16.6.07

ஜாதி என்ன?

பல வருடங்களுக்கு முன்னர் நடிகர் கமல்ஹாசன் ‘தனது மகளை பள்ளியில் சேர்க்க சென்ற பொழுது, மகளின் பள்ளி ஆவணத்தில் ஜாதி, மதம் என்ற இடத்தில் இந்தியன் என்று குறிப்பிட வேண்டியதாகவும், பள்ளி நிர்வாகிகள் ஜாதி, மதம் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும் என்று கூறியதாக’ ஊடகங்களில் செய்தி வெளியானது.

ஏன் தற்பொழுது கூட தமிழ் ஊடகங்களில் பலமுறை ‘ஜாதியை ஒழிக்கப் போவதாக அரசு கூறினாலும், பள்ளிகளில் குழந்தைகளில் சேர்க்கப் போனால் முதலில் ஜாதியைத்தானே குறிப்பிடச் சொல்கிறார்கள்’ என்று எழுதப்படுவதை படிக்க நேர்கிறது.

இத்தகைய செய்திகளால், ஏதோ தாங்கள் விரும்பாவிட்டாலும், அரசு மக்களின் மீது ஜாதியினை திணிக்கிறது என்று மக்கள் மத்தியில் ஒரு எண்ணம், முற்றிலும் தவறான எண்ணம் ஊட்டப்பட்டுள்ளது.

நானறிந்த பல குழந்தைகளின் பள்ளி ஆவணங்களில் மதம் குறிப்பிடப்பட்டிருந்தாலும், ஜாதி குறிப்பிடப்படவில்லை என்பதை அறிவேன்.

ஆயினும், எந்தப் பள்ளியிலாவது, குழந்தையின் ஜாதி, மதம் போன்றவற்றை குறிப்பிட கட்டாயப்படுத்தினால் அவர்களிடம் ‘தமிழக அரசு இந்தப் பிரச்னை குறித்து வெளியிட்ட அரசாணை எண்.1210 தேதி 02.07.73’ஐ சுட்டிக்காட்டவும். இந்த அரசாணையின்படி பள்ளிச் சான்றிதழ்களில் ஜாதி, மதம் போன்ற இடங்களை காலியாக விடவோ அல்லது இல்லை என்று குறிப்பிடவோ உரிமை உண்டு என்று அரசு கூறுகிறது.

இவ்வாறு கட்டாயப்படுத்தக் கூடாது என்று பள்ளிகளுக்கு ஆணையிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நீதிப் பேராணை மனுவில் (writ petition) ‘இவ்வாறு ஏற்கனவே ஒரு அரசாணை இருப்பதால் உத்தரவு எதுவும் தேவையில்லை’ என்று சமீபத்தில் தீர்ப்புக் கூறப்பட்டுள்ளது.

மதுரை
16.06.07

2.6.07

ஏன் நிகழவில்லை, அதிசயம்?

இந்தியாவின் சிறந்த பொருளாதார மேதைகளில் ஒருவராக கருதப்படும், பிரதமர் மன்மோகன், இன்று தனிமையில் தனக்குள்ளே சிந்திக்கும் கேள்வி இதுவாகத்தான் இருக்க முடியும். இந்தக் கேள்விக்கு விடை காண முடியாத விரக்தியிலேயே, அவர் இந்திய தொழிலதிபர்களைப் பார்த்து ‘உங்கள் லாப விகிதத்தை கொஞ்சம் குறைத்துக் கொள்ள முடியாதா?’ ‘உங்கள் நிர்வாகிகள் தங்களுக்கு வானளாவிய சம்பளம் அளித்துக் கொள்ள வேண்டுமா?’ என்று கெஞ்சும் நிலைக்கு வந்திருக்கிறார்.

ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர், மக்கள் ஆதரவு என்ற எவ்வித கட்டுப்பாடுமின்றி தனக்கு கிடைத்த சுதந்திரத்தை அன்றைய பிரதமர் நரசிம்மராவ் இன்றைய பிரதமர் மன்மோகனுக்கு அளிக்க, பின்னவரோ ‘தேங்கிக் கிடக்கும் இந்தியாவின் பொருளாதாரத்தை முடுக்கிவிடும் ஒரே வழி ‘தாராளமயமாக்கலே’ என்று முடிவெடுத்ததற்கு உத்வேகமளித்தது, ‘புதிய பொருளாதாரத்தின் பலன்கள் இந்தியாவின் கடைசி குடிமகன் வரை சென்று அடையும்’ என்ற நம்பிக்கைதான். ஆனால், செல்வத்தின் அந்த கீழ் நோக்கி கசியும் தன்மை (trickling effect) இந்தியாவில் தேவையான வேகத்தில் நிகழவில்லை என்பதே இன்றைய நிலையில் பலரது கருத்தாக இருக்கிறது.

