7.6.06

பாவத்தின் சம்பளம்...



சனிக்கிழமை (13/12/03) 'டைம்ஸ் ஆ·ப் இந்தியா'வின் நடுப்பக்க கட்டுரை 'நேஷனல் ரீடர்ஷிப் சர்வே கவுன்ஸி’லானது இந்தியாவின் புகழ் பெற்ற ஆய்வு நிறுவனங்கள் மூலம் நடத்திய ஆய்வறிக்கையை வெளியிடாமல் இழுத்தடித்துக் கொண்டிருப்பதைப் பற்றியது. ஆனால் நேஷனல் ரீடர்ஷிப் சர்வே கவுன்ஸில் வெளியிடத் தயங்கும் ஆய்வறிக்கை பற்றியதோ அல்லது அந்த ஆய்வறிக்கையினை எதிர்நோக்கியிருக்கும் சுமார் 5000 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்தியாவின் விளம்பரத்துறையைப் பற்றியதோ அல்ல நான் இங்கு எழுத விழைவது. மாறாக கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்படும் ஒரு சம்பவமும் அதனை உதாரணப்படுத்தி 'அமெரிக்கர்கள் ஏதோ கிறுக்குத்தனமாக (crazy) நடந்துகொள்வதாக பொருள்படும்' வாசகமும்தான்.

அந்த சம்பவத்தினை நான் ஏற்கனவே இணையகத்திலும், ஈ-மடல் பறிமாற்றம் மூலமாகவும் பலமுறை படித்திருக்கிறேன். அதாவது, லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த 19 வயது கார்ல் ட்ருமென் என்பவர் தனது பக்கத்து வீட்டுக்காரரின் காரின் சக்கர பிளேட்டுகளை திருட முயல்கையில், அவர் அடியில் இருக்கிறார் என்பது தெரியாமல் கார் சொந்தக்காரர் காரினை கிளப்ப, ட்ருமெனின் கைகள் நசுக்கப்பட்டதாம். தனது கை நசுக்கப்பட்டதற்காக, ட்ருமென் வழக்கு தொடர்ந்து தனது மருத்துவ செல்வுகளையும் மற்றும் 74,000 டாலரும் நஷ்ட ஈடாக பெற்றதாக ஒரு சம்பவம். இது உண்மையோ பொய்யோ தெரியவில்லை. ஆனால், அமெரிக்காவின் வம்படியாக தாக்கல் செய்யப்படும் 'தீங்கியல் வழக்குகளை'யும் (Suits for tortious liability) கேலி செய்வதற்கு காட்டப்படும் உதாரணங்களுகளில் இந்த வழக்கும் இடம் பெறுவதுண்டு. அதாவது அமெரிக்க நீதிபரிபாலனையில் 'திருடனுக்கு தண்டனைக்கு பதிலாக வெகுமதியா?' என்று.

ஆனால் மேற்போக்காக பார்த்தால், ஏதோ வியப்பாக இருக்கும் இந்தச் சம்பவம் சட்டப்படி மிகச்சரியானதே! அதுவும் அமெரிக்க சட்டப்படி மட்டுமல்ல. நாகரீகமடைந்த சட்டத்தின் ஆட்சி நடைபெறும் எந்த ஒரு நாட்டிலும் இத்தகைய நீதி சாத்தியமானதே! சுருக்கமாக, இந்தியாவில் இந்தச் சம்பவம் நடைபெற்றிருந்தாலும் ட்ருமெனுக்கு நஷ்ட ஈடு கிடைத்திருக்கும்.

முதலில் நாம் ட்ருமென் புரிந்த அல்லது புரிய முயற்சித்த குற்றத்தினையும் அவனுக்கு கிடைத்த நஷ்ட ஈட்டினையும் குழப்பிக் கொள்ளக் கூடாது. திருட முயன்ற குற்றம் ஒரு தனிச்செயல். அதற்கான தண்டனை அவருக்கு உண்டு. ஆனால் அதனால், அவருக்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய நஷ்ட ஈடு பாதிப்படையாது. இந்தியாவில் மோட்டார் விபத்துகளினால் ஏற்படும் காயங்களுக்கு 'மோட்டார் வாகன சட்ட'த்தின்படி வண்டியின் உரிமையாளர் நஷ்ட ஈடு அளிக்க வேண்டும். இவ்விதமான் இழப்புகளுக்கு வண்டியை கண்டிப்பாக 'மூன்றாவது நபர் காப்பீடு' (Third Party Insurance) எனப்படும் காப்பீடு செய்திருப்பது அவசியமென்பதால் பொதுவாக காப்பீடு நிறுவனங்கள் இந்த இழப்பீடை வழங்கும்.

சரி, எவ்வாறெனினும் விபத்து நடைபெற்றதற்கு ட்ருமெனின் கவனக்குறைவே காரணம். வண்டியோட்டியை குறை கூற முடியாது. தனது சொந்தத் தவறினால் ஏற்பட்ட காயத்துக்கு ட்ருமெனுக்கு எதற்கு நஷ்ட ஈடு என்ற கேள்வி எழலாம். உண்மைதான் விபத்து இழப்பீடு வழக்குகளில் கவனக்குறைவின் அளவைப் பொறுத்தே நஷ்ட ஈடு தீர்மானிக்கப்படும். ஆனாலும் ஒரு விஷேஷமான பிரிவு உண்டு. அதாவது வண்டி உரிமையாளருக்கு அவர் மீது எவ்வித தவறும் இல்லையெனினும், தனது வண்டியின் மூலம் மற்றவர்களுக்கு ஏற்படும் காயத்திற்கான இழப்பீடு வழங்கும் கடமை (No Fault Liability)

இந்தியாவில் நிலுவையிலுள்ள மோட்டார் வாகன சட்ட பிரிவுகளின்படி ஒரு மோட்டார் வாகனத்தின் மூலம் ஏற்படும் விபத்துகளினால் பாதிப்படையும் மூன்றாவது நபர்களுக்கு, தவறு யார் பக்கம் இருந்தாலும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். இந்த இழப்பீடானது மூன்றாவது நபர் மரிக்கையில் ரூபாய் 50,000 அல்லது நிரந்தர ஊனமடைகையில் ரூபாய் 25,000. இந்தத் தொகை குறைந்தபட்ச தொகை. அவர் வயதானவரோ அல்லது கைக்குழந்தையோ, அதிகமாக சம்பாதிப்பவரோ அல்லது வேலையில் இல்லாதவரோ அனைவருக்கும் ஒரே அளவான தொகை. ஆனால் கவனக்குறைவு பாதிக்கப்பட்டவரின் மீது மட்டுமே இல்லாத பொழுதில் நிர்ணயிக்கப்படும் இழப்பீடானது பாதிக்கப்பட்டவரின் வயது, தகுதி, சம்பாத்தியம் மற்றும் பிற காரணிகளைக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. எப்படியோ குறைந்த பட்சம் மேற்சொன்ன இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

அடுத்த கேள்வி...ட்ரூமென் சம்பவத்தை ஒரு மோட்டர் வாகன விபத்து என எடுத்துக் கொள்ள முடியுமா? முடியும். சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் நடந்த ஒரு சம்பவம். மஹாராஷ்டிராவில் உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த டாங்கர் லாரி கவிழ்ந்து போனது. லாரியின் தொட்டியிலிருந்து எண்ணை கீழே வழிய, அருகிலிருந்த கிராமத்து மக்கள் அனைவரும் கையில் கிடைத்த சட்டி, பக்கெட்டுகளைத் தூக்கிக் கொண்டு ஓடி, கீழே வழியும் எண்ணையை பிடிக்க ஆரம்பித்தனர்....அது என்ன எண்ணெயோ...அடுப்பெரிக்க உதவும் என நினைத்தனர். திடீரென வண்டி தீப்பிடித்து எரிய பலர் கருகி மாண்டனர். மக்கள் இறக்க காரணமாயிருந்தது வாகன விபத்து எனக்கூறி நஷ்ட ஈடுக்காக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. விபத்து நஷ்ட ஈட்டிற்கான தீர்ப்பாயமும், பின்னர் பம்பாய் உயர் நீதிமன்றமும் மக்கள் இறந்ததற்கும் நடந்த வாகன விபத்திற்கும் சம்பந்தமில்லை என்று கூறி வழக்கினை தள்ளுபடி செய்தனர். இறுதியாக வழக்கு உச்ச நீதிமன்றம் சென்றது. அங்கு மோட்டர் வாகன சட்டத்தில் 'பாதிக்கப்படுபவர்கள் மோட்டார் வாகனம் மூலம் பாதிக்கப்பட வேண்டும் என்றுதான் கூறியிருக்கிறதே தவிர மோட்டார் வாகன விபத்தில் பாதிக்கப்பட வேண்டும் என்று கூறப்படவில்லை' (accident arising out of the use of the motor vehicle) என்று வாதிட்டப்பட்டு அதனை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் இழப்பீடும் கிடைத்தது. எனவே விபத்து நடைபெறுகையில் வண்டி ஓடிக் கொண்டு இருக்க வேண்டும் என்பது இல்லை. நின்று கொண்டிருக்கையில் காயம் ஏற்பட்டாலும் அதுவும் இழப்பீடுக்கு தகுதியான மோட்டர் வாகன விபத்துதான்....

ஆகவே கார்ல் ட்ரூமென் விவகாரம் ஏதோ வியப்புகுறிய சமாச்சாரமுமில்லை. அமெரிக்கர்கள் கிறுக்கர்களுமில்லை. இந்தியாவில் இந்தச் சம்பவம் நடைபெற்றிருந்தாலும், ட்ரூமெனுக்கும் இந்திய சட்டப்படி இழப்பீடு கிடைத்திருக்கும்....அவர் செய்தது அல்லது செய்ய முயன்றது பாவ காரியமென்றாலும் கூட...
(இந்த வலைப்பதிவினை ஆரம்பித்ததே மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு சட்டத்தினைப் பற்றி எழுத விரும்பித்தான். விரைவில் அது பற்றி எழுதுவேன்)

No comments: