10.6.06

தாங்க் யூ சார்...

நேற்று ஒரு சின்ன மிட்டாய்த் தாள் (candy wrapper) என்னைப் பாடாய் படுத்திவிட்டது. வருடாந்திர கடனை கழிக்க வேண்டி சார்ட்டட் அக்கவுன்டண்டைப் பார்க்க விரைந்து செல்ல வேண்டியிருந்தது. மும்பை ரயில்களுக்கு பீக் அவர் என்று ஒன்று கிடையதென்றாலும், ரயில்களில் ஏறவே முடியாத அவர் என்று ஒன்று உண்டு. அப்படியாகப்பட்ட ஒரு நேரத்தில்தான் துரதிஷ்டவசமாக நான் ரயிலில் செல்ல வேண்டி வந்தது. பிளாட்பாரத்தில் கூட்டம் அதிகமில்லாத இடத்தினை தேடி வேகமாக சென்று கொண்டிருந்த நான், வழக்கம் போல பாக்கட்டில் இருந்த ஒரு மென்டோஸ் மிட்டாயினை எடுத்து வாயில் போட்டேன். மிட்டாய் வாயில் போனதை போலவே, கையிலிருந்த அதன் தாள் எனது கையிலிருந்து நழுவி கீழே விழுந்ததும் அனிச்சையாக நடந்தது. மூன்று, நான்கு அடி நடந்து விட்டேன். 'ப்ச்...' என்ற ஒரு சத்தம் கேட்டு திரும்பினேன். ஒரு அடி தூரத்தில், என் வயதையொத்த நபரொருவர் கீழே விழுந்த தாளை சுட்டிக்காடியபடி இருந்தார். இது ஒரு பிரச்னை எப்போதும். நாம் ஏதாவது தாளை கீழே போடுவோம் அல்லது படித்து முடித்த பேப்பரை ரயிலில் விட்டுப் போவோம். நான்கு பேர், 'சார், சார்...' என்று நாம் மறதியாகத்தான் விட்டுப் போகிறோம் என்று உதவிக்கு வருவார்கள். நல்ல விஷயம்தான். அதனைப் புரிந்து கொள்கிற மனதுதான் நமக்கு இல்லையோ? ஆனாலும் வலிய உதவிக்கு வந்தவர்களின் மனதை ஏன் நோகடிக்க வேண்டுமென கஷ்டத்தைப் பார்க்காமல் திரும்பப் போய் எடுத்துக் கொள்வதுண்டு.

அதற்காக, இந்த சின்ன மிட்டாய் தாளைப் போய் எடுப்பதா? கண்ணாலேயே, அதில் மிட்டாய் எதுவும் இல்லை என்று சுட்டிக்காட்டும் போதுதான் கவனித்தேன் அவர் கண்களில் ஒரு சின்ன எரிச்சல் இருந்ததை. 'அதனைத் தாங்கள் எடுத்து குப்பைத்தொட்டியில் போட முடியுமே' என்ற ரீதியில் சில ஆங்கில வார்த்தைகள் காதில் விழுந்தது போல இருந்தது. அந்த தாளைப் பார்த்தேன். தனியாக பிளாட்பாரத்தில் படுத்து அது என்னைக் கேலியாக திருப்பிப் பார்த்தது. எனது கை பெருவிரல் அளவுதான். ஆனால் எனது பெரிய ஈகோவின் மேல் அதனினும் பெரிதாக கறையாகப் படிந்தது போல உணர்ந்தேன்.

அதற்குள் அதனைச்சுற்றி பல கால்கள். நான்கு அடி கடந்திருந்திறேன். திரும்பிச்சென்று குனிந்து அத்தனை கால்களையும் வணங்கி அதனை எடுப்பதா? இப்போது எத்தனை கண்கள் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. இதனையும் மீறி அதனை எடுத்தால், ஒரு சின்ன தாளுக்காக இத்தனைப் பாடா என்று எத்தனை அனுதாபப் பார்வை என் மீது விழப் போகிறது. இது என்னடா தர்ம சங்கடம்? பல்வேறு எண்ணங்கள் ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் ஓடி மறைந்தன. இந்த வெட்கத்தையெல்லாம் விட, அந்த நண்பரின் இவ்வாறு அறிவுறுத்தும் தைரியமே எனக்கு வியப்பளித்தது. ஏனென்றால் மும்பை வீதியில் குப்பையினை போடுவது சென்னை நேப்பியர் பாலத்தில் நின்று கொண்டு கூவத்தில் எச்சில் துப்புவது போலவே எவ்வித மாகாமாற்றத்தை ஏற்படுத்திவிட போவதில்லை. ஆனாலும் இந்த தைரியம் மதிக்கப்பட வேண்டும் என் நல்ல வேளையாக எனக்குத் தோன்றியது. யார் முகத்தையும் கவனிக்காமல் நேராக அத்தாளை நோக்கி சென்றேன். அந்த நபரை கடந்த போது, 'நம்மைப் போல படித்தவர்கள்...' என்ற ஆங்கில வார்த்தைகள் காதில் விழுந்தது. அத்தனைக் கால்களுக்கும் நடுவே குனிந்து அந்த குட்டி தாளை எடுத்து 'விடு விடு' என்று நடையெக் கட்டினேன். அவரைக்கடந்த போது தெளிவான ஆங்கிலத்தில், 'தாங்க்யூ சார்' என்று சத்தமாக கேட்டது. என்னை விட வயதில் சின்னவராகத் தெரிந்த அவரின் முகத்தை பார்க்கவில்லை. 'நான்தானப்பா உனக்கு நன்றி சொல்ல வேண்டும்' என னைத்துக் கொண்டேன்...

24.07.02
மும்பை

4 comments:

வடுவூர் குமார் said...

நன்றாக இருக்கிறது.

வடுவூர் குமார் said...

எழுத மறந்துவிட்டேன்.
மும்பாய் இரயில் அனுபவம் அதை உங்கள்
மாதிரி அனுபவித்தவர்கள் எழுதலாமே?
இதற்காகவே நான் அங்கு வேலைக்கு போகவில்லை.

Anonymous said...

பிரபு ராஜதுரை,

எனக்கும் இப்படி ஒரு அனுபவம் உண்டு. எங்கோ போக, அமெரிக்க நண்பனின் காரில் ஏறி அமர்ந்தேன். காலடியில் சின்னக்காகிதம் சுருட்டிப் போடப்பட்டிருந்தது. நான் அதை எடுத்து வெளியே போட்டேன். நண்பன் அந்தக் காகிதத்தை எடுக்கச் சொன்னான். எனக்குப் புரியவில்லை, நல்லதுதானே செய்தோம் என்று எண்ணம். இரண்டாம் முறை சொன்ன பிற்பாடுதான் கதவைத்திறந்து தரையிலிருந்த குப்பையை எடுத்தேன். அதோடு இந்தியாவில் இப்படித்தான் வெளியே குப்பை போடுவீர்களா என்றும் கேட்டான். நான் அதிலிருந்து மற்றவர்கள் இப்படி தவறு செய்தால் கண்டிப்புடன் எடுத்துக்கூறுகிறேன். நான் அந்த தவறைச் செயவதில்லை என்று சொல்ல வேண்டியதில்லை.

நன்றி,
குலவுசனப்பிரியன்

Aruna Srinivasan said...

அடக் கடவுளே!! பாவம், பெங்களூரில் நான் சொன்னதைக் கேட்ட அந்த இளைஞர்க்கும் இத்தனை சிந்தனை உள்ளே நடந்திருக்குமோ?!!

ஆனாலும் பிரபு ராஜ துரை, உங்க அனுபவத்தை ஒரு முறுவலோடுதான் ரசித்தேன் :-)அருமையான நகைச்சுவை எழுத்து நடை.

பி.கு: முக்கியமான கேள்வி. இப்போதெல்லாம் சாக்லேட் தாளை எங்கே போடுகிறீர்கள் ? :-)