18.8.07

விருமாண்டியும் மரணதண்டனையும்

முன்பு நான் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட ‘விருமாண்டி’ படம் பார்க்கும் வாய்ப்பு நேற்று வாய்த்தது. துரதிஷ்டவசமாக, முக்கால்வாசிப் படம்தான் பார்க்க முடிந்தது. எனவே, கதை இறுதியில் பயணிக்கும் பாதையினை அனுமானிக்க முடியவில்லை!

எனினும் உறுத்திய சில விஷயங்கள்...

மரண தண்டனைக்கு எதிரான படம் என்று கூறப்பட்டதனை வைத்து, படம் வெளி வரும் முன், இவ்வாறான விவாதங்களை அனைத்து மக்களிடமும் கொண்டு செல்லும் படங்கள் வரவேற்க்கப்பட வேண்டும் என்று பதிவெழுதினேன்.

ஆனால்...

உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக மட்டுமே பணியாற்றிய திரு.வி.ஆர்.கிருஷ்ண ஐயரினை ‘Former Chief Justice, Supreme Court of India” என்று அறிமுகப்படுத்தியதில் முதல் சறுக்கல் தொடங்கியது.

இரண்டாவது, மரண தண்டனையினை எதிர்நோக்கியிருக்கும் தலைமையாசிரியரின் அறிமுகம், மரண தண்டனைக்கெதிரான விவாதத்தினையே கேலிக்குள்ளாக்குவது.

அதாவது, தவறு செய்யும் மாணவனை தலைமையாசிரியர் அடிக்க அவன் சுருண்டு விழுந்து செத்துப் போகிறான். மரண தண்டனை கொடுத்து விட்டார்களாம். மேலும், இறந்த சிறுவன் பள்ளித்தாளாளரின் மகன் என்பதும், தற்கொலைக்கு முயன்றேன் என்பதும் கவனிக்கக்தகுந்தது.

இவ்வாறான குற்றங்களுக்கு மரண தண்டனையினை பரிந்துரைக்கும் அளவிற்கு நமது சட்டங்கள் கொடூரமானவையும் அல்ல...நீதிபரிபாலான முறையும் மோசமானது அல்ல. உண்மையில் தலைமையாசிரியருக்கு ஆயுள் தண்டனை கூட வழங்கப்படமாட்டாது!

முக்கியமாக, மரண தண்டனைக்கெதிரான விவாதம் இதுவல்ல...ஏனெனில், மரண தண்டனனக்கு எதிரான குரல்கள், குற்றம் பெரிதா, சிறிதா அல்லது தெரிந்து செய்யப்பட்டதா, தெரியாமல் நிகழ்ந்ததா அல்லது குற்றவாளி இரக்கத்திற்கு உரியவனா அல்லது கொடூரனா என்று பார்ப்பதில்லை. நாதுராம் கோட்சே என்றாலும் சரி ஓசாமா பின் லேடனாக இருந்தாலும் சரி, மரண தண்டனை கூடாது என்றுதான் கூறுகிறார்கள்.

பல சமயங்களில், மரண தண்டனை எதிர்ப்பாளர்களை மடக்குவதற்காக வைக்கப்படும் கேள்வி, ‘சிறுமிகளை பாலியல் கொடுமைக்குட்படுத்தி கொலை செய்தவனுக்கு கூடவா, மரண தண்டனை கூடாது?’ என்பதாகும்.

எனவே விவாதம் மரண தண்டனை தேவையா இல்லையா என்பதுதானே தவிர, யாருக்கு என்பதல்ல!


ஏனெனில் யாருக்கு என்பதில்தால் பாரபட்சம் (discrimination) காட்டப்படுவதாக குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.

மேலும், ஏஞ்சலா காத்தமுத்து (வலிய வரவழைத்துக் கொண்ட பெயரா?) ‘திருத்தி எழுதப்பட முடியாத தீர்ப்பு உண்டு, அதாவது மரண தண்டனை’ என்பதும் மரண தண்டனையினை எதிர்ப்போர் கைக்கொள்ளும் வாதமல்ல!

சில சமயம், அப்பாவிகளும் (innocents) தவறுதலான தீர்ப்புகளால், மரண தண்டனைக்கேதுவாகிறார்கள் என்பதல்ல, மரண தண்டனைக்கு எதிரான வாதம்...உண்மையில் குற்றவாளிக்கும் அல்ல என்பதுதான் அவர்களது வாதம்!!

மூன்றாவது, ஏஞ்சலா காத்தமுத்து?

அது என்ன, டாக்டர் இன் சிவில் லா? இயக்குஞர் கதாபாத்திரங்களுக்காக மெனக்கெட்டது இவ்வளவுதானா? மேலும் ‘கற்பழிப்பு’ என்ற பதம், பொலிடிக்கலி இன்கரக்ட் என்பது கூட புரியாதா, டாக்டரேட்டா?

சரி, கதையின் முடிவென்ன? கமலஹாசன் நிரபராதி என்பதா இல்லை அவருக்கு மரதண்டனை தேவையில்லை என்பதா? எப்படியாயினும், தமிழ்ப்பட ஹீரோயிச கிளீஷேயிலிருந்து, தப்பிக்க முயன்று தோற்ற மற்றொரு படம் என்பது புரிகிறது!

இவ்வாறு இரு வேறுபட்ட பார்வைகளில் திரைக்கதையினை நகர்த்துவது என்பது தமிழ் திரைப்படத்திற்கு புதிது...ஆனால் இவ்வகையான திரைக்கதைகளின் வெற்றி, உண்மையென்பது, பொய்க்கும் மெய்க்கும் நடுவே இருப்பது என்ற வகையில் அதனை ரசிகர்களின் யூகத்தில் விடுவதில் இருக்கிறதேயன்றி, இவன் கதாநாயகன் இவன் வில்லன் என்று விளக்குவதில் இல்லை...

விருமாண்டியில், கமல்ஹாசன் தமிழ் திரைக்கதையினை அந்த அளவிற்கு உயர்த்தியுள்ளாரா என்பது படத்தினை முழுவதும் பார்க்கும் பாக்கியம் வாய்த்தவர்கள்தான் கூற வேண்டும்.

மதுரை
18.08.078

ஒரு சமயம், ஏஞ்சலா, தனது பிறந்த ஊராக ‘கீழவெண்மணி’ என்று குறிப்பிடுவதன் காரணம் என்ன?

6 comments:

Anonymous said...

//ஒரு சமயம், ஏஞ்சலா, தனது பிறந்த ஊராக ‘கீழவெண்மணி’ என்று குறிப்பிடுவதன் காரணம் என்ன?//

கீழ்வெண்மணி வரலாறை அறிந்தவர்கள் பாத்திரத்தின் பெயர் காரணத்தைப் புரிந்து கொள்வார்கள் என்று கமல் நினைத்துவிட்டாரோ?

வரவனையான் said...

வக்கிலய்யா நல்ல இருந்துச்சு பதிவு, ஆனா படத்த முழுசா பார்த்திருந்திருக்கலாம் . உங்க ஃப்லோ நல்லருக்கும்தான் ஓடி வந்தேன் . மோசம் செய்யல நீங்க. இதன் தொடர்ச்சியையும் எழுதி முடிக்கவும்

Doctor Bruno said...

நமக்கு தெரியாத topic பற்றி வரும் படங்கள் நமக்கு interestingஆக இருப்பதில்லை.ஏனென்றால், நமக்கு பல காட்சிகள் மனதில் பதிவதில்லை.
நான் இந்த படத்தை சுமார் முன்று வருடங்களுக்கு முன் பார்த்தேன். உங்கள் பதிவில் உள்ள பல கருத்துக்கள் எனக்கு படத்தில் பார்த்ததாக ஞாபகம் இல்லை. Eye does not see what the mind does not know என்று மருத்துவத்தில் கூறுவார்கள்.

துளசி கோபால் said...

மறந்தே போச்சு நீங்கள் குறிப்பிட்டுள்ளவை எல்லாம். இன்னொருக்காப்
பார்த்து ஞாபகப் படுத்திக்கணும்.

Anonymous said...

