29.5.07

விகடன் - உண்மைக் கலைஞனின் கோபம்

திரைப்பட நடிகர்களின் பின்னே விசிறி என்று சுற்றுவது முட்டாள்களின் வேலை என்று முகத்திலடிக்கும்படி கூறுகிறார் பிரகாஷ்ராஜ். ‘ஸ்பேடை ஸ்பேட்’ என்று கூறக்கூடிய ஒரு நடிகர் தமிழ் திரையுலகில் இருப்பது அதிசயம். ஆனந்த விகடனில் வெளிவரும் பிரகாஷ்ராஜின் கட்டுரைகள் பற்றி கடந்த கிறிஸ்துமஸ் ஆராதனையில் பாதிரியார் குறிப்பிட்டார். அவ்வப்போது படிக்கையில் அவர் மீதான மதிப்பு கூடும். தற்பொழுது இன்னும் தன்னை உயர்த்திக் கொண்டுள்ளார்.

முட்டாள்தனம் என்பதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. அவ்விதமான அறியாமைகளுக்கு மன்னிப்பும் இல்லை என்று அண்டன் செகோவ் கதையை உதாரணம் காட்டுகிறார்.

பிரகாஷ்ராஜ் தனது திறமையினை நம்புகிறார். பிறகு ஏன் ரசிகர் என்ற சோம்பேறிக் கூட்டங்கள் என நினைத்திருக்கலாம். பல நடிகர்களுக்கு அவ்வாறு தோன்றலாம். தங்கள் மீது கொண்ட அவநம்பிக்கையின் காரணமாக இவற்றை பொறுத்துக் கொள்கிறார்கள் என்பது எனது அனுமானம். முன்பு ஒருமுறை குறிப்பிட்டேன். சரக்கு குறையும் இடத்திலெல்லாம், இவ்விதமான விளம்பர யுக்திகள் தேவைப்படும் என்று. சரக்கு எவ்வளவு தூரம் குறைகிறதோ அவ்வளவு தூரம் ரசிகர்களை முட்டாளாக்குவதும் அதிகமாகும். எம்ஜிஆர் - சிவாஜி, ரஜினி - கமல் என்று தொடர்பு படுத்திப் பார்த்தால் விளங்கலாம்.

கமலஹாசன் அவ்வப்போது, தன்னை இப்படியான கூட்டங்களிலிருந்து விடுபடுத்திக் கொள்ளப்பார்ப்பார். பின்னர் தனது வெற்றியின் மீது நம்பிக்கையில்லாமல் நற்பணி மன்றம் என்று காம்பிரமைஸ் செய்து கொள்வார். குருதிப்புனல் படத்தில், கமலுக்கும் நாசருக்கும் இடையே நடக்கும் உரையாடல்களில், தீவீரவாதமெல்லாம் இங்கே செல்லாது என்று நாசருக்கு புரிய வைக்க ‘ரசிகர் பட்டாளங்களைப்’ பற்றி சில கூறுவார். எவ்வித வெட்கமுமின்றி அந்த வசனங்களுக்கு தேவி தியேட்டரில் ரசிகர்கள் கைதட்டிக் கொண்டிருந்தார்கள்.

பிரகாஷ்ராஜ் வேண்டாம், கவுண்டமணியிடம் இருந்தாவது தமிழக ஹீ(ஜீ)ரோக்கள் கற்றுக் கொள்வது நல்லது.

விகடன் - புரட்சிக் கலைஞரின் கோபம்

ஆனந்த விகடன் பேட்டியில் தனது திருமண மண்டபம் இடிக்கப்பட்டதைப் பொறுத்து பொங்கிப் பொறுமியிருக்கிறார் விஜயகாந்த்!

ஏதோ மற்ற அரசியல்வாதிகளும், நீதிமன்றங்களும் இணைந்து சதி செய்து அவரது திருமண மண்டபத்தினை இடித்தது போல தோற்றத்தினை உருவாக்க நினைக்கிறார். நில ஆர்ஜித சட்டங்களைப் (Land Acquisition Laws) பற்றி அறிந்தவர்களுக்கு, இந்த இடிப்பு ஒன்றும் பெரிய விஷயமில்லை. அரசு குறிப்பிட்ட ஒரு நிலம் வேண்டும் என்று நினைக்கையில், நீதிமன்றங்களால் பொதுவாக இயலக்கூடியது நில உரிமையாளருக்கு போதிய இழப்பீடு கிடைக்கிறதா என்று பார்ப்பது மட்டுமே!

அகில இந்திய அளவில் செயல்படுத்தப்படும் ஒரு திட்டத்தில், விஜயகாந்த் இழந்தது ஒரு துளி. அவ்வளவே! இந்தியா முழுவதும், இச்சாலை அமைப்பதினால், எத்தனை ஆயிரம் நபர்கள் தங்கள் விவசாய நிலங்களை இழக்கின்றனர். அனைவரிடமும் மாற்றுத் திட்டம் உண்டு! இவ்வாறு ஒவ்வொருவரிடமும் மாற்றுத்திட்டம் பெற்று அதனை பரிசீலித்துக் கொண்டிருந்தால் சாலையினை வங்காள வளைகுடாவில்தான் போட வேண்டும்!

சமீபத்தில் மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு. கூடங்குளம் அணுமின் நிலையம் அமைப்பதில் பொதுமக்களிடம் கருத்து கேட்கும் ஒரு கூட்டம், திருநெல்வேலி கலெக்டர் அலுவலகத்தில் நடத்தாமல், பாதிக்கப்படும் கூடங்குளம் மக்கள் கலந்து கொள்ளும் வகையில் கூடங்குளத்திலேயே நடத்த வேண்டும் என்ற கோரிக்கைக்காக. அதற்காக இலவசமாக ஒரு மண்டபமும் தர தயாராக இருந்தனர். இருந்த பொழுதும் நீதிமன்றம் தலையிட மறுத்து விட்டது.

கேவலம், கூட்டம் நடைபெறும் இடத்தினை மாற்றவே அதிகாரிகள் தயாராக இல்லாத பொழுது...திட்ட இடத்தினை மாற்றுவதாவது.


பொதுவாகவே பெரிய திட்டங்களை அரசு செயல்படுத்த முயல்கையில், அது சர்தார் சரோவர் அணைக்கட்டாயினும் சரி, சேது சமுத்திர திட்டமானாலும் சரி, கூடங்குளம் அணுமின்நிலையமானாலும் சரி...நீதிமன்றங்கள் அதில் ஓரளவுக்கு மேல் கேள்வி கேட்பதில்லை. விஜயகாந்தின் கலியாண மண்டபம் எம்மாத்திரம்.

சர்தார் சரோவர் திட்டத்தினால் பாதிப்படையும் பழங்குடிகள், சேது சமுத்திர திட்டத்தினால் பாதிப்படையலாம் என அஞ்சும் மீனவர்கள், கூடங்குளம் அணு உலைக்கு தங்கள் நிலங்களை இழந்த விவசாயிகளின் இழப்பு விஜயகாந்திற்கு ஏற்ப்பட்ட இழப்பிற்கு சற்றும் குறைந்ததில்லை!

கலியாண மண்டபம் இடிக்கப்பட்டாதால் பாதிப்படைந்தது, மற்றவர்களைப் போல தனக்கு வாழ்வாதரப் பிரச்னையில்லை என்று விஜயகாந்த் ஆறுதலடைவது நன்று!

விகடன் - கலைஞரின் கோபம்

சில தினங்களுக்கு முன்னர் ‘திருப்பிக் கொடுத்தால் தாங்குவதற்கு பலம் இருக்கிறதா?’ என்று ஏறக்குறைய தினகரன் சம்பவத்தினை ஞாபகப்படுத்தும் தோரணையில் முதல்வர் கலைஞர், ஆனந்த விகடன் பத்திரிக்கையின் ஒரு நையாண்டியினைப் பற்றி எரிச்சலோடு குறிப்பிட்டதைப் படித்ததும், ‘ஏதோ ஆனந்த விகடன் அரசியல் நையாண்டியில் இதுவரை துக்ளக் கூட தொடாத உச்சத்தை எட்டிவிட்டது போல’ என்று நினைத்தேன். ஆனந்த விகடனை வாங்கிப் பார்த்தால், எவ்வித புத்திசாலித்தனமும் இல்லாத வழக்கமான நகைச்சுவைதான்.

இவ்வளவு தூரம் கடுமையான ஒரு பதிலினைக் கூறும் வகையில், வரம்பு மீறிய நக்கல், நையாண்டி ஏதும் அதில் இல்லை! முதல்வரின் மனைவிகள் அரசியலில் கொஞ்சம் கூட பங்கு பெறுவதில்லையா? தயாளு அம்மாள், ராஜாத்தி அம்மாள் பற்றி விமர்சனம் கூடாது என்றால் சகிகலா குடும்ப உறுப்பினர் பற்றியும் விமர்சனம் கூடாதுதான்.

முதல்வரோடு தங்களை நெருக்கமாக காட்டிக் கொள்வதில், ஆனந்த விகடன் போன்ற பத்திரிக்கைகள் பெருமை அடைவது உண்டு. அதற்கு கொடுக்கும் விலைதான் இத்தகைய எதிர்வினைகள். தன்னிடம் இவ்வாறு உரிமை எடுத்துக் கொள்ளும் பத்திரிக்கைளில் இருந்து வரும் சிறு விமர்சனமும் முதல்வரை அதிகம் பாதிக்கிறது.

தமிழகத்தின் முதுபெறும் அரசியல் தலைவர் என்ற தகுதியினை அடைவதற்கு முதல்வர் தனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது நன்று!

24.5.07

ஏப்ரல் மாத முதல் தேதி கதை....(மெளன ராகம்)

சட்டம், நீதிமன்றங்களைப் பற்றி மக்கள் எவ்வளவு தூரம் அறிந்திருக்கிறார்களோ தெரியாது. ஆனால் வக்கீல் நோட்டீஸ் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. திரைப்படங்களில் கூட வக்கீல் நோட்டீஸைப் பெறுபவர், ஏதோ எமனது பாசக்கயிறு தன் மீது வீசப்பட்டது போல அதிர்ந்து புலம்புவதைப் பார்த்திருக்கலாம்.

ஆனால் இந்த நோட்டீஸ் எல்லாம் 'சும்மா குஸ்திக்கு முன்னர் அப்படியே வீடு கட்டுவதைப்' போலத்தான். பெரிய விளைவுகள் ஏதும் இல்லை. என்றாலும், வழக்குரைஞர் ஆவதற்கு முன்னரே நானும் எனது நண்பனும் அனுப்பிய ஒரு நோட்டீஸ் எங்கள் கல்லூரியில் கிளப்பிய பீதி!

***

கல்லூரி ஆண்டு மலரில் அந்தக் கதையைப் படித்தவுடனேயே எனக்கு பொறி தட்டியது, 'இதை எங்கோ படித்திருக்கிறோமே' என. பொதுவாக கல்லூரி மலர்களில் புகைப்படங்களை மட்டும் பார்த்து விட்டு தூர எறிவதுதான் வழக்கம் என்றாலும், கதையைப் படிக்க வைத்தது அதை எழுதியவர்.

எங்களூர் மாணவி!

தனது நெருங்கிய தோழிகள் இருவரைத் தவிர யாருடனும் பேசுவதில்லை. கூட்டாக கொண்டாடும் எதிலும் பங்கெடுப்பதுமில்லை. அந்த நான்கு வருடங்களில் என்னிடம் ஒரு தடவை கூட பேசியதில்லை. இத்தனைக்கு ஐந்தாவது வகுப்பு வரை நானும் அவர்களும் கிளாஸ் மேட்!

உடனே கதைகளில் ஓரளவுக்கு பரிச்சயமுள்ள என நண்பரிடம் கூறினேன். அவரும் 'மாட்னாடா' என்றார். என் அண்ணனுக்கு கல்லூரியில் தமிழில் சிறப்பு பாடமாக சக்தி-சிவம் என்பவர்கள் எழுதிய சிறுகதைத் தொகுதியில்தான் படித்த ஞாபகம்.

விடக்கூடாது என்று ஒரு திட்டம் தீட்டினோம். அதற்காக அந்த கதைத் தொகுதியைத் தேடி நானும் எனது நண்பரும் மதுரையில் அலையாத இடம் இல்லை. கிடைக்கவில்லை.

சரி, இனி நேரத்தை வீணாக்கக் கூடாது என்று நானே பேனாவும் கையுமாக உட்கார்ந்து விட்டேன். மதுரை பல்கலைக்கழகத்தில் பேராசியராக பணிபுரியும் தனது கட்சிக்காரராரின் கதையை திருடி ஆண்டு மலரில் அந்தப் பெண் எழுதியுள்ளதாகவும், அதற்கு நஷ்ட ஈடாக 20,000 ரூபாய்(ஞாபகமில்லை) தர வேண்டுமெனவும் ஒரு நோட்டீஸ் எழுதினோம்.

யார் பெயரில் அனுப்புவது?

தான் பயிற்சி எடுக்கும் வழக்குரைஞரின் லெட்டர் பேடை நண்பர் கொண்டு வந்து...பதட்டமேயில்லாமல் அவரது கையெழுத்தையும் இட்டாயிற்று. நாங்கள் அதை பதிவுத் தபாலில் கல்லூரி விலாசத்துக்கு அனுப்பியது எங்களிருவரைத் தவிர யாருக்கும் தெரியாது.

கல்லூரி தினமும் இரண்டு மணி நேரம்தான். ஆனாலும் அனைவரும் உட்கார்ந்து அரட்டை கச்சேரி நடத்தினாலும், இந்தப் பெண் தங்குவதில்லை. எனவே முதல் நாள் தபால்காரர் வருகையில் அவர்கள் இல்லை. இரண்டாம் நாள், நாங்கள் தள்ளியிருந்து கவனிக்க அந்தப் பெண் தனது தோழிகளுடன் லாபியிலேயே கடிதம் எதிர்பார்த்து உலாத்திக் கொண்டிருந்தார்.

ஆச்சு, தபால்காரர் வந்ததும் கையெழுத்திட்டு அதை பிரித்து மாற்றி மாற்றி மூன்று பெண்களும் படிக்கிறார்கள். அப்படியே சுற்றுமுற்றும் அவர்கள் பார்க்க, 'மாட்டிக் கொண்டோம்' என நாங்கள் இருவரும் அறைக்குள் ஒளிந்து கொண்டோம். நான் எழுதிய நோட்டீஸில் எனக்கு நம்பிக்கை இல்லை.

சிறிது நேரம் கழித்து மெல்ல வெளியே சென்றால், ஒரு பெரிய கூட்டமே அங்கிருந்தது.
நாங்களும் நல்லபிள்ளையாக அருகே சென்றால், அங்கே பெரிய விவாதம் நடைபெற்று
கொண்டிருந்தது.....'யார் இப்படி எழுதி அனுப்பியது என்றில்லை. மாறாக, நோட்டீஸை எப்படி எதிர்கொள்வது என’

எங்களுக்கு ரொம்ப குஷியாகிப் போனது, 'அட ஒரு கூட்டமே ஏமாறுவதற்கு தயாராக
இருக்கிறதென'

"இதப் பாத்து எல்லாம் பயப்பட வேண்டாம். ஐடெண்டிட்டி ஆப் தாட்னு (identitiy of thought) ஒன்று இருக்கு அதன்படி இருவருக்கு ஒரே நேரத்தில் ஒரே எண்ணங்கள் தோன்றலாம்" என்று நான் அடித்து விட்டேன். அப்படி ஒன்றும் இல்லை என்று மறுக்கும் நிலையில் யாரும் இல்லை. அந்தப் பெண் ஏறக்குறைய அழும் நிலையிலிருந்தார்.

"நானே ஸ்காலர்ஷிப்பில் படிக்கிறேன். என்னால் எப்படி இவ்வளவு பணம் கட்ட முடியும்" என்று புலம்பியபடி இருந்தவரை அங்கு குழுமிய ஆண்களும், பெண்களும் தேற்ற, நிலைமை எங்களை மீறிச் சென்று விடாமல் காப்பாற்ற வேண்டி நான், "சரி கொடுங்க, நாங்கள் எங்கள் வக்கீலிடம் சென்று பதில் நோட்டீஸ் தயார் செய்கிறோம்.

அப்புறம் அவங்கெல்லாம் பெரிய புரொபசருங்க....சும்மாத்தான் நோட்டீஸ் அனுப்பியிருப்பாங்க. போய் ஒரு மன்னிப்பு கேட்டுட்டா போதும் என்றேன்"

இதைக் கேட்டவர் "நான் மீனாட்சி அம்மன் கோவிலில் வச்சி சத்தியம் பண்றேன், நான்தான் எழுதினேன்னு. ஐயோ, எங்க வீட்டில எல்லாம் நான் எப்படி பெருமையா சொன்னேன்" என்று அழுதே விட்டார். பெண்கள் கூட்டத்திலிருந்து சில மோசமான வசவுகளும் பேராசிரியர் சிவத்துக்கு கிடைத்தது.

அடுத்த நாள், எனது நோட்டீஸுக்கு நானே ஒரு பதில் நோட்டீஸ் தயார் செய்ய வேண்டியதாயிற்று. அதை எடுத்துக் கொண்டு கல்லூரி சென்றால், அந்தப் பெண் மதுரையில் பெரிய வக்கீல் ஒருவரின் மகனாக பிறந்ததால், தானும் அதற்குள்ளாகவே பெரிய வக்கீலாகி விட்டது போல படம் காட்டும் ஒரு மாணவருடன் பேசிக் கொண்டிருந்தார். 'ஆஹா, இவன் வேற வந்து மூக்கை நுழைச்சுட்டானா...இனி விளங்குனாப்லதான்" என்று நினைத்தேன்.

அந்த மாணவரால் காரியம் கெட்டுவிடுவது உறுதி என்று நினைத்தோம். பின்னர் என்னிடம் வந்த அந்த மாணவி, எனது பதில் நோட்டீஸை வாங்கியதும், வேறு எதுவும் பேசாமல் பெண்கள் அறைக்கு சென்று விட்டார். கண்கள் இரவு முழுவதும் அவர் தூங்கவில்லை என்பதை உணர்த்தியது.

அறைக்குள் சென்றவர் ஆளையே காணோம் என்றதும் பயம் வந்தது, 'மாட்டிக் கொண்டோம்' என்று. அறையின் கதவை திறந்தால் சுற்றிலும் மற்றவர்கள் அமர்ந்திருக்க நடுவே அவர் அழுது கொண்டிருந்தார்.

என்னவென்று கேட்டால் வக்கீல் மகன், 'நோட்டீஸ் எதுவும் வேண்டாம். தானே நேரடியாக சென்று, பேராசிரியரிடம் பேசுவதாக' கூறியிருக்கிறார். அதுதான் 'அவர் சொல்படி கேட்பதா இல்லை எங்கள் சொல்படி கேட்பதா என்ற குழப்பமாம்'.

சின்ன மீனுக்கு வலை போட்டால் இவ்வளவு பெரிய மீன் வந்து மாட்டியிருக்கிறதே என்ற திருப்தியில் போதும் இத்துடன் முடித்துக் கொள்வோமென அவர் கையிலிருந்த நோட்டீஸை வாங்கி கிழித்துப் போட்டேன்.

நாடகம் இத்துடன் முடிந்தது என்று நினைத்தால், என் நண்பன் என்னுடன் பெரிதாக சண்டை பிடித்தான், 'எப்படி நான் கிழிக்கப் போயிற்றென்று' பதில் நோட்டீஸ் தயாரித்த வக்கீல் ரொம்ப பெரிய வக்கீலாம் (!). இலவசமாக அவர் தயாரித்த நோட்டீஸை நான் எப்படி கிழிக்கப் போயிற்றென்று.

முதலில் குழம்பிய நான்...நண்பனை புரிந்து கொண்டு பதிலுக்கு கத்தினேன். கடைசியில் 'அவருக்காக நாஙக்ள் சண்டையிட வேண்டாம்' என்று அந்தப் பெண் மேலும் அழ, எனக்கு மிகவும் சங்கடமாகிவிட்டது. 'கவலைப்படாதீர்கள். இந்த முதல் நோட்டீஸே நாங்கள்தான் அனுப்பினோம்' என்று குட்டை உடைக்க, முதலில் ஒரு கணம் என்ன செய்வது என்பது தெரியாமல்....அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கே ஐந்து நிமிடமாயிற்று.....வகுப்பு பெண்களெல்லாம் எங்களை 'பிலு பிலு' வென பிடித்துக் கொள்ள, அன்று அனைவரையும் சமாதானப் படுத்த போதும் போதும் என்று ஆகியது....

ஆனால் இன்றும் என் சந்தேகம் தீரவில்லை. அந்தக் கதையை ஏற்கனவே நான் படித்திருக்கிறேன். ஆனால், அந்தப் பெண் அந்த இரு நாட்களில் பலமுறை நாங்கள் கேட்காமலேயே சத்தியம் செய்தார்.

ஏன் அவர் ஒரு கதைக்காக பொய் சொல்ல வேண்டும்?

நன்றி: வலைப்பூ 01.04.07

(இங்கும் பலர் ஒத்துக் கொள்ள மறுக்கிறார்கள்! ‘மெளன ராகம்’ என்று ஒரு படம் எடுத்து இயக்குஞர் மணிரத்னம் வெளிச்சத்துக்கு வந்தார். இன்று வரை அந்த படத்தினை நான் பார்த்ததில்லை. ஏனெனில், படத்திற்கான விமர்சனத்தைப் படித்ததும், அனைத்து விமர்சனங்களிலும் வெகுவாக புகழப்பட்ட அதன் உச்சகட்ட காட்சி (climax) ஜெயகாந்தன் எழுதிய ‘கோகிலா என்ன செய்து விட்டாள்?’ என்ற குறுநாவலைப் போல இருந்ததால்...

எனது தாயாரும் இதனை என்னிடம் கூறினார்கள். ஒரு முறை இணையத்தில் குறிப்பிட்ட பொழுது, ஜெயகாந்தனின் alter ego வாக அறியப்படும் ஒருவர், தனக்கும் அவ்வாறு தோன்றியதாக தனியே மடல் எழுதியிருந்தார். எனது சந்தேகத்திற்கான மிகப் பெரிய அங்கீகாரம் என்று அவரது மடலினை கருதினேன்)

22.5.07

தலித்துகளுக்கு தமிழக அரசு மறுக்கும் உரிமை

இட ஒதுக்கீடு பிரச்னையில் அகில இந்திய அளவில் தமிழக அரசு ஒரு முன்னோடி மாநிலமாக கூறப்பட்டாலும், ஆட்சியாளர்களுக்கு தெரிந்தோ, தெரியாமலோ தொடர்ந்து பல வருடங்களாக தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு இங்கு ஒரு விடயத்தில் மறுக்கப்படுகிறது. இவ்விதமான மறுக்கப்படும் உரிமை பற்றி தாழ்த்தப்பட்டவர்களுக்கான அமைப்புகள் கூட அறியவில்லை போலும்.


இட ஒதுக்கீடு என்பது கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் என்று நாம் பொதுவாக அறிந்திருப்பது. இட ஒதுக்கீடு என்பதே இன்னாருக்கு இன்ன வேலைதான் என்ற பாகுபாடு ஒழிக்கப்பட்டு, அனைவருக்கும் அனைத்து தொழில்களிலும் போதுமான பங்கு கொள்ள வழி வகுக்க வகை செய்ய வேண்டும் என்ற பரவலான கோட்பாட்டின்படி அமைந்ததாகும். எனவே, கல்வி, வேலை வாய்ப்பினை தவிர்த்து பிற தொழில்களும் அனைத்து வகுப்பினரும், குறிப்பாக தாழ்த்தப்பட்டவர்கள் மேற்கொள்ள வழி வகை செய்தல் அவசியமான ஒன்றாகும்.


இதனை கருத்தில் கொண்டே மோட்டார் வாகன சட்டத்தில் 1978ம் ஆண்டு ஒரு திருத்தம் இந்திய அரசால் கொண்டு வரப்பட்டது.


மோட்டார் வாகன சட்டம் (Motor Vehicles Act) இந்திய அரசால் 1939ம் ஆண்டு இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் பிரிவு 47(3)ன் படி மாவட்ட கலெக்டர் (Regional Transport Authority) அவரது அதிகார வரம்பிற்குள் எத்தனை பயணிகள் வாகனம் (stage carriage) இயக்கப்படலாம் என்று நிர்ணயிக்கலாம்.


1978ம் ஆண்டு மோட்டார் வாகன சட்டமானது திருத்தப்படுகிறது. அவ்வாறு திருத்தப்படுவதன் முக்கியமான நோக்கமானது, இவ்வகையான வாகனங்கள் இயக்கும் அனுமதியின் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் (Scheduled Castes and Tribes), பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கும் (Economically weaker sections) இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டுமென்பதாகும்.


