திருநெல்வேலியில் எனது சீனியராக இருந்த வழக்குரைஞர், தனது நண்பர் ஒருவரின் கதையை கூறினார். நண்பருடைய தலையில் ஏதோ காயம் இருக்க, 'என்ன அது?' என்று கேட்டாரம். நண்பர் 'இன்று காலையில் தவறுதலாக சுத்தியலால் தலையில் அடித்துக் கொண்டேன்' என்றாராம். 'சுத்தியலால் எப்படியப்பா தலையில் அடித்துக் கொண்டாய்?' என்று கேட்க, நண்பர் பெரிதாகச் சிரித்து 'பல வருடங்களுக்கு முன் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி எதிர்பாராமல் நினைவுக்கு வந்தது. எத்தனை பெரிய முட்டாள் நான் என்று நினைத்து, என்னையறியாமல் கையில் இருந்த சுத்தியால் தலையில் அடித்துக் கொண்டேன்' என்றாராம்.
நடந்தது வேறொன்றுமில்லை. ஒரு நாள் இரவு நண்பர் ஒரு பெண்ணுக்கு தனது வீட்டில் தங்க இடம் கொடுக்க நேர்ந்ததாம். அந்தப் பெண்ணை தனது அறையில் படுக்கச் சொல்லி நண்பர் முன்னறையில் சோபாவில் படுத்தாராம். நண்பர் கண்ணயரும் நேரம் அந்தப் பெண் வந்து, 'உங்களுக்கு இங்கு சிரமாயிருக்கிறதென்றால் உள்ளறையிலேயே வந்து படுக்கலாம்' என்றாராம். நண்பர் அப்பாவியாக, 'இல்லை எனக்கு இங்கேயே வசதியாக இருக்கிறது. நீங்கள் கவலைப்பட வேண்டாம்' என்றாராம். பல வருடங்கள் கழித்து எதோச்சையாகத்தான் நண்பருக்கு அந்தப் பெண் கேட்டதன் பொருள் விளங்கியிருக்கிறது. துரதிஷ்டவசமாக கையில் ஒரு சுத்தியல் இருக்க தன்னையறியாமல் தலையில் அடித்துக் கொண்டாராம். தலையில் உள்ள காயத்திற்காக காரணத்தைக் கூறிய நண்பர், "I was alert on that day but not artistically alert" என்று முடித்தாராம்.
எனக்கும் கூட சுஜாதாவின் கணேஷ், வசந்த் கதைகள், பெரிமேஸன் கதைகள் போன்றவற்றை படிக்கும் பொழுதும் திரைப்படங்கள் சிலவற்றை காணும் பொழுதும் 'ஹ¥ம், கதைகளிலும், படங்களிலும்தான் இப்படி 'damsel in distress' எல்லாம் சாத்தியம். நமக்கெல்லாம் வாய்க்கது இப்படியொரு சந்தர்ப்பம்' என அங்கலாய்த்துக் கொள்வேன். ஆனால் சிந்தித்துப் பார்த்தால், கடவுள் அப்படியெல்லாம் நம்மை காய விடுவதில்லை என்பது புரிகிறது. சந்தர்ப்பங்களைத் தருகிறார். 'பேக்கு' மாதிரி நாம்தான் அதை பிடிக்க மறந்து புலம்புகிறோம்.
சென்னையில் பணியாற்றுகையில் அலுவலக வரவேற்பறையில் காலைப் பொழுதிலேயே தயக்கத்துடன் வந்து நின்ற அந்தப் பெண்ணைப் பார்த்ததுமே நினைத்து விட்டேன், இன்று நாள் நன்றாக இருக்கப் போகிறதென! அந்தப் பெண்ணை உள்ளே அழைத்த சீனியர், என்றுமில்லாத நாளாக ஆங்கிலத்திற்கு மாறினார். அந்தப் பெண்ணின் தாய், தந்தை அயர்லாந்தில் இருக்க அவர் சென்னையில் தனியே தங்கியிருக்கிறாராம். அவளது தந்தை ஒருவரிடம் பணம் கடன் கொடுத்திருக்க அவர் தரும் வட்டி இந்த பெண்ணுக்கு செலவுக்கு போதுமானதாக இருந்தது. தற்பொழுது கடன் வாங்கியவர் ஏதோ தகறாறு செய்ய, பிரச்னையை சமரசமாக தீர்க்க அந்தப் பெண்ணுடன் நான் சென்று அதை முடிக்குமாறு கூறினார். கரும்பு தின்ன கூலியா என்று உண்மையிலேயே நினைத்தேன்.
அடுத்த மூன்று நாட்களும் அந்தப் பெண்ணுடன் காலையில் நான் ஆட்டோவில் பயணித்து சம்பந்தப்பட்டவர்களை பார்ப்பதும், பிரச்னையை பேசுவதும் எவ்வாறு சமரசம் செய்வது என்பதிலேயே கழிந்தது. அந்நாட்களில் எனக்கும் சீனியருக்குமிடையே கூட கனத்த இறுக்கம் நிலவியது. அலுவலகத்தில் வேறு யார் கண்ணிலும் கூட அந்தப் பெண் படாத வண்ணம் கவனமாக இருந்தேன். 'ஐ, டேய்...மச்சண்டா உனக்கு' என்ற வார்த்தைகளைக் கேட்க வெட்கமாக இருந்தது. மும்பையிலென்றால் சாதாரணம். சென்னை தரத்திற்கு அந்தப் பெண் பேரழகு!
அவர்களது தந்தை கர்நாடகத்தை சேர்ந்தவர். மருத்துவர். அம்மா, ஐயர்லாந்தை சேர்ந்தவர். அங்கேயே பிறந்து வளர்ந்த அந்தப் பெண் படிப்பதற்காக இங்கு வந்திருந்தார். பெண்கள் விடுதிகளில் இடம் கிடைக்காதலால் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்தார். மூன்று நாட்களில், தன்னைப் பற்றிய விபரங்கள் பலவற்றையும் பகிர்ந்து கொள்ளுமளவுக்கு நெருக்கமானார். அதீத மயக்கத்தில் நானும் எனக்குத் தெரிந்த தமிழர் பெருமை, தொன்மை, நாட்டுப்புற பாடல்கள் என அப்போதுதான் ஓரளவுக்கு பேச வந்திருந்த ஆங்கிலத்தில் வெளுத்து வாங்கினேன். அவ்வப்பொழுது அவரை கொஞ்சம் கேலி செய்து சிரிப்பு மூட்டவும் மறக்கவில்லை. ஆனால் அதற்குள் பிரச்னையும் எளிதில் முடிய எனக்குள் ஒரு சின்ன வருத்தம். அதை விட வருத்தம் அப்போதுதான் எனக்கு திருமணமாகியிருந்தது. சே! எனக்கு அவசரம் என்று நினைத்துக் கொண்டேன்.
மனைவியின் முகம் கண் முன்னேயே இருந்தாலும், சும்மா பேசத்தானே செய்கிறோம் என்று மனதை தேற்றிக் கொள்வேன். எல்லாம் முடிந்து நாங்கள் பயணித்த ஆட்டோ ஏறக்குறைய அலுவலகத்தை நெருங்கிய பொழுதுதான், டிரைவர் பின்னே திரும்பி, 'சார், இந்த அம்மா சினிமால நடிக்கறவங்கதானே' என்றார். நான் 'சேச்சே' எனவும் அந்தப் பெண் என்னிடம் கிசுகிசுப்பாக, 'என்ன சொன்னார் டிரைவர்' என்று மீண்டும் மீண்டும் கேட்டார். நான் டிரைவர் கேட்டதைக் கூறியதும் பெரிதாகச் சிரித்து 'உண்மைதான்' எனவும் எனக்கு பெரிய ஆச்சரியமாகப் போனது. அதற்குள் டிரைவரே, 'அப்படித்தானே சார், மணிரத்னம் படம்... இதயத்தை திருடாதேன்னு பெயர்' என்றார். உடனே எனக்கு பொறி தட்டியது. நான் கல்லூரி முடித்த காலத்தில் வெளியானது. ஆனால் அதை நான் பார்த்ததில்லை. அதன் கதாநாயகியும் தெரியாது.....
'எனக்கு ஏன் விடுதியில் இடம் கிடைக்கவில்லை என்று புரிகிறதா?' என்று அவர் கேட்டது என் காதில் விழவில்லை. ஆஹா, சுஜாதா கதை நடக்கிறது..... நான் வசந்த்....என்று நினைத்துக் கொண்டிருக்கையிலேயே எனது அலுவலகமும் வந்து விட்டது. 2500ரூபாய்க்கு ஒரு காசோலையை என்னிடம் திணித்தபடி என் சீனியரிடம் 'என்னை அவருடன் அனுப்பியதற்காக' நன்றி தெரிவித்தவாறே விடைபெற்றுச் சென்றார். அத்தோடு முடிந்தது எனக்கு வாய்த்த ஒரே சந்தர்ப்பம்!
நீதி: அலர்ட்டாக இருப்பது மட்டுமே நிம்மதி...ஹூம்!
12 comments:
மூன்று வருடங்களுக்கு முன்னர், தமிழ்மணமாக பரிணாம வளர்ச்சியடைந்த வலைப்பூக்கள் என்ற கூட்டு வலைப்பதிவில் ஒரு வாரம் ஆசிரிய பணியாற்றிய பொழுது ஒரு ஜாலிக்காக எழுதியது. ஆனால் தற்பொழுது வலைப்பதிவுகளில் சீரியஸாக தோற்றமளிக்கும் சிலர் எழுதிய பின்னூட்டங்கள் கவனிக்கத்தக்கது
"நான் அந்தப் படத்தைப் பார்த்துள்ளேன், சின்ன வயசில். அப்படியொன்றும் பெரும் அழகு என்று சொல்லிவிட முடியாது! அந்த ஒரு படத்துக்குப் பிறகு ஆள் காணாமல் போய்விட்டாரா தமிழில்?"
