28.6.06

தீண்டாமை ஒழிப்பில் கீதை!

என்று நாம்?’ என்ற தலைப்பில் நான் இங்கு எழுதிய கட்டுரையை படித்த நண்பர் ஒருவர் ‘தீண்டாமை ஒழிப்புச் சட்டம்’ தீண்டாமையை எப்படி வரையறுக்கிறது என்று விளக்குவீர்களா?’ என்று வினவியிருந்தார்.

தீண்டாமை ஒழிப்புச் சட்டம் என்று முதலில் அழைக்கப்பட்ட இந்த சட்டம் 1976ம் ஆண்டில் ‘சிவில் உரிமைகள் பாதுகாப்பு சட்டம்’ (The Protection of Civil Rights Act) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஆயினும் சிவில் உரிமை என்பது ‘தீண்டாமை ஒழிப்பின் காரணமாக ஒருவருக்கு கிடைக்கும் உரிமை’ என்றே பெயர் மாற்றம் செய்யப்பட்ட சட்டமும் வரையறுக்கிறது. தீண்டாமையின் அடிப்படையில் மத ரீதியிலாகவோ அல்லது சமூக ரீதியிலாகவோ விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை குற்றம் என்று இந்த சட்டம் கூறுகிறது. தீண்டாமை பல்வேறு வகைகளில் ஒருவர் மீது வலியுறுத்தப்படலாம். அவற்றை இங்கு ஒவ்வொன்றாக பட்டியலிடுவது சலிப்பூட்டும் ஒரு காரியம். எனவே ஏதேனும் ஒரு நிகழ்வினைப் பொறுத்து எழுதும் வாய்ப்பு கிடைக்கையில் விளக்க முயல்கிறேன்.

என்று நாம்? என்ற கட்டுரையில் நான் குறிப்பிட்ட “இன்று உலகெங்கும் நாகரீகத்தை பரப்ப முன் வந்துள்ள அமெரிக்காவில் சட்டரீதியில் இனப்பிரிவுகள் பாதுகாக்கப்பட்டு வந்த காலகட்டத்திலே இந்தியா சட்டத்தினைப் பொறுத்து உயர்வான இடத்தை அடைந்திருந்தது. அதாவது, திரைப்படத்தில் கையாளப்பட்ட வழக்கு அதே காலகட்டத்தில் இந்தியாவில் தொடுக்கப்பட்டிருந்தால் அவ்விதம் வழக்கு தொடுத்தவர்களை அதன் காரணமாகவே தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தின்(1955) மூலம் தண்டனைக்கு ஏதுவான குற்றவாளிகளாக்கியிருக்க முடியும்” என்ற கருத்து சட்டரீதியில் சரியான ஒன்று என்றே கருதுகிறேன். ஏனெனில் இந்த சட்டத்தின் 4வது பிரிவு தீண்டாமையின் அடிப்படையில் சமூக கட்டுப்பாடுகளை விதிப்பதை தண்டனைக்குறிய குற்றமாக குறிப்பிடுகிறது. சமூக கட்டுப்பாடுகள் எவை எவை என்று இந்த சட்டப்பிரிவின் உட்பிரிவுகள் விளக்குகின்றன. அதில் எட்டாவது உட்பிரிவு ‘எந்த ஒரு இடத்திலும் குடியிருப்பு மனைகளை கட்டுதல், வாங்குதல் மற்றும் குடியிருத்தல் மற்றும் இது போன்ற காரியங்களில்’ தீண்டாமை அடிப்படையில் கட்டுப்பாடு விதிப்பதை தண்டனைக்கேதுவான சமூக கட்டுப்பாடாக விளக்குகிறது. இதன் அடிப்படையில் அமெரிக்காவில் இயன்றது போன்று இங்கும் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டால்...அவ்வாறு வழக்கு தாக்கல் செய்த செயலை மட்டுமல்ல அவ்வகை வழக்கினை தாக்கல் செய்ய வழி செய்யும் சட்டத்தினை இயற்றியதையே இந்தப் பிரிவின் கீழ் தீண்டாமைக் குற்றமாக கருத முடியும். எனவே வீட்டு வாடகை விளம்பரங்களில் ‘இந்த ஜாதியினருக்கு மட்டும்’ என்று குறிப்பிடுகையில் சற்று கவனம் தேவை!

இறுதியாக இந்த சட்டம் எவ்வாறு உருவாயிற்று தெரியுமா? 1950ம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய அரசியலமைப்பு சட்டம் (The Constitution of India) ‘தீண்டாமை சட்டரீதியில் தண்டனைக்கேதுவான ஒரு குற்றமாகும்’ என்று தனது 17வது ஆர்ட்டிகிளில் கூறுகிறது. அரசியலமைப்பு சட்டத்திலேயே குற்றம் என்று தீண்டாமையினை வரையறுத்ததன் மூலம் இதனை ஒழிப்பதற்கு நமது நாடு அளித்துள்ள முக்கியத்துவத்தை உணரலாம். குற்றத்தினை வரையறுப்பது அரசியலமைப்பு சட்டத்தின் வேலையில்லை என்றாலும் இந்த ஒரு செயல் மட்டும் இவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது.

சரி, அரசியலமைப்புச் சட்டத்தில் இவ்வாறு ஜாதி ரீதியிலான ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்கவும் அதன் விளைவாக தீண்டாமை ஒழிப்புச் சட்டதினை இயற்றவும் காரணமாயிருந்தது எதுவென நமது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறுவது என்ன தெரியுமா?

திருவிதாங்கூர் தேவாஸ்தான போர்டு நிர்வாகத்தின் கீழ் உள்ள சிவன் கோவிலில் மலையாள பிறாமணர்கள் மட்டுமே அர்ச்சகராயிருக்க முடியும் என்று தொடரப்பட்ட வழக்கினை ‘வழிப்பாட்டு முறைகளிலும், மந்திரங்களிலும் தேர்ச்சி பெற்ற யாரும் அர்ச்சகராயிருக்க தடையில்லை’ என்று கூறி தள்ளுபடி செய்த தீர்ப்பில் நீதிபதிகள் கூறும் ஒரு கருத்து கவனிக்கத்தக்கது...

In view of the categorical revelations made in the Gita and the dream of the Father of the Nation Mahatma Gandhi that all distinctions based on caste and creed must be abolished...........................................and, in our view, the message conveyed thereby got engrafted in the form of Articles 14 to 17 and 21 of the Constitution of India, and paved the way for the enactment of the Protection of Civil Rights Act,1955

‘பகவத் கீதையே ஜாதிப்பிரிவினைகளுக்கு ஊற்றுக்கண்’ என்று இணையத்தில் அடிக்கடி படிக்கிறேன். உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கருத்து நான் படித்தவற்றை மறுபரிசீலனைக்கு உட்படுத்த என்னைத் தூண்டுகிறது...

மதுரை
28.06.06

1 comment:

Thangamani said...

கீதையில் பக்தியோடு செய்யப்படும் வழிபாடு (யாரால் செய்யப்பட்டாலும், எப்படி செய்யப்பட்டாலும், எந்த தெய்வத்துக்குச் செய்யப்பட்டாலும்) தன்னையெ சேருவதாக கண்ணன் சொல்வதன் மூலம் வழிபாட்டு உரிமை எல்லோருக்கும் இருப்பதாகச் சொல்லலாம். இதை மேற்கொள் காட்டியே நீதிமன்றம் தீர்பளித்திருக்கலாம். அதே சமயம், நால்வருணங்களை உண்டாக்கியதாகவும், வருணக்கலப்பு தவிர்க்கப்படவேண்டும் என்று சொல்வத்ன் மூலமும், கீதையைக் கேட்பது/படிப்பது மூலம் சூத்திரனும்/ பெண்களும் தன்னை அடைய முடியும் என்று சொல்வது வேறு வகையான ஊகங்களுக்கு இடமளிக்கும்.

எப்படியாயினும் வர்ணாசிரமத்துக்கான மூல நூல் கீதை அல்ல. கீதை பிற்கால படைப்பாக கருத்தப்படுகிறது. ரிக் வேதத்தில் உள்ள புருஷ சூக்தத்தினையும், அதை வலுவாக பற்றிகொண்டு எழுந்த பிற்கால மனுஸ்மிருதியையும் வர்ணாசிரத்துக்கான நூல்களாகக் குறிப்பிடலாம்.

நன்றி.