இதன்படி பிரிவு 47(1A) மற்றும் (1B) கொண்டுவரப்பட்டு ‘அரசு வேலை வாய்ப்புகளில் எத்தனை சதவீதம் தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு உள்ளது அதே அளவு பயணிகள் வாகன உரிமங்களிலும் இட ஒதுக்கீடு மாநில அரசுகள் அளிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டது. இதே போன்று (1C) பிரிவானது பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று கூறுகிறது.


ஆனால், இந்த இரு வகையான இட ஒதுக்கீட்டிற்குமான முக்கியமான வித்தியாசம் முதலாவதில் ‘shall’ என்ற பதமும், இரண்டாவதில் ‘may’ என்ற பதமும் பயன்படுத்தப்படுகின்றன. அதாவது தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடானது மாநில அரசுகள் கண்டிப்பாக அளிக்க வேண்டுமென்பதுதான் இந்த சட்டத்தின் நோக்கம்.


***

இவ்வாறு வாகன உரிமையில் அளிக்கப்பட்ட இட ஒதுக்கீடானது எவ்வளவு தூரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உச்ச நீதிமன்றம் கருதியது என்பதை Rameshwar Prasad Vs State of UP (1983) 2 SCC 195 என்ற வழக்கின் மூலம் அறியலாம்.


1981ம் ஆண்டு உத்திரபிரதேசம் ஒரு அறிவிப்பின் மூலம் வாகன உரிமை எண்ணிக்கைக்கான உச்ச வரம்பினை முழுமையாக தளர்த்தியது. அதாவது, யார் வேண்டுமென்றாலும், உரிமம் பெற்று எத்தனை வாகனங்களையும் இயக்கலாம்.


இந்த அறிவிப்பினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற மேற்கூறிய வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறிய கருத்து கவனிக்கத்தக்கது. ‘வாகன எண்ணிக்கையில் உச்ச வரம்பு இருந்தால்தான் இட ஒதுக்கீடு என்பதற்கு பயன். இல்லை, யார் வேண்டுமானாலும் எவ்வளவு வாகனம் வேண்டுமானாலும் இயக்கலாம் என்றால், இட ஒதுக்கீடானது அர்த்தமற்றுப் போகும்’ என்று கூறிய உச்ச நீதிமன்றம் அந்த அறிவிப்பு செல்லாது என்று தீர்ப்பு கூறியது.


குறிப்பிட்ட எண்ணிக்கையில் வாகனம் இருந்தாலே, தாழ்த்தப்பட்டவர்களும் வாகன தொழில் புரிய முடியும். வரம்பினை எடுத்தால், பெரிய பண முதலைகளோடு அவர்களால் போட்டியிட முடியாது என்பதே உச்ச நீதிமன்றம் கூறிய தீர்ப்பின் தாத்பரியம்.


***

1988ம் ஆண்டு பழைய சட்டம் நீக்கப்பட்டு முற்றிலும் புதிய மோட்டார் வாகன சட்டம் அமுலுக்கு வந்தது. மோட்டார் வாகன பதிவு எண் 1989ம் ஆண்டுக்கு பின்னர் வேறு வடிவம் எடுத்ததன் காரணம் இவ்வாறு புதிய சட்டம் இயற்றப்பட்டதுதான்.


1939ம் ஆண்டு சட்டத்தின் 47(3)ம் பிரிவில் கலெக்டர்களுக்கு வாகன உரிம எண்ணிக்கையினை நிர்ணயிக்க அளிக்கப்பட்ட அதிகாரம் புதிய சட்டத்தில் இடம் பெறவில்லை. ஆகவே, எவ்வளவு உரிமம் வேண்டுமென்றாலும், யார் வேண்டுமானாலும் பெறலாம்.


ஆயினும், இந்த புதிய சட்டத்தின் பிரிவு 71(3)(a)ன் படி மாநகரங்களைப் பொறுத்தவரை மத்திய அரசின் கட்டளையின்படி மாநில அரசானது அதிகபட்ச உரிம எண்ணிக்கையினை நிர்ணயிக்கலாம். பிரிவு 71(3)(b)ன் படி அவ்வாறு நிர்ணயிக்கையில் தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது.


சுருக்கமாக கூற வேண்டுமென்றால், எப்போது மோட்டர் வாகன உரிமமானது குறிப்பிட்ட எண்ணிக்கையில் வழங்கப்படுகிறதோ, அப்போது இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது இதன் தாத்பரியம்!


***

சரி, தமிழகத்தினைப் பொறுத்தவரை மாநகரமோ, நகரமோ அல்லது கிராமமோ பேருந்து உரிமம் என்பது குறிப்பிட்ட அளவில்தான் கொடுக்கப்படுகிறது. உதாரணமாக சிற்றுந்துகளை எடுத்துக் கொண்டால், ஒரு மாவட்டத்திற்கு 250 உரிமங்கள்தான் கொடுக்கப்படுகின்றன. அப்படியாயின் இட ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறதா, என்றால் இல்லை என்பது வருத்தமளிக்கும் ஒரு செய்தி!


இன்றைய நிலையில் ஒரு தலித் தொழிலதிபரை பார்ப்பது என்பது ஒரு தலித் கலெக்டரை பார்ப்பதை விட அரிதான ஒரு காரியம். ஏனெனில் அவ்விதமான பங்கீட்டினை சட்டம் அளிக்க முன் வந்தாலும் அரசு, அதனை செயல்படுத்த முன்வரவில்லை என்பதுதான் உண்மை!


எவ்வாறு அரசு, இட ஒதுக்கீட்டினை மறுக்கிறது?


***

தமிழகத்தினைப் பொருத்தவரை, இட ஒதுக்கீடு சட்டத்திருத்தம் 1978ம் ஆண்டு அமுலுக்கு வரும் முன்னரே பயணிகள் பேருந்து அரசுடமையாக்கப்பட்டது. இவ்வாறு அரசுடமையாக்கப்பட்ட பேருந்துகள் பிற தனியார் வாகனங்களோடு போட்டியிடுவது என்பது கடினம். எனவே பழைய சட்டத்தில் பிரிவு 68-C, புதிய சட்டத்தில் பிரிவு 99 ஆகியவற்றின்படி மாநில அரசானது தனக்கு வேண்டும் வழித்தடங்கள் (route) அல்லது பகுதியினைப் (area) பொருத்து ஒரு திட்டம் தயாரிக்கலாம் (scheme).


இத்திட்டத்தின்படி மாநில அரசானது தனக்கு வேண்டும் பகுதியில் பிற தனியார் வாகனங்கள் இயங்குவதை முழுமையாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலோ கட்டுப்படுத்தலாம். மேலும் இவ்வாறு ஒரு திட்டத்தினை செயல்படுத்த மாநில அரசுகளுக்கு அதிகாரம் அளிக்கும் சட்டப்பிரிவினை மோட்டார் வாகன சட்டத்தின் பிற பிரிவுகள் எவ்வகையிலும் கட்டுப்படுத்தாது.இந்த அதிகாரதினைப் பயன்படுத்தி தமிழக அரசானது தமிழகம் முழுவதும் திட்டப்பகுதியாக அறிவித்து, அத்திட்டம் இன்று வரை அமுலில் உள்ளது. எனவே தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வழித்தடத்திலும் அதிகபட்சம் எத்தனை தனியார் வாகனங்கள் இயங்கலாம் என்று மாநில அரசு நிர்ணயிக்கும்.


இவ்வாறு தமிழகம் முழுவதும் திட்டப்பகுதியானதால், வாகன உரிமம் கட்டுப்படுத்தப்பட்டாலும், தமிழகம் இட ஒதுக்கீட்டினைப் பற்றி சிந்திக்கவேயில்லை.


பழைய சட்டத்திலும் புதிய சட்டத்திலும் இவ்வாறு திட்டம் தயாரிக்க அரசிற்கு அதிகாரம் அளிக்கும் சட்டப்பிரிவினை, இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டப்பிரிவு கட்டுப்படுத்தாது. சட்டப்படி சரிதான். ஆனால், தார்மீகப்படி?

***

தார்மீகப்படி நிச்சயம் தமிழக அரசின் செயல் சரியானதாக இருக்க முடியாது.

ஏனெனில், முதலில் திட்டம் தயாரிக்க அதிகாரம் அளிக்கும் சட்டப்பிரிவானது, அரசு பேருந்துகளை தனியார் போட்டியிலிருந்து பாதுகாக்கும் எண்ணத்துடனே இயற்றப்பட்டது. வேறு காரணம் ஏதும் அந்தப்பிரிவின் நோக்கமாக கூறப்படவில்லை. இவ்வாறு அரசு பேருந்துகளை பாதுகாக்கும் வண்ணம் திட்டம் தயாரிக்கும் அதிகாரத்திற்கு வேறு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக, மோட்டார் வாகன சட்டத்தின் வேறு எந்த பிரிவும் அதனை கட்டுப்படுத்தாது என்று கூறப்பட்டது. இட ஒதுக்கீடு அளிக்க கோரும் பிரிவானது பின்னர் கொண்டு வரப்படுகிறது. எனவே இரண்டையும் சேர்த்துப் படிக்கையில், இவ்வாறான திட்டத்தின் கீழ் தனியார் வாகனங்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவில் உரிமம் வழங்கையில் அதில் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும் என்பதுதான் சரியான செயலாக இருக்க முடியும்.

இட ஒதுக்கீடு என்பது குறிப்பிட்ட அளவில் இயங்க அனுமதிக்கப்படும் தனியார் வாகனங்களுக்குள்ளே மட்டுமே தவிர, அரசு பேருந்துகளை எவ்விதத்திலும் பாதிப்பதில்லை.

உதாரணமாக திட்டத்தின்படி நெல்லை-மதுரை வழித்தடத்தில் 10 தனியார் வாகனங்களுக்கு உரிமம் அளிக்கப்பட்டால், அந்த பத்து வாகனங்களில் போதுமான உரிமங்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். அதனால் அரசு பேருந்துகளுக்கு பாதிப்பில்லை.


என்னுடைய அனுமானத்தில், இட ஒதுக்கீடு அளிக்கும் சட்ட திருத்தம் கொண்டு வரப்படுகையில், அது விரிவாக விவாதிக்கப்படவில்லை என்றே தோன்றுகிறது. இல்லையெனில் இந்த குறைபாட்டினை போக்க போதிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும்.


சட்டத்தின் நோக்கம் என்ன? உரிமம் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வழங்கப்படுகையில், இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். அரசு பேருந்துகளை பாதுகாக்கும் எண்ணத்தில் தனியார் வாகனங்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே உரிமம் வழங்கப்படுகிறது. அப்போது இட ஒதுக்கீடு அளிப்பதுதானே முறை?



***


கடந்த திமுக ஆட்சியில் அரசின் திட்டமானது மேலும் மாற்றப்பட்டு சிற்றுந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. சிற்றுந்துகளை எந்த அரசு நிறுவனமும் இயக்கவில்லை. முழுக்க முழுக்க தனியார்தான். அரசு பேருந்துகள் இயக்கப்படும் வழித்தடங்களில் அவற்றை இயக்க முடியாது. ஆயினும் அரசு அவற்றிற்கான அதிக பட்ச எண்ணிக்கை ஒவ்வொரு மாவட்டத்திற்கு இவ்வளவு என்று நிர்ணயித்தது.சிற்றுந்து அனுமதியிலாவது, இட ஒதுக்கீட்டினை அமுல்படுத்தியிருக்கலாம். அரசு நல்ல வாய்ப்பை பயன்படுத்தவில்லை.


இந்த ஒரு காரணத்திற்காக அரசின் திட்டத்தினை (scheme) எதிர்த்து பொது நல வழக்கு தாக்கல் செய்தால், திட்டத்தில் தனியார் வாகனங்களுக்குள் இட ஒதுக்கீட்டினை அமுல்படுத்த நீதிமன்றம் அரசிற்கு உத்தரவிடும் வாய்ப்புகள் அதிகம்...


அந்தக் கல்லினை எறியப்போகிறவர் யார்?

மதுரை
22.05.07

20.5.07

திரைப்படங்களில் நம்பகத்தன்மை

சில நாட்களுக்கு முன்னர் 'டைனோ' என்பவர் ராகாகி குழுமத்தில் நடந்த ஒரு விவாதத்தில் ஹாலிவுட் திரைப்பட இயக்குஞர்கள் காட்சியமைப்பின் நம்பகத்தன்மைக்காக எவ்வளவு மெனக்கெடுகிறார்கள் என்று எழுதியிருந்தார். எனக்கு உடனே அதற்கு ஓரிரு தினங்களுக்கு முன்னர் டைம்ஸ் ஆப் இந்தியாவின் கட்டுரையில் கூறப்பட்டிருந்த ஒரு செய்தி ஞாபகத்துக்கு வந்தது.

