3.5.06

வேட்பாளர் தகுதி?

கடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிகமாக பேசப்பட்ட ஒரு விஷயம், வேட்பாளர் தனது சொத்து விபரங்களை அளித்தல் பற்றியது. அப்போது எழுதியது...இன்று அதன் தாக்கம் அதிமாக இல்லாது இருப்பது, எனது கருத்தினை வலுப்படுத்துகிறது,,,




முன்னுரை

பத்திரிக்கையாளர் மாலன் தேர்தல் விவாதங்களுக்காகவே வலைப்பதிவு ஒன்றினைத் தொடங்கி மாநிலவாரியாக தேர்தல் நிலவரங்களை அலசி வருகிறார். மாலனின் வாசகர்கள் அவரது கணிப்புகளை நினைவில் வைத்திருப்பார்களோ இல்லையோ, மைசூர் மகாராஜா உரிமை கொண்டாடும் மாளிகைகளையும், சோனியாவுக்கு இந்தியாவில் இல்லாமல் இத்தாலியில் இருக்கும் வீட்டினையும் மறக்க மாட்டார்கள். பொதுவாகவே இந்திய நடுத்தர வர்க்கத்தினருக்கு தேர்தல் காலத்தில் மெல்லுவதற்கு அவலுக்கு பஞ்சமிருக்காதெனினும், இந்தத் தேர்தலில் இன்னும் பல கைப்பிடிகளாக வேட்பாளர்களின் சொத்து மற்றும் வங்கிக் கணக்கு விபரங்கள் கிடைத்திருக்கிறது. தெருவோரத்தில் இஸ்திரி போடுபவரின் தினப்படி வருமானத்திலிருந்து, பக்கத்து வீட்டுக்கு புதிதாக குடி வந்திருப்பவரின் மாதச் சம்பளம் வரை கூச்சமில்லாமல் விசாரிப்பவர்களுக்கே இப்படி வெட்ட வெளிச்சமாக வேட்பாளர்களின் சொத்து மற்றும் பண விபரத்தினை திறந்து வைத்திருப்பது உதவும் என நான் எண்ணினேன். ஆனால், 'எண்ணங்கள்' பத்ரி பங்குச் சந்தைக்கு விற்பனைக்கு வரும் நிறுவனங்களின் நிர்வாகிகள் தங்களது சொத்து விபரங்களை வெளியிடுவதில்லையா? அது போலவே இது மிகவும் தேவையானது' என்கிறார். என்றாலும் எனக்கென்னவோ தினந்தோறும் பத்திரிக்கைகளில் இவற்றை தொடர்ந்து படிக்கையில், ஒரு தனிமனிதனின் வங்கிக் கணக்கை இப்படி வலியத் திறந்து பார்ப்பதில், பார்ப்பவருக்கு ஒரு குரூர சந்தோஷமும், பார்க்கப்படுபவருக்கு பல தர்மசங்கடங்களும் இருப்பதாக தோன்றியது. என் எண்ணம் நியாயமானதா? அதற்கு இந்தச் சடங்கின் பின்புலத்தையும் சற்று ஆராய்தல் நலம்.


ஒரு கொலை
'வேட்பாளர், தனது சொத்துக் கணக்கினை வெளியிட வேண்டும்' என்று வலியுறுத்தும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவிற்க்கான விதை, 1995ம் ஆண்டு நிகழ்ந்த ஒரு கொலை என்றால் ஆச்சரியமாக இருக்கலாம். தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட கணவன் அவளைக் கொல்வதும் அசாதாரமாணதல்ல. ஆனால் கொலையாளி சுஷில் சர்மா காங்கிரஸில் பெரும் புள்ளி. சர்மாவும் அவரது மனைவியான நைனா சாஹ்னியும் தில்லி அரசியல் வட்டாரத்தில் பிரபலமானவர்கள். நைனாவின் உடலை உணவு விடுதி தந்தூரில் வைத்து எரிக்க முயன்றதால் 'தந்தூர் வழக்கு' என்று பிரபலமடைந்த இவ்வழக்கில் சமீபத்தில்தான் தண்டனை வழங்கப்பட்டது.

