27.12.08

'கஜினி'யும், ஹிட்லர் சொன்னதும்...


கஜினி.....

மும்பை பயங்கரவாத தாக்குதலாலும் அதனைத் தொடர்ந்த தொலைக்காட்சி ஊடகத்தாக்குதல்களாலும் ஏற்ப்பட்டுள்ள விளைவுகளைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் வெளியிடப்பட்டுள்ள திரைப்படம். அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதல்களுக்கு பின்னர் புதிய பட வெளியீடுகளை ஹாலிவுட்டு நிறுவனங்களே தள்ளிப் போட்டன என்று படித்திருக்கிறேன்.

ஆனாலும், கஜினி தயாரிப்பாளர்கள் நம்புவது, படத்தில் செலவில் சுமார் 30 சதவீதத்தினை முழுங்கிய விளம்பரத்தினை.

சும்மாவா பின்னே...நமது தொலைக்காட்சி ஊடகங்கள் தேசபக்தியை வளர்ப்பதில் மிஞ்சிய நேரத்தை கஜினியை விற்பதில் செலவிடுகின்றன. அந்த ஊடகத்தாக்குதலில், இந்தியர்கள் மறந்து போனது ‘இந்திய திரைப்பட உலகின் மகா தயாரிப்பான (magnum opus) கஜினி’ மெமண்ட்டோ (Memento) என்ற ஆங்கிலப்படத்தின் தழுவல்’ என்பதை.

இந்த ‘தழுவல்’ என்பது காப்பி என்பதன் நாகரீகமான வார்த்தையாக இருக்கலாம். ஆனால் இந்திய காப்பி ரைட் சட்டப்படி ‘தழுவுதல்’ (adaptation) என்பதும் ஒரு காப்பிரைட் மீறல்தான். சட்டத்தை தள்ளுங்கள்...தார்மீக உரிமை?

ஐயா, தழுவுங்கள் அல்லது காப்பியடியுங்கள்...ஆனால் தயவு செய்து அதனை ஒத்துக் கொள்ளுங்கள். இணையத்தில் தேடினால்...அமீர் கான் கொஞ்சம் கூட கூச்ச நாச்சம் இல்லாமல், ‘கஜினி மெமண்டோவின் தழுவல் கூட இல்லை’ என்கிறார். இதற்கு பேசாமல், கஜினி பார்க்க காசு கொடுப்பவர்களுக்கு ஆளுக்கொரு செருப்படி கொடுத்திருக்கலாம்.

***

நம்ம ஊர் இயக்குஞர் மணிரத்னம் ‘இந்தியாவின் ஸ்பீல்பெர்க்’ என்று புகழப்படுவதும், கொஞ்சம் சங்கோஜமாகத்தான் இருக்கிறது. ஏனெனில், மற்ற திரைப்படங்களிலுள்ள சிறப்பான காட்சிகளை தழுவுவதும், காப்பிரைட் முறைகேடுதான்

இந்த ஒரு காரணத்திற்காகவே, எந்த ஒரு ராமராஜன் படமும், இந்தியாவின் முக்கிய படங்களுள் ஒன்றாக பட்டியலிடப்பட்ட நாயகன் படத்தை விட சிறந்த படம் என்று என்னால் கூற முடியும்.

கரகாட்டக்காரன் தவிர, ஏனெனில் அது தில்லானா மோகனாம்பாளின் தழுவல்!

***

தமிழகத்தின் தலைசிறந்த திரைப்பட அறிவுஜீவியாக புகழப்படும் கமல்ஹாசன் கூட தனது ‘அவ்வை சண்முகி’ படம் என்பது ஆங்கிலப்பட தழுவல் என்பதை தனது ரசிகர்களுக்கு துணிச்சலாக தெரியப்படுத்தினாரா என்பது தெரியவில்லை.

பிக்காசோவின் எந்த ஒரு ஓவியத்தையும், அசலைப்போலவே உருவாக்கும் ஓவியர்கள் உண்டு. ஆனால் அவர்கள் யாருக்கும் பிக்காசோவின் புகழில் ஒரு சதவீத பங்கினைக் கூட உலகம் அளிப்பதில்லை.

***

இந்தியாவின் முக்கிய திரைப்படமும், மூத்த இயக்குஞரும், முன்னணி நடிகரும் இப்படியென்றால்...என்ன சொல்வது?

நம்மவர்கள் வெள்ளையர்களை விட அறிவில் கொஞ்சம் குறைந்தவர்கள் என்றா?


மதுரை
271208

22.12.08

பயங்கரவாதமும், சட்ட உதவியும்...


மும்பை பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, ‘பிடிபட்ட தீவிரவாதிக்கு வழக்குரைஞரின் உதவி அளிக்கப்படலாமா, கூடாதா?’ என்ற ஒரு கேள்வி எழுப்பப்பட்டு ஊடகங்களிலும் விவாதிக்கப்பட்டு வருகிறது. தானாக முன்வந்து மனு தாக்கல் செய்த வழக்குரைஞரின் வீடு சிவசேனா தொண்டர்களால் தாக்கப்பட்டுள்ளது.

சிவசேனை தொண்டர்கள், நாட்டுப்பற்றினை தங்களது செயலுக்கு காரணமாக கூறினாலும், அவர்களது கோரிக்கை தொலை நோக்குப் பார்வையில் (in long term) நாட்டு நலனுக்கு சாதகமாக இருக்கப் போகிறதா என்றால், சந்தேகமே!

-oOo-

எந்த ஒரு சட்டமுறையின் அடிப்படை விதி ‘Audi Altrem Partem’ என்பதாகும். இதன் அர்த்தம் ‘இரு தரப்பிரனரையும் கேட்க வேண்டும்’ (hear the other side). இந்த விதியினை மீறி சர்வாதிகாரமென்றாலும் சரி, மக்களாட்சியென்றாலும் சரி ஒரு விசாரணையை நடத்தி விட முடியாது.

எனவே மும்பையில் பிடிபட்ட தீவிரவாதிக்கும் தனது தரப்பு வாதத்தினை வைக்க வாய்ப்பளித்துதானாக வேண்டும். அவ்வாறு அளிக்கப்படும் வாய்ப்பானது, உண்மையான ஒன்றாக இருக்க வேண்டுமென்றால் அதற்கு சட்டமுறையினை அறிந்த ஒரு வழக்குரைஞரின் உதவி தேவை.

அவ்வாறான உதவி வழங்கக் கூடாது என்பது, ஏறக்குறைய ‘விசாரணையே கூடாது. அப்படியே தூக்கில் போட்டுவிட வேண்டியதுதான்’ என்று கூறுவதற்கு சமமானது. பயங்கரவாதத்திற்கு எதிரான வலிமை மிக்க ஆயுதம் சட்டத்தின் முறையே (due process of law) தவிர கங்காரு நீதிமன்றங்கள் இல்லை. அவை உடனடி வலி நிவாரணி போல செயல்படலாம். ஆனால் நோய் தீர்க்கும் மருந்து இல்லை.

குற்றம் சாட்டப்படுபவருக்கு, ஒரு வழக்குரைஞரின் உதவி மறுக்கப்படும் விசாரணை முறையும் உண்டு. அதாவது அலுவலர் (Employee) ஒருவர் மீது எடுக்கப்படும் ஒழுங்கீன நடவடிக்கை விசாரணைகளில் (disciplinary proceedings/ domestic enquiry) வழக்குரைஞரின் உதவியினை ஒரு உரிமையாக கோர இயலாது. ஆனால், நிறுவனம் (Management) ஒரு வழக்குரைஞரை தனக்கு உதவியாக வைத்துக் கொண்டால், குற்றம் சாட்டப்பட்டவரும் (delinquent) வழக்குரைஞரின் உதவியினை உரிமையாக கோர இயலும்.

மும்பை பயங்கரவாதி விடயத்திலும், அரசு தனது வழக்குரைஞர் (Public Prosecutor) மூலம் வழக்கு நடத்துகையில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு வழக்குரைஞரின் உதவி கூடாது என்றால், அந்த விசாரணை ஒரு கண்துடைப்பாகவே உலகின் கண்களில் பார்க்கப்படும்.

-oOo-


மேலும் இந்த விடயம், விவாதத்திற்குறிய ஒன்றாக வைக்கப்படுவது, ஒரு வழக்குரைஞரின் பணி என்பது சரிவர புரிந்து கொள்ளப்படாத நிலையினையே உறுதிப்படுத்துகிறது என எண்ணுகிறேன்.

நமது நாட்டிலுள்ள சட்ட முறையின்படி ஒரு வழக்குரைஞர் தனது கட்சிக்காரருக்காக நீதிமன்றத்தின் நான்கு சுவர்களுக்குள்ளாக மட்டுமே வாதிட கடமைப்பட்டவர். ஆனால், தற்பொழுது இங்கும் ஐக்கிய அமெரிக்க நாடுகளைப் போல, வழக்குரைஞர்கள் தொலைக்காட்சி முன் தங்களது கட்சிக்காரருக்காக பேட்டி கொடுக்கும் ஒரு விரும்பத்தகாத நிலை ஏற்ப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றக்கூடிய மூத்த வழக்குரைஞர்கள் கூட இதை உணர்வதில்லை!

நீதிமன்றத்திற்கு வெளியே ஒரு வழக்குரைஞர், தனது கட்சிக்காரர் குற்றமற்றவர் என்று கூறினால், அடுத்த கணமே அவர் அந்த கட்சிக்காரருக்காக ஆஜராகும் உரிமையை இழப்பார் என்பதுதான் உண்மை. தனது கட்சிக்காரர் குற்றமற்றவர் என்று அவரால் கூற முடியுமென்றால், அவரது கட்சிக்காரர் செய்த செயலைப் பற்றி அறிந்த ஒரு சாட்சியாக மாறுகிறார். அந்த வழக்கில் அவரே ஒரு சாட்சியாக மாறும் பொழுது, அதில் வழக்குரைஞராக நீடிக்கும் அருகதை அவருக்கு கிடையாது. ஆயினும் வழக்குரைஞர்களில் விளம்பர மோகத்தில், இத்தகைய ஒரு போக்கு இங்கு வளர்ந்து வருகிறது.

இவ்வாறாக ஒரு வழக்குரைஞர், கட்சிக்காரரின் நலனுடன் தன்னுடைய நலனினையும் (identifyin with the cause of the client) பொருத்தும் ஒரு நிலையில், இத்தகைய விவாதங்கள் எழுவது இயல்பே!

ஆனால் ஒரு வழக்குரைஞர் என்பவர் சட்ட முறைகளை அறியாத ஒருவருக்காக பின்னணி (அல்லது முன்னணி) குரல் கொடுப்பவர் மட்டுமே.

-oOo-


வழக்குரைஞர்களின் தொழிலை வரைமுறைப்படுத்தும் சட்டம் வழக்குரைஞர்கள் சட்டம் (The Advocate’s Act’1961) இந்த சட்டத்தின் கீழ் வழக்குரைஞர்களுக்கான நடத்தை விதிகள் வகுக்கப்பட்டுள்ளன (Standards of Professional Conduct and Etiquette). இந்த விதிகளில் ‘ஒரு வழக்குரைஞர் தனது கட்சிக்காரர் செய்த குற்றத்தினைப் பொருத்து தனது சொந்தக் கருத்து எதுவாக இருப்பினும், யாரும் தகுந்த ஆதாரங்கள் இன்றி தண்டிக்கப்படக்கூடாது என்பதை மனதில் வைத்து, தனது கட்சிக்காரரை பாதுகாக்க வேண்டும்’ என்று தெளிவாகவே கூறப்பட்டுள்ளது.

(15. It shall be the duty of an advocate fearlessly to uphold the interests of his client by all fair and honourable means without regard to any unpleasant consequences to himself or any other. He shall defend a person accused of a crime regardless of his personal opinion as to the guilt of the accused, bearing in mind that his loyalty is to the law which requires that no man should be convicted without adequate evidence)

இனியும், பயங்கரவாதிக்கு வழக்குரைஞர் உதவி கூடாது என்பது, நமது நாடு எவ்விதமான சட்ட முறைகளினால் உலகின் கண்களில் உயர்ந்து நிற்கிறதோ, அதற்கு குந்தகம் விளைவிக்கும் ஒரு வாதமே என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை.

-oOo-

இறுதியில், இந்த விடயத்தில் சுப்பிரமணியசுவாமி கூறிய ஒரு கருத்து கவனிக்கத்தக்கது. ‘பிடிபட்டவரை வெளிநாட்டு எதிரி (enemy alien) என்று அறிவித்து விடுங்கள். அவ்வாறு அறிவித்து விட்டால் நமது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் (Constitution of India) பிரிவு 22(1)ன்படி குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு தனக்கு பிடித்தமான வழக்குரைஞரை நியமித்துக் கொள்ளும் உரிமையினை பிடிபட்டவருக்கு மறுத்து விடலாம்’ என்பதாகும்.

உண்மைதான். ஆயினும் இதன் மூலம் பயங்கரவாதி தனது வழக்குரைஞரை தானே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமையினை மறுக்கலாம். ஆனாலும், அரசு அவருக்காக ஒரு வழக்குரைஞரை நியமிக்க வேண்டும். வழக்குரைஞரின் உதவியே கூடாது என்று கூற முடியாது!

அது இயற்கை விதிக்கு (Natural Justice) மாறானது!

மதுரை
221208

26.11.08

சட்டக்கல்லூரி வன்முறையும் சாருநிவேதிதாவும்...


இந்திரா காந்தி இறந்த செய்தி, கடைசியாக தெரிய வந்த இந்தியர், எம்ஜிஆராகத்தான் இருக்க முடியும் என்று கூறுவார்கள். அதுபோல சமீபத்தில் சென்னை சட்டக்கல்லூரில் நடைபெற்ற மோதலின் முழுவீச்சினையும் உணர்ந்த கடைசித்தமிழனாக இருக்கக்கூடிய வாய்ப்பு, எனக்கு கிடைக்கலாம் என்று நினைக்கிறேன்.

ஏனெனில், அடுத்த நாள் வழக்குரைஞர் சங்க கூட்டத்தில் இந்த விடயத்தின் மீதான விவாதத்தில் மற்றவர்கள் பேசிய பொழுதுதான், விடயம் மிகச் சேரியமானது என்பது எனக்கு விளங்கியது.

காலையில் செய்தித்தாள்களில் படங்களைப் பார்த்தாலும், வழக்கமாக நாம் கல்லூரியில் கேள்விப்படும் வன்முறைதானே என்றிருந்தது. வழக்குரைஞர் சங்கத்தில் ஈழத்தமிழர் பிரச்னையைப் பற்றி விவாதிக்க வேண்டும் என்று கூட்டத்தைக் கூட்டியிருந்தோம். ஆனால், அதை விட்டுவிட்டு, கல்லூரி வன்முறையினைப் பற்றி விவாதிக்க ஆரம்பித்த பொழுது, இதற்காக ஒரு கூட்டமா என்று நினைத்தேன்.

அப்பொழுதுதான், எனது நண்பர், வன்முறை முழுவதும் திரைப்படம் போல தொலைக்காட்சிகள் காட்டப்பட்ட விபரத்தினைக் கூறினார். பின்னர் மாலை வந்து மீண்டும் ஒருமுறை பத்திரிக்கையில் வந்த படங்களைப் பார்த்த பொழுது, ஓரளவுக்கு என்னால் அதனை ஒரு சலனப்படமாக கற்பனை செய்ய இயன்றது.

ஆயினும் இன்று வரை, மிகப்பெரிய ‘கொடூர’மென்று தமிழகமே பொங்கிப் பொருமினாலும் என்னால், அதில் பங்கு கொள்ள இயலவில்லை.

அஞ்சா நெஞ்சருக்கு மீண்டும் நன்றி!

-oOo-


சில வருடங்களுக்கு முன்னர், கும்பகோணத்தில் பள்ளிக்குழந்தைகள் எரிந்து மடிந்து போன விடயம், முதலில் தெரிய வந்த பொழுது மும்பையில் எனது அலுவலத்தில் இருந்தேன். யாஹூ குழும மடல் மூலமாக. அப்பொழுது அங்கு தனியாக இருந்தேன். உடனடியாக நான் எடுத்த முடிவு, தொலைக்காட்சி பக்கமே செல்லக்கூடாதென. பின்னர் இரண்டு வாரங்களுக்கு குறுந்தகட்டில் படங்கள் பார்ப்பதோடு மட்டுமே டிவியுடனான எனது தொடர்பினை வைத்துக் கொண்டேன்.

இதை எழுதுகையில் எனக்கு ஆங்கிலத்தில் ‘mediacracy’ என்ற வார்த்தையினை உருவாக்கலமா என்ற எண்ணம் பிறந்தது. கூகுளில் தேடினால் அது ஓர் அங்கீகரிக்கப்பட்ட வார்த்தையாக உருவாகி பல ஆண்டுகள் கடந்திருக்கும் போல. Mediarchy என்ற வார்த்தையும் உருவாகியிருப்பதும் புரிந்தது.

-oOo-


சட்டக்கல்லூரி வன்முறை பற்றி எழுத்தாளர் சாருநிவேதிதாவும் எழுதியிருக்கிறார். தவறில்லை யார் வேண்டுமென்றாலும் எழுதலாம். ஆனால், பில் கிளிண்டன் அதிபராக இருந்த பொழுது சாலை விதிகளை மீறி விட்டார் என்று அவரது மகளின் ஓட்டுநர் உரிமம் (‘தமிழ்’ எழுத்தாளரின் மொழியில் டிரைவிங் லைசன்ஸ்) பறிக்கப்பட்டதாக ஒரே போடாக போட்டிருக்கிறார். நான் அறிந்த வரையில் அதிபர் புஷ்ஷின் மகளின் உரிமம் தற்காலிகமாக தடை (suspend) செய்யப்பட்டது. அதுவும் சாலை விதிகளை மீறியதற்காக அல்ல...

தனது எழுத்தினை படிப்பதற்கு காசு வேண்டும் என்று கேட்பவர்கள், கூறும் விடயங்களில் கொஞ்சம் கவனம் எடுப்பது நல்லது. லத்தீன் அமெரிக்கா என்றால் பரவாயில்லை. இங்கு யாருக்கும் தெரியாது. வட அமெரிக்க செய்திகள்தான் விலாவாரியாக படிக்கக் கிடைக்கிறதே!

-oOo-
மதுரை
261108

25.10.08

நன்றி, அஞ்சா நெஞ்சர்களுக்கு...

மும்பையிலிருந்து மதுரைக்கு வருவதற்கு முன்பு, நாங்கள் எடுத்த ஒரு முக்கிய முடிவு, தொலைக்காட்சிக்கு கேபிள் இணைப்பு ஏதும், ஒரு வருடத்திற்காகவது பெறக்கூடாது. தொலைக்காட்சி இல்லாத வீடு எப்படித்தான் இருக்கிறது என்று பார்த்து விடலாம் என்று.

உண்மையிலேயே இனிமையான காலம் அது! காலை பாடலைக் கேட்டபடியே அலுவலகம் கிளம்ப முடிந்தது. விடுமுறை தின இரவுகளில், குறுந்தகடுகளில் நல்ல திரைப்படங்களை பார்த்து முடித்ததும், அதே நினைவுடன் படுக்கைக்கு செல்ல முடிந்தது.

முக்கியமாக வீட்டுக்கு வருபவருடன் முகம் பார்த்து பேச முடிந்தது...

-oOo-

டிசம்பர் மாதம் தமிழகத்தை தாக்கிய சுனாமி எங்களை அண்டவில்லை. பத்திரிக்கையில் படித்த செய்திகளோடு நின்று போனது சுனாமியின் தாக்கம். மனதைப் பிசையும் காட்சிகள் கண் முன்னே நிற்கவில்லை.

ஆனாலும் சுமார் ஒரு வருடம் கழித்து தற்செயலாக எடுத்த முடிவுதான்...கேபிள் இணைப்பு பெறலாம் என...மீண்டும் வந்து உட்கார்ந்து கொண்டது, சனியன்!

-oOo-

நேற்று மாலை வீடு திரும்புகையில், சுற்றுச்சுவர் கதவும் பூட்டியிருந்தது.

