடுத்து உறவினர்களை அணுகலாம். கடைசியில் வக்ஃப் வாரியத்தை அணுகலாம்.

தற்போது கணவனால் கைவிடப்படும் இஸ்லாமிய பெண்கள் கிரிமினல் நீதிமன்றத்தை அணுகினாலே, கணவன்மார்கள் செய்யும் காரியம் ‘அவர்களை தலாக் செய்து விடுவது. ஏனெனில் விவாகரத்துக்குப் பிறகு அவர்கள் ஜீவனாம்சம் கேட்க முடியாது. ஆனாலும் இதற்கு வைத்தது பெரிய ஆப்பு, மும்பை உயர்நீதிமன்றம். முதலில் வந்த தீர்ப்பு தலாக் பற்றியது. அதாவது காரணமின்றி தலாக் செய்ய முடியாது என்பது. பின்னர் இதைப் பார்ப்போம். முக்கியமான தீர்ப்பு ‘இதத்’ காலத்தில் கொடுக்க வேண்டிய ஜீவனாம்சம்.

இரு வருடங்களுக்கு முன்னர் மூன்று நீதிபதிகள் அடங்கிய மும்பை உயர் நீதிமன்ற புல் பெஞ்சு, இஸ்லாமிய பெண் பாதுகாப்பு சட்டம்’1986ன் கீழ் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. புத்திசாலி நீதிபதிகள் கூறியதாவது, ‘சரிதான். இதத் காலம் முடியும் வரைதான் கணவன் மனைவிக்கு பணம் கொடுக்க முடியும். ஆனால் அப்படி கொடுக்கப்பட வேண்டிய அந்தப் பணம் அவளது வாழ்நாள் முழுவதும் அவளை போஷிக்கும் வண்ணம் போதிய அளவாக இருக்க வேண்டும். மேலும் இந்தப் பணம் அந்தப் பெண் திருமண காலத்தில் எவ்வித வசதிமுறைகளுக்கு உட்பட்டிருந்தாளோ அதனைப் பேணும் வண்ணம் இருக்க வேண்டும்’. இந்தத் தீர்ப்பின் படி ஒரு பெண்ணை விவாகரத்து செய்ய வேண்டுமெனில் கணவனுக்கு இதத் கால ஜீவனாம்சம் வழங்குவதற்கு முன்னர் விழி பிதுங்கி விடும். எனவே கருணை கொண்டு நீதிபதிகள் மேலும் கூறுகின்றனர், ‘சரி, மொத்தமாக கொடுக்க கஷ்டமாக இருக்கிறதா? இன்ஸ்டால்மெண்டில் கொடு’. இந்த வழக்கத்தை எங்கோ கேள்விப்பட்டது போல இருக்கிறதா? ஆமாம், பழைய மாதா மாதம் ஜீவனாம்சம்தான். ஒரு வழியாக முகத்தைச் சுற்றி மூக்கை தொட்டுவிட்டனர் மும்பை நீதிபதிகள். அதுவும் எப்படி? முன்பாவது அதிகம் ரூ.500/- தற்போது அப்பெண் திருமண வாழ்க்கையில் அனுபவித்த வசதிக்கு ஏற்ப...(Karim Abdul Rehman Shaikh v. Shehnaz Karim Shaikh and others (2000 (3) Mh.L.J. 555)

எனவே இஸ்லாமியப் பெண்களின் ஜீவனாம்ச உரிமை பாதுகாக்கப்பட்டு உள்ளது. தற்போது மற்ற மதத்தினருக்கும் அவர்களுக்கும் ஜீவனாம்ச உரிமையில் வேறுபாடு இல்லை. பெரிதாக ஏதும் மாற்றத்தை ஏற்படுத்தாத ஒன்றுக்கும் உதவாத ஒரு சட்டத்தால், நாடு கடந்த பத்து வருடங்களில் சந்தித்த பிரச்னைகள் எத்தனை, எத்தனை?

மும்பை
11.08.2003

6.5.06

மணமுறிவு...

‘எண்ணங்கள்’ பத்ரி நாராயணன் தனது சமீபத்திய பதிவில், ‘உச்ச நீதிமன்றம் ஹிந்து திருமணச் சட்டத்தில் ஏற்படுத்த வேண்டிய ஒரு சட்ட திருத்தத்தினைப் பற்றிக் கூறியது’ குறித்து எழுதியவை படிப்பவர்களுக்கு ஒரு தவறான புரிதலை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளது.

ஒரு ஹிந்து எந்த காரணங்களுக்காக மணமுறிவு கோரலாம் என்று காரணங்களை அடுக்கிய பத்ரி இறுதியில் இவ்வாறு கூறுகிறார்:

இந்தக் காரணங்களுக்கு மேலாக, இப்பொழுது உச்சநீதிமன்றம் இன்னொரு புதிய காரணத்தையும் சேர்க்கலாம் என்று அரசைக் கேட்டுக்கொண்டுள்ளது. அதாவது கணவன், மனைவி இருவரும் சேர்ந்து வாழ விரும்பவில்லை என்றால் - இருவரும் ஒருமனதாக அதை ஒப்புக்கொண்டால் - அதாவது திருமணத்தை இனியும் ஒட்டவைக்கமுடியாது என்ற நிலை ஏற்பட்டால் அந்த விவாகத்தை ரத்து செய்யலாம் என்பதே அது. உண்மை என்னவென்றால் மேலை நாடுகள் பலவற்றிலும் இந்த வகை விவாகரத்துதான் அதிகம். இருவரும் சேர்ந்து வாழ விரும்பவில்லை என்றால் அமெரிக்காவில் பல மாநிலங்களில் ஒரு வாரத்துக்குள்ளாகப் பிரிய முடியும்.ஆனால் இதுநாள்வரையில் இந்த வசதி இந்தியாவில் இல்லை. இனிச் சட்டம் இயற்றினால்தான் இந்த வசதி ஹிந்துக்களுக்குக் கிடைக்கும். முஸ்லிம் திருமணங்களில் இதை எளிதாகச் செய்யமுடியும். (அதாவது திருமணம் நீடிக்கவேண்டாம் என்று இரு தரப்பினரும் முடிவுசெய்துவிட்டால்...)

இதை எவ்வாறு நீங்கள் புரிந்து கொண்டீர்கள்? கணவன் மனைவி இருவரும் ஒரு மனதாக திருமண உறவு வேண்டாம் என்று நினைத்தாலும் மணமுறிவு பெற தற்பொழுது வழியில்லை என்பதுதானே? எனது அனுமானம் சரியென்று கில்லியில் ‘அப்படியென்றால் மொளனராகம் என்ற படம் நமக்கு கிடைத்திருக்காது’ என்று ஐகாரஸ் பிரகாஷ் எழுதியதில் இருந்து தீர்மானிக்கிறேன்.

ஹிந்து மணமுறிவுக்கான காரணங்கள் அனைத்தையும் கூறிய பத்ரி, ஹிந்து திருமண சட்டம் பிரிவு 13B ஐ எழுத தவறி விட்டார். 1976ம் ஆண்டு இந்த சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதன்படி கணவன் மனைவி இருவருமே திருமண முறிவுக்கு சம்மதித்தால் (divorce by mutual consent) மணமுறிவு பெறலாம். சமீப காலங்களில் அநேக மணமுறிவு இந்தப் பிரிவின் கீழ் வழங்கப்படுகிறது என நினைக்கிறேன். இப்பிரிவின் கீழ் வழக்கு தாக்கல் செய்வதற்கு இருவரும் ஒரு வருடம் பிரிந்து வாழ்ந்திருக்க வேண்டும். ‘தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கக்கடவன்’ என்று கூறி இந்திய விவாகரத்து சட்டத்தில் இலகுவான விவாகரத்திற்கான சட்ட திருத்தங்களை கடுமையாக எதிர்த்து வந்த கிறிஸ்தவ அமைப்புகளின் எதிர்ப்பும் வலுவிழந்த நிலையில் சமீபத்தில் சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டு, தற்பொழுது கிறிஸ்தவ தம்பதிகளும் தாங்கள் இருவரும் விரும்பினால் விவாகரத்து பெறலாம்.

அவ்வாறேனில், பத்ரி குறிப்பிடும் ஹிந்து நாளேட்டின் செய்தி குறிப்பிடுவது என்ன? ‘திருமணம் ஒட்டவே வைக்க முடியாத அளவுக்கு உடைந்து போயிற்று’ என்பதையும் ஹிந்து மணமுறிவுக்கு ஒரு காரணமாக சேர்க்க வேண்டுமென்பதுதான் உச்ச நீதிமன்றம் கோரியது (irretrievably broken down marriage). மேலும், உச்ச நீதிமன்றத்தின் இந்த கோரிக்கை முதல் முறையல்ல. 2002ம் வருடத்திய ஒரு வழக்கிலேயே இந்த கோரிக்கை உச்ச நீதிமன்றத்தால் வைக்கப்பட்டது ((2002) 2 SCC 73). மேலும் இந்த காரணத்தினை வைத்து பல வழக்குகளில், 1995 முதலே உச்ச நீதிமன்றம் விவாகரத்து வழங்கியிருக்கிறது. ஆனாலும் தனிப்பட்டு இந்த காரணம் வைத்து மட்டுமே வழங்க முடியாது. ‘துன்புறுத்துதல்’ என்ற காரணம் இருக்கையில் இந்த காரணத்தையும் அதனோடு சேர்த்துக் கொள்ளலாம். மேலும் அவ்வித வழக்குகளில் எல்லாம், ஏறக்குறைய 15 ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்த சூழ்நிலை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இவ்வாறான காரணத்திற்காக விவாகரத்து வழங்கப்படுகையில் கணவன் மனைவி இருவரும் சம்மதிக்க வேண்டும் என்பது தேவையில்லை. ஏனெனில் கணவன் மனைவி இருவரும் சம்மதிக்கையில் வேறு எவ்வித காரணமும் தேவையில்லை.

ஆனால், பத்ரி கூறுவது போல விவாகரத்து பெறும் காரணங்கள் சுலபமாக்கப்பட வேண்டும் என்பதுதான் எனது கருத்தும். ஆனால் இதனை உரக்க நான் நீதிமன்றத்தில் கூற முடியாது...இந்திய பண்பாட்டின் விரோதி போல நீதிபதிகளால் பார்க்கப்படுவேன்! செய்யக்கூடியது, பத்ரி கூறுவது போல பாதிக்கப்படுபவருக்கு, பொதுவாக பெண்கள் பொருளாதார பாதுகாப்பு. அது கணிசமான அளவில் செய்யப்பட வேண்டும். ஜீவனாம்சம் போன்றவை விவாகரத்தின் பொழுதே தீர்மானிக்கப்படும். மேற்கூறியது போன்ற வழக்குகளில் உச்ச, உயர் நீதிமன்றங்கள் மாதா மாதம் ஜீவனாம்சத்தைக் கைவிட்டு மொத்தமாக பணம் அல்லது சொத்தினை கொடுக்கும்படி வலியுறுத்தி பிரச்னைகளை ஒரேடியாக முடிவுக்கு கொண்டு வருகின்றன...

5.5.06

காதல் போயின்...



‘நத்திங் பட் பிளாக்ஸ்’ என்ற தனது வலைப்பதிவில், நண்பர் கார்த்திக்ராம்ஸ் ‘தேவதையை கண்டேன்’ என்ற தமிழ் திரைப்படத்தினைப் பற்றிய தனது கருத்தினைப் பதிகையில் கேள்வி ஒன்றினை நம் முன் வைக்கிறார்.

“படம் எழுப்பும் கேள்வி இதுதான், காதலித்து ஏமாற்றுவதை குறித்து ஏன் சட்டம் எதுவும் இல்லை, காதலை சட்டம் கட்டுபடுத்த முடியுமா? காதலித்து ஏமாற்றப்படுபவனுக்கு/ளுக்கு சட்டம் உதவ முடியுமா?”

வலைப்பதிவில் தங்களது எதிர்வினையை தெரிவித்தவர்கள், இதற்கெல்லாம் சட்டம் இயற்றப்பட வேண்டுமென்று கூறுவது அபத்தம் என்ற வகையில் விவாதத்தினை முடிவுக்கு கொண்டு வந்து விட்டாலும், பலருக்கு இவ்வித சந்தேகங்கள் சில சந்தர்ப்பங்களில் ஏற்பட நேரிடலாம் என்பது என் கணிப்பு. ஒரு பிரச்னைக்கான சட்ட ரீதியான தீர்வு இப்படித்தான் என்று எளிதில் தீர்மானித்து விட முடியாது. பிற்காலத்தில் நிகழக்கூடிய எல்லாவித சந்தர்ப்பங்களையும் அனுமானித்து இது இதற்கு இப்படித்தான் என்று சட்டம் வரைவது சாத்தியமல்லாத ஒன்று. எனவே ஒரு செயலினை, சட்டம் அளிக்கும் பரிகாரத்திற்குள் எவ்வாறு கொண்டு வருவது என்பதில்தான் ஒரு வழக்குஞரின் பணி ஆரம்பிக்கிறது.

சட்டத்தில், குற்றவியல் (criminal), உரிமையியல் (civil) என்று இரு பெரும் பிரிவுகள் இருப்பது அனைவரும் அறிந்ததே! குற்ற்வியல் நடவடிக்கைகள் அரசால் தொடரப்படுவது. இதன் முடிவில் குற்றவாளிக்கு தண்டனையே தவிர பாதிக்கப்பட்டவருக்கு பொதுவாக ஏதும் பலனில்லை. ஆனால் அனைவரும் அஞ்சுவது குற்றவியல் நடவடிக்கைகள் குறித்தே! ஏனெனில் வழக்கு எப்படியோ, புகார் பதியப்பட்டதும், குற்றம் சாட்டப்படுபவர் கைது செய்யப்படலாம்...அதன் பலனாக சமூக ரீதியிலான அவமானம்.

காதலில் ஏமாற்றுதல் எவ்வித சந்தர்ப்பங்களில் ஒரு குற்றமாக உருமாறக்கூடும்? பாலியல் பலாத்காரம் (rape) என்ற குற்றம் நாம் அறிந்தது. பொதுவாக ஒரு பெண்ணின் சம்மதமின்றி உடலுறவு கொள்ளும் ஆண் இந்த குற்றம் புரிந்தவராகிறார். ஆனால், பெண்ணின் சம்மதம் இருந்தாலும் சில செயல்கள் குற்றமாகும். உதாரணமாக, உடலுறுவில் ஈடுபடும் ஆணுக்கு தான் அந்த பெண்ணின் கணவனல்ல என்பது தெரிந்திருந்து ஆனால் அந்த பெண் தான் அந்த ஆணை சட்டபூர்வமாக மணம்புரிந்திருக்கிறேன் என்ற நம்பிக்கையில் சம்மதம் தெரிவித்திருந்தால் அது பாலியல் பலாத்காரமே! (Fourth description to Section 375 IPC)

இதே போல ஒரு ஆண் ஒரு பெண்ணை சட்டபூர்வமாக திருமணம் புரியமலேயே அவர்களுக்குள் சட்டபூர்வமான திருமணம் நடைபெற்றதாக நயவஞ்சகமாக (deceit) அப்பெண்ணை எண்ண வைத்து அவளுடன் சேர்ந்து வாழ்ந்தாலே அதுவும் பத்து ஆண்டுகள் தண்டனைக்கு ஏதுவான குற்றம் (Section 493 IPC). கவனிக்கவும், இந்தப்பிரிவில் சேர்ந்து வாழுதல் அல்லது உடலுறவு (to cohabit or have sexual intercourse) என்று இருப்பதால் உடலுறவு கட்டாயமல்ல.

ஆக, குற்றவியல் சட்டப்படி இந்த இரு வகையான செயல்களே தண்டிக்கத்தகுந்த குற்றங்கள். உரிமையில் சட்டம் தனிப்பட்ட நபரின் உரிமை மீறப்படுகையில், அதற்கான பாதுகாப்பு அல்லது பரிகாரம் பற்றியது. காதலுற்ற இருவருக்குள் திருமணம் செய்து கொள்வதாக ஒரு ஒப்பந்தம் இருப்பினும், அனைத்து ஒப்பந்தகளும் சட்டப்படி வலியுறுத்தத் தகுந்தவையல்ல. ஒப்பந்தங்களைப் பற்றி ஒப்பந்தச் சட்டமும் (Contract Act) எவ்வாறு ஒப்பந்தங்களை சட்டபூர்வமாக வலியுறுத்துவது என்பது பற்றி ஏற்றதை ஆற்றுதல் சட்டமும் (Specific Relief Act) உள்ளன. இவற்றின்படி ஒரு ஒப்பந்தந்தினை ஒருவர் மீறுகையில், மற்றவர் அதனை மீறும் நபர் கண்டிப்பாக ஒப்பந்தக் கடமையை புரியும்படி நீதிமன்ற தீர்ப்பு மூலம் வலியுறுத்தலாம். அது இயலாத பட்சத்தில் தகுந்த நஷ்ட ஈடு பணமாக பெறலாம். ஆனால், ஒர் ஒப்பந்தம் சட்டப்படி செல்லக்கூடியதென்றால் அதன் மூலம் பெறப்படும் பலனுக்கு விலை கொடுக்கப்படவேண்டும். உதாரணமாக வீட்டினை உங்களுக்கு விற்பதாக ஒருவர் உறுதி கூறுகையில், நீங்கள் அதற்கான விலையை நிர்ணயித்து அவருக்கு கொடுக்க வேண்டும். விலை என்பது சட்டபூர்வமான விலையாக (lawful consideration) இருத்தல் வேண்டும். இங்கு, தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதி கூறுபவருக்கு மற்றவர் கொடுக்கும் விலை என்ன? அன்பு என்று கூறலாம். அன்பும் சில சமயங்களில் சட்டபூர்வமான விலையாகும். ஒரு கணவன் தனது மனைவிக்கு ஒரு சொத்தினை தானமாக (gift) அளிக்கையில் அங்கு அன்பே விலையாக கூறப்படும். ஆனால் அவ்விதமான ஒப்பந்தங்கள் எழுத்தால் எழுதப்பட்டு பதியப்பட்டு (register) இருக்க வேண்டும். இல்லை செல்லாது. மேலும் சம்பந்தப்பட்ட நபர்கள் நெருங்கிய உறவினர்களாக இருத்தல் வேண்டும் (Section 25 Contract Act). எனவே, ஒப்பந்தச் சட்டத்தால் பலன் இல்லை.

ஆனால், சட்டபூர்வமான உரிமை இருந்தாலே பரிகாரம் கோர இயலும் என்பது பழைய சட்டக் கருத்து (ubi jus ibi remedium என்று லத்தீனிலும் where there is a right there is a remedy என்று ஆங்கிலத்திலும் கூறுவார்கள்). ஆனால், உரிமைகள் வரையறுக்கப்பட்டிருந்தாலே, பரிகாரமென்பதால்... சட்டம் எதிர்பார்த்திராத நிகழ்வுகளை பின்னாட்களில் சந்திக்க நேருகையில் பாதிக்கப்படுபவருக்கு நீதி கிடைக்காமல் போனதன் விளைவு, தீங்கியல் சட்டம் (law of torts) என்ற சட்டம் யாராலும் எழுதப்படாமலேயே எந்த சட்ட மன்றத்தாலும் இயற்றப்படாமலேயே முகிழ்த்து இன்று பெரும் சட்டப்பிரிவாக வளர்ந்து நிற்கிறது. இதன் சிறப்பே மாறி வரும் சூழலுக்கு ஏற்ப மேலும் மேலும் வளர்வதுதான். உதாரணமாக, அமைச்சர் தயாநிதி மாறன் ம.தி.மு.க. தலைவர் வைகோ தன்னைப் பற்றி அவதூறாக பேசி மான நஷ்டம் விளைவித்ததாக நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளது நாம் அறிந்தது. அவமரியாதையாக பேசினால் நஷ்ட ஈடு தர வேண்டும் என்று நமது எந்த சட்டத்திலும் கூறப்படவில்லை. ஆனாலும் தீங்கியல் சட்டப்படி அவதூறாக பேசியவரின் செயலால் மற்றவருக்கு இழப்பு ஏற்ப்பட்டுள்ளது என்றும் அந்த இழப்பிற்கு ஈடாக பணம் தரலாம் என்றும் நீதிமன்றங்கள் பல்வேறு வழக்குகளில் ஏற்கனவே அளித்துள்ள தீர்ப்புகளே இங்கு சட்டம். போபாலில் விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர்கள் யூனியன் கார்பைடு மீது தாக்கல் செய்த வழக்கும் தீங்கியல் சட்ட அடிப்படையில்தான்.

எனவே காதலில் ஏமாற்றினால் நஷ்ட ஈடு தர வேண்டுமென்று சட்டம் ஏதும் இயற்றவில்லையெனினும், சட்ட ரீதியில் நஷ்ட ஈடு பெற பாதிக்கப்பட்டவருக்கு வழியில்லாமலில்லை. இது வரை இத்தகைய வழக்கினை நான் கேள்விப்பட்டதில்லை. ஆனாலும் ஏற்கனவே கூறியபடி தீங்கியல் சட்டம் நித்தம் வளரும் ஒரு கற்பக தரு (expanding branch of jurisprudence). எனவே, இப்படி ஒரு வழக்கு தொடுக்கப்படுகையில், வழி காட்டும் முன் தீர்ப்புகள் இல்லை எனினும் அடிப்படை கூறுகள் மற்ற தீங்கியல் வழக்குகளோடு ஒத்துப் போகின்றன. உதாரணத்திற்கு ஒரு ஆண் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதியளித்து காதலித்து பின்னர் ஏமாற்றினால், அப்பெண்ணுக்கு ஏற்படும் மன உழைச்சல், அவமானம், பிற திருமண வாய்ப்புகளில் பாதிப்பு மற்றும் காதலுக்காக செய்த செலவு ஆகியவை நஷ்டங்கள். இதனை தகுந்த முறையில் நீதிமன்றத்தில் நிரூபிக்கையில், நஷ்ட ஈடு பெறும் வாய்ப்பு அதிகம் உண்டு என்றே எண்ணுகிறேன். ஆனால், இவ்வாறு வழக்கு தொடுக்கும் வரை செல்லக்கூடிய பெண் யாரேனும் இருக்கிறார்களா என்ன?

Advocacy is also an art of impossibility’

3.5.06

வேட்பாளர் தகுதி?

கடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிகமாக பேசப்பட்ட ஒரு விஷயம், வேட்பாளர் தனது சொத்து விபரங்களை அளித்தல் பற்றியது. அப்போது எழுதியது...இன்று அதன் தாக்கம் அதிமாக இல்லாது இருப்பது, எனது கருத்தினை வலுப்படுத்துகிறது,,,




முன்னுரை

பத்திரிக்கையாளர் மாலன் தேர்தல் விவாதங்களுக்காகவே வலைப்பதிவு ஒன்றினைத் தொடங்கி மாநிலவாரியாக தேர்தல் நிலவரங்களை அலசி வருகிறார். மாலனின் வாசகர்கள் அவரது கணிப்புகளை நினைவில் வைத்திருப்பார்களோ இல்லையோ, மைசூர் மகாராஜா உரிமை கொண்டாடும் மாளிகைகளையும், சோனியாவுக்கு இந்தியாவில் இல்லாமல் இத்தாலியில் இருக்கும் வீட்டினையும் மறக்க மாட்டார்கள். பொதுவாகவே இந்திய நடுத்தர வர்க்கத்தினருக்கு தேர்தல் காலத்தில் மெல்லுவதற்கு அவலுக்கு பஞ்சமிருக்காதெனினும், இந்தத் தேர்தலில் இன்னும் பல கைப்பிடிகளாக வேட்பாளர்களின் சொத்து மற்றும் வங்கிக் கணக்கு விபரங்கள் கிடைத்திருக்கிறது. தெருவோரத்தில் இஸ்திரி போடுபவரின் தினப்படி வருமானத்திலிருந்து, பக்கத்து வீட்டுக்கு புதிதாக குடி வந்திருப்பவரின் மாதச் சம்பளம் வரை கூச்சமில்லாமல் விசாரிப்பவர்களுக்கே இப்படி வெட்ட வெளிச்சமாக வேட்பாளர்களின் சொத்து மற்றும் பண விபரத்தினை திறந்து வைத்திருப்பது உதவும் என நான் எண்ணினேன். ஆனால், 'எண்ணங்கள்' பத்ரி பங்குச் சந்தைக்கு விற்பனைக்கு வரும் நிறுவனங்களின் நிர்வாகிகள் தங்களது சொத்து விபரங்களை வெளியிடுவதில்லையா? அது போலவே இது மிகவும் தேவையானது' என்கிறார். என்றாலும் எனக்கென்னவோ தினந்தோறும் பத்திரிக்கைகளில் இவற்றை தொடர்ந்து படிக்கையில், ஒரு தனிமனிதனின் வங்கிக் கணக்கை இப்படி வலியத் திறந்து பார்ப்பதில், பார்ப்பவருக்கு ஒரு குரூர சந்தோஷமும், பார்க்கப்படுபவருக்கு பல தர்மசங்கடங்களும் இருப்பதாக தோன்றியது. என் எண்ணம் நியாயமானதா? அதற்கு இந்தச் சடங்கின் பின்புலத்தையும் சற்று ஆராய்தல் நலம்.


ஒரு கொலை
'வேட்பாளர், தனது சொத்துக் கணக்கினை வெளியிட வேண்டும்' என்று வலியுறுத்தும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவிற்க்கான விதை, 1995ம் ஆண்டு நிகழ்ந்த ஒரு கொலை என்றால் ஆச்சரியமாக இருக்கலாம். தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட கணவன் அவளைக் கொல்வதும் அசாதாரமாணதல்ல. ஆனால் கொலையாளி சுஷில் சர்மா காங்கிரஸில் பெரும் புள்ளி. சர்மாவும் அவரது மனைவியான நைனா சாஹ்னியும் தில்லி அரசியல் வட்டாரத்தில் பிரபலமானவர்கள். நைனாவின் உடலை உணவு விடுதி தந்தூரில் வைத்து எரிக்க முயன்றதால் 'தந்தூர் வழக்கு' என்று பிரபலமடைந்த இவ்வழக்கில் சமீபத்தில்தான் தண்டனை வழங்கப்பட்டது.

நைனா கொலை, அரசியல் குற்றவாளிகளுக்கான புகலிடமாக மாறிவிட்டதாக பெரிய அளவில் விவாதத்தினை எழுப்பியது. இதனை தொடர்ந்து வலியுறுத்திய ஊடகங்கள், இரண்டு ஆண்டுகளாக அரசு கிடப்பில் போட்டு வைத்திருந்த வோரா குழும அறிக்கையை (Vohra Committee Report) மக்களுக்கு நினைவுபடுத்தின.

மும்பை தொடர் குண்டு வெடிப்புகள், அதுவரை சட்டம் ஒழுங்குப் பிரச்னையாக மட்டுமே கருதப்பட்டு வந்த மாபியா கும்பல்கள், தங்கள் வீச்சினை, எந்த அளவுக்கு இந்திய அதிகார மட்டத்தில் ஊடுறுவியிருக்கிறது எனபதை அரசுக்கு உணர்த்தியது. எனவே அரசு, மத்திய அரசில் உள்துறை செயலாளராக பணியாற்றிய என்.என்.வோரா என்பவர் தலைமையில் ஒரு குழுமம் அமைத்து 'மாபியா கும்பல்களின் செயல்பாடுகள் அவற்றிற்கிடையேயான தொடர்புகள் ஆகியவற்றைப் பற்றிய செய்திகளை அறிந்து, மேலும் தொடர்ந்து செய்தியினை திரட்ட நிரந்தரமான ஒரு அமைப்பு ஏற்படுத்துவதற்கான அறிவுரைகளை தெரிவிக்கும்படியும்' அக்குழுமத்தை பணித்தது. பல்வேறு அரசு அமைப்புகளிடமும் விபரங்களைப் பெற்ற வோரா மூன்றே மாதத்தில் தனது அறிக்கையினை தாக்கல் செய்தார். அனைத்து உளவு, காவல் மற்றும் அமலாக்க துறைகளிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் வோரா தனது அறிக்கையில் எவ்வாறு இந்தியாவின் அனைத்து அதிகார மட்டத்திலும் பல்வேறு குற்றவாளிக் கும்பல்களின் ஆளுமை படர்ந்து கிரிமினல்கள் ஏறக்குறைய இங்கு ஒரு இணை அரசே நடத்திக் கொண்டிருப்பதாக பல பக்கங்களில் போட்டுக் கிழித்துவிட்டார். இந்த அறிக்கையின் கடுமையை உணர்ந்த அரசு அதை வெளியிடாமல் கிடப்பில் போட்டது.

நைனா கொலை வழக்கினால் வோரா அறிக்கை (வோரா அறிக்கை என்று கூறுவதே பொருத்தம். ஏனெனில் அறிக்கையின் தீவிரம் கருதி அவர் மட்டுமே தயாரித்து உறுப்பினர்கள் யாருடைய கையெழுத்தும் இன்றி உள்துறை அமைச்சரிடம் சமர்ப்பித்தார்) வெளியிடப்பட வேண்டும் என்ற வாதம் வலுத்தது. நடந்த கொலையினால் தனது கட்சிக்கு ஏற்பட்ட அவப்பெயரை ஓரளவுக்கு துடைக்கும் வண்ணம் பிரதமர் நரசிம்ஹராவ் வோரா அறிக்கையினை பாராளுமன்றத்தில் வெளியிட்டார். ஆனால், இந்த அறிக்கைக்கு பின்புலமான குறிப்புகளை வெளியிட அரசு மறுத்து விட்டது.

ஆயினும் வோரா அறிக்கையின் சாராம்சமே மெல்லிய இதயம் படைத்தவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுத்த தக்கதாக இருந்தது. பாராளுமன்றத்திலும் ஊடகங்களிலும் பெரிய விவாதம் நடைபெற்றது. அப்போது கிளம்பியதுதான், 'அரசியலில் கிரிமினல்கள் ஊடுருவிவிட்டனர். எனவே கிரிமினல்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும்' என்ற கோரிக்கை. இவ்வாறு தோன்றிய பொதுக்கருத்தினை மனதில் கொண்டு சட்ட மாறுதல்களை பரிந்துரைக்கும் சட்ட ஆணையமும் (Law Commission) கிரிமினல்களை தேர்தலில் போட்டியிடாமல் தடுக்கும் வண்ணம் சட்ட மாறுதலை அரசின் முன் வைத்தது. தனக்குத் தானே தண்டனை கொடுத்துக் கொள்ள விரும்பாத அரசு பரிந்துரையை வழக்கம் போல கண்டு கொள்ளவில்லை.

ஒரு வழக்கு
மக்களாட்சி சீர்திருத்தத்திற்கான அமைப்பு (Association for Democratic Reforms) என்ற தன்னார்வ குழு 1999ம் வருடம் தில்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனுவினை தாக்கல் செய்தது. வோரா அறிக்கை சுட்டிக் காட்டிய தீமைகளை இந்தியாவில் இருந்து ஒழிக்கும் வண்ணம் சட்ட ஆணையத்தின் பரிந்துரைகளின்படி தேர்தல் நடைமுறை விதிகளில் (Conduct of Election Rules'1961) மாறுதல் செய்யப்பட அரசுக்கு ஆணையிட வேண்டும் என்பதுதான் மனுவின் சாரம். வழக்கினை விசாரித்த தில்லி உயர் நீதிமன்றம் 'சட்டமியற்றுவது சட்டமன்றங்களின் வேலை. எனவே இவ்வாறு மாறுதல் கொண்டுவரப்பட வேண்டும்' என்று நீதிமன்றம் ஆணையிட முடியாது என்று கூறியது. ஆனாலும் 'சரியான நபர்களை வாக்காளர்கள் தேர்ந்தெடுக்கும் வண்ணம் தேர்தல் ஆணையம் வேட்பாளர்களிடம் இருந்து அவர்கள் மீதான குற்றவியல் வழக்குகள், சொத்து விபரங்கள், கல்வித்தகுதி, அவரது கட்சியின் தகுதிகள் பற்றிய விபரங்களை கோர வேண்டும்' என்று உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவு கட்சிமாறுபாடு இல்லாமல் அனைத்து அரசியல்வாதிகளின் வயிற்றில் புளியைக் கரைக்க மத்திய அரசு இந்த உத்தரவினை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றது. இதே வகையில் பியூசிஎல் (PUCL) அமைப்பும் ஒரு பேராணை மனுவினை (Writ Petition) நேரடியாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய, இரண்டும் சேர்த்து உச்ச நீதிமன்றத்தினால் விசாரிக்கப்பட்டது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியும் வழக்கில் தன்னை சேர்த்துக் கொண்டு தில்லி உயர்நீதிமன்ற உத்தரவினை நீக்கக் கோரி வாதிட்டது. அனைவரையும் விசாரித்த உச்ச நீதிமன்றம் தில்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை சிறு மாறுதல்களுடன் ஏற்றுக் கொண்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவுகளின் அடிப்படையிலேயே 2003ம் வருடம் மார்ச் மாதம் தேர்தல் கமிஷன் வேட்பாளர்கள் தங்களது, தங்களது கணவன்/மனைவி மற்றும் சார்ந்திருப்பவர்களின் (dependents) சொத்து விபரங்கள், அரசு நிறுவனங்களிடம் பெற்ற கடன்கள், கல்வித் தகுதி, நிலுவையிலுள்ள குற்றவியல் வழக்குகள் ஆகிய விபரங்களைத் பொதுவில் தர வேண்டும் என்ற உத்தரவினை வெளியிட்டது.

ஒரு தீர்ப்பு
தன்னைப் பற்றிய விபரங்களை ஒரு வேட்பாளர் சமர்ப்பிக்க வேண்டும் என்ற உத்தரவு, தேர்தல் ஆணையத்தின் தன்னிச்சையான செயல் இல்லை என்பதால், இதன் காரணங்களையும், நோக்கங்களையும் நாம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில்தான் தேட வேண்டியிருக்கிறது.

எந்த எந்த விபரங்களை தேர்தல் ஆணையம் வேட்பாளரிடம் இருந்து கோர வேண்டும் என்பதையும் உச்ச நீதிமன்றமே வரையறுத்தது. முதன்மையானதும் முக்கியமானதுமான விபரம் அந்த வேட்பாளர் சம்பந்தப்பட்ட குற்றவியல் வழக்குகள். இதைப் பொறுத்து யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்கப் போவதில்லை. ஒரு வேட்பாளர் மீது குற்றவியல் வழக்கு தொடரப்பட்டிருந்தால் அவர் தகுதி இழக்க மாட்டார். ஆனால், அதன் விபரங்களையாவது வாக்காளர்கள் அறிந்திருக்க வேண்டிய அவசியத்தை வோரா அறிக்கை நமக்கு உணர்த்துகிறது. மேலும் குற்றவியல் வழக்குகளை தெரிவிக்க கட்டாயப்படுத்துவதால், ஒரு வேட்பாளருக்கு இழப்பு (legal injury) ஏதுமில்லை. ஏனெனில், நமது நாட்டில் குற்றவியல் வழக்குகளின் விபரங்கள் பொது ஆவணங்கள். யார் வேண்டுமானாலும், தகுந்த காரணம் இருப்பின் வழக்கு விபரங்களைப் பெறலாம். வழக்குகளும் அனைவரின் பார்வைக்கு திறந்த நீதிமன்றங்களில்தான் நடக்கின்றது. எனவே, இவற்றில் ரகசிய காப்புறுதி ஏதும் இல்லை.

அதைப் போலவே கடைசியும் அதிக முக்கியமல்லாததுமான விபரம், வேட்பாளரின் கல்வித் தகுதி பற்றியது. நாடாளுவதற்கு கல்வித் தகுதி பெரிய தகுதியில்லையெனினும், இதனாலும் யாரும் பாதிக்கப்படுவதில்லை. ஏனெனில், வேட்பாளரின் கல்வி பற்றிய விபரங்களையும் யாரும் சட்டபூர்வமான முறையில் பெற முடியும். எனவே இதைப் பொறுத்தவரையும் ரகசியம் ஏதுமில்லை. எம்ஜிரும் கருணாநிதியும் ஏன் ஜெயலலிதாவும் பள்ளிக்கூடத்தோடு சரி என்பது அனைவரும் அறிந்ததே! ஆனால், இவர்களது அறிவு மற்றும் அரசியல் சாதுரியம் பட்டம் பல பெற்ற யாருடைய அறிவுக்கும் குறைந்ததல்ல என்பது வேறு விஷயம்.

அடுத்தது, வேட்பாளர், அவரது மனைவி/கணவர் மற்றும் சார்ந்திருப்போர் அரசிடமோ அல்லது பொது நிறுவனங்களிடமோ ஏதேனும் கடன் பட்டிருந்தால் அதைப் பற்றிய விபரங்கள். இந்த விபரங்களிலும் ரகசியம் ஏதும் இல்லை. தாங்கள் விரும்பினால் பொது நிறுவனங்கள் தங்களிடம் கடன்பட்டவர்கள் பற்றிய விபரங்களை பொதுவில் தெரிவிக்கலாம். வாக்காளர்கள் வேட்பாளர்களைப் பற்றிய ஒரு கருத்து கொள்வதற்கு இந்த விபரம் அவசியம்.

மேற்சொன்ன மூன்று விபரங்களையும் அந்த விபரங்கள் மீதான வேட்பாளரின் கருத்தையும் இணைத்து அனைத்து தேர்தல் அதிகாரிகளின் அலுவலகங்களிலும் பொதுப் பார்வைக்கு வைக்கலாம். வேட்பாளரின் கருத்து அவசியம் என்று நான் கூறுவது, ஒரு வேட்பாளர் தான் பட்ட கடன் மற்றும் தன் மீது உள்ள குற்ற வழக்குகள் பற்றிய தனது நியாயத்தையும் எடுத்துரைக்க ஒரு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு. காவலர்கள் பொய் வழக்கு தொடுப்பது ஒன்றும் புதிதல்லவே!

ஆனால், பிரச்னைக்குறியதாக நான் கருதுவது வேட்பாளர்களின் சொத்து விபரங்கள். ஒருவருக்கு சொந்தமான கட்டிடம், நிலம் போன்ற அசையா சொத்துகள் குறித்த விபரங்கள் பொது ஆவணமாக கிடைக்கும். இதில் பெரிய சிக்கல் இல்லை. ஒருவரின் பங்குப் பத்திரம் குறித்த விபரங்களும் தேவையானவை எனக் கூறலாம். எனெனில் ஒரு வேட்பாளருக்கு குறிப்பிட்ட நிறுவனத்தின் மீதான உரிமை மற்றும் ர்வத்தை (interest) வாக்காளர்கள் தெரிந்து கொள்வது அவசியம். (அமெரிக்க பாதுகாப்பு மந்திரி டோனால்ட் ரம்ஸ்பீல்ட் மந்திரியானவுடன் தனது பங்குகள் அனைத்தையும் விற்றார் என அறிகிறேன்)

ஆனால், சிக்கல் வேட்பாளர் தன்னிடமுள்ள நகை, ரொக்கம், மற்றும் வங்கியிலுள்ள சேமிப்பு இவற்றை வெளியிடுவதில் இருப்பதாக எண்ணுகிறேன். பொதுவாகவே எவ்வளவு நெருங்கிய நண்பர்களாயினும் நாம் ஒருவருக்கொருவர் வங்கியில் எவ்வளவு தொகை வைத்திருக்கிறோம் என்று கூறிக் கொள்ள விரும்புவதில்லை. ஏன், மனைவியிடமே வங்கியிலுள்ள தொகையை கூறுவதில் பத்து இருக்கிறது! சேரியமாகக் கூறினால், மும்பை போன்ற மாபியா ஆளுமைக்குட்பட்ட நகரங்களில் பலர் தங்களது பொருளாதார நிலமையை ரகசியமாக வைத்திருப்பது அவசியமானது. தமிழகம் போல இங்கு லாட்டரியில் பரிசு விழுந்தவர்களை விளம்பரப்படுத்துவது இல்லை. மும்பை மட்டுமல்லாமல் எங்குமே, வங்கிகளும் ஒருவரின் சேமிப்பில் உள்ள தொகையை தகுந்த நீதிமன்ற ஆணையில்லாமல் வெளிப்படுத்த சட்டம் இடம் கொடுக்கவில்லை. எனவே ஒருவரிடம் உள்ள அசையும் சொத்துகள் பொது ஆவணம் அல்ல. அந்த விபரங்களை ஒரு தனி மனிதர் தன்னிடமே வைத்திருக்க அவருக்கு உரிமை இருக்கிறது.

அவ்வாறெனில், ஒரு வேட்பாளர் ஏன் தனது சொத்து விபரங்களை அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்மானித்தது என்பதை ஆராய்வது அவசியம். நான் 'அசையும் சொத்து விபரங்கள் அளிப்பது தர்மசங்கடமான விஷயம்' என்ற கோணத்திலேயே தீர்ப்பினை அணுகினாலும், 'நீதிபதிகள் அரசு ஊழியர்கள் தங்கள் சொத்து விபரத்தை அளிக்க வேண்டிய கடமையோடு வேட்பாளர்களின் சொத்து விபரங்களை சேர்த்து குழம்பி விட்டனர்' என்றே கருதுகிறேன். எனெனில் 'அரசு ஊழியர்கள் தங்கள் சொத்து விபரங்களை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும்' என்ற நடத்தை விதியினை நீதிபதிகள் தங்கள் தீர்ப்புக்கு காரணமாக மேற்கோள் காட்டுகின்றனர். 'சட்டமன்ற உறுப்பினர்களும் அரசு ஊழியர்களே' என்று ஏற்கனவே நரசிம்ஹராவ் வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதையும் நினைவு கூறுகின்றனர். ஆனால் இங்கு சொத்து விபரங்களை அளிக்க கடமைப்பட்டவர் வேட்பாளர். தேர்தலில் வென்றவர் இல்லை. தேர்தலில் வென்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுபவரை தனது சொத்து விபரங்களை சமர்ப்பிக்கக் கூறுவதில் நியாயம் உண்டு. ஆனால் அந்த விபரங்களை விட பொது ஆவணமாக்குவதில் எனக்கு உடன்பாடில்லை.

நீதிபதிகள் மேலும் 'அமெரிக்காவில் செனட் தேர்தலுக்கான வேட்பாளர்கள் ஒவ்வொரு வருடமும் தங்கள் சொத்து விபரங்களை அளிக்கும் வழக்கம் உள்ளதாக எவ்வித மேற்கோள்களும் இல்லாமல் குறிப்பிடுகின்றனர். நான் தேடியவரையில் அப்படி ஒன்று இருப்பதாக தெரியவில்லை. அனைத்து வேட்பாளர்களும் தங்கள் தேர்தல் நிதி வரவு-செலவுகளை வெளியிடுகின்றனர். மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களே சொத்து விபரம் முழுவதும் அளிக்கின்றனர். எது எவ்வாறு எனினும், சொத்து விபரம் அளிப்பதன் நோக்கம் என்ன?

வழக்குரைஞர்கள் மீண்டும் மீண்டும் பல்வேறு வார்த்தைகளில் வலியுறுத்திய காரணங்கள், தீர்ப்பிலிருந்து நான் பார்த்த வரையில் 'வாக்காளர்களின் அறிந்து கொள்ளும் உரிமை' மற்றும் 'வேட்பாளர்களின் பின்புலம் மற்றும் செயல்கள் ஆகியவற்றை தெரிந்து கொள்வதால் ஜனநாயகம் காப்பாற்றப்படுகிறது' என்பதுதான். (right to know) இதனோடு 'வேட்பாளரைப் பற்றி முழுமையாக ஒரு வாக்காளர் தெரிந்து கொள்வதால், சரியான ஒரு முடிவெடுத்து தனது வாக்கினை தகுதியான நபர்களுக்கு அளிக்க முடியும்' என்பதனையும் சேர்த்துக் கொள்ளலாம். இந்த பொதுப்படையான காரணங்கள்தான் மீண்டும் மீண்டும் கூறப்படுகின்றனவே தவிர ஒரு வேட்பாளரின் சொத்து விபரத்தை தெரிந்து கொள்வதற்கான நேரிடையான காரணம் இல்லை.

ஆனால் நீதிபதிகள் கூறும் ஒரே காரணம், 'சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் குடிமகன் அவர்கள் தவறான வழியில் நடந்து அதிகமான பொருளீட்டியவர்களா என்று அறிவது அவசியம். இந்த விபரத்தை வேட்பாளரின் சொத்து விபரத்தை கோருவதன் மூலம் எளிதில் பெறலாம்' என்பதுதான். மேலும் ஒரு இடத்தில் நீதிபதிகள் கூறும் மற்றொரு காரணம், 'ஒரு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், அதிகமான அளவில் (tons of black money) கறுப்புப் பணத்தினை திரட்ட முடிகிறது. இவ்வாறு சொத்து விபரங்களை அவர்கள் அளிக்கக் கூறுவதன் மூலம், வாக்காளர் இவ்வாறு கறுப்புப் பணம் திரட்டியவரை மீண்டும் தேர்ந்தெடுக்க வேண்டுமா? என்று சிந்திக்க முடியும்'

இரண்டாவதாக நீதிபதிகள் கூறியது ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைப் பற்றியது. அவர்கள் ஏற்கனவே அரசு ஊழியர்கள் என்பதால் சொத்து விபரங்களை அளிக்க கடமைப்பட்டவர்கள். ஆனால், ஏன் முதன் முறையாக தேர்தலில் நிற்பவர்கள் அவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் முன்னரே இவ்வாறு கோர வேண்டும்? தவறான முறையில் பொருளீட்டியிருந்தால், அதை கணக்கில் காட்டாமல் கறுப்புப் பணமாகவே வைத்திருக்க வாய்ப்பு அதிகம். அதை யாரும் தெரிவிக்கப் போவதில்லை. ஏனெனில் அது தங்களை ஒரு குற்ற வழக்கில் உட்படுத்தும் செயல் என்பதை அறிவர். பிரச்னை, தேர்தலில் நின்று பார்ப்போமே என்று முன்வரும் நபர்களுத்தான். வெற்றியும் கிடைக்காமல், அவரது சட்டைப் பையில் எவ்வளவு பணமிருக்கிறது என்பதிலிருந்து அவர் மனைவி அணிந்திருக்கும் தாலியிலிருப்பது தங்கமா இல்லையா என்பதை ஊர் முழுவது தெரிந்து போவதில் பலருக்கும் தர்மசங்கடம் இருக்கும் என்று நான் அனுமானிக்கிறேன். நல்ல முறையிலும் பெரும் பொருளீட்டலாம். அதை திறந்து வைப்பது பொறாமைக் கண்களை ஒரு நபர் மீது செலுத்தாதா?

தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் மத்திய விஜிலன்ஸ் ஆணையர் (CVC) போன்ற அமைப்புகளிடம் வருடம்தோறும் தங்களின் சொத்து விபரங்களை சமர்ப்பிக்க செய்வதும் அவற்றை ரகசிய ஆவணங்களாக வைத்திருந்து 'ஒரு உறுப்பினர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக' ஆணையர் கருதுகையில் குற்ற வழக்கிற்கு பரிந்துரைப்பதும் ஊழலுக்கு எதிரான போதிய நடவடிக்கையாக இருக்கும்.

அரசியல்வாதிகளுக்கு எதிரான பொதுக்கருத்து நிலவுகிறது. உச்ச நீதிமன்றமும் அதற்கு இசைந்து தீர்ப்பு கூறியிருக்கிறது. இது நியாயமென்றால்....உச்ச, உயர் நீதிமன்ற நீதிபதிகள், அரசு அலுவலர்கள் மற்றவர்களும் தங்கள் சொத்து விபரத்தினை பொதுவில் வைப்பதும் நியாயமே. அப்படி யாராவது வேண்டி ஒரு பேராணை மனுவினை தாக்கல் செய்தால் 'பத்மாசுரனுக்கு வரம் கொடுத்த சிவன் போல' சிலர் நெளிய வேண்டி வரும்.

மும்பை
16/04/04