இட ஒதுக்கீடு பிரச்னையில் அகில இந்திய அளவில் தமிழக அரசு ஒரு முன்னோடி மாநிலமாக கூறப்பட்டாலும், ஆட்சியாளர்களுக்கு தெரிந்தோ, தெரியாமலோ தொடர்ந்து பல வருடங்களாக தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு இங்கு ஒரு விடயத்தில் மறுக்கப்படுகிறது. இவ்விதமான மறுக்கப்படும் உரிமை பற்றி தாழ்த்தப்பட்டவர்களுக்கான அமைப்புகள் கூட அறியவில்லை போலும்.
இட ஒதுக்கீடு என்பது கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் என்று நாம் பொதுவாக அறிந்திருப்பது. இட ஒதுக்கீடு என்பதே இன்னாருக்கு இன்ன வேலைதான் என்ற பாகுபாடு ஒழிக்கப்பட்டு, அனைவருக்கும் அனைத்து தொழில்களிலும் போதுமான பங்கு கொள்ள வழி வகுக்க வகை செய்ய வேண்டும் என்ற பரவலான கோட்பாட்டின்படி அமைந்ததாகும். எனவே, கல்வி, வேலை வாய்ப்பினை தவிர்த்து பிற தொழில்களும் அனைத்து வகுப்பினரும், குறிப்பாக தாழ்த்தப்பட்டவர்கள் மேற்கொள்ள வழி வகை செய்தல் அவசியமான ஒன்றாகும்.
இதனை கருத்தில் கொண்டே மோட்டார் வாகன சட்டத்தில் 1978ம் ஆண்டு ஒரு திருத்தம் இந்திய அரசால் கொண்டு வரப்பட்டது.
மோட்டார் வாகன சட்டம் (Motor Vehicles Act) இந்திய அரசால் 1939ம் ஆண்டு இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் பிரிவு 47(3)ன் படி மாவட்ட கலெக்டர் (Regional Transport Authority) அவரது அதிகார வரம்பிற்குள் எத்தனை பயணிகள் வாகனம் (stage carriage) இயக்கப்படலாம் என்று நிர்ணயிக்கலாம்.
1978ம் ஆண்டு மோட்டார் வாகன சட்டமானது திருத்தப்படுகிறது. அவ்வாறு திருத்தப்படுவதன் முக்கியமான நோக்கமானது, இவ்வகையான வாகனங்கள் இயக்கும் அனுமதியின் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் (Scheduled Castes and Tribes), பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கும் (Economically weaker sections) இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டுமென்பதாகும்.
இதன்படி பிரிவு 47(1A) மற்றும் (1B) கொண்டுவரப்பட்டு ‘அரசு வேலை வாய்ப்புகளில் எத்தனை சதவீதம் தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு உள்ளது அதே அளவு பயணிகள் வாகன உரிமங்களிலும் இட ஒதுக்கீடு மாநில அரசுகள் அளிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டது. இதே போன்று (1C) பிரிவானது பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று கூறுகிறது.
ஆனால், இந்த இரு வகையான இட ஒதுக்கீட்டிற்குமான முக்கியமான வித்தியாசம் முதலாவதில் ‘shall’ என்ற பதமும், இரண்டாவதில் ‘may’ என்ற பதமும் பயன்படுத்தப்படுகின்றன. அதாவது தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடானது மாநில அரசுகள் கண்டிப்பாக அளிக்க வேண்டுமென்பதுதான் இந்த சட்டத்தின் நோக்கம்.
***
இவ்வாறு வாகன உரிமையில் அளிக்கப்பட்ட இட ஒதுக்கீடானது எவ்வளவு தூரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உச்ச நீதிமன்றம் கருதியது என்பதை Rameshwar Prasad Vs State of UP (1983) 2 SCC 195 என்ற வழக்கின் மூலம் அறியலாம்.
1981ம் ஆண்டு உத்திரபிரதேசம் ஒரு அறிவிப்பின் மூலம் வாகன உரிமை எண்ணிக்கைக்கான உச்ச வரம்பினை முழுமையாக தளர்த்தியது. அதாவது, யார் வேண்டுமென்றாலும், உரிமம் பெற்று எத்தனை வாகனங்களையும் இயக்கலாம்.
இந்த அறிவிப்பினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற மேற்கூறிய வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறிய கருத்து கவனிக்கத்தக்கது. ‘வாகன எண்ணிக்கையில் உச்ச வரம்பு இருந்தால்தான் இட ஒதுக்கீடு என்பதற்கு பயன். இல்லை, யார் வேண்டுமானாலும் எவ்வளவு வாகனம் வேண்டுமானாலும் இயக்கலாம் என்றால், இட ஒதுக்கீடானது அர்த்தமற்றுப் போகும்’ என்று கூறிய உச்ச நீதிமன்றம் அந்த அறிவிப்பு செல்லாது என்று தீர்ப்பு கூறியது.
குறிப்பிட்ட எண்ணிக்கையில் வாகனம் இருந்தாலே, தாழ்த்தப்பட்டவர்களும் வாகன தொழில் புரிய முடியும். வரம்பினை எடுத்தால், பெரிய பண முதலைகளோடு அவர்களால் போட்டியிட முடியாது என்பதே உச்ச நீதிமன்றம் கூறிய தீர்ப்பின் தாத்பரியம்.
***
1988ம் ஆண்டு பழைய சட்டம் நீக்கப்பட்டு முற்றிலும் புதிய மோட்டார் வாகன சட்டம் அமுலுக்கு வந்தது. மோட்டார் வாகன பதிவு எண் 1989ம் ஆண்டுக்கு பின்னர் வேறு வடிவம் எடுத்ததன் காரணம் இவ்வாறு புதிய சட்டம் இயற்றப்பட்டதுதான்.
1939ம் ஆண்டு சட்டத்தின் 47(3)ம் பிரிவில் கலெக்டர்களுக்கு வாகன உரிம எண்ணிக்கையினை நிர்ணயிக்க அளிக்கப்பட்ட அதிகாரம் புதிய சட்டத்தில் இடம் பெறவில்லை. ஆகவே, எவ்வளவு உரிமம் வேண்டுமென்றாலும், யார் வேண்டுமானாலும் பெறலாம்.
ஆயினும், இந்த புதிய சட்டத்தின் பிரிவு 71(3)(a)ன் படி மாநகரங்களைப் பொறுத்தவரை மத்திய அரசின் கட்டளையின்படி மாநில அரசானது அதிகபட்ச உரிம எண்ணிக்கையினை நிர்ணயிக்கலாம். பிரிவு 71(3)(b)ன் படி அவ்வாறு நிர்ணயிக்கையில் தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது.
சுருக்கமாக கூற வேண்டுமென்றால், எப்போது மோட்டர் வாகன உரிமமானது குறிப்பிட்ட எண்ணிக்கையில் வழங்கப்படுகிறதோ, அப்போது இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது இதன் தாத்பரியம்!
***
சரி, தமிழகத்தினைப் பொறுத்தவரை மாநகரமோ, நகரமோ அல்லது கிராமமோ பேருந்து உரிமம் என்பது குறிப்பிட்ட அளவில்தான் கொடுக்கப்படுகிறது. உதாரணமாக சிற்றுந்துகளை எடுத்துக் கொண்டால், ஒரு மாவட்டத்திற்கு 250 உரிமங்கள்தான் கொடுக்கப்படுகின்றன. அப்படியாயின் இட ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறதா, என்றால் இல்லை என்பது வருத்தமளிக்கும் ஒரு செய்தி!
இன்றைய நிலையில் ஒரு தலித் தொழிலதிபரை பார்ப்பது என்பது ஒரு தலித் கலெக்டரை பார்ப்பதை விட அரிதான ஒரு காரியம். ஏனெனில் அவ்விதமான பங்கீட்டினை சட்டம் அளிக்க முன் வந்தாலும் அரசு, அதனை செயல்படுத்த முன்வரவில்லை என்பதுதான் உண்மை!
எவ்வாறு அரசு, இட ஒதுக்கீட்டினை மறுக்கிறது?
***
தமிழகத்தினைப் பொருத்தவரை, இட ஒதுக்கீடு சட்டத்திருத்தம் 1978ம் ஆண்டு அமுலுக்கு வரும் முன்னரே பயணிகள் பேருந்து அரசுடமையாக்கப்பட்டது. இவ்வாறு அரசுடமையாக்கப்பட்ட பேருந்துகள் பிற தனியார் வாகனங்களோடு போட்டியிடுவது என்பது கடினம். எனவே பழைய சட்டத்தில் பிரிவு 68-C, புதிய சட்டத்தில் பிரிவு 99 ஆகியவற்றின்படி மாநில அரசானது தனக்கு வேண்டும் வழித்தடங்கள் (route) அல்லது பகுதியினைப் (area) பொருத்து ஒரு திட்டம் தயாரிக்கலாம் (scheme).
இத்திட்டத்தின்படி மாநில அரசானது தனக்கு வேண்டும் பகுதியில் பிற தனியார் வாகனங்கள் இயங்குவதை முழுமையாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலோ கட்டுப்படுத்தலாம். மேலும் இவ்வாறு ஒரு திட்டத்தினை செயல்படுத்த மாநில அரசுகளுக்கு அதிகாரம் அளிக்கும் சட்டப்பிரிவினை மோட்டார் வாகன சட்டத்தின் பிற பிரிவுகள் எவ்வகையிலும் கட்டுப்படுத்தாது.இந்த அதிகாரதினைப் பயன்படுத்தி தமிழக அரசானது தமிழகம் முழுவதும் திட்டப்பகுதியாக அறிவித்து, அத்திட்டம் இன்று வரை அமுலில் உள்ளது. எனவே தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வழித்தடத்திலும் அதிகபட்சம் எத்தனை தனியார் வாகனங்கள் இயங்கலாம் என்று மாநில அரசு நிர்ணயிக்கும்.
இவ்வாறு தமிழகம் முழுவதும் திட்டப்பகுதியானதால், வாகன உரிமம் கட்டுப்படுத்தப்பட்டாலும், தமிழகம் இட ஒதுக்கீட்டினைப் பற்றி சிந்திக்கவேயில்லை.
பழைய சட்டத்திலும் புதிய சட்டத்திலும் இவ்வாறு திட்டம் தயாரிக்க அரசிற்கு அதிகாரம் அளிக்கும் சட்டப்பிரிவினை, இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டப்பிரிவு கட்டுப்படுத்தாது. சட்டப்படி சரிதான். ஆனால், தார்மீகப்படி?
***
தார்மீகப்படி நிச்சயம் தமிழக அரசின் செயல் சரியானதாக இருக்க முடியாது.
ஏனெனில், முதலில் திட்டம் தயாரிக்க அதிகாரம் அளிக்கும் சட்டப்பிரிவானது, அரசு பேருந்துகளை தனியார் போட்டியிலிருந்து பாதுகாக்கும் எண்ணத்துடனே இயற்றப்பட்டது. வேறு காரணம் ஏதும் அந்தப்பிரிவின் நோக்கமாக கூறப்படவில்லை. இவ்வாறு அரசு பேருந்துகளை பாதுகாக்கும் வண்ணம் திட்டம் தயாரிக்கும் அதிகாரத்திற்கு வேறு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக, மோட்டார் வாகன சட்டத்தின் வேறு எந்த பிரிவும் அதனை கட்டுப்படுத்தாது என்று கூறப்பட்டது. இட ஒதுக்கீடு அளிக்க கோரும் பிரிவானது பின்னர் கொண்டு வரப்படுகிறது. எனவே இரண்டையும் சேர்த்துப் படிக்கையில், இவ்வாறான திட்டத்தின் கீழ் தனியார் வாகனங்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவில் உரிமம் வழங்கையில் அதில் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும் என்பதுதான் சரியான செயலாக இருக்க முடியும்.
இட ஒதுக்கீடு என்பது குறிப்பிட்ட அளவில் இயங்க அனுமதிக்கப்படும் தனியார் வாகனங்களுக்குள்ளே மட்டுமே தவிர, அரசு பேருந்துகளை எவ்விதத்திலும் பாதிப்பதில்லை.
உதாரணமாக திட்டத்தின்படி நெல்லை-மதுரை வழித்தடத்தில் 10 தனியார் வாகனங்களுக்கு உரிமம் அளிக்கப்பட்டால், அந்த பத்து வாகனங்களில் போதுமான உரிமங்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். அதனால் அரசு பேருந்துகளுக்கு பாதிப்பில்லை.
என்னுடைய அனுமானத்தில், இட ஒதுக்கீடு அளிக்கும் சட்ட திருத்தம் கொண்டு வரப்படுகையில், அது விரிவாக விவாதிக்கப்படவில்லை என்றே தோன்றுகிறது. இல்லையெனில் இந்த குறைபாட்டினை போக்க போதிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும்.
சட்டத்தின் நோக்கம் என்ன? உரிமம் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வழங்கப்படுகையில், இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். அரசு பேருந்துகளை பாதுகாக்கும் எண்ணத்தில் தனியார் வாகனங்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே உரிமம் வழங்கப்படுகிறது. அப்போது இட ஒதுக்கீடு அளிப்பதுதானே முறை?
***
கடந்த திமுக ஆட்சியில் அரசின் திட்டமானது மேலும் மாற்றப்பட்டு சிற்றுந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. சிற்றுந்துகளை எந்த அரசு நிறுவனமும் இயக்கவில்லை. முழுக்க முழுக்க தனியார்தான். அரசு பேருந்துகள் இயக்கப்படும் வழித்தடங்களில் அவற்றை இயக்க முடியாது. ஆயினும் அரசு அவற்றிற்கான அதிக பட்ச எண்ணிக்கை ஒவ்வொரு மாவட்டத்திற்கு இவ்வளவு என்று நிர்ணயித்தது.சிற்றுந்து அனுமதியிலாவது, இட ஒதுக்கீட்டினை அமுல்படுத்தியிருக்கலாம். அரசு நல்ல வாய்ப்பை பயன்படுத்தவில்லை.
இந்த ஒரு காரணத்திற்காக அரசின் திட்டத்தினை (scheme) எதிர்த்து பொது நல வழக்கு தாக்கல் செய்தால், திட்டத்தில் தனியார் வாகனங்களுக்குள் இட ஒதுக்கீட்டினை அமுல்படுத்த நீதிமன்றம் அரசிற்கு உத்தரவிடும் வாய்ப்புகள் அதிகம்...
அந்தக் கல்லினை எறியப்போகிறவர் யார்?
மதுரை
22.05.07
2 comments:
உரிமைகளைப் பற்றிய விழிப்போடு இருத்தல் அவசியம். பதிவிற்கு நன்றி!
யார் எத்தினி பஸ் ஓட்டலாம் என்பதற்கு கட்டுப்பாடு, எந்த ஊருக்கு எத்தினி ரயில் போடலாம் என்பதற்கு மத்தி அரசின் அனுமதிக்கு காத்திருப்பது, ரோடு போடப் போனால் நிலச்சொந்தக்காரர்களுடன் கேஸ்.... அதுக்கு கட்டுப்பாடு ...இதுக்கு கட்டுப்பாடு, நாளை உன் சைக்கிளை நீயே ஒட்ட கட்டுப்படுன்னு போட்டு தள்ளினா நாடு எப்படிங்க உருப்படும் ?
பஸ்ஸுக்கு காத்துக்கிட்டு இருக்கும் பயணிகள் கதை ? வாணிப பெருக்கம் ?
பயணிகள் புளி மூட்டையாக அடைஞ்சுக்கிட்டோ, இல்லை தனி வாகனம் வாங்கி கச்சா எண்ணையையும் அன்னிய செலாவணியையும் கன்னா பின்னாவென்று செலவு பண்ணியோ ...இப்படியே இந்தியா வாழ வேண்டியது தானா ?
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்பது வாணிபத்தை பெருக்கும் கெட்டிக்காரத்தனத்தில் இருக்குதா ? இல்லை கண்ட்ரோல் கண்ட்ரோல் என்று சட்டம் போட்டுத்தளுவதில் இருக்குதா ?
ஐயோ வக்கீல் சார் கிட்ட சட்டத்தை தாக்கி எழுதிட்டேனோ !! :-) .. பின்னூட்டு மாடரேஷன் தான் போங்க :-)
அன்புடன்
சுப்பு
Post a Comment