“ஆமா, ராயல் கேபிள் விஷனில் இருந்து வருகிறோம், இனி அவர்களிடம்தான் இணைப்பு பெற வேண்டும் என்று தொந்தரவு செய்தார்கள். அதான்”

“நம்ம ஆட்கள் என்ன சொல்கிறார்கள்”

“அவங்கல்லாம் இப்பத்தான், ரிமாண்ட்ல இருந்து வந்தாங்களாம். எல்லோரையும் போலீஸ் புடிச்சுக்கிட்டு போயிட்டாங்களாம். நீங்க டிடிஹெச் வாங்கிட்டீங்கன்னு சொல்லுங்கன்னு சொல்றாங்க”

“ஆமா, அப்படியே சொல்லிடு”

-oOo-

சிறிது நேரம் கழித்து, வேகமான வந்த மனைவி, ‘வெளியே நிறுத்தி வச்சிருந்த ஸ்கூட்டரில் என்னோட பர்ஸ வச்சிட்டு வந்திட்டேன். இப்ப காணோம்...மொபைல் போனும் போச்சி...அந்த ராய்ல் டிவிகாரங்கதான் தூக்கிட்டு போயிருக்கணும்”

உண்மைதான், எங்கள் வீடு டெட் எண்ட். வேறு யாரும் வருவதில்லை.


-oOo-

“கேபிளை கட் பண்ணிட்டாங்க. இனிமேல் நமக்கு வராது. அவங்கதான் ராயல்காரங்கதான்...”

இது வரை பத்திரிக்கையில் படித்தும், மற்றவர்கள் சொல்லக்கேட்டதுமான அராஜகம் இதோ என் கண் முன்னே எழுந்து நிற்க, ஏதும் இயலாதவனாகிப் போனவன் போல உணர்ந்ததில், பிறந்த அசதியிலும் அந்த வைராக்கியம் பிறந்தது.

“நமக்கு ஒருத்தனும் வேண்டாம்”

மதுரை
261008





Eravikulam National Park, Munnar

வைகோ கைது - அன்றும், இன்றும்...


ஏன் இவ்வாறு ஒரு நாட்டின் பிரதமரில் இருந்து கடைசிக் குடிமகன் வரை சட்டத்தை மீறும் நிலை ஏற்படுகிறது? ஏன் ஒரு மத்திய அமைச்சரே 'நான் தடை செய்யப்பட்டுள்ள இயக்கத்தினை இருபத்தைந்து முறை ஆதரித்துள்ளேன்' என்று கூற தைரியம் கொள்கிறார்?”

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிப்பதை சட்டம் போட்டு தடை செய்ய முயலும் அரசு ஒன்றினை மறந்து விட்டது. ஏதோ இந்த சட்டம் போட்டதால் மக்கள் ஆதரவளிப்பதிலிருந்து விலகவில்லை. அதற்கு முன்னரே நடந்த ராஜீவ் காந்தி கொலையே பெருமளவு காரணம். அந்த கொலையால் மக்களிடம் தோன்றிய பொதுக்கருத்தின் விளைவே விடுதலைப்புலிகள் இயக்கம் இங்கு தடை செய்யப்பட்டது. அந்த மக்களுக்கு தங்களது சிந்தனையில் அதே நிலையில் நீடிப்பதற்கும் காலப்போக்கில் மாற்றிக் கொள்வதற்கும் உரிமை இருக்கிறது



வைகோ தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ள சூழ்நிலையில், நான்கு வருடங்களுக்கு முன்னர் இட்லி வடை என்ற பதிவர் தனது வலைப்பதிவில் எழுதிய கருத்துகளுக்கு பதிலாக எழுதிய ஒரு கட்டுரையை மீண்டும் எடுத்துப் படித்தால்...இன்றைய சூழ்நிலையில் ஏதும் மாற்றம் இல்லை.......மக்களிடையே நான் கணித்த மனமாற்றம் தவிர...

அந்த பழைய கட்டுரை எனது வலைப்பதிவிலும் உள்ளது
http://marchoflaw.blogspot.com/2006/10/ii.html
http://marchoflaw.blogspot.com/2006/09/i.html


மதுரை
251008

24.10.08

நளினிக்கு கருணை, கானல் நீர்தானா? - 4


அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளுக்கு மன்னிப்பு (pardon) அளிப்பதற்கு குடியரசுத்தலைவர் மற்றும் மாநில அளுனர்களுக்கு உள்ள அதிகாரம் தவிர, அரசாங்கத்திற்கு தண்டனையைக் குறைக்கும் (commute) அதிகாரம் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 433ன் கீழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரத்தினை பயன்படுத்தி, அரசு நினைக்கையில் நளினிக்கோ அல்லது சராதானந்தாவுக்கோ தண்டனனயை குறைக்கலாம். இங்கு நாம் விவாதிக்கும் தீர்ப்பு, அரசின் இந்த அதிகாரத்தின் குறுக்கேயும் நிற்க முடியாது. ஏனெனில், நீதிபதிகள் அரசின் இந்த அதிகாரத்தினைப் பற்றி தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டாலும், அரசு இந்தப் பிரிவு அளிக்கும் அதிகாரத்தினைப் பயன்படுத்தி தண்டனையை குறைக்க இயலாது என்றும் கூறவில்லை.


குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள இதே அதிகாரம் இந்திய தண்டனன சட்டம் பிரிவு 54 மற்றும் 55ன் கீழும் அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது.


ஆனால் பிரிவு 433Aன் படி ஒருவரின் மரணதண்டனையானது ஆயுள் தண்டனையாக இந்தப் பிரிவின்படி குறைக்கப்பட்டால், அவர் குறைந்தபட்சம் 14 ஆண்டுகள் சிறையில் கழிக்காமல் விடுதலை பெற முடியாது. இந்த 14 ஆண்டு கட்டுப்பாடே ஆயுள் தண்டனை என்றால் 14 ஆண்டுகள்தான் என்ற தவறான எண்ணம் சாதாரண மக்களில் மனதில் தோன்ற காரணம்.


-oOo-


குற்றவாளிக்கு மன்னிப்பு மற்றும் தண்டனை குறைப்பு தவிர தண்டனை தள்ளுபடி (remission) என்பதும் உள்ளது. குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 432ன் படி குற்றவாளியானவர் தனது தண்டனையினை தள்ளுபடி செய்ய கோரலாம். இந்த தள்ளுபடியானது, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் மட்டுமல்லாமல், சிறை விதிகள், மற்றும் பிற விதிமுறைகளின்படியும் கோரலாம்.


இவ்விதமான தள்ளுபடிகளை கணக்கிட ஒருவரது சிறைக்காலம் அறுதியிட்டாலே இயலும். உதாரணமாக, ஒருவருக்கு ஐந்தாண்டுகள் தண்டனை என்றால், ஆண்டுக்கு இத்தனை நாட்கள் என அவருக்கு விதிகளின்படி கிடைக்கும் தள்ளுபடியினை கணக்கிட்டு விடலாம்.


ஆனால் ஆயுள்தண்டனை என்பதில் தள்ளுபடி அளித்தாலும், ஆயுள் தண்டனை ஆயுள் தண்டனையாகவே இருக்கும். கணிதத்தில் ‘இன்பினிட்டி’ (infinity) போல. இதைத்தான் நீதிபதிகள் சுட்டிக்காட்டி ஆயுள் தண்டனைக்கு தள்ளுபடி என்பது கிடையாது என்று குறிப்பிடுகிறார்கள்.


பொதுவாக, அரசு ஆயுள் தண்டனையினை 20 ஆண்டு காலம் என்று கருதி ஒரு உத்தரவு பிறப்பித்து பின்னர் 20 ஆண்டுகளுக்கான தள்ளுபடிகளை கணக்கிடுகிறது. 20 ஆண்டுகளுக்கு சுமார் 6 காலம் அதிகபட்சம் தள்ளுபடி கிடைக்கும். இவ்வாறான முறையில்தான் அரசு ஆயுள் தண்டனை பெற்ற நபர்களை 14 ஆண்டுகளில் விடுதலை செய்கிறது. அதனால்தான் கோட்சே, நளினி போன்றவர்கள் தாங்கள் 14 ஆண்டு காலம் சிறையில் கழித்து விட்டதால் விடுதலை செய்ய வேண்டும் என்று கோருகிறார்கள்.


இந்த முறையினையே உச்ச நீதிமன்றம் சராதானந்தாவின் வழக்கில் தவறு என்று கூறுகிறது. அதாவது அரசு எவ்விதம் இவ்வாறு ஆயுள் தண்டனை என்பது 20 வருடம் என கருதுகிறது என்ற கேள்வியினை எழுப்பி அதற்கு சட்டபூர்வமான அதிகாரம் இல்லை என்கிறது.


இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 57ல் தண்டனையை வகுக்கும் தேவை நேர்ந்தால் ஆயுள் தண்டனையை 20 ஆண்டுகள் என கணக்கிடலாம் என்று உள்ளது. உதாரணமாக பிரிவு 511ன் படி ஏதாவது குற்றத்தினை செய்ய முயன்றால் அந்த குற்றத்திற்கான தண்டனையில் பாதி தரலாம் என்று உள்ளது. அதே போல ஒருவர் குற்றம் செய்ய தூண்டி (abet) பின் அந்த குற்றம் செய்யப்படாமல் போனாலும், தூண்டியவர் அந்தக் குற்றத்திற்கான தண்டனையில் கால் பகுதி தரலாம் என்று பிரிவு 116 கூறுகிறது. இம்மாதிரி காரணங்களுக்காகவே 20 வருட கணக்கே தவிர ஆயுள் தண்டனை 20 ஆண்டு என்று எடுத்துக் கொள்வதாக உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளதை நீதிபதிகள் சுட்டிக்காட்டுகின்றனர். அந்தக் கருத்து சரியானதே!


