6.5.06

மணமுறிவு...

‘எண்ணங்கள்’ பத்ரி நாராயணன் தனது சமீபத்திய பதிவில், ‘உச்ச நீதிமன்றம் ஹிந்து திருமணச் சட்டத்தில் ஏற்படுத்த வேண்டிய ஒரு சட்ட திருத்தத்தினைப் பற்றிக் கூறியது’ குறித்து எழுதியவை படிப்பவர்களுக்கு ஒரு தவறான புரிதலை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளது.

ஒரு ஹிந்து எந்த காரணங்களுக்காக மணமுறிவு கோரலாம் என்று காரணங்களை அடுக்கிய பத்ரி இறுதியில் இவ்வாறு கூறுகிறார்:

இந்தக் காரணங்களுக்கு மேலாக, இப்பொழுது உச்சநீதிமன்றம் இன்னொரு புதிய காரணத்தையும் சேர்க்கலாம் என்று அரசைக் கேட்டுக்கொண்டுள்ளது. அதாவது கணவன், மனைவி இருவரும் சேர்ந்து வாழ விரும்பவில்லை என்றால் - இருவரும் ஒருமனதாக அதை ஒப்புக்கொண்டால் - அதாவது திருமணத்தை இனியும் ஒட்டவைக்கமுடியாது என்ற நிலை ஏற்பட்டால் அந்த விவாகத்தை ரத்து செய்யலாம் என்பதே அது. உண்மை என்னவென்றால் மேலை நாடுகள் பலவற்றிலும் இந்த வகை விவாகரத்துதான் அதிகம். இருவரும் சேர்ந்து வாழ விரும்பவில்லை என்றால் அமெரிக்காவில் பல மாநிலங்களில் ஒரு வாரத்துக்குள்ளாகப் பிரிய முடியும்.ஆனால் இதுநாள்வரையில் இந்த வசதி இந்தியாவில் இல்லை. இனிச் சட்டம் இயற்றினால்தான் இந்த வசதி ஹிந்துக்களுக்குக் கிடைக்கும். முஸ்லிம் திருமணங்களில் இதை எளிதாகச் செய்யமுடியும். (அதாவது திருமணம் நீடிக்கவேண்டாம் என்று இரு தரப்பினரும் முடிவுசெய்துவிட்டால்...)

இதை எவ்வாறு நீங்கள் புரிந்து கொண்டீர்கள்? கணவன் மனைவி இருவரும் ஒரு மனதாக திருமண உறவு வேண்டாம் என்று நினைத்தாலும் மணமுறிவு பெற தற்பொழுது வழியில்லை என்பதுதானே? எனது அனுமானம் சரியென்று கில்லியில் ‘அப்படியென்றால் மொளனராகம் என்ற படம் நமக்கு கிடைத்திருக்காது’ என்று ஐகாரஸ் பிரகாஷ் எழுதியதில் இருந்து தீர்மானிக்கிறேன்.

ஹிந்து மணமுறிவுக்கான காரணங்கள் அனைத்தையும் கூறிய பத்ரி, ஹிந்து திருமண சட்டம் பிரிவு 13B ஐ எழுத தவறி விட்டார். 1976ம் ஆண்டு இந்த சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதன்படி கணவன் மனைவி இருவருமே திருமண முறிவுக்கு சம்மதித்தால் (divorce by mutual consent) மணமுறிவு பெறலாம். சமீப காலங்களில் அநேக மணமுறிவு இந்தப் பிரிவின் கீழ் வழங்கப்படுகிறது என நினைக்கிறேன். இப்பிரிவின் கீழ் வழக்கு தாக்கல் செய்வதற்கு இருவரும் ஒரு வருடம் பிரிந்து வாழ்ந்திருக்க வேண்டும். ‘தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கக்கடவன்’ என்று கூறி இந்திய விவாகரத்து சட்டத்தில் இலகுவான விவாகரத்திற்கான சட்ட திருத்தங்களை கடுமையாக எதிர்த்து வந்த கிறிஸ்தவ அமைப்புகளின் எதிர்ப்பும் வலுவிழந்த நிலையில் சமீபத்தில் சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டு, தற்பொழுது கிறிஸ்தவ தம்பதிகளும் தாங்கள் இருவரும் விரும்பினால் விவாகரத்து பெறலாம்.

அவ்வாறேனில், பத்ரி குறிப்பிடும் ஹிந்து நாளேட்டின் செய்தி குறிப்பிடுவது என்ன? ‘திருமணம் ஒட்டவே வைக்க முடியாத அளவுக்கு உடைந்து போயிற்று’ என்பதையும் ஹிந்து மணமுறிவுக்கு ஒரு காரணமாக சேர்க்க வேண்டுமென்பதுதான் உச்ச நீதிமன்றம் கோரியது (irretrievably broken down marriage). மேலும், உச்ச நீதிமன்றத்தின் இந்த கோரிக்கை முதல் முறையல்ல. 2002ம் வருடத்திய ஒரு வழக்கிலேயே இந்த கோரிக்கை உச்ச நீதிமன்றத்தால் வைக்கப்பட்டது ((2002) 2 SCC 73). மேலும் இந்த காரணத்தினை வைத்து பல வழக்குகளில், 1995 முதலே உச்ச நீதிமன்றம் விவாகரத்து வழங்கியிருக்கிறது. ஆனாலும் தனிப்பட்டு இந்த காரணம் வைத்து மட்டுமே வழங்க முடியாது. ‘துன்புறுத்துதல்’ என்ற காரணம் இருக்கையில் இந்த காரணத்தையும் அதனோடு சேர்த்துக் கொள்ளலாம். மேலும் அவ்வித வழக்குகளில் எல்லாம், ஏறக்குறைய 15 ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்த சூழ்நிலை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இவ்வாறான காரணத்திற்காக விவாகரத்து வழங்கப்படுகையில் கணவன் மனைவி இருவரும் சம்மதிக்க வேண்டும் என்பது தேவையில்லை. ஏனெனில் கணவன் மனைவி இருவரும் சம்மதிக்கையில் வேறு எவ்வித காரணமும் தேவையில்லை.

ஆனால், பத்ரி கூறுவது போல விவாகரத்து பெறும் காரணங்கள் சுலபமாக்கப்பட வேண்டும் என்பதுதான் எனது கருத்தும். ஆனால் இதனை உரக்க நான் நீதிமன்றத்தில் கூற முடியாது...இந்திய பண்பாட்டின் விரோதி போல நீதிபதிகளால் பார்க்கப்படுவேன்! செய்யக்கூடியது, பத்ரி கூறுவது போல பாதிக்கப்படுபவருக்கு, பொதுவாக பெண்கள் பொருளாதார பாதுகாப்பு. அது கணிசமான அளவில் செய்யப்பட வேண்டும். ஜீவனாம்சம் போன்றவை விவாகரத்தின் பொழுதே தீர்மானிக்கப்படும். மேற்கூறியது போன்ற வழக்குகளில் உச்ச, உயர் நீதிமன்றங்கள் மாதா மாதம் ஜீவனாம்சத்தைக் கைவிட்டு மொத்தமாக பணம் அல்லது சொத்தினை கொடுக்கும்படி வலியுறுத்தி பிரச்னைகளை ஒரேடியாக முடிவுக்கு கொண்டு வருகின்றன...

No comments: