5.6.06

புனிதம்...

எனக்கு நன்கு பழக்கமான அந்த வக்கீலுக்கு நேர்ந்த அனுபவம் சுவராசியமானது. அந்த ஊரின் குறிப்பிடத்தகுந்த சில வக்கீல்களில் அவரும் ஒருவர். என்னிடம் அவர் அந்த சம்பவத்தை கூறிய போது அந்த ஊரிலுள்ள அனைத்து பெரிய மனிதர்களையும் அறிந்த அவரும் ஒரு பெரிய மனிதர். அதற்கு பல வருடங்களுக்கு முன்னரோ வேகமாக வளர்ந்து வந்த ஒரு வக்கீல். தினமும் காலை தனது அலுவலகம் செல்லும் முன்னர், வீட்டிலிருந்து சில அடி தூரம் உள்ள பெட்டிக் கடையில் ஒரு சிகரெட் வாங்கி பற்ற வைத்துக் கொள்வது அவரது பழக்கம். இந்தப் பழக்கம் வழக்கமாகி, இவர் அந்த கடையினை நெருங்கியதுமே, கடைக்காரர் சிகரெட்டை எடுத்து தீப்பெட்டியுடன் பணிவுடன் நீட்டி விடுவார். வக்கீலும் ஏதும் பேசாமல் வாங்கிப் பற்ற வைத்து நகர்ந்து விடுவார்.

அப்படியான ஒரு காலையில்தான் அந்த கடையில் புதிதாக தொங்கிய படமொன்று அவரது கவனத்தை ஈர்த்தது. வெளி நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு புளோ அப். அருமையான பிரிண்ட்.. ஆனால் அதையெல்லாம் விட அவரின், ஏன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது, படமாகி ன்ற அழகிய மேல் நாட்டுப் பெண். மேல் சட்டை பட்டன்களை திறந்து விட்டு, எதுவும் தெரியாமல் ஆனால் அனைத்தையும் பார்ப்பவரின் அனுமானத்துக்கு விட்டு சற்றே சரிந்தபடி...பார்ப்பவர்களின் தலைகளும் தன்னையரியாமல் சரியும். தற்போது வக்கீலின் வழக்கம் சற்றே மாறிப் போனது. தினமும் காலை சிகரெட்டினை பற்ற வைக்கும் போது கண்கள் தானாக அந்தப் பெண்ணின் கண்ணோடு சற்றே பொருந்தி விலகும். இரண்டு, மூன்று நாட்களுக்கு இது தொடர்ந்தது. வக்கீலுக்கு இப்போது ஒரு புதிய எண்ணம். இப்படி தினமும் லேசாகப் பார்த்து விலகுவது அவருக்கு சலிப்பைத் தந்தது. 'அந்தப் படத்தை நாமே அடைந்து விட்டால்!!!' மற்ற கண்களில் இருந்து அந்தப் பெண்ணை பாதுகாத்து, தனக்கே தனக்காக்கும் மனிதப் புத்தியும் காரணமாக இருந்திருக்கலாம்.

வலைத்தளம், விசிடி, விசிஆர் என்று சின்னப் பையன்கள் வரை பழக்கமாகிப் போன இந்தக் காலத்தில் வேண்டுமென்றால் வக்கீலின் இந்த ஆசை சின்ன ஆசை அல்லது புரியாத ஆசையாக இருக்கலாம். ஆனால் சுமார் 25 வருடங்களுக்கு முன்னர், இப்படியான ஒரு படத்தை அப்படியாகப்பட்ட ஒரு ஊரில் பார்க்க நேர்வது அபூர்வம். எப்போதாவகத்தான், ரசபாசமான சில படங்கள், யாராவது ஒருவரின் கைகளில் அகப்பட்டு மிக நெருங்கிய நண்பர்களிடையே ரகசியமாகவும், கிளுகிளுப்பான சிரிப்புடனும் பகிர்ந்து கொள்ளப் படுவதுண்டு. நான் மிகவும் நேசித்த ஒரு நபரின் பெட்டியில் ஒரு முறை, ஒரு வெளிநாட்டு போர்னோ புத்தகத்தை பார்க்க நேர்ந்தது. ஆனால் அதிலுள்ள நபர்களின் கண்களெல்லாம் கறுப்பாக மறைக்கப் பட்டிருந்தது. இப்போதுதான் எல்லாம் வெளிச்சமாகிப் போனது.

எனவே வக்கீலுக்கு வந்த அந்த எண்ணம் அந்தக் காலத்தில் நியாயமானதுதான். அவர் ஒரு நல்ல கலாரசிகர் என்பதனையும், அழகு எங்கு இருந்தாலும் பாரட்டத் தயங்குவதில்லை என்பதனையும் நான் சொல்ல வேண்டும். ஆனால் கடைக்காரருக்கு தெரிய வேண்டுமே! மேலும் இரண்டு நாட்கள் நகர்ந்தன. வக்கீல் தினமும் படத்தை ஓரக்கண்ணால் ரசிப்பதும், கேட்கத் தயங்கி நகர்வதும் வழக்கமாகியது. தனது நிலையினை எண்ணி சிரித்துக் கொண்டார். கோர்ட்டிலோ, நீதிபதிகளே பயந்த அவரது கூர்மையான வாதம். இங்கோ, ஒரு பெட்டிக் கடைக்காரனிடம் பேச நாக்கு வரவில்லை.

சரி, இன்று கேட்டு விடுவது என்று துணிவுடன் நடந்தார். வழக்கமான இடத்தைப் பார்த்தவருக்கோ அதிர்ச்சி! படம் அங்கு இல்லை. மீண்டும் நன்கு பார்த்தார். நிஜமாகவே இல்லை. கடைக்காரர், சிகரெட்டை எடுத்து நீட்டினார்.

"சார். நீங்க என்ன பாக்கிறீங்கன்னு தெரியும். அந்த மாரிப் படத்த, உங்கள மாரி கவுரவமானவங்க வர்ர எடத்தில நா மாட்டியிருக்க கூடாது. நீங்க அதப் பாத்து முகத்த சுளிச்சதப் பாத்தன். என்ன மன்னினுச்சுருங்க"

வக்கீல் எதுவும் பேசவில்லை. அவருக்கு சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை.

ஆனால் என்னிடம் சொல்லும் போது அவர் முகத்தில் ஒரு குதர்க்கமான சிரிப்பு மட்டும் இருந்தது...

No comments: