1.12.10

ஏன் கூடாது என்கவுண்டர்கள்...

அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி மீதான உச்சநீதிமன்ற நீதிபதியான கட்ஜுவின் பாய்ச்சலை, ’ஜுடீசியல் எனகவுண்டர்’ என்று குறிப்பிட்டதாலோ என்னவோ, கட்ஜூ என் ஹீரோ’ ‘அந்த மாட்டில் தேவையான ஒன்றுதான்’ என்ற எதிர் வினைகள்.


உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்சு தீர்ப்பினைப் பற்றி கவலைப்படாமல், அதற்கு எதிராக தீர்ப்பு கூறிய பின்னர், அதனை ஏற்றுக் கொள்ளாத மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்சு, தனது தீர்ப்பில் ‘ஐந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்சின் தீர்ப்பு அவருக்கு எதிராக இருப்பினும், நீதிபதி கட்ஜு வேறு பலன்களை எதிர்பார்த்து இப்படி ஒரு தீர்ப்பு எழுதியுள்ளார்’ என்று குறிப்பிட்டிருந்தால், அடுத்த நாள் செய்தித் தாள்களில் இவ்வாறு செய்தி வந்திருக்கும்


‘உச்ச நீதிமன்ற நீதிபதி லஞ்சத்திற்கு மயங்கி ஐந்து நீதிபதிகள் பெஞ்சு தீர்ப்பிற்கு புறம்பாக தீர்ப்பு எழுதியுள்ளார்...மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்சு கடும் கண்டனம்’


செய்தியினை படிக்கும் வாசகர்களுக்கு, கட்ஜுவையும் தெரியாது. அவர் என்ன தீர்ப்பு கூறினார் என்றும் தெரியாது. ஆனால், ’இவனை எல்லாம் இப்படித்தான் போட்டுத் தள்ளனும். உச்ச நீதிமன்றமா? கொக்கா? என்று கை தட்டியிருப்பார்கள்’


***

கட்ஜூ தனது தீர்ப்பில் மேலும், ‘சில நீதிபதிகள் தங்களது சொந்த பந்தங்களை அதே நீதிமன்றத்தில் (அல்காபாத்) வழக்குரைஞர்களாக பணியாற்ற வைக்கிறார்கள். பணியாற்றத் தொடங்கிய சில வருடங்களிலேயே, நீதிபதிகளின் மகன்களும் உறவினர்களும் கோடீஸ்வரர்களாகி விடுகிறார்கள். பெரிய வீடு, ஆடம்பர கார்கள் மற்றும் அளப்பறிய வங்கிச் சேமிப்பு என சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர்’ என்றும் கூறுகிறார்.


இதே கருத்தை பல ஆண்டுகளாக வழக்குரைஞர்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள். பொது மக்களும் கூறலாம். ஆனால் அவை யாவும் குற்றச்சாட்டுகள். அவ்வளவுதான். அவற்றை ஒருவர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது கிடையாது. ஆனால் குற்றச்சாட்டுகள் தீர்ப்பாக உருமாறு முன்னர், அந்த தீர்ப்பு யாருக்கு எதிரானதோ அவரது கருத்து கேட்கப்பட வேண்டும். இல்லை அந்த தீர்ப்பு இல்லாநிலையது (void). ஏனெனில் தீர்ப்பு ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய ஒன்று. அதுவும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு இறுதியானது.


நீதிமன்ற தாள்வாரங்களில் பேசப்படும் கிசுகிசுக்களை தனது தீர்ப்பில் கட்ஜு நுழைத்தால், அதுவும் அதிகார துஷ்பிரயோகமே!


***

கட்ஜு, உண்மையிலேயே ஹீரோவாக இருந்திருந்தால் என்ன செய்திருக்க வேண்டும். ‘ஏன், தங்கள் பதவிக்கு பெருமை சேர்த்த பல உயர்நீதிமன்ற நீதிபதிகளால் உச்ச நீதிமன்றத்திற்குள் நுழைய முடியவில்லை’ என்பதற்கான காரணத்தை, தனது தீர்ப்பில் அல்ல, தான் அவ்வப் பொழுது எழுதும் பத்திரிக்கை கட்டுரைகளில் தெரிவித்திருக்கலாம்.


சமீபத்தில் ஒரு உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்படுகையில், குறிப்பிட்ட இரு நபர்கள் நீதிபதிகளாக தேர்ந்தெடுக்கப்படக்கூடாது என்று கொலேஜியத்தில் பங்கு வகித்த நேர்மையான ஒரு நீதிபதி எழுத்து மூலம் தெரிவித்த எதிர்ப்பினையும் (dissenting note) மீறி அந்த நபர்களை நீதிபதிகளாக எப்படி உச்ச நீதிமன்றம் அனுமதிக்கிறது என்று கேட்டிருக்கலாம்.


இன்று, ‘ராசாவை ஏன் இன்னமும் விசாரிக்கவில்லை’ என்று உறுமும் உச்ச நீதிமன்றம் ‘ஏன் வைப்பு நிதி ஊழலில் சம்பந்தப்பட்ட உச்ச நீதிமன்ற நீதிபதியை விசாரிக்கவில்லை’ என்று மைய புலனாய்வு அமைப்பைப் பார்த்து அன்று உறுமவில்லை என்று விளக்கியிருக்கலாம்.


சாந்தி பூசன், தனக்குத் தெரிந்து எட்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் ஊழல்வாதிகள் என்பதோடு நில்லாமல், யார் யார் என்ன என்ன ஊழல் செய்தார்கள் என்ற விபரத்தை சத்திய பிரமாண பத்திரமாக தாக்கல் செய்து ’முடிந்தால் என் மீது அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்து கொள்’ என்று சவால் விட்ட பிறகும் அவரை ஒன்றும் செய்யாமல் உச்ச நீதிமன்றம் பதுங்கி பின் வாங்குவது ஏன் என்று மற்ற நீதிபதிகளிடம் சண்டை பிடித்திருக்கலாம்.


அல்லது, இப்படி வெளிப்படையாக கூறிய பின்னரும் ஏன் அந்த தலைமை நீதிபதிகள் மீது குற்ற வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை என்று மத்திய அரசை சாடியிருக்கலாம்.


விஜிலன்ஸ் கமிசனர் வழக்கில், மத்திய அரசு வழக்குரைஞர் ‘ இப்படிப் பட்ட பதவி வகிப்பவர்களுக்கு ‘மாசற்ற் நேர்மை’ (impeccable integrity) இருக்க வேண்டுமென்று கூறினால், அதே அளவுகோலில் நீதிபதி பதவி வகிப்பவர்களையும் அளக்க வேண்டியிருக்கும்’ என்று பூடகமாக ஒரு மிரட்டல் விட்டதை ஏதோ அவர் கூறியது காதிலேயே விழவில்லை என்பது போல உச்ச நீதிமன்றம் நடிப்பது ஏன்? என்பதை வியந்திருக்கலாம்.


’மிஸ்டர் அட்டார்னி ஜெனரல், நாங்கள் அப்பழுக்கில்லாதவர்கள். வேண்டுமென்றால், எங்களை சோதித்துப் பாருங்கள்’ என்று எந்த நீதிபதியிடமிருந்தும் குரல் வரவில்லையே’ என்று வருத்தப்பட்டிருக்கலாம்.


இந்த கிருஷ்ண ஐயர் வேறு, சமய சந்தர்ப்பம் தெரியாமல், ’அட்டார்னி ஜெனரல் எப்படி அப்படி சொல்லப் போயிற்று, விடாதே அவரை ஒன்றில் இரண்டு பார்த்து விடு’ ஹிந்துவில் கட்டுரை எழுதி உசுப்பி விட்டுக் கொண்டிருக்கிறார். அவரிடமாவது ‘ஐயா நாங்க கைப்புள்ள... எவ்வளவு நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது’ என்று கொஞ்சம் அழுதிருக்கலாம்...


இதையெல்லாம், செய்திருந்தா அது ஹீரோயிசம்!


மதுரை
02/12/10

2 comments:

Prabhu Rajadurai said...

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மீதான, கட்ஜூவின் அதிரடி!

http://indiankanoon.org/doc/878921/

உயர்நீதிமன்ற நீதிபதி மட்டுமல்ல, எந்த ஒரு நீதிபதியையும் ஏன், எப்படி ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டது என்று விளக்கம் கூற கேட்க முடியாமா என்பது கேள்விக்குறி...

Rex Arul said...

Uncle - Thanks for your riposte. This is cool. An intellectual debate is hard to resist. You are bringing some very important points that need some calm time to lucubrate and respond. Keep them coming.

Cheers,
Rex