11.5.11

இனி (Hereafter 2010)ஹியராஃப்டர் (Hereafter). கிளிண்ட் ஈஸ்ட்வுட் இயக்கத்தில் மாட் டாமன் நடித்து வெளிவந்திருக்கும் ஹாலிவுட் திரைப்படம். NDE என்று அழைக்கப்படும் மரணத்தின் வாயிலை எட்டிப்பார்த்து வருபவர்கள் தங்களுக்கு நிகழ்ந்ததாக கூறும் அனுபவங்கள் மற்றும் இறந்தவர்களுடன் உரையாடும் சக்தி படைத்தவர்களைப் (Psychic) பற்றிய படம். உலகின் வெவ்வேறு மூலையில் உள்ள மூன்று காதாபாத்திரங்கள் எப்படி உச்சகாட்சியில் (Climax) ஒருவரையொருவர் சந்திக்க நேர்வதன் மூலம் தங்கள் வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்ந்து கொள்கிறார்கள் என்பதுதான் கதை!

மற்றபடி சுவராசியமான எவ்விதமான திருப்பமோ, காட்சிகளோ இல்லை. உச்சகாட்சி கூட சாதாரணமாக் முடிந்து விடுகிறது. என்றாலும், இறுதிவரை இனி சுவராசியமாக ஏதோ நடக்கப் போகிறது என்ற ரீதியில் படத்தோடு நம்மை ஒன்ற வைத்ததில் இயக்குஞரின் திறமை வெளிப்படுகிறது.

இந்தப் படத்தினைப் பற்றி நான் எழுத முக்கிய காரணம், அதன் முதல் ஐந்து நிமிடங்களில் வரும் சுனாமி காட்சி!

எப்படித்தான் எடுத்தார்களோ என்று நம்பவே முடியாத அளவில் மினியேச்சரும், கிராபிக்ஸும் இணைந்து பிரமாண்டமாக அத்தனை தத்ரூபமாக் அமைந்துள்ளது. இந்தப் படத்தில் வருவது, நமது இந்தியாவையும் தாக்கிய பழைய சுனாமி. சமீபத்தில் ஜப்பானை தாக்கிய சுனாமி பற்றிய படத்தொகுப்பினை இணையத்தில் பார்த்தேன். நிஜத்திற்கும் நிழலுக்கும் வித்தியாசமே இல்லை. நமது ரசிகர்கள் பலர், ‘அந்தப் பாடல் காட்சிக்கே காசு செத்துதுஎன்று பேசக் கேட்டிருக்கிறேன். படத்தின் சுனாமி காட்சி முடிந்ததும் எனக்கு அப்படித்தான் தோன்றியது.

***

ஆனால் ஹாலிவுட்டுக்கு முன்னரே, நமது கமலஹாசன் சுனாமியை காட்சிப்படுத்த நினைத்த துணிச்சலை பாராட்ட வேண்டும். ஏதோ, அவரது செலவுக்குள் ஓரளவு எடுத்திருந்தார். மிகவும் மெனக்கெட்டிருப்பார் என்றாலும், அந்தக் காட்சி அவர் நினைத்த அளவிற்கு விமர்ச்னங்களில் சிலாகிக்கப்படவில்லை என்று நினைக்கிறேன்.

எப்படியோ, வழக்கமாக ஹாலிவுட்டை நமது திரைப்படத்துறையினர் தொடரும் பொழுது, கமலஹாசன் முந்திக் கொண்டது ஆறுதலளிக்கும் விடயம்.

பிரமாண்டங்களை, அதற்க்கான வகையில் செலவளிக்க வசதியுள்ள ஹாலிவுட்காரர்களிடம் தள்ளிவிட்டு விட்டு நம்மவர்கள் ‘அழகர்சாமியின் குதிரை’ என்று எடுப்பது நலம்.

***

ஆனாலும் சில சமயங்களில் நம்மவர்கள் பிரமாண்டத்தில் ஹாலிவுட்டையும் மிஞ்சி விடுவதுண்டு. எந்திரனில்!

ஹாலிவுட் படங்களுக்கு இணையான தொழில்நுட்பம் என்று எந்திரன் விளம்பரப்படுத்தப்பட்ட பொழுது, ‘300 கோடியில் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக படமெடுக்க முடியுமென்றால், அந்த முட்டாள்கள் ஏன் 3000 கோடி செலவளிக்க வேண்டும்என்று நினைத்தேன்.

ஆனால் ‘The Yes Men Fix the World (2009)என்ற படத்தினைப் பார்த்த பொழுது, ‘அடடா இத்தனை அமெச்சூராக உள்ள ஒரு காட்சி, எந்திரனில் எவ்வளவு பிரமாண்டமாக எடுத்துள்ளனர்என்று நினைத்தேன். இந்த ஆமாம் சாமி எனப்படுவோர் பெரிய தொழில் நிறுவனஙகள் எப்படி சந்தைப் பொருளாதாரம் என்ற பெயரில் மக்களை சுரண்டுகின்றன என்பதை வெளிப்படுத்துகிறோம் என்ற பெயரில் அடிக்கும் கூத்துகளின் தொகுப்புதான் இந்தப் படம்.கூத்துகள் என்றால் சாதாரண கூத்துகள் என்று நினைத்து விடாதீர்கள். ’டெள கெமிக்கல்ஸ் பேச்சாளர்’ (Spokesperson for the Dow Chemicals) என்று பிபிசி (BBC) யே ஏமாற்றி போபால் விபத்து வருடாந்திர நினைவு தினம் ஒன்றில், பிபிசியின் சர்வதேச செய்தி சானலில் தோன்றி, ’டெள கெமிக்கல்ஸ் போபால் விசவாயு விபத்துக்கு பொறுப்பேற்பதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் போதிய நஷ்ட ஈடு வழங்க முடிவெடுதுள்ளதாக’ அறிவித்து உலகை உலுக்கிய கூத்து! இந்தக் கூத்தினை கண்டுபிடித்து டெள கெமிக்கலஸ் விளக்கமளிக்கும் சில மணி நேரத்திற்குள் டெள கெமிக்கல்ஸின் பங்குகள் 2 பில்லியன் டாலர்கள் வீழ்ச்சியடைந்து விட்டது. ’பிபிசி’ யின் நூற்றாண்டு கால சரித்திரத்தில் வேறு யாரிடமும் இந்த அளவிற்கு ஏமாந்திருக்காது...

சரி, அது என்ன இதை விட எந்திரனில் சிறப்பாக எடுத்திருந்தார்கள்?அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹாலிபர்ட்டன் நிறுவன நிர்வாகிகள் போல, அந்த நிறுவனம் சர்வைவர் பால் (Survivor Ball) என்ற பலூன் போன்ற ஒன்றினை தயாரித்திருப்பதாகவும், தட்பவெப்ப நிலை மாறுதல்களினால் (Climatic Change) பேரழிவுகள் ஏற்ப்படும் பொழுது  அதனை அணிந்து கொண்டால், தப்பித்துவிடலாம் என்றும் ஒரு கண்காட்சியில் செய்முறை விளக்கம் காண்பித்து, ஏமாற்றியது அடுத்த கூத்து.

அதோடு விடாமல், எப்படி பெரிய இயற்கைப் பேரழிவுக்ள் ஏற்ப்படும் பொழுது எப்படி அந்தப் பந்தினை அணிந்த மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் தங்களை இணைத்துக் கொண்டு ராட்சத மனித உருவம் போல மாறி எங்கும் உலா வர முடியும், ஏன் நடனமாடக் கூட முடியும் என்று காட்டுவதற்கு ஒரு கிராபிக்ஸ் விளக்கப்படம் வேறு!

இப்பொழுது புரிந்திருக்குமே, எனக்கு அந்த விளக்கப்படத்தினைப் பார்த்த பொழுது, எந்திரனின் உச்சகாட்சி நினைவுக்கு வந்திருக்கும் என்பது.

‘ஆனால், பிரமாண்டமான பன்னாட்டு நிறுவனங்களின் மறுபக்கத்தை புரட்டிக் காண்பிக்கும் கூத்துகள், அதுவும் போபாலில் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்காக இந்த ‘ஆமாம் சாமிகள் எடுத்த ரிஸ்க்கான முயற்சிக்காகவாவது, நம்மவர்கள் இதனைப் பார்க்க வேண்டும்

தரவிறக்கம் செய்யவும் தயங்க வேண்டாம். ஏனெனில் அமெரிக்க வர்த்தக மையம் (American Chamber of Commerce) இவர்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளதால், இணையம் மூலம் படத்தினை அனைவருக்கும் கொண்டு செல்லுமாறு அவர்களே வேண்டுகின்றனர்.

நீங்களும் அவசியம் பாருங்கள்....

மதுரை
12/05/11

No comments: