‘மிதிவண்டியில் வீடுவீடாக சென்று பால் விற்கும் பால்காரர் ஒருவருக்கு அலைபேசி அழைப்பு வரும். தலையில் கட்டியிருக்கும் முண்டாசிலிருந்து அலைபேசியை எடுக்கும் அவர், ‘ஹலோ’ ‘ஹலோ’ என்று கத்திவிட்டு வெறுப்பாக காலி சட்டியில் அலைபேசியை வீசி எறிவார்’
தற்போதய சூழ்நிலையில் எவ்விதமான சுவராசியமுமில்லாத இத்திரைப்பட காட்சியமைப்பு, சில ஆண்டுகளுக்கு முன்னர் தொலைக்காட்சியில் அடிக்கடி காண்பிக்கப்பட்டு நம் மனதில் உறைந்து போன நகைச்சுவைக் காட்சி!
ஆனால், அந்த நகைச்சுவையின் பின்னே ஒளிந்திருக்கும் குரூரமான மனநிலைதான் இன்றும், ‘விலைமதிப்பற்ற அலைக்கற்றையை இலவசமாக சிலர் கொள்ளையடிப்பதா? வாங்கிக் கொள்ளட்டும் அதனை வசதியிருப்பவர்கள்’ என்று தர்ம அடிக்கும்பல் (lynching mob) போல ‘பொது ஏலம்’ ‘பொது ஏலம்’ என்று வலியிறுத்தும் ஊடகங்களை ஆட்டுவிக்கிறது.
சமூகத்தில் நடுநிலையில் இருப்பவர்களான பால் விற்பனையாளர்களையெல்லாம் தாண்டி அலைபேசிகள் இன்று அடிமட்டம், ஏன் எந்தமட்டத்திலும் இல்லாத பிச்சைக்காரர்கள் வரை புழக்கத்திற்கு வந்து விட்டது என்றால், அலைக்கற்றை ஏறக்குறைய இலவசம் என்ற அரசின் கொள்கையன்றி வேறெதுவும் இல்லை.
-oOo-
வளர்ச்சிக்கான முக்கியத் தேவை, தொலைதொடர்பும், போக்குவரத்தும் என்பது நமது நாட்டில் பல ஆண்டுகளாக உணரப்படவே இல்லை. தொலைபேசி என்பது ஆடம்பரமாகவே கருதப்பட்டு, சமூகத்தின் நடுத்தர வர்க்கத்தினருக்கே அவ்வசதி மறுக்கப்பட்டு வந்ததை நாற்பது வயதை கடந்தவர்கள் நன்கு அறிவார்கள்.
தொலைபேசி வசதியில்லாத ஒருவன், தான் நிற்கும் சமூக அடுக்கிலிருந்து இருந்து மேல் அடுக்கிற்கு செல்ல முன்பு எடுத்த முயற்சியில் இன்று தன் கையில் அலைபேசியை வைத்திருக்கும் ஒருவன், நூற்றில் ஒரு பங்கு முயன்றால் போதும். அதே வளர்ச்சியை எட்ட முடியும்.
வசதி வாய்ப்பு அற்றவர்களின் வளர்ச்சியில் அலைபேசி எவ்வாறு பங்கெடுக்க முடியும் என்பதை நான் அடிக்கடி நினைவு கூறும் ஒரு உதாரணத்தைக் கொண்டே விளக்க முடியும். மும்பையில் இருக்கையில் பல இளம் வழக்குரைஞர்கள் அலைபேசியை மட்டும் வைத்துக் கொண்டு தங்கள் கட்சிக்காரர்களுடன் அனைத்து தொடர்புகளையும் ஏற்ப்படுத்திக் கொண்டு தங்கள் தொழிலை புரிவதை கவனித்திருக்கிறேன். இவர்கள், வழக்குரைஞர் குடும்பங்களில் பிறந்தவர்கள் இல்லை. அலுவலகம் வாடகைக்கு பிடிக்கும் அளவுக்கு வசதியான குடும்பங்களில் பிறந்தவர்களும் இல்லை. பெரிய சட்ட நிறுவனங்களில் இணைந்து பணியாற்ற இவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது. வேறு ஒரு வழக்குரைஞரின் அலுவலகத்தில் போதிய வருமானம் இன்றி இளைய வழக்குரைஞராக பணியாற்றுவதற்கு அவர்களது குடும்ப சூழ்நிலை இடம் கொடுக்காது.
