சட்டம் குறித்தான விழிப்புணர்வினை மக்களிடையே ஏற்ப்படுத்தும் நோக்கத்துடன் நடத்தப்படும் ‘மக்கள் சட்டம்’ என்ற வலைப்பதிவில் மோட்டார் வாகன விபத்து குறித்து, சமீபத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மீதான விமர்சனத்தைக் கண்ணுற்றேன். அப்பாவி பயணிகளுக்கு, தீர்ப்பினால் ஏற்ப்படக்கூடிய பாதிப்பினைக் குறித்தான எச்சரிக்கையினை உடனடியாக மக்கள் முன் வலைப்பதிவு மூலம் வைத்தது நன்றியுடன் பாராட்டப்பட வேண்டிய செயல்.
விமர்சனத்தை, ‘ சட்டப்படி பார்த்தால், இந்த தீர்ப்பு சரியானதாக தோன்றலாம்’ என்று மக்கள் சட்டம் தொடங்கினாலும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டப்படி சரியானதுதானா என்பது சந்தேகமே!
வாகன விபத்து காப்பீடுகளைப் பொறுத்து நான் அறிந்த வரையில், ‘இந்த தீர்ப்பு சட்டத்தின் பயணத்தினை பல ஆண்டுகள் பின்னோக்கி செலுத்தியுள்ளது’ என்பதே என் எண்ணம்!
***
நேஷனல் இன்ஸூரன்ஸ் கம்பெனி எதிர் அஞ்சனா ஷ்யாம் என்ற இந்த வழக்கில் 42 நபர்கள் மட்டுமே பயணம் செய்ய அனுமதி (permit) பெற்ற பேருந்தில் 90 நபர்கள் பயணம் செய்கையில் விபத்து ஏற்ப்பட்டு சிலர் மரிக்க பலர் காயமடைகின்றனர்.
இவ்வாறு மோட்டார் வாகனத்தின் மூலமாக மரணமோ, காயமோ ஏற்ப்படுகையில் பாதிக்கப்படும் நபர்களுக்கு வண்டியின் உரிமையாளர் தகுந்த நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.
ஆனால், நஷ்ட ஈட்டினை வழங்குவதற்கு உரிமையாளரின் பொருளாதாரம் பல சமயங்களில் இடம் கொடுப்பதில்லை. எனவேதான் மோட்டார் வாகனங்களை இயக்க கண்டிப்பாக வண்டிக்கு மூன்றாம் நபர் காப்பீடு அவசியம் (Third Party Insurance). அதாவது, இழப்பீட்டினை உரிமையாளர் சார்பாக காப்பீடு நிறுவனங்கள் நேரிடையாக வழங்கும்.
எனவே, எவ்வளவு காப்புத் தொகை (premium) செலுத்தப்பட்டிருப்பினும், வண்டிக்கு காப்பீடு என்று ஒன்று இருந்தால், அதில் யார் யாருக்கான காப்பீட்டினை கண்டிப்பாக காப்பீடு நிறுவனம் வழங்க வேண்டும் என்று மோட்டார் வாகன சட்டத்தின் (Motor Vehicles Act’1988) 147ம் பிரிவு குறிப்பிடுகிறது.
147ம் பிரிவில் குறிப்பிடப்படாத நபர்களைப் பொறுத்தவரை தனியே காப்புத் தொகை (premium) செலுத்தாமல் காப்பீடு வழங்கப்பட வேண்டியதில்லை. அவர்களுக்கான காப்பீடு கட்டாயம் இல்லை என்பதால், வண்டி உரிமையாளர்கள் மூன்றாம் நபர் காப்பீடு மட்டுமே வாங்குவது இல்லை. காப்பீடு நிறுவனங்களும் அதை வலியுறுத்துவது இல்லை.
***
பிரிவு 147(1)(b)(ii)ல் ‘பொதுச் சேவை வண்டியின் பயணிக்கும் எந்த ஒரு பயணிக்கும் ஏற்ப்படும் மரணம் அல்லது காயத்திற்கான இழப்பீடு’ (against the death of or bodily injury to any passenger of a public service vehicle) என்று இருப்பதால், பேருந்தில் பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும் காப்பீடு உண்டு என்றே இதுவரை நம்பப்பட்டு வந்தது.
அதாவது வண்டியின் அனுமதியில் குறிப்பிடும் நபர்களுக்கும் அதிகமான அளவில் நபர்களை ஏற்றிச் சென்றால், அது மோட்டார் வாகன சட்டத்தின் பிற பிரிவுகளில் குறிப்பிடப்பட்டிருக்கும்படி உரிமையாளரை அனுமதியினை ரத்து செய்வது போன்ற முறையில் தண்டிக்கலாமே தவிர ‘மூன்றாம் நபர் காப்பீடுகளுக்கும்’ அதற்கும் சம்பந்தமில்லை என்றே கருதப்பட்டது.
ஏனெனில், இவ்வாறான காப்பீடு வழக்குகளில், ஒரு காப்பீடு நிறுவனம் சட்டத்தின் பிரிவு 149(2)(a)(b)ல் குறிப்படப்படும் காரணங்களுக்காக மட்டுமே காப்பீட்டினை மறுக்கலாம். அதாவது வண்டிக்கு சிவப்பு சாயம் பூசப்படக்கூடாது என்ற ஒரு நிபந்தனை காப்பீட்டில் இருப்பினும், சட்டம் அனுமதிக்காதலால் அதனை மீறியதாக கூறி காப்பீட்டினை மூன்றாம் நபர்களுக்கு மறுக்க இயலாது.
இந்தப் பிரிவில் தகுந்த உரிமம் இல்லாத ஓட்டுநர் ஓட்டுவது உட்பட பல காரணங்கள் கூறப்படினும், வண்டியின் அனுமதியில் கூறப்பட்டுள்ள நபர்களுக்கு மேலான நபர்கள் பயணம் செய்தல் என்ற காரணம் கூறப்படவில்லை!
ஓரளவிற்கு கிட்டே வருவது 149(2)(a)(i)(c) என்ற பிரிவு!
அதாவது வண்டியின் அனுமதிக்கப்பட்ட உபயோகத்திற்கு அன்றி வேறு உபயோகத்திற்கு பயன்படுத்துதல் (for a purpose not allowed by the permit under which the vehicle is used, where the vehicle is a transport vehicle)
அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்வது இந்தப் பிரிவின் கீழ் வராது. அதாவது விவசாயத்திற்காக அனுமதி பெற்ற ஒரு டிராக்டரில் குடி தண்ணீர் ஏற்றிச் செல்வது வேறு உபயோகம். ஆனால், அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்வது வேறு உபயோகம் என்று கூற முடியாது. அனுமதியினை மீறியது என்று மட்டுமே எடுத்துக் கொள்ள முடியும்.
***
ஆனால் உச்ச நீதிமன்றம், ஒரு சட்டத்தின் பிரிவுகளை இவ்வாறு தனியே படித்தல் கூடாது மாறாக முழுச் சட்டத்தினையும் ஒரு சேர படித்து பொருள் கொள்ள வேண்டும் என்று இந்த தீர்ப்பில் கூறியிருக்கிறது. அதாவது சட்டத்தின் பிற பிரிவுகளில் வாகனத்தின் அனுமதித்த அளவுதான் நபர்களை ஏற்ற வேண்டும் என்று இருப்பதால், எந்தவொரு பயணி (any passenger) என்பது அனுமதிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே தவிர மற்றவர்கள் இல்லை என்று கூறுகிறது.
மேலும் அனுமதிக்கும் அதிகமான பயணிகளைப் பொறுத்தவரை காப்பீடே (insurance cover) இல்லையென்பதால் 149ம் பிரிவினை கருத்தில் கொள்ளவே தேவையில்லை என்கிறது. ஏனெனில் 149ல் குறிப்பிடப்படும் நிபந்தனைகள் காப்பீடு இருந்தால் மட்டுமே பயன்படும்.
எனவே இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிகமாக உள்ள 46 இழப்பீடுகளை மட்டும் காப்பீடு நிறுவனம் கொடுத்தால் போதும், அதனை 90 வழக்கில் வழங்கப்பட்ட இழப்பீட்டிலும் விகிதாச்சார முறையில் பகிர்ந்து கொடுக்க வேண்டும். மீதித் தொகையினன பாதிக்கப்பட்டவர்கள், வண்டி உரிமையாளரிடம் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது!
***
பிரிவு 149 பற்றி உச்ச நீதிமன்றம் கூறியது சரிதான் எனினும், 147வது பிரிவில் கண்ட ‘any passenger’ என்பதற்கு தந்த விளக்கம் சரியான முறையில் அமையவில்லை.
ஏனெனில், வண்டியின் உரிமையாளரிடம் இழப்பீட்டினை பெறுவது என்பது நடைமுறையில் பெரும்பாலும் சாத்தியமல்ல. எனவே இழப்பு இறுதியில் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு. இதன் மூலம் ‘மூன்றாம் நபர் காப்பீடு’ என்பதே அர்த்தமற்றுப் போகிறது.
ஏனெனில், இந்தப் பெயரினை வைத்தே, இவ்வகையான காப்பீட்டிற்கும், மற்ற காப்பீட்டிற்குமான வித்தியாசத்தை புரிந்து கொள்ள முடியும்.
ஆம், மற்ற காப்பீடுகளைப் போல அல்லாமல், மூன்றாம் நபர் காப்பீட்டின் பயனாளி, அவரது முகத்தினைக் கூட அறியாத வண்டி உரிமையாளர். ஆனால், உச்ச நீதிமன்றம் இந்த வித்தியாசத்தினை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. எனவே பயனாளி தவறு ஏதும் புரியாத பொழுது, அவர் தண்டிக்கப்படுவது நீதியின் பொருட்டு சரியான செயலாக இருக்க முடியாது. பயணிகள் பயணம் செய்யக்கூடாத சரக்கு வாகனத்தில் பயணம் செய்யும் ஒருவருக்கு காப்பீடு மறுக்கப்படுவதில் ஓரளவுக்கு நியாயம் உள்ளது. ஆனால், அனைத்து பயணிகளும் ஒரே கட்டணம் செலுத்தி பயணம் செய்கையில் எப்படி அவர்களுக்கு காப்பீட்டினை மறுக்க முடியும்?
மேலும் பல மோட்டார் வாகன விபத்துகளில், இந்தச் சட்டம் ஒரு சமுதாய நலனுக்கான சட்டம் (social welfare legislation) எனவே, இந்தச் சட்டத்தின் பிரிவுகளை, விபத்தில் பாதிக்கப்படுபவரின் நலனை கருத்தில் கொண்டு, அவருக்கு சாதகமாக அர்த்தம் (interpretation) கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது.
மேலும் 147ல் கண்ட பிரிவு தெளிவாகவே இயற்றப்பட்டுள்ளது. நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளபடியென்றால், அந்தப் பிரிவில் passenger என்பதற்கு முன்பாக any என்ற வார்த்தை தேவையில்லை. முக்கியமாக, நலன் தரும் சட்டங்களில் (beneficial legislation) குறுகலான அர்த்தம் (narrow interpretation) கொள்ளக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம்தான் கூறியிருக்கிறது.
உச்ச நீதிமன்றம் பி.வி.நாகராஜு எதிர் ஓரியண்டல் இன்ஸூரன்ஸ் (1996 ACJ 1178) என்ற வழக்கில் வழங்கப்பட்ட தனது தீர்ப்பினை கருத்தில் கொள்ளவில்லை. அந்த வழக்கில் சரக்கு வாகனத்தில் அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்கிறார் ஒருவர். சரக்கு வாகனத்தில் பயணிகள் செல்வது தவறு என்பதுடன் அனுமதிக்கப்பட்ட நபர்களுக்கும் அதிகம் பயணித்தனர். விபத்துக்குள்ளான வண்டிக்கான சேதத்தினை உரிமையாளர் காப்பீடாக கேட்கையில் மறுக்கப்பட்டது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அவ்வாறு அதிக நபர்களை ஏற்றிச் சென்றது விபத்துக்கான காரணமாக இல்லாத பட்சத்தில், அந்த மீறலை ஒரு அடிப்படையான மீறலாக எடுத்துக் கொண்டு காப்பீட்டினை மறுக்கக் கூடாது என்று கூறியுள்ளது.
இறுதியாக, இந்த வகையான பிரச்னைகளில் கிரிஜா பிரசாத் அகர்வால் எதிர் பார்வதி தேவி (2005 (2) TNMAC 65) என்ற வழக்கில், ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளை கொண்ட புல் பெஞ்ச் (Full Bench) தீர்ப்புதான் சரியானதாக இருக்கக் கூடும். இவ்வாறான விதி மீறல்கள் மூன்றாவது நபர்களை பாதிக்க கூடாது. வேண்டுமாயில் அதிகமான நபர்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டினை, காப்பீடு நிறுவனங்கள் வண்டி உரிமையாளரிடம் இருந்து வசூலித்துக் கொள்ள வேண்டியது என்பதுதான் சட்டப்படி மட்டுமல்ல நீதியின்பாலும் சரியான தீர்ப்பாக இருக்க முடியும்!
மதுரை
25.08.07
மோட்டார் வாகன விபத்து காப்பீடு குறித்து மேலும் அறிய...
http://marchoflaw.blogspot.com/2007/01/1.html
1 comment:
நன்றி ஐயா.
நாங்கள் மோட்டார் வாகன விபத்து இழப்பீ்ட்டு வழக்குகளில் உரிய கவனம் செலுத்தாததால் உங்கள் பதிவுகள் எங்களுக்கு பாடமாக அமைகிறது. மீண்டும் நன்றி.
-சுந்தரராஜன்
Post a Comment