பாலிவுட் போர் திரைப்படங்களைப் பற்றிய அந்தக் கட்டுரையில் கூறப்பட்ட ஒரு செய்தி ஹாலிவுட்டின் 'சேவிங் த பிரைவேட் ரியான்' படத்தைப் பற்றியது. படத்தின் இறுதிக் காட்சியில் வரும் ஜெர்மனிய டாங்குகளில் முதலாவது வரும் டாங்கில், நின்றபடி படைகளுக்கு தலைமை தாங்கி வரும் நபர் தனது தொப்பிக்கு மேலாக குளிர்க்கண்ணாடியை அணிந்தபடி வருவாராம். படைகளை எப்போதும் முன்னிருந்து நடத்துபவரும் தொப்பிக்கு மேலாக கண்ணாடியை அணிபவருமாகிய பீல்ட் மார்ஷல் ரோமலைத்தான் அவ்வாறு தனது இறுதிக்காட்சியில் இயக்குஞர் நுழைக்கிறார். வரலாற்றுப் பூர்வமாக தவறான செய்தி...ஆனால், அவ்வளவு தூரம் அது ரோமல் என்று புரிந்து கொள்பவர்களுக்கு அது தவறு என்று நன்றாகவே தெரிந்திருக்கும். அதே சமயம் அது அவர்களுக்கு மெத்த திருப்தியளிக்கும் காட்சியாகவும் இருக்கும். சில விநாடிகளில் தோன்றி மறையக்கூடிய ஒரு பாத்திரத்திற்கே இவ்வளவு மெனக்கெடுகிறார்கள்.


எனக்கு காந்தி படத்தின் முதல் காட்சியில் முதல் முதலாக அவரைக் காட்டுவதும் மிகவும் பிடிக்கும். நமது எம்ஜிஆர், ரஜினியைக் கால், பின்னர் கை அப்புறம் கடைசியில்தான் முகம் (தெய்வப்பிறவிகளின் கால் தொட்டு வணங்கிய பின்னர்தான் முகம் பார்க்க முடியும்) காட்டுவது போலத்தான். ஆனால், அவ்வளவு இயல்பாக இருக்கும். அதாவது, நாமும் கூட்டத்தோடு கூட்டமாக தலைகளுக்கு நடுவே எட்டி எட்டி பார்க்கையில் எப்படிப் பார்க்க முடியுமோ அது போல பிரார்த்தனைக்கு நடந்து செல்லும் காந்தியின் முகம் தோன்றி மறையும்.

காந்தி படம் எடுத்துக் கொண்டிருக்கையில் அதைப் பற்றி செய்திகள் வரும். கூட்டமாக கூட்டிய மக்களை ஒழுங்குபடுத்துவதற்கும் போதும் போதும் என்று ஆகிவிட்டதாம். சிலரின் சட்டைப்பையில் இருந்த பால்பாயிண்ட் பேனா போன்றவற்றை நீக்க சொன்னார்களாம். சிரித்தபடி நின்ற பலரையும் அதட்டி முகத்தை இறுக்கமாக வைக்கச் சொல்ல வேண்டியிருந்ததாம். அப்படியும் ஒரு தவறு கண்டுபிடிக்கப்பட்டது என நினைக்கிறேன்.

நம்ம தமிழ்படங்களில், சண்டைக்காட்சிகளிலும் மற்ற காட்சிகளிலும் மக்கள் கூட்டமாக நிற்பதைப் பார்க்கையில் சிரிப்பு சிரிப்பாக வரும். அதற்கு பதிலாக சில பொம்மைகளை செய்து நிற்க வைத்தால் கூட இயற்கையாக இருக்கும்.

நம்மவர்களுக்கு இந்த சின்ன விஷயங்களிலெல்லாம் அக்கறை இல்லை. ஆனால் இந்தச் சின்ன விஷயங்களில் காட்டும் அக்கறைதான் ஒரு படத்தை முழுமையானதாக மாற்றுகிறது.

முழுமையான ஒரு படமாகத் தர வேண்டும் என்ற அக்கறை இல்லாத பொழுது பிற நுட்பமான விசயங்களில் எப்படி அக்கறை இருக்கும்?

சமீபத்தில் 'கம்பீரம்' என்ற படத்தின் காட்சியை டிவியில் காட்டினார்கள். சரத்குமார் காவல்துறை துணை ஆணையாளர் (அக்னி நட்சத்திரத்தில் ஆரம்பித்து சத்திரியனில் சூடு பிடித்தது இந்த ஏஸி மோகம். அதற்கு முன்னர் கதாநாயகன் சப்-இன்ஸ்பெக்டராகத்தான் இருப்பார்)

வில்லன் அவரிடம், 'சாதாரண இன்ஸ்பெக்டரா இருந்தே...அப்படியே படிப்படியா முன்னேறி அஸிஸ்டெண்ட் கமிஷனராயிருக்கே' என்பார். ஆய்வாளருக்கு அடுத்த பதவி உயர்வு டிஎஸ்பி அல்லது ஏஸி. இதில் படிப்படியாக முன்னேற என்ன இருக்கிறது?

மேலும் ஆய்வாளர் பதவிக்கு யாரும் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவது இல்லை. உதவி ஆய்வாளர்தான். உதவி ஆய்வாளராக சேரும் ஒருவர் ஏஸியாவதற்குள் குறைந்தபட்சம் ஐம்பது வயதாவது ஆகிவிடும். அதுவும் சரத்குமார் போல நேர்மையானவர்கள் இன்ஸ்பெக்டராக நீடிப்பதே கஷ்டம். இதில் ஏஸி எப்படி ஆவது?

இன்னொரு படத்தில் இன்னும் வேடிக்கை! சத்யராஜ் கான்ஸ்டபிளாக சேர்ந்து கடைசியில் டிஜிபி ஆகி விடுவார்!!

திரைப்படங்களில் சட்டம், நீதிமன்றம் போன்றவை எவ்வித ஆய்வும் இன்றி கேலிக்கூத்தாகத்தான் இருக்கும். இத்தகைய காட்சிகளால் பல தவறான செய்திகள் மக்களை சென்று சேர்கின்றன. இதற்காகவே முன்பு மரத்தடி யாஹு குழுமத்தில் 'பயாஸ்கோப்பு போட்டி' என்று ஒன்று நடத்தினோம். போர்ட் கார் வரை பரிசாக வைத்திருந்தாலும், அமைதியாக நடந்தது. பின்னர் டிவி பார்ப்பது குறைந்து போனதால் தொடரவில்லை.

அதாவது ஒரு திரைப்படக்காட்சியினைப் பற்றி எழுதுவேன். உறுப்பினர்கள் அதில் சட்டபூர்வமாக என்ன தவறு என்று சுட்டிக்காட்ட வேண்டும்.

சுவராசியமாகத்தான் இருந்தது என்று பலர் கூறினர். உண்மையில் இந்த ஐடியா என்னுடையது அல்ல. கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கையில் மாதமொருமுறை மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு பேருந்தில் செல்வேன். ஒரு முறை என்னுடன் பயணம் செய்தவர் மும்பையில் ஏதோ நிறுவனத்தின் பெரிய அதிகாரி. அவர்தான் நான் என்ன படிக்கிறேன் என்பதைத் தெரிந்து கொண்டு எவ்வாறு நான் இந்தத் தொழிலில் முன்னுக்கு வர வேண்டும் என பல ஆலோசனைகளைச் சொன்னார்.

எல்லாவற்றையும் மறந்துவிட்ட நான், அவர் லண்டனில் பார்த்த பிபிசி நிகழ்ச்சியை பற்றி சொன்னதை மட்டும் நினைவில் வைத்திருகிறேன். அந்த நிகழ்ச்சியில் இப்படித்தான் ஒரு நிகழ்ச்சி விவரிக்கப்பட்டு பங்கு கொள்பவர்களிடம் கேள்வி கேட்பார்களாம். பின்னர் அந்தக் கேள்வியோடு சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர் பதில் கூறுவாராம்......

பயாஸ்கோப் போட்டி போன்ற ஒரு நிகழ்ச்சியை நமது தனியார் தொலைக்காட்சி நிலையங்கள் நடத்தலாம். வரவேற்பு இருக்கும் என நினைக்கிறேன். ஏனெனில் சினிமாக் காட்சிகள் இருக்கிறதே!

தமிழ் திரைப்படங்களில் சட்டம், நீதிமன்றம் போன்றவை நன்றாக ஆய்வு செய்து எடுக்கப்பட்ட படம், என்னைப் பொறுத்தவரை 'கெளரவம்' மட்டுமே. ரேவதி, சிவகுமார், அம்பிகா நடித்த மற்றொரு படமும் இதில் சேர்க்கலாம். சில மாதங்களுக்கு முன்னர் ஏதோ ஒரு சேனலில் இரவில் பாதி தூங்கியபடியே அவ்வப்போது 'கைது' என்ற படம் பார்த்தேன். தற்போது அனைத்தும் மறந்துவிட்டது. அண்ணாமலை டிவி சீரியலில் கோமதி நாயகமாக வருகிறாரே அவர் கதாநாயகர்...இயக்குஞரும் அவரே என நினைக்கிறேன். கைது செய்வதின் சட்ட நுணுக்கங்களையும், பிரச்னைகளையும் ஆராயும் படம். ஆனால் ரொம்பவே மெனக்கெட்டதால் டாகுமெண்டரி மாதிரி ஆகியிருக்கும் என நினைக்கிறேன். உங்களில் யாருக்காவது இப்படத்தைப் பற்றி தெரியுமா?

'மை கசின் வின்னி' என்ற ஆங்கில நகைச்சுவைப் படம் பார்த்தேன். முழுக்க முழுக்க நகைச்சுவைப் படம்தான். ஆனால், காட்சியமைப்புகளிலும், திரைக்கதையிலும், பாத்திரத் தேர்விலும், நீதிமன்ற விசாரணையிலும் அவ்வளவு நம்பகத்தன்மை! தவற விடக்கூடாத படம்!

அதுவும் நீதிமன்றங்களில் பணிபுரிபவர்கள் மிகவும் ரசிப்பார்கள்....காதலையே கட்டிக் கொண்டு அழாமல், நம்மவர்கள் இப்படி ஒரு படம் தயாரிக்கக்கூடாதா? ஹூம்....

நன்றி : வலைப்பூ (02.04.2004)



சமீபத்தில் ‘சிகாகோ’ என்ற மியூசிகல் படம் பார்த்தேன். பாராட்ட நிறைய விடயங்கள் இருந்தாலும் குறிப்பிட விரும்பு ஒரு விஷயம், படமென்னவோ மியூசிக்கல்தான். பாத்திரங்கள் நினைத்த நேரத்தில் பாட்டுப்பாடி ஆட ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் ஒரு குற்றவியல் வழக்கு மற்றும் நீதி விசாரணையை பொருந்து அவ்வளவு நம்பகத்தன்மை.


ஒரு நாள் பிரபலங்கள்?

சென்ற பதிவில் தங்கள் கருத்துகளை எதிர்வினையாக பதிந்தவர்களுக்கு நன்றி. மேலும் விவாதிக்கப்பட வேண்டிய விடயம். இவ்வாறு முதலாவது வந்தவர்களை குறைத்து மதிப்பிடுவதற்காக இல்லை அந்த பதிவு. ஆனால், முதல் மதிப்பெண் பெற வேண்டும் என்று எல்லையே இன்றி தங்களை வருத்திக் கொள்ள முயலும் மாணவர்கள்...இறுதியில் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் படிப்பு என்ற நிலையில் சென்று நிற்கப்போகிறார்களோ என்ற பயம் எனக்கு உண்டு!

18.5.07

ஒரு நாள் பிரபலங்கள்?

வருடா வருடம், பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவருகையில், மற்ற செய்திகளை பின் தள்ளி நம்மில் பெரும்பாலோனோர் ஆர்வத்துடன் கவனிப்பது, யார் மாநிலத்திலேயே முதலாவதாக வந்தவர் என்பதுதான். ஊடகங்களும், மக்களின் இந்த பெரும் ஆர்வத்தினை கவனத்தில் கொண்டு முதலாவது வந்தவரின் குடும்பம், பள்ளி மற்றும் எதிர்காலக் கனவுகள் இவற்றிற்கு பெரும் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுகின்றன...

ஒரு மாநிலத்திலேயே அதுவும் பல்லாயிரக்கணக்கானவர்கள் பெரும் முயற்சியெடுத்து பங்கு பெரும் தேர்வில் முதலாவது வருவது என்பது சாதாரணமானதல்ல. மேலும் அவ்வாறு முதலாவது வருபவர்களின் மதிப்பெண்களை கவனிப்போமென்றால், நம்மில் பலரின் கற்பனைக்கும் எட்டாத அளவில் இருக்கிறது.

இப்படிப்பட்டவர்கள் ரத்தமும், சதையுமான மனிதர்களாக இருக்கக்கூடுமா என்ற சந்தேகம், பள்ளி நாட்களில் இருந்து என்னைத் தொடர்கிறது.

இவர்கள் அசாதரணர்கள் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

ஆனால், இத்தகைய அசாதரணத்துவம் இவர்களின் வாழ்க்கையில் இவர்களை பின் தொடர்கிறதா என்ற கேள்விக் குறிக்கு எந்தப் ஊடகமும் இது வரை விடை தரவில்லை என்றே கருதுகிறேன்.

ஆண்டு தோறும் இவ்வாறு அசாத்திய மதிப்பெண் பெறும் சில மாணவர்கள் ஊடகங்களால் முன்னிறுத்தப்படுகிறார்கள். ஆனால், இன்று என்னவாகியிருக்கிறார்கள் இவர்கள்?


***

தமிழகத்தினைப் பொறுத்தவரை இன்றைய நிலையில் சாதனையாளர்கள், பிரபலங்கள் என்று கருதப்படுபவர்கள் அரசியல்வாதிகள், திரைப்படத்துறையினர் மற்றும் விளையாட்டு வீரர்கள். மாநிலத்திலேயே முதலாவது வந்த அசாதரணர்கள் இவற்றுள் ஒன்றாக உருப்பெற்றதாக நான் இதுவரை அறிந்ததில்லை.

அடுத்ததாக, தொழிலதிபர்கள்! கலாநிதி மாறனோ, சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியோ மாநிலத்தில் முதலாவதாக வந்திருக்க வாய்ப்பில்லை.

தமிழக ஊடகங்களால் பிரபலப்படுத்தப்படும் உயர்நீதிமன்ற நீதிபதிகளோ, வழக்குரைஞர்களோ மாநிலத்தில் முதலாவதாக வந்திருக்கும் சாத்தியக்கூறுகள் இல்லவே இல்லை...ஏனெனில் அப்படி வருபவர்களுக்கு சென்னை மருத்துவக் கல்லூரி அல்லது கிண்டி பொறியியற் கல்லூரியினைத் தவிர வேறு கல்லூரிகள் இருப்பதாக தெரிந்திருப்பதில்லை.

சரி, தமிழகத்தில் இன்று மருத்துவத்தின் ஒவ்வொரு துறையிலும் பிரபலமான மருத்துவர் என்று சிலரை குறிப்பிடலாம். இவர்களில் எங்காவது ஒளிந்திருக்கிறார்களா...இந்த அதிசய மனிதர்கள்?

பொறியாளர்களோ சக பொறியாளர்களைத் பின் தள்ளி தன்னை பிரபலமாக முன்னிறுத்துவது அபூர்வம். தனியே கட்டிடக்கலை நிபுணராக பணி செய்பவருக்கு மட்டுமே அது சாத்தியம். அகில இந்திய அளவில் நான் அறிந்த பிரபலமான கட்டிடக் கலை நிபுணர் ஹஃபீஸ் காண்டிராக்டர்! அவ்வாறு தமிழகத்தில் யாராவது இருக்கிறார்களா...அவ்வாறென்றால் அவர் மாநில அளவில் முதலில் வந்தவரா என்று கேட்க வேண்டும்!

ஒருவேளை பொறியியல் அல்லது மருத்துவம் படித்த பின்னர் இந்திய சிவில் பணிக்கு சென்று விட வாய்ப்பு உண்டு! காவலர்களைப் பொறுத்தவரை ‘சட்’டென்று நினைவுக்கு வருவது எப்வி அருள், விஆர் லட்சுமி நாராயணன், பரமகுரு, மோகன்தாஸ், வால்டர் தேவாரம், கார்த்திகேயன், விஜயகுமார். ஆட்சிப்பணியாளர்களில் சேஷன் இந்திய அளவில் பிரபலமானார்...தமிழக அளவில் நின்று போனவர்களில் என்றால் சிறைக்குப் போன ஹரி பாஸ்கரும், நாகராஜனும் மட்டுமே பிரபலங்களாக நினைவுக்கு வருகிறார்கள். இவர்களில் சிலர் நன்றாக மதிப்பெண் எடுத்தவர்கள் என்று அறிவேன். ஆனால் பதினோராவது வகுப்பில் மாநிலத்திலேயே முதலாவது வந்ததாக எங்கும் படிக்கவில்லை. வெளியுறவுத்துறையில் பிரபலம் என்றால் பார்த்தசாரதி, ராஜீவ் காலத்தில் ராஜினாமா செய்தவர் பின்னர் ஹிந்து ராம். யாராயினும் மாநிலத்தில் முதலாவது வந்தவர்களா?

ஒருவேளை விஞ்ஞானியாக...அப்துல் கலாம்? சரி, சுஜாதா ரங்கராஜன். இவர்கள் இருவரும் பொறியியற் கல்லூரியில் இடம் கிடைக்கும் அளவு கூட மதிப்பெண் பெற்றிருக்கவில்லை என நினைக்கிறேன். இளங்கலை அறிவியல் படித்து பின்னர் மூன்று வருடம் எம் ஐ டி டிப்ளமோ பெற்றவர்கள்.

தமிழகத்தில் இன்று புகழ் பெற்ற எழுத்தாளர்களாக, ஓவியராக, ஆடை அலங்கார நிபுணர்களாக, சமையற்கலை விற்பன்னர்களாக, சமூக சேவகராக, மத தலைவராக அல்லது வேறு ஏதாவது துறையில் முன்னோடியாக விளங்கும் எவராவது ஒருவராக இவ்வாறு மாநிலத்தில் முதலாவது வந்தவர்கள் இருக்கிறார்களா?

இல்லையென்றால், பின்னர் எங்கேதான் சென்றார்கள்?

10.5.07

புகழின் சங்கடங்கள் aka புகழ் தரும் புனிதம்-II

நான் பழகிய பல சீனியர் வழக்கறிஞர்களிலேயே சுவராசியமான மனிதர் யாரென்று கேட்டால் அவரைத்தான் சொல்ல வேண்டும். அவரது அலுவலகத்தில் சட்டம், வழக்குகள் பற்றி விவாதித்ததை விட மற்ற பல பொது விஷயங்களை விவாதித்ததுதான் அதிகம். ஒரு காலத்தில் மிக்க செல்வாக்குடன் தொழிலில் கோலோச்சிய அவர், உடல் நிலை பாதிக்கப்பட்டு ஏறக்குறைய கட்சிக்காரர்கள் அனைவரையும் இழந்து, அலுவலகத்திலேயே பெரும்பான்மையான நேரங்களில் அடைபட்டுக் கிடந்தது எங்கள் விவாதங்களுக்கு வசதியாகப் போய்விட்டது.

ஷேக்ஸ்பியரையும் சாமர்சாட் மாஹமையும் மற்றும் பல ஆங்கில கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் மேற்கோள் காட்டுவார். புகழ்ந்து பேசுவார். ஒரு முறை பொறுக்க முடியாமல் நான், 'நீங்கள் தமிழில் யாரையும் படித்ததில்லை. அதனால்தான் ஆங்கில இலக்கியத்தை இப்படிப் பாராட்டுகிறீர்கள்' என்றேன். முகத்தில் ஒரு சின்ன அதிர்ச்சி. சமாளித்துக் கொண்டு, 'போடா முட்டாள்! இருக்கவே இருக்க முடியாது' என்று மேசையில் எப்போதும் போலவே நீளமான தனது ஆள்காட்டி விரலால் தட்டியபடி தலையை ஒரு குலுக்கு குலுக்கியபடி மறுத்தார்.

இரண்டு நாட்களில் ஜெயகாந்தனின் 'அவர்கள் உள்ளே இருக்கிறார்கள்' என்ற புத்தகத்தோடு அலுவலகம் சென்றேன். 'இதைக் கொஞ்சம் படியுங்கள்' என்று அவர் கைகளில் அந்தப் புத்தகத்தை திணித்து விட்டு நீதிமன்றம் சென்று விட்டேன். மத்தியானமாக அவரது அலுவலகம் பக்கம் வந்தால், மனிதர் நான் வந்தது கூட தெரியாமல் புத்தகத்தின் மீது தலையை கவிழ்த்து படித்துக் கொண்டிருந்தார். லேசாக தொண்டையை செருமியபடி, 'என்ன எப்படி இருக்குது?' என்று கேட்டேன். என்னை கொஞ்சம், ஏதாவது நம்ப முடியாத ஒரு நிகழ்ச்சியினை பார்ப்பது போன்ற ஒரு வெறித்த பார்வையில் பார்த்தவர், 'எப்படி எழுதியிருக்காண்டா? அப்படியே சினிமாவா பாக்கற மாதிரி இருக்கு' என்றார் ஒரே வாக்கியத்தில்.

'இன்னும் இருக்கு பொறுங்க' என்றேன்.

சாயங்காலத்துக்கெல்லாம் முடித்து விட்டு இன்னும் ஏதாவது இருக்கா என்பது போல பார்த்தார். பேசாமல் புத்தகத்தை வாங்கி வைத்துக் கொண்டேன். அடுத்த நாள், கி.ராஜநாராயன் 'கோபல்லபுரத்து மக்கள்' என்ற புத்தகத்தை கொடுத்தேன். 'என்ன! அவன் எழுதுன புத்தகத்தை தா' என்றார் கண்களில் எரிச்சலுடன். 'இதப் படிங்க சொல்றன்' என்றேன்.

அன்று மாலை பார்த்தேன் மறுபடியும் அவரை. 'அட! இவன் அவனுக்கும் மேலடா' என்றார். 'நான்தான் சொன்னேன்ல்லா' என்பது போல அவரைப் பார்த்தேன். அவரே தொடர்ந்தார், 'அந்த நாடார் எப்படி கருவாட்டையும், பழைய சோறையும் வச்சு சாப்பிடுறார்னு...அப்படியே எழுதியிருக்காண்டா' அவருக்கு வார்த்தைகள் வரவில்லை. இது வரையும் இல்லாத அவரின் புதிய பரிமாணத்தைப் பார்த்ததாக உணர்ந்தேன். ஏனோ எனக்கு, 'அவர் தனது எப்போதோ இறந்து போன அம்மாவை மீண்டும் ஒரு சிறுவனாக நினைவுக்கு கொண்டு வந்து விட்டாதாக' தோன்றியது.

இதுவே போதும். அவரிடம் பின்னர் ஆங்கில இலக்கியம் தமிழ் இலக்கியம் என்றெல்லாம் வாதிட தைரியம் இல்லை எனக்கு. ஏனெனில் நான் கொடுத்த இரண்டும் புனைக்கதை வகையல்ல. அவை அவரை வெகுவாக கவர்ந்தது ஆச்சர்யமில்லை. ஆனாலும் அந்த சீனியர் வழக்கறிஞரை தெரிந்த யாரும் இந்த அவரது சொற்கள் தமிழ் இலக்கியத்தின் மிகப்பெரிய வெற்றி என்று ஒத்துக் கொள்வர்.

அவர் திரைப்படங்களை பார்க்கும் வழக்கம் உண்டு என்பதை அவர் பேசியதிலிருந்து நான் அறிந்திருந்தாலும், நான் அவருடன் பழகிய பல வருடங்களில் அவர் திரைப்படம் எதுவும் பார்க்க விரும்பியதேயில்லை. கேட்டால், 'போலாம்தான். பக்கத்திலே தமிழன் உட்கார்ந்திருப்பானே...தமிழன்' என்பார் ஒரு கேவலமான தொனியில். அவர் பழைய காலத்தில் வாழ்ந்து வந்தார். செம்மீனை 'இட் ஈஸ் நாட் அன் எண்டர்டெயின்மெண்ட் பட் அன் எக்ஸ்பீரியன்ஸ்' என்பார். எம்.எஸ்.சுப்புல்ட்சுமியின் சாரீரத்தை மட்டுமல்லாமல் சரீரத்தினையும் 'என்னா அழகு' என்று வியப்பார். 'விஸ்கியும், இரவும் பின்னணியில் சௌடையாவின் வயலினும் இருந்து விட்டால் போதும். அதைவிட சொர்க்கம் எதுவும் இருக்கப் போவதில்லை' என்றிருக்கிறார்.

