28.6.06

தீண்டாமை ஒழிப்பில் கீதை!

என்று நாம்?’ என்ற தலைப்பில் நான் இங்கு எழுதிய கட்டுரையை படித்த நண்பர் ஒருவர் ‘தீண்டாமை ஒழிப்புச் சட்டம்’ தீண்டாமையை எப்படி வரையறுக்கிறது என்று விளக்குவீர்களா?’ என்று வினவியிருந்தார்.

தீண்டாமை ஒழிப்புச் சட்டம் என்று முதலில் அழைக்கப்பட்ட இந்த சட்டம் 1976ம் ஆண்டில் ‘சிவில் உரிமைகள் பாதுகாப்பு சட்டம்’ (The Protection of Civil Rights Act) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஆயினும் சிவில் உரிமை என்பது ‘தீண்டாமை ஒழிப்பின் காரணமாக ஒருவருக்கு கிடைக்கும் உரிமை’ என்றே பெயர் மாற்றம் செய்யப்பட்ட சட்டமும் வரையறுக்கிறது. தீண்டாமையின் அடிப்படையில் மத ரீதியிலாகவோ அல்லது சமூக ரீதியிலாகவோ விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை குற்றம் என்று இந்த சட்டம் கூறுகிறது. தீண்டாமை பல்வேறு வகைகளில் ஒருவர் மீது வலியுறுத்தப்படலாம். அவற்றை இங்கு ஒவ்வொன்றாக பட்டியலிடுவது சலிப்பூட்டும் ஒரு காரியம். எனவே ஏதேனும் ஒரு நிகழ்வினைப் பொறுத்து எழுதும் வாய்ப்பு கிடைக்கையில் விளக்க முயல்கிறேன்.

என்று நாம்? என்ற கட்டுரையில் நான் குறிப்பிட்ட “இன்று உலகெங்கும் நாகரீகத்தை பரப்ப முன் வந்துள்ள அமெரிக்காவில் சட்டரீதியில் இனப்பிரிவுகள் பாதுகாக்கப்பட்டு வந்த காலகட்டத்திலே இந்தியா சட்டத்தினைப் பொறுத்து உயர்வான இடத்தை அடைந்திருந்தது. அதாவது, திரைப்படத்தில் கையாளப்பட்ட வழக்கு அதே காலகட்டத்தில் இந்தியாவில் தொடுக்கப்பட்டிருந்தால் அவ்விதம் வழக்கு தொடுத்தவர்களை அதன் காரணமாகவே தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தின்(1955) மூலம் தண்டனைக்கு ஏதுவான குற்றவாளிகளாக்கியிருக்க முடியும்” என்ற கருத்து சட்டரீதியில் சரியான ஒன்று என்றே கருதுகிறேன். ஏனெனில் இந்த சட்டத்தின் 4வது பிரிவு தீண்டாமையின் அடிப்படையில் சமூக கட்டுப்பாடுகளை விதிப்பதை தண்டனைக்குறிய குற்றமாக குறிப்பிடுகிறது. சமூக கட்டுப்பாடுகள் எவை எவை என்று இந்த சட்டப்பிரிவின் உட்பிரிவுகள் விளக்குகின்றன. அதில் எட்டாவது உட்பிரிவு ‘எந்த ஒரு இடத்திலும் குடியிருப்பு மனைகளை கட்டுதல், வாங்குதல் மற்றும் குடியிருத்தல் மற்றும் இது போன்ற காரியங்களில்’ தீண்டாமை அடிப்படையில் கட்டுப்பாடு விதிப்பதை தண்டனைக்கேதுவான சமூக கட்டுப்பாடாக விளக்குகிறது. இதன் அடிப்படையில் அமெரிக்காவில் இயன்றது போன்று இங்கும் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டால்...அவ்வாறு வழக்கு தாக்கல் செய்த செயலை மட்டுமல்ல அவ்வகை வழக்கினை தாக்கல் செய்ய வழி செய்யும் சட்டத்தினை இயற்றியதையே இந்தப் பிரிவின் கீழ் தீண்டாமைக் குற்றமாக கருத முடியும். எனவே வீட்டு வாடகை விளம்பரங்களில் ‘இந்த ஜாதியினருக்கு மட்டும்’ என்று குறிப்பிடுகையில் சற்று கவனம் தேவை!

இறுதியாக இந்த சட்டம் எவ்வாறு உருவாயிற்று தெரியுமா? 1950ம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய அரசியலமைப்பு சட்டம் (The Constitution of India) ‘தீண்டாமை சட்டரீதியில் தண்டனைக்கேதுவான ஒரு குற்றமாகும்’ என்று தனது 17வது ஆர்ட்டிகிளில் கூறுகிறது. அரசியலமைப்பு சட்டத்திலேயே குற்றம் என்று தீண்டாமையினை வரையறுத்ததன் மூலம் இதனை ஒழிப்பதற்கு நமது நாடு அளித்துள்ள முக்கியத்துவத்தை உணரலாம். குற்றத்தினை வரையறுப்பது அரசியலமைப்பு சட்டத்தின் வேலையில்லை என்றாலும் இந்த ஒரு செயல் மட்டும் இவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது.

சரி, அரசியலமைப்புச் சட்டத்தில் இவ்வாறு ஜாதி ரீதியிலான ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்கவும் அதன் விளைவாக தீண்டாமை ஒழிப்புச் சட்டதினை இயற்றவும் காரணமாயிருந்தது எதுவென நமது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறுவது என்ன தெரியுமா?

திருவிதாங்கூர் தேவாஸ்தான போர்டு நிர்வாகத்தின் கீழ் உள்ள சிவன் கோவிலில் மலையாள பிறாமணர்கள் மட்டுமே அர்ச்சகராயிருக்க முடியும் என்று தொடரப்பட்ட வழக்கினை ‘வழிப்பாட்டு முறைகளிலும், மந்திரங்களிலும் தேர்ச்சி பெற்ற யாரும் அர்ச்சகராயிருக்க தடையில்லை’ என்று கூறி தள்ளுபடி செய்த தீர்ப்பில் நீதிபதிகள் கூறும் ஒரு கருத்து கவனிக்கத்தக்கது...

In view of the categorical revelations made in the Gita and the dream of the Father of the Nation Mahatma Gandhi that all distinctions based on caste and creed must be abolished...........................................and, in our view, the message conveyed thereby got engrafted in the form of Articles 14 to 17 and 21 of the Constitution of India, and paved the way for the enactment of the Protection of Civil Rights Act,1955

‘பகவத் கீதையே ஜாதிப்பிரிவினைகளுக்கு ஊற்றுக்கண்’ என்று இணையத்தில் அடிக்கடி படிக்கிறேன். உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கருத்து நான் படித்தவற்றை மறுபரிசீலனைக்கு உட்படுத்த என்னைத் தூண்டுகிறது...

மதுரை
28.06.06

24.6.06

அபு சலேம்...

குஜராத் சுவாமிநாராயணன் கோவில் படுகொலைகள் நிகழ்ந்திராவிடில், மும்பை பத்திரிக்கைகளில் இன்னமும் அதிகமாக அலசப்பட்டிருக்கும் நபர் அபு சலேமாகத்தான் இருக்க முடியும். அபு சலேம் மும்பை தாதாக்களில் பிரபலமானவர். அவரை மும்பை தாதா என்று சொல்வது அவ்வளவு பொருத்தமாக இருக்காது. தாவூது, சோட்டா ராஜன் போல இவர் மும்பையினைச் சேர்ந்தவர் இல்லை. உத்தர பிரதேசத்திலிருந்து எண்பதுகளின் மத்தியில் மும்பைக்கு வந்து, தாதாவாகி, மும்பை தொடர் குண்டு வெடிப்புகளுக்கு பிறகு இந்தியாவினை விட்டு வெளியேறியவர்.

மும்பை மனீஷ் மார்க்கட்டில் சிறிய துணிக்கடை வைத்து நடத்திய இவர், பின்னர் எப்படியோ தாவூது இப்ராகிமின் முக்கிய தளபதியான சோட்டா ஷாகீலுக்கு காரோட்டியாக பணிபுரிந்திருக்கிறார். மனீஷ் மார்க்கட் மும்பையில் தரமான சைனீஸ் மற்றும் வெளிநாட்டு துணிகள், முக்கியமாக பெண்களுக்கான சுரிதார் துணிகள் வாங்க சிறந்த இடம்.

முதலில் காரோட்டியான இவர், பின்னர் சாமான்கள் ('ஆயுதங்கள்' என்று அர்த்தப்படுத்திக் கொள்ளவும்) கொடுத்தனுப்பும் குரியராக செயல்பட்டதால் 'அபு சாமான்' என்று அழைக்கப் பட்டு, அது மறுவி அபு சலேமானார். கெரில்லாக்களுக்கு நாம்-டி-கெரி இருப்பது போல மும்பை தாதாக்களுக்கும் அருமையான அலையஸ் பெயர்கள் உண்டு. சண்டையின் போது, கடித்து விடும் ஒரு பிரபல தாதாவின் பெயர் 'சலீம் குத்தா'! தாவூது இப்ராகிமுக்கு முக்கிய தளபதிகளாக இருந்தவர்கள் சோட்டா ராஜன் மற்றும் சோட்டா ஷாகீல். ஏற்கனவே 'படா ராஜன் இருந்ததால் இவர் சோட்டா ராஜன். குள்ளமானவராக இருந்ததால் மற்றவர் சோட்டா ஷாகீல். சோட்டா ராஜன் பின்னர் தாவூதின் எதிரி நம்பர் ஒன்றாக மாறியது வேறு கதை!

மும்பை தாதாக்கள் அனைவரும் சினிமாவில் காட்டப் படுவது போல கைத்துப்பாக்கிகளை தூக்கிக் கொண்டு திரிவதில்லை. முக்கிய தாதாக்களிடம்தான் அவை இருக்கும். ஒரு திட்டம் தீட்டப் பட்டால், அதனை நிறைவேற்றுபவருக்கு சாமான் அனுப்பி வைக்கப்படும். வேலை முடிந்தவுடன் திருப்பி கொடுக்கப் பட வேண்டும். நல்ல ரக கைத்துப்பாக்கிகளின் விலை லட்சக்கணக்கில். சினிமாவில்தான் குண்டு தீர்ந்தவுடன் துப்பாக்கியினை எரிச்சலுடன் தூக்கி எறிவதெல்லாம்!

மும்பை தொடர் குண்டு வெடிப்பில், பிரபல நடிகர் சஞ்சய் தத்தின் மீது ஏகே 47 ரக துப்பாக்கியும் சில எறி குண்டுகளும் வைத்திருந்ததாகத்தான் வழக்கு. அந்த சாமான்களை சஞ்சயிடம் குடுத்த புண்ணியவான் அபு சலேம்தான். அந்த வழக்கில் இவரும் ஒரு முக்கிய குற்றவாளி. அந்த குண்டு வெடிப்புக்கு பிறகுதான் இவர் பிரபலம். எந்த ஒரு சுய தொழில் அல்லது நிறுவனம் அல்லது அரசியல் போலவே இந்த தாதாவாவதற்கும் தேவை ஒரு பிரேக் (brake). இந்த ஹையரார்க்கியின் (hierarchy) கீழ் மட்டத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இருக்கிறார்கள். பாதிக்கும் மேற்பட்டவர்களின் ஆயுசு இரண்டு அல்லது மூன்று வருடங்கள்தான், அதாவது அவர்களது பெயர் (identity) போலீஸ¤க்குத் தெரியும் வரை. ஒரே என்கவுண்டரில் ஐந்து பேரை சாய்ப்பதெல்லாம் சாதாரணம். சிலர் தப்பித்து மேல் மட்டத்துக்கு போய் விடுகிறார்கள். ஒரு சிலர் நல்லபடியாக செட்டில் கூட ஆகிவிடுகிறார்கள்.

நான் வசிக்கும் கட்டிடத்தில் சாதாரண குஜராத்தி குடும்பம் ஒன்று உள்ளது. ஒரு வயதான அம்மா. முதலில் என்னிடம் அடிக்கடி ஏதோ பேச முற்படுவார்கள். பின்னர் என் மனைவியிடம் அவர்கள் மகன் சிறையில் இருப்பதாக கூறியிருக்கிறார்கள். எனக்கும் கிரிமினல் வழக்குகளுக்கும் காத தூரம். கொலை வழக்கு என்று பிறகு அறிந்து கொண்டேன். இரண்டு வருடங்களுக்கு முன்னர் காந்தி ஜெயந்திக்காக விடுதலையாகி விட்டார் என்று சொன்னார்கள். பார்த்தால் என்னை விட வயதில் குறைந்த இளம் நபர். வந்த சில மாதங்களிலேயே வீடு முழுவதுமாக திருத்தி அமைக்கப்பட்டது. மொபைல் போனை தவிர்த்து வந்த நான், அவரே மொபைலை தூக்கிக் கொண்டு திரிவதைப் பார்த்து, கம்பெனி கணக்கில் ஒன்று வாங்கி விட்டேன். பிறகு புதிய ஹோண்டா ஸ்ப்லெண்டர் பைக். சில மாதங்களுக்கு முன் திருமணம். நானும் போயிருந்தேன். உடனே புது வீடு. ஒரு வாரத்துக்கு முன்னர் பார்க்கையில் ஒரு எஸ்டீமில் போய்க்கொண்டு இருந்தார்.

இதைப் படித்து, வேலையினை விட்டு யாரும் மும்பை வந்து விடாதீர்கள். இதெல்லாம் ஒரு லாட்டரி.! எண்பதுகளில் பிரபலமாக இருந்த எந்த ஒரு ஈழப் போராளியும் இப்போது இல்லை, பிரபாகரன், பாலசிங்கம் தவிர. இது ஒரு இயற்க்கையின் தேர்ந்தெடுப்பு. ஆனாலும் மனித முயற்சியினையும் நான் குறைத்துச் சொல்லவில்லை. இதனை எதற்க்காகச் சொல்கிறேன் என்றால், நமது இப்போதய சமூக, அரசியல், பொருளாதர சூழ்லையில் இந்த தாதாயிசத்தினை ஒழித்துக் கட்டுவது என்பது இயலாத காரியம். போலீஸ் ஒவ்வொரு தாதாவினையும் சுடும் போது, நமது அமைப்புகள் மற்றொருவரை அந்த வெற்றிடத்தினை நிரப்ப அனுப்பி வைக்கிறது.

மும்பை சேரிகளை பார்த்திருக்கிறீர்களா? அதற்கு நமது சிறைக்கூடங்கள் எத்தனையோ மடங்கு சுகாதாரமான இடம். இந்த சேரிகளை ஏற்படுத்துபவர்கள் வங்காளம், பீகார் மற்றும் உத்தர பிரதேசத்திலிருந்து நூற்றுக்கணக்கில் தினமும் இங்கு வரும் மக்கள். அப்படியாயின் அவர்களது சொந்த ஊர்களின் நிலமை இந்த சேரியினை விட மோசம் என்பதனை அனுமானிக்க பெரிய சிந்தனை தேவையில்லை. இந்த மக்களின் முக்கிய பொழுது போக்கு என்ன? சினிமா! அந்த சினிமாவில் வாழ்க்கையின் இன்பங்கள் என்று காட்டப் படும் அனைத்தும் அதே பாணியில் மும்பையினை சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான நடன மையங்களில் கிடைக்கும். தமிழ்நாட்டிலோ அப்படி ஒன்றினை பார்க்க வாய்ப்பில்லாதலால் இதெல்லாம் நிழல் என்பதை புரிந்து கொள்கிறார்கள். ஆனால் ரசிகர் மன்றம் என்று சேவை செய்ய கிளம்பி விடுகிறார்கள். இரண்டாவது, அப்படி ஒன்று இருந்தாலும் பணத்துக்கு எங்கே செல்வது. மும்பையிலோ திரும்பிய பக்கமெல்லாம் கறுப்புப் பணம் கொட்டிக் கிடக்கிறது. பிறகு என்ன! முயற்சி ஒன்றுதான் பாக்கி.

என்னுடைய அனுமானத்தில் தாதாயிசம் வளர்வதற்கு முக்கிய காரணம் கறுப்புப் பணம். கறுப்புப் பணம் நமது நாட்டில் உருவாவதற்கு ஆயிரம் காரணங்கள். ஆனால் சிறிய முயற்சியும் பெரிய மனதும் இருந்தால் நாட்டை ஆள்பவர்களால் எளிதில் ஒழித்துக் கட்டப்படக்கூடிய பிரச்னை. ஆனால் என்ன செய்வது? தங்களது வாழ்க்கையே (existence) அதனை நம்பித்தான் இருப்பதாக அவர்கள் போலியாக நம்பிக் கொண்டு இருக்கிறார்கள்.

தாதாக்கள் குறி வைப்பது கறுப்புப் பணத்தை. நேர்மையான பணமென்றால் பலர் அதனைக் கொடுப்பதற்கு பதிலாக உயிரை விடத் துணிந்து விடுவார்கள். பாலிவுட்டிலியே நேர்மையானவர் என்று பெயரெடுத்த அமீர் கான், பத்திரிக்கைகளுக்கு தெரிந்தவரை எந்த ஒரு தாதாவின் மிரட்டலுக்கும் பணிந்தவரல்ல. கறுப்புப் பணத்தை தூக்கிக் கொடுப்பது எளிது. அதிக மனக்கஷ்டம் இல்லை. இரண்டாவது வெள்ளைப் பணத்தை குடுத்தால் அதனை எந்த கணக்கில் காட்டுவது. இந்திய என்ரான் கணக்கில் 60 கோடி ரூபாய் ‘இந்தியர்களுக்கு கற்பிப்பதற்காக’ என்று காட்டப் பட்டிருந்தது. போபோர்ஸ் மற்றும் என்ரான் ஊழல்கள் வெளியே தெரிந்ததற்கு முக்கிய காரணம் அந்தப் பணம் கணக்குப் புத்தகங்களில் காட்டப் பட்டிருந்த வெள்ளைப் பணம் என்பதால்தான். நான் இந்திய என்ரான் ஊழலைப் பற்றிச் சொல்கிறேன்.

மூன்றாவது முக்கியக் காரணம் நமது பொருளாதார, தொழில் அமைப்புகளில் இருக்கும் சட்ட மீறல்கள் மற்றும் லஞ்சம். இந்த தாதாக்கள் மற்றும் கிரிமினல்கள் தங்களை அறியாமலேயே சில வரைமுறைகளுக்கு கட்டுப்பட்டவர்கள். திருநெல்வேலியிலேயே பார்க்கலாம். லோக்கல் வட்டி ஆசாமி இருப்பார். அவருடைய மிரட்டும் தரத்துக்கு உங்களையும் என்னையும் கூட வந்து மிரட்டி பணம் கேட்கலாம். ஆனால் வரமாட்டார்கள். நீங்கள் யாரிடமாவது பிராமிசரி நோட்டு எழுதிக் கொடுத்து கடன் வாங்கியிருந்தால், அவரிடம் ஒரு தொகையினைக் கொடுத்து அதனை வாங்கிக் கொள்வார்கள். பின்னர்தான் உங்களிடம் வருவார், முழுப் பணத்திற்காகவும், மற்றும் வட்டிக்கும். அதே போலத்தான் வீடு காலி பண்ணும் பிரச்னையிலும். மிரட்டல் ஒன்றுதான் சொன்னபடி கேட்கிறாயா? அல்லது மேல் உலகம் செல்கிறாயா?. அவர்களது வலிமைக்கு யாரிடமும் போய் அப்படி மிரட்டலாம். ஆனால் அப்படிச் செய்வதில்லை. அதே போலத்தான் மும்பை தாதாக்களும். நியாயமாக நடக்கும் எத்தனையே தொழில்கள் உண்டு. அங்கு பிரச்னையில்லை. எனக்கு தெரிந்து சினிமா, ரியல் எஸ்டேட் மற்றும் ஹோட்டல் அதாவது பார் இவற்றை மும்பையில் நியாயமாகவும், தெளிவான கணக்குகளோடும் நடத்துவது இல்லை. ரியல் எஸ்டேட் மற்றும் ஹோட்டல் பற்றி எனக்குத் தெரியும். அநாவசியாமான சில சட்டங்கள் இவர்களை அதனை மீறும் வழியில் செலுத்துகிறது. சட்ட மீறல்கள் தாதாக்களுக்கான நேரடி அழைப்பு.

எழுபதுகளின் தாதாக்களான வரதராஜன், கரீம் லாலா, ஹாஜி மஸ்தான் போன்றவர்களுக்கு கடத்தல் கற்பகத் தரு. அளவுக்கும் அதிகமாக மூடி வைக்கப் பட்ட இந்தியப் பொருளாதாரம் காரணம். மெல்ல மெல்ல விதிகள் தளர்த்தப் பட கடத்தல் தனது வசீகரத்தினை இழந்தது. எண்பதுகளில் மும்பை ரியல் எஸ்டேட் அபரிதமான வளர்ச்சியடைந்து, தொண்ணூருகளின் மத்தியில் உச்சத்தை அடைந்தது. உங்களுக்குத் தெரியுமா? அப்போது மும்பை நாரிமன் பாயிண்ட் இடமதிப்பு டோக்கியோ மற்றும் மன்ஹாட்டன் இட மதிப்புக்கு இணையாக இருந்த்தது! அரசுக்கு பெரிய பலன் ஏதுமின்றி கோடிக்கணக்கில் பணம் கை மாறியது. ஆனால் அரசின் இடத்தை தாதாக்கள் நிரப்பினர். அரசுக்கு அதிக வரி கட்டுவதை விட இந்த தாதாக்களுக்கு சிறு வரி கட்டுவது பில்டர்களுக்கு எளிதாக இருந்தது. மேலும் இதர பல காரியங்களுக்கும் அவர்கள் உதவியாக இருந்தனர். பின்னர் ரியல் எஸ்டேட் வீழ்ச்சியடையவும் சினிமாவுக்கு தாவினர். முக்கியமாக தற்பொழுது பல ஹிந்தி சினிமாக்கள் தயாரிக்கப் படுவது இந்திய ரசிகர்களை விட வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களை நம்பித்தான். கதைகள், காட்சிகள் மற்றும் பாடல்கள் அவர்களை குறிவைத்தே அமைக்கப் படுகிறது. தற்போது தாதாக்கள் சினிமாக்காரர்கள் பிரச்னையெல்லாம் வெளிநாட்டு வியோகம் மற்றும் பாடல் உரிமை பற்றித்தான். சினிமா முழுவதும் கறுப்புப் பணம். அதனை யார் கொடுப்பது? தாதாக்களைத் தவிர. ரியல் எஸ்டேட் வளர்ச்சியின் பணம் அவர்களிடம்தான் இருக்கிறது.

ரியல் எஸ்டேட், சினிமாவோடு ஒப்பிடும் போது ஹோட்டல் அதாவது மும்பையில் உள்ள லட்சக் கணக்கான பார்கள் ஒரு சிறிய மீன் (small change). ஆனால் தாதாக்கள் வளர்வதற்கு அது போதுமே! சட்ட மீறல்கள் பற்றிச் சொன்னேன். ஒரு சிறு உதாரணம். பார்கள் பதினொரு மணிக்கு மேல் இயங்க முடியாது. ஆனால் மும்பையில் வாழ்க்கை ஆரம்பிப்பதே பத்து மணிக்கு மேல்தான். பார்களை மூட முடியுமா? இங்குதான் அதன் சட்டம் சார்ந்த பாதுகாவலர்களான் போலீசும் சட்டம் சாராத காவலர்களான தாதாக்களும் உள்ளே நுழைகிறார்கள்.