எந்த திரைப்படத்தையும் (கலைப்படைப்பையும் சொல்லப்படும் நயத்தைத் தாண்டி கருத்தாய்வு மேற்கொள்வது என்றும் சுவையாக இருப்பதில்லை. என்றாலும் 'பிழை' என்று இவற்றை சொல்வதை பதில் இல்லாமல் விட முடியாது

எந்த திரைப்படத்தையும் (கலைப்படைப்பையும் சொல்லப்படும் நயத்தைத் தாண்டி கருத்தாய்வு மேற்கொள்வது என்றும் சுவையாக இருப்பதில்லை. என்றாலும் 'பிழை' என்று இவற்றை சொல்வதை பதில் இல்லாமல் விட முடியாது


மரண தண்டனையினை எதிர்நோக்கியிருக்கும் தலைமையாசிரியரின் அறிமுகம், மரண தண்டனைக்கெதிரான விவாதத்தினையே கேலிக்குள்ளாக்குவது

கேலியா ! தலைமையாசிரியராக சிறு வேடத்தில் வந்தாலும் ஒரு வித கலக்கத்தை ஏற்படுத்தியிருந்தது அந்த பாத்திரம். அதை ஏற்று நடித்தவர் கவிஞர், திரைப்பட ஆர்வலர் புவியரசு.
"இதான் நியாயம்னா என் வீட்டு விட்டத்துலயே நான் தொங்கியிருப்பேன்"
என்று அவர் சொல்வது தான் இந்த படத்தின் துவக்கமே.

வாத்தியார் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்ற மனைவியின் சொல் கேட்டு வந்தவரை, சாகடிக்க தீர்ப்பு விதிக்கப்படிகிறது. அவர் சாவின் மூலமாக பாடம் புகட்ட வேண்டும் என்றால் அதை தானே செய்திருக்கலாம். அரசாங்கம் சாகடிப்பது மரியாதையான மரணம் எல்லாம் கிடையாது என்று சொல்கிறார்.

மரணதண்டனையை ஆதரிக்கும் கருத்துக்களில் ஒன்றான : "மக்களுக்கு முன் மாதிரியாக இருப்பது" என்பது படத்தின் துவக்கத்திலேயே இருக்கிறது. மரணம் எப்போதுமே அசிங்கமாக தான் இருக்கும் (நல்லம்மன் பிணத்தில் ஈக்கள் மொய்ப்பது போல). அரசாங்கம் செய்தாலும் கூட மரணத்துக்கு அர்த்தம் கற்பித்து விட முடியாது.

அதாவது, தவறு செய்யும் மாணவனை தலைமையாசிரியர் அடிக்க அவன் சுருண்டு விழுந்து செத்துப் போகிறான். மரண தண்டனை கொடுத்து விட்டார்களாம். மேலும், இறந்த சிறுவன் பள்ளித்தாளாளரின் மகன் என்பதும், தற்கொலைக்கு முயன்றேன் என்பதும் கவனிக்கக்தகுந்தது.

இவ்வாறான குற்றங்களுக்கு மரண தண்டனையினை பரிந்துரைக்கும் அளவிற்கு நமது சட்டங்கள் கொடூரமானவையும் அல்ல...நீதிபரிபாலான முறையும் மோசமானது அல்ல. உண்மையில் தலைமையாசிரியருக்கு ஆயுள் தண்டனை கூட வழங்கப்படமாட்டாது!


இதற்கு பதிலாக ஒரு கமல் வசனம், மகாநதியிலிருந்து)
முத்துசாமி: சட்டப்படி நீ சரணடையறது தான் நல்லது
கிருஷ்ணா: யார் சட்டப்படு ?..... வசதி இல்லாத என்னால நிஜத்தை மட்டும் இல்லைங்க, என்னைக்கூட காப்பாத்திக்க முடியாது

மேலும், ஏஞ்சலா காத்தமுத்து (வலிய வரவழைத்துக் கொண்ட பெயரா?) ‘திருத்தி எழுதப்பட முடியாத தீர்ப்பு உண்டு, அதாவது மரண தண்டனை’ என்பதும் மரண தண்டனையினை எதிர்ப்போர் கைக்கொள்ளும் வாதமல்ல!
ஏன் ? கொண்டராசை வெட்டி கொண்டாரேன் என்று ஆரம்பிக்கும் ஒரு மாலைப்பொழுது மன்னிப்பில் கரைய ஆரம்பிக்கிறது. மரணம் எந்த விதத்திலும் எதையும் தீர்ப்பதில்லை. மரணம் ஒரு தீர்வாகும் என்று நம்பிய சண்டியனுக்கும் அரசாங்கத்துக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. சொல்லப்போனால் மன்னிக்கத் தெரியாத, மனிதத்தன்மையற்ற ஸ்தாபனமாக சட்டம் இருக்கிறது.

மூன்றாவது, ஏஞ்சலா காத்தமுத்து? அது என்ன, டாக்டர் இன் சிவில் லா? இயக்குஞர் கதாபாத்திரங்களுக்காக மெனக்கெட்டது இவ்வளவுதானா?
எதில் டாக்டரேட் வாங்கினால் சரியாக இருக்கும் ? அவர் பின்புலம் ஒரு சண்டியனைக் கூட நம்ப வைத்து அவளுக்கு (நமக்கும்) அவன் கதையை சொல்ல வைக்கும் அளவுக்கு ஆழமாக இருக்கிறது. மெனக்கெடவில்லை என்று சொல்ல முடியாது.

மேலும் ‘கற்பழிப்பு’ என்ற பதம், பொலிடிக்கலி இன்கரக்ட் என்பது கூட புரியாா, டாக்டரேட்டா? அவங்களுக்கு புரியும். ஆனால், பாலியல் வன்புணர்ச்சி அப்டின்னு சொன்னா விருமாண்டிக்கு புரியுமா ?

சரி, கதையின் முடிவென்ன? கமலஹாசன் நிரபராதி என்பதா இல்லை அவருக்கு மரதண்டனை தேவையில்லை என்பதா? முடிவு, தீர்வு, இதனால் சொல்லப்படும் நீதி யாதெனில் இதை எல்லாம் தாண்டி தமிழ்ப்படம் நகர்வது முக்கியம். (கமல் நீதிபோதனையில் நாட்டம் உள்ளவர் என்று இங்கு சொல்லத்தான் வேண்டும்)

அரசாங்கம் இந்த தண்டனையின் மூலம் சொல்ல விரும்பிய எல்லா விஷயங்களும் வெறுமையில் முடிகின்றன. செத்த பிணத்தை கொல்வது இந்த சட்டத்தின் அர்த்தமற்ற நிலையை காண்பிக்கிறது. அதற்கு மேல் செய்தியாளர்கள் வெற்றூ வார்த்தைகளாக பேசிக்கொண்டிருக்கும்பொழுதே விருமாண்டி முடிந்துவிடுகிறது.

கமல்ஹாசன் தமிழ் திரைக்கதையினை அந்த அளவிற்கு உயர்த்தியுள்ளாரா என்பது படத்தினை முழுவதும் பார்க்கும் பாக்கியம் வாய்த்தவர்கள்தான் கூற வேண்டும். அறிவை மீறிய பலம் என்பது மனித நாகரித்தின் முக்கியமான பிரச்சனை, அரசியல் பிரச்சனையும் தான் ! இந்த படத்தை "சண்டியர்" என்ற தலைப்பை வைத்துக்கொண்டே பார்ப்பது அவசியம். இந்த கருத்தை மைய இழையாக கொண்டு, உண்மையின் தன்மையை இதை விட அழகாக ஆராய்ந்த தமிழ் படம் எதுவும் இல்லை. தமிழ் திரை எழுத்தில் இது ஒரு மகத்துவமான படைப்பு.

ஒரு சமயம், ஏஞ்சலா, தனது பிறந்த ஊராக ‘கீழவெண்மணி’ என்று குறிப்பிடுவதன் காரணம் என்ன? காண்பிப்பது கலைஞன் வேலை. காரணங்கள், அர்த்தங்கள் கொள்வது நம் வேலை. எனக்கு எட்டிய இரு காரணங்கள்.
தமிழக வரலாற்றில் மிக மோசமான ஜாதிவெறியாட்டத்தின் உதாரணம் கீழ்வெண்மணி. ஜாதிவெறி + அதிகாரம் இரண்டும் கலந்த உருவமாக வருகிற பேய்க்காமனிடம் இந்த ஒரு வார்த்தை அடியாகத் தான் விழுந்திருக்கும்.

இன்னொரு கோணத்தில் பார்த்தால்: கீழ்வெண்மணி போன்ற மிருகச்செயல்கள் தெரிந்திருந்தாலும் மரணதண்டனையின் மீது நாட்டம் இல்லாதவராய் எஞ்சலா இருப்பது அவர் கொள்கைப் பிடிப்பை மேலும் வலுவாக சித்தரிக்கிறது.

Anonymous said...

விருமாண்டி, மன்னிக்கத் தெரியாமல் கொத்தாலத்தேவனைக் கொல்வது போல் காட்டிவிட்டு, மரண தண்டனை இருக்ககூடாது என்று கூறுவது, hypocrisy இல்லையா ?