‘தருமி’ என்ற வலைப்பதிவாளர் தனது ‘சட்டச் சிக்கல் பற்றி ஒரு கேள்வி’ என்ற தலைப்பிலான பதிவில் கீழ்கண்ட கேள்வியினை எழுப்பியிருந்தார்.
“நம் பண்பாட்டைத் தூக்கி நிறுத்தக் கூடிய திருவிளையாடல்களையும் பார்க்கும் நம் நீதிக் காவலர்களுக்கு இந்தக் கேஸ்களின் அடிப்படை புரியாமலா இருக்கிறது? புரிந்திருந்தால் ‘on frivolous ground’ என்ற அடிப்படையில் இந்தக் கேஸ்களை எடுக்காமலே புறந்தள்ள முடியாதா? ஒவ்வொரு கோர்ட்டாக இந்தப் பெண்களைப் படியேற வைத்து, அந்தந்த கோர்ட்டுகள் முன்பு ஒவ்வொரு முறையும் நம் பண்பாட்டுத் திருவிழாக்கள் நடந்தேற விடவேண்டுமா? prima facie என்றெல்லாம் என்னென்னவோ சட்ட நுணுக்கங்கள் சொல்வார்களே, அதெல்லாம் இங்கே நடைமுறைப் படுத்தமுடியாதா?”
மேற்கண்ட கேள்விக்கும், இப்பதிவின் மீதான எதிர்வினைகளில் தெரிவித்திருந்த பல கருத்துகளுக்கும், நான் இரு வருடங்களுக்கு முன்னர் எழுதிய ஒரு கட்டுரையில் ஓரளவுக்கு பதிலிருப்பதாக எண்ணுவதால் அதனை இங்கு பதிவது உபயோகமான ஒரு காரியமாக இருக்கும் என எண்ணுகிறேன்....
-oOo-
ராயர் கிளப் எனும் யாஹூ குழுமத்தில் குடியரசு தலைவர் மீது மாஜிஸ்டிரேட் ஒருவர் வாரண்ட் பிறப்பித்ததைப் பற்றி விவாதிக்கப்பட்டது. விவாதம் நீதிபதிகள் ஊழல் செய்கிறார்கள் என்ற வகையில் திரும்பிய பொழுது, நீதித்துறையில் நிலவும் ஊழல் குறித்து நான் அனுமானித்தவற்றை பகிர்ந்து கொண்டேன்.
பதிலுரைத்த நண்பரொருவர் 'அது எப்படி? குஜராத்தில் நடந்தது போல இந்த வாரண்ட் என்பதை யார் வேண்டுமானாலும் வாங்கி விட முடியுமா? சட்ட ஒழுங்கை அமுல் படுத்துபவர்கள் மட்டுமே, தக்க காரணத்திற்காக, நீதிபதியிடம் சென்று பெற முடியும் என நினைத்துக் கொண்டிருந்தேன்' என வினவியிருந்தார். கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் நானும் பிடிவாரண்ட் பற்றி எனக்குத் தெரிந்த சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டேன்.
முக்கியமாக நான் கூற வருவது இந்த பிடிவாரண்ட் என்பது நீதிமன்றங்களில் தினப்படி நடக்கும் காரியமே என்பதும், நீதித்துறை பற்றி கவலைப்பட வேறு என்னன்னவோ இருக்க, இந்த விஷயத்தைப் பிடித்துக் கொண்டு ஒரேடியாக புலம்ப வேண்டாம் என்பதும்தான்.
பத்திரிக்கைகள் பிடிவாரண்ட் என்று எழுதினாலும், அது என்னவோ போலிருக்கிறது. வெறுமே வாரண்ட் என்றாலே போதுமானது. அல்லது தமிழில் அழகாக பிடியாணை என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள். அப்படியே இனி அழைக்கலாம்.
நண்பர் சந்தேகப்பட்டபடி குற்ற வழக்கினை காவலர்கள்தான் நடத்த வேண்டுமென்பதில்லை. 'ஒரு குற்றம் நடைபெற்றுள்ளது' என்று ஒருவர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கையில் காவலர்கள் அதனை ஏற்றுக் கொள்ளாத பொழுதோ அல்லது சரியாக விசாரணை செய்யாத பொழுதோ புகார் கொடுத்தவர் நேரிடையாக குற்றவியல் நடுவரிடம் (Magistrate) மனு செய்யலாம்.
மனுவில் கூறப்பட்டுள்ள சம்பவங்களில ஏதாவது குற்றத்திற்கான கூறுகள் இருப்பின், நடுவர் அதனை முழுமையாக விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு காவலரை பணிக்கலாம். காவலர்கள் தங்கள் விசாரணையில் குற்றம் நடந்திருப்பதை அறிந்தால் தாங்களே அரசு வழக்காக அதனை பதிவு செய்வார்கள். அல்லது தனிநபர் புகார் தவறென்று நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்வார்கள்.
ஆனால், நடுவர்கள் இவ்வாறு காவலரை விசாரிக்க பணிக்காமல், நேரிடையாக மனுவினை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வார்கள். அவ்வாறு ஏற்றுக் கொள்கையில் குற்றத்திற்கான அதிகபட்ச தண்டனை இரண்டு வருடத்திற்கு குறைவாக இருப்பின், வழக்கினை எதிர்கொள்ள எதிராளிக்கு அழைப்பாணை(Summons) அனுப்புவார்.
பெரிய குற்றமாயின் பிடியாணை (warrant) அனுப்புவார். பெரிய குற்றத்திற்கும் பிடியாணைதான் அனுப்ப வேண்டுமென்பதில்லை. அழைப்பாணையே அனுப்பலாம். பொதுவாக நடுவர்கள் தனிநபர் புகார்களைப் பொறுத்தவரை அழைப்பாணையே அனுப்புவது வழக்கம்.
அழைப்பாணை என்பது குறிப்பிட்ட தினத்தில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென்ற அழைப்பு, ஆனால் கட்டளையாக! பிடியாணை என்பதும் ஏதோ எமனுடைய பாசக்கயிறு போன்ற பயங்கரமான சமாச்சாரமல்ல. முதலில் பிணையில் விடத்தக்க பிடியாணைதான் (Bailable Warrant) அனுப்பப்படும்.
பிடியாணை என்பது ஒருவரை நீதிமன்றத்தில் ஜர்படுத்த காவலர்களுக்கு அளிக்கப்படும் அதிகாரம். பிணையில் விடத்தக்க பிடியாணைகளைப் பொறுத்தவரை காவலர்கள், சம்பந்தப்பட்டவரிடம் குறிப்பிட்ட தினத்தில் நீதிமன்றத்தில் ஆஜராக ஒரு உத்திரவாதத்தை பெற்றுக் கொள்வதோடு நிறுத்திக் கொள்வார்கள்.
நான் ஏற்கனவே கூறியபடி முதலில் அழைப்பாணை. அதற்கு கீழ்ப்படியாவிடில் பிடியாணை. இதுதான் நடைமுறை. மேலும் மேலும் நீதிமன்றத்திற்கு வராமல் டிமிக்கி கொடுத்தால் மட்டுமே பிணையில் விடமுடியாத பிடியாணை (Non-bailable Warrant). இவ்வகை பிடியாணைகளில் காவலருக்கு சம்பந்தப்பட்டவரை சும்மா விட அதிகாரமில்லை. பிடிபட்டவரை நீதிமன்றத்தின் முன் நிறுத்தி பின்னர் நீதிமன்றம்தான் அவரை பின்னர் பிணையில் விட முடியும்.
தனிநபர் புகார்கள் பொதுவாக வணிக தகறாறுகளை தீர்த்துக் கொள்ள ஏமாற்றுதல் (Cheating) சம்பந்தப்பட்ட வழக்குகளே அதிகம் தாக்கல் செய்யப்படும். ஏனெனில் வணிக தகறாருக்கு...இழந்த பணத்தை மீட்க சிவில் வழக்குதான் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் அதைக் கண்டு யாரும் அஞ்சுவதில்லை என்ற காரணத்தால் கிரிமினல் வழக்காகவும் பதிவு செய்ய முயலுவர். வணிக தகறாருகள் மெல்லிய நூலிழையில்தான் குற்றவியல் வழக்காக மாறுவதால் காவலர்கள், 'சிவில் கோர்ட்டில பாத்துக்கங்க சார்...' என்று கூறி நழுவி விடுவார்கள்.
எனவே தனிநபர்கள் ஏமாற்றுதல் குற்றத்திற்காக குற்றவியல் வழக்கு தொடருவது சாதாரண ஒரு விஷயம். நான் ஏற்கனவே கூறியபடி மனுவில் கூறப்பட்டுள்ள சம்பவங்கள், ஒரு குற்றத்திற்கான அனைத்து கூறுகளும் இருப்பதாக நடுவர் தீர்மானிக்கும் பட்சத்தில் வழக்கினை ஏற்றுக் கொள்வதே முறை.
இதனால் குஜராத் சம்பவத்தில் சட்டபூர்வமாக நீதிபதி செய்வது சரியாகவே இருக்கும். நீதிபதி பணம் வாங்குவதை படம் பிடிக்க வில்லை என்றே நினைக்கிறேன்.
இந்திய குடியரசு தலைவர் அப்துல் கலாம், தலைமை நீதிபதி வி.என்.கரே என்பதெல்லாம் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் பரீட்சை எழுதுபவருக்கு தெரிந்திருக்க வேண்டும். நீதிபதிக்கு ஏன் தெரிய வேண்டும்? அவரிடம் ஒரு மனு தாக்கல் செய்யப்படுகிறது. அதன் சாராம்சங்களில் இருந்து ஒரு குற்றம் நடைபெற்றதாக தெரிய வருகிறது. அதனை ஏற்றுக் கொண்டு குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு பிடியாணை அனுப்ப அவருக்கு அதிகாரம் இருக்கிறது.
நீதிபதி மாட்ட வேண்டுமென்றால் கேமிராவில் மாட்டிக் கொண்ட வழக்குரைஞர்கள் பணம் நீதிபதிக்கு கொடுக்கப்பட்டது என்று சாட்சி கூற வேண்டும். அழைப்பாணை அனுப்பாமல் பிடியாணை அனுப்பக்கூடிய அளவில் அப்படி என்ன அவசியம் என்று நீதிபதியிடம் கேள்வி எழுப்பப்பட வேண்டும். தாக்கல் செய்யப்பட்ட பொய் வழக்கு 'பைசா பிரயோஜனம் இல்லாத வகையில்' தயாரிக்கப்பட்டு (Draft) இருக்க வேண்டும். எப்படியோ நீதிபதிக்கு பதவி காலி. ஆனால் அவர் ஏதோ இந்தியாவையே புரட்டிப் போடக்கூடிய நெம்புகோல் காரியத்தை செய்யவில்லை.
-oOo-
அப்படியெனில் யார் மீதும் பொய் வழக்கு தாக்கல் செய்து அழைப்பாணை பெற்றுவிட முடியுமா என்றால், முடியும்தான். ஆனால் குற்றவியல் வழக்கினை ஏற்றுக் கொள்ளும் முன் மனுவில் கூறப்பட்டுள்ள சம்பவங்களை பிரமாண வாக்குமூலமாக கூற வேண்டும் (Statement on Oath).
வாக்குமூலத்தில் கூறப்படும் விடயங்களில் ஒரு குற்றம் நடந்ததற்கான கூறுகள் இருப்பின் நீதிபதி அதனை விசாரணைக்கு எடுத்துக் கொள்வார். இல்லையெனில் முதல் நிலையிலேயே தள்ளுபடி செய்யப்படும். அது போலவே சிவில் வழக்குகளில் பிரமாண பத்திரம் (Affidavit) தாக்கல் செய்ய வேண்டும்.
ஞாபகமிருக்கலாம், பிரியங்கா காந்தி-வதேரா திருமணத்திற்கு சில நாட்கள் முன்னர் ஆந்திராவில் ஒரு இளைஞர் அவருக்கும் பிரியங்காவுக்கும் ஏற்கனவே திருமணம் நடைபெற்றதாக ஒரு வழக்கு தாக்கல் செய்து ஆந்திர நீதிமன்றம் பிரியங்காவிற்கும், சோனியா காந்திக்கும் அழைப்பாணை அனுப்பிய விவகாரம். குற்றவியல் நடுவராவது பரவாயில்லை. வழக்கினை ஏற்காமல் தள்ளுபடி செய்யமுடியும். சிவில் வழக்கில் அப்படியல்ல, அழைப்பாணை அனுப்பித்தான் தீர வேண்டும். அது புரியாமல் பலர் அந்த நீதிபதியை வறுத்து எடுத்து விட்டனர்.
சரி, இவ்வாறு பொய்யாக பிரமாண வாக்குமூலம் கொடுப்பதும், பிரமாண பத்திரம் கொடுப்பதும் குற்றம். இவ்வாறன ஒரு குற்றத்திற்குதானே புகழ் பெற்ற ஆங்கில நாவலாசிரியர் ஒருவர் பிரிட்டிஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆனால், நமது நாட்டில் யாருக்கும் வெட்கமில்லை. ஒவ்வொரு நாளும் நீதிமன்றங்களில் ஆயிரக்கணக்கான பொய் வாக்குமூலங்கள் அளிக்கப்படுகின்றன. பொய் பத்திரங்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. யார் வழக்கு தொடர்ந்து, யார் நடத்துவது?
4 comments:
வருக வருக, வலைப்பூ உலகத்திற்குத் தங்கள் வரவு நல்வரவாகுக
வாழ்த்துகள் பிரபு
நன்றி.
கடைசி இரண்டு மூன்று வரிகளில் ந்ம்மூர் 'சட்ட ஓட்டை' தெரிகிறதே; அடைக்க வழியில்லையா?
தமிழ்மணத்திற்கு வருக..வருக..
அன்புள்ள பிரபு,
அனானிமஸ் பின்னூட்டங்கள் மட்டுறுத்தல் செய்யப்படுகின்றனவா ?
இந்தப்பின்னூட்டத்தை அனானிமஸ் ஆப்ஷனில் இடுகிறேன் :-)))
பாலராஜன்கீதா
Post a Comment