தற்போது பெரிய தாதாக்கள் போதை மருந்து கடத்தல், தேச துரோக செயல்களில் இறங்கி சினிமாவை தங்கள் தளபதிகளிடம் விட்டு விட்டனர். தொண்ணூறுகளின் இறுதியில் உச்ச கட்டத்தை அடைந்த தாதாயிசத்தை, வலிமையாக கட்டுக்குள் கொணர்ந்தது மும்பையின் அப்போதைய இணை ஆணையர் நமது தமிழகத்தினை சேர்ந்த சிவானந்தம். இவரை வைத்து கம்பெனி என்ற படம் தயாரிக்கப் பட்டுள்ளது. நான் பார்க்கவில்லை. ஆனால் 'சத்யா' நான் பார்த்த இந்திய படங்களில் மறக்க முடியாதது. பார்க்காமல் விடாதீர்கள். நான் மும்பை வந்த புதிதில் நிலைமை அப்படித்தான் இருந்தது.

சிவானந்தம் போலீஸின் பார்வையில் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் சமூகவியல் பார்வையில் இல்லை. அதற்கு சிவானந்தம் ஒன்றும் செய்ய இயலாது. அது நமது நாட்டை ஆளும் அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் சட்ட வல்லுநர்கள் கையில் உள்ளது. நான் ஏற்கனவே சொன்னபடி, ஒவ்வொரு அபு சலேம் பிடிபடும் போதும் நமது சமுக, அரசியல், பொருளாதார மற்றும் சட்ட அமைப்புகள் மற்றொருவரை அந்த வெற்றிடத்திற்கு தள்ளி விடுகிறது.

(அபு சலேம் போர்ச்சுகலில் பிடிபட்ட புதிதில் எழுதியது...தற்பொழுது அவர் இந்திய காவலர்களின் கையில்...இன்று மறுபடியும் தேடிப்பிடித்து படிக்கையில் சுவராசியமாகத்தான் உள்ளது)

14.6.06

மும்பை

படிக்கட்டில் விரைகயில்
மிஞ்சிய காலும்
ரத்தச் சகதியாய்
தரையோடு தவழ்ந்து படர்ந்த
உடலிலிருந்து தலையுயர்த்தும்
பிச்சைக்காரன்

வெடித்த மாதுளம்பழமாக
சிந்திச் சிதறும்
கூட்டத்தோடு வந்து நிற்கும் ரயில்

இருக்கையிலமர்ந்தவர்
எழப்போகிறாரா
என்பதையறியும்
கண்கள், உடலசைவுகளின் மொழிகளைப்
படிக்கும் மனப்பயிற்சி

அடுத்தவரின் இடுப்பில்
முழங்கை முட்டி கொண்டழுத்தி
கிடைத்த இடைவெளியில்
முந்திச் சென்று
இருக்கையில் அமரும்
உடல் வலிமை

சிவப்பு எச்சிற்கறை படர்ந்த
கம்பி தடுத்த சாரளம் வழியே
விரைந்து கடக்கும்
மறைவின்றி
அத்தியாவசிய தேவை கழிக்கும்
ஏழை மனிதர்கள்
பாலத்தடியில்
மிஞ்சிய உடல்பலமனைத்தையும் திரட்டி
போதைப் புகையிழுக்கும்
நடைப்பிணங்கள்
பல வண்ணக் குப்பைகள்
கறுப்பு ஓடைகள்
அதில்
துணி துவைக்கும், கீரை வளர்க்கும்
அழுக்கு சீலைப் பெண்கள்
சோம்பித்திரியும்
எதிர்காலத்தைத் தொலைத்த
குழந்தைகள்....

மீண்டும்
ரயில்நிலையப் படிக்கட்டில்
முழங்கைக்கு மேல்
எதுவுமில்லா
குச்சிக் கைககளை விரித்து
சிலுவையில் அறையப்பட்டவரின்
வடிவில்
என்றும் அமர்ந்திருக்கும்
சட்டையில்லா சிறுவன்
அவன் முன் சிதறிக் கிடக்கும்
நாணயங்கள்.

மக்கள் கூட்டம் தாண்டி
வாகனங்கள் மறித்து
சாலையை கடந்து
ஓடி
சரியான நேரத்தில் 'அப்பாடா'
என்று
அலுவலக பளிங்குப் படிக்கட்டில்
கால் பதிக்கையில்,

இன்றைக்கு
இது போதும் என்ற
ஆயாசமாக
இருக்கிறது.....

(மும்பை இன்னமும் அப்படியேதான் இருக்கிறதா?)

13.6.06

சமம்?

சட்டத்தின் முன் அனைவரும் சமம்

கிறிஸ்தவ மதக் கட்டளைகளில் மிக மிக முக்கியமான ஒரு கட்டளை என்று குறிப்பிட வேண்டுமென்றால், அதன் ஸ்தாபகரான இயேசு கிறிஸ்துவை நன்கு புரிந்து கொண்டவர்கள் எவ்வித சந்தேகமுமின்றி குறிப்பிடும் கட்டளை 'உன்னைப் போல பிறனை நேசி' என்பதாகும். அதே பே¡ல இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள மிக மிக முக்கியமான பிரிவு, ஆச்சரியகரமான முறையில் ஏறக்குறைய அதே வகையில் அர்த்தப்படும் 'அரசு சட்டத்தின் முன் அனைவரையும் சமமாக பாவிக்க வேண்டும்' என்னும் 14வது ஆர்ட்டிகிள் என்பதனை அரசியலமைப்புச் சட்டம் பற்றி அறிந்த அனைவரும் குறிப்பிடுவர். இந்தப் பிரிவினை நேரடியாக தமிழ்ப்படுத்தினால், 'அரசு எந்தவொரு குடிமகனுக்கும் சட்டத்தின் முன் சமமாக கருதப்பட வேண்டிய மற்றும் சமமான சட்டப் பாதுகாப்புக்கான் உரிமைகளை மறுக்கக் கூடாது' என்று வரும். உயர்நீதிமன்றங்களிலும், உச்ச நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்படும் நீதிப்பேராணை மனுக்கள் அநேகமாக இந்தப் பிரிவில்தால் தாக்கல் செய்யப்படுகின்றன. ஏனெனில் எந்த ஒரு உரிமையை வலியுறுத்தும் குடிமகனும், அந்த உரிமையைப் பொறுத்து தான் மற்ற குடிமகன்களுடன் சமமாக கருதப்படவில்லை என்ற வகையிலேயே வாதத்தை முன்னிறுத்த வேண்டும்.

நண்பர் ஒருவர் ஒரு கேள்வி கேட்டார். திரைப்பட நடிகர்கள் தாங்கள் விரும்பும் சம்பளத்தை அவர்களாகவே நிர்ணயிக்கையில் ஏன் வழக்குரைஞர்கள் விதிமுறைகளுக்குட்பட்டு தங்கள் சம்பளத்தை நிர்ணயிக்க வேண்டும்? என்பதுதான் அது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றால், இரு வேறு தொழில் செய்யும் இருவருக்கு ஏன் ஒரே மாதிரியான உரிமைகள் இல்லை. இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமில்லையா என்ற கேள்வி எழுகிறது. மேற்போக்காக சரி என தோன்றினாலும், இல்லை என்பதே அதற்கு பதிலாக இருக்க முடியும்.

'சட்டத்தின் முன் அனைவரும் சமம்' என்பதை ஒத்துக் கொள்ளும் அதே வேளையில் 'சமமானவர்களே சமமாக பாவிக்கப்பட வேண்டும்' என்பதையும் நீதிமன்றங்கள் ஏற்றுக் கொள்கின்றன. மேலும், தனது குறிக்கோளை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு அரசு, பாகுபாடுகளை ஏற்படுத்திக் கொள்ள அனுமதியுண்டு. இவ்வகையான பாகுபாடுகளை ஏற்படுத்துகையில் அவை உண்மையிலேயே அரசுக்கான குறிக்கோளை நிறைவேற்றுவதற்கான அவசியத் தேவையா என்ற பிரச்னை நீதிமன்றங்கள் முன்பு தினமும் எழுவது. உதாரணத்துக்கு சமீபத்திய உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஒன்றை கூற விரும்புகிறேன்.

கம்ட்ரோலர் அண்ட ஆடிட்டர் ஜெனரல் என்பவரை நீங்கள் அறிந்திருக்கலாம். மத்திய தணிக்கை ஆணையாளர். அனைத்து அரசுத்துறை அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கணக்குகளை தணிக்கை செய்வது இவரது பொறுப்பு. இவ்வாறு தணிக்கை செய்வதற்கு இவர் தனியார் தணிக்கை நிறுவனங்களை நியமித்துக் கொள்வார். அதாவது இவரது அலுவலகத்தில் உள்ள பட்டியலில் தங்களது பெயர்களைச் சேர்த்துக் கொண்ட தனியார் தணிக்கை நிறுவனங்களுக்கு இப்பணிகள் வழங்கப்படும். இவ்வாறு இவரது அலுவலகப் பட்டியலில் பெயரைச் சேர்த்துக்கொள்ள விண்ணப்பிக்க வேண்டி இவரது அலுவலகம் 1981ல் ஒரு விளம்பரத்தை வெளியிட்டது.

அந்த விளம்பரத்தில் ஒரு பிரிவு தனியொரு தணிக்கையாளர் (சார்ட்டட் அக்கவுண்டண்ட்) உரிமையாளராக இருந்து நடத்தும் நிறுவனங்கள் (Proprietorship Firms) இவ்வாறாக பட்டியலில் பெயரைச் சேர்த்துக் கொள்ள விண்ணப்பிப்பதை தடை செய்தது. அதாவது, இரண்டுக்கு மேற்பட்ட நபர்களால் நடத்தப்படும் கூட்டு நிறுவனம் (Partnership Firm) மட்டுமே விண்ணப்பிக்க இயலும் என்றது. ஆனால் போதிய தணிக்கையாளர்கள் இல்லாத ஒரிஸ்ஸா, அஸ்ஸாம், மேகாலயா, காஷ்மீர் போன்ற மாநிலங்களில் இவ்வித பாகுபாடு இல்லை.

குஜராத்தில் உள்ள ஒரு தணிக்கையாளர், 'இந்த பாகுபாடு தனது உரிமையை பாதிக்கிறது. உரிமையாளராக தான் நடத்தும் தணிக்கை நிறுவனம் மற்ற கூட்டு நிறுவனங்களோடு சமமாக பாவிக்கப்படவில்லை என குஜராத் உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார். இங்கு ஒரு கணம் இவ்வித பாகுபாடு நியாயமானதா என்பதை தீர்மானிக்கவும். சரி....குஜராத் நீதிமன்றம் அரசுக்கு எதிராக தீர்ப்பு எழுத இறுதியில் இருபது ஆண்டுகள் கழித்து உச்ச நீதிமன்றம் இறுதியாக இந்தப் பிரச்னைக்கு தீர்வு கண்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் மத்திய தணிக்கை ஆணையாளர் கொடுத்த விளக்கமானது, 'கூட்டு நிறுவனங்கள் உரிமையாளர் நிறுவனங்களை விட திறமை மிக்கதாகவும், குறித்த காலத்தில் வேலையை முடிக்க வல்லதாகவும், அதிக முன் அனுபவம் வாய்ந்ததாகவும்....முக்கியமாக நீடித்து நிலைக்கும் தன்மை மிக்கதாகவும் இருக்கின்றன. எனவே அரசு தணிக்கைப் பணியை தனியாளான உரிமையாளர் நிறுவனங்களை நம்பி விடமுடியாது. எனவே இந்தப் பாகுபாடு தேவைதான்' என்பதாகும். இதில் கடைசியில் கூறிய காரணம் வலுமிக்கது. எனெனில் கூட்டு நிறுவனமாக இருக்கையில் ஒரு கூட்டாளிக்கு ஏதேனும் நேரும் பொழுதிலும் மற்றொரு கூட்டாளி தணிக்கைப் பணியை முன்னெடுத்துச் செல்ல முடியும்.

