சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு் நீதிபதி இருந்தார். குற்றவியல் வழக்குகளில் பழுத்த அனுபவமும், சிறந்த அறிவும் உடையவர். வாதப்பிரதிவாதங்கள் முடிந்தவுடனே, அதே வேகத்தில் தீர்ப்பினை டிக்டேட் செய்ய ஆரம்பித்து விடுவார். அனால், தீர்ப்பினை முடித்த கையோடு ‘God is Great’ என்றபடி கடவுள் மீது பாரத்தை போடுவார்.
‘இதெல்லாம் நான் சொல்லவில்லை. மேலேயிருந்து வருது’ என்று மேலே கையை காண்பித்தபடி வழக்குரைஞர்களுக்கு நினைவூட்டியபடி இருப்பார்.
ஒருநாள் எனது சீனியர், ‘பேசாம இனிமே இவர் சம்பளத்தை லார்ட் முருகனுக்கே அனுப்ப சொல்ல வேண்டும். அவர்தானே தீர்ப்பு சொல்றார்’ என்றார்.
எனது சீனியர் கூறுவதுபடி பார்த்தால், பல நீதிபதிகளின் சம்பளத்தையும் மேலேதான் அனுப்ப வேண்டும் என நினைக்கிறேன். போன வாரம் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.என்.பகவதி ‘என்னுடைய ஒவ்வொரு தீர்ப்பினையும் எனது கடவுள் சாய்பாபாதான் எழுதினார்’ என்று டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
பி.என்.பகவதி பொதுநல வழக்கு சம்பந்தமான அவரது பல்வேறு புரட்சிகரமான தீர்ப்புகளுக்காக கொண்டாடப்பட்டாலும், பல சட்ட நிபுணர்களுக்கு பகவதி என்றவுடனே ஏ.டி.எம்.ஜபல்பூர் வழக்குதான் நினைவுக்கு வரும்.
***
1975ம் ஆண்டு. பிரதமர் இந்திரா காந்தி, அவசரநிலை பிரகடனம் செய்தார். தொடர்ந்து மிசா ( Maintenance of Internal Security Act) என்ற சட்டத்தின் மூலம் தகுந்த காரணமேயில்லாமல் பல்வேறு அரசியல் தலைவர்கள், பத்திரிக்கையாளர்களை, சமூக ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். மிசா சட்டத்தின் கீழ் பிணை (Bail) கிடையாது என்பதால், அவர்களை விடுவிக்க நாட்டின் பல்வேறு உயர்நீதிமன்றங்களில் ஆட்கொணர்வு மனு (Writ of Habeas Corpus) தாக்கல் செய்யப்பட்டது.
நாட்டின் குடிமக்களுக்கு, அவர்களது சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 21ல் கூறப்பட்ட வாழ்வதற்கான அடிப்படை உரிமை (Fundamental Right to Life and Liberty) என்ற உரிமையானது அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டதால் ரத்து செய்யப்பட்டுள்ளதால், கைது செய்யப்பட்டவர்களை, அதற்கான காரணமேயில்லை என்றால் கூட விடுவிக்க நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை’ என்பதுதான் அரசின் பதில்!
தெளிவாக கூற வேண்டுமென்றால், கேரளாவில் ராஜன் என்ற கல்லூரி மாணவரை காவலர்கள் பிடித்துச் சென்று, சித்திரவதைப் படுத்தி கொன்று போட்டனர் ஏன் கொலை செய்தீர்கள் என்று கேட்க இயலாது. ஏனெனில், பின்னர் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்த பொழுது, ‘ஒருவரின் உயிரை பறித்தால் கூடவா, நீதிமன்றம் கேள்வி கேட்க முடியாது?’ என்ற நீதிமன்றத்தின் கேள்விக்கு அரசு மூத்த வழக்குரைஞர் அளித்த பதில், ‘சட்டத்திற்கு புறம்பாக ஒருவரின் உயிரைப் பறித்தால் கூட நீதிமன்றங்களால் எதுவும் செய்ய இயலாது’
ஆனால், உயர்நீதிமன்றங்கள் அரசின் வாதத்தினை ஏற்கவில்லை. அவசரநிலை பிரகடனத்தின் பொழுதும் தகுந்த காரணமில்லாமல் கைது செய்யப்படும் நபரை, விடுவிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டு என்று தீர்ப்பு கூறப்பட்டது. அந்த தீர்ப்புகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மேல்முறையீட்டில் உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய மன்றம் கூறிய தீர்ப்புதான், ’இந்திய நீதித்துறை வரலாற்றின் அவமானகரமான பகுதி’ என்று வர்ணிக்கப்படும் (Addl.District Magistrate Vs Shivakant Shukla) ஏடிம் ஜபல்பூர் தீர்ப்பு!
பி.என்.பகவதி உட்பட நான்கு நீதிபதிகள், ‘அவசரநிலை பிரகடனத்தின் பொழுது காரணமின்றி கைது செய்யப்படுவதற்கு எதிராக எவ்வித உரிமையும் இல்லை’ என்று கூறி உயர்நீதிமன்ற தீர்ப்புகளை நீக்கம் செய்தனர்.
பின்னர் ஜனதா அரசு அமைந்த பின்னர், அவசரநிலை பிரகடனத்தின் பொழுதும், பிரிவு 21ல் கூறப்பட்ட அடிப்படை உரிமை ரத்து செய்யப்படாது என்ற சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டு உச்சநீதிமன்றத்தால், தனிமனித சுதந்திரத்திற்கு வந்த ஆபத்து நீக்கப்பட்டது.
பி.என்.பகவதியிடம் பல்வேறு கேள்விகளை கேட்ட டைம்ஸ் ஆப் இந்தியா, ‘வரலாற்றின் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட இந்த தீர்ப்பினையும் பாபாதான் எழுதினாரா’ என்று கேட்கவில்லை.
மதுரை
10/05/11
5 comments:
கலக்குறீங்க சார்!
//உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.என்.பகவதி ‘என்னுடைய ஒவ்வொரு தீர்ப்பினையும் எனது கடவுள் சாய்பாபாதான் எழுதினார்’ என்று டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.//
எல்லாம் மேலே இருக்கிறவனுக்குத் தெரியும்! நாமெல்லோரும் அவன் கையில் உள்ள பேனா தான்!
//பி.என்.பகவதியிடம் பல்வேறு கேள்விகளை கேட்ட டைம்ஸ் ஆப் இந்தியா, ‘வரலாற்றின் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட இந்த தீர்ப்பினையும் பாபாதான் எழுதினாரா’ என்று கேட்கவில்லை.//
எப்படிக் கேட்பாங்க கார்ப்....ரேட் சாமியார்களை வளர்ப்பதே அவர்கள் தானே
கடவுள் நம்பிக்கை என்னமோ தீவிரவாதம் போலவும், தீண்டாமை போலவும் எழுதி நீதிபதிகளை நக்கலடிக்கும் நீங்கள் பகுத்தறிவின் பாசறை என்று நினைக்கின்றீர்களா? சங்கம் ஹோட்டலில் பீர் அடித்துக்கொண்டு படு வேகத்தில் விவேகமில்லாமல் காரை விரட்டும் செயலை விட கடவுள் பக்தி உள்ள நீதிபதி மோசம் இல்லை என்று தெரிந்து கொள்ளவும். அதே போல ஊருக்கே நியாயம் சொல்லும் பேத்தலை சற்றே கண்ணாடி முன்னாடி நின்று வாசித்து பார்த்து நீங்கள் எழுதினால், அதனை அனுபவத்துக்காக நாங்கள் படித்து தொலைக்கலாம். self righteous ஆக சமீப காலமாக தாங்கள் எழுதும் பிளாக் (blog) பிளேகோ (plague) அல்லது பல்லை சுற்றி இருக்கும் பிளாக்கோ (plaque) என்று நினைக்கத் தோன்றுகிறது. pls stop attacking judges esp. those who are god-fearing. u don't get VIP status by attacking god-fearng judges. some of these judges rule with moral conscience and thank god future judges at school of excellence here are planning to come up as god fearing judges of future.
தீவிரவாதத்தை உருவாகக்கூடிய அதி தீவிரவாதம் !
Post a Comment