8.9.07

முனைவர்களும் டாக்டர்களும்...

நடிகர் விஜய், ஜேப்பியார் போன்றவர்களுக்கு சமீபத்தில் தமிழக பல்கலைக்கழகம் ஒன்று ‘கெளரவ டாக்டர்’ பட்டங்களை வழங்கியது. எதிர்பார்த்தது போல கேலியுடனே இந்தச் செய்தியானது அணுகப்பட்டது. கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்களுக்கு வழங்கப்பட்ட டாக்டர் பட்டங்களும், இழுத்து வைத்து கிண்டலடிக்கப்பட்டது.

உலகம் முழுவதும், இவ்வாறாக பல்கலைக் கழகங்கள் ஏதேனும் சுயலாபத்திற்காகவும், விளம்பரத்திற்காகவும் ‘கெளரவ டாக்டர்’ பட்டங்கள் வழங்குவது பல்கலைக் கழகங்கள் தோன்றிய நாள் முதல் உள்ள வழிமுறைதான். அதைப் போலவே, இவ்வாறான பட்டங்கள் சர்ச்சைக்குள்ளாவதும் உலகளாவிய ஒரு விடயம்தான். மார்கரெட் தாட்சர் முதல் ஜியார்ஜ் புஷ் வரை யாரும் இதற்கு விதிவிலக்கல்ல.

ஆயினும், கெளரவ டாக்டர் பட்டங்களை மற்ற டாக்டர் பட்டங்களோடு ஒப்பிடுவது அறியாமையே அன்றி வேறல்ல. மேலும் மோசம், மருத்துவர்களை குறிப்பிடும் ‘டாக்டர்’ என்ற அடைமொழியோடு ஒப்பிடுவது. மருத்துவர்கள் டாக்டர் என்ற பொதுவான ஒரு பதத்தினை தங்களது தொழிலினை அடையாளப்படுத்த குறிப்பிட்டுக் கொண்டால், டாக்டர் என்ற பதம் தனது அர்த்தத்தினை இழந்துவிட வேண்டுமா என்ன?

சரி, பல்கலைக்கழகங்கள் டாக்டர் பட்டம் வழங்குவது ஏதோ பலனை எதிர்பார்த்து என்றாலும், பட்டங்களை பெறுபவர்கள் கிண்டலடிக்கப்படுவதும், மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் அறியாமை தவிர வேறல்ல.

முனைவர் என்று தமிழில் பொருத்தமாக குறிப்பிடப்படும் டாக்டர் பட்டங்களே ஒரு துறையில் புதுமையாக ஏதாவது சாதனை படைப்பாளர்களுக்குத்தான் என்றால், முறையான கல்வி அதற்கு ஒரு முட்டுக் கட்டையாக இருப்பது அநியாயமில்லையா?

‘அறிவு என்பது ஒரு வருட பாடத்திட்டத்தினை ஒரு வார காலத்தில் மனப்பாடம் செய்து மூன்று மணி நேரத்தில் எழுதிக் குவிப்பதுதான்’ என்றால் நிச்சயம் நான் கூற வருவது தவறாக இருக்கலாம்…

ஆனால் அறிவும், சாதனையும் கல்விக்கூடங்களுக்கு வெளியேயும் கொட்டிக்கிடக்கிறது என்பதுதான் உண்மை.


***

கடந்த பொதுத் தேர்தலின் பொழுது, இந்தியாவின் அறிவுச் சுரங்கங்களாக கருதப்படும் ஐஐடியில் பயின்ற மாணவர்கள் சிலர் நன்கு திட்டமிட்டு தேர்தலில் போட்டியிட்டனர். அனைத்து தொகுதிகளிலும் இல்லை. ஒன்றிரண்டு தொகுதிகளில்தான்.

என்னவாயிற்று?

காப்புத் தொகையினை கூட பெறவில்லை என்று நினைக்கிறேன். இவர்கள் டாக்டர் பட்டங்களுக்கு தகுதியானவர்கள் என்றால், பெரும்பான்மை தொகுதிகளில் அநாயசமாக வெற்றி பெரும் கருணாநிதியோ, ஜெயலலிதாவோ பட்டங்களைப் பெறுவதற்கு தகுதியானவர்கள் இல்லையா?

சரி, தேர்தல்தான் இப்படி…அந்தக் கட்சியினையாவது தொடர்ந்து நடத்த முடிந்ததா? தேர்தல் முடிந்து ஒரு மாத காலத்திற்குள் பிளவு!

அண்ணாதுரை மறைவின் பொழுது மூன்றாவது இடத்தில் இருந்த கருணாநிதி, தலைமைக்கு வந்து ஏறக்குறைய நாற்பது ஆண்டு காலம் கட்சியினை காப்பாற்றி வரும் அறிவு, அரசியல் விஞ்ஞானம் முதுகலை பட்டம் பெறுபவரின் அறிவினை விட அதிகம்தான்.

அதே போல, எம்ஜிஆரின் மறைவிற்கு பின்னர் ஜானகி, ஜெயலலிதா என்று சமபலத்தில்தான் இருந்தனர். ஜானகியிடம் ஆட்சியும், வீரப்பன் போன்ற அனுபவசாலிகளும் இருந்தனர். ஆயினும், கட்சி முழுவதையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த ஜெயலலிதா புதுமை படைத்தவரில்லையா?

கருணாநிதி கல்லூரி சென்று படித்தவரல்ல. ஆனால் அவரது தமிழறிவு இன்று தமிழக கல்லூரிகளில் முதுகலை தமிழ் படிக்கும் எந்தவொரு மாணவருக்கும் குறைந்ததாயிருக்காது. பல்கலைக் கழகங்கள் அவரை கெளரவிப்பதால் தங்களை தாழ்த்திக் கொள்வதில்லை.

பில் கேட்ஸுக்கு ஆமதாபாத் ஐஐஎம்மில் இடம் கிடைத்திருக்காது. ஆனால், இன்று அங்கு படிக்கும் மாணவர்கள் அவரது வியாபாரத்திறமையினை ஆராய்கின்றனர். வியாபார நிர்வாகத்தில் டாக்டரேட் அளிக்க முதுகலை பட்டம் பெறாத பில் கேட்ஸ் தகுதியானவர்தானே!

ஜேப்பியார்?

கான்ஸ்டபிளாக தனது வாழ்வினை துவக்கியவர்…..அரசியல் கட்சியின் நிர்வாகத்தில் தனது திறமையினை வெளிப்படுத்தியன் காரணமாகத்தானே, இன்று ஒரு கல்விக் கழகத்தினை நிர்வகிக்கிறார். முறையான கல்வியின் பெறும் ஒரு நபர் இந்திய ஆட்சிப்பணியிலமர்ந்து ஒரு அரசு நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் அமருவதை தனது லட்சியமாகக் கொள்கிறார். அதே போன்ற ஒரு பணியினை எங்கோ ஒரு மீனவக் குடும்பத்தில் பிறந்த ஜேப்பியாரும் கைப்பற்ற முடிந்ததென்றால், அதற்கு அவரது அதிஷ்டம் காரணம் என்றால் அது வயிற்றெரிச்சல் அன்றி வேறில்லை!

விஜய்?

விஜய் மோசமான ஒரு நடிகராக இருக்கலாம். ஆனால், தமிழ் திரையுலகில் ரஜினி, கமலுக்கு பின்னர் விநியோகஸ்தர்களால் நம்பப்படும் ஒரு நடிகர். இந்நிலைக்கு அவர் உயர்ந்தது, சந்திரசேகருக்கு மகனாக பிறந்தது மட்டுமா?

பல திரைப்பட நடிகர்களும், தயாரிப்பாளர்களும், இயக்குஞர்களும் தங்கள் வாரிசுகளை களமிறக்குகிறார்கள். அனைவரும் ஜெயிப்பதில்லை.

தனது ஆரம்ப காலத்தில், அவர் சந்தித்த கிண்டலும் கேலியும் பழைய ஊடகங்களை புரட்டியவர்களுக்கு தெரியும். அவரை அறிமுகப்படுத்தியதில் சந்திரசேகருக்கும், விஜயகாந்திற்கும் பங்கிருக்கலாம். புதிய பாதையினை காட்டியதில் பாசிலுக்கு பங்கிருக்கலாம்…பின்னர் வெற்றியினை தக்க வைத்துக் கொண்டதும், வேகமான் ஒரு ஸ்டைலினை தனக்கென உருவாக்கிக் கொண்டதும் அவரது திறமையின்றி வேறில்லை!

எனவே, இவர்கள் சாதனையாளர்களே….இவர்களது சாதனைகள் சமுதாயத்திற்கு எவ்வளவு தூரம் பயனுள்ளது என்பது கேள்வியில்லை! ஆனால் கெளரவ டாக்டர் பட்டம் இல்லை….முனைவர்கள் என்று தமிழில் அழைக்கத் தகுந்த பட்டத்திற்கு தகுதியானவர்கள்தாம்.


***

நான், மதுரையில் தொழிலினை தொடங்கிய புதிதில் நாகர்கோவிலில் இருந்து ஒரு நபர் என்னிடம் வந்தார். அங்கு புதிதாக ஆரம்பிக்கப்படும் மருத்துவக் கல்லூரியில் தற்காலிக பணியாக ‘அலுவலக உதவியாளர்கள்’ தேர்ந்தெடுக்கப்படுவதாகவும், தனக்கு அந்த வேலையில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் கூறினார். காரணம், அவரது நிலம் முன்பு ரயில் நிலையத்திற்காக அரசால் ஆர்ஜிதம் செய்யப்பட்டதாம். அதற்கு ரயில் நிர்வாகம் அளிக்கும் வேலையில் முன்னுரிமை வழங்க கோரலாம் என்று தெரிவித்தேன்.

பேச்சு வாக்கில் அவரது கல்வித் தகுதி என்ன என்று கேட்டேன். முதுகலை விலங்கியல் என்றவர், மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் டாக்டரேட் கூட வாங்கியிருக்கிறேன் என்று கூறினார்.

இன்றும் மனதில் வலித்துக் கொண்டிருக்கிறது!


மதுரை
08.09.07

18 comments:

பாலராஜன்கீதா said...

//‘அறிவு என்பது ஒரு வருட பாடத்திட்டத்தினை ஒரு வார காலத்தில் மனப்பாடம் செய்து மூன்று மணி நேரத்தில் எழுதிக் குவிப்பதுதான்’ என்றால் நிச்சயம் நான் கூற வருவது தவறாக இருக்கலாம்… //

தங்களின் கருத்துக்கு முற்றிலும் உடன்படுகிறேன்.

//ஆனால் அறிவும், சாதனையும் கல்விக்கூடங்களுக்கு வெளியேயும் கொட்டிக்கிடக்கிறது என்பதுதான் உண்மை.//

மாணவர்களின் நினைவாற்றலுக்குத்தான் நம் கல்விக்கூடங்கள் மதிப்(பெண்கள்)பு தருகின்றன என்றும்கூட சொல்லலாம்.

சிவபாலன் said...

சார்

என்ன இப்படி சொல்லிடீங்க..

சரி அறியாமை என வைத்துக்கொள்வோம்.

ஆனால் அந்த பட்டம் பெற்றவர்கள் தங்கள் சுயலாபத்திற்கு பயன்படுத்திக்கொண்டு தான் எதோ படித்து பட்டம் வாங்கியது போல் அறிவித்துக்கொள்கிறார்கள்.

இந்த பட்டங்கள் பெற்றவர்கள் இது ஒன்றும் பெரிய விடயமே இல்லை என்ற மனோபாவத்துடன் ஆரம்பம் கொண்டே இருந்திருந்தால் இது விவாதப் பொருளாகியிருக்குமா என்பது சந்தேகமே..

ஆக கொடுப்பவனும் பெறுபவனும் தம்பட்டம் அடித்துக்கொள்வதால் வரும் எரிச்சல் மற்றும் நமக்கும் இது போல் கிடைக்கவில்லை என்ற ஆதங்கம்,ஆசை என்று கூட சொல்லலாம்..

எனினும் உங்கள் பார்வை நல்ல தொரு விவாதம்.

நன்றி

மு. சுந்தரமூர்த்தி said...

பிரபு,
முறையான வழியில் டாக்டர் பட்டம் பெறமுடியாத, அதற்குத் தேவையான அடிப்படையான முன் தகுதிகள் இல்லாதவர்கள், வெளிபடுத்தும் அறிவாளுமைக்காக (scholarship) வழங்கப்படுவது தானே ஒருவரின் சாதனைக்காக (achievment) அல்லது பிரபலத்துக்காக (popularity) அல்ல. கருணாநிதியைத் தவிர நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பிரபலங்கள் எந்த வகையில் scholarship ஐ வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என்று விளக்குங்கள் பார்ப்போம்.

Doctor Bruno said...