நைனா கொலை, அரசியல் குற்றவாளிகளுக்கான புகலிடமாக மாறிவிட்டதாக பெரிய அளவில் விவாதத்தினை எழுப்பியது. இதனை தொடர்ந்து வலியுறுத்திய ஊடகங்கள், இரண்டு ஆண்டுகளாக அரசு கிடப்பில் போட்டு வைத்திருந்த வோரா குழும அறிக்கையை (Vohra Committee Report) மக்களுக்கு நினைவுபடுத்தின.

மும்பை தொடர் குண்டு வெடிப்புகள், அதுவரை சட்டம் ஒழுங்குப் பிரச்னையாக மட்டுமே கருதப்பட்டு வந்த மாபியா கும்பல்கள், தங்கள் வீச்சினை, எந்த அளவுக்கு இந்திய அதிகார மட்டத்தில் ஊடுறுவியிருக்கிறது எனபதை அரசுக்கு உணர்த்தியது. எனவே அரசு, மத்திய அரசில் உள்துறை செயலாளராக பணியாற்றிய என்.என்.வோரா என்பவர் தலைமையில் ஒரு குழுமம் அமைத்து 'மாபியா கும்பல்களின் செயல்பாடுகள் அவற்றிற்கிடையேயான தொடர்புகள் ஆகியவற்றைப் பற்றிய செய்திகளை அறிந்து, மேலும் தொடர்ந்து செய்தியினை திரட்ட நிரந்தரமான ஒரு அமைப்பு ஏற்படுத்துவதற்கான அறிவுரைகளை தெரிவிக்கும்படியும்' அக்குழுமத்தை பணித்தது. பல்வேறு அரசு அமைப்புகளிடமும் விபரங்களைப் பெற்ற வோரா மூன்றே மாதத்தில் தனது அறிக்கையினை தாக்கல் செய்தார். அனைத்து உளவு, காவல் மற்றும் அமலாக்க துறைகளிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் வோரா தனது அறிக்கையில் எவ்வாறு இந்தியாவின் அனைத்து அதிகார மட்டத்திலும் பல்வேறு குற்றவாளிக் கும்பல்களின் ஆளுமை படர்ந்து கிரிமினல்கள் ஏறக்குறைய இங்கு ஒரு இணை அரசே நடத்திக் கொண்டிருப்பதாக பல பக்கங்களில் போட்டுக் கிழித்துவிட்டார். இந்த அறிக்கையின் கடுமையை உணர்ந்த அரசு அதை வெளியிடாமல் கிடப்பில் போட்டது.

நைனா கொலை வழக்கினால் வோரா அறிக்கை (வோரா அறிக்கை என்று கூறுவதே பொருத்தம். ஏனெனில் அறிக்கையின் தீவிரம் கருதி அவர் மட்டுமே தயாரித்து உறுப்பினர்கள் யாருடைய கையெழுத்தும் இன்றி உள்துறை அமைச்சரிடம் சமர்ப்பித்தார்) வெளியிடப்பட வேண்டும் என்ற வாதம் வலுத்தது. நடந்த கொலையினால் தனது கட்சிக்கு ஏற்பட்ட அவப்பெயரை ஓரளவுக்கு துடைக்கும் வண்ணம் பிரதமர் நரசிம்ஹராவ் வோரா அறிக்கையினை பாராளுமன்றத்தில் வெளியிட்டார். ஆனால், இந்த அறிக்கைக்கு பின்புலமான குறிப்புகளை வெளியிட அரசு மறுத்து விட்டது.

ஆயினும் வோரா அறிக்கையின் சாராம்சமே மெல்லிய இதயம் படைத்தவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுத்த தக்கதாக இருந்தது. பாராளுமன்றத்திலும் ஊடகங்களிலும் பெரிய விவாதம் நடைபெற்றது. அப்போது கிளம்பியதுதான், 'அரசியலில் கிரிமினல்கள் ஊடுருவிவிட்டனர். எனவே கிரிமினல்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும்' என்ற கோரிக்கை. இவ்வாறு தோன்றிய பொதுக்கருத்தினை மனதில் கொண்டு சட்ட மாறுதல்களை பரிந்துரைக்கும் சட்ட ஆணையமும் (Law Commission) கிரிமினல்களை தேர்தலில் போட்டியிடாமல் தடுக்கும் வண்ணம் சட்ட மாறுதலை அரசின் முன் வைத்தது. தனக்குத் தானே தண்டனை கொடுத்துக் கொள்ள விரும்பாத அரசு பரிந்துரையை வழக்கம் போல கண்டு கொள்ளவில்லை.

ஒரு வழக்கு
மக்களாட்சி சீர்திருத்தத்திற்கான அமைப்பு (Association for Democratic Reforms) என்ற தன்னார்வ குழு 1999ம் வருடம் தில்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனுவினை தாக்கல் செய்தது. வோரா அறிக்கை சுட்டிக் காட்டிய தீமைகளை இந்தியாவில் இருந்து ஒழிக்கும் வண்ணம் சட்ட ஆணையத்தின் பரிந்துரைகளின்படி தேர்தல் நடைமுறை விதிகளில் (Conduct of Election Rules'1961) மாறுதல் செய்யப்பட அரசுக்கு ஆணையிட வேண்டும் என்பதுதான் மனுவின் சாரம். வழக்கினை விசாரித்த தில்லி உயர் நீதிமன்றம் 'சட்டமியற்றுவது சட்டமன்றங்களின் வேலை. எனவே இவ்வாறு மாறுதல் கொண்டுவரப்பட வேண்டும்' என்று நீதிமன்றம் ஆணையிட முடியாது என்று கூறியது. ஆனாலும் 'சரியான நபர்களை வாக்காளர்கள் தேர்ந்தெடுக்கும் வண்ணம் தேர்தல் ஆணையம் வேட்பாளர்களிடம் இருந்து அவர்கள் மீதான குற்றவியல் வழக்குகள், சொத்து விபரங்கள், கல்வித்தகுதி, அவரது கட்சியின் தகுதிகள் பற்றிய விபரங்களை கோர வேண்டும்' என்று உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவு கட்சிமாறுபாடு இல்லாமல் அனைத்து அரசியல்வாதிகளின் வயிற்றில் புளியைக் கரைக்க மத்திய அரசு இந்த உத்தரவினை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றது. இதே வகையில் பியூசிஎல் (PUCL) அமைப்பும் ஒரு பேராணை மனுவினை (Writ Petition) நேரடியாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய, இரண்டும் சேர்த்து உச்ச நீதிமன்றத்தினால் விசாரிக்கப்பட்டது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியும் வழக்கில் தன்னை சேர்த்துக் கொண்டு தில்லி உயர்நீதிமன்ற உத்தரவினை நீக்கக் கோரி வாதிட்டது. அனைவரையும் விசாரித்த உச்ச நீதிமன்றம் தில்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை சிறு மாறுதல்களுடன் ஏற்றுக் கொண்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவுகளின் அடிப்படையிலேயே 2003ம் வருடம் மார்ச் மாதம் தேர்தல் கமிஷன் வேட்பாளர்கள் தங்களது, தங்களது கணவன்/மனைவி மற்றும் சார்ந்திருப்பவர்களின் (dependents) சொத்து விபரங்கள், அரசு நிறுவனங்களிடம் பெற்ற கடன்கள், கல்வித் தகுதி, நிலுவையிலுள்ள குற்றவியல் வழக்குகள் ஆகிய விபரங்களைத் பொதுவில் தர வேண்டும் என்ற உத்தரவினை வெளியிட்டது.

ஒரு தீர்ப்பு
தன்னைப் பற்றிய விபரங்களை ஒரு வேட்பாளர் சமர்ப்பிக்க வேண்டும் என்ற உத்தரவு, தேர்தல் ஆணையத்தின் தன்னிச்சையான செயல் இல்லை என்பதால், இதன் காரணங்களையும், நோக்கங்களையும் நாம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில்தான் தேட வேண்டியிருக்கிறது.

எந்த எந்த விபரங்களை தேர்தல் ஆணையம் வேட்பாளரிடம் இருந்து கோர வேண்டும் என்பதையும் உச்ச நீதிமன்றமே வரையறுத்தது. முதன்மையானதும் முக்கியமானதுமான விபரம் அந்த வேட்பாளர் சம்பந்தப்பட்ட குற்றவியல் வழக்குகள். இதைப் பொறுத்து யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்கப் போவதில்லை. ஒரு வேட்பாளர் மீது குற்றவியல் வழக்கு தொடரப்பட்டிருந்தால் அவர் தகுதி இழக்க மாட்டார். ஆனால், அதன் விபரங்களையாவது வாக்காளர்கள் அறிந்திருக்க வேண்டிய அவசியத்தை வோரா அறிக்கை நமக்கு உணர்த்துகிறது. மேலும் குற்றவியல் வழக்குகளை தெரிவிக்க கட்டாயப்படுத்துவதால், ஒரு வேட்பாளருக்கு இழப்பு (legal injury) ஏதுமில்லை. ஏனெனில், நமது நாட்டில் குற்றவியல் வழக்குகளின் விபரங்கள் பொது ஆவணங்கள். யார் வேண்டுமானாலும், தகுந்த காரணம் இருப்பின் வழக்கு விபரங்களைப் பெறலாம். வழக்குகளும் அனைவரின் பார்வைக்கு திறந்த நீதிமன்றங்களில்தான் நடக்கின்றது. எனவே, இவற்றில் ரகசிய காப்புறுதி ஏதும் இல்லை.

அதைப் போலவே கடைசியும் அதிக முக்கியமல்லாததுமான விபரம், வேட்பாளரின் கல்வித் தகுதி பற்றியது. நாடாளுவதற்கு கல்வித் தகுதி பெரிய தகுதியில்லையெனினும், இதனாலும் யாரும் பாதிக்கப்படுவதில்லை. ஏனெனில், வேட்பாளரின் கல்வி பற்றிய விபரங்களையும் யாரும் சட்டபூர்வமான முறையில் பெற முடியும். எனவே இதைப் பொறுத்தவரையும் ரகசியம் ஏதுமில்லை. எம்ஜிரும் கருணாநிதியும் ஏன் ஜெயலலிதாவும் பள்ளிக்கூடத்தோடு சரி என்பது அனைவரும் அறிந்ததே! ஆனால், இவர்களது அறிவு மற்றும் அரசியல் சாதுரியம் பட்டம் பல பெற்ற யாருடைய அறிவுக்கும் குறைந்ததல்ல என்பது வேறு விஷயம்.

அடுத்தது, வேட்பாளர், அவரது மனைவி/கணவர் மற்றும் சார்ந்திருப்போர் அரசிடமோ அல்லது பொது நிறுவனங்களிடமோ ஏதேனும் கடன் பட்டிருந்தால் அதைப் பற்றிய விபரங்கள். இந்த விபரங்களிலும் ரகசியம் ஏதும் இல்லை. தாங்கள் விரும்பினால் பொது நிறுவனங்கள் தங்களிடம் கடன்பட்டவர்கள் பற்றிய விபரங்களை பொதுவில் தெரிவிக்கலாம். வாக்காளர்கள் வேட்பாளர்களைப் பற்றிய ஒரு கருத்து கொள்வதற்கு இந்த விபரம் அவசியம்.

மேற்சொன்ன மூன்று விபரங்களையும் அந்த விபரங்கள் மீதான வேட்பாளரின் கருத்தையும் இணைத்து அனைத்து தேர்தல் அதிகாரிகளின் அலுவலகங்களிலும் பொதுப் பார்வைக்கு வைக்கலாம். வேட்பாளரின் கருத்து அவசியம் என்று நான் கூறுவது, ஒரு வேட்பாளர் தான் பட்ட கடன் மற்றும் தன் மீது உள்ள குற்ற வழக்குகள் பற்றிய தனது நியாயத்தையும் எடுத்துரைக்க ஒரு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு. காவலர்கள் பொய் வழக்கு தொடுப்பது ஒன்றும் புதிதல்லவே!

ஆனால், பிரச்னைக்குறியதாக நான் கருதுவது வேட்பாளர்களின் சொத்து விபரங்கள். ஒருவருக்கு சொந்தமான கட்டிடம், நிலம் போன்ற அசையா சொத்துகள் குறித்த விபரங்கள் பொது ஆவணமாக கிடைக்கும். இதில் பெரிய சிக்கல் இல்லை. ஒருவரின் பங்குப் பத்திரம் குறித்த விபரங்களும் தேவையானவை எனக் கூறலாம். எனெனில் ஒரு வேட்பாளருக்கு குறிப்பிட்ட நிறுவனத்தின் மீதான உரிமை மற்றும் ர்வத்தை (interest) வாக்காளர்கள் தெரிந்து கொள்வது அவசியம். (அமெரிக்க பாதுகாப்பு மந்திரி டோனால்ட் ரம்ஸ்பீல்ட் மந்திரியானவுடன் தனது பங்குகள் அனைத்தையும் விற்றார் என அறிகிறேன்)

ஆனால், சிக்கல் வேட்பாளர் தன்னிடமுள்ள நகை, ரொக்கம், மற்றும் வங்கியிலுள்ள சேமிப்பு இவற்றை வெளியிடுவதில் இருப்பதாக எண்ணுகிறேன். பொதுவாகவே எவ்வளவு நெருங்கிய நண்பர்களாயினும் நாம் ஒருவருக்கொருவர் வங்கியில் எவ்வளவு தொகை வைத்திருக்கிறோம் என்று கூறிக் கொள்ள விரும்புவதில்லை. ஏன், மனைவியிடமே வங்கியிலுள்ள தொகையை கூறுவதில் பத்து இருக்கிறது! சேரியமாகக் கூறினால், மும்பை போன்ற மாபியா ஆளுமைக்குட்பட்ட நகரங்களில் பலர் தங்களது பொருளாதார நிலமையை ரகசியமாக வைத்திருப்பது அவசியமானது. தமிழகம் போல இங்கு லாட்டரியில் பரிசு விழுந்தவர்களை விளம்பரப்படுத்துவது இல்லை. மும்பை மட்டுமல்லாமல் எங்குமே, வங்கிகளும் ஒருவரின் சேமிப்பில் உள்ள தொகையை தகுந்த நீதிமன்ற ஆணையில்லாமல் வெளிப்படுத்த சட்டம் இடம் கொடுக்கவில்லை. எனவே ஒருவரிடம் உள்ள அசையும் சொத்துகள் பொது ஆவணம் அல்ல. அந்த விபரங்களை ஒரு தனி மனிதர் தன்னிடமே வைத்திருக்க அவருக்கு உரிமை இருக்கிறது.

அவ்வாறெனில், ஒரு வேட்பாளர் ஏன் தனது சொத்து விபரங்களை அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்மானித்தது என்பதை ஆராய்வது அவசியம். நான் 'அசையும் சொத்து விபரங்கள் அளிப்பது தர்மசங்கடமான விஷயம்' என்ற கோணத்திலேயே தீர்ப்பினை அணுகினாலும், 'நீதிபதிகள் அரசு ஊழியர்கள் தங்கள் சொத்து விபரத்தை அளிக்க வேண்டிய கடமையோடு வேட்பாளர்களின் சொத்து விபரங்களை சேர்த்து குழம்பி விட்டனர்' என்றே கருதுகிறேன். எனெனில் 'அரசு ஊழியர்கள் தங்கள் சொத்து விபரங்களை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும்' என்ற நடத்தை விதியினை நீதிபதிகள் தங்கள் தீர்ப்புக்கு காரணமாக மேற்கோள் காட்டுகின்றனர். 'சட்டமன்ற உறுப்பினர்களும் அரசு ஊழியர்களே' என்று ஏற்கனவே நரசிம்ஹராவ் வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதையும் நினைவு கூறுகின்றனர். ஆனால் இங்கு சொத்து விபரங்களை அளிக்க கடமைப்பட்டவர் வேட்பாளர். தேர்தலில் வென்றவர் இல்லை. தேர்தலில் வென்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுபவரை தனது சொத்து விபரங்களை சமர்ப்பிக்கக் கூறுவதில் நியாயம் உண்டு. ஆனால் அந்த விபரங்களை விட பொது ஆவணமாக்குவதில் எனக்கு உடன்பாடில்லை.

நீதிபதிகள் மேலும் 'அமெரிக்காவில் செனட் தேர்தலுக்கான வேட்பாளர்கள் ஒவ்வொரு வருடமும் தங்கள் சொத்து விபரங்களை அளிக்கும் வழக்கம் உள்ளதாக எவ்வித மேற்கோள்களும் இல்லாமல் குறிப்பிடுகின்றனர். நான் தேடியவரையில் அப்படி ஒன்று இருப்பதாக தெரியவில்லை. அனைத்து வேட்பாளர்களும் தங்கள் தேர்தல் நிதி வரவு-செலவுகளை வெளியிடுகின்றனர். மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களே சொத்து விபரம் முழுவதும் அளிக்கின்றனர். எது எவ்வாறு எனினும், சொத்து விபரம் அளிப்பதன் நோக்கம் என்ன?

வழக்குரைஞர்கள் மீண்டும் மீண்டும் பல்வேறு வார்த்தைகளில் வலியுறுத்திய காரணங்கள், தீர்ப்பிலிருந்து நான் பார்த்த வரையில் 'வாக்காளர்களின் அறிந்து கொள்ளும் உரிமை' மற்றும் 'வேட்பாளர்களின் பின்புலம் மற்றும் செயல்கள் ஆகியவற்றை தெரிந்து கொள்வதால் ஜனநாயகம் காப்பாற்றப்படுகிறது' என்பதுதான். (right to know) இதனோடு 'வேட்பாளரைப் பற்றி முழுமையாக ஒரு வாக்காளர் தெரிந்து கொள்வதால், சரியான ஒரு முடிவெடுத்து தனது வாக்கினை தகுதியான நபர்களுக்கு அளிக்க முடியும்' என்பதனையும் சேர்த்துக் கொள்ளலாம். இந்த பொதுப்படையான காரணங்கள்தான் மீண்டும் மீண்டும் கூறப்படுகின்றனவே தவிர ஒரு வேட்பாளரின் சொத்து விபரத்தை தெரிந்து கொள்வதற்கான நேரிடையான காரணம் இல்லை.

ஆனால் நீதிபதிகள் கூறும் ஒரே காரணம், 'சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் குடிமகன் அவர்கள் தவறான வழியில் நடந்து அதிகமான பொருளீட்டியவர்களா என்று அறிவது அவசியம். இந்த விபரத்தை வேட்பாளரின் சொத்து விபரத்தை கோருவதன் மூலம் எளிதில் பெறலாம்' என்பதுதான். மேலும் ஒரு இடத்தில் நீதிபதிகள் கூறும் மற்றொரு காரணம், 'ஒரு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், அதிகமான அளவில் (tons of black money) கறுப்புப் பணத்தினை திரட்ட முடிகிறது. இவ்வாறு சொத்து விபரங்களை அவர்கள் அளிக்கக் கூறுவதன் மூலம், வாக்காளர் இவ்வாறு கறுப்புப் பணம் திரட்டியவரை மீண்டும் தேர்ந்தெடுக்க வேண்டுமா? என்று சிந்திக்க முடியும்'

