Showing posts with label saibaba. Show all posts
Showing posts with label saibaba. Show all posts

10.5.11

சாய்பாபா எழுதிய ஹேபியஸ் கார்பஸ் தீர்ப்பு!

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு் நீதிபதி இருந்தார். குற்றவியல் வழக்குகளில் பழுத்த அனுபவமும், சிறந்த அறிவும் உடையவர். வாதப்பிரதிவாதங்கள் முடிந்தவுடனே, அதே வேகத்தில் தீர்ப்பினை டிக்டேட் செய்ய ஆரம்பித்து விடுவார். அனால், தீர்ப்பினை முடித்த கையோடு ‘God is Great’ என்றபடி கடவுள் மீது பாரத்தை போடுவார்.

‘இதெல்லாம் நான் சொல்லவில்லை. மேலேயிருந்து வருது என்று மேலே கையை காண்பித்தபடி வழக்குரைஞர்களுக்கு நினைவூட்டியபடி இருப்பார்.

ஒருநாள் எனது சீனியர், ‘பேசாம இனிமே இவர் சம்பளத்தை லார்ட் முருகனுக்கே அனுப்ப சொல்ல வேண்டும். அவர்தானே தீர்ப்பு சொல்றார்என்றார்.

எனது சீனியர் கூறுவதுபடி பார்த்தால், பல நீதிபதிகளின் சம்பளத்தையும் மேலேதான் அனுப்ப வேண்டும் என நினைக்கிறேன். போன வாரம் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.என்.பகவதி ‘என்னுடைய ஒவ்வொரு தீர்ப்பினையும் எனது கடவுள் சாய்பாபாதான் எழுதினார்என்று டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

பி.என்.பகவதி பொதுநல வழக்கு சம்பந்தமான அவரது பல்வேறு புரட்சிகரமான தீர்ப்புகளுக்காக கொண்டாடப்பட்டாலும், பல சட்ட நிபுணர்களுக்கு பகவதி என்றவுடனே ஏ.டி.எம்.ஜபல்பூர் வழக்குதான் நினைவுக்கு வரும்.

***

1975ம் ஆண்டு. பிரதமர் இந்திரா காந்தி,  அவசரநிலை பிரகடனம் செய்தார். தொடர்ந்து மிசா ( Maintenance of Internal Security Act) என்ற சட்டத்தின் மூலம் தகுந்த காரணமேயில்லாமல் பல்வேறு அரசியல் தலைவர்கள், பத்திரிக்கையாளர்களை, சமூக ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். மிசா சட்டத்தின் கீழ் பிணை (Bail) கிடையாது என்பதால், அவர்களை விடுவிக்க நாட்டின் பல்வேறு உயர்நீதிமன்றங்களில் ஆட்கொணர்வு மனு (Writ of Habeas Corpus) தாக்கல் செய்யப்பட்டது.
நாட்டின் குடிமக்களுக்கு, அவர்களது சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 21ல் கூறப்பட்ட வாழ்வதற்கான அடிப்படை உரிமை (Fundamental Right to Life and Liberty) என்ற உரிமையானது அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டதால் ரத்து செய்யப்பட்டுள்ளதால், கைது செய்யப்பட்டவர்களை, அதற்கான காரணமேயில்லை என்றால் கூட விடுவிக்க நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லைஎன்பதுதான் அரசின் பதில்!
தெளிவாக கூற வேண்டுமென்றால், கேரளாவில் ராஜன் என்ற கல்லூரி மாணவரை காவலர்கள் பிடித்துச் சென்று, சித்திரவதைப் படுத்தி கொன்று போட்டனர் ஏன் கொலை செய்தீர்கள் என்று கேட்க இயலாது. ஏனெனில், பின்னர் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்த பொழுது, ‘ஒருவரின் உயிரை பறித்தால் கூடவா, நீதிமன்றம் கேள்வி கேட்க முடியாது?’ என்ற நீதிமன்றத்தின் கேள்விக்கு அரசு மூத்த வழக்குரைஞர் அளித்த பதில், ‘சட்டத்திற்கு புறம்பாக ஒருவரின் உயிரைப் பறித்தால் கூட நீதிமன்றங்களால் எதுவும் செய்ய இயலாது
ஆனால், உயர்நீதிமன்றங்கள் அரசின் வாதத்தினை ஏற்கவில்லை. அவசரநிலை பிரகடனத்தின் பொழுதும் தகுந்த காரணமில்லாமல் கைது செய்யப்படும் நபரை, விடுவிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டு என்று தீர்ப்பு கூறப்பட்டது. அந்த தீர்ப்புகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மேல்முறையீட்டில் உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய மன்றம் கூறிய தீர்ப்புதான், ’இந்திய நீதித்துறை வரலாற்றின் அவமானகரமான பகுதி’ என்று வர்ணிக்கப்படும் (Addl.District Magistrate Vs Shivakant Shukla) ஏடிம் ஜபல்பூர் தீர்ப்பு!
பி.என்.பகவதி உட்பட நான்கு நீதிபதிகள், ‘அவசரநிலை பிரகடனத்தின் பொழுது காரணமின்றி கைது செய்யப்படுவதற்கு எதிராக எவ்வித உரிமையும் இல்லைஎன்று கூறி உயர்நீதிமன்ற தீர்ப்புகளை நீக்கம் செய்தனர்.
பின்னர் ஜனதா அரசு அமைந்த பின்னர், அவசரநிலை பிரகடனத்தின் பொழுதும், பிரிவு 21ல் கூறப்பட்ட அடிப்படை உரிமை ரத்து செய்யப்படாது என்ற சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டு உச்சநீதிமன்றத்தால், தனிமனித சுதந்திரத்திற்கு வந்த ஆபத்து நீக்கப்பட்டது.
பி.என்.பகவதியிடம் பல்வேறு கேள்விகளை கேட்ட டைம்ஸ் ஆப் இந்தியா, ‘வரலாற்றின் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட இந்த தீர்ப்பினையும் பாபாதான் எழுதினாரா’ என்று கேட்கவில்லை.

மதுரை
10/05/11
ஏடிஎம் ஜபல்பூர் வழக்கினை விசாரித்த ஐந்து நீதிபதிகளில், ஹெச் ஆர் கன்னா என்ற ஒரு நீதிபதி மட்டும் அரசுக்கு எதிரான தீர்ப்பினை எழுதினார். அதற்கான் பலன் உடனடியாக அவருக்கு கிடைத்தது. ஆம், தலைமை நீதிபதி ரே பணிமூப்பு அடைந்ததும் சீனியரான கன்னா புறம்தள்ளப்பட்டு அரசுக்கு சாதகமாக தீர்ப்பு எழுதிய எம் ஹெச் பெக் என்பவர், ஜூனியராக இருப்பினும் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கன்னா உடனடியாக நீதிபதி பதவியை ராஜினாமா செய்தர். பெக்கை தொடர்ந்து வழக்கில் அரசுக்கு சாதகமாக தீர்ப்பு எழுதிய சந்திரசூட், பகவதி ஆகியோரும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பு ஏற்கும் வாய்ப்பு கிடைத்தது.

29.4.11

சாய்பாபா (எனக்கு) நிகழ்த்திய கடைசி அதிசயம்!

நான் கனவில் கூட நினைத்ததில்லை, சாயிபாபா தனது கடைசி அதிசயத்தை எனக்காக நிகழ்த்துவார் என்று!

எனக்கு ஒரு வயதான கட்சிக்காரர் உண்டு. மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அவரது வழக்குகளை நடத்தித்தர வேண்டும் என்று, வேறு ஒரு வழக்குரைஞரால் என்னிடம் அனுப்பி வைக்கப்பட்டார். ‘ஐயா, நான் மாவட்ட நீதிமன்றத்திற்கு முக்கியமான வழக்குகளை நடத்துவதற்கு மட்டுமே செல்கிறேன், எனவே நீங்கள் வேறு வக்கீல் வைத்துக் கொள்ளுங்கள்.’ என்றாலும் விடவில்லை என்பதால், ‘மற்ற வாய்தாக்களுக்கெல்லாம் என்னுடைய ஜூனியர்தான் வருவார், வழக்கு விசாரணையின் பொழுது மட்டுமே நான் வர இயலும்’ என்று கண்டிப்புடன் கூறி வழக்கினை எடுத்துக் கொண்டேன்.

ஆயினும் ஒவ்வொரு முறை வழக்கு வாய்தா போடப்படும் பொழுதும், அடுத்தமுறை நான் எப்படியும் நீதிமன்றத்திற்கு வர வேண்டும் என்று மன்றாடுவார். அவரை ஒவ்வொரு முறையும் சமாளிப்பது கடினம் என்றாலும், கெஞ்சல் மிஞ்சினால் கண்டிப்பு என்று அவரை தவிர்த்து வந்தேன். இறுதியாக கடந்த வாரம் வந்த வாய்தாவுக்கு நான் வருவேன் என்று சொல்லி வைத்திருந்தேன்

அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் அவரிடமிருந்து தொலைபேசி! ‘நான் புட்டபர்த்திக்கு செல்கிறேன். பாபாவின் மறைவைக் கேட்ட பின்னர் இங்கு நிம்மதியாக இருக்க முடியவில்லை.’ என்றார். ‘அப்பாடா’ என்றிருந்தது எனக்கு.

இரண்டு நாட்கள் கழித்து, அவர் மதுரையில் இல்லை என்பதால், தைரியமாக ஜூனியரை அனுப்பி வைத்தேன். அடுத்த நாள் அவரிடம் இருந்து தொலைபேசி, ‘சாயி சரணம். நல்ல தரிசனம் பார்த்தேன்...அப்புறம் நேற்று நீங்களே வாய்தாவுக்கு போனதாக கேள்விப்பட்டேன். ரொம்ப சந்தோஷம் சார்!’

‘நாம் எப்போ கோர்ட்டுக்கு போனோம்...’ என்று ஒரு கணம் வியந்தாலும் அடுத்த கணமே, சமாளித்துக் கொண்டு ‘ஆமா, ஆமா’ என்று வேகமாக ஆமோதித்து வைத்தேன்.

உடனடியாக எனது ஜூனியரைக் கூப்பிட்டு, ‘நீதான் அவரிடம் நானே கோர்ட்டுக்கு போனதாக கூறினாயா?’ என்றதற்கு ‘இல்லையே சார், நான் அவரிடம் இது வரை பேசவேயில்லையே’ என்றார். ‘பின்ன யார் அப்படி சொல்லியிருப்பார்கள்?’

ஒருவேளை சாயிபாபாவாக இருக்குமோ?.

இருந்தாலும் இருக்கலாம். ஏனெனில் நானறிந்த வரையில் வாழ்க்கையில் அவருக்குள்ள ஒரே கவலை, அவரது வக்கீல் கோர்ட்டுக்கு வர வேண்டும் என்பதுதான். அதைத்தான் அவர் புட்டபர்த்தியில் வேண்டியிருப்பார். அதனை கொடுப்பதற்காக சாயிதான் இந்த அதிசயத்தை நிகழ்த்தியிருக்க வேண்டும்!

எப்படியோ, சாய்பாபாவுக்கு நன்றி!

மதுரை
29/04/11

17.4.08

சாய் பாபாவும் இராமரின் மோதிரமும்!

கடந்த மாதம் ஏதோவொரு தொலைக்காட்சியில், புட்டபர்த்தி சத்திய சாய்பாபாவை பற்றிய அவரது நிறுவனம் தயாரித்த ஆவணபடம் ஒன்றினை பார்த்தேன். இறுதியில் பொது நிகழ்ச்சியில், தனது வாயிலிருந்து பெரிய பச்சைக்கல் பதித்த மோதிரமொன்றினை எடுத்துக் காட்டி, ‘திருமணத்தின் பொழுது ராமர் சீதைக்கு அணிவித்த மோதிரம்’ என்று தெரிவித்தார். கூட்டம் வியப்பிலாழ மோதிரத்தினை அவரது முன்னே வைத்தார்.

ஆவணப்படத்தில் வர்ணனை வழங்கியவர், அது பின்னர் மறைந்துவிடும் என்று கூற தொலைக்காட்சித் திரை முழுவதுமாக மங்க மோதிரம் மறைந்து போனது!

இவ்வாறாக சாய்பாபா நகைகளை கொணர்வது பற்றிய விபரங்கள் அவர்களது வலைத்தளத்திலும் கண்ணுற்றேன்.

-oOo-

ராமர் சீதைக்கு அணிவித்த மோதிரம் என்றால் அரிய பழம் பொருள் ஆயிற்றே. அரசுக்கு தெரிவிக்காமல் அதனை வைத்திருக்கலாமா என்ற இயல்பான சந்தேகம் எழுந்தது.

1958ம் வருடம் இயற்றப்பட்ட ‘The Ancient Monument and Archeological Sites and Remains Act’ என்ற புராதான சின்னங்களைப் பற்றிய சட்டத்தில் பழம்பொருட்கள் பற்றியும் கூறப்படுகிறது. ராமர் சீதைக்கு அணிவித்த மோதிரமென்றால், இந்த சட்டப்பிரிவில் பழம்பொருள் (antiquity) என்று விளக்கப்படும் பதத்திற்குள் வரும். ஆனால் இந்தச் சட்டப்பிரிவுகளின்படி, மத்திய அரசாங்கம் ஏதாவதொரு பழம்பொருளானது ஒரிடத்திலிந்து மற்றொரு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்படக்கூடாது எனில் அவ்வாறு அறிவிக்கலாம். அவ்வாறான உத்தரவு மீறப்பட்டாலே அது தவறாகும்.

எனவே சாய் பாபா ராமரின் மோதிரத்தினை வைத்திருப்பதில் ஏதும் தவறில்லை!

-oOo-

பின்னர் 1972ம் ஆண்டில், ‘The Antiquities and Art Treasures Act’ என்று பழம்பொருட்கள் மற்றும் கலைச்செல்வங்களுக்காக தனியே ஒரு சட்டமியற்றப்பட்டது.

இந்த சட்டப்பிரிவுகளின்படி பழம்பொருட்களை ஏற்றுமதி செய்தல், விற்றல் ஆகியவற்றில் பல கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டது. முக்கியமாக பழம்பொருட்களை வைத்திருப்பவர்கள் அவற்றை மத்திய அரசிடம் தெரிவித்து அதனைப் பற்றிய விபரங்களை பதிய (register) வேண்டும்.

ஆனால் மத்திய அரசு எந்த எந்த வகையான பழம்பொருட்களை பதிய வேண்டும் என்று அறிவிக்கிறதோ அவற்றை பதிந்தால் போதுமானது.

ராமர் சீதைக்கு அணிவித்தது, தங்க நகை/ ஆபரணம். இதனை பதிவு செய்ய வேண்டுமா என்று பார்த்தால் மத்திய அரசு இதற்காக 1976ம் ஆண்டு GSR 280(E) என்ற அறிவிக்கையினை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் ‘வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகைகள்’ பதிவு செய்யப்பட வேண்டிய பழம்பொருட்கள் பட்டியலில் வருகிறது.

ஆக, சாய்பாபா இந்தச் சட்டத்தின்படி தன்னிடம் உள்ள பழம்பொருளான நகை பற்றிய விபரத்தினை மத்திய அரசிடம் பதியாமல் விடுவது தவறுதான்.

ஆனால், 1980ம் வருடம் மத்திய அரசு S.0. 397(E) என்ற அறிக்கை மூலம் பதிவு செய்ய வேண்டிய பழம்பொருட்களின் திருத்தப்பட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் நகைகள் விடப்பட்டுள்ளது. எனவே சாய் பாபா தான் எடுக்கும் நகைகளை பதிய வேண்டியதில்லை.

எனவே 1976ம் ஆண்டிலிருந்து 1980ம் ஆண்டு வரைதான் இந்தப் பிரச்சினை. பின்னர் இல்லை. சாய்பாபா நகைகளை வைத்திருப்பதில் தவறு ஏதும் இல்லை!

-oOo-

இந்த வெட்டி ஆராய்ச்சிக்காக வலையினை மேய்கையில், இதை விட வெட்டி ஆராய்ச்சி செய்து ‘சாய்பாபா’ பக்தர்களுக்கு அளிக்கும் தங்க நகைகள் மூலம் தங்க கட்டுப்பாடு சட்டத்தினை மீறுகிறார் என்று பல ஆண்டுகளுக்கு முன்னரே அவர் மீது ஒருவர் வழக்கு தொடர்ந்த விபரம் கிடைத்தது

-oOo-

ஞாநி பிரச்சினை விடாது போலிருக்கிறது. சுடுவது சுகம் என்ற வலைப்பதிவில் காப்பிரைட் பற்றிக் கவலைப்படாமல் ஞாநியின் கட்டுரையொன்றினை பதிந்திருக்கிறார்கள். அதில் ஞாநி இவ்வாறு ஆரம்பிக்கிறார்

தனிநாடு கோருவது சட்ட விரோதம என்ற சட்டத்தை மத்திய அரசு 1963ல் கொண்டு வந்ததும, அதுவரை தன் திராவிடநாடு கோரி வந்த திராவிட முன்னேற்றக் கழகம் பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டது

நானறிந்த வரையில் அவ்வாறு 1963ம் வருடம் சட்டம் ஏதும் இயற்றப்படவில்லை!

இந்தியா - சீனா போர் சமயத்தில் நாடு முழுவதும் எழும்பிய தேசபக்தி அலையிலும், இம்மாதிரியான கொள்கைகளை கொண்டிருக்கும் கட்சிகள் தடை செய்யப்படலாம் என்ற மறைமுகமான மிரட்டல்களாலும்தான் திமுக பிரிவினை கோரிக்கையினை கைவிட்டது என்பது எனது அனுமானம்.

அவ்விதம் ஏதும் சட்டம் இயற்றப்பட்டு, யாரேனும் ‘பாபா’ உட்பட (சாய்பாபா இல்லை நம்ம பாபா) தெரிவித்தால் நன்றியுடையவனாக இருப்பேன்.

-oOo-

இந்திய நீதிமன்றத் தீர்ப்புகளை பற்றி சட்டபூர்வமாக அலசும் ஒரு ஆங்கிலப்பதிவில் சுட்டியினை பத்ரி தந்துள்ளார். மணற்கேணியினைப் போல இல்லாமல் மேலும் ஆழமாக சட்டத்தினை ஆழமாக படிக்க விரும்புவர்களுக்கு உதவும்.
http://lawandotherthings.blogspot.com/

மதுரை
18.04.08