31.1.13

கட்டபொம்மனும், முல்லா ஓமரும்


திருநெல்வேலியில் நான் தொழில் பழகிய சீனியர் மிகவும் சுவராசியமாக பழைய விடயங்களைப் பற்றிப் பேசுவார். அவரது சீனியரை பற்றி ஒரு நாள் பேசிக் கொண்டிருந்தார்…

அவரது சீனியர் திரைப்படங்களுக்கு செல்லும் வழக்கமில்லை என்பதால், அவரை வற்புறுத்தி ஒரு படத்திற்கு அழைத்துச் சென்றாராம்.

’வீரபாண்டிய கட்டபொம்மன்’

அடுத்த நாள், ‘படம் எப்படி?’ என்றதற்கு

‘…ம்ம்ம் நன்றாயிருந்தது. அந்த சிவாஜி கணேசன். நல்லா பேசுறான். ஆனா, அவனுக்கு ஒரு பிரிட்டிஷ் ஆபீசரிடம் எப்படிப் பேசணும்னு தெரியலை”

-oOo-

சிரித்துக் கொண்டு பேசாமலிருந்து விட்டாலும், இச்சம்பவம் உண்மையாயிருக்காது என்றுதான் இதுவரை நினைத்திருந்தேன். ஆனால் விஸ்வரூப பிரச்னையின் ஊடே ‘முல்லா ஓமர் எங்கிருக்கிறார் என்பதை அறிய கமலை கூப்பிட்டு விசாரிக்க வேண்டும்’ என்ற கோரிக்கையுடன் ஒரு வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்யப்பட்டு எதிர் தரப்பினருக்கு அறிவிப்பும் அனுப்பப்பட்டதாக ஒரு செய்தியை படித்ததும் இதுவே நம் கண் முன் நடக்கையில், சீனியர் சொன்ன சம்பவம் உண்மையாக இருக்க முடியாதா என்றிருக்கிறது.

எவ்விதமான தயக்கமுமின்றி, தள்ளுபடி செய்யப்பட்டிருக்க வேண்டிய ஒரு வழக்கில், அறிவிப்பும் அனுப்பப்பட்டிருக்கும் செயல் நீதித்துறையினை மக்கள் பார்வையில் கேலிக்குறியதாக்கி விடும் அபாயம் உள்ளது.

-oOo-


இன்று நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில், முதல்வர் எவ்வித தயக்கமுமின்றி, ‘மாநில அரசிற்கு தமிழ்நாடு சினிமா ரெகுலேஷன் ஆக்ட் பிரிவு 7ன் கீழ் ஒரு திரைப்படத்தினை தடை செய்யும் (ban) அதிகாரம் உண்டு’ எனவும் ‘ஆனாலும் தான் அந்தப் பிரிவில் தடை செய்யாமல் குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144ன் கீழ் தற்காலிகமாக தடை செய்துள்ளாதாக’ குறிப்பிட்டார். அதற்காக காங்கிரஸின் மனீஷ் திவாரி ‘ஹோம் வொர்க்’ செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

முதல்வர் கூறிய சட்டப்பிரிவிலும் ஒரு திரைப்படத்தை தடை செய்ய இயலாது. பிரிவு சிஆர்பிசி பிரிவு 144 போலவே சினிமா ரெகுலேஷன் சட்டப்பிரிவு 7ன் கீழும் பொது அமைதிக்கு பங்கம் விளையலாம் என்ற காரணத்தால் ஒரு திரைப்படத்தை காண்பிப்பதை தற்காலிகமாக தடுக்கலாம். உண்மையில் பிரிவு 144ன் கீழுள்ள அதிகாரங்கள் அதிகமானவை. எனவே பிரிவு 7ஐ பயன்படுத்தாதை ஏதோ கமலஹாசனுக்கு அளிக்கப்பட்ட கருணை போல முதல்வர் குறிப்பிட்டது சரியான கருத்தல்ல.


மதுரை
31/01/13

4 comments:

துளசி கோபால் said...

வணக்கம். நலமா?

எல்லாத்துலேயும் அரசியல் விளையாடுது போல:(

துளசி கோபால் said...

வணக்கம். நலமா?

எல்லாத்துலேயும் அரசியல் விளையாடுது போல:(

Unknown said...

எல்லாம் அரசியல் (லாப) மாயம்

Anonymous said...

முஸ்லிம் அமைப்புகளுக்கு போட்டுக்காட்டும் போது, படத்தில் வரும் காட்சிகளுக்கு 100-க்கும் மேற்பட்ட ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றன என்று கமல் கூறியிருக்கிறார். அதனாலும் கமலை அலைக்கழிப்பதற்காவும் இம்மாதிரி வழக்கு போடப்பட்டிருக்கலாம். இது நீங்கள் நினைப்பது போல முட்டாள்தனமான வழக்கு என்று எனக்குத் தோன்றவில்லை.
மேலூர் ராஜா