4.2.12

சோனியா தேசத்துரோகியா?


Sonia's govt has not only looted the nation, it has also brought disrepute to a non-controversial Army and its general - the greatest treason” S.Gurumurthy in Twitter

தினம் தினம் இந்தியாவின் அனைத்து உயர்நீதிமன்றங்களிலும் எழுப்பப்படும் ஒரு சாதாரண சட்டப்பிரச்னை எப்படி சோனியா மீதான தேசத்துரோக குற்றமாக உருப்பெருகிறது என்பதை பார்க்கும் பொழுது, இந்தியாவில் கவலைப்படுவதற்கும், நீதிமன்றங்கள் தங்களது பொன்னான நேரத்தை செலவழிப்பதற்கும் வேறு பிரச்னைகளே இல்லையா, என்று தோன்றுகிறது.

இன்று ஆங்கில பத்திரிக்கைகளின் முதல் பக்கத்தில் பெரிய எழுத்துக்களில், மத்திய அரசு ஏதோ படுகொலை செய்து விட்டு உச்ச நீதிமன்றத்தின் முன் கையைப் பிசைந்து கொண்டு நிற்பதைப் போலவும், நீதிபதிகள், ’இத்தோடு நீ தொலைந்தாய் போ’ என்று எச்சரித்துக் கொண்டிருப்பதைப் போலவும் தலைப்புச் செய்திகள்!



இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி வி.கே.சிங், 1951ம் ஆண்டில் பிறந்தவர். ஆனால் தேசிய பாதுகாப்பு கல்லூரி (National Defence Academy) சேர்வதற்கான தனது மனுவில் தனது பிறந்த வருடத்தை 1950 என ‘தவறுதலாக’ அளிக்க அந்த வருடமே அவர் பிறந்த வருடமாக அவரது பணிப்பதிவேட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் பணியில் சேர்வதற்கு முன்னரே, பிறந்த வருடத்தை சரி செய்வதற்காக மனு கொடுக்கப்பட்டதாகவும், ஆனால் இது நாள் வரை தவறு சரி செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டதால் வி.கே.சிங் இந்த வருடமே பணிமூப்பு அடைந்து விடுவார்.

சரி செய்யப்பட்டால் அடுத்த வருடம்தான் பணிமூப்பு அடைவார். அவ்வாறு அவருக்கு மேலும் ஒரு ஆண்டு கிடைக்கும் பொழுதில் அவருக்கு பின்னே ‘இதோ அடுத்து நாம்தான் தலைமை தளபதி’ என்று காத்திருக்கும் நபர் முதல் அவருக்கு பின்னே மற்றவர் என சங்கிலித் தொடர் போல நின்று கொண்டிருக்கும் பலரின் எதிர்பார்ப்பில் மண்!

முன்னரே இந்தப் பிரச்னை தீர்க்கப்பட்டிருந்தால், பலர் இவ்வளவு ஆர்வமுடன் இருந்திருக்க மாட்டார்கள். ஆனால், கடைசி நேரத்தில் செய்யப்படும் மாற்றம் ராணுவத்தின் மற்ற தளபதிகளிடையே அதிருப்தியை ஏற்ப்படுத்தலாம் என்பதால் அரசு கையை பிசைந்து கொண்டு நிற்கிறது.

இந்தப் பிரச்னை அனைத்து அரசு அலுவலகங்களிலும் இருப்பதுதான். உச்ச நீதிமன்றமும் சமீபத்தில் இப்படி கடைசி நேரத்தில் பிறந்த தேதியை மாற்றி பணிக்காலத்தை நீட்டித்துக் கொள்வதை தடுத்து பல தீர்ப்புகளைக் கூறியுள்ளது.

வி.கே.சிங் பிரச்னையில் ’அவர் உடனடியாக தேதியை மாற்ற மனு கொடுத்து விட்டார். ஆனால், ராணுவம்தான் அதனை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டது’ என்ற வாதம் அவருக்கு சாதகமாக இருந்தாலும், இவ்வளவு நாட்கள் கழித்து நீதிமன்றத்தை அணுகியதால் (Latches) பரிகாரம் ஏதும் அளிக்க இயலாது என்று கூறும் வண்ணமும் பல நீதிமன்ற தீர்ப்புகள் உள்ளன.

எனவேதான், அரசு தலைமை வழக்குரைஞர் வாஹனாவாட்டி அவர்கள், தற்சமயம் சிங் அவர்களின் பிறந்த தேதியை அவரது பணிப்பதிவேட்டில் மாற்ற இயலாது என்று சட்டக்கருத்தினை அரசுக்கு தெரிவித்துள்ளார்.



