17.4.11

என்று நாம்?



நேற்று ஹால்மார்க் தொலைக்காட்சியில் ஒரு திரைப்படம் கவனத்தை ஈர்த்தது. இடையில் சிறிதும், இறுதிக்காட்சியும்தான் பார்க்க இயன்றது. எனது அபிமான நடிகைகளில் ஒருவரான லிண்டா ஹாமில்டன் நடித்த படத்தின் கதை, அறுபதுகளில் நடைபெறுகிறது. 

அமெரிக்காவின் ஒரு அமைதியான குடியிருப்பு பகுதியில் (Neighbourhood) கணவன் குழந்தையுடன் வசித்து வருகிறார் லிண்டா. அக்குடியிருப்பபில் உள்ள வீடுகளை வெள்ளையர்களுக்கு மட்டுமே விற்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தை மீறி விற்பவரிடம் இருந்து, அடுத்த வீட்டினை வாங்கி அங்கு குடியேறுகிறார் ஒரு கறுப்பர்(coloured). இத்தாலியர் போல தோற்றமளிக்கும் அவர் தான் கறுப்பர் என்பதை மறைத்து வாங்குகிறார் என நினைக்கிறேன். அவரை அங்கிருந்து வெளியேற்ற வழக்கு தொடர வேண்டுமென்று குடியிருப்பிலுள்ள மற்றவர்களின் வற்புறுத்தலுக்கு லிண்டாவின் கணவர் பணிய வேறு வழியில்லாமல் லிண்டாவும் சேர்ந்து கையெழுத்திட நேரிடுகிறது. பின்னர் அந்த குடியிருப்பிலுள்ள மற்றவர்களின் கேலிப்பார்வைகளை மீறி எப்படி லிண்டா கறுப்பரின் மனைவியின் நட்பினை பெறுகிறார் என்பதும் இறுதியில் அமெரிக்க உச்ச நீதிமன்றம் கறுப்பர் வெளியேற வேண்டாமென்று உத்தரவிட உத்தரவினை கேள்விப்பட்டு அடுத்த வீட்டுக்கார கறுப்பு பெண்ணுடன் லிண்டாவும் சேர்ந்து எப்படிக் குதூகலிக்கிறார் என்பதுமாக படம் முடிகிறது. 

கதையென்று சொன்னேன் அல்லவா? இல்லை அமெரிக்காவில் உண்மையில் நடந்த வழக்கு இது. ஆனால், படத்தினை பார்க்கும் பொழுதே 'பாடல் இல்லை. காதல் இல்லை. உணர்வுபூர்வமான சம்பவங்களோ பெரிய திருப்பங்களோ இல்லை. ஆனால் திரைக்கதை எவ்வளவு இயல்பாக ஏதோ நாமும் அருகிலுள்ள வீட்டிலிருந்து நடக்கும் சம்பவங்களைப் பார்ப்பது போல எளிமையாக நகருகிறது. நம்மவர்களிடம் என்று இப்படி ஒரு படத்தினை எதிர்பார்ப்பது?' என நினைத்தேன்.

ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான இனக்கவர்ச்சி தவிர வேறு பிரச்னைகளே நம்மிடம் இல்லையா? ஏன், நேற்று நான் பார்த்த திரைப்படத்தில் கையாளப்படும் பிரச்னை, கிராமப்புறங்களை விடுங்கள், இந்தியாவின் முதன்மை நகரங்களான சென்னையிலும், மும்பையிலும் இன்றும் நிலவுகிறது. எடுத்தாண்டு ஒரு திரைக்கதை அமைக்க முடியாதா?

இந்தப் பிரச்னையில் அமெரிக்க-இந்திய மக்களிடையேயான எண்ணப்பாட்டினை என்னால் ஒப்பிட இயலாது. ஆனால் இன்று உலகெங்கும் நாகரீகத்தை பரப்ப முன் வந்துள்ள அமெரிக்காவில் சட்டரீதியில் இனப்பிரிவுகள் பாதுகாக்கப்பட்டு வந்த காலகட்டத்திலே இந்தியா சட்டத்தினைப் பொறுத்து உயர்வான இடத்தை அடைந்திருந்தது. அதாவது, திரைப்படத்தில் கையாளப்பட்ட வழக்கு அதே காலகட்டத்தில் இந்தியாவில் தொடுக்கப்பட்டிருந்தால் அவ்விதம் வழக்கு தொடுத்தவர்களை அதன் காரணமாகவே தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தின்(1955) மூலம் தண்டனைக்கேதுவான குற்றவாளிகளாக்கியிருக்க முடியும். 

அவ்வளவு ஏன்? இந்தியாவில் எந்த காலக்கட்டத்திலும் ஒரு சொத்தின் உரிமையாளர் மீது அதை விற்றவரோ அல்லது மற்றவர்களோ ஒரு குறிப்பிட்ட இனத்தை சேர்ந்தவருக்கு அல்லது சேராதவருக்குதான் அந்த சொத்தினை விற்க முடியும் என்று வலியுறுத்த முடியாது. ஆனாலும் இங்கில்லையா அதே பிரச்னை?

சென்னையிலிருக்கையில், 'ஒவ்வொண்ணா முஸ்லீம்கள் இங்க வீடு வாங்கிட்டிருக்காங்க. நீங்கதான் நம்ம அசோசியேஷன் மூலம் ஏதாவது செய்யணும்' என்று புகார் செய்ய வந்தவரை அனுப்பி விட்டு, 'பாத்துட்டே இரு. நல்ல விலை கிடைச்சா, இவன்தான் முதல்ல விப்பான்' என்று புகார் செய்ய வந்தவர் மீது வெறுப்பு பொங்க கூறினார் எனது சீனியர். சென்னை தினப்பத்திரிக்கைகளின் வீடு வாடகைக்கு விளம்பரங்களைப் படித்தே ஒரு திரைக்கதை அமைக்க முடியாதா?

மும்பையில் இன்னும் மோசம். இங்குள்ள அடுக்கு மாடிவீடுகளில் குடியிருப்போர் கூட்டுறவு சங்கங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும். சென்னையைப் போல அல்லாமல் அடிமனை மொத்தமாக சங்கத்தின் உரிமை. வீட்டு உரிமையாளர் சட்டரீதியில் உரிமையாளர் என்பதை விட சங்கத்தின் ஒரு குறிப்பிட்ட சதவீத பங்குகளின் உரிமையாளர். எனவே வீட்டினை விற்கையில் பங்கினை மாற்ற சங்கத்தின் அனுமதி தேவை. எனவே, பல சங்கங்கள் குறிப்பாக கிறிஸ்தவர்கள், குஜராத்திகள் மற்றும் சரஸ்வட் பிராமணர்களின் சங்கங்கள் அவர்கள் இனத்தைச் சேர்ந்தவருக்குதான் வீட்டினை உரிமையாளர் விற்க வேண்டும் என்று சங்கவிதிகளில் ஏற்படுத்தி வைத்திருக்கின்றன. 

இரண்டு வருடங்களுக்கு முன்பு மும்பை உயர்நீதிமன்றம் வரை சென்ற வழக்கில் 'இவ்வாறன விதிகள் பொது ஒழுங்கிற்கு (Public Policy) எதிரானவை. எனவே சங்க உறுப்பினர்களை இவை கட்டுப்படுத்தாது' என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனினும் இன்று கூட இஸ்லாமியர்கள், இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் நிறைந்திருக்கும் கூட்டுறவு வீட்டுமனை சங்கங்களில் சேர்வது கடினம். ஆக நம்மிடம் இல்லையா கதைகளாக்கப்படக்கூடிய பிரச்னைகள்?


மும்பை
18.07.04

3 comments:

Anonymous said...

Looks nice! Awesome content. Good job guys.
»

PRABHU RAJADURAI said...

லா ஜோனா மற்றும் நகர ஊரமைப்பும்...இதே போன்றதொரு மற்றொரு பதிவு இந்த சுட்டியில்

http://marchoflaw.blogspot.com/2011/04/la-zona.html

Anonymous said...

100% அரசு உதவியுடன் நடத்தப்படும் கிறித்துவ பள்ளிகளில் கிறித்துவர்களுக்கு 50% வரை இடம் தரலாம் என்று இருக்கும் போது, 69% இட ஒதுக்கீடு இருக்கும் போது இத்தகைய விதிகளை மட்டும் குறை சொல்வது சரியில்லை.பார்சிக்கள் மட்டுமே உறுப்பினராக உள்ள சங்கத்தில் அடுக்கக குடியிருப்பில் பார்சி அல்லாதோருக்கு வீடு விற்கக் கூடாது என்ற விதி செல்லும் என்றே தீர்ப்பு தரப்பட்டுள்ளது.இன்றைக்கு முஸ்லீம்கள் குறித்து அவநம்பிக்கை,அச்சம் எழக் காரணம் அவர்கள்தான்.எனக்குத் தெரிந்த பலர் வீட்டை வாடகைக்கு விடும் போது வக்கீல்கள்,போலிஸ்காரர்கள் என்றால் தவிர்த்து விடுகின்றனர்.காரணம் அவர்கள் தகராறு செய்வார்கள், கோர்ட் கேஸ் என்று இழுத்தடிப்பார்கள் என்ற அச்சம். அதில் உண்மை இல்லை என்று சொல்ல முடியாது.