ஆயினும் நீதிமன்றம் கவனிக்கத் தவறிய ஒரு விடயம், இன்றுள்ள நிலையிலேயே, அரசு குற்றவாளியின் ஆயுள் தண்டனையினை 20 ஆண்டு கால தண்டனையாக கருதி (deem) அரசு ஒரு உத்தரவு பிறப்பித்தாலொழிய குற்றவாளி மேலும் தள்ளுபடி பெற்று வெளிவர இயலாது. எனவே அவ்வாறு இல்லாமல் அரசு ஆயுள் தண்டனையினை 20 ஆண்டுகால தண்டனையாக குறைத்தால், தள்ளுபடி சாத்தியமாகலாம். இரண்டு உத்தரவிற்கும் அரசு மனது வைக்க வேண்டும்.


இதன் விளைவு, அவ்வாறு ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டுமென்று ஒருவர் அரசை நிர்பந்திக்க முடியாது. அரசு மனது வைத்தால்தன் இவை இயலும். எனவே ஆயுள் தண்டனை பெற்றவர் மன்னிப்போ அல்லது தண்டனை குறைப்போ பெறுவது அவரது உரிமையல்ல என்பது போலவே தோன்றுகிறது.


அவ்வாறு என்றால், அடிப்படையில் சராதனந்தாவின் தீர்ப்பு புதிதாக எதனையும் கூறவில்லை என்றுதான் கூற வேண்டும். சாகும் வரை வெளியில் விடக்கூடாது என்ற கட்டளையும் தேவையில்லாத ஒன்று. ஏனெனில், குற்றவாளியை விடுதலை செய்ய அரசு நினைக்கையில் தனது மன்னிக்கும் அல்லது தண்டனைக்குறைப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்து விடலாம்.


அதே போல வழக்கில் நீதிபதிகள் முக்கிய பிரச்னையாக எழுப்பிய மரண தண்டனைக்கு மாற்றாக வழங்கப்படும் ஆயுள் தண்டனையை சாதாரண ஆயுள் தண்டனையிலிருந்து வேறு படுத்த முடியுமா? என்ற கேள்வியும் அர்த்தமற்றதாகி விடுகிறது. எந்த ஒரு ஆயுள் தண்டனைக்குமே, நீதிபதிகளின் கருத்துப்படி தள்ளுபடி வழங்க இயலாது என்பதால், அனைத்து ஆயுள் தண்டனைகளும் அரசு மனது வைக்கும் வரை ஆயுள் வரைக்குமே!


-oOo-


ஆயுள் தண்டனை என்பது 20 ஆண்டு காலம் என்பது அல்ல என்றாலும், பல முறை உச்ச நீதிமன்றம் குற்றவாளியை குறைந்தது 20 ஆண்டு காலமாவது சிறையில் வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அவற்றை தங்களது தீர்ப்புக்கு ஆதரவாக நீதிபதிகள் எடுத்துக் கொள்கின்றனர். ஆயுள் தண்டனை என்பது ஆயுள் வரை என்று கூறிய பிறகு, நீதிமன்றம் சாகும் வரை என்பதோ அல்லது 20 ஆண்டு காலம் என்பதோ, அரசுக்கு ஒரு அறிவுறுத்தல் என்றே எடுத்துக் கொள்ள இயலும்.


உச்ச நீதிமன்றம் ஏற்கனவே சாகும் வரை விடுவிக்கக் கூடாது என்று இரு வழக்குகளில் கூறியுள்ள தீர்ப்புகளும் சுட்டிக்காட்டப்படுகிறது. முதலாவது வழக்கில் குற்றவாளிக்கு மரணதண்டனைதான் என்று நீதிபதிகள் மனதளவில் தீர்மானித்து விட்ட நிலையில், அவர் சாகும் வரை சிறையிலேயே இருக்க தயாராக இருக்கிறார் என்ற வாதம் வைக்கப்பட அதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் ஏறக்குறைய ஒரு சமரசத்தீர்வு போல அவருக்கு எவ்வித தள்ளுபடியோ அல்லது தண்டனைக் குறைப்போ தரக்கூடாது என்று தீர்ப்புக் கூறியுள்ளது (சுபாஷ் சந்தர் எதிர் கிருஷ்ணன் லால் (2001) 4 SCC 458). தள்ளுபடி சரி தண்டனைக்குறைப்பு பற்றி நீதிமன்றம் கூறியுள்ளது எவ்வளவு தூரம் சரியானது என்று தெரியவில்லை. ஏனெனில், தண்டனைக்குறைப்பு அளிக்க அரசு குற்றவாளியின் அனுமதியை பெற வேண்டியதில்லை. எனவே அவர் தனக்கு தண்டனைக் குறைப்பு தேவையில்லை என்று கூறியுள்ள போதிலும் அரசு தனது அதிகாரத்தினை பயன்படுத்தலாம். இன்னும் ஒரு பத்தாண்டுகள் கழித்து கிருஷ்னலால் தீராத நோயினால் பெரும் அவதிப்படுகிறார். அவரை விடுதலை செய்வதே மனிதாபிமானம் என்று அரசு நினைக்கையில் நீதிமன்ற தீர்ப்பு அதற்கு எவ்வளவு தூரம் தடையாக இருக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.


