3.2.12

அலைக்கற்றை தீர்ப்பும் கொண்டாட்டமும்!


சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திலுள்ள அதன் முக்கிய கட்டிடத்தின் ஒரு பகுதியில் வழக்குரைஞர்களுக்கான அறைகள் அமைந்துள்ளன. அந்த அறைகள் போதுமானதாக இல்லை என்பதால் புதிதாக வழக்குரைஞர் வளாகம் ஒன்று கட்டப்பட்டது. புதிய வளாகத்திலுள்ள அறைகளும் காணாத நிலையில், அனைவரிடமும் மனுக்களைப் பெற்று அதற்கான குழு ஒன்று தனது நடைமுறைப்படி அறைகளை ஒதுக்கியது.

அறைகளைப் பெறுவதற்காக போட்டி நிலவிய அந்தச் சூழலில், அனைவருக்கும் சமவாய்ப்பளிக்கும் வண்ணமும், அறைகளை கட்டிய அரசிற்கு முழு வருமானம் பெரும் முறையுமாக ஒன்று இருக்குமாயின் அது பொது ஏலமாகத்தான் இருக்க முடியும்.

அப்படியான ஒரு பொது ஏலமானது அறைகளை விரும்பும் அனைவருக்கும் சம வாய்ப்பளித்திருக்கும். மற்றும், நகரின் மிகமிக முக்கியமான இடத்தில் அரசிடம் உள்ள மிகச் சொற்பமான கட்டிடத்திற்கு, அதன் மதிப்பிற்கு ஈடான வருமானத்தை அரசிற்கு பெற்று தந்திருக்கும்.

ஆனாலும், புதிதாக கட்டிய வழக்குரைஞர் அறைகள் பொது ஏலத்தில் விடப்படவில்லை.

ஏனெனில், ஏற்கனவே உயர்நீதிமன்றத்தின் முக்கிய கட்டிடத்தில் அமைந்துள்ள அறைகள், சந்தை மதிப்பிலான வாடகை இன்றி, உயர்நீதிமன்ற குழு நிர்ணயித்த வாடகையினை கொடுத்து வரும் சூழலில், புதிய அறைகளை பெரும் வழக்குரைஞர்களிடம் இருந்து சந்தை மதிப்பிலான வாடகை பெறுவது, அவர்களுக்கிடையேயான சமநிலையை (Level Playing Field) பாதிக்கும். அதாவது ஒரு வழக்குரைஞர் தனது கட்சிக்காரரிடம் இருந்து பெறும் கட்டணத்தில், அந்த வழக்கிற்கான அலுவலக செலவும் அடங்கும். ஒரே வகையிலான சேவைக்கு, தனது கூடுதலான அலுவலக செலவினால் புதிய அறையில் இருக்கும் வழக்குரைஞர் கூடுதல் கட்டணம் நிர்ணயிக்க நேரிடும், அல்லது தனது நிகர கட்டணத்தை குறைத்துக் கொள்ள வேண்டியிருக்கும். எனவே ஏற்கனவே இருந்து கொண்டிருக்கும் வழக்குரைஞர்களிடம் என்ன வாடகை நிர்ணயிக்கப்படுகிறதோ, அதையேதான் புதிய அறைகளுக்கும் நிர்ணயிப்பது நியாயமான செயலாக இருக்க முடியும்.

வழக்குரைஞர்கள் தங்களது தொழிலை கைக்கொள்ளுவதற்கு, அரசிடம் அரிதாக உள்ள முக்கிய இடம், குறைந்த வாடகைக்கு கொடுக்கப்பட முடியுமா? பொது ஏலத்தில் அறைகள் கொடுக்கப்படாதலால், எவ்வளவு நட்டம்?

அது நட்டம் இல்லை என்பதுதான் நிதர்சனம்.

தனது குடிமக்களுக்கு நீதியை வழங்க வேண்டியது அரசின் முக்கிய கடமை. நீதியைப் பெறுவதற்காக பல குடிமக்களுக்கு வழக்குரைஞரின் உதவி தேவைப்படுகிறது. ஒரு நாளைக்கு ஐந்து லட்சம் கட்டணம் பெறும் வழக்குரைஞர்கள் முதல் ஐம்பது ரூபாய் வாங்கும் வழக்குரைஞர்கள் வரை இருக்கிறார்கள். ஆனால், அந்த ஐம்பது ரூபாயைக் கூட கொடுக்க முடியாத மக்களும் நமது நாட்டில் உண்டு. அவர்களுக்கும், நீதியை அளிப்பதற்காகவே, அரசு இலவச சட்ட உதவியை அளிக்கிறது. அதாவது, வழக்குரைஞர் கட்டணத்தை தானே செலுத்த வேண்டிய கட்டாயம், மக்கள் நலம் பேணும் அரசிற்கு (Welfare State) உண்டு.

இந்தச் சூழ்நிலையில் சந்தை மதிப்பில் வழக்குரைஞர்கள் அறைகள் ஒதுக்கப்பட்டால், நூறு ரூபாய் கட்டணம் வாங்கும் வழக்குரைஞர் நூற்றி ஐம்பது ரூபாயும், ஐம்பது ரூபாய் வாங்கிய வழக்குரைஞர் நூறு ரூபாயும் வாங்க நேரிடும். அதுவரை ஐம்பது முதல் தொண்ணூற்று ஒன்பது ரூபாய் வரை கட்டணம் செலுத்த வசதி படைத்த குடிமக்களும் இலவச சட்ட உதவி மையத்தை அணுக வேண்டிய கட்டாயம் ஏற்ப்படும். இறுதியில் சந்தை மதிப்பில் பெற்ற வாடகையினை அரசு இலவச சட்ட உதவி மைய வழக்குரைஞர் கட்டணமாக திருப்பிச் செலுத்தும்!

-oOo-

சென்னை மாநகராட்சி அதற்குச் சொந்தமான இடங்களில், கட்டிடங்களை கட்டி கடைகளாக வாடகைக்கு விட்டுள்ளது. அந்தக் கடைகளுக்கும் போட்டி நிலவும் சூழலில், பொது ஏலம் நடத்தி சந்தை மதிப்பினை வாடகையாக பெறுகிறது. ஆனால், அதற்கான காரணம் இருக்கிறது.

வீட்டு வசதி வாரியம், தான் கட்டும் வீடுகளையும், மனைகளையும் அதிகளவில் மனுக்கள் இருக்கும் சூழலில் லாட்டரி (Lot) மூலம் ஒதுக்குகிறது. அதற்கான காரணம் தனியே இருக்கிறது.

அதைப் போல, முதலில் வருபவருக்கு முன்னுரிமை ( First come First serve) என்ற முறையும் நமது நாட்டில் சுதந்திரம் கிடைத்த நாள் முதலே ஏற்றுக் கொள்ளப்பட்டு நடைமுறையில் இருக்கும் ஒரு முறைதான். உதாரணமாக சிறுகனிம வளங்களை (Minor Minerals) எடுப்பது சம்பந்தமான உரிமங்கள் இந்த முறையில் கொடுக்கப்படுவதுண்டு. அப்படியான முறையில் உரிமங்களை அளிப்பதற்கும் விசேட காரணங்கள் உண்டு. அந்த முறையும் மற்ற முறைகளைப் போலவே, சமத்துவ உரிமையை (Right to equality) பாதிப்பதாக நீதிமன்றங்கள் கருதியதில்லை.

-oOo-

எந்த எந்த உரிமம் எந்த எந்த முறையில் கொடுக்கப்படலாம் என்பது அரசின் கொள்கை முடிவு. அரசு நிர்வாகம் மக்களுக்கு நேரிடையாக பதில் சொல்ல கடமைப்பட்டது. பல்வேறு காரண காரியங்களை ஆராய்ந்த பின்னரே அரசு ஒரு கொள்கை முடிவினை தீர்மானிக்கிறது. எனவேதான், நீதிமன்றங்கள் அரசின் கொள்கை முடிவில் தலையிடுவதில்லை.