"அந்தக் கிரிஜாவுக்காக அந்தப் படத்தை ஐந்து முறை பார்த்தேன் அப்போது. அந்தப் படத்தின் அத்தனை வசனமும் அப்போது மனப் பாடம். அழகில்லை என்று யார் சொன்னது? அந்த மூக்கும் இதழும் கண்களும் சில கவிதைகள்.. சரி விடுங்கள் பிரபு, வாழ்க்கையின் அற்புதத் தருணங்கள் சில இப்படித்தான் நழுவிப்போகின்றன விரலிடுக்கில் நாம் பார்க்கும் போதே! கிரிஜா வந்தனம் என்றொரு இன்னொரு படத்திலும் நடித்திருக்கிறார்"
"கிரிஜா வந்தனம்" நிறையதான் நடக்குது போல இருக்கு இங்க , இருக்கட்டும் இருக்கட்டும் :)"
பத்ரி நாராயணன், தங்கமணி, கார்த்திக்ராமாஸ்தான் இப்படி பின்னூட்டமிட்டது. மூன்று வருடங்கள்தான் கடந்துள்ளது. ஏனோ, பழைய புகைப்படத்தைப் பார்ப்பது போல ஒரு மகிழ்ச்சி!
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.......
பெருசுக வண்டவாளம் எல்லாம் வெளிய வருது :-)
ஒல்ட் இஸ் கோல்ட் ( OIG) என்கிற கேடகரியில, இந்தப் பதிவை கில்லில போட்டோம், சில மாசங்களுக்கு முன்னாலே
என்னதான் சொல்லுங்க, அந்த பழைய வலைப்பூ ஒரு டிரெஷர் :-)
Prabhu
The same Girija acted in Priyadharshan's big hit in Malayalam as a heroine with Mohanlal. It was a hillarious thriller. I thought only Amala had an Irish desecent I did not know about this Girija. Although we dont have such scares visibly on our head, we have them in our heart as a sweet memories.
Regards
Sa.Thirumalai
//அத்தோடு முடிந்தது எனக்கு வாய்த்த ஒரே சந்தர்ப்பம்!//
என்ன சந்தர்ப்பம்?
இதுமாதிரி நிறைய கேள்வி பட்டுள்ளேன்.
ஒரு பெண்ணுக்குத் துணையாய் தங்க நேர்ந்தது நான் தூங்கும்வரை தூங்கிட்டியா எனக் கேட்டுக்கொண்டே இருந்தாள்.
இதற்கான 'அர்த்தம்' எனக்கு முதலில் புரியவில்லை.. பின்னர்தான் புரிந்தது..
பாதுகாப்பு கருதி எனக்கு முன்பே தூங்கிவிட அவள் விரும்பவில்லையென.
பிரபாலரின் செய்கைகள் 'அழைப்பை' விடுக்கின்றன என்பதை எப்படி உறுதிசெய்வது?
வெகுசிலரே இந்தக் கலையை முழுமையாகத் தெரிந்துவைத்துள்ளனர்.
மற்றவர்களுக்கு தர்ம அடிதான் போல...
:)
வந்தனம். ரெம்ப சூப்பர் படம்.
என்னங்க பண்றது.. எனக்கும் அந்த மாதிரி அனுபவம் இருந்தது. தலையில் சுத்தியால் அடித்துக் கொள்ளவைத்த அனுபவம். இதில் கூத்து என்னவென்றால் சம்பந்தப்பட்ட பெண்ணே பல வருடங்களுக்குப் பின் இதைச் சுட்டிக்காட்டி அதன் அப்போதைய உண்மையான அர்த்தத்தை சொன்னபோதுதான் புரிந்தது. இது எவ்வளவு பெரிய குற்றம். சுத்தியா.. ஒரு பாராங்கல்லையே தூக்கிப்போட்டுக் கொண்டிருக்க வேண்டும் நான்.
சென்னை தரத்திற்கு அந்தப் பெண் பேரழகு!
என்னங்க!! நம்ம பொண்ணுங்களை இப்படி சொல்லிட்டீங்களே??
அவுங்க இதே மாதிரி சொல்லிட போறாங்க.:-))
//சென்னை தரத்திற்கு அந்தப் பெண் பேரழகு!//
:-))))))
//எனக்குள் ஒரு சின்ன வருத்தம். அதை விட வருத்தம்
அப்போதுதான் எனக்கு திருமணமாகியிருந்தது. சே! எனக்கு
அவசரம் என்று நினைத்துக் கொண்டேன்.//
ஜாலிதான் போங்க:-))))
படிச்சுக்கிட்டு வரும்போது 'அமலா'ன்னு நினைச்சுகிட்டேன்.
கிரிஜாவா?
ரொம்ப நல்ல பதிவு..உஙக பதிவையும் மைன்டுல வச்சுக்கறேன்..திரும்பி...
வருவேன்னு சொல்ல வந்தேன்!
Satyanarayanan Says:
I remember your article on the Idhayathai Thirudadhe Actress...she is currently working as a journalist in England. She has a blog too :-))
Thought of sharing
http://undercutandflourish.blogspot.com
Post a Comment