18.5.07

ஒரு நாள் பிரபலங்கள்?

வருடா வருடம், பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவருகையில், மற்ற செய்திகளை பின் தள்ளி நம்மில் பெரும்பாலோனோர் ஆர்வத்துடன் கவனிப்பது, யார் மாநிலத்திலேயே முதலாவதாக வந்தவர் என்பதுதான். ஊடகங்களும், மக்களின் இந்த பெரும் ஆர்வத்தினை கவனத்தில் கொண்டு முதலாவது வந்தவரின் குடும்பம், பள்ளி மற்றும் எதிர்காலக் கனவுகள் இவற்றிற்கு பெரும் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுகின்றன...

ஒரு மாநிலத்திலேயே அதுவும் பல்லாயிரக்கணக்கானவர்கள் பெரும் முயற்சியெடுத்து பங்கு பெரும் தேர்வில் முதலாவது வருவது என்பது சாதாரணமானதல்ல. மேலும் அவ்வாறு முதலாவது வருபவர்களின் மதிப்பெண்களை கவனிப்போமென்றால், நம்மில் பலரின் கற்பனைக்கும் எட்டாத அளவில் இருக்கிறது.

இப்படிப்பட்டவர்கள் ரத்தமும், சதையுமான மனிதர்களாக இருக்கக்கூடுமா என்ற சந்தேகம், பள்ளி நாட்களில் இருந்து என்னைத் தொடர்கிறது.

இவர்கள் அசாதரணர்கள் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

ஆனால், இத்தகைய அசாதரணத்துவம் இவர்களின் வாழ்க்கையில் இவர்களை பின் தொடர்கிறதா என்ற கேள்விக் குறிக்கு எந்தப் ஊடகமும் இது வரை விடை தரவில்லை என்றே கருதுகிறேன்.

ஆண்டு தோறும் இவ்வாறு அசாத்திய மதிப்பெண் பெறும் சில மாணவர்கள் ஊடகங்களால் முன்னிறுத்தப்படுகிறார்கள். ஆனால், இன்று என்னவாகியிருக்கிறார்கள் இவர்கள்?


***

தமிழகத்தினைப் பொறுத்தவரை இன்றைய நிலையில் சாதனையாளர்கள், பிரபலங்கள் என்று கருதப்படுபவர்கள் அரசியல்வாதிகள், திரைப்படத்துறையினர் மற்றும் விளையாட்டு வீரர்கள். மாநிலத்திலேயே முதலாவது வந்த அசாதரணர்கள் இவற்றுள் ஒன்றாக உருப்பெற்றதாக நான் இதுவரை அறிந்ததில்லை.

அடுத்ததாக, தொழிலதிபர்கள்! கலாநிதி மாறனோ, சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியோ மாநிலத்தில் முதலாவதாக வந்திருக்க வாய்ப்பில்லை.

தமிழக ஊடகங்களால் பிரபலப்படுத்தப்படும் உயர்நீதிமன்ற நீதிபதிகளோ, வழக்குரைஞர்களோ மாநிலத்தில் முதலாவதாக வந்திருக்கும் சாத்தியக்கூறுகள் இல்லவே இல்லை...ஏனெனில் அப்படி வருபவர்களுக்கு சென்னை மருத்துவக் கல்லூரி அல்லது கிண்டி பொறியியற் கல்லூரியினைத் தவிர வேறு கல்லூரிகள் இருப்பதாக தெரிந்திருப்பதில்லை.

சரி, தமிழகத்தில் இன்று மருத்துவத்தின் ஒவ்வொரு துறையிலும் பிரபலமான மருத்துவர் என்று சிலரை குறிப்பிடலாம். இவர்களில் எங்காவது ஒளிந்திருக்கிறார்களா...இந்த அதிசய மனிதர்கள்?

பொறியாளர்களோ சக பொறியாளர்களைத் பின் தள்ளி தன்னை பிரபலமாக முன்னிறுத்துவது அபூர்வம். தனியே கட்டிடக்கலை நிபுணராக பணி செய்பவருக்கு மட்டுமே அது சாத்தியம். அகில இந்திய அளவில் நான் அறிந்த பிரபலமான கட்டிடக் கலை நிபுணர் ஹஃபீஸ் காண்டிராக்டர்! அவ்வாறு தமிழகத்தில் யாராவது இருக்கிறார்களா...அவ்வாறென்றால் அவர் மாநில அளவில் முதலில் வந்தவரா என்று கேட்க வேண்டும்!

ஒருவேளை பொறியியல் அல்லது மருத்துவம் படித்த பின்னர் இந்திய சிவில் பணிக்கு சென்று விட வாய்ப்பு உண்டு! காவலர்களைப் பொறுத்தவரை ‘சட்’டென்று நினைவுக்கு வருவது எப்வி அருள், விஆர் லட்சுமி நாராயணன், பரமகுரு, மோகன்தாஸ், வால்டர் தேவாரம், கார்த்திகேயன், விஜயகுமார். ஆட்சிப்பணியாளர்களில் சேஷன் இந்திய அளவில் பிரபலமானார்...தமிழக அளவில் நின்று போனவர்களில் என்றால் சிறைக்குப் போன ஹரி பாஸ்கரும், நாகராஜனும் மட்டுமே பிரபலங்களாக நினைவுக்கு வருகிறார்கள். இவர்களில் சிலர் நன்றாக மதிப்பெண் எடுத்தவர்கள் என்று அறிவேன். ஆனால் பதினோராவது வகுப்பில் மாநிலத்திலேயே முதலாவது வந்ததாக எங்கும் படிக்கவில்லை. வெளியுறவுத்துறையில் பிரபலம் என்றால் பார்த்தசாரதி, ராஜீவ் காலத்தில் ராஜினாமா செய்தவர் பின்னர் ஹிந்து ராம். யாராயினும் மாநிலத்தில் முதலாவது வந்தவர்களா?

ஒருவேளை விஞ்ஞானியாக...அப்துல் கலாம்? சரி, சுஜாதா ரங்கராஜன். இவர்கள் இருவரும் பொறியியற் கல்லூரியில் இடம் கிடைக்கும் அளவு கூட மதிப்பெண் பெற்றிருக்கவில்லை என நினைக்கிறேன். இளங்கலை அறிவியல் படித்து பின்னர் மூன்று வருடம் எம் ஐ டி டிப்ளமோ பெற்றவர்கள்.

தமிழகத்தில் இன்று புகழ் பெற்ற எழுத்தாளர்களாக, ஓவியராக, ஆடை அலங்கார நிபுணர்களாக, சமையற்கலை விற்பன்னர்களாக, சமூக சேவகராக, மத தலைவராக அல்லது வேறு ஏதாவது துறையில் முன்னோடியாக விளங்கும் எவராவது ஒருவராக இவ்வாறு மாநிலத்தில் முதலாவது வந்தவர்கள் இருக்கிறார்களா?

இல்லையென்றால், பின்னர் எங்கேதான் சென்றார்கள்?

14 comments:

Badri Seshadri said...

மாநிலத்தில் முதல் 100 ரேங்கில் வந்திருப்போரில் எந்த நபருமே, தேர்வு எழுதிய நாளில், தேர்வு திருத்தப்பட்ட நாளில் சரியான கோள் நிலைகள் இருந்திருந்தால் முதலாவதாக வந்திருப்பார். எனவே முதலாவது என்பதே ஒருவித லாட்டரிதான்.

இவர்கள் அனைவருமே safe option-ஐத்தான் நாடுகின்றனர். எனவே இவர்கள் யாரும் ஏதாவது துறையில் மிக அறியப்பட்டவர்களாக வருவது சந்தேகமே.

இன்னும் சில வருடங்களுக்கு இந்த பொறியியல்/மருத்துவ மோகம் மாணவர்களுக்கு இருக்கும். 1940-50களில் சட்டப்படிப்புக்கு இருந்த மோகத்தைப் போலவும், 1960-70களில் இ.ஆ.ப.வுக்கு இருந்த மோகத்தைப் போலவும்.

Aruna Srinivasan said...

////தமிழகத்தில் இன்று புகழ் பெற்ற எழுத்தாளர்களாக, ஓவியராக, ஆடை அலங்கார நிபுணர்களாக, சமையற்கலை விற்பன்னர்களாக, சமூக சேவகராக, மத தலைவராக அல்லது வேறு ஏதாவது துறையில் முன்னோடியாக விளங்கும் எவராவது ஒருவராக இவ்வாறு மாநிலத்தில் முதலாவது வந்தவர்கள் இருக்கிறார்களா?

இல்லையென்றால், பின்னர் எங்கேதான் சென்றார்கள்? /////


இந்தக் கேள்வி இப்படி இருக்க வேண்டும்.

ஒரு முக்கிய புள்ளியாக வருவதற்கும், சமூகத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவும், பரிட்சையில் முதலாவதாக வர வேண்டும் என்பது அவசியமா?

பதில்: இல்லை - இல்லவே இல்லை.

பின் எப்படி வாழ்க்கையில் முதன்மையானவர்களாக இருப்பது?

வளரும் பருவத்தில் பாடங்களையும், வாழ்க்கையின் யதார்த்தங்களையும், அனுபங்களையும் இயல்பாகக் "கற்கும்போது."

நம் பள்ளிகளில் மாணவர்கள் "படிக்கிறார்கள்." மதிப்பெண்கள் வாங்குவதற்காக - மதிப்பெண்கள் வாங்குவதற்காக மட்டுமே படிக்கிறார்கள். பள்ளியில் "படிப்பது" என்பதிலிருந்து சற்று மாறுபட்டு, மதிப்பெண்கள் என்ற அசுரனிடமிருந்து விடுபட்டு, "கல்வி" என்பதன் மேன்மையை ரசித்து, வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்ந்து, கல்வியைப் பயிலும் நாள் வருமா?

பதில்: வரலாம் - நம் கல்வி முறையைப் பற்றி இன்று ராஜ துரை போல் நாம் ஒவ்வொருவரும் - கல்வித் துறையில் இருப்பவர்களும் யோசித்தால்....

கஷ்டப்பட்டு உழைத்து இன்று 'முதன்மை' என்ற மகுடம் சூடியிருக்கும் மாணவர்களின் ஆர்வத்தையும் உழைப்பையும் மிகவும் மதிக்கிறேன். நிச்சயம் பாராட்டுக்குரியவர்கள். அதே சமயம் ராஜ துரை எழுப்பியிருக்கும் இந்தக் கேள்வி, இன்றைய நம் சமூகத்தில் கட்டாயம் தேவையான சிந்தனை.

இந்த நாணயத்தின் மறு பக்கமும் உண்டு:

ராஜ துரை, பள்ளியில் இன்று முதன்மையாக வருபவர்கள் அடிப்படையில் உழைப்பின் மேன்மையை அறிந்தவர்கள். எங்கேயோ எந்தவிதத்திலோ அவர்கள் ஒரு முக்கிய நிலையில் /பதவியில்தான் இருப்பார்கள். அந்தப் பதவிகளில் இருந்து கொண்டு அமைதியாக சாதனைகள் புரிகிறார்களோ என்னவோ? பிரபலமாகாத சாதனையாளர்கள் பலர் குடத்திலிட்ட விளக்காக இருக்கக்கூடிய சாத்தியம் இருக்கிறது.

பிரபலமாவது மட்டுமே வெற்றியின் அடையாளம் இல்லை; பிரபலமாக இருப்பவர்கள் எல்லோரும் திறமையானவர்களாக இருப்பார்கள் என்றும் ஆணித்தரமாக சொல்ல முடியாது.

பிற்கால சமூகத்தில் அந்தக் காலத்து "முதன்மை" மாணவர்களின் தாக்கம் பிரபலமாகாமலும் இருக்கலாம். கலெக்டர்கள், டாக்டர்கள், தன்னார்வ சமூகத் தொண்டர்கள் என்று ஆங்காங்கே வைரங்கள் மறைந்திருக்கலாம்.

ஆக, உழைப்பின் மேன்மையையும் உணர்ந்திருக்க வேண்டும்; கல்வி என்பது "படிப்பும்" மதிப்பெண்களும் மட்டுமல்ல என்பதும் தெளிவாக இருக்க வேண்டும்.

-L-L-D-a-s-u said...

ஒவ்வொரு வருடமும் இதே கேள்வி எனக்கு வந்துகொண்டிருக்கிறது. விடை தான் தெரியவில்லை .

பத்ரி , நீங்கள் மாநில அளவில் முதல் ரேங்க் எடுத்தவர் என கேள்விப்பட்டேன். உண்மையா.

பிச்சைப்பாத்திரம் said...

பிரபலமான இயக்குநர்களின் ஆரம்ப கால தமிழ் சினிமாவின் டைட்டில்களில், உதவி இயக்குநர்கள் என்கிற பட்டியலை கவனிக்கும் போது அதில் வெகு சிலரே இன்றைக்கு பிரபலமான இயக்குநர்களாக இருக்கின்றனர். அப்படியானால் மற்ற உதவி இயக்குநர்கள் என்ன ஆனார்கள்? உதவி இயக்குநர்களாகவே இருக்கிறார்களா? அல்லது போராட முடியாமல் ஊர் திரும்பி விட்டார்களா? என்று எனக்கும் இதே மாதிரியான கேள்விகள் எழுவதுண்டு.

Sridhar Narayanan said...

நீங்கள் பட்டியலிட்டிருக்கும் பிரபலங்கள் தங்கள் career-களில் பல இடங்களில் முதலிடம் பெற்றவர்களாகத்தான் இருக்கிறார்கள். அவர்களின் profile பார்த்தீர்கள் என்றால் தெரியும்.

அதே போல் பள்ளிகளில் 'அசாதாரணமான' முறையில் வெற்றி பெற்றிருக்கும் மாணவர்களின் மூலதனம் 'கடும் உழைப்பு'. அவர்கள் தேர்ந்தெடுக்கும் பாதையில் அவர்கள் நிச்சயமாக தொடர்ந்து வெற்றிகளை குவித்துக் கொண்டுதானிருக்கிறார்கள். ஊடகங்களில் நாம் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

உதாரணம் - TiE போன்ற குழுமங்களில் பெரும்பாலும் IIT / IIM மாணவர்களை சந்திக்க முடிகிறது.

அந்த உலகம் அவ்வளவாக வெகுஜன ஊடகங்களினால கவரப்படாததாக, பாதிப்படையாததாக இருகக்த்தான் செய்கிறது.

Venkat said...

பிரபு - சுவாரசியமான விஷயம். என்னால் கொஞ்சம் அருகிலிருந்து பார்த்தவற்றைச் சொல்லமுடியும்.

நான் பத்தாம் வகுப்பு படித்தபொழுது வகுப்பில் என் பெஞ்சில் உட்கார்ந்திருந்த பாலச்சந்தர் என்ற நண்பன் மாநிலத்திலேயே இரண்டாமிடத்தில் வந்தான். பத்ரி சொன்னதைப் போல அது யாராகவும் இருந்திருக்கக் கூடும். ஏனென்றால் அதே வகுப்பில் பல பரீட்சைகளில் அவனைவிட எங்களில் பலர் நிறைய மதிப்பெண்கள் பெற்றிருந்தோம். அவன் கடின உழைப்பாளி என்பது மறுக்கமுடியாத உண்மை.

ஆனால், எங்களில் பலரும் மேற்கொண்டு சவால்களை நேரடியாக எதிர்கொள்ள முயன்றபொழுது (உதாரணம் பத்தாம் வகுப்புவரை தமிழ் மீடியத்தில் படித்த நாங்கள் கொஞ்சம் பயமாக இருந்தாலும் ஆங்கில மீடியத்திற்கு மாறினோம்), அவன் சாதனையின் சுமை அழுத்த, தமிழ் மீடியத்திலேயே தொடர்ந்தான். தொட்ர்ந்து அவன்மீது எதிர்பார்ப்புகள் ஏறிக்கொண்டே போக அவனால் பெரிதாக எதுவும் சாதிக்கமுடியாமல் போய்விட்டது. பன்னிரண்டாம் வகுப்பில் பள்ளிக்கூட முதலிடம்கூடக் கிடைக்கவில்லை. இதற்கு ஆசிரியர்களும் அவன் பெற்றோர்களும் முக்கிய காரணம்.

இதைப் போல என் அண்ணனுடைய வருடத்தில் 11ம் வகுப்பில் மாநில முதல் மாணவன் இருந்தான். அவனுக்கும் அதே அழுத்தங்கள்தான். அதையும் விட அவன் தங்கை என் வகுப்பில் இருந்தாள், அவள்மீது இருந்த எதிர்ப்பார்ப்புகளையும் நாங்கள் நன்றாக அறிவோம்.

எங்களுக்கு இந்தப் பயங்கள் எதுவுமில்லாமல் பாக்கியராஜ் படம் பார்த்துக்கொண்டு, நடேசய்யர் ட்ராபி கிரிக்கெட்டில் மூழ்கி, பத்மாவின் அம்மாவுக்கு ரேஷன் வரிசையில் நின்று சர்க்கரை வாங்கிக்கொடுத்து, டைப்ரைட்டிங்க் இன்ஸ்டிடுயூட் இன்ஸ்ட்ரக்டர் அக்காவையும் சைட் அடித்துக்கொண்டு...

பெருசா ஒன்னும் கிழிக்கலேன்னாலும் அந்த வயசை நிமிடம் நிமிடமாக அனுபவித்திருக்கிறோம்.

மு. சுந்தரமூர்த்தி said...

பிரபு,
இந்த கேள்வி நீண்டகாலமாக இருப்பது. இதன் துணைக்கேள்வியை 1988-89 வாக்கில் ஒரு பெண்ணியவாதி எழுப்பி இந்தியன் எக்ஸ்பிரசில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். எழுதியவரின் பெயர் மறந்துவிட்டது. தலைப்பு "What happened to those gold medalists?" என்று நினைக்கிறேன். கல்லூரிப் பட்ட, பட்ட மேற்படிப்புகளில் பெண்கள் அதிக அளவில் பதக்கங்கள் பெற்றாலும் திருமணத்திற்கு பின் அவர்கள் படிப்பு-தொழிலில் தொடர- பிரகாசிக்க முடியாமல் காணாமல் போய்விடுவதைப் பற்றி கவலையுடனும், கோபத்துடனும் எழுதியிருந்தார்.

பள்ளியிறுதி, +2 தேர்வில் முதல் இடங்களைப் பெற்று பிறகு பிரகாசிக்காமல் போவதைவிட உயர்கல்வியில் பிரகாசித்தவர்கள் காணாமல் போவது மிகவும் கவலைப்படத்தக்கது. பள்ளியில் அதிக அளவில் மதிப்பெண்கள் வாங்குவதில் மாணவர்களின் உழைப்போடு, பெற்றோர்களின் உழைப்பும் கணிசமாக இருக்கும். இதை பெற்றோர்கள் தொடர்ந்து செய்ய முடியாத காரணத்தால் காலப்போக்கில் மாணவர்கள் தம் இயல்பான நிலையை அடைந்து அதற்கேற்றவாறு சாதனைகள் படைக்கவோ, முடியாமலோ போகலாம். அடித்தளம் சரியாக அமைந்தாலும் சாதனைகள் படைப்பதற்கு தொடர்ந்த தன் முனைப்பும், அவ்வப்போது தோன்றும் சவால்களை எதிர்கொள்வதும், வாய்ப்புகளை கிடைக்கும்போது பயன்படுத்திக்கொள்வதும் முக்கியமானது.

பல வருடங்களுக்கு பிறகு பள்ளியில் உடன் படித்த ஒரு நண்பரை சந்தித்தப்போது வகுப்புத் தோழர்கள் என்ன செய்கிறார்கள் என்று ஒருவரை ஒருவர் கேட்டுக்கொண்டிருந்தோம். முதல் வரிசை நண்பர்களைப் பற்றியும் பேச்சு வந்தபோது அனுமானித்தது: "அவன் ஊரிசிஸ்ல தான் பியூசி சேந்தான். கிண்டியில பி.ஈ. படிச்சான். இப்போ எங்கிருக்கிறான்னு தெரியல. எங்கெயாவது கவர்மெண்டு எஞ்சினீயரா சேர்ந்து அவன் பையன் ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்க ஹோம் வொர்க் பண்ணிட்ருப்பான்"

பொன்ஸ்~~Poorna said...

பன்னிரண்டாம் வகுப்பில், மூன்று பாடங்களில் முழு மதிப்பெண் பெற்று மாநிலத்தில் மூன்றாவதாக வந்த என் வகுப்புத் தோழி, அண்ணா பல்கலையில் கணிப்பொறியியல் படித்து இப்போது, இன்போசிஸில் ஆறு வருட அனுபவம் பெற்று விட்டாள். ஆயிரத்துக்குள் மதிப்பெண் பெறாத மற்றொரு தோழியும் அதே போன்ற வேலையில், அதே போன்ற அனுபவத்துடன், அதே சம்பளத்துடன், இருப்பதைப் பார்ப்பதில், முதல் மாணவியாக வந்தது தோழியின் வாழ்க்கையைப் பெரிதும் மாற்றியதாக தோன்றவில்லை.

கடைசியாக அவளைச் சந்தித்த போது, காலை அவசரமாக அலுவலகம் கிளம்ப அவள் மாமியார் மிகவும் உதவியாக இருப்பது பற்றியும், அவள் தங்கையின் பொதுத் தேர்வு தயாரிப்புகளுக்கு அவள் செய்து கொண்டிருக்கும் தொலைபேசி உதவிகளைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தாள்..

Anonymous said...

த்ரிபுவன் பட் , இவர் அந்த காலத்தில் பம்பாய் பல்கலைகழகம் நடத்திய மெட்ரிகுலேசன் தேர்வில் முதலிடம் பெற்றவர்.
பின்னர் பரோடா மகராஜாவிடம் குமாஸ்தாவாக சேர்ந்து , குப்பை கொட்டி, ரிட்டையர்டு ஆனவர்.

இவரின் நெருங்கிய பள்ளித்தோழர் ஒருவர் 50% எடுத்து தப்பி பிழைத்தவர். பின்னாளில் சட்டம் படித்தார், பிற்பாடு உலகப்புகழ் பெற்றார்.
அவர் பெயர் மோகன்தாஸ் கே காந்தி.

பாலா said...

my guess most of those has been settled in US/UK like countries...

Bruno said...

//பிரபலமாவது மட்டுமே வெற்றியின் அடையாளம் இல்லை; பிரபலமாக இருப்பவர்கள் எல்லோரும் திறமையானவர்களாக இருப்பார்கள் என்றும் ஆணித்தரமாக சொல்ல முடியாது. //

வழிமொழிகிறேன்

தருமி said...

பின்னூட்டங்களின் தேதி இருந்திருந்தால் ஒவ்வொரு பின்னூட்டமும் எப்போது வந்தது என்பதாவது எங்களுக்குப் புரியுமே....!

தருமி said...

18.5.07 பதிவிற்கு இன்று - 24.7.12 - பதிலிடுகிறேன். அது தெரியாதே இப்போது!?

PRABHU RAJADURAI said...

தேதியை வரவழைக்கும் வித்தை எனக்கு தெரியாது. ஆனால் டாக்டர் ப்ரூனோவின் எதிர்வினை தவிர அனைத்து எதிர்வினைகளும் பதிவு வெளிவந்த பொழுதே எழுதப்பட்டவை!