***

நான் கண்ணுற்றுணர்ந்த ஒரு உதாரணத்தைக் கூற முடியும். எனது உறவினர், நண்பர்கள் வீடுகளுக்கு செல்கையில் பத்தாண்டுகளுக்கு முன்பிருந்ததற்கு இன்று சலவைக்கல் பதித்த தரைகள், கார், ஏர் கண்டிஷனர் என்று வாழ்க்கை வசதிகளின் முன்னேற்றம் வெளிப்படையாக தெரிகிறது. ஆனால் விவசாயத்தை தொழிலாக கொண்டிருப்பவர்களைப் பார்த்தால் குறிப்பிடத்தக்க எந்த முன்னேற்றமும் தெரிவதில்லை, அவர்கள் எத்தனை ஏக்கர் நிலங்களுக்கு சொந்தக்காரர்களாக இருப்பினும் சரி!

மன்மோகன் நினைத்தது என்ன? செல்வத்தைப் பெருக்கும் தொழிலதிபர்களால் காகித பணத்தினை சாப்பிட முடியாது...ஆனால் பணம் பெருக பெருக தேவைகளும் பெருகும். அவற்றை பூர்த்தி செய்ய அந்தப் பணம் மற்றவர்களுக்கும் வந்துதானாக வேண்டும் என்பதுதான். தண்ணீரைப் போல செல்வமும் அதன் போக்கில் விட்டால் மேலிருந்து கீழே பாய்ந்துதானாக வேண்டும் என்று நினைத்தால், அது பெளதீக விதிகளை மீறி, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பிருந்தை விட இன்று இடைவெளிகள் அதிகரித்திருப்பது போல தோன்றுகிறது.

இந்தியாவில் இந்த பதினைந்து ஆண்டுகளில் மாபெரும் வளர்ச்சியடைந்துள்ள தொழிலதிபர்களின் செல்வத்தினையும் மறுபக்கம் நிகழ்ந்து கொண்டிருக்கும் விவசாயிகளின் தற்கொலைகளையும் பார்த்தால், இந்தியாவும், கட்டுப்பாடற்ற பொருளாதாரத்தை பின்பற்றும் சில லத்தீன், தென் அமெரிக்க நாடுகளைப் போல பொருளாதாரத்தின் இரு எல்லைகளையும் தொட்டு நிற்கும் நிலை வருமோ என்ற அச்சம் ஏற்ப்படுகிறது.

***

மன்மோகன், நல்லெண்ண அடிப்படையிலேயே பொருளாதாரத்தை தாரளமயமாக்கினார். ஆனால், அடிப்படையான சில இந்திய குணங்களை அவர் புரிந்து கொள்ளவில்லை என்றே நான் நினைக்கிறேன்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் பொருளாதார நிபுணர் சுவாமிநாத ஐயர் சுவராசியமான ஒரு கருத்தினை கூறினார். அதாவது அமெரிக்காவில் தொழிலதிபர்களின் வாரிசுகள், நிறுவனம் தங்கள் கைக்கு வந்தவுடன் செய்வது, பங்குகள் அனைத்தையும் விற்று உல்லாச படகுகள், பிரயாணங்கள் என வாழ்க்கையை அனுபவிக்க கிளம்பி விடுவார்களாம். நிறுவனமும், புதிய நிர்வாகிகளின் வேறுபட்ட ஐடியாக்களினால், மாறுபட்ட முயற்சிகளை மேற்கொள்ள முயலுமாம். இந்தியாவிலோ பிர்லா போன்ற நிறுவனங்கள் ஒரு குடும்பத்தின் பிடியிலேயே வளர்ச்சியில் தேக்க நிலையில் உள்ளதாம்.

ஏறக்குறைய இதே கருத்து, ஏன் செல்வம் இங்கு கீழிறங்கவில்லை என்பதையும் விளக்கலாம். செல்வத்தைப் பெருக்க வழிவகை செய்த மன்மோகன், ‘அந்த செல்வத்தை ஆள்வதற்கு நம் மக்கள் தயாராக இருக்கிறார்களா’ என்று சிந்திக்கவில்லை.

பொதுவாகவே இந்தியர்கள் பாதுகாப்பு உணர்வு மிக்கவர்கள். தனக்கு மட்டுமின்றி, தன் கண் முன்னே வாழப்போகும் தனது மகன், பேரன் வரை வருமானம் ஏதுமின்றி போனாலும், பொருளாதார வசதிக்குறைவு ஏற்படக்கூடாது என்று அவர்களுக்கும் சேர்த்து சேமிக்கும் குணம் உள்ளது. எத்தனை சிறுகச் சிறுக எனினும், அத்தனை வழியிலும் பணத்தினை சேமிக்கவே முயல்கிறார்கள்.

***

நான் சிறுவனாயிருக்கையில் எனது அம்மா, ஆச்சி போன்றவர்கள் எவ்வாறு பணத்தினை எண்ணி எண்ணி செலவழித்தார்கள் என்று பார்த்திருக்கிறேன். பணத்திற்கான முழு மதிப்பினை பெருவதில் (cost consciousness) நம்மவர்களின் ஆர்வம் தெரிந்த விடயம்தான். ஆனால், எழுபதுகளில் நிலவிய பொருளாதார தேக்கத்திலிருந்து விடுபட்டு வெகுதூரம் வந்து விட்டோம் என்று நாம் உணரவில்லை.

அமெரிக்காவில் பொறியாளராக இருக்கும் ஒருவரை வழியனுப்ப ரயில் நிலையம் செல்கையில், சாதாரண சம்பளம் பெரும் ஒரு இந்தியரைப் போலவே போர்ட்டரிடம் பேரம் பேசிக் கொண்டிருந்தார். ஐம்பது ரூபாயினை மிச்சப்படுத்தும் வேகத்தை விட, ‘விட்டா தலையில மொளகா அரைச்சுடுவானுங்க’ என்ற பழைய கோபமே இப்பொழுதும் பேரமாக வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.

அமெரிக்கா என்ன, தற்பொழுது இந்தியாவிலிலேயே வசதியான சம்பளம் பெற முடிகிறது. ஆனால், எத்தனை ஆயிரம் சம்பளம் பெற்றாலும், வீட்டில் தேங்கும் பழைய செய்தித்தாள்களை பெற்றுச் செல்ல வருபவருக்கு, இலவசமாகக் கூட அதைத் தர முடியும் என்பது இதுவரை நினைத்துக் கூட பார்க்கப்பட்டதில்லை!

இவ்வாறு உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போக முடியும்.

***

நடுத்தர வர்க்கத்தினரின் இக்குணாதியசங்களா இந்திய பொருளாதாரத்தை நிர்ணயிக்கின்றன? என்றால் எனது பதில், ‘கீழ் நோக்கி வடிய வேண்டிய செல்வம் மத்தியில் உள்ள இந்த பாறைத்திட்டோடு நின்று மன்மோகனின் நம்பிக்கையினை பொய்யாக்கியுள்ளது’ என்பதுதான்.

தாராளமயமாக்கலில் பயன் பெரும் ஒரு நிறுவனம், அதன் பலன்களில் ஒரு பகுதியினை தனது நிர்வாகிகளுக்கு சம்பளமாக அளித்தால், அடுத்த அடுக்குகளில் இருப்பவர்கள் அதற்கும் கீழ் அடுக்குகளுக்கு அதை கசியவிடும் மனநிலை இங்கு இல்லை.

முன்னர் ஆடம்பரம் என்று கருதிய வசதிகளையெல்லாம் நடுத்தர வர்க்கம் வாங்கிக் குமிக்கவில்லையா? உண்மைதான். தொலைபேசியே ஆடம்பரமாக கருதப்பட்ட காலத்தை விட்டு இன்று ஏர் கண்டிஷனர்கள் கூட சாதாரணமாகிப் போன கால கட்டத்திற்கு வந்துள்ளனர். ஆனால், இவ்வகையான செலவுகளும் செல்வத்தை தட்டையான பாதையில் செலுத்துகிறதே தவிர கீழே செலுத்துவதில்லை.

பத்தாண்டுகளுக்கு முன்னர் முப்பது ரூபாய்க்கு சாதாரண செருப்பினை வாங்கியவர்கள் இன்று மூவாயிரம் ரூபாய்க்கு ரீபோக் ஷூ வாங்குகிறார்கள். ஆனால், ரீபோக் கடையில் வேலை செய்யும் சிப்பந்தியின் சம்பளத்தை கேட்டுப் பார்த்தால், அது பண வீக்கத்திற்கு நிகரான முன்னேற்றமே அடைந்திருக்கும். ஒரு ஷூ வாங்குவதற்கு கொடுத்த மூவாயிரம் ரூபாயில் ஆகக் குறைந்த சதவிகிதம், தொழிலாளிக்கு போக செல்வம் முழுவதும் மீண்டும் தொழிலதிபரின் கையிலே சென்று சேர்கிறது. ஆக செல்வம் இந்த இரு மட்டங்களையும் தாண்டி வேறு நிலைகளுக்கு இங்கு கசிவதில்லை என்பதே உண்மை!

‘war is too serious to be left only with the generals’ என்று சொல்வார்கள். அதே போல ‘economy is too serious to be left with the people’ என்றும் கூறலாம்

மதுரை
01.06.07

எவ்வித பொருளாதார ஆதாரங்களும், அறிவுமின்றி பத்திரிக்கைகளில் வாசித்ததையும், சொந்த அனுபவங்களையும் வைத்து சில கருத்துகளை முன் வைக்கிறேன். தவறான புரிதல்களை சுட்டிக்காட்டவும். இது குறித்து மேலும் அதிகம் எழுத விரும்புகிறேன். நேரமின்மையால் பின்னர்.