இரண்டாவதாக நீதிபதிகள் கூறியது ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைப் பற்றியது. அவர்கள் ஏற்கனவே அரசு ஊழியர்கள் என்பதால் சொத்து விபரங்களை அளிக்க கடமைப்பட்டவர்கள். ஆனால், ஏன் முதன் முறையாக தேர்தலில் நிற்பவர்கள் அவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் முன்னரே இவ்வாறு கோர வேண்டும்? தவறான முறையில் பொருளீட்டியிருந்தால், அதை கணக்கில் காட்டாமல் கறுப்புப் பணமாகவே வைத்திருக்க வாய்ப்பு அதிகம். அதை யாரும் தெரிவிக்கப் போவதில்லை. ஏனெனில் அது தங்களை ஒரு குற்ற வழக்கில் உட்படுத்தும் செயல் என்பதை அறிவர். பிரச்னை, தேர்தலில் நின்று பார்ப்போமே என்று முன்வரும் நபர்களுத்தான். வெற்றியும் கிடைக்காமல், அவரது சட்டைப் பையில் எவ்வளவு பணமிருக்கிறது என்பதிலிருந்து அவர் மனைவி அணிந்திருக்கும் தாலியிலிருப்பது தங்கமா இல்லையா என்பதை ஊர் முழுவது தெரிந்து போவதில் பலருக்கும் தர்மசங்கடம் இருக்கும் என்று நான் அனுமானிக்கிறேன். நல்ல முறையிலும் பெரும் பொருளீட்டலாம். அதை திறந்து வைப்பது பொறாமைக் கண்களை ஒரு நபர் மீது செலுத்தாதா?

தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் மத்திய விஜிலன்ஸ் ஆணையர் (CVC) போன்ற அமைப்புகளிடம் வருடம்தோறும் தங்களின் சொத்து விபரங்களை சமர்ப்பிக்க செய்வதும் அவற்றை ரகசிய ஆவணங்களாக வைத்திருந்து 'ஒரு உறுப்பினர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக' ஆணையர் கருதுகையில் குற்ற வழக்கிற்கு பரிந்துரைப்பதும் ஊழலுக்கு எதிரான போதிய நடவடிக்கையாக இருக்கும்.

அரசியல்வாதிகளுக்கு எதிரான பொதுக்கருத்து நிலவுகிறது. உச்ச நீதிமன்றமும் அதற்கு இசைந்து தீர்ப்பு கூறியிருக்கிறது. இது நியாயமென்றால்....உச்ச, உயர் நீதிமன்ற நீதிபதிகள், அரசு அலுவலர்கள் மற்றவர்களும் தங்கள் சொத்து விபரத்தினை பொதுவில் வைப்பதும் நியாயமே. அப்படி யாராவது வேண்டி ஒரு பேராணை மனுவினை தாக்கல் செய்தால் 'பத்மாசுரனுக்கு வரம் கொடுத்த சிவன் போல' சிலர் நெளிய வேண்டி வரும்.

மும்பை
16/04/04

2 comments:

துளசி கோபால் said...

வாங்க வாங்க பிரபு. வணக்கம் . நலமா?

மதுரைக்கு வந்தப்ப உங்களைச் சந்திக்கணுமுன்னு இருந்தேன். ஆனா எப்படித் தொடர்பு
கொள்றதுன்னு தெரியாமப் போச்சு. அடுத்தமுறை விடறதில்லை:-)

நீங்க தேடித்தந்த 'முறுக்கு' என்னை இங்கே கொண்டு விட்டுருச்சு.
அதுக்காக நன்றி.

PRABHU RAJADURAI said...

Declaration of assets by judges

By Justice Kannan in

http://mnkkannan.blogspot.com/2009/04/declaration-of-assets-by-judges.html