இதே பிரச்னையில் முன்மாதிரியான தீர்ப்பு ஏதும் இல்லை. எனவே வழக்கினை தீர்க்கும் நீதிபதிகளின் தயவில் இந்த வழக்கு எந்தப் பக்கம் வேண்டுமானாலும் தீர்க்கப்படலாம். இந்த மாதிரியான வழக்குகளைக் கையாளுகையிலேயே பல நீதிபதிகள் வழக்கறிஞர்களின் வாதத்தை விடுத்து தங்கள் சுய மூளைக்கு வேலை கொடுத்து, இறுதியில் தங்கள் விருப்பத்தினையே தீர்ப்பாக அறிவிக்கின்றனர். இந்த வழக்கிலும் அவ்வாறே, 'இருவர் வேலை பார்த்தால் என்ன...ஒருவர் வேலை பார்த்தால் என்ன? எல்லாம் ஒன்றுதான். பல சமயங்களில் தனியாள் சிறப்பாக வேலை செய்ய இயலும். மேலும் சில கூட்டு நிறுவனங்களில் ஒருவர் வெறுமே 'ஸ்லீப்பிங் பார்ட்னர்' எனவே இதை வைத்து திறமையை எடை போட முடியாது' என்று கூறுவதோடு நில்லாமல் நீதிமன்றத்திற்கு வரும் கட்சிக்காரர்கள் ஒரு வழக்கறிஞரை மட்டுமே நியமித்து அவருடனே 'மூழ்குவதற்கு அல்லது நீந்துவதற்கும்' தயாராக இருக்கிறார்களே என்று ஒரு ஒப்புமையையும் சேர்த்து....இறுதியில் ஆடிட்டர் ஜெனரல் ஏற்படுத்திய பாகுபாடு அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்று வழக்கினை முடித்து வைத்துள்ளனர்.

நீதிபதிகளின் தீர்ப்பு நியாயமானதுதான். ஆனால் இதே வழக்கினை அரசுக்கு சாதகமாகவும் தீர்மானித்து தீர்ப்பு எழுத முடியும். எனவே நான் நினைப்பது என்னவெனில், பொதுவாக தனக்கு எந்த வகையான ஆடிட்டர்கள் தேவை என ஆடிட்டர் ஜெனரல் போன்றவர்கள் தீர்மானிக்கையில், அந்த முடிவில் யாதொரு கெட்ட எண்ணமும் இல்லாத வகையில் அதில் நீதிமன்றங்கள் தலையிடலாகாது என்பதாகும். ஆடிட்டர் ஜெனரலுக்கு எந்தவொரு தனிப்பட்ட நிறுவனத்திற்கு சகாயம் செய்யவோ அல்லது எந்தவொரு தனிப்பட்ட நிறுவனத்தை பட்டியலில் வரவிடாமல் செய்யவோ இந்த பாகுபாடை செய்யவில்லை. எனவே இந்தப் பிரச்னையில் நீதிமன்றங்கள் அவரது மன ஓட்டத்தோடு உடன்பட்டிருக்கலாம்.

இறுதியில் எனது கவனத்துக்கு வருவது, குஜராத் நீதிமன்றத்தில் இரு பெஞ்சுகளிலும் தோற்ற பிறகு, அந்த தீர்ப்பினால் தனக்கு யாதொரு இழப்பும் இல்லாத வகையில் அரசு, இதனை ஒரு ஈகோ பிரச்னையாக கருதி.....உச்சநீதிமன்றம் வரை சென்று பணம் செலவழித்தது. அரசு தனது வழக்குகளை சமரசமாக முடித்துக் கொள்ள முயன்றால் நீதிமன்றங்களில் பாதி வழக்கு முடிந்து போகும். யார் காதில் இந்த சங்கு ஊதப்பட வேண்டும்.

12.6.06

பல்கிவாலா...



சமீபத்தில், சட்டமேதை நானி பல்கிவாலாவின் பல்வேறு உரைகளின் தொகுப்பான "வி, த இண்டியன்ஸ்" என்ற புத்தகம் படித்தேன். அவரது சொற்பொழிவுகளின் தொகுப்பு என்றாலும், முதலில் இருப்பது "நாம் நமது விதியின் எஜமானர்களா?" என்று அவர் போகிற போக்கில் எழுதிய கட்டுரை. ஐன்ஸ்டைனில் இருந்து ஸ்டீபன் ஹாக்கின்ஸ் வரை துணைக்கழைத்து மாந்தீரிகம், 'எதிர்காலத்தை கணித்தல் ஆகியவை விடை காண முடியாத ரகசியங்கள்' என்ற ரீதியில் முடியும் கட்டுரையில் அவர் குறிப்பிட்டுள்ள சம்பவங்கள் சுவராசியமானவை.

மும்பையில் நடந்த ஒரு இரவு விருந்தில் டாக்டர் ஹோமி பாபா கலந்து கொண்டாராம். அப்போது 'அதீதமான சில சக்திகள் இருப்பதாக' கூறி லக்னோவைச் சேர்ந்த எளிமையான ஒரு மனிதனை அவரிடம் அறிமுகப்படுத்தினார்களாம். மற்றவர்களின் வறுபுறுத்தலுக்கு இணங்கி ஹோமி பாபா அவனை சோதிக்க சம்மதித்தாராம். தனது பர்ஸிலிருந்து ஒரு ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து அதைப் பார்க்காமலேயே தனது கால்சாராய் பக்கவாட்டுப் பையில் வைத்து அதன் எண் என்னவென்று வினவினாராம். லக்னோ மனிதன் தனது மனதைப் படித்துவிடக் கூடாது என்று நோட்டின் எண்ணை அவரும் பார்க்கவில்லையாம். ஆனாலும், லக்னோ மனிதன் நோட்டின் எண்ணை சரியாக கூறி அனைவரையும் வியக்க வைத்தானாம். பின்னர் ஹோமி பாபாவை சந்தித்த பல்கிவாலா 'அந்த நிகழ்வுக்கு ஏதாவது விஞ்ஞான விளக்கம் இருக்கிறதா?' என்று கேட்டதற்கு ஹோமி பாபா, 'அவ்வாறு ஏதும் இல்லை என்றாராம்'.

***************

மற்றொரு சம்பவம் பல்கிவாலாவின் சொந்த அனுபவம். 1975ல் அலகாபாத் உயர்நீதிமன்றம் இந்திராகாந்தியின் தேர்தல் செல்லாது என்று அறிவித்த தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து இடைக்கால தடை உத்தரவு பெற்றபின்னர் விமானத்தில் பம்பாய் திரும்பிக் கொண்டிருந்தாராம். பக்கத்து இருக்கையில் காவியுடையணிந்த எளிமையான மனிதர் அமர்ந்திருந்தாராம். அவர் பல்கிவாலாவிடம் நீதிமன்றத்தில் நடந்தது என்ன என்று வினவ, சுருக்கமாக நடந்தவற்றைக் கூறினாராம். அந்த மனிதர் தான் பங்களூரில் உள்ள காந்தி ஆசிரமத்தை சேர்ந்தவர் என்றும் இந்தியாவின் பல பாகங்களுக்கும் பயணம் செய்து திரும்பிக் கொண்டிருப்பதாகவும் கூறி பங்களூரில் உள்ள ஒரு தீர்க்கதரிசி கூறிய சில விபரங்களை பல்கிவாலாவிடம் தெரிவித்தாராம்.

"நாம் மே'1975ல் பங்களூரை விட்டு கிளம்பும் பொழுது அவர் என்னிடம் இந்திரா தேர்தல் வழக்கில் தோற்றுப் போவார் என்றும் ஆனால் அதற்குப் பிறகு அவர் உலகிலேயே சக்திவாய்ந்த பெண்மணியாக மாறி விடுவார் என்று கூறினார்"

"அவர் ஏற்கனவே உலகின் மாபெரும் ஜனநாயக நாடான இந்தியாவின் பிரதமர்தானே! இதை விட அவர் இன்னும் எப்படி சக்திவாய்ந்தவராக மாற முடியும்?" பல்கிவாலா.

"எனக்குத் தெரியாது. அவர் கூறியதை அப்படியே உங்களிடம் கூறுகிறேன்" என்றாராம்.

"அவர் வேறு எதுவும் கூறினாரா?"

"ஆம். பிரதமருக்கு கிடைக்கும் இந்த அதீத சக்தி 1977 மார்ச்சில் முடிவடையும்"

"பின்னர் அவர் வேறு ஏதாவது கூறினாரா?"

"ஆம், இன்று பொதுவாழ்வில் முக்கியமான நபராகத் திகழும் ஜெயப்பிரகாஷ் நாராயணன் தீராத நோய்வாய்ப்பட்டு அதன் காரணமான பின்னர் இரண்டு வருடத்தில் மரணமடைவார். இந்தியாவின் பிரதமராகும் லட்சியம் உள்ள ஒய்.பி.சவாண் தனது லட்சியத்தை அடைய முடியாது என்றும் கூறினார்"

அந்த மனிதர் கூறியதை மனதில் அசை போட்டவாறே வீட்டிற்கு வந்தால் 36 மணி நேரத்திற்குள் அவசர சட்டத்தை பிரகடனம் செய்ததன் மூலம் இந்திரா ஒரு சர்வாதிகாரியைப் போல அனைத்து அதிகாரம் பெற்றவராக மாறினாராம். தான் கேட்டவற்றை ராம்நாத் கோயங்காவிடம் கூறினாராம். அவசர காலம் முழுவதும் தான் கேட்ட வார்த்தைகள் அவரைச் சுற்றியே வந்ததாம். அவநம்பிக்கையும் துக்கமும் நிறைந்த அந்த நாட்கள் முழுவதும் மார்ச் 1977ல் அவை முடிந்து போகும் என்ற வார்த்தைகள் மட்டுமே ஒரே நம்பிக்கையாக இருந்ததாம். பின்னர் அந்த வார்த்தைகள் உண்மையாயின.

விமானத்தில் பம்பாய திரும்பிய அந்த நாளுக்கு பின்னர் அவர் இந்திராவை மறுபடியும் சந்தித்தது 1977 மார்ச் தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருந்த நாள் மாலைதானாம். இந்திராவை சந்தித்த பல்கிவாலா அவரிடம், "இந்திராஜி, நான் கூறுவது உங்களுக்கு ஆறுதலாயிருக்கலாம். அலகாபாத் தீர்ப்பில் இருந்து இந்த தேர்தல் முடிவு வரையில் நடைபெற்றவையெல்லாம் முன்னரே தீர்மானிக்கப்பட்டவை போல இருக்கிறது" இந்திராவின் கண்களில் கண்ணீர் தோன்றியதாம். இந்திராவை அவ்வளவு சோகமாக பல்கிவாலா பார்த்த ஒரே சம்பவமும் அதுதானாம்.


பல்கிவாலா, கூறுவது தவறாக இருக்கலாம். ஆனால் பொய்யாக நிச்சயம் இருக்க முடியாது. அப்பழுக்கில்லாத வாழ்க்கை வாழ்ந்தவர். ஆனால் 'Freedom is like alcohol. It must be taken in moderation' என்று வேறொரு இடத்தில் அவர் கூறுவதைப் படித்தால் சிலர் கோபம் கொள்ளலாம்...

போகட்டும், ஆனால் 'அவசர நிலை மார்ச் 1977ல் முடிந்து விடும்' என்று பல்கிவாலாவுக்கு சொல்லப்பட்டதால் அவருக்கு ஒரு நிம்மதி! மற்றவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? ம்ம்ம்ம்ம் தெரிந்து போனால் எதிர்த்து போராட்டம் செய்வதற்கு யாருமே முன் வர மாட்டார்களே! ஆக சிலரின் விளையாட்டுக்கு பலர் பகடைக் காய்கள் மட்டும்தானோ!!

*********************

மற்றபடி சொற்பொழிவுகளை புத்தகமாக பதிப்பிப்பதும் படிப்பது எவ்வளவு தூரம் புத்திசாலித்தனமான காரியம் என்று தெரியவில்லை. ஒரு தலைப்பினை ஒட்டி கட்டுரையாக எழுதுவதற்கும் உரையாக நிகழ்த்துவதற்கும் வித்தியாசம் இருக்கிறது என நினைக்கிறேன். கட்டுரையில் விபரதானம் முக்கியம். உரைகளில் விபரங்களை விட பொதுவான வாக்கியங்கள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. ஒரு உரையினை படிக்கும் நேரத்தில் ஒரு கட்டுரையினை படித்தால் அதிக பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன்.

தேன்கூட்டிற்கு நன்றி!

நேற்று தேன்கூட்டினை பார்வையிட்ட எனக்கு இன்ப அதிர்ச்சி! என்னையும் எனது வலைப்பதிவினையும் அறிமுகப்படுத்தி கெளரவித்திருந்தனர். வலைப்பதிவாளர்களிடம் அதிகம் அறிமுகமில்லாத என்னைப் போன்றவர்களுக்கு இத்தகைய அறிமுகங்கள் தேவையான ஒன்று. தேன்கூடு நிர்வாகத்தினருக்கும், என்னைப் பற்றி சில வரிகளை எழுதிய அந்த அன்பிற்கும் நன்றி! (எழுதியது யாரென்று எனக்குத் தெரியும்)

இன்றிலிருந்து கோடை விடுமுறை கழிந்து நீதிமன்ற பணி தொடங்குகிறது... வலைப்பதிவினை தொடர்ந்து எடுத்துச் செல்ல வேண்டுமென்று இந்த அறிமுகம் ஊக்கமும், உறுதியும் அளித்துள்ளது. நன்றி!

10.6.06

பயணிகள் கவனிக்கவும்...

வெளிநாடு எதற்கும் நான் விமானத்தில் பயணித்ததில்லை என்றாலும், மும்பைக்கும் சென்னைக்கும் பன்னாட்டு விமான தளம் மூலம் பயணித்திருக்கிறேன். மும்பையில் இருந்து சென்னை வழியாக வெளிநாடு செல்லும் அல்லது வெளிநாடுகளில் இருந்து சென்னை வழியே மும்பை வரும் விமானங்களை நான் எப்போதும் தேர்ந்தெடுப்பது வழக்கம். காரணம், இவற்றில் கட்டணம் மற்ற விமான கட்டணங்களில் பாதியளவுதான். ஒரே கஷ்டம் தூக்கத்தை இழந்து நடு இரவில் பயணம் செய்ய வேண்டியிருக்கும்.

மும்பை பன்னாட்டு தளத்தில் அநேகமாக அறிவிக்கப்பட்ட கன்வேயர் பட்டியில் குறிப்பிட்ட விமானத்தின் பெட்டிகள் வராது. பயணிகள் டிராலியுடன் அங்குமிங்கும் அலைவது பரிதாபமாக இருக்கும். அந்த எரிச்சலையும் மீறி எனக்கு ஏற்படும் ஒரு சந்தேகம், ‘ஒரு ரயில் நிலையத்தில் இருக்கும் கண்காணிப்பு கூட இல்லையே. கன்வேயரில் வரும் பெட்டியினை யாராவது அபேஸ் செய்து விட்டால்’ என்பதுதான். ஆயினும் அந்த சந்தேகத்தினை யாரிடமும் இதுவரை தெரிவிக்க தைரியம் வந்ததில்லை. ‘திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் முன்சீட்டுக்கு முண்டியடிக்கிறவனெல்லாம் விமானத்தில் போனால் இப்படித்தான் புத்தி போகும்’ என்று கேட்பவர் நமது உண்மை நிலவரத்தை போட்டுடைத்தால் என்ன செய்வது என்ற சிறு பயம்!

ஆனால், ‘பெட்டியினை சுடும் ஆசாமிகள் விமானத்திலும் பறக்கிறார்கள்’ என்று கடந்த வாரம் படித்த செய்தி, வெட்கத்தை கொஞ்சம் தள்ளி வைத்து சந்தேகத்தை வெளிப்படுத்த தைரியம் தருகிறது. ‘இதுவரை வெளிநாடுகளில் இருந்து டெல்லி வழியாக மும்பை வரும் விமானங்களில்தான் இவ்வாறு பெட்டிகள் களவாடப்பட்டிருப்பதாக’ ஏப்ரல் ஆஆறாம் தேதி டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறுகிறது. இந்த ஆசாமிகள் டெல்லியிலிருந்து மும்பைக்கு விமானத்தில் பறந்து வந்து, மும்பை விமான நிலையத்தில் கிடைக்கும் பெட்டியினை எடுத்துக் கொண்டு கம்பியை நீட்டி விடுகிறார்களாம். குறிப்பாக நினந் ஷா என்ற மாணவர் லண்டனில் இருந்து மும்பை வருகையில் இவ்வாறு தனது நகைகள், சான்றிதழ்கள் அடங்கிய பெட்டியினை இழந்திருக்கிறார். பிரிட்டிஷ் ஏர்வேஸில் பயணம் செய்த சென்னையைச் சேர்ந்த கார்த்திக் நடராஜனும் தனது பெட்டியினை இழந்திருக்கிறார்.

‘விமான கம்பெனிகள் என்ன பிசாத்தா? அதெல்லாம் பொருள் காணாமல் போனால், லட்ச லட்சமாக நஷ்ட ஈடு தருவார்கள்’ என்று அப்பாவித்தனமாக பயணிகள் யாரும் தைரியம் கொள்ள வேண்டாம். பேருந்து அல்லது ரயிலில் அதுவும் இந்தியாவில் பயணம் செய்கையில் கூட அவர்களது கவனக்குறைவால் பொருள் இழப்பு ஏற்படுகையில், அந்த பொருளின் பண மதிப்பினை நஷ்ட ஈடாக பெற வாய்ப்பு இருக்கிறது. ஆனால், விமானம் மூலம் பயணம் செய்கையில் நமது பெட்டி காணாமல் போகையில், ‘எடைக்கு 20 அமெரிக்க டாலர்’ மட்டுமே நஷ்ட ஈடாக வழங்கப்படுகிறது. அதாவது உங்கள் பெட்டியின் எடை பத்து கிலோ என்றால், அதற்குள் இருந்தது மண்ணாங்கட்டியானாலும் சரி, மாசற்ற தங்கமானாலும் சரி, கிடைக்கும் இழப்பீட்டு தொகை வெறும் 200 டாலர்கள். அதற்கு மேல் ஒரு பைசா கிடைக்காது! ஏதோ நான், இந்தியா நிலையை மட்டும் குறிப்பிடவில்லை. நீங்கள் உலகின் எந்த மூலைக்கு பயணித்தாலும் இதே நிலைதான். ஏனெனில் 1955ம் வருடம் ‘ஹேக்’கில் ஏற்பட்ட பன்னாட்டு ஒப்பந்தத்தின் மூலம் உலகம் முழுவதும் நஷ்ட ஈடு குறித்து ஒரே மாதிரியான சட்டம்தான். ஆக, இந்த எடைக்கு 20 டாலர் தொகையும் அப்போது நிர்ணயிக்கப்பட்டதுதான். இன்று வரை ‘இந்த் தொகையை அதிகரிக்க வேண்டும் அல்லது இம்முறையை சீரமைக்க வேண்டும்’ என்று எந்த அரசுக்கும் தோன்றவில்லை. விமான நிறுவனங்களுக்கு இதானல் கொண்டாட்டம்!

‘நுகர்வோர் நீதிமன்றங்கள்’ நமது நாட்டில் சர்வரோக நிவாரணிகள். இவ்விதமாக பெட்டிகளை இழந்த பல பயணிகள் மெத்த நம்பிக்கையோடு வழக்குகளை லட்சக்கணக்கான தொகைக்கு தாக்கல் செய்வதுண்டு. விமான நிறுவனங்கள் வழக்கினை உச்ச நீதிமன்றம் வரை எடுத்துச் செல்லவும் தயங்குவதில்லை. இறுதியில் பயணிக்கு கிடைப்பதென்னவோ எடைக்கு 20 டாலர்தான். மேஜர் அஸ்வானி சிந்தாணியின் வழக்கு பரிதாபமானது. இவர் தில்லியிலிருந்து ஐவரி கோஸ்ட்டுக்கு துபாய், அடிஸ் அபாபா வழியாக எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்தார். நாலு பெட்டிகளை எடுத்துச் சென்றதால் 30 ஆயிரம் ரூபாய் வேறு கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. கடைசியில், ஒரு பெட்டி அவர் கையில் கிடைக்கவேயில்லை. 50,000 பெட்டியின் மதிப்பாகவும், அதிகமாக வசூலிக்கப்பட்ட தொகையான 30 ஆயிரத்திற்காகவும் வழக்கு தொடர்ந்தார். இறுதியில் கிடைத்தது எடைக்கு 20 டாலரும் 30 ஆயிரத்தில் நாலில் ஒரு பங்கான 7500 ரூபாயும்தான். இந்தப் பணமும் கிடைப்பதற்குள் ஏழு ண்டுகள் ஓடி விட்டது!

இதற்கு நாம் செய்யக் கூடியது என்ன? அதிகமாக இந்தியாவில் இருந்து வெளிநாடு பயணிப்பவர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றுபவர்கள். இவர்கள் ஒரு குழுமமாக இருப்பதால் இந்தப் பிரச்னை குறித்த ஒருமித்த பொதுக்கருத்தினை உருவாக்கி அதை அரசின் பார்வைக்கு கொண்டு செல்லலாம். மீண்டும் ஒரு சர்வதேச மாநாடு கூட்டப்பட்டு இழப்பீடு விஷயத்தில் நுகர்வோருக்கு சாதகமாக சட்டம் இயற்ற வழி செய்யலாம்.

இந்த தொலைநோக்கு செயலை விடுத்து தற்போதுள்ள நிலையில் பயணிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ள செய்யக் கூடியது ‘இவ்விதமான சிக்கல்களை சமாளிக்கத்தக்கதாக காப்பீடு செய்து’ கொள்வதே! சிட்டிபாங்க் மற்றும் டைனர்ஸ் கிளப் கடன் அட்டை வைத்திருப்பவர்கள் நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனம் இவ்வித இழப்பிலிருந்து காக்கிறது. பெட்டிகள் கிடைக்க தாமதமாகி, அதனால் ஏற்படும் அவசர செலவுகளுக்கு கூட காப்பீடு கிடைக்கிறது.

காப்பீடு செய்து கொள்ளும் அளவிற்கு போக வேண்டுமா என்று நினைப்பவர்கள் செய்ய வேண்டியது, கவனாயிருப்பது மட்டுமே! எவ்விதம் கவனமாயிருக்கலாம் என்று விமான நிறுவனங்கள் சில அறிவுரைகள் கூறுகின்றன. பணம், நகை மற்றும் விலையுயர்ந்த பொருட்களை உங்களது கை பெட்டியிலேயே வைத்தல் நலம். பெட்டியின் இரு பக்கமும் உங்கள் பெயர் விலாசம் எழுதுவது போல பெட்டிக்கு உள்ளேயும் உங்கள் பெயர், விலாசம் மற்றும் உங்கள் பயண விபரம் அடங்கிய காகிகத்தை வைத்தல் பயனளிக்குமாம். தொலைவிலிருந்தே அடையாளம் காணத்தக்க வகையில் உங்கள் பெட்டியினை வடிவமைப்பது அவசியம். ஒரே மாதிரியாக வரும் பெட்டிகளிடையே உங்கள் பெட்டியினை அடையாளம், ஒரு நொடியில் காண்பதற்காக இவ்விதம் வடிவமைக்க வேண்டும். முக்கியமாக, பெட்டி காணாமல் போனாலோ அல்லது தாமதமானாலோ ஏற்படும் உடனடி பிரச்னையை சமாளிக்கத் தக்கதாக சில ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். மாற்றுத் துணி கூட இல்லாமல் விமான நிலையத்தில் அங்குமிங்கும் அலையும் அவலத்தையாவது தவிர்க்கலாம் அல்லவா? பெட்டியினை தகுந்த முறையில் எடை போடச் செய்து குறித்துக் கொள்ள வேண்டும். நிரஞ்சன் சிங் எனபவர் 34 கிலோ எடையுள்ள தனது பெட்டிக்காக தொடர்ந்த வழக்கில் கல்ப் ஏர் அதன் எடை 14 கிலோதான் என்று சாதித்தது. விலையுயர்ந்த பொருளை செக் செய்யும் பெட்டியில் வைக்கத்தான் வேண்டுமாயின் அதை தெரிவித்து அதற்காக தனியாக கட்டணம் ஏதாவது செலுத்த வேண்டியதாயில் செலுத்துதல் பின்னர் உபயோகமாயிருக்கலாம்.

இறுதியில், பெட்டி தொலைகையிலோ அல்லது தாமதமாகையிலோ உடனடியாக அந்த விமான நிறுவனத்தால் வழங்கப்படும் அறிக்கையினை வாங்கி அதில் அனைத்து விபரங்களையும் தெரிவித்து, சுங்க அதிகாரியின் ஒப்புதல் கையொப்பமுடன் விமானநிலையத்தை விட்டு வெளியேறுமுன்னே தாக்கல் செய்ய வேண்டும்.

கவனமாக இருங்கள்...பயணம் இனிதாகும்!

மும்பை
13/04/2004
(இக்கட்டுரைக்கு பொருத்தமான ஒரு தலைப்பினை அளித்து, அமீரக ஆண்டு விழா மலரில் வெளியிட்ட எனது இனிய நண்பர் சாத்தை ஆசீப் அவர்களுக்கு நன்றி)

தாங்க் யூ சார்...

நேற்று ஒரு சின்ன மிட்டாய்த் தாள் (candy wrapper) என்னைப் பாடாய் படுத்திவிட்டது. வருடாந்திர கடனை கழிக்க வேண்டி சார்ட்டட் அக்கவுன்டண்டைப் பார்க்க விரைந்து செல்ல வேண்டியிருந்தது. மும்பை ரயில்களுக்கு பீக் அவர் என்று ஒன்று கிடையதென்றாலும், ரயில்களில் ஏறவே முடியாத அவர் என்று ஒன்று உண்டு. அப்படியாகப்பட்ட ஒரு நேரத்தில்தான் துரதிஷ்டவசமாக நான் ரயிலில் செல்ல வேண்டி வந்தது. பிளாட்பாரத்தில் கூட்டம் அதிகமில்லாத இடத்தினை தேடி வேகமாக சென்று கொண்டிருந்த நான், வழக்கம் போல பாக்கட்டில் இருந்த ஒரு மென்டோஸ் மிட்டாயினை எடுத்து வாயில் போட்டேன். மிட்டாய் வாயில் போனதை போலவே, கையிலிருந்த அதன் தாள் எனது கையிலிருந்து நழுவி கீழே விழுந்ததும் அனிச்சையாக நடந்தது. மூன்று, நான்கு அடி நடந்து விட்டேன். 'ப்ச்...' என்ற ஒரு சத்தம் கேட்டு திரும்பினேன். ஒரு அடி தூரத்தில், என் வயதையொத்த நபரொருவர் கீழே விழுந்த தாளை சுட்டிக்காடியபடி இருந்தார். இது ஒரு பிரச்னை எப்போதும். நாம் ஏதாவது தாளை கீழே போடுவோம் அல்லது படித்து முடித்த பேப்பரை ரயிலில் விட்டுப் போவோம். நான்கு பேர், 'சார், சார்...' என்று நாம் மறதியாகத்தான் விட்டுப் போகிறோம் என்று உதவிக்கு வருவார்கள். நல்ல விஷயம்தான். அதனைப் புரிந்து கொள்கிற மனதுதான் நமக்கு இல்லையோ? ஆனாலும் வலிய உதவிக்கு வந்தவர்களின் மனதை ஏன் நோகடிக்க வேண்டுமென கஷ்டத்தைப் பார்க்காமல் திரும்பப் போய் எடுத்துக் கொள்வதுண்டு.

அதற்காக, இந்த சின்ன மிட்டாய் தாளைப் போய் எடுப்பதா? கண்ணாலேயே, அதில் மிட்டாய் எதுவும் இல்லை என்று சுட்டிக்காட்டும் போதுதான் கவனித்தேன் அவர் கண்களில் ஒரு சின்ன எரிச்சல் இருந்ததை. 'அதனைத் தாங்கள் எடுத்து குப்பைத்தொட்டியில் போட முடியுமே' என்ற ரீதியில் சில ஆங்கில வார்த்தைகள் காதில் விழுந்தது போல இருந்தது. அந்த தாளைப் பார்த்தேன். தனியாக பிளாட்பாரத்தில் படுத்து அது என்னைக் கேலியாக திருப்பிப் பார்த்தது. எனது கை பெருவிரல் அளவுதான். ஆனால் எனது பெரிய ஈகோவின் மேல் அதனினும் பெரிதாக கறையாகப் படிந்தது போல உணர்ந்தேன்.

அதற்குள் அதனைச்சுற்றி பல கால்கள். நான்கு அடி கடந்திருந்திறேன். திரும்பிச்சென்று குனிந்து அத்தனை கால்களையும் வணங்கி அதனை எடுப்பதா? இப்போது எத்தனை கண்கள் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. இதனையும் மீறி அதனை எடுத்தால், ஒரு சின்ன தாளுக்காக இத்தனைப் பாடா என்று எத்தனை அனுதாபப் பார்வை என் மீது விழப் போகிறது. இது என்னடா தர்ம சங்கடம்? பல்வேறு எண்ணங்கள் ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் ஓடி மறைந்தன. இந்த வெட்கத்தையெல்லாம் விட, அந்த நண்பரின் இவ்வாறு அறிவுறுத்தும் தைரியமே எனக்கு வியப்பளித்தது. ஏனென்றால் மும்பை வீதியில் குப்பையினை போடுவது சென்னை நேப்பியர் பாலத்தில் நின்று கொண்டு கூவத்தில் எச்சில் துப்புவது போலவே எவ்வித மாகாமாற்றத்தை ஏற்படுத்திவிட போவதில்லை. ஆனாலும் இந்த தைரியம் மதிக்கப்பட வேண்டும் என் நல்ல வேளையாக எனக்குத் தோன்றியது. யார் முகத்தையும் கவனிக்காமல் நேராக அத்தாளை நோக்கி சென்றேன். அந்த நபரை கடந்த போது, 'நம்மைப் போல படித்தவர்கள்...' என்ற ஆங்கில வார்த்தைகள் காதில் விழுந்தது. அத்தனைக் கால்களுக்கும் நடுவே குனிந்து அந்த குட்டி தாளை எடுத்து 'விடு விடு' என்று நடையெக் கட்டினேன். அவரைக்கடந்த போது தெளிவான ஆங்கிலத்தில், 'தாங்க்யூ சார்' என்று சத்தமாக கேட்டது. என்னை விட வயதில் சின்னவராகத் தெரிந்த அவரின் முகத்தை பார்க்கவில்லை. 'நான்தானப்பா உனக்கு நன்றி சொல்ல வேண்டும்' என னைத்துக் கொண்டேன்...

24.07.02
மும்பை

7.6.06

பாவத்தின் சம்பளம்...



சனிக்கிழமை (13/12/03) 'டைம்ஸ் ஆ·ப் இந்தியா'வின் நடுப்பக்க கட்டுரை 'நேஷனல் ரீடர்ஷிப் சர்வே கவுன்ஸி’லானது இந்தியாவின் புகழ் பெற்ற ஆய்வு நிறுவனங்கள் மூலம் நடத்திய ஆய்வறிக்கையை வெளியிடாமல் இழுத்தடித்துக் கொண்டிருப்பதைப் பற்றியது. ஆனால் நேஷனல் ரீடர்ஷிப் சர்வே கவுன்ஸில் வெளியிடத் தயங்கும் ஆய்வறிக்கை பற்றியதோ அல்லது அந்த ஆய்வறிக்கையினை எதிர்நோக்கியிருக்கும் சுமார் 5000 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்தியாவின் விளம்பரத்துறையைப் பற்றியதோ அல்ல நான் இங்கு எழுத விழைவது. மாறாக கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்படும் ஒரு சம்பவமும் அதனை உதாரணப்படுத்தி 'அமெரிக்கர்கள் ஏதோ கிறுக்குத்தனமாக (crazy) நடந்துகொள்வதாக பொருள்படும்' வாசகமும்தான்.

அந்த சம்பவத்தினை நான் ஏற்கனவே இணையகத்திலும், ஈ-மடல் பறிமாற்றம் மூலமாகவும் பலமுறை படித்திருக்கிறேன். அதாவது, லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த 19 வயது கார்ல் ட்ருமென் என்பவர் தனது பக்கத்து வீட்டுக்காரரின் காரின் சக்கர பிளேட்டுகளை திருட முயல்கையில், அவர் அடியில் இருக்கிறார் என்பது தெரியாமல் கார் சொந்தக்காரர் காரினை கிளப்ப, ட்ருமெனின் கைகள் நசுக்கப்பட்டதாம். தனது கை நசுக்கப்பட்டதற்காக, ட்ருமென் வழக்கு தொடர்ந்து தனது மருத்துவ செல்வுகளையும் மற்றும் 74,000 டாலரும் நஷ்ட ஈடாக பெற்றதாக ஒரு சம்பவம். இது உண்மையோ பொய்யோ தெரியவில்லை. ஆனால், அமெரிக்காவின் வம்படியாக தாக்கல் செய்யப்படும் 'தீங்கியல் வழக்குகளை'யும் (Suits for tortious liability) கேலி செய்வதற்கு காட்டப்படும் உதாரணங்களுகளில் இந்த வழக்கும் இடம் பெறுவதுண்டு. அதாவது அமெரிக்க நீதிபரிபாலனையில் 'திருடனுக்கு தண்டனைக்கு பதிலாக வெகுமதியா?' என்று.

ஆனால் மேற்போக்காக பார்த்தால், ஏதோ வியப்பாக இருக்கும் இந்தச் சம்பவம் சட்டப்படி மிகச்சரியானதே! அதுவும் அமெரிக்க சட்டப்படி மட்டுமல்ல. நாகரீகமடைந்த சட்டத்தின் ஆட்சி நடைபெறும் எந்த ஒரு நாட்டிலும் இத்தகைய நீதி சாத்தியமானதே! சுருக்கமாக, இந்தியாவில் இந்தச் சம்பவம் நடைபெற்றிருந்தாலும் ட்ருமெனுக்கு நஷ்ட ஈடு கிடைத்திருக்கும்.

முதலில் நாம் ட்ருமென் புரிந்த அல்லது புரிய முயற்சித்த குற்றத்தினையும் அவனுக்கு கிடைத்த நஷ்ட ஈட்டினையும் குழப்பிக் கொள்ளக் கூடாது. திருட முயன்ற குற்றம் ஒரு தனிச்செயல். அதற்கான தண்டனை அவருக்கு உண்டு. ஆனால் அதனால், அவருக்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய நஷ்ட ஈடு பாதிப்படையாது. இந்தியாவில் மோட்டார் விபத்துகளினால் ஏற்படும் காயங்களுக்கு 'மோட்டார் வாகன சட்ட'த்தின்படி வண்டியின் உரிமையாளர் நஷ்ட ஈடு அளிக்க வேண்டும். இவ்விதமான் இழப்புகளுக்கு வண்டியை கண்டிப்பாக 'மூன்றாவது நபர் காப்பீடு' (Third Party Insurance) எனப்படும் காப்பீடு செய்திருப்பது அவசியமென்பதால் பொதுவாக காப்பீடு நிறுவனங்கள் இந்த இழப்பீடை வழங்கும்.

சரி, எவ்வாறெனினும் விபத்து நடைபெற்றதற்கு ட்ருமெனின் கவனக்குறைவே காரணம். வண்டியோட்டியை குறை கூற முடியாது. தனது சொந்தத் தவறினால் ஏற்பட்ட காயத்துக்கு ட்ருமெனுக்கு எதற்கு நஷ்ட ஈடு என்ற கேள்வி எழலாம். உண்மைதான் விபத்து இழப்பீடு வழக்குகளில் கவனக்குறைவின் அளவைப் பொறுத்தே நஷ்ட ஈடு தீர்மானிக்கப்படும். ஆனாலும் ஒரு விஷேஷமான பிரிவு உண்டு. அதாவது வண்டி உரிமையாளருக்கு அவர் மீது எவ்வித தவறும் இல்லையெனினும், தனது வண்டியின் மூலம் மற்றவர்களுக்கு ஏற்படும் காயத்திற்கான இழப்பீடு வழங்கும் கடமை (No Fault Liability)

இந்தியாவில் நிலுவையிலுள்ள மோட்டார் வாகன சட்ட பிரிவுகளின்படி ஒரு மோட்டார் வாகனத்தின் மூலம் ஏற்படும் விபத்துகளினால் பாதிப்படையும் மூன்றாவது நபர்களுக்கு, தவறு யார் பக்கம் இருந்தாலும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். இந்த இழப்பீடானது மூன்றாவது நபர் மரிக்கையில் ரூபாய் 50,000 அல்லது நிரந்தர ஊனமடைகையில் ரூபாய் 25,000. இந்தத் தொகை குறைந்தபட்ச தொகை. அவர் வயதானவரோ அல்லது கைக்குழந்தையோ, அதிகமாக சம்பாதிப்பவரோ அல்லது வேலையில் இல்லாதவரோ அனைவருக்கும் ஒரே அளவான தொகை. ஆனால் கவனக்குறைவு பாதிக்கப்பட்டவரின் மீது மட்டுமே இல்லாத பொழுதில் நிர்ணயிக்கப்படும் இழப்பீடானது பாதிக்கப்பட்டவரின் வயது, தகுதி, சம்பாத்தியம் மற்றும் பிற காரணிகளைக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. எப்படியோ குறைந்த பட்சம் மேற்சொன்ன இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

அடுத்த கேள்வி...ட்ரூமென் சம்பவத்தை ஒரு மோட்டர் வாகன விபத்து என எடுத்துக் கொள்ள முடியுமா? முடியும். சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் நடந்த ஒரு சம்பவம். மஹாராஷ்டிராவில் உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த டாங்கர் லாரி கவிழ்ந்து போனது. லாரியின் தொட்டியிலிருந்து எண்ணை கீழே வழிய, அருகிலிருந்த கிராமத்து மக்கள் அனைவரும் கையில் கிடைத்த சட்டி, பக்கெட்டுகளைத் தூக்கிக் கொண்டு ஓடி, கீழே வழியும் எண்ணையை பிடிக்க ஆரம்பித்தனர்....அது என்ன எண்ணெயோ...அடுப்பெரிக்க உதவும் என நினைத்தனர். திடீரென வண்டி தீப்பிடித்து எரிய பலர் கருகி மாண்டனர். மக்கள் இறக்க காரணமாயிருந்தது வாகன விபத்து எனக்கூறி நஷ்ட ஈடுக்காக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. விபத்து நஷ்ட ஈட்டிற்கான தீர்ப்பாயமும், பின்னர் பம்பாய் உயர் நீதிமன்றமும் மக்கள் இறந்ததற்கும் நடந்த வாகன விபத்திற்கும் சம்பந்தமில்லை என்று கூறி வழக்கினை தள்ளுபடி செய்தனர். இறுதியாக வழக்கு உச்ச நீதிமன்றம் சென்றது. அங்கு மோட்டர் வாகன சட்டத்தில் 'பாதிக்கப்படுபவர்கள் மோட்டார் வாகனம் மூலம் பாதிக்கப்பட வேண்டும் என்றுதான் கூறியிருக்கிறதே தவிர மோட்டார் வாகன விபத்தில் பாதிக்கப்பட வேண்டும் என்று கூறப்படவில்லை' (accident arising out of the use of the motor vehicle) என்று வாதிட்டப்பட்டு அதனை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் இழப்பீடும் கிடைத்தது. எனவே விபத்து நடைபெறுகையில் வண்டி ஓடிக் கொண்டு இருக்க வேண்டும் என்பது இல்லை. நின்று கொண்டிருக்கையில் காயம் ஏற்பட்டாலும் அதுவும் இழப்பீடுக்கு தகுதியான மோட்டர் வாகன விபத்துதான்....

ஆகவே கார்ல் ட்ரூமென் விவகாரம் ஏதோ வியப்புகுறிய சமாச்சாரமுமில்லை. அமெரிக்கர்கள் கிறுக்கர்களுமில்லை. இந்தியாவில் இந்தச் சம்பவம் நடைபெற்றிருந்தாலும், ட்ரூமெனுக்கும் இந்திய சட்டப்படி இழப்பீடு கிடைத்திருக்கும்....அவர் செய்தது அல்லது செய்ய முயன்றது பாவ காரியமென்றாலும் கூட...
(இந்த வலைப்பதிவினை ஆரம்பித்ததே மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு சட்டத்தினைப் பற்றி எழுத விரும்பித்தான். விரைவில் அது பற்றி எழுதுவேன்)

5.6.06

புனிதம்...

எனக்கு நன்கு பழக்கமான அந்த வக்கீலுக்கு நேர்ந்த அனுபவம் சுவராசியமானது. அந்த ஊரின் குறிப்பிடத்தகுந்த சில வக்கீல்களில் அவரும் ஒருவர். என்னிடம் அவர் அந்த சம்பவத்தை கூறிய போது அந்த ஊரிலுள்ள அனைத்து பெரிய மனிதர்களையும் அறிந்த அவரும் ஒரு பெரிய மனிதர். அதற்கு பல வருடங்களுக்கு முன்னரோ வேகமாக வளர்ந்து வந்த ஒரு வக்கீல். தினமும் காலை தனது அலுவலகம் செல்லும் முன்னர், வீட்டிலிருந்து சில அடி தூரம் உள்ள பெட்டிக் கடையில் ஒரு சிகரெட் வாங்கி பற்ற வைத்துக் கொள்வது அவரது பழக்கம். இந்தப் பழக்கம் வழக்கமாகி, இவர் அந்த கடையினை நெருங்கியதுமே, கடைக்காரர் சிகரெட்டை எடுத்து தீப்பெட்டியுடன் பணிவுடன் நீட்டி விடுவார். வக்கீலும் ஏதும் பேசாமல் வாங்கிப் பற்ற வைத்து நகர்ந்து விடுவார்.

அப்படியான ஒரு காலையில்தான் அந்த கடையில் புதிதாக தொங்கிய படமொன்று அவரது கவனத்தை ஈர்த்தது. வெளி நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு புளோ அப். அருமையான பிரிண்ட்.. ஆனால் அதையெல்லாம் விட அவரின், ஏன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது, படமாகி ன்ற அழகிய மேல் நாட்டுப் பெண். மேல் சட்டை பட்டன்களை திறந்து விட்டு, எதுவும் தெரியாமல் ஆனால் அனைத்தையும் பார்ப்பவரின் அனுமானத்துக்கு விட்டு சற்றே சரிந்தபடி...பார்ப்பவர்களின் தலைகளும் தன்னையரியாமல் சரியும். தற்போது வக்கீலின் வழக்கம் சற்றே மாறிப் போனது. தினமும் காலை சிகரெட்டினை பற்ற வைக்கும் போது கண்கள் தானாக அந்தப் பெண்ணின் கண்ணோடு சற்றே பொருந்தி விலகும். இரண்டு, மூன்று நாட்களுக்கு இது தொடர்ந்தது. வக்கீலுக்கு இப்போது ஒரு புதிய எண்ணம். இப்படி தினமும் லேசாகப் பார்த்து விலகுவது அவருக்கு சலிப்பைத் தந்தது. 'அந்தப் படத்தை நாமே அடைந்து விட்டால்!!!' மற்ற கண்களில் இருந்து அந்தப் பெண்ணை பாதுகாத்து, தனக்கே தனக்காக்கும் மனிதப் புத்தியும் காரணமாக இருந்திருக்கலாம்.

வலைத்தளம், விசிடி, விசிஆர் என்று சின்னப் பையன்கள் வரை பழக்கமாகிப் போன இந்தக் காலத்தில் வேண்டுமென்றால் வக்கீலின் இந்த ஆசை சின்ன ஆசை அல்லது புரியாத ஆசையாக இருக்கலாம். ஆனால் சுமார் 25 வருடங்களுக்கு முன்னர், இப்படியான ஒரு படத்தை அப்படியாகப்பட்ட ஒரு ஊரில் பார்க்க நேர்வது அபூர்வம். எப்போதாவகத்தான், ரசபாசமான சில படங்கள், யாராவது ஒருவரின் கைகளில் அகப்பட்டு மிக நெருங்கிய நண்பர்களிடையே ரகசியமாகவும், கிளுகிளுப்பான சிரிப்புடனும் பகிர்ந்து கொள்ளப் படுவதுண்டு. நான் மிகவும் நேசித்த ஒரு நபரின் பெட்டியில் ஒரு முறை, ஒரு வெளிநாட்டு போர்னோ புத்தகத்தை பார்க்க நேர்ந்தது. ஆனால் அதிலுள்ள நபர்களின் கண்களெல்லாம் கறுப்பாக மறைக்கப் பட்டிருந்தது. இப்போதுதான் எல்லாம் வெளிச்சமாகிப் போனது.

எனவே வக்கீலுக்கு வந்த அந்த எண்ணம் அந்தக் காலத்தில் நியாயமானதுதான். அவர் ஒரு நல்ல கலாரசிகர் என்பதனையும், அழகு எங்கு இருந்தாலும் பாரட்டத் தயங்குவதில்லை என்பதனையும் நான் சொல்ல வேண்டும். ஆனால் கடைக்காரருக்கு தெரிய வேண்டுமே! மேலும் இரண்டு நாட்கள் நகர்ந்தன. வக்கீல் தினமும் படத்தை ஓரக்கண்ணால் ரசிப்பதும், கேட்கத் தயங்கி நகர்வதும் வழக்கமாகியது. தனது நிலையினை எண்ணி சிரித்துக் கொண்டார். கோர்ட்டிலோ, நீதிபதிகளே பயந்த அவரது கூர்மையான வாதம். இங்கோ, ஒரு பெட்டிக் கடைக்காரனிடம் பேச நாக்கு வரவில்லை.

சரி, இன்று கேட்டு விடுவது என்று துணிவுடன் நடந்தார். வழக்கமான இடத்தைப் பார்த்தவருக்கோ அதிர்ச்சி! படம் அங்கு இல்லை. மீண்டும் நன்கு பார்த்தார். நிஜமாகவே இல்லை. கடைக்காரர், சிகரெட்டை எடுத்து நீட்டினார்.

"சார். நீங்க என்ன பாக்கிறீங்கன்னு தெரியும். அந்த மாரிப் படத்த, உங்கள மாரி கவுரவமானவங்க வர்ர எடத்தில நா மாட்டியிருக்க கூடாது. நீங்க அதப் பாத்து முகத்த சுளிச்சதப் பாத்தன். என்ன மன்னினுச்சுருங்க"

வக்கீல் எதுவும் பேசவில்லை. அவருக்கு சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை.

ஆனால் என்னிடம் சொல்லும் போது அவர் முகத்தில் ஒரு குதர்க்கமான சிரிப்பு மட்டும் இருந்தது...

4.6.06

தமிழில் சட்டம்?


விஞ்ஞானம், மருத்துவம் மற்றும் பொருளாதாரம் போன்ற கல்விகளை தமிழில் பெறுவது பற்றி நடைபெறும் விவாதங்களில் சட்டங்களை தாய் மொழியில் படிப்பது பற்றி அதிகம் பேசப்படாதது சிறிது வியப்புக்குறியதாக உள்ளது. ஏனெனில், மற்ற துறைகளைப் போலன்றி சட்டப் படிப்பானது பெருமளவில் நமது நாட்டிலேயே நமது மக்களுக்காக மட்டுமே பணிபுரியத் தக்க வகையில் இருக்கிறது. எனவே தமிழில் படித்து விட்டு நான் அமெரிக்கா போக முடியுமா என்ற கேள்வி எழ இங்கு அதிகம் வாய்ப்பில்லை. ஆயினும், இங்கு சட்டங்கள் ஆங்கிலத்திலேயே இயற்றப்படுகின்றன. ஆங்கிலத்திலேயே நீதிமன்றங்களில் ஆராயப்படுகின்றன.

சட்டங்களை மொழிபெயர்க்கும் பணி பெருமளவில் நடைபெறுகிறது என்றாலும், நடைமுறையில் செல்லத்தக்க சட்டமென்பது அது இயற்றப்பட்ட மொழியிலிலேயே இருத்தல் சில நடைமுறைச் சிக்கல்களால் அவசியமாகிறது. அதாவது 'இந்தியன் பீனல் கோடி'னை தமிழில் 'இந்திய தண்டனைச் சட்டமாக’ மொழி மாற்றம் செய்யப்பட்டிருப்பினும், அவ்வாறாக மொழிபெயர்க்கப்பட்ட சட்டமானது வெறுமே படிப்பனுபவமாக மட்டுமே பயன்படுமின்றி நீதிமன்றங்களில் செல்லத்தக்க வகையில் ஏற்படுத்துவதில் சிரமம் இருக்கிறது. ஏனெனில் மூலத்திற்கும் மொழி பெயர்ப்பிற்கும் அர்த்தம் வித்தியாசப்பட்டு போகலாம். போகலாம் என்ன, போகும். சில சமயங்களில் சட்டத்தினை விளங்கிக் கொள்ள முற்படுகையில் சின்னச் சின்ன வார்த்தைகள் கூட முக்கியத்துவம் பெறுகின்றன. அப்படியிருக்கையில் மொழிபெயர்ப்பினையும் நடைமுறைப் படுத்துகையில் பெரும் குழப்பம் ஏற்படலாம். அதற்கு தமிழிலேயே சட்டம் இயற்றப்படல் வேண்டும். ஆனால் இந்தியா முழுமைக்கும் பொருந்தும் வண்ணம் மத்திய அரசு சட்டமியற்றுகையில் தமிழிலோ, இந்தியிலோ எப்படி இயற்ற முடியும்? எனவே சட்டத்துறையில் தாய்மொழியினை கொணர்வதற்கு வழி இருக்கிறதா என்பதை மொழி பற்றிய அறிஞர்கள்தான் சிந்தித்து விடை காண முயல வேண்டும்.

சட்ட வரைவாளர்களின் போதிய மொழியறிவின்மையாலோ அல்லது மொழியின் குறைபாடாலோ, ஆங்கிலத்தில் சட்டமியற்றுகையிலேயே சின்ன சின்ன வார்த்தைகள் கூட எவ்வித பிறழ்ச்னைகளை ஏற்படுத்துகின்றன என்பதற்கு ஒரு வழக்கினை உதாரணமாக கூற விரும்புகிறேன். மொழிப் பிறழ்ச்னை பற்றி சிந்திப்பவர்களுக்கு உபயோகமாக இருக்கலாம்.

வருமான வரி சட்டத்தினைப் (Income Tax Act' 1922) பற்றி அறிந்திருப்பீர்கள். அதன் பிரிவு 80-P கூட்டுறவு சங்கங்கள் செலுத்த வேண்டிய வருமான வரியினைப் பற்றி கூறுகிறது. பொதுவாக விவசாயத் தொழிலின் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு வரி விலக்கு உண்டு எனப்தை அறிந்திருப்பீர்கள். எனவே இந்தப் பிரிவிலும் விவசாய விளைபொருட்களை விற்பனை செய்யும் பொருட்டு ஏற்படுத்தப்படும் கூட்டுறவுச் சங்கங்களுக்கு அதன் பொருட்டு கிடைக்கும் வருமானத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. சரி இந்தப் பிரிவில் அதனை எப்படி குறிப்பிடுகிறார்கள்? "a co-operative society engaged in the marketing of the agricultural produce of its members"

படிப்பதற்கும் பார்ப்பதற்கு மிகச் சாதாரணமாக உள்ள இந்த வரியிலுள்ள ஒரு சிறு வார்த்தை வருமான வரித்துறையை பல நீதிமன்றங்களில் அலைகழித்து பல கோடி ரூபாய் வருமான இழப்பினை ஏற்படுத்தியது என்றால் நம்ப முடிகிறதா? பிறழ்ச்னை அந்த வரியிலுள்ள 'of' என்ற வார்த்தையில் இருக்கிறது. இந்த வரியின் அர்த்தத்தினை இவ்வாறு தமிழில் கூறலாம் "தனது உறுப்பினர்களின் விவசாய விளைபொருட்களை விற்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளும் கூட்டுறவு சங்கம்" இதனை விவசாயத்தில் நேரிடையாக ஈடுபடும் விவசாயிகளை உறுப்பினர்களாக கொண்ட கூட்டுறவுச் சங்கங்கள் மட்டுமல்லாது விவசாயப் பொருட்களை வாங்கி விற்கும் விவசாயிகள் அல்லாதவர்களை உறுப்பினர்களாக கொண்ட கூட்டுறவு சங்கங்களும் பயன் பெற முயன்றன.

பொதுவாக கிராம அளவில் விவசாயிகள் நேரிடையாக தங்களது விளை பொருட்களை கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்பனைக்கு கொணர்கின்றனர். இதன் மூலம் கிடைக்கும் வருமானம் விவசாய தொழிலினால் கிடைக்கும் வருமானம். வருமான வரி விலக்கு பெறுவதில் ஆட்சேபணையில்லை. ஆனால் நேரிடையாக இல்லாமல் பிற இடங்களில் வாங்கும் விவசாயப் பொருட்களை சந்தைக்கு அனுப்பும் கூட்டுறவு சங்கங்களின் வருமானம் விவசாயத் தொழிலினால் கிடைக்கும் வருமானமானமே என்று வகைப்படுத்தி வரி விலக்கு கொடுக்க இயலுமா? எளிமையாக இந்த வித்தியாசத்தினை கூற வேண்டுமென்றால் விவசாயம் செய்யும் விவசாயியின் வருமானத்திற்கும் அதனை வாங்கி விற்கும் தரகரின் வருமானத்திற்கும் வித்தியாசம் இருக்கிறதில்லையா? ஆனால் பெரிய கூட்டுறவு சங்கங்கள் "agricultural produce of its members" என்றுதானே இருக்கிறது என்று வாதிட அதனை ஒத்துக் கொண்ட கேரள உயர்நீதிமன்றம் ‘வருமான வரி ஆணையர் எதிர் கேரள மாநில விற்பனை கூட்டுறவு சங்களின் கூட்டமைப்பு’ என்ற வழக்கில் அனைத்து சங்கங்களுக்கும் வரி விலக்கு கொடுக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது. ஏனோ, கேரள மாநில வருமான வரி ஆணையர் தீர்ப்பினை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்லவில்லை.

ஆனால் பின்னர் இதே கேள்வி அசாம் மாநிலத்தில் எழுகையில் வழக்கு உச்ச நீதிமன்றம் சென்றது. உச்ச நீதிமன்றமும் 'நிச்சயமாக, இவ்வாறு விவசாயப் பொருட்களை விற்பனை செய்யும் அனைத்து கூட்டுறவு அமைப்புகளுக்கும் வரிவிலக்கு அளிப்பது அரசின் நோக்கமல்ல' என்று கூறி சட்டத்தில் இடம் பெற்ற 'of' என்ற வார்த்தைக்கு அவ்வளவு முக்கியத்துவம் அளிக்க வேண்டியதில்லை என்று கூறியது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை சுட்டிக் காட்டி கேரள ஆணையர், அடுத்த ஆண்டு வருமான வரி வசூலிப்பின் பொழுது அங்குள்ள சங்கத்தின் கழுத்தில் துண்டினைப் போட்டார். வழக்கு நீதிமன்றம் சென்றாலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக இம்முறை கேரள உயர் நீதிமன்றத்தினால் ஒன்றும் செய்ய இயலவில்லை. கேரள சங்கம் உச்ச நீதிமன்றம் சென்றது. ஏற்கனவே அசாம் வழக்கில் தீர்க்கப்பட்ட அதே கேள்வி அதை விட அதிக நீதிபதிகள் அடங்கிய பெஞ்சின் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதிகள், 'சட்டத்தில் இடம் பெற்ற 'of' என்ற வார்த்தையினை அவ்வளவு எளிதாக உதாசீனப்படுத்துவது முறையல்ல. சட்டமியற்றிய பாராளுமன்றத்தின் நோக்கமும் அப்படியிருக்க முடியாது' என்று கூறி தனது முந்தைய தீர்ப்பினை மாற்றியெழுத....வருமான வரித்துறைக்கு மீண்டும் தோல்வி!

பார்த்தது அரசு. இனி நீதிமன்றங்களை நம்பி பலனில்லை என்று தீர்ப்பு வெளிவந்த அதே டிசம்பர் 1998ல் ஒரு சட்ட திருத்தத்தினை கொண்டு வந்தது. அதன்படி "a co-operative society engaged in the marketing of the agricultural produce grown by its members" என்று மாற்றியது. இந்த திருத்தத்தினை முன் தேதியிட்டு (retrospective effect) கொண்டு வந்தாலும்.....ஏற்கனவே முடிக்கப்பட்டுள்ள வரிக் கணக்குகளை மீண்டும் திறக்கப் போவதில்லை என்று வேறொரு வழக்கில் வருமான வரித் துறைக்கான வழக்குரைஞர் நீதி மன்றத்தில் தேவையில்லாமல் சொல்ல, சட்டத்தினை எழுதியவரின் சிறு கவனக்குறைவிற்காக அரசு கொடுத்த விலை பல கோடி ரூபாய்கள்!

இந்த வழக்கினை படிக்கையில் ஆங்கிலத்தில் தவறாக இயற்றுவதற்கு பேசாமல் தாய்மொழியிலேயே சட்டத்தினை எழுதலாம் என்ற எண்ணம் வருகிறது. ஆனால், 'சட்டங்கள் தாய்மொழியிலேயே இருப்பது சிறந்ததா? அவ்விதமான முயற்சி வெற்றி பெறக்கூடியதா? ஒரே வழக்கில் பல சட்டங்களை பற்றி ஆராய வேண்டியிருப்பதால் சில சட்டங்களை மட்டும் தமிழில் இயற்றி மற்றவற்றை ஆங்கிலத்திலேயே இயற்றுவது சாத்தியமா?' என்ற கேள்வியினை யாராவது எழுப்பினால் தற்பொழுது என்னிடம் நிச்சயம் விடையில்லை!

(மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தமிழினை அனுமதிக்க வேண்டும் என்று சில குழுக்கள் இங்கு போராடி வருகின்றன)