தமிழக தலைமைச் செயலகம் மீண்டும் கோட்டைக்கு மாற்றப்படுவதை எதிர்த்தும் ஒரு பொதுநல வழக்கு!
புதிதாக மக்களின் ஏகோபித்த ஆதரவோடு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரின் விருப்பத்திற்கு மாறாக இறுதி நீதிமன்ற ஆணை எதுவும் வரப்போவதில்லை. தலைமைச் செயலகம் எங்கு செயல்பட வேண்டும் என்பது எல்லாம், நிர்வாகம் (Executive) எடுக்க வேண்டிய ஒரு முடிவு. பொதுமக்களின் அடிப்படை உரிமை பாதிக்கப்படாத வரையில் நீதிமன்றங்கள் அந்த முடிவில் தலையிடாது.
எனவே இந்த வழக்கும் அரசுத் தரப்பில் விளக்கம் தரப்பட்டவுடன் முடித்து வைக்கப்படும். உயர்நீதிமன்றம் தற்பொழுது கேட்டுள்ள விளக்கமும், ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்காத சூழ்நிலையில், யாருடைய உத்தரவின் பெயரில் தலைமைச் செயலகம் மாற்றப்பட்டது எனபது குறித்துதான் என நினைக்கிறேன். முதல்வர் தற்பொழுது ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவை ஏற்றுக் கொண்டு (Ratify) புதிதாக ஒரு அரசாணை பிற்ப்பித்து விட்டால் பிரச்னை தீர்ந்துவிடும்.
***
தலைமைச் செயலகத்தை மாற்றுவதற்கு புதிய முதல்வருக்கு அதிகாரம் இருப்பது போலவே, தமிழக அரசின் தலைமைச் செயலகத்திற்காக எப்படிப்பட்ட வடிவமைப்பை தேர்ந்தெடுப்பது என்ற அதிகாரம் முன்னாள் முதல்வருக்கும் இருந்தது.
அழகு என்பது பார்ப்பவரின் கண்களில் உள்ளது. சிலருக்கு ஒரு வடிவம் பிடிக்கவில்லை என்பதற்காக, பெரும்பான்மை தனது விருப்பத்தை மாற்றிக் கொள்ள வேண்டுமென்பதல்ல. அந்த வடிவத்தை விமர்சிக்க யாருக்கும் உரிமை உள்ளது. ஆனால், நிராகரிக்க உரிமை இல்லை!
ஆள்பவர்களின் ரசனைக்கேற்ப அமையும் கட்டிடங்கள், ஆண்டவர்களின் மனப்போக்கை விளக்கும் கண்ணாடிகள். நமது சந்ததிகள், இவற்றின் மீதான தீர்ப்பினை எழுதட்டும்.
***
ஆனால், தமிழ்பதிவுலகத்திலோ, (பழைய) தலைமைச் செயலகம் எண்ணைத் தொட்டி என கிண்டலடிக்கப்படுகிறது. நியாயம்தான். ஆனால், வட்ட வடிவ கட்டிடம் வாஸ்து படி சரியல்ல என்றும் சொல்லப்படுவதும்தான் அதீதமாக படுகிறது.
சில வருடங்களுக்கும் முன்பு கூட ஏதோ ஒரு வாஸ்து நிபுணர்(?) இந்திய பாராளுமன்ற கட்டிடம் வட்ட வடிவில் கட்டப்பட்டதுதான், இந்திய மக்களாட்சியில் நிலவும் அனைத்து குழப்பங்களுக்கும் காரணம் என்று கூறியதை படிக்க நேர்ந்தது. உடனடியாக எனக்கு அப்பொழுது நினைவுக்கு வந்த ஒரு விடயம்தான், தற்பொழுதும் நினவுக்கு வருகிறது.
வட்ட வடிவில் கட்டப்படும் கட்டிடங்கள் இயற்கைப் பேரழிவுகளான பூகம்பம், புயல் போன்றவற்றை தாங்கவல்லவை என்ற கருத்து பல்வேறு கட்டிடக் கலை நிபுணர்களாலும் ஏற்றுக் கொள்ளப்படும் கருத்து. சதுர வடிவில் எண்ணைத் தொட்டிகளை (நிசமான) எங்காவது பார்த்தது உண்டா?
பல்வேறு வர்த்தக நிறுவனங்களின் கட்டிடங்கள் வட்ட வடிவில் கட்டப்படுகின்றன. வாஸ்து நிபுணர்களை(!) நம்பினால் அடுத்த முறை பங்குப்பத்திரம் வாங்கும் முன், அந்த நிறுவனத்தின் கட்டிடங்கள் என்ன வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது என்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.
அப்படியாயின், எண்ணைக் கம்பெனிகளின் பங்கு, அதோகதிதான்...
மதுரை
19/05/11