***

அவர் திரைப்படங்களைப் பார்க்கும் வழக்கம் நான் அவரிடம் பழகிய பல வருடங்களில் இல்லாதிருந்தாலும் அந்த ஊரிலுள்ள திரைப்பட வியோகஸ்தர்களிடமும் திரையரங்க உரிமையாளர்களிடமும் அவருக்கு அதிக தொடர்பு இருந்தது, அவர்களுக்கான வக்கீல் என்ற முறையில். ஊரே வியக்க வழக்கு நடத்திய காலமெல்லாம் கடந்து விட்டிருந்தாலும் அவரின் பல ரசமான குணங்களுக்காக பழைய கட்சிக்காரர்களின் நட்பும் மரியாதையும் மிஞ்சியிருந்தது. அதனால் சிலர் மரியாதை நிமித்தமாகவும் சிலபல விஷயங்களுக்காகவும் அலுவலகம் வருவதுண்டு. இதன் பலனெல்லாம் எனக்குத்தான். அதுவும் புதுப்பட வெளியீட்டின் போது நல்ல பலனிருக்கும். 'டிக்கட் வாங்கித் தாடா' என்று பல நண்பர்கள் தேடி வருவர். ஆனாலும் காசு கொடுக்காமலெல்லாம் டிக்கட் எடுப்பதில்லை. ஒன்றிரண்டு அரங்குகளில் எங்கள் வண்டிகளைப் பார்த்தாலே நிர்வாகி ஓடி வருவார் வண்டி பாதுகாப்பாளனிடம் ,'அவர்களிடம் காசு வாங்காதே' என்று. ஆனாலும் நாங்கள் அதனைக் கூட ஏற்பதில்லை. ஆனாலும் வேறு ஒரு சடங்கு உண்டு. அதனை மறுக்க முடியாது.


***

மற்ற இடங்களைப் பற்றி தெரியாது. ஆனால் தென்மாவட்டத்து திரையரங்குகளில் மேல்வகுப்பு இருக்கைகளுக்கு செல்பவர்கள் ஒரு விஷயத்தை, சற்றே எரிச்சலுடன் கவனித்திருக்கலாம். படம் ஆரம்பித்து சில மணித்துளிகளில் தேநீர் அல்லது காப்பி அரங்கு நிர்வாகியால், அவரது தனிப்பட்ட விருந்தினர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த தேநீர் உபசரிப்பினை படம் ஆரம்பிப்பதற்கு முன்னரோ அல்லது இடைவேளையின் போதோ கடைபிடிக்கலாம். ஆனால் படம் நடக்கும் போது இடையில் கவனிப்பதுதான் திரைஅரங்குகளுக்கு விருந்தினர்களாய் போகிறவர்களுக்கு அரங்க நிர்வாகத்தால் அளிக்கப்ப்டும் உச்சகட்ட மரியாதை. இந்தப் பழக்கம் எப்படி ஆரம்பித்தது என்பது தெரியாது. என்னுடைய சந்தேகப் பார்வை வழக்கம் போல 'அரசு அலுவலர்கள்' மீதுதான்.

முன்பெல்லாம், திரையரங்குகளில் 'இலவச அனுமதிச் சீட்டு' என்று ஒன்று உண்டு. அதன் பெரும்பான்மையான பயனாளிகள் அரசு அலுவலர்கள். இந்த அரசு அலுவலர்களுக்கு தாழ்வு மனப்பான்மையோ என்னவோ சில வேடிக்கையான பழக்கங்கள் உண்டு. அரசு ஜீப்பில் பார்த்திருக்கிறீர்களா? அதில் பயணம் செய்வதிலேயே பெரிய அதிகாரி, அவர் எவ்வளவு வயதானவராக உடல் முடியாதவராக இருந்தாலும் சரி, ஓட்டுநருக்கு இந்தப் பக்கம் உள்ள கதவருகில்தான் அமர்ந்திருப்பார். அப்போதைய ஜீப்புகளில் கதவு வேறு கிடையாது. பின் பக்கத்தில் பாதுகாப்பாக உட்கார்ந்து பயணம் செய்த பெரிய அதிகாரியை நான் பார்த்ததேயில்லை. ஜீப் இருக்கையில் அவர் முதுகு படும் இடத்தில் மட்டும் ஒரு வண்ண மயமான டர்க்கி டவல் இருக்கும்.

இப்படிப்பட்ட அரசு அலுவலர்கள் பொது இடங்களில் கூட தங்களது தனித்தன்மையை விட்டு விடுவார்களா என்ன? எனவே திரையரங்குகளில் படம் நடந்து கொண்டிருக்கும் போதே தேநீரை வியோகிக்கும் இந்த வீம்பான பழக்கத்தினை, மற்ற வாடிக்கையாளர்களின் வெறுப்பையும் மீறி 'இலவச அனுமதிச்சீட்டின்' உபயத்தில் படம் பார்க்கும் அரசு அலுவலர்களின் பெரிய ஈகோவை திருப்திப்படுத்த வேண்டி திரையரங்க நிர்வாகிகள் ஆரம்பித்து வைத்திருக்கலாம். எங்களுக்கும் இப்படிப்பட்ட மரியாதைகள் நடைபெறும். இதனைப் பற்றி இவ்வளவு மோசமாக சொன்னாலும், அதை அனுபவிப்பதில் ஒரு ரகசியமான சுகம் இருக்கும். அதுவும் இந்த கேபிள் டிவி காலங்களுக்கு முன்னர் திரையரங்குகள் கோலோச்சிய காலத்தில் திரையரங்கு நிர்வாகத்தால் தனிப்பட்ட முறையில் கவனிக்கப்படுவதென்பது ஒரு கர்வம் கொள்ளத்தக்க விஷயம்தான். ஆனாலும் சில சமயம் இப்படிப்பட்ட கர்வம் மிகுந்த கௌரவங்களே நமக்கு எமனாக அமைந்து விடுவதுமுண்டு.

***


நான் சொன்ன அந்த சீனியர் வழக்கறிஞர் சினிமா பார்ப்பதில்லை என்றாலும், பேச்சு வாக்கில் ஒரு நாள் வேறு ஒரு ஆசையை வெளியிட்டார்.

"அது என்னடா 'புளு பிலிம்'. எல்லாரும் பேசிக்கிறாங்களே! அதுல அப்படி என்ன விசேஷம்?"

அவரை நன்கு அறிந்திருந்த எனக்கு அவரது அந்தக் கேள்வி அதிர்ச்சி அளிக்கவில்லை.

"நீங்க பார்த்ததேயில்லையா?" அப்பாவியாகக் கேட்டேன்.

அவர் பதில் சொல்வதற்கு முன்னர் நானே தொடர்ந்தேன், ஆனால் ஆங்கிலத்தில் “நீங்கள் நினைப்பது போல அல்ல 'புளு பிலிம்'. அது உங்கள் கற்பனைக்கெல்லாம் மிஞ்சி இருக்கும். நீங்கள் அதைப் பார்க்க நேரிட்டால் மிகவும் அதிர்ச்சி அடைவீர்கள்"

இதை நான் சொன்ன நேரத்தில் அவருக்கு பேரன் பேத்தி எடுத்திருந்த வயது. எனக்கோ ஒரு பெண்ணை முத்தமிட்ட அனுபவம் கூட இல்லை. நாம் மதிக்கும் பெரியவர்களும் நம்மைப் போலவே காதலுணர்வு கொண்டவர்கள் என்பதனை அறிந்திருந்தாத இளம் பருவம் எனக்கு. மேலும் 'புளு பிலிம்' அனுபவங்கள், 'பாலியல் உறவு என்பது இதுதான்' என்று ஏதேதோ கற்பனை மட்டுமே செய்து வைத்திருந்த என்னை, அதிர்ச்சி அடைய வைத்திருந்ததும் உண்மை.

"ஆங்! ஆனால் அந்த மாதிரிப் படங்களெல்லாம் உங்களை மாதிரி இளைஞர்களுக்கு இல்லை. அது உங்கள் மணவாழ்க்கையைப் பாதிக்கும். அவை என்னை மாதிரி நபர்களுக்குத்தான். எங்களுக்கு வேறு எதுவும் மிச்சம் இல்லை" அவர் தனது கருத்தை ஆங்கிலத்திலேயே தொடர்ந்தார்.

அட்ரா சக்கை. இப்படி ஒரு சப்பைக் கட்டு இருக்கா!

'எப்படியோ நம்ம ஆளுக்கு இப்படி ஒரு ஆசை. இது தெரியாமல் போச்சே! என்ன செய்வது'. ஒரு சின்ன பொறி தட்டியது.

"ஆமா! நம்ம 'ராஜாராணி' தியேட்டரிலதான் ராத்திரி படம் போடுறாங்களே. ஏறக்குறைய 'புளுபிலிம்'தான். ரொம்ப மோசமாவும் இருக்காது"

ராஜாராணி தியேட்டர் எங்கள் அலுவலகத்துக்கு அருகில் இருக்கும் ஒரு திரையரங்கம். அதில் மாதத்தில் பாதி நாட்கள் கொஞ்சம் ரசபாசமான ஆங்கிலப் படங்கள்தான். அதுவும் ராத்திரி ஆட்டமென்றால் காரம் கொஞ்சம் தூக்கலாக இருக்கும். முக்கியமாக அதன் நிர்வாகி அடிக்கடி எங்கள் அலுவலகத்துக்கு வந்து பேசிவிட்டு போவார்.

"அப்படியா! அப்படிப்பட்ட சினிமாவா போடுறான் அங்க?" ஒரு கேலிப் புன்னகை தவழக் கேட்டார்.

"பின்ன நம்ம ஊரிலேயே ராஜாராணிதான் இதுக்கு பேமஸ்" எடுத்துக் கொடுத்தேன்.

"அந்தப் பய வரட்டும் கேட்கிறேன்" உரையாடலை முடித்து வைத்தார் அத்துடன்.


***


அடுத்த வாரமே அந்த திரையரங்கு நிர்வாகி அலுவலகம் வந்தார். வந்த சிறிது நேரத்திலேயே சீனியர் ஒரு நமட்டுச் சிரிப்பு முகத்தில் தவழ ஆரம்பித்தார், "என்ன! உங்க தியேட்டரில என்னென்னமோ படமெல்லாம் போடுறீங்களாம். சொல்லிக்கிறாங்க"

வந்தவர் உடனே புரிந்து கொண்டார். ஆனாலும், "அப்படியொண்ணும் இல்லை அண்ணாச்சி. ஏதோ இங்கிலீசு படம் போடுறோம். நீங்கதான் வரவே மாட்டீங்கறீங்க"

"போடாப் போ! அங்கெல்லாம் எப்படி நானாவது, வர்ததாவது..."

"என்ன அண்ணாச்சி! அப்படி உங்களை வரச்சொல்லுவனா. அப்படியே ஒரு நா தியேட்டருக்கு வர்ற மாதிரி வந்துட்டு படத்தையும் பாத்திட்டு போய்டலாமே. ஆபீஸருந்து வீட்டுக்கு போற வழியில ஒரு எட்டு அங்கிட்டும் வந்திட்டுப் போலாமே"

இதைக் கேட்டுக் கொண்டிருந்த, எங்கள் அலுவலகத்துக்கு விடுமுறை நாட்களில் வரும் சீனியரின் நண்பரான ஒரு நீதிபதிக்கு முகமெல்லாம் மலர்ந்து போனது.

சீனியரோ முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டிருந்தார், "இல்ல. அதெல்லாம் சரிப்படாது. எவனாவது அங்க பாத்தான்னா நல்லாருக்காது"

எங்களூர் அப்படிப் பெரிய ஊரில்லை. யாரையும் அங்கு கொஞ்ச பேருக்காவது தெரியும். அதுவும் பல வருடங்கள் வக்கீலாக காலத்தை ஒட்டிய அந்த சீனியர் வழக்கறிஞரைப் பற்றி சொல்ல வேண்டாம்.

வந்தவருக்கு உற்சாகம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது, "என்ன அண்ணாச்சி இப்படி சொல்றீங்க. என்னைக்குன்னு சொல்லுங்க. காரை அனுப்புறன். நேரே ஆபீஸூக்குள்ள வந்துருங்க. படம் ஆரம்பிச்ச பின்ன யாரும் பாக்காம பாத்துட்டு வந்துரலாம். என்ன சொல்றீங்க"

சீனியர் ஒன்றும் சொல்லவில்லை.

"நீங்க என்ன சொல்றது. நா உங்களை கூட்டிட்டுப் போறன் நாளைக்கு"

"வே! என்ன போலாமா?" என்றார் சீனியர் நீதிபதியிடம்.

" தம்பி இவ்வளவு சொல்றாரு. போயிட்டு வருவமே"


***


அடுத்த நாள் சொல்லி வைத்த மாதிரி நீதிபதி அலுவலகம் வந்து விட்டார். வேலை முடிய காத்திருந்தோம். சரியாக பத்து மணிக்கெல்லாம் ஃபோன், "அண்ணாச்சி கார் வருது. வந்துருங்க" சீனியர் பதில் பேசுவதற்குள் அந்தப்பக்கத்தில் ஃபோன் வைக்கப்பட்டு விட்டது.

"வே! என்ன போலாமா?" மீண்டும் அதே தொனியில் கேட்டார்.

நீதிபதியிடம் இருந்து ஒரு நமட்டுச் சிரிப்புதான் பதிலாக வந்தது.

"சரி போவம். கொஞ்ச நேரம் பாப்பம். இல்லாட்டா வந்துருவம். ஏல! என்ன நீயும் வாரயா?" என்று என்னைப் பார்த்தார்.

"எனக்கொண்ணும் இல்லை. நா வீட்டுக்கு போறன்" எந்தவித உணர்வும் இல்லாமல் சொன்னேன். உண்மையில் எனக்கு பெரிய ஆர்வம் எல்லாம் இல்லை.

"இல்ல வா! ஏதாவதொண்ணுக்கு நீ வேணும்"

***


நான் முன்னான் ஏற, சீனியரும் நீதிபதியும் பின்னிருக்கையில் அமர கார் நேராக திரையரங்குக்குச் சென்றது. ஏற்கனவே டிக்கட் எல்லாம் முடிய தியேட்டரில் அவ்வளவு கூட்டமில்லை. தியேட்டர் வாசலில் ன்ற நிர்வாகி, வேகமாக எங்களை அவரது அலுவலகம் எந்தவித பரபரப்பும் இல்லாமல் அழைத்துச் சென்று விட்டார். சீனியரும் நீதிபதியும் சாதாரணமாக யாரும் கவனிக்காமலேயே உள்ளே சென்று விட்டார்கள்.

திரைப்படத்துக்கு முன்னால் உள்ள சிலைடு, விளம்பரப் படங்கள் போன்ற சாமாச்சாரங்கள் ஏற்கனவே ஆரம்பித்து விட்டிருந்தது தெரிந்தது. கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.

"எல்லாம் உள்ளே போனப்புறம் போனாப் போதும்" என்றார் சீனியர்

"படத்துல முதல்ல ஒண்ணும் இல்ல. ஒரு பத்து நிமிஷம் கழிச்சு லைட்டெல்லாம் அணச்சப்றம் அமைதியா உள்ள போய் உக்காந்துக்கங்க. யாருக்கும் தெரியாது" என்றார் நிர்வாகி.

"வாங்க. நேரா பாக்ஸுக்கு போயிரலாம்" பத்து நிமிடம் கழித்து நிர்வாகி எழுந்தார்

'பாக்ஸ்' என்பது எங்களூர் தியேட்டர்களில் புரெஜக்டர் அறைக்கு இரண்டு பக்கமும் அரங்குக்கு மேலாக கண்ணாடியெல்லாம் வைத்து குளிர் சாதன வசதி செய்திருப்பார்கள். ஒரு 'பாக்ஸில்' அதிகமாக பத்து முதல் இருபது நாற்காலிகள் இருக்கும்.

உள்ளே நல்ல இருட்டு. திரையிலும் ஏதோ இருட்டுக் காட்சியாதலால் கொஞ்சமும் வெளிச்சம் இல்லை. 'டார்ச்' அடித்து கடைசி இருக்கையில் அமரச் சொல்லி விட்டு, 'இருங்க வந்துர்றன்' என்று நிர்வாகி போய்விட்டார்.

அந்த வரிசை கடைசியில் சிலர் அமர்ந்திருக்க காலியாக இருந்த இருக்கையில் முதலில் நீதிபதி அமர, அடுத்து சீனியர் பின்னர் நான் என்று தட்டுத்தடுமாறி அமர்ந்து கொண்டோ ம். எனக்கு அடுத்து இந்தப்பக்கம் இரண்டு பேர். இருட்டில் ஒன்றும் சரியாகத் தெரியவில்லை.


முதலில் திரையில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. யாராரோ வந்தார்கள். யாராரோ போனார்கள். பெரும்பாலும் இருட்டிலேயே நகர்ந்து கொண்டிருந்தது. நாங்களும் யாரும் எங்களுக்குள் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.

கொஞ்ச நேரம் கழிந்தது. இன்னும் திரையில் இருட்டுத்தான். சத்தமும் அதிகம் இல்லை. அங்கிருந்த யாரும் வசனத்திற்காக கவலைப்படுகிறவர்களும் இல்லை. திடீரென 'பாக்ஸில்' இருட்டின் அமைதியைக் தெளிவாக கிழித்து ஒரு வயோதிகக் குரல்,

"அய்யா! வக்கீல் தொரராசும் அவரோட சூனியரும் எங்கய்யா இருக்கீக"

"யாரடா அவன்?" என்று சீனியர் என்னிடம் உறும நான் திரும்பினால் இருக்கையோர நடைபாதையில் ஒரு கிழவர் வட்ட வட்டமாக கம்பிகளாலான ஒரு தூக்கில் காப்பி டம்பளர்களுடன் தடுமாறிக் கொண்டு இருந்தார்.

"இங்க வாய்யா" சீறிய என்னருகே வந்தபடியே, "அய்யா காப்பி கொடுத்தனுப்பியிருக்காக"

"சரி சரி. கொடு" வேகமாக டம்பளர்களை எடுத்து சீனியரிடமும் நீதிபதியிடமும் கொடுத்தேன்.

"இதுக்கு அந்த .........மகன் நான் வந்துருக்கேன்னு சிலைடு போட்டிருக்கலாம்" சீனியர் என்னிடம் முணுமுணுத்தார்.

இடைவேளைக்கு முன்னரே கிளம்பி விட்டோம். படம் பிடிக்கவில்லை.

யாராவது கட்சிக்காரர் வந்து, "சார் இந்தாங்க டீ" என்று நீட்டிவிடுவானோ என்ற பயத்தினாலும் இருந்திருக்கலாம்.

மும்பை
2004


புகழ் தரும் புனிதம்-I

7.5.07

காட் பாதர் - நாயகன் = தேவர் மகன்!

மணிரத்னத்தின் இரவல் சிந்தனைகள் என்ற கட்டுரையினை சென்னைக் கச்சேரி என்ற தனது வலைப்பதிவில் பதிவர் தேவ் எழுதியிருக்கிறார். பின்னூட்டங்களும் சுவையானவை! படித்ததும் நானும் எனது அனுமானம் ஒன்றினை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன். ஏற்கனவே எனது இணைய நண்பர்களிடம் கேட்டதுதான்...யாரும் இதுவரை எனது அனுமானம் சரிதான் என்று கூறாததால், எனது விடாமுயற்சியும் தொடர்கிறது!

நாயகன் படம் காட்பாதர் கதையின் உல்டா என்பதை மணிரத்தினமே மறுக்க மாட்டார். நாயகனில் தமிழர்களுக்கு தொல்லை தரும் காவலரை வேலு நாயக்கர் கொல்வது போல, காட் பாதரில் இத்தாலியர்களிடம் வட்டிக்கு கடன் கொடுத்து தொல்லை கொடுப்பவரை டான் கார்லியோன் கொல்வார். அடுத்த நாள் டீக்கடையில் காசு வாங்க மறுப்பது போல காட் பாதரிலும் ‘கொன்றது யாருக்கும் தெரியாது’ என்று நினைத்திருந்தாலும் எல்லாம் இலவசமாக கிடைக்கும்.

கார்லியோனுக்கு மூன்று மகன்கள். வேலு நாயக்கருக்கு ஒரே மகன். ஆனால் கார்லியோனின் மூத்த மகனும், நாயக்கரின் மூத்த மகனும் முரட்டு குணம் படைத்தவர்கள்...இருவருமே தங்களது தந்தையின் விருப்பத்தையும் மீறி தங்களை அப்பாவின் தொழிலில் இணைத்துக் கொள்வார்கள். தங்களது முரட்டு குணத்தால் ஒரே மாதிரி அழிவார்கள்! அப்பாக்களும் ஒரே மாதிரி அழுவார்கள்!!

கார்லியோன் சுடப்பட்டு மருத்துவமனையில் இருக்கையில், மீண்டும் அவர் மீதான கொலை முயற்சியினை தடுக்க அவரைக் காப்பாற்றும் காட்சியினை ஏற்கனவே மணிரத்னம் தனது மற்றொரு படத்தில் திருடியிருப்பதால், நாயகனில் இல்லை!

ஆக, பழி வாங்கப்படுபவரின் ரத்தம் கண்ணாடியில் தெரிக்கும் காட்சி உட்பட நாயகன், காட் பாதரின் காப்பிதான். ஆனால் இதனை ஏற்றுக் கொள்ளும் அன்பர்கள் காட்பாதரின் அப்பட்டமான inspired movie ‘தேவர் மகன்’ என்ற எனது அனுமானத்தினை ஏற்றுக் கொள்ள யோசிக்கிறார்கள்.



***


நாயகனின் முதல் மகன் ஏற்கனவே செத்துப் போனதால், தேவருக்கு கிடைத்தது, டான் கார்லியோனின் அடுத்த இரண்டு மகன்கள்!

கார்லியோனின் இரண்டாவது மகன் சரியான குடிகாரன். தந்தையின் ஆளுமைக்கு சற்றும் தகுதியில்லாதவன். பின்னர் எவ்வித தயக்கமுமின்றி தந்தையின் இடத்தினை நிரப்ப தம்பியே தகுதியானவன் என அவனுக்கு விட்டுக் கொடுக்கிறான். தேவர் மகனிலும் அவ்வாறே!

இரு படங்களிலும் கதாநாயகனான கடைசி மகனோ, தான் பிறந்த கலாச்சாரத்தினை விட்டு உயர்கல்விக்காக விலகியிருக்கிறார்கள். கத்தோலிக்க பிரிவினை சேர்ந்த இத்தாலிய கார்லியோனின் மகன், புரொட்டஸ்டாண்ட் பிரிவினை சேர்ந்த ஆங்கிலேய பெண்ணை காதலிக்கிறார். அவர்களுக்கிடையேயான கலாச்சார வித்தியாசம் போலவே, தேவர் மகனுக்கும் அவரது காதலிக்கும் வித்தியாசம்.

இருவருக்குமே தங்கள் காதலியுடன் தங்கள் கலாச்சாரத்தினை விட்டு விலகி செட்டிலாகிவிட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.

இரு கதைகளும் கடைசி மகன் தனது காதலியினை தனது வீட்டிற்கு வந்து அந்த சூழ்நிலைக்கே பொருத்தமில்லாத நபர்களையும் பழக்க வழக்கங்களையும் காதலிக்கு அறிமுகப்படுத்துவதில் தொடங்கும்.

தெளிந்த நீரோடை போல அமைதியாக பயணிக்கும் கதை ஒரு சிறிய பொறியில் ‘ஜெட்’ போல வேகம் பிடிக்கும்.

கதையில் ஏற்ப்படும் வேகமான திருப்பங்களில், இரு கதாநாயகர்களும் காதலியினை தற்காலிகமாக பிரிய, சந்தர்ப்ப சூழ்நிலையில் கிராமத்து பெண்ணை மணக்க நேரிடும்.

கடைசி மகன் மீதான கொலை முயற்சியில் காட்பாதர் படத்து மனைவி இறக்கிறார். தேவர் மகன் மனைவி பிழைத்துக் கொள்கிறார்.

பிறந்த இடத்து கலாச்சாரம் பிடிக்காத இரு கதாநாயகர்களும்...கதையின் போக்கில் அதே கலாச்சாரத்திற்குள் தள்ளப்படுவார்கள்.

இருவரது அப்பாக்களும் பேரப்பிள்ளைகளுடன் விளையாடுகையில் மாரடைப்பு ஏற்ப்பட்டு மரிப்பார்கள்.

தந்தையின் பாத்திரத்தை மகன் ஏற்றதன் அடையாளமாக காட்பாதரில் தந்தையைப் போலவே தாடையில் ஏற்ப்படும் அடி! தேவர் மகனில் மீசை!!

தேவர் மகன் திரைக்கதை எழுதியது யாரென்று தெரியாது...சந்தித்தால் கேட்க வேண்டும்...

மதுரை
07.05.07

3.5.07

ஓராண்டு நிறைவு - அன்பிற்கு நன்றி!