சமூகத்தின் கடைக்கோடியில் நிற்கும் இவர்களைப் போன்ற வழக்குரைஞர்களும், வசதிமிக்க எதிர்காலம் குறித்த நம்பிக்கையுடன் மற்ற வழக்குரைஞர்களுக்கு நிகராக தொழில் செய்ய முடிகிறதென்றால், அதற்கு காரணம் ஏறக்குறைய இலவசமாக கிடைக்கும் தொலைத் தொடர்பு வசதிதான்.
இந்த உதாரணம் அனைத்து தொழிலுக்கும் பொருந்தும். ஏன், இன்று எழுத ஆர்வமுள்ள எவருக்கும் தமது கருத்தினை இணையத்தில் பதிந்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடிகிறது. இதன் மூலம் கிடைக்கும் பிரபல்யத்தால், தங்களது ஆக்கத்தை புத்தகமாகவும் பதிப்பித்து அடுத்த கட்டத்துக்கு போவது எளிதாக உள்ளது. பெரிய எழுத்தாளர்கள் என்று அறியப்படுபவர்களோடும் சரிக்கு சரியாக நின்று வாசகர்கள் விவாதம் செய்கின்றனர். பத்து ஆண்டுகளுக்கு முன்னர், சென்னையில் இயங்கும் பத்திரிக்கை நிறுவனங்களோடு அறிமுகமில்லாத ஒரு எளிய எழுத்தாளருக்கு கிடைக்காத வாய்ப்பு தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள எழுத்தாளன் ஒருவனுக்கும் இன்று கிடைக்கிறது என்றால், அதற்குக் காரணம் தொலைத்தொடர்பு வசதியை மக்களிடமே விலை பேசும் கொள்கையை அரசு கை விட்டதினால்தான்.
-oOo-
தொலைபேசி நிறுவனங்களுக்கு விற்க்கப்படும் அலைக்கற்றை இறுதியில் விற்க்கப்படுவது நாட்டின் வளர்ச்சியில் தங்களின் பங்கினைப் பெற நம்பிக்கையுடன் காத்திருக்கும் சாதாரண மக்களிடம்தான். அலைபேசி சேவை கட்டணங்களை தீர்மானம் செய்ய ‘டிராய்’க்கு (TRAI) அதிகாரமுண்டு. தற்பொழுது நிலவும் போட்டியின் காரணமாக, விலை குறைவாக இருப்பதை கவனத்தில் கொண்டு விலை நிர்ணயிக்கப்படவில்லை. ஆயினும், எந்தக் காலத்திலும் டிராய் சேவையின் அதிகபட்ச விலை அல்லது குறைந்தபட்ச விலை ஆகியவற்றை நிர்ணயிக்கலாம். அவ்வாறு நிர்ணயிப்பது, சேவை நிறுவனம் அந்த சேவைக்காக செய்துள்ள முதலீட்டிற்கான நியாயமான வட்டி விகிதத்தின் அடிப்படையில் இருக்க வேண்டுமென டிராய் நெறிமுறைகள் கூறுகின்றன.
அவ்வாறான நிலையில், அலைக்கற்றையை பெறுவதற்கு ஒரு நிறுவனம் அரசிற்கு செலுத்தும் தொகையையும் அதன் முதலீடாக கணக்கில் எடுக்கப்படும். அலைக்கற்றை இலவசமாக அளிக்கப்படும் பட்சத்தில், சேவை நிறுவனத்தின் செலவினங்கள் மட்டுமே முதலீடாக கணக்கில் எடுக்கப்படும். எனவே, 1.75 லட்சம் கோடிக்கு அலைக்கற்றையை விற்று இருக்க முடியும் என்றால், அந்த கோடியை இறுதியில் செலுத்தப் போவது, சேவையை பயன்படுத்தும் சாதாரண மக்கள்தான்.
டிராய் இவ்வாறு சேவைக்கட்டணத்தை நிர்ணயிக்கையில், அலைக்கற்றையை குறைந்த விலைக்கு பெற்ற நிறுவனம், தான் லஞ்சமாக செலுத்திய பணத்தை முதலீடாக காண்பிக்க முடியாது. ஏன், உரிமம் பெற்ற நிறுவனம் தனது பங்குகளை வேறு நிறுவனத்திற்கு அதிக விலைக்கு விற்றதையும் செலவுத் தொகையாக காட்ட முடியாது. அனைத்தும் விதிப்படி நடக்கும் என்ற ஒரு சட்டக் கற்பனையில் (legal fiction), அலைக்கற்றைக்கு கொடுக்கப்படும் லஞ்சமானது, சேவை நிறுவனங்களின் லாபத்திலிருந்து கொடுக்கப்படும் பங்குதானேயொழிய வாடிக்கையாளர்களின் பணமல்ல, என்பதுதான் உண்மை!
பேருந்து வழித்தட உரிமங்களையே எடுத்துக் கொள்வோம். மதுரையிலிருந்து தேனி, கம்பம் செல்லும் வழித்தடத்தின் மதிப்பு ஒரு கோடியை எட்டுகிறது. ஆனால், வழித்தடமானது இலவசமாகவே அரசால் முதலில் வருபவருக்கு முன்னுரிமை அடிப்படையில் அளிக்கப்படுகிறது. வழித்தட உரிமையை ஏலம் விட்டால், அரசுக்கு பல கோடி கிடைக்கும்தான். ஆனால், இதுதான் பேருந்து கட்டணம் என்று அரசு நிர்ணயிக்க முடியாது.
தற்பொழுது, எனக்குள்ள பயம் அலைக்கற்றை வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் யாராவது, தமிழகத்தில் வழங்கப்பட்டுள்ள பேருந்து வழித்தட உரிமங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கு தொடர்ந்து விடுவார்களோ என்பதுதான்!
மதுரை
17/02/1
5 comments:
ஆனால், இதுதான் பேருந்து கட்டணம் என்று அரசு நிர்ணயிக்க முடியாது.//
அப்போ TRAI எதுக்குங்க சாரே !
டிராய்க்கு பல பணிகள் உள்ளன அவற்றில் ஒன்று கட்டணங்களை நிர்ணயிப்பது. பொது ஏலம் என்றால் குறைந்த கட்டணத்தை நிர்ணயிக்க முடியாது
அடுத்து, எதிர்வினைகள் நாகரீகமான மொழியில் இருத்தல் நலம்.
தற்பொழுது மத்திய அரசு, இந்தக் கட்டுரையிலும் ஏற்கனவே எழுதப்பட்ட அலைக்கற்றை தீர்ப்பும் கொண்டாட்டங்களும் என்ற பதிவிலும் உள்ள காரணங்களைக் கூறி தீர்ப்பினை மறுபரிசீலனை செய்ய கோரியுள்ளது
http://www.thehindu.com/news/national/article2954889.ece?homepage=true
நான் அச்சம் தெரிவித்தபடி சுரங்க உரிமம் பற்றி டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பால், 2ஜி தீர்ப்பினை மறுபரிசீலனை கேட்க வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு
http://articles.timesofindia.indiatimes.com/2012-02-28/india/31107178_1_mining-lease-2g-fcfs
மறுபரிசீலனை செய்ய விடாமல் மாபியா கும்பல் டெல்லியில் நோட்டுகளை இறக்கும் !
Post a Comment