வாஹனவாட்டியின் சட்டக்கருத்தினை ஏற்றுக் கொண்ட அரசும் தளபதியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

இரண்டு வருடம் தலைமை தளபதியாக பணியாற்ற கிடைத்த வாய்ப்பை ஒரு பெருமையாக ஏற்றுக் கொண்டு தளபதி கெளரவமாக பதவி மூப்பு அடைந்திருக்கலாம். ஆனால், நீதிமன்றத்தை அணுகி விட்டார்.

எது எப்படியிருப்பினும், ராணுவ சேவை விதிகளில் கூறியுள்ளபடியும் ஏற்கனவே பிறந்த தேதி மாற்றுவது குறித்து உச்ச நீதிமன்றம் கூறியுள்ள பல்வேறு தீர்ப்புகளின் அடிப்படையில் ஒரு சட்டப்பிரச்னையாக தீர்க்க வேண்டிய ஒரு விடயம், ஊடகங்களின் அளவுக்கு மீறிய ஆர்வத்தாலும், பாரதீய ஜனதா கட்சி தலைவர்கள் சிலரின் பொறுப்பற்ற பேச்சுகளாலும் அரசியலாக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், இதே பிஜேபி அரசுதான், இந்தியாவின் அறிவுஜீவி அட்மிரல் என்று போற்றப்பட்ட கப்பற்படை தலைமை தளபதியான (Chief of Naval Staff) விஷ்ணு பகவத்தை அவரது பணிக்காலத்திலேயே பதவி நீக்கம் (Dismiss) செய்தது. சிறீகிருஷ்ணா கமிஷன் முன்னர் கம்யூனிஸ்ட் கட்சிக்காக ஆஜரான அவரது மனைவியான நிலோபரை ‘அரை-முஸ்லீம்’ என்று தேவையின்றி குறிப்பிட்டு அரசுக்கு கடிதமெழுதிய தளபதிக்கு பதவி உயர்வும் கொடுத்தது!



ராணுவத்தை அரசியலாக்கியதில் காங்கிரசை விட பிஜேபிக்கு பெரும் பங்கு உண்டு.  

-oOo-

நேற்று கூட நீதிமன்றத்தில் நடைபெற்றது ஒரு சாதாரண விடயம். தளபதியின் மனுவை தள்ளுபடி செய்வதற்கு அரசு தன்னுடைய காரணத்தை கூறியிருக்க வேண்டும். மாறாக, தலைமை அரசு வழக்குரைஞரின் ஆலோசனையின்படி தள்ளுபடி செய்ததாக குறிப்பிட்டுள்ளார்கள். வழக்குரைஞர் கூறுவது ஆலோசனை. அதன் அடிப்படையில் ஏன் தளபதியின் மனுவை ஏற்றுக்கொள்ள முடியாது எனக்கூற வேண்டும். இல்லையென்றால், அரசு வழக்குரைஞர் ஏதோ முடிவெடுக்கும் அதிகாரம் படைத்தது போல ஆகி விடும்!

அப்படி ஒரு விரும்பத்தகாத நிலையினை ஏற்றுக் கொள்ளாத நீதிபதிகள், ‘இந்த உத்தரவை திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள்’ என்று கூறியுள்ளனர். திரும்பப் பெறவில்லையென்றாலும், அந்த உத்தரவை தள்ளுபடி செய்யும் நீதிபதிகள், அரசை மீண்டும் மனுவை பரிசீலித்து புதிய உத்தரவு பிறப்பிக்க கோர வேண்டும். அப்படியான சூழலில் தளபதி புதிய உத்தரவை எதிர்த்து மீண்டும் ஒரு பேராணை மனுவுடன் நீதிமன்றத்தை அணுக வேண்டும். வீண் கால விரயம்.

எனவேதான் நீதிபதிகள் தங்களது எரிச்சலை காட்டினர். வேறு ஒன்றும் இல்லை!

நீதிமன்றமே, இந்தப் பிரச்னையை மற்றுமொரு சட்டப்பிரச்னையாக தீர்க்கட்டும் என மற்றவர்கள் ஒதுங்கிக் கொள்வதுதான், நாட்டின் நன்மைக்கான செயலாக இருக்கும்.

மதுரை
04/02/12

3 comments:

PRABHU RAJADURAI said...

My official birth day too is different from my actual b'day!!!

PRABHU RAJADURAI said...

Union Of India vs Harnam Singh
1993 AIR 1367, 1993 SCR (1) 862
"An application for correction of the date of birth should not be dealt with by the tribunal or the High Court keeping in view only the public servant concerned. It need not be pointed out that any such direction for correction of the date of birth of the public servant concerned has a chain reaction, inasmuch as others waiting for years, below him for their respective promotions are affected in this process"
From a recent Judgment
http://www.indiankanoon.org/doc/1073033/

PRABHU RAJADURAI said...

Well the issue now been put to rest...
http://timesofindia.indiatimes.com/india/We-are-proud-of-you-but-you-have-to-honour-commitment-Supreme-Court-to-Army-chief-V-K-Singh/articleshow/11840010.cms