10.5.06

காஷ்மீர்...

'ரிவர் ஆ·ப் எமோஷன் பர்ஸ்ட்ஸ் ஆன் எல்.ஓ.சி' என்று 22ம் தேதி ஏசியன் ஏஜ் நாளிதழின் முதல் பக்கத்தில் கட்டம் கட்டி வெளிவந்த செய்தியினை எத்தனை இந்தியர்கள் படித்தார்களோ தெரியாது. ஆனால், நிச்சயம் இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிக்கும் அரசியல்வாதிகள் படிக்க வேண்டும். படிக்க நேரமில்லையென்றால் குறைந்தபட்சம் காஷ்மீரத்து நீலம் நதியின் இருபுறமும் நடுக்கும் குளிரிலும், கொட்டும் மழையிலும் கூடியிருக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் புகைப்படத்தையாவது காண வேண்டும். யார் இவர்கள்? ஏன் இந்தத் தவிப்பு இவர்களிடம்?

நீலம் நதியின் இரு கரைகளுக்குமான தூரம் என்னவோ இருபது அடிதான். ஆனால் அதன் இரு கரைகளிலும் உள்ள மக்களுக்கிடையேயான தூரமோ, அவர்களைப் பொறுத்தவரை ஒருவரையொருவர் அணுகவே முடியாத இரு வேறு உலகங்களுக்கான தூரம் என்பது வரலாற்றுச் சதி! இரு வேறு உலகங்கள் என்பது உயர்வு நவிற்சியென்றால்.... இரு வேறு நாடுகள் என்பது உண்மை!! ஆம், நதிக்கு அந்தப் பக்கம் சுதந்திரமடைந்த காஷ்மீர் என பாகிஸ்தானியர்களாலும் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் என இந்தியர்களாலும் அழைக்கப்படும் பகுதி. நதிக்கு இந்தப் பக்கம் இந்தியா ஆக்கிரமித்த காஷ்மீர் என பாகிஸ்தானியர்களாலும், இந்தியாவின் மாநிலம் என இந்தியர்களும் அழைக்கும் பகுதி. இந்த குழப்பத்தில் அந்த மக்களுக்கோ தாங்கள் எந்த நாடு என்பதே புரிந்திராத நிலை. செய்தியினைப் படிக்கையில் அந்த 'நாட்டுக் கவலையெல்லாம்' அவர்களுக்கிருக்குமா என்பதே சந்தேகம்தான். பதினான்கு ஆண்டுகள் கழித்து தனது தாயை மறுகரையில் பார்த்து துள்ளிக் குதிக்கும் 26 வயது ஹாஜிரா பீபிக்கும், மகள் கையில் தனது ஒரு வயது பேத்தியைப் பார்த்த சந்தோஷத்தில் இதயத்தை உறைய வைக்கும் குளிந்த தண்ணீரில் குதித்து அக்கரைக்கு செல்ல முயன்ற ஹாஜிராவின் அம்மாவுக்கும் வேறு என்ன நாட்டுக் கவலை இருக்கப் போகிறது? தனது சகோதரனை மறுகரையில் கண்டதும் தனது அன்பளிப்பாக கொண்டு வந்திருந்த தேங்காயை எறிந்த ஐம்பது வயது மொகமது கரீமுக்கும் அந்த தேங்காயை பிடிக்கிறேன் பேர்வழி என்று ஏறக்குறைய தண்ணீரில் விழப்போய் மற்றவர்களால் காப்பாற்றப்பட்ட முஜித்துக்கும் வேறு என்ன நாட்டுக் கவலை இருக்கப் போகிறது? ஒருவருக்கொருவர் செய்திகளை கற்களில் வைத்துக் கட்டி எறிய ...அதிலும் பல செய்திகள் துரதிஷ்டவசமாக நீரில் விழுந்து ஓடி மறைய 'அழுகையும், கூச்சலும் ஆரவாரமும் எங்கும் நிறைந்திருந்ததாக' பத்திரிக்கை எழுதுகிறது.

இத்தனை களோபரத்திற்கும் காரணம் பேராசை பிடித்த சில மனிதர்கள்! அவர்களால் நிகழ்ந்த ஒரு சண்டை!! தொடர்ந்து நிகழும் பயங்கரவாதம்!!! ஐம்பது வருடங்களுக்கு முன்னர் நடந்த சண்டையில் இந்தப்பக்கம் கொஞ்சம் அந்தப் பக்கம் கொஞ்சம் என பிரிந்து போனது இரு கிராமங்கள். ஏதோ அவ்வப்பொழுது பிரிந்தவர்கள் ஒருவருக்கொருவர் பைனாகுலர் மூலமாகவாவது எப்போதாவது பார்த்துக் கொண்டதும் காஷ்மீர் போராட்டம் பெரிய அளவில் வெடித்த பிறகு நின்று போனது. கடந்த பதினான்கு ஆண்டுகளாக நதியை ஒட்டி ஓடும் சாலைக்கு 100 மீட்டர் தூரத்திற்குள் யாராவது வந்தாலே இந்திய காவல் கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து இயந்திரத் துப்பாக்கி சீற ஆரம்பித்து விடுமாம். யார் செய்த புண்ணியமோ இரண்டு வாரம் முன்பு சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட நீலம் நதி சாலை திறக்கப்பட்டதாக அறிவிப்பு ஏதும் வெளியாக வில்லையென்றாலும் அவ்வாறு மக்களிடையே செய்தி பரவ இருபுறமும் ஏற்பட்ட மக்கள் எழுச்சியைக் கண்டு ராணுவமும் அதைத் தடுக்க முயலவில்லை. அங்கிருந்த சில ராணுவ வீரர்களும் மக்கள் ஆர்வமிகுதியில் ஆற்றுக்குள் பாய்வதை தடுக்கும் பணியில்தான் ஈடுபட்டிருந்தார்களாம்....இவர்களுக்கெல்லாம் வேறு என்ன கவலை இருக்கப் போகிறது?

முகமது முஜித் கூறுவது போல, 'இது ஒரு சாதாரண தேங்காயாக இருக்கலாம். ஆனால் எனக்கு இதுதான் உலகமே! பதினான்கு வருடம் கழித்து எனது சகோதரனை சந்திக்கிறேன். ஏதோ அவனைப் பார்த்தேன். அவனருகே நின்று பேசும் ஒரு நாளும் வரும்' என்பது மட்டும்தானே இவர்களது கவலையாக இருக்க முடியும்.

நிலவில் இந்தியன், செவ்வாயில் இந்திய ரோபோட் எனவும் அப்துல் கலாம் கனவு காணலாம். ஒரு சாதாரண இந்தியனான எனது கனவு இதுதான்.

தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பில் புதிய அங்கத்தினராக காஷ்மீர் நுழைய வேண்டும். சார்க் அமைப்பின் அலுவலகங்கள் அனைத்தும் காஷ்மீரத்தில் அமைந்திடல் வேண்டும். சுவிட்சர்லாந்தினைப் போல ராணுவம் இல்லாத நாடாக காஷ்மீரம் இருத்தல் வேண்டும். இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீர பாதுகாப்புக்கு பொறுப்பாளியாக வேண்டும். காஷ்மீரம் எந்த நாட்டு கலகத்திலோ, சண்டையிலோ சார்பு நிலை எதுவும் எடுக்கவியலாத அயல்நாட்டுக் கொள்கையை அதன் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை ஷரத்தாக அமைக்க வேண்டும். முழுக்க முழுக்க மதச்சார்பற்ற நாடாக அதன் அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்படல் வேண்டும். அதில் சிறுபான்மையினருக்கு நம் நாட்டு சட்டம் போலவே சிறப்புரிமை அளிக்கப்படல் வேண்டும். நாடு திரும்ப விரும்பும் பண்டிட்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளல் வேண்டும். அவர்களுக்கு குடியிருப்பு மனை வழங்க வேண்டும். விரும்பாதவர்களுக்கு அவர்களின் இழப்புக்கு தகுந்த நஷ்ட ஈடு வழங்க வேண்டும் அல்லது இருநாட்டு குடியுரிமை வழங்கப்படல் வேண்டும்.

மேலும், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையான ஷரத்துகளை மாற்றம் செய்ய எந்த காஷ்மீர் அரசாவது முயன்றால்...இந்தியாவோ அல்லது பாகிஸ்தானோ அதனைத் தடுக்க ஐநா உதவியுடன் பலப்பிரயோகம் செய்யலாம். இதற்கான முத்தரப்பு ஒப்பந்தம் இந்தியாவும் பாகிஸ்தானும் கையெழுத்து செய்து அதனை காஷ்மீர மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களா என்று அறிய ஒரு வாக்கெடுப்பும் (ரெபரெண்டம் அல்லது பிளீபிசைட்) நடத்தலாம். இதன் மூலம் காஷ்மீர மக்கள் தங்களது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையான ஷரத்துகளை மாற்றவியலாத வண்ணம் செய்யலாம். சிறுபான்மையினர் உரிமைகள் பேணப்படுகிறதா என்பதை கண்காணிக்கவும் தீர்மானிக்கவும் சர்வதேச ஆணையம் ஒன்றினை ஏற்படுத்தலாம்.