தற்செயலாக, இன்று எனது பழைய பதிவுகளை புரட்டுகையில் கிடைத்த செய்தி...எனது இந்த வலைப்பதிவினை ஆரம்பித்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது. மனது உடனே, இந்த வலைப்பதிவினை நான் ஆரம்பிக்க வேண்டும் என்று வேண்டிய, ஏன் வற்ப்புறுத்தவே செய்த சில உள்ளங்களை நினைத்தது. இந்த வலைப்பதிவிற்கு வயது ஒன்று என்றாலும், முன்பு மும்பையில் வசிக்கையில் இதே பெயரில் ஒரு வலைப்பதிவு எழுதி வந்தேன். என்னை ஏறக்குறைய கையைப் பிடித்து அழைத்து வந்து அப்போது வலைப்பதிவில் இறக்கி விட்ட அன்புள்ளத்தினையும், நன்றியோடு நினைக்கிறேன்.

இந்த ஓராண்டில், நேரமின்மையால் நான் ஏற்கனவே இணையத்தில் எழுதியவற்றை மீண்டும் இப்பதிவில் எழுதினேன் என்றாலும், இந்த ஓராண்டில் பல புதிய நண்பர்கள், ஆதரவுக்கரங்கள். பலரது முகம் கூட எப்படியிருக்கும் என்று தெரியாவிட்டாலும் உங்கள் அனைவருக்கும் எனது நன்றி!

ஒவ்வொரு விதத்தில் எனக்கு ஆதரவாயிருந்த, அன்பு பாராட்டியவர்களை ஒவ்வொன்றாக பட்டியலிடுவது, இங்கு தேவையில்லையெனினும் அந்த அன்புக்கு அடையாளமாக ஒருவரை மட்டும் குறிப்பிட வேண்டும். இவரை நான் குறிப்பிடுவதற்கு காரணம், அவரைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. அவருக்கும் என்னைப் பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆயினும் மரத்தடி குழுமத்தில் நான் எழுதிக்கொண்டிந்த இறுக்கட்டத்தில், அன்பு பொங்க சில மடல்கள் அவரிடம் இருந்து வரும். எனக்கு பல முறை வியப்பாக இருக்கும், அதற்கு நான் தகுதியானவனா என்று. இணையத்தை விட்டு சில காலம் விலகி நின்று இப்பதிவினை, மீண்டும் ஆரம்பித்த பொழுது என்னை வாழ்த்தி, முதல் பின்னூட்டம் அவரிடமிருந்து...

நேரமின்மையால் பதிவெழுதாமல் சில வாரம் பொறுத்து எனது கடந்த பதிவினை எழுதியது மீண்டும் அவரிடமிருந்து மடல்!

முகமறியாமலேயே, இணையம் மூலம் ஈடேறும் இத்தகைய நட்பிற்கு ஒரு அடையாளமாக எனது நண்பர் திரு.பலராஜன் கீதா அவர்களை குறிப்பிட்டு அவருக்கு இந்தப் பதிவினை சமர்ப்பிக்கிறேன்!

***

இந்த ஓராண்டில் நான் எழுதிய பதிவுகளை புரட்டிப் பார்க்கையில், ஒவ்வொரு பதிவிலும், பொது அறிவுக்கு பயன் தரத்தக்க ஏதாவது செய்தி கூற வேண்டும் என்ற இப்பதிவின் நோக்கத்திலிருந்து அதிகம் விலகவில்லை என்றே நினைக்கிறேன். சட்டம் என்பது ஒரு கடல், அதில் ஒரு குவளையினை எனது வாழ்நாளில் அள்ளமுடிந்தால் அதுவே பெரிய விடயம். அந்த ஒரு குவளையில் பாதி, இவ்வாறு பதிவெழுவதற்கு படிப்பதால் கிடைக்கிறது என்பதே உண்மை! அதற்காக உங்களனைவருக்கும் நான் நன்றி கூற வேண்டும்.

***

மகிழ்sச்சி தரும் மற்றொரு செய்தி...எதோச்சையாக நேற்று இணையத்தில் தேடுகையில் ஏதோ வலைத்தளம் நடத்திய தேர்வில், எனது வலைப்பதிவில் சிறந்த பதிவு என்று நான்கு நண்பர்கள் ஓட்டு போட்டுள்ளனர். மற்ற பதிவுகளுக்கும் எனது பதிவிற்கும் ஓட்டு வித்தியாசம் ‘டெபாசிட் பறிபோகத்தக்க’ வகையில் இருந்தாலும் பரபரப்பான மற்ற வலைப்பதிவுகளுக்கு இடையில் நம்மையும் சிறந்த பதிவராக கருத நான்கு வாசகர்கள் உள்ளனர் என்பது உற்சாகமளிக்கும் விடயம்.

***

இறுதியாக, ஷரியா குறித்து நான் எழுதிய ஒரு எதிர்வினையினை சரியாக புரிந்து கொள்ளாமல், என் குடும்பத்தினரையும் இழுத்து தனிப்பட்ட வகையில் தாக்கப்பட்ட ஒரு கசப்பான அனுபவம் தவிர வேறு எந்த வகையிலும் நான் புண்படுத்தப்படவில்லை. நானும் இந்த ஓராண்டில் யாரையும் புண்படுத்தவில்லை என்றே நினைக்கிறேன். அப்படி என்னையறியாமல் யாரையேனும் வருத்தமடைய வைத்திருந்தால் அதற்கு தங்களின் மன்னிப்பை வேண்டுகிறேன்

1.5.07

சுஜாதா, சுப்பிரமணியசுவாமி, சூத்திரர்...

எதிரொலி என்ற தனது வலைப்பதிவில் சகோதரர் நல்லடியார், ‘இபிகோவும் இந்து மதமும்’ என்ற தலைப்பில் எழுதியுள்ள பதிவில் கூறியுள்ள ஒரு கருத்தினைப் பற்றி சில விளக்கங்கள் அளிப்பது சிறந்தது என நினைக்கிறேன்.

நமது தண்டனைச் சட்டப்படி ‘பறையர்’ என்று அழைப்பது குற்றம். அதனினும் மோசமான ‘சூத்திரர்’ என்றழைப்பது குற்றமில்லை என்ற வகையில் ஒருவித எண்ணத்தினை தோற்றுவிக்கும் வண்ணம் ஒரு கருத்து கூறப்பட்டுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் திரைப்பட நடிகை சுஜாதா வாரப்பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘வீட்டிலிருக்கையில் நான் தலையை விரித்துப் போட்டு பறச்சி மாதிரி இருப்பேன்’ என்று கூறப்போக பலத்த கண்டனங்கள் எழுந்தன. குறிப்பிட்ட இனத்தவரை இழிவுபடுத்தியதாக வழக்கு கூட பதிவு செய்யப்பட்டு பின்னர் அவர் மன்னிப்பு கேட்டுக் கொண்டதன் பெயரில் பிரச்னை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது என நினைக்கிறேன்.

மற்றொரு சம்பவம் ஜெயலலிதாவின் முதலாவது ஆட்சியின் இறுதிக்கட்டத்தில் நடைபெற்றது. அந்த சமயத்தில் அவருக்கு வேண்டாதவராகிப் போன சுப்பிரமணியசுவாமி அவர் மீது வழக்குகள் பல தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார். ஜெயலலிதா ஆத்திரத்தில் எப்படியாவது அவரை கைது செய்ய வேண்டும் என்று உத்தரவிட, ‘ஸ்காட்லாண்டு யார்டு’க்கு இணையான தமிழக காவல்துறையும் மூளையை கசக்கி அவர் ஏதோ ஒரு பேட்டியில் பயன்படுத்திய ‘pariah’ என்ற ஆங்கில வார்த்தையினை தோண்டி எடுத்தது. தமிழிலிருந்து உள்வாங்கப்பட்டு ஆங்கில அகராதியில் இடம் பெற்றுள்ள இந்த வார்த்தை ‘அரசியல் அநாதை’ என்ற அர்த்ததில் அரசியல் விஞ்ஞானத்தில் பயன்படுத்தப்படுகிறது.

நீதிமன்றத்திலிருந்து திரும்பிய சுப்பிரமணியசுவாமியை இக்குற்றத்திற்காக ரிசர்வ் வங்கி அலுவலகம் அருகே மடக்கி கைது சென்னை மாநகர மொத்த காவல்துறையும் முடுக்கி விடப்பட்டது. சுப்பிரமணியசுவாமியும் தனது இசட் பிரிவு பாதுகாவலர்களை சுட்டி, காவலர்களை மிரட்டியதும் நடந்தது.

பின்னர் சுப்பிரமணியசுவாமி ‘pariah என்ற வார்த்தையின் மூலம் தெரியாது. இனி இந்த வார்த்தையினை ஆங்கில அகராதியிலிருந்து அகற்ற போராடுவேன்’ என்று ஒரு குண்டை தூக்கிப் போட்டார்.

சரி, சுஜாதாவும், சுப்பிரமணியசுவாமியும் செய்ததாக கூறப்பட்ட குற்றம் எங்கு விளக்கப்பட்டது.

சகோதரர் நல்லடியாரின் பதிவில், இபிகோ என்று தலைப்பிலேயே கூறப்பட்டுள்ளதால், அவர் குறிப்பிடுவது இந்திய தண்டனச் சட்டத்தினை (Indian Penal Code) என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால், இவ்வாறான செயல்கள் தவறு என்று கூட கருதப்படாத 1860ம் வருடம் இயற்றப்பட்ட இந்திய தண்டனைச் சட்டத்தில் இத்தகைய குற்றம் பற்றி ஏதும் கூறப்படவில்லை.

1955ம் ஆண்டு இயற்றப்பட்ட Protection of Civil Rights Act என்ற சட்டதில்தான் தீண்டாமைக் குற்றங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. 1989ம் ஆண்டு The Scheduled Castes and the Scheduled Tribes (Prevention of Atrocities) Act என்ற சட்டமும் இயற்றப்பட்டுள்ளது. PCR சட்டத்தின் 7(1)(d) பிரிவில் ‘தீண்டாமை அடிப்படையில் யாரும் அட்டவணை வகுப்பினரை அவமானப்படுத்துவது (insult) அதிகபட்சம் ஆறுமாதம் தண்டனைக்கேதுவான குற்றம்’ எனக்கூறப்பட்டுள்ளது.

எனவே ‘பறையரோ’ அல்லது ‘சூத்திரரோ’ வார்த்தை முக்கியமல்ல. அவமானப்படுத்தும் எண்ணம்தான் ஒரு செயலினை, அது எந்த வார்த்தையாக இருப்பினும் குற்றமாக்க முடியும். இல்லையெனில், பறையர் என்ற வார்த்தையினை ஒன்றுக்கும் மேற்ப்பட்ட இடத்தில் இந்தக் கட்டுரையில் குறிப்பிடும் நானே, குற்றம் செய்தவனாவேன்.

அவ்வாறென்றால், சுப்பிரமணியசுவாமி.? நிச்சயமாக இல்லை. அவர் அந்த வார்த்தையினை பயன்படுத்தியதே வேறு அர்த்தத்தில். நடிகை சுஜாதா கூட குற்றமாகாது. ஏனெனில் அவர் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. சட்டப்பிரிவில் ‘insults a member of a scheduled caste’ என்றுதான் உள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் 1987ம் வருடமே இந்த குற்றம் குறித்து விரிவான விளக்கங்களுடன் பாஸ்தே சுப்பராயலு எதிர் ராபர்ட் மரியதாஸு (1987 CrLJ 387) என்ற வழக்கில் தீர்ப்பு கூறியுள்ளது. இந்த தீர்ப்பினை படிக்கையில், அட்டவணை வகுப்பினர் அல்லாதவரைப் பார்த்து இவ்வாறு கூறுவது குற்றமாகாது எனப்படுகிறது. அட்டவணை வகுப்பினர் மீது பயன்படுத்தப்படுகையிலும், அவமானப்படுத்தும் நோக்கம் இல்லையெனில் குற்றமாகாது என்பதாகவே உள்ளது. உதாரணமாக வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய வரும் ஒரு இளைஞரிடம் அலுவலர், ‘தம்பி நீங்கள் பறையர் வகுப்பினரா?’ என்று வினவினால் அதில் குற்றம் ஏதுமில்லை. ஆனால், ஒருவரின் ஜாதியினை மனதில் கொண்டு ‘இழிபிறவியே’ என்றாலும் சரிதான் ‘சூத்திரனே’ என்றாலும் சரிதான்...அது குற்றமே!

மதுரை
01.05.07