ஆயினும் இவ்வாறான உத்தரவு மனித உரிமைக்கு எதிரானதா என்ற கேள்வி ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் எழுப்பப்பட்டுள்ளது. ஜெயவந்த் தத்தராய சூர்யராவ் எதிர் மகராச்டிரிய அரசு (2001) 10 SCC 109 என்ற வழக்கிலும் இவ்வாறு ஒரு தண்டனை வழங்கப்பட, தூக்கிலிருந்து தப்பித்தாயிற்று என்று அப்பொழுது தண்டனையினை ஏற்றுக் கொண்ட சுபாஷ்சிங் தாக்கூர் தற்பொழுது அந்த தண்டனை தவறு என்று நீதிப்பேராணை (writ) மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகையில் மீண்டும் இந்தப் பிரச்னைகள் மறு ஆய்வு செய்யப்படும்.


-oOo-


ஆனால் இங்கு முக்கியமான வித்தியாசம், நளினிக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதிக்கவில்லை. குடியரசுத் தலைவரின் மன்னிப்பு! சராதானந்தா உட்பட மற்றவர்களுக்கு நீதிமன்றம் தண்டனை வழங்குகையிலேயே இவ்வாறு தள்ளுபடி கிடையாது என்று கூறியுள்ளது. நளினிக்கு அவ்வாறான எவ்வித கட்டுப்பாடும் கிடையாது...


ஆயினும், தள்ளுபடி என்பது எந்த ஆயுள்தண்டனைக்கும் கிடையாது என்பதுதான் சராதானந்தாவின் தீர்ப்பில் இருந்து நாம் அறிவது. எது எப்படியோ, நளினி வெளியே வர வேண்டுமென்றால் அரசு மனது வைக்க வேண்டும். தள்ளுபடி என்பது மேற்கண்ட தீர்ப்பின் மூலம் பிரச்னைக்குறிய ஒன்று. அரசு அவரது தண்டனையை குறைப்பதுதான் வழி...


இல்லை, நளினிக்கு காட்டப்பட்டதாக கூறப்படும் கருணை, உண்மையில் ஒரு கானல் நீரே!


மதுரை
24.10.08

16.10.08

நளினிக்கு கருணை, கானல் நீர்தானா? - 3


ஆயுள் தண்டனைக்கான அர்த்தம், குற்றவாளியின் ஆயுள் வரைதான் என்பதில் யாருக்கும் எவ்வித சந்தேகமும் இல்லை. இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 45 ஆயுள் என்பது ஒரு மனிதனின் ஆயுளைக் குறிக்கும் என்று விளக்கமளிப்பதிலிருந்து ஆயுள் தண்டனை என்பதற்கு வேறு எவ்வித விளக்கமும் கூற இயலாது.

இதையே மகாத்மா காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கோபால் கோட்சே தன்னை 14 ஆண்டு சிறைவாசத்திற்குப் பிறகு விடுவிக்க வேண்டுமென்று கோரிய பொழுது உச்ச நீதிமன்றம் கூறியது. (கோபால் விநாயக் கோட்சே எதிர் மகாராஷ்டிர அரசு AIR 1961 SC 400). ஆனால் உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையில் தள்ளுபடி (remit) அளிப்பதற்கு அரசிடம் உள்ள அதிகாரத்தினை ஒத்துக் கொண்டே அந்த தீர்ப்பினை அளித்தது.

கோபால் கோட்சே அடுத்த ஆண்டே அரசால் விடுதலை செய்யப்பட்டார் என்பது வேறு கதை!


-oOo-


ஆனால் தற்பொழுது சக்கீராவின் வழக்கில், கோபால் கோட்சே வழக்கின் தீர்ப்பினைப் பற்றி ஆய்ந்த நீதிபதிகள், சில வகையான ஆயுள் தண்டனைகளுக்கு இவ்வாறு அரசு தண்டனையிலிருந்து தள்ளுபடி செய்யும் அதிகாரத்தினை செலுத்தவிடாமல் உண்மையிலேயே ஆயுள் முழுமைக்கும் என்று மாற்ற வேண்டும் என்ற ஆவலை வெளிப்படுத்துகின்றனர். அதாவது, மரண தண்டனைக்கு மாற்றாக வழங்கப்படும் ஆயுள் தண்டனைகளுக்கு அவ்வாறு தள்ளுபடி வழங்குதல் கூடாது என்கின்றனர்.

மரணதண்டனைக்கு மாற்றான ஆயுள் தண்டனை என்று ஒன்று குற்றவியல் சட்டங்களில் இல்லை எனலாம். இந்த தீர்ப்பின் ஆரம்பத்திலேயே, நீதிபதிகள் மரண தண்டனைக்கு மாற்றாக வழங்கப்படும் ஆயுள் தண்டனையினை மற்ற சாதாரண ஆயுள் தண்டனையிலிருந்து வேறு படுத்த இயலுமா என்பதுதான் இந்த வழக்கில் உள்ள் பிரச்னை என்றே ஆரம்பிக்கின்றனர்.

தவறு இங்கேயே ஆரம்பிக்கிறது. ஒரு குற்றத்திற்கு மரண தண்டனை என்றால் மரண தண்டனைதான். மரண தண்டனை வழங்க வேண்டிய வழக்கில் ஆயுள் தண்டனை வழங்க இயலும் என்றால், அது அனைத்து மரண தண்டனை கைதிகளுக்கும் வழங்கப்பