3.5.07

ஓராண்டு நிறைவு - அன்பிற்கு நன்றி!

தற்செயலாக, இன்று எனது பழைய பதிவுகளை புரட்டுகையில் கிடைத்த செய்தி...எனது இந்த வலைப்பதிவினை ஆரம்பித்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது. மனது உடனே, இந்த வலைப்பதிவினை நான் ஆரம்பிக்க வேண்டும் என்று வேண்டிய, ஏன் வற்ப்புறுத்தவே செய்த சில உள்ளங்களை நினைத்தது. இந்த வலைப்பதிவிற்கு வயது ஒன்று என்றாலும், முன்பு மும்பையில் வசிக்கையில் இதே பெயரில் ஒரு வலைப்பதிவு எழுதி வந்தேன். என்னை ஏறக்குறைய கையைப் பிடித்து அழைத்து வந்து அப்போது வலைப்பதிவில் இறக்கி விட்ட அன்புள்ளத்தினையும், நன்றியோடு நினைக்கிறேன்.

இந்த ஓராண்டில், நேரமின்மையால் நான் ஏற்கனவே இணையத்தில் எழுதியவற்றை மீண்டும் இப்பதிவில் எழுதினேன் என்றாலும், இந்த ஓராண்டில் பல புதிய நண்பர்கள், ஆதரவுக்கரங்கள். பலரது முகம் கூட எப்படியிருக்கும் என்று தெரியாவிட்டாலும் உங்கள் அனைவருக்கும் எனது நன்றி!

ஒவ்வொரு விதத்தில் எனக்கு ஆதரவாயிருந்த, அன்பு பாராட்டியவர்களை ஒவ்வொன்றாக பட்டியலிடுவது, இங்கு தேவையில்லையெனினும் அந்த அன்புக்கு அடையாளமாக ஒருவரை மட்டும் குறிப்பிட வேண்டும். இவரை நான் குறிப்பிடுவதற்கு காரணம், அவரைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. அவருக்கும் என்னைப் பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆயினும் மரத்தடி குழுமத்தில் நான் எழுதிக்கொண்டிந்த இறுக்கட்டத்தில், அன்பு பொங்க சில மடல்கள் அவரிடம் இருந்து வரும். எனக்கு பல முறை வியப்பாக இருக்கும், அதற்கு நான் தகுதியானவனா என்று. இணையத்தை விட்டு சில காலம் விலகி நின்று இப்பதிவினை, மீண்டும் ஆரம்பித்த பொழுது என்னை வாழ்த்தி, முதல் பின்னூட்டம் அவரிடமிருந்து...

நேரமின்மையால் பதிவெழுதாமல் சில வாரம் பொறுத்து எனது கடந்த பதிவினை எழுதியது மீண்டும் அவரிடமிருந்து மடல்!

முகமறியாமலேயே, இணையம் மூலம் ஈடேறும் இத்தகைய நட்பிற்கு ஒரு அடையாளமாக எனது நண்பர் திரு.பலராஜன் கீதா அவர்களை குறிப்பிட்டு அவருக்கு இந்தப் பதிவினை சமர்ப்பிக்கிறேன்!

***

இந்த ஓராண்டில் நான் எழுதிய பதிவுகளை புரட்டிப் பார்க்கையில், ஒவ்வொரு பதிவிலும், பொது அறிவுக்கு பயன் தரத்தக்க ஏதாவது செய்தி கூற வேண்டும் என்ற இப்பதிவின் நோக்கத்திலிருந்து அதிகம் விலகவில்லை என்றே நினைக்கிறேன். சட்டம் என்பது ஒரு கடல், அதில் ஒரு குவளையினை எனது வாழ்நாளில் அள்ளமுடிந்தால் அதுவே பெரிய விடயம். அந்த ஒரு குவளையில் பாதி, இவ்வாறு பதிவெழுவதற்கு படிப்பதால் கிடைக்கிறது என்பதே உண்மை! அதற்காக உங்களனைவருக்கும் நான் நன்றி கூற வேண்டும்.

***

மகிழ்sச்சி தரும் மற்றொரு செய்தி...எதோச்சையாக நேற்று இணையத்தில் தேடுகையில் ஏதோ வலைத்தளம் நடத்திய தேர்வில், எனது வலைப்பதிவில் சிறந்த பதிவு என்று நான்கு நண்பர்கள் ஓட்டு போட்டுள்ளனர். மற்ற பதிவுகளுக்கும் எனது பதிவிற்கும் ஓட்டு வித்தியாசம் ‘டெபாசிட் பறிபோகத்தக்க’ வகையில் இருந்தாலும் பரபரப்பான மற்ற வலைப்பதிவுகளுக்கு இடையில் நம்மையும் சிறந்த பதிவராக கருத நான்கு வாசகர்கள் உள்ளனர் என்பது உற்சாகமளிக்கும் விடயம்.

***

இறுதியாக, ஷரியா குறித்து நான் எழுதிய ஒரு எதிர்வினையினை சரியாக புரிந்து கொள்ளாமல், என் குடும்பத்தினரையும் இழுத்து தனிப்பட்ட வகையில் தாக்கப்பட்ட ஒரு கசப்பான அனுபவம் தவிர வேறு எந்த வகையிலும் நான் புண்படுத்தப்படவில்லை. நானும் இந்த ஓராண்டில் யாரையும் புண்படுத்தவில்லை என்றே நினைக்கிறேன். அப்படி என்னையறியாமல் யாரையேனும் வருத்தமடைய வைத்திருந்தால் அதற்கு தங்களின் மன்னிப்பை வேண்டுகிறேன்

19 comments:

Sundar Padmanaban said...

வாழ்த்துகள் பிரபுஜி.

ஓராண்டா? அஞ்சு வருஷமாகப் போகுதில்ல - மரத்தடியையும் சேர்த்து? :-)

நிறைய நிறைய நிறைய எழுதுங்கள். சுவாரஸ்யமான வினோத வழக்குகளைப் பற்றியும் எழுதுங்கள்.

சிவபாலன் said...

சார்,

வாழ்த்துக்கள்! நான் ரசித்து படிக்கும் பதிவுகளில் உங்களுடைய பதிவும் ஒன்று.

தொடர்ந்து இது போல் நல்ல நல்ல பதிவுகளை தந்து மகிழ்விக்கவும்.

நன்றி

Anonymous said...

உங்கள் பதிவு எங்களுக்கெல்லாம் கட்டாயம் தேவை. நீங்கள் ஒரு பதிவராக இருப்பதும், அவ்வப்போதேயானாலும் தேவையான நேரத்தில் தேவையான சட்ட நுணுக்கங்களைத் தருவதற்கும் எங்களுக்கெல்லாம் வற்றாத மணல்கேணியாக என்றும் இருக்க வேண்டும்.

தொடர வாழ்த்துக்கள்.

தருமி said...

முதலில் - வாழ்த்துக்கள்.

நிறைய எழுதவில்லைதான்; ஆனால் எழுதுவதெல்லாமே தேவையான, நாங்கள் பலரும் அறியாத கோணங்களிலிருந்தல்லவா? such informative blogs are the need of the hour. keep going.......

பாரதிய நவீன இளவரசன் said...

congratulations! keep it up!

go ahead...!

பாலராஜன்கீதா said...

அன்புள்ள வக்கீல் அய்யா அவர்கள் சமூகத்திற்கு,

வாழ்க வளமுடன்,

நம் நட்பினை வலை உலகிற்கு அறிவிக்கும் அளவிற்கு நாங்கள் தங்களுக்கு எதுவும் செய்யவில்லையே... எனினும் தங்களுக்கு எங்கள் உளம் கனிந்த நன்றிகள்.

தமிழக நீதிமன்றங்களில் தமிழில் வாதாடுவது குறித்தும், சட்ட நுணுக்கங்கள் மற்றும் தங்கள் எண்ணத்தில் குறிப்பிடத்தக்க வழக்குகளைப்பற்றியும் பதிவுகள் எழுதும்படி கேட்ட்டுக்கொள்கிறோம்.
மற்றபடி நீதிமன்றங்களில் வழக்குகளை விரைவில் முடிக்க இயலாதிருக்கும் சிக்கல்களைக் களைய என்னென்ன செய்யலாம் என்றும் ஆலோசனை வழங்க இயலுமா ?

என்றென்றும் அன்புடன்,

பாலராஜன்கீதா

Anonymous said...

அப்படி என்னையறியாமல் யாரையேனும் வருத்தமடைய வைத்திருந்தால் அதற்கு தங்களின் மன்னிப்பை வேண்டுகிறேன
இதைத்தான் உட்கார்ந்துகொண்டே ஜூஸ் குடிக்கறதுன்னு சொல்வாங்களோ? ;-)

Boston Bala said...

:)

பகிர்வுகளுக்கு நன்றி பிரபு!

இராம்/Raam said...

ஓராண்டு நிறைவுக்கு வாழ்த்துக்கள் வக்கில் ஐயா :)

Sridhar Narayanan said...

வாழ்த்துக்கள்!

நான் ஓட்டு போடவில்லை. இருந்தாலும் உங்கள் பதிவுகளின் வாசகந்தான்

சிறில் அலெக்ஸ் said...

வாழ்த்துக்கல் வக்கீல் சார். உங்கள் சேவை தொடரட்டும்.

துறைசார்ந்த வலைப்பதிவுகலிலேயே சிறப்பானதாக உங்கள் பதிவை நிச்சயம் சொல்லலாம்.

தொடருங்கள். Let the arguement continue.. no objections.

:))

Nakkiran said...

பிரபு சார்,

உங்கள் பதிவுகளை படித்து பல சட்ட விஷயங்களை அறிந்து கொள்ள முடிந்தது.. நீங்கள் சட்டம் பற்றி மட்டும் எழுதாமல் பல பொது கருத்துக்களும் எழுத வேண்டும் என்பது என் அவா???

துளசி கோபால் said...

வாழ்த்து(க்)கள் பிரபு. ச்சும்மா முறுக்கைத் தேடி வந்த என்னை அப்படியே மரத்தடியில்
கொண்டு சேர்த்தீங்க. இப்ப நான் எழுதித்தள்ளி எல்லாரையும் படுத்திக்கிட்டு இருக்க
நீங்களும் ஒரு காரணம்:-))))

Doctor Bruno said...

I am one of that four :)

பொன்ஸ்~~Poorna said...

ஒரு வருசம் தான் ஆச்சா? ரொம்ப நாளா எழுதிகிட்டிருக்கீங்கன்னு நினைச்சிருந்தேன்.. வாழ்த்துக்கள்..

மணியன் said...

வாழ்த்துக்கள் பிரபு ! உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளவையாகவும் சட்ட அறிவை வளர்ப்பதாகவுமே இருந்தது குறிப்பிடத் தக்கது. ஆரவாரங்களினிடையே உங்கள் அமைதியே நம்பிக்கை கொடுத்தது.

முஸ்லிம் said...

வழக்குரைஞர் ஐயா,

பாராட்டு,
வாழ்த்துக்கள்.

மு. சுந்தரமூர்த்தி said...

பிரபு,
வணக்கம். உங்கள் கட்டுரைகளை (பின்னூட்டங்களயும் தான்)தவறாமல் படித்து பயன்பெறும் பலரில் நானும் ஒருவன். உங்களுடைய தொடர்ந்த பங்களிப்புக்கும், ஊக்குவிக்கும் பாலராஜன் கீதா அவர்களுக்கும் நன்றி!

நல்லடியார் said...

//இறுதியாக, ஷரியா குறித்து நான் எழுதிய ஒரு எதிர்வினையினை சரியாக புரிந்து கொள்ளாமல், என் குடும்பத்தினரையும் இழுத்து தனிப்பட்ட வகையில் தாக்கப்பட்ட ஒரு கசப்பான அனுபவம் தவிர வேறு எந்த வகையிலும் நான் புண்படுத்தப்படவில்லை. நானும் இந்த ஓராண்டில் யாரையும் புண்படுத்தவில்லை என்றே நினைக்கிறேன். அப்படி என்னையறியாமல் யாரையேனும் வருத்தமடைய வைத்திருந்தால் அதற்கு தங்களின் மன்னிப்பை வேண்டுகிறேன்//

நான் அவதானித்த வகையில் உங்களின் பதிவுகளையும் எதிர்வினைகளையும் பிறருக்குப் பயனுள்ள வகையில் சட்டக் குறிப்புகளுடன் சொல்லும் அணுகுமுறை தமிழ் வலைப்பூக்களின் அரிது.
ஷரிஆ பற்றிய தங்களின் பதிவின் சுட்டியைத் தர முடியுமா?

அன்புடன்,