12.12.10

சீமான் விடுதலை சொல்லாத செய்தி...

உண்மைத் தமிழன் என்ற பதிவரின் ‘சீமான் கைது சொல்லும் செய்தி...’ என்ற பதிவில் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் (National Security Act) அவரை சிறையில் வைக்க அதிகாரம் இல்லாத அதிகாரி கையெழுத்திட்ட உத்தரவு செல்லாது என்று உயர்நீதிமன்றத்தால் சீமான் விடுவிக்கப்பட்டதை சுட்டிக் காட்டி, ‘ஏன், இந்த சட்ட மீறல் முன்னரே அரசு வழக்குரைஞருக்குத் தெரியாதா? இந்த உத்தரவு சட்ட விரோதமானது என்று அரசுக்கு சுட்டிக் காட்டியிருக்கலாமே’ என்று கேள்வி எழுப்பி உள்ளார். அவரது பதிவில் காணப்படும் விடயங்கள் குறித்து சில விளக்கங்கள்...


தேசிய பாதுகாப்பு சட்டம் (NSA), அந்நியச் செலவாணி மற்றும் கடத்தல் தடுப்புச் சட்டம் (COFEPOSA) மற்றும் தமிழக அரசால் இயற்றப்பட்டுள்ள குண்டர்கள் சட்டம் (The Tamil Nadu Prevention of Dangerous Activities of Bootleggers, Drug-offenders, Forest-offenders,Goondas, Immoral Traffic Offenders, Slum-grabbers and Video Pirates Act,1982) போன்ற சட்டங்கள் ஒரு குற்றம் செய்ததற்காக தண்டனையை அளிக்கவல்ல சட்டங்கள் என்பதை விட, ஒரு குற்றம் நிகழாமல் இருக்கவும் பொது ஒழுங்கைக் காப்பதற்குமான சட்டங்கள் என்றுதான் கூற முடியும்.

அதாவது மற்ற குற்றவியல் சட்டமுறைகளினால், ஒரு குற்றம் நிகழ்வதை தடுக்க இயல்வதில்லை என்ற அடிப்படையில், குறிப்பிட்ட சில வகை குற்றங்கள் நிகழ்வதை தடுக்கும் பொருட்டு சம்பந்தப்பட்ட நபரை குறிப்பிட்ட காலம் சிறையில் அடைத்து வைக்கும் நோக்கத்துடன் இயற்றப்பட்ட சட்டங்கள்.

அடிப்படையில் இந்த மாதிரியான சட்டங்கள் நமது நாடு ஏற்றுக்கொண்ட குற்றவியல் சட்டமுறைகளுக்கு விரோதமானதுதான். ஆனால், இவை போன்ற சட்டங்கள் நமது நாட்டின் அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது என்று நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்ட பொழுதெல்லாம், நமது நீதிமன்றங்கள் இந்தச் சட்டங்களை வேறு வழியின்றி ஏற்றுக் கொண்டன. இல்லை, ‘என்கவுண்டர்’தான் ஒரே முடிவு என்று காவல்துறை கருதுவதாலும் இருக்கலாம்.

முதலில் கைது செய்யப்படுகையில், சீமான் செய்ததாக கூறப்பட்ட குற்றங்கள் சாதாரண வகையைச் சார்ந்தவை. எளிதில், அவர் பிணையில் வந்து விடலாம். எனவே அவர் வெளியில் இருந்தால், தேசப்பாதுகாப்புக்கு அல்லது பொது ஒழுங்கிற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்ளலாம் என்று அரசு ‘நினைத்ததால்’ அவர் தேச பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். எனவே சீமான் சிறையில் அடைக்கப்பட்டது, செய்த குற்றத்திற்காக அல்ல. மாறாக, செய்யக்கூடும் என்று கருதப்பட்ட செயலுக்காக!

எனவேதான் தடுப்புக் காவல் என்பது, நாகரீகமான குற்றவியல் சட்டமுறைக்கு எதிரான முறை என்று மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அடுத்தது நீதிமன்ற தீர்ப்பு. சீமான் தேசபாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கும் செயலை புரியலாம் என்பது, சம்பந்தப்பட்ட அலுவலரின் (காவல்துறை ஆணையாளர்) உள்ளார்ந்த திருப்தியை (subjective satisfaction) பொறுத்தது. அது சரியா அல்லது தவறா என்ற கேள்விக்குள் நீதிமன்றம் அதிகம் செல்லாது. எனவேதான் தடுப்புக் காவல் (preventive detention) வழக்குகளில், நுட்பமான காரணங்களை (technical reasons) வைத்தே சிறை வைக்கப்பட்டவரை விடுவிக்க இயலும். அதாவது, அவருக்கு அளிக்கப்பட்ட ஆவணங்கள் நேர்த்தியாக நகலெடுக்கப்படவில்லை அல்லது அதனை கையளிக்க ஒருநாள் தாமதமாகி விட்டது போன்ற காரணங்கள் கூட எடுத்துக் கொள்ளப்படும். சீமான் வழக்கில், ஆணையாளர் இல்லாமல், அவரது பொறுப்பில் இருந்தவர் கையெழுத்திட்டவர் செல்லாது என்ற காரணத்தால் அவர் விடுவிக்கப்பட்டார்.

ஆனால், இதற்கும் அரசு தீர்ப்பினைப் பற்றி என்ன நினைக்கும் என்று கவலைப்படாத நீதிபதியினை தேடி சீமானின் வழக்குரைஞர்கள் ஓட வேண்டியிருந்தது என்பது வேதனையான உண்மை!

எனினும், தடுப்புக் காவலில் வைக்கப்படுபவர், குற்றம் ஏதும் செய்ததற்காக சிறை வைக்கப்படாதலால், நுட்ப காரணங்களை காட்டி அவர்களை விடுதலை செய்வது நீதிபதிகளுக்கும் திருப்தியளிக்கும் செயலாகவே இருக்கும்.

காவலர்களுக்கும் திருப்திதான். ஏனெனில், வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்வதை தாமதப்படுத்தி, தங்களுடைய நோக்கத்தில் வெற்றி பெற்று விடுவார்கள். தடுப்புக் காவல் ஓராண்டு வரைதான். வழக்கு முடிவதற்குள் ஐந்து மாதம் முடிந்து விடும். போதுமே!

எனவே நுட்ப தவறுகளைப் பற்றி அரசு கவலைப்படுவதில்லை. தினமும் உயர்நீதிமன்றங்களில் பல தடுப்புக் காவல் வழக்குகள் ஏற்கனவே கூறப்பட்ட தீர்ப்புகளின் (precedents) அடிப்படையில்தான் ரத்து செய்யப்படுகின்றன. சிறை வைக்கப்பட்டவர்களும் ‘ஆளை விட்டால் போதும்’ என்று ஓடி விடுவார்கள்.

சீமான் வழக்கில் நட்ட ஈடு கேட்டு வழக்கு தொடரப்போவதாக கூறப்படுகிறது. அதற்கு அதிகாரி தவறு செய்துள்ளார் என்பதோடு, கெட்ட எண்ணத்துடன் (malafide intention) செயல்பட்டுள்ளார் என்பதையும் நிரூபிக்க வேண்டும்.

பார்க்கலாம் என்ன நடக்கிறது என்பதை...

மதுரை
12/12/10


பிகு : ஈழத்தில் போர் தீவிரமடைந்த நிலையில், இங்கிருந்து வெடிமருந்துகள் கடத்தியதாக கைது செய்யப்பட்டவர்கள் பின்னர் தேசப்பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட பொழுது, இந்தியாவின் பாதுகாப்புக்கோ அல்லது இங்கு பொது ஒழுங்கிற்கோ அது பாதகமான செயலல்ல என்று வாதிடப்பட்டு நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

1 comment:

PRABHU RAJADURAI said...

மேற்குறிப்பிட்ட பதிவில் பின்னூட்டமாக எழுதியது. ஏனோ பின்னூட்டத்தை செலுத்த முடியவில்லை. பெரிதாக இருப்பதால், தனிப்பதிவாகவே இங்கு வெளியிடலாம் என்பதால் இந்தப் பதிவு!