பிறகு சீனாவிடமும் 'உனக்கு இன்னாபா பிரச்னை. பிசாத்து ரெண்டரையணா நிலம்தானே.....இங்க அது நிறையவே இருக்கு. உனக்கு வேண்டியத எடுத்துக்கோ. விடு என்னை. நான் பாட்டுக்கு இந்த டாங்கு பாங்குன்னு செய்யறத விட்டுட்டு கூட ரெண்டு ஸ்கூலு கட்டுற வழியப் பாக்குறேன்னு' சொல்லலாம். இன்னும் என்னன்னவோ செய்யலாம் போங்க......

தெற்காசிய கூட்டமைப்பை ஐரோப்பிய கூட்டமைப்பு அளவுக்கு வலுப்படுத்தி...பலரது அகண்ட பாரத கனவினையும் வைக்கேறியசாக நிறைவேற்றலாம். குறைந்த பட்சம் ஹாஜிரா பீபிக்கு தனது அம்மாவின் கைகளில் தனது மகளைக் கொடுத்து பெருமைப்படவாவது ஒரு வாய்ப்பை ஏற்படுத்த முடியாதா?


இக்கட்டுரை, அதில் கூறப்பட்ட செய்தியினை படித்த உணர்வினால் உந்தப்பட்டு ஒரு மடலாக மூன்று வருடங்களுக்கு முன்னர் மரத்தடி குழுமத்திற்காக எழுதப்பட்டது. ஆனால், நான் எதிர்பார்த்திராத எழுத்தாளர் ஒருவர் தனது இருவரி பாராட்டினை தனிமடலில் அனுப்பியிருந்தார். எனவே இதனை எனது வலைப்பதிவில் பதிவது நன்று என நம்புகிறேன்.

2 comments:

சந்திப்பு said...

உணர்ச்சிப்பூர்வமாக எழுதியுள்ளீர்கள். நீங்கள் படித்ததை அப்படியே உங்கள் இதயத்திற்குள் இருந்து வருவதுபோல் உள்ளது. வாழ்த்துக்கள். அதனுடைய லிங்கை இங்கு தர முடிந்தால் மிக நலமானது.

அதே சமயம் காஷ்மீருக்கான தீர்வை உலகமே விழிப்போடு பார்த்துக் கொண்டு இருந்தாலும், இந்த இரண்டு பகுதி மக்களின் உணர்வுக்கு மிகுந்த மதிப்பளித்திட வேண்டும். காஷ்மீர் பிரச்சினைக்கான தீர்வினை இந்தியாவும் - பாகிசுதானும் இணைந்து பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு கண்டிட வேண்டும். எந்த காரணத்தைக் கொண்டும் அமெரிக்காவுக்கோ, அல்லது வேறு ஏதாவது மூன்றாவது நாட்டின் தலையீட்டிற்கே இதனை கொண்டுச் செல்லக்கூடாது. தேவைப்பட்டால் ஐ.நா. உதவியை நாடலாம் (தற்போது இதுகூட அமெரிக்க கட்டுப்பாட்டில்...) அடுத்து இந்தியா முதலில் செய்ய வேண்டியது காஷ்மீர் மக்களுக்கு ஏற்கெனவே இருந்த அதிக அதிகாரங்களை நிச்சயம் வழங்கிட வேண்டும். அரசியல் சட்டம் 370 உத்திரவாதப்படுத்தியுள்ளதை உறுதிப்படுத்திட வேண்டும். மன்மோகன் அரசு இதனை செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பினை இங்கு பதிவு செய்வோம்.

வாய்ப்பிருந்தால் காஷ்மீர் குறித்து நான் எழுதிய கட்டுரையை படியுங்கள். மிகப் பெரியது - இருப்பினும் பிரச்சினையின் ஆழத்தை புரிந்து கொள்ள இது உதவிடும் என கருதுகிறேன். நன்றி!

http://santhipu.blogspot.com/2006/04/blog-post_21.html

PRABHU RAJADURAI said...

நன்றி!

உங்க்ள் கட்டுரை பலனுள்ளது. எனக்கு காஷ்மீர் பிரச்னை இதுவரை மேலோட்டமாகத்தான் தெரியும். ஏசியன் ஏஜ் செய்தி மூன்று வருடங்களுக்கு முந்தையது.