இது சற்றும் சம்மந்தம் இல்லாத பின்னூட்டம்.... sorry for the trouble

THis is a question asked in PG Medical Entrance Exam (Kerala PG in year 2000)

Which of the following statements about the award of capital punishment to a pregnant woman sentenced to death is correct. Death sentence cannot be carried out
a. Until Delivery
b. Until 6 months after birth of child
c. Until 1 year after birth of child
d. Until 2 years after birth of child

சட்டம் சார் மருத்துவ புத்தகங்களில் விடை இல்லை... உங்கள் உதவி தேவை :)

PRABHU RAJADURAI said...

சுந்தரமூர்த்தி,

நான் எழுதியது மேற்போக்கான எனது எண்ணம். அறிவாளுமை, சாதனை என்று வேறுபடுத்தி தெளிவுபடுத்தியதற்கு நன்றி!

நான் கூற வந்தது ஏன் டாக்டர் பட்டங்களோடு கெளரவ டாக்டர் பட்டங்களை குழப்பிக் கொள்ள வேண்டும் என்று!

ஜெயலலிதாவுக்கு வேதியியல் துறையில் அறிவாளுமை கொண்டார் என்றா பட்டம் கொடுத்தார்கள்? வாழ்க்கையில் ஜெயிப்பதும், பிரபலமாவதும் அறிவாளுமையின் வெளிப்பாடுதானே!

சிவபாலனின் வலைப்பதிவினை நாளை ஒரு கோடி வலைப்பதிவர்கள் படிக்க நேர்ந்தால், அதற்கான அவரது திட்டமிடல் அறிவாளுமைதானே :-))

பொதுவாக நான் இங்கு விவாதிப்பதில்லை. நீங்கள் கூறும் விதிப்படி என்றால் அதுவும் சரிதான் என்பது போல இருக்கிறது.

சரி, விடுங்கள்...தகுதியில்லாதவர்கள் சிலர் சில சமயம் முனைவர் பட்டம் பெறுவதில்லையா...அது மாதிரி

PRABHU RAJADURAI said...

Doctor Bruno,

Criminal Procedure Code stipulates that the exeuction to be postponed. It is not clarified, till what time. The omission seems to be deliberate to allow courts and state to prescribe the same in accordance with the situation.

Each state has its own Jail Manual. I shall find out, and shall come with the answer in my next blog.

However the same section in CrPC further enjoins the court to commute the death sentence on pregnant woman into life sentence. Hence the possibility of pregant woman to be sent to gallows is nil in India.

Academically, the answer to your question is till childbirth.

Sundararajan said...

சில வருடங்கள் முன்பு திருவல்லிக்கேணியின் மேன்ஷன் ஒன்றில் தங்கியிருந்தபோது, பக்கத்தில் உள்ள "மீசைக்கார தமிழறிஞரி"ன் புத்தகக்கடையில் வேலை செய்யும் ஒருவர் பக்கத்து அறையில் தங்கினார்.

மீசைக்கார தமிழறிஞர் மிகக்குறைந்த ஊதியமே வழங்குவதாகவும், அது தமது சாப்பாட்டுக்கே போதவில்லை என்றும் அந்த பக்கத்து அறை நண்பர் கூறினார்.

என்ன படித்திருக்கிறீர்கள்? வேறு வேலைக்கு முயற்சிக்கலாமே? என்று அவரிடம் கேட்டபோது அவர் கூறிய பதில் தூக்கி வாரிப்போட்டது.

சென்னைப்பல்கலைக்கழகத்தில் காந்திய சிந்தனையில் முனைவர் பட்டம் வாங்கியவர் அவர். பிறகு அவரிருடைய "பசிப்பிணி" போக்குவதற்காக ஒரு மெஸ்ஸில் வேலைக்கு சேர்த்து விட்டோம்.

சற்று நெருங்கிய பழகிய அவர், நான் சட்டம் படித்தவன் என்று தெரிந்ததும் அவர் ஊரில் நடந்த கந்துவட்டி கொடுமை ஒன்றை கூறினார். அதுகுறித்து போலிசில் புகார் கூறினீர்களா என்று கேட்டேன்.

தனக்கு தெரிந்த அமைச்சரி்ன் உதவியாளரிடம் புகார் கொடுத்திருப்பதாகவும் அவர் நடவடிக்கை எடுப்பார் என நம்புவதாகவும் கூறி நாலே வரியில் எழுதப்பட்ட கடிதம் ஒன்றைக் காட்டினார்.

