‘தினகரனில், வாராவாரம் கே.என்.சிவராமன் என்பவர் உலக திரைப்படங்களைப் பற்றியும், ஹாலிவுட் ப்ளாக்பஸ்டர் திரைப்படங்களைப் பற்றியும் சுவராசியமாக எழுதுகிறார். ஏன், நமது தெலுங்கு, கன்னட மசாலாப் படங்களைப் பற்றியும் சுவராசியமான தகவல்களோடு தனியே எழுதுகிறார்.
சமீபத்தில் ‘லா ஜோனா’ (La Zona) என்ற மெக்ஸிகோ-அர்ஜெண்டினா கூட்டுத்தயாரிப்பில் உருவான ஸ்பானிய மொழி திரைப்படத்தைப் பற்றி சிவராமன் எழுதியதைப் படித்ததும் ஏற்ப்பட்ட உந்துதலில் அந்த படத்தைப் பார்த்தேன்.
முக்கியமான ஒரு சமூகப் பிரச்னையை பற்றிய ஆனால் ஒரு ‘திகில்’ படம் போல விறுவிறுப்பாக நகர்த்தப்படும் திரைக்கதை. இதே போன்றதொரு பிரச்னையை நாமும் இங்கு சந்தித்துக் கொண்டிருக்கையில், இன்னமும் காதல் சேற்றிலேயே விழுந்து கிடக்கும் நம்மவர்களை நினைத்தால் பெருமூச்சுதான் வருகிறது.
***
மேல் நடுத்தர வர்க்கத்தினர், ‘டவுன்ஷிப்’ என்ற பெயரிலும் ‘கேட்டட் கம்யூனிட்டீஸ்’ என்ற பெயரிலும் குட்டி நகரங்களை உருவாக்கி, பெருநகரங்களின் சேரிப்பகுதிகளிலிருந்தும் (Slums) பிற கீழ் நடுத்தர வர்க்கத்தினரிடமிருந்தும் தங்களை பாதுகாக்கும் (Insulate) வண்ணம் , உயர்ந்த சுற்றுச் சுவர்களை எழுப்பி, வேறு யாரும் எளிதில் உள்ளே வராத வண்ணம் பாதுகாவலர் (Security) இன்ன பிற பந்தோஸ்பத்துகளுடன் தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்வதன் சமூக அவலத்தை இந்தப் படம் பிரதிபலிக்கிறது.
சென்னையிலேயே சில சமயங்களில், நமது உறவினர்கள் அல்லது நண்பர்களின் குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் முன்னர், பாதுகாவலர்கள் நம்மைப் பார்க்கும் பார்வையும், விசாரிப்பும் நம்மை சங்கோஜப்படுத்துகின்றன.
தென் அமெரிக்க நாடுகளைப் போல, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மேலும் மேலும் விரிவடைய ‘லா ஜோனா’ பட நிகழ்வுகள், இங்கும் சகஜமாகலாம்.
சென்னையிலோ அல்லது பங்களூருவிலோ உள்ள மால்களை அண்ணாந்து பார்க்கும் வேலையற்ற சேரி இளைஞனின் மனதில் குற்ற எண்ணங்கள் தோன்றாமல் இருப்பது நாம் செய்த புண்ணியம்தான்!
***
லா ஜோனாக்கள் இங்கும் பெருமளவில் உருவாகி வருகிறது என்றாலும், அவை போன்ற குடியிருப்புகள் நமது நகர ஊரமைப்பு மற்றும் முனிசிபல் சட்ட விதிகளோடு முரண்படுபவை (Town and Country Planning Act/ District Municipalities Act etc.,)
இங்கு ஒரு குடியிருப்பு மனை உருவாக்க வேண்டுமாயின், அந்த லே-அவுட்டானது (Lay Out) நகர ஊரமைப்புத் துறையால் (Town & Country Planning Department) அங்கீகரிக்கப்பட வேண்டும். ‘பஞ்சாயத்து அப்ரூவ்டு’ என்பதெல்லாம் சும்மா. பஞ்சாயத்துகளுக்கு லே-அவுட் அங்கீகரிக்கக் கூடிய எவ்வித அதிகாரமும் கிடையாது. ஏன், மாநகராட்சிக்கே கிடையாது.
நகர ஊரமைப்புத் துறை ஒரு லே-அவுட்டை அங்கீகரிக்கையில், அதன் விஸ்தீரணத்தைப் பொறுத்து குறிப்பிட்ட அளவிற்கு குறையாமல் சாலைகள் அமைக்கப்பட வேண்டும் என்று வேண்டும். அவ்வாறு அமைக்கப்படும் சாலைகளை சம்பந்தப்பட்ட மாநகராட்சிக்கோ அல்லது நகராட்சிக்கோ கொடையளிக்க (Gift) கேட்கலாம். அப்படி கொடையளித்தால்தான் நகராட்சியில் அந்த குடியிருப்பில் கட்டிடம் கட்ட அனுமதி தருவார்கள். இல்லையெனினும், நகராட்சி சட்டத்தில் பொது வீதி (Public Street) என்பதற்கான விளக்கத்தில், ஒரு குடியிருப்புப் பகுதிக்குள் அமைந்துள்ள சாலைகளும் அடங்கும்.
அதே போன்று ஒரு குடியிருப்பில் அமைக்கப்படும் சாலையானது, அதற்கு அடுத்ததாக அமைக்கப்படும் குடியிருப்புப் பகுதியின் சாலையோடு இணைக்கப்பட வேண்டும். இதன் நோக்கம், இவ்வாறு ஒவ்வொன்றாக அமைக்கப்படும் லே-அவுட்கள் சாலைகளால் இணைக்கப்பட்டு ஒழுங்கான ஒரு நகரம் அமையும் என்பதுதான்.
ஆனால், இங்கு குடியிருப்பின் சுற்றிலும் சுவர் எழுப்பி சாலைகளை மறித்து விடுகின்றனர். இவ்வாறு மறிப்பது விதி மீறல் என்பது என கருத்து.
சரி, சாலைகளை மறிக்காமல் கதவு (Gate) அமைத்து, வெளியாட்களை உள்ளே நுழையாமல் தடுக்கலாமா என்றால், அதுவும் விதி மீறல்தான். ஏற்கனவே கூறியபடி அமைக்கப்படும் சாலைகள் பொது சாலைகள் என்றுதான் கருதப்பட வேண்டும். எனவே, இன்னார்தான் அந்த சாலையில் நடக்க முடியும் என்று கட்டுப்படுத்த முடியாது.
ஆயினும், சுற்றிலும் சுவர் எழுப்பி கூடவே கதவையும் பூட்டி வைக்கும் குடியிருப்புகள் பெருந்கரங்களில் உருவாக்கப்பட்டு வருகின்றன. தனிமனிதப் பாதுகாப்புக்கும், பொதுவான மனித உரிமைக்கும் இடையேயான போராட்டம்.
என்றாவது ஒருநாள் நீதிமன்றங்கள் இந்தப் போராட்டத்திற்கு பதில் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் எழலாம்!
மதுரை
17/04/11
10 comments:
சினிமா விமர்சனம் இல்லையே, கதை இல்லையே என்று யாராவது குறை கூறினால்...என் மீது எனக்கு நம்பிக்கை இல்லை என்பதுதான் பதில். விரைவில் சுரேஷ் கண்ணன் எழுதுவார். அதற்குள் நான் எழுதி அதனை கெடுக்க வேண்டுமா?
ஸ்ரீவைகுண்டம் கோட்டைப் பிள்ளைமார் பற்றி யாராவது எழுதியுள்ளனரா?
நான் பார்த்த மற்றொரு லா ஜோனா, தூத்துக்கு ஸ்பிக் நகர்!
அன்பார்ந்த பிரபுராஜதுரை,
தினகரனில் எழுதுபவர், நமது இணையப் பதிவர்களில் ஒருவர்தான். :)
இதே போன்ற வேறு ஒரு வீட்டுப் பிரச்னைப் பற்றிய ஹாலிவுட் படம் சம்பந்தமாக எழுதிய பதிவு
http://marchoflaw.blogspot.com/2006/05/blog-post_18.html
நன்றி சுரேஷ் கண்ணன். பைத்தியக்காரன் என்ற பெயரில் எழுதுபவரைத்தானே சிவராமன் என்பார்கள். அவராக இருக்கும் என்று அனுமானித்தேன்!
ரொம்ப சுவராசியமாக எழுதுகிறார். பார்த்தால் சொல்லவும், நான் அவரது சினிமா கட்டுரைகளின் பெரும் ரசிகன் என்று.
The color of courage என்ற 1998ல் வெளிவந்த டி.வி டிராமா தான் அது.
http://www.imdb.com/title/tt0158962/
தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி பிரபு ராஜதுரை...
ஆனால், நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அத்திரைப்படம் குறித்து எழுதியவர் வள்ளி. 'குங்குமம்' இதழின் பொறுப்பாசிரியரான அவர், வாரம்தோறும் 'தினகரன் வெள்ளி மலரில்' உலக திரைப்பட விழாவில் வெளியான படங்கள் குறித்து எழுதி வருகிறார்.
எனவே அப்படம் குறித்த உங்கள் பாராட்டு அவருக்குத்தான் போய் சேர வேண்டும். உங்கள் சார்பில் அதை சேர்பித்தும் விட்டேன்...
நன்றி.
தோழமையுடன்
பைத்தியக்காரன்
நன்றி சிவராமன்,
நான் அப்படியே உங்களை அழைத்துக் கொள்கிறேன். எனக்கு ஒன்று புரியவில்லை. இந்தக் கட்டுரை மட்டும் அவர் எழுதினாரா அல்லது கே.என்.சிவராமன் என்ற பெயரில் வரும் அனைத்து விமர்சனங்களையும் அவர்தான் எழுதுகிறாரா?
அன்பின் பிரபு ராஜதுரை,
'ஹாலிவுட் டிரெய்லர்' மற்றும் 'உடாலங்கடி' என்னும் தலைப்பின் கீழ் மட்டுமே வாரா வாரம் நான் எழுதி வருகிறேன். இந்த இரு கட்டுரைகளின் கீழும் எனது பெயர் பிரசுரமாகியிருக்கும்.
ஆனால், 'உலக சினிமா' என்னும் தலைப்பின் கீழ், ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு திரைப்படம் குறித்து எழுதுபவர் நண்பர் வள்ளிதாசன்தான். சுருக்கமாக வள்ளி என அவரது பெயர் அப்பகுதியின் கீழ் அச்சிடப்பட்டிருக்கும்.
விகடனில் பல்லாண்டுகள் வேலை பார்த்த அவர், இப்போது 'குங்குமம்' வார இதழின் பொறுப்பாசிரியராக இருக்கிறார். தீவிர சினிமா ஆர்வலர். ஆண்டுதோறும் கோவா திரைப்பட விழாவுக்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
எனவே இந்த இடுகையிலுள்ள முதல் பத்தி மற்றும் நண்பர் சுக-வுக்கு நீங்கள் எழுதிய மறுமொழி ஆகியவற்றில் உள்ள பாராட்டு மட்டுமே என்னைச் சேரும்.
ஆனால், இந்த இடுகையை நீங்கள் எழுத காரணமாக இருந்த திரைப்படம் குறித்த கட்டுரையை எழுதியவர் வள்ளிதாசன்தான். குறிப்பிட்ட அக்கட்டுரையின் கீழ், அவரது பெயரையும் நீங்கள் பார்க்கலாம். எனவே முழு பாராட்டும் அவருக்குத்தான் போய் சேர வேண்டும். உங்கள் சார்பில் சேர்பித்தும்விட்டேன் ;-)
தோழமையுடன்
பைத்தியக்காரன்
விளக்கத்திற்கு நன்றி சிவராமன்,
வாரப்பத்திரிக்கைகள் படிக்கும் பழக்கம் எனக்கு அறவே நின்று போய் பலவருடங்கள் ஆகியிருந்தாலும் தினகரனோடு இலவசமாய் கிடைத்தாலும், நான் ஆர்வமாக விடாமல் படிக்கும் கட்டுரைகள் (விமர்சனம்?) இவை என்பதால், அந்த பாராட்டுகளை தங்கள் இருவருக்கும் தெரியப்படுத்த கிடைத்த சந்தப்ப்மாக இந்தப் பதிவை பயன்படுத்திக் கொள்கிறேன். தங்களைப் போல இலக்கியம் பற்றி அறிந்தவர்கள், இது போன்று விஷயதான்மோடு, சுவராசியமாக எழுதுவது பலரை மீண்டும் படிக்கும் பழக்கத்துக்கு கொண்டு வரும்! நன்றி.
good
Post a Comment