கண்மாய் பாதுகாப்பு சட்டத்தில் கூறியுள்ளவாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் குடிசை கட்டி வாழ்பவர்களை, அகற்றி நீர்வளத்தினைப் பெருக்குங்கள் என்று எளிதில் நீதிமன்றங்கள் நிர்வாகத்திற்கு கட்டளையிடலாம். ஆனால், அரசால் அப்படி கண்ணை மூடிக்கொண்டு தனது குடி மக்களை தூக்கி எறிந்து விட முடியாது. பல்வேறு காரணிகளையும், விளைவுகளையும் சீர்தூக்கி பார்க்க வேண்டும். எனவேதான் நீதிமன்றங்கள் அரசு நிர்வாகத்தில் எளிதில் தலையிடுவதில்லை.

இதன் காரணமாகவே, இனி அலைக்கற்றை (Spectrum) உரிமத்தினை பொதுஏலம் மூலமாகவே அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம், அதற்கெனவே அமைக்கப்பட்ட டிராய் (TRAI) க்கு கட்டளையிட்டுள்ளது எவ்வளவு தூரம் சரியான ஒரு தீர்ப்பாக இருக்க முடியும் என்பதில் எனக்கு ஐயமுண்டு!

ஏனெனில், 2003ம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான அரசு புதிய உரிமங்களை ‘முதலில் வருபவருக்கு முதலில் உரிமம்’ என்ற அடிப்படையில் அளிக்க வேண்டும் என்று தீர்மானித்ததற்கு பிரத்யேக காரணங்கள் உண்டு. முக்கியமாக அரசு, அலைக்கற்றை உரிமத்தினை, தகவல் தொடர்பு மூலம் வளர்ச்சிக்கான ஒரு காரணியாகத்தான் பார்த்ததேயொழிய அரசின் வருவாயை பெருக்கும் ஒரு வளமாக கருதவில்லை.

’How would you empower citizens? There could be all sorts of technologies – one is cellphonesஇக்பால் காதிர் என்ற வங்காள தேச தொலைதொடர்பு தொழில்முனைவோர் கூறிய மேற்க்கண்ட கருத்தினை இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் தனது தலையங்க பக்கத்தில் பிரசுரித்துள்ளதற்கு காரணமுண்டு!

இதனை உணர்ந்து கொண்டதாலேயே, டிராய் 2007ம் ஆண்டிலும், சிறு நகர, கிராமப்புறங்களிலும் அலைபேசிச் சேவை பரவலாக்கப்பட வேண்டும் என்றால் 2ஜி அலைக்கற்றை உரிமம் மட்டுமாவது ஏற்கனவே நிலுவையில் இருந்து வரும் முறையிலேயே அளிக்கப்பட வேண்டும் என்று முடிவு எடுத்தது. ஏற்கனவே அதே முறையில் உரிமம் பெற்று அலைபேசி சேவை அளித்து வரும் நிறுவனங்களோடு புதிதாக உரிமம் பெறும் நிறுவனங்கள் போட்டியிட வேண்டுமாயின், புதிய உரிமங்களுக்குமான கட்டணமும் 2001ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணமாகவே இருக்க வேண்டும் என்றும் முடிவெடுத்தது. டிராயின் இந்த முடிவு தவறான நோக்கத்துடன்  (Ulterior Motives) எடுக்கப்பட்டது என்றோ அல்லது கெட்ட எண்ணத்துடன் (Malafide) எடுக்கப்பட்டது என்றோ உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறவில்லை. அப்படியான ஒரு வாதமும் வைக்கப்பட்டதாக தெரியவில்லை.


2003ம் ஆண்டு தொடங்கி பொது ஏலம் மூலம் கிடைக்கும் அபரிதமான பணத்தை துறந்து உரிமங்கள் அளிக்கப்பட்டு வந்த சூழ்நிலையில், 2ஜி உரிமங்கள் மட்டும் பொது ஏலம் மூலம் அளிக்கப்படாதலால் அரசுக்கு 1.7லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு என்றால், அந்தக் கூற்று பிழையானதாகும் (Fallacious). எனினும் உச்ச நீதிமன்றம் தனது விசாரணையிலும் தீர்ப்பிலும் தணிக்கையாளரின் (CAG) அறிக்கைக்குள் செல்லவில்லை!

வேடிக்கை என்னவென்றால், 2001ம் ஆண்டில் மத்திய அரசு பொது ஏலம் தவிர்த்து குறைந்த தொகைக்கு அலைக்கற்றை உரிமத்தை வாரி வழங்கி அரசுக்கு 11,000/- கோடி நட்டம் ஏற்ப்படுத்தி விட்டதாக நமது உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு உட்பட நீதிப்பேராணை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அரசின் வாதம் பொது மக்களின் நலனை முன்னிட்டு தொலை தொடர்பு வளர்ச்சிக்காக பொது ஏலம் கூடாது என்பது அரசின் கொள்கை முடிவு என்பதால் நீதிமன்றங்கள் அதில் தலையிட முடியாது என்பதாகும். இவ்வாறு வாதிட்டது காங்கிரஸ் அரசு அல்ல. மாறாக தற்பொழுது 1.7லட்சம் இழப்பு என்று உரக்கக் கத்தும் பிஜேபி அரசு!

பிஜேபி அரசுக்கு எதிராக 2001ம் ஆண்டில் 11ஆயிரம் கோடி என்று நமது உயர்நீதிமன்றத்தில் எடுத்து வைக்கப்பட்ட வாதம், மக்கள் நலனுக்கான கொள்கை முடிவிற்கு எதிராக பொது நலவழக்கா? என்று நிராகரிக்கப்பட்டதை யார் இன்று நினைவில் கொள்ளப் போகிறார்கள்.

எனவே, கடந்த பத்து ஆண்டுகளாக இரு அரசுகளாலும் பொதுமக்களின் நலனை முன்னிட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு நடைமுறையினை உச்ச நீதிமன்றம், கூடாது என்பதோடு ஏற்கனவே அளிக்கப்பட்ட உரிமங்களையும் யார் தவறு செய்தவர்கள் யார் உரிமையோடு பெற்றவர்கள் என்று முழுவதும் ஆராயாமல் மொத்தமாக ரத்து செய்தது, ஒரு சரியான தீர்ப்பாக இருக்க முடியாது என்பது என் பணிவான கருத்து. இனி நிகழப் போகும் குழப்பங்களாலும், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படப் போகின்ற மறுஆய்வு (Review) மனுக்களாலும் எனது கருத்து நிலைபெறும் (vindicate) என்று நம்புகிறேன்.

-oOo-

1.7 லட்சம் கோடி!

இந்த தொகைதான் ராஜாவுக்கு எதிராக ஊடகங்களையும், மக்களையும் அதன் விளைவாக நீதிமன்றங்களையும் கொதித்து எழ வைத்தது. மற்றபடி இந்தத் தொகையினை மறந்துவிட்டு பார்த்தால், அலைக்கற்றை ஊழல் என்பது இந்தியா எங்கும் வியாபித்திருக்கும் ஊழல்களில் மற்றுமொரு ஊழல் என்ற வகையிலேயே இருந்திருக்கும்.ராஜா எவ்வாறு சில நிறுவனங்களுக்கு சார்பாகவும், சில நிறுவனங்களை போட்டியிலிருந்து விலக்கும் வண்ணமும் முடிவுகளை எடுத்தார் என்பதை உச்ச நீதிமன்றம் அடுக்கடுக்கான காரணங்களை தனது தீர்ப்பில் கூறியுள்ளது. தீர்ப்பின் முடிவுகள் ராஜா மீது நடைபெறும் குற்ற வழக்கை பாதிக்காது என்று நீதிபதிகள் கூறியிருப்பினும், அமர்வு நீதிமன்றத்தை பொறுத்தவரை ராஜாவின் விதி மூடி முத்திரையிடப்பட்டது போலவே தோன்றுகிறது. ராஜா தன் மீதான குற்ற வழக்கிலிருந்து விடுதலையடைவது, இனி இறுதியில் அவர் தனது மேல்முறையீட்டிற்காக அணுகப் போகிற உச்ச நீதிமன்றத்தின் கைகளில்தான் உள்ளது.

ஆயினும், சில நிறுவனங்களுக்கு சார்பாக ராஜா செயல்பட்டார் என்பது தீர்ப்பிலிருந்து உறுதியாகத் தெரிந்தாலும், ஏற்கனவே கூறிய காரணங்களால், அவர் நேர்மையாக நடந்து கொண்டிருந்தாலும் அரசுக்கு இதே வருவாய்தான் கிடைத்திருக்கும்.

ஏனெனில் தொடர்ந்த அரசின் கொள்கைப்படியும், டிராய் நெறிமுறைகள்படியும், யார் உரிமம் பெற்றிருந்தாலும் தற்பொழுது கிடைத்திருக்கும் உரிமத் தொகைதான் வசூலிக்கப்பட்டிருக்கும்.

எனவே, ராஜா நேர்மையாக நடந்து கொண்டிருந்தால், பொது ஏலம் தவிர்த்த உரிமம் வழங்குதல் முறையால் அரசுக்கு இழப்பு என்பது வெறும் கோஷமாகவே முடிந்து போயிருக்கும்.

ராஜாவின் தவறுகளுக்காக, அரசு சில காரணங்களுக்காக கடந்த பத்தாண்டுகளாக கைக்கொண்டு வரும் உரிமம் முறையை மாற்றக் கூறுவது, அலைக்கற்றையை ஒரு வருவாய் ஈட்டும் வளமாக பார்ப்பதும் சரியான ஒரு செயலாக இருக்கப் போவதில்லை. எதிர்காலத்தின் இதன் விளைவுகளை நாம் உணரலாம்.

மற்றபடி பொது ஏலத்திலும், உச்ச நீதிமன்றம் பட்டியலிட்ட ராஜாவின் மீறுதல்கள் மிகச் சாதாரணம். போபார்ஸ் ஊழலோ, ஹெச்டிடபிள்யூ நீர்மூழ்கி ஊழலோ, காமன்வெல்த் போட்டி ஊழலோ அல்லது இந்தியாவெங்கும் நித்தம் நித்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஊழல்களோ பொது ஏலமோ இல்லை ஒப்பந்தப் புள்ளி முறையிலான தேர்ந்தெடுப்பில்தான் நடைபெறுகின்றன.

தமிழகத்தினைப் பொறுத்தவரை ஆளும்கட்சியின் ஆதரவு பெறாத எவரும், டாஸ்மாக் மதுக்கடை ஏலத்திலோ அல்லது பொதுப்பணித்துறை ஏலத்திலோ வெற்றி பெறவே முடியாது என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். அவற்றைத் தடுக்க ஏதும் இயலாத ஊடகங்கள், பொது ஏலமே தீர்வு என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினைக் கொண்டாடுவது குரூர நகைச்சுவை!

நீதித்துறையில் நேர்மையின் உருவமாக விளங்கிய ஏ.கே.கங்கூலி நேற்றோடு ஓய்வு பெற்று விட்டார். உச்ச நீதிமன்றத்தை விட்டு தன் வீட்டிற்கு செல்லும் வழியின், முன்னாள் காங்கிரஸ் மத்திய அமைச்சர் சதீஷ் சர்மாவிற்கு எதிராக 1996ல் முன்னாள் நீதிபதி குல்தீப் சிங் கூறிய தீர்ப்பை கொண்டாடிய ஊடகங்களும் நினைவுக்கு வந்திருக்கும்.

ஆனால் 1999ல் அந்த தீர்ப்பிற்கு என்ன நேர்ந்தது என்பதும் நினைவுக்கு வந்த கங்கூலி ஒரு கணம் மனதிற்குள் புன்னகைத்திருப்பார்.

Anyway, well done Sir, your parting judgment is like the other Ganguly reaching his century with a sixer!

மதுரை
03/02/12


9 comments:

Prabhu Rajadurai said...

அலைக்கற்றை தீர்ப்பு நகல் வேண்டுவோர் இங்கு சுட்டவும்
http://supremecourtofindia.nic.in/outtoday/39041.pdf

Prabhu Rajadurai said...

Hindu has come up with a wonderful piece of article on Justice Ganguly's contribution to the march of law at http://www.thehindu.com/news/national/article2854684.ece
It was rumoured in Court circles that but for Ganguly's proactiveness, this 2G would not have seen its logical end and there is a possibility that it may lose its steam after his retirement.

Prabhu Rajadurai said...

A katturai in support of my view

http://www.katturai.com/?p=2158#comment-828

Prabhu Rajadurai said...

மேற்கண்ட கட்டுரையின் கருத்தோடு தொடர்புடைய சண்டே டைம்ஸ் பத்தி
"Think of the spectrum like the village commons" by Gurcharan Das in Sunday Times
http://blogs.timesofindia.indiatimes.com/men-and-ideas/entry/think-of-the-spectrum-like-the-village-commons

Prabhu Rajadurai said...

தற்பொழுது மத்திய அரசு, இந்தக் கட்டுரையிலும் தொடர்ந்து எழுதப்பட்ட ஏன்.ஆ.ராசா கடவுள் என்ற பதிவிலும் உள்ள காரணங்களைக் கூறி தீர்ப்பினை மறுபரிசீலனை செய்ய கோரியுள்ளது
http://www.thehindu.com/news/national/article2954889.ece?homepage=true

Prabhu Rajadurai said...

The Supreme Court today admitted Government's plea seeking review of its 2G ruling that natural resources should be allotted to private
companies only through "auction"

http://news.outlookindia.com/items.aspx?artid=759538

Prabhu Rajadurai said...

SC signals rethink on auction route for all natural resources
http://timesofindia.indiatimes.com/india/SC-signals-rethink-on-auction-route-for-all-natural-resources/articleshow/14813548.cms

Kalvetu Kalvetu said...

நல்ல கட்டுரை பிரபு,
ஒருவேளை யார் மக்களுக்கு மிகக்குறைந்த விலையில் சேவையைக் கொடுக்க உத்திரவாதம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு என்று ஏலமுறையை வைக்கலாமே.

உதாரணம்: மாதம் 10 மணி நேரங்கள் அழைப்புகள் மர்றும் 20 மெகா பட் இணையத் தரவிறக்கதிற்கு மொத்தம் 100 ரூபாய் என்று நிர்ணயித்து அதில் யார் குறைவான தொகைக்கு கொடுக்க முன்வருகிறார்களோ அவர்களுக்கு என்று.

இதிலும் சிண்டிகேட் அமைப்பார்கள். இருந்தாலும் தொழில் ரீதியாக கட்டுபடியாகும் ஒரு குறைந்தபடச விலையை அரசி நிர்ணயித்து முயற்சி செய்யலாமே?

Prabhu Rajadurai said...

The Supreme Court, hearing the Presidential Reference on the ‘2G judgment,’ said the first come, first served (FCFS) policy for allotment of spectrum was fine but its implementation was flawed.
http://www.thehindu.com/todays-paper/tp-national/article3715073.ece