பல பேராசிரியர்களுடன் பழகி முனைவர் பட்டம் குறித்த "பட்டறிவு" பெற்றிருந்த எனக்கு இது எந்த ஆச்சரியத்தையும் கொடுக்க வில்லை. (அப்போது செய்தித்துறையில் பணியாற்றினேன்)

சென்னைப் பல்கலைக்கழகத்தில் உள்ள பேராசிரியர் ஒருவருடன் பேசும்போது, பேச்சுவாக்கில் மரபணு மாற்ற வேளாண்மை குறித்தும் குறிப்பிட்டேன். அதற்கு அவர் அதெல்லாம் இந்தியாவிற்கு வந்துவிட்டதா? என்று கேள்வி எழுப்பினார். இதில் வேடிக்கை என்னவென்றால், அந்த சம்பவத்திற்கு சில நாட்கள் முன்பாகதான் கோவையில் மரபணு மாற்றப் பயிர் சாகுபடி செய்த வயலில் உழவர்கள் இறங்கி அந்த பயிர்களை பிடுங்கிப்போட்டு, அது அனைத்து செய்தித்தாள்களிலும் செய்தியாக வந்திருந்தது.

இதுதான் முனைவர் பட்டம் பெற்றவர்களின் நிலை என்றாலும், அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள் ஆகியோர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடு்ப்பதை ஏற்க முடியாது.

தறுதலை said...

//பில் கேட்ஸுக்கு ஆமதாபாத் ஐஐஎம்மில் இடம் கிடைத்திருக்காது//

லாலு லாலு

பில்கேட்ஸ் வரைக்கும் போவேனாம். நம்ம லாலூ போதும்.

----------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது.

Anonymous said...

அதெல்லாம் சேரிங்கண்ணா,இந்த டாக்டர்களும் கிராமத்துல ஒரு வருசம் பணி புரியோணுங்களா?

Unknown said...

//பில் கேட்ஸுக்கு ஆமதாபாத் ஐஐஎம்மில் இடம் கிடைத்திருக்காது. ஆனால், இன்று அங்கு படிக்கும் மாணவர்கள் அவரது வியாபாரத்திறமையினை ஆராய்கின்றனர். வியாபார நிர்வாகத்தில் டாக்டரேட் அளிக்க முதுகலை பட்டம் பெறாத பில் கேட்ஸ் தகுதியானவர்தானே!//

கண்டிப்பாக தகுதியானவர் கிடையாது.

சோதனை சாலை எலிகளை அறுத்து ஆராய்ச்சி செய்கிறோம்.அதனால் அவற்றுக்கு முனைவர் பட்டம் வழங்க முடியுமா?அதேபோல் பில்கேட்சின் நிர்வாக தந்திரங்களை ஆராய்ந்தால் அதற்காக அவருக்கு டாக்டர் பட்டம் வழங்க முடியாது.

ராஜேஷ்குமார் நாவல்களின் பெண்ணிய போக்கு என்ற தலைப்பில் யாராவது முனைவர் பட்டம் வாங்கினால் அதற்காக ராஜேஷ்குமாரும் முனைவர் பட்டம் பெற தகுதியானவர் என்று அர்த்தம் அல்ல.முனைவர் பட்டம் பெற ஆராய்ச்சி செய்யும் திறன் இருப்பது அவசியம்.அத்திறனற்ற பில்கேட்சுக்கு அந்த பட்டம் பெற தகுதி இல்லை.

//‘அறிவு என்பது ஒரு வருட பாடத்திட்டத்தினை ஒரு வார காலத்தில் மனப்பாடம் செய்து மூன்று மணி நேரத்தில் எழுதிக் குவிப்பதுதான்’ என்றால் நிச்சயம் நான் கூற வருவது தவறாக இருக்கலாம்…//

புதரகத்தில் மற்றும் முனைவர் பட்டத்தில் அறிவு இம்மாதிரி அளவிடப்படுவதில்லை.இது தமிழக கல்வி முறை.

//ஆனால் அறிவும், சாதனையும் கல்விக்கூடங்களுக்கு வெளியேயும் கொட்டிக்கிடக்கிறது என்பதுதான் உண்மை.//

ஆராய்ச்சி செய்யும் திறன் பல்கலைகழக கல்விக்கு வெளியே கண்டிப்பாக கொட்டி கிடக்கவில்லை.அத்திறன் இல்லாமல் ஒருவர் முனைவராக முடியாது.

//காப்புத் தொகையினை கூட பெறவில்லை என்று நினைக்கிறேன். இவர்கள் டாக்டர் பட்டங்களுக்கு தகுதியானவர்கள் என்றால், பெரும்பான்மை தொகுதிகளில் அநாயசமாக வெற்றி பெரும் கருணாநிதியோ, ஜெயலலிதாவோ பட்டங்களைப் பெறுவதற்கு தகுதியானவர்கள் இல்லையா?//

டெண்டுல்கருடன் டென்னிஸ் விளையாடி அவரை ஜெயித்தேன்.அதனால் டெண்டுல்கருக்கு கிடைக்க வேண்டிய மேன் ஆஃப் த மாட்ச் விருதுக்கு நானும் தகுதியானவன் என்கிற மாதிரி இருக்கிறது இது.

மற்றபடி "ஜேப்பியார்,கருணாநிதி,ஜெயலலிதா,விஜய்..இவர்களெல்லாம் கவுரவ டாக்டர் பட்டம் பெற தகுதியானவர்கள்" என்று சொல்லிவிட்டீர்கள்.அதற்கு நோ கமெண்ட்ஸ்:)
ஆனால் பதிவுலகில் சாதனை படைக்கும்(!) நானும் டாக்டர் பட்டம் பெற தகுதியானவன் என்பதை மட்டும் அடக்கத்துடன் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்:)

Boston Bala said...

Ph.D. recommended for student even before thesis is received | சற்றுமுன்...

Anonymous said...

//கருணாநிதியைத் தவிர //

Dr.Salim Ali
Dr.Vishwanathan Anand

Anonymous said...

Dr. Abdul Kalam

மு. சுந்தரமூர்த்தி said...

Dr. Bruno,

மு. சுந்தரமூர்த்தி said...

Dr. Bruno,
I picked Karunanidhi's name from the list of people Prabhu mentioned. As for the names you mentioned, Salim Ali has a distinguished record of publishing scholarly work on ornithology, and certainly deserves honorary doctorate. Viswanathan Anand is a grand master of chess. Perhaps he has written on chess or other things, but I do not know.

PRABHU RAJADURAI said...

"Viswanathan Anand is a grand master of chess. Perhaps he has written on chess or other things, but I do not know"

Sundaramurthy,
doctorate honris causa....spreads beyond your definition. You still wants to restrict it to only scholarly work in paper, like Salim Ali's case.

I still differ from you. Salim Alis contribution is akin to the contributions of other scholarly persons. However honoris causa also recognises those who exhibit innovation and intelligence, no matter whether they have to skill to put it on paper or not...

Dr.Kalam?

why dont some one start a debate whether he is a scholar, engineer or a scientist?

மு. சுந்தரமூர்த்தி said...

//doctorate honris causa....spreads beyond your definition. You still wants to restrict it to only scholarly work in paper//

பிரபு,
என்னுடைய முந்தைய பின்னூட்டத்தில் scholarship வெளிப்படுத்துவது சம்பந்தமாகக் குறிப்பிட்ட "கருணாதியைத் தவிர" என்ற வார்த்தைகளை மேற்கோளிட்டு, சலீம் அலி, விஸ்வநாதன் ஆனந்த் பெயர்களை ப்ரூனோ சேர்த்திருந்ததால் அவ்விருவரின் scholarship பற்றி பேசுகிறார் என்று நினைத்து அவருர்களுடைய scholarly work பற்றி எனக்கு தெரிந்ததை/தெரியாததை சொல்லியிருந்தேன். அவர்கள் கௌரவ டாக்டர் பட்டத்திற்கு தகுதியானவர்களா இல்லையா என்று எதுவும் சொல்லவில்லை.

PRABHU RAJADURAI said...

Thank you Sundaramurthy for your comments, in fact apt definition "முறையான வழியில் டாக்டர் பட்டம் பெறமுடியாத, அதற்குத் தேவையான அடிப்படையான முன் தகுதிகள் இல்லாதவர்கள், வெளிபடுத்தும் அறிவாளுமைக்காக (scholarship) வழங்கப்படுவது தானே ஒருவரின் சாதனைக்காக (achievment) அல்லது பிரபலத்துக்காக (popularity) அல்"

I take pleasure in defending underdogs...my attempt to defend JPR or Vijay can be explained that way...

The discussion ends in this blog...but love to hear more from you on this subject in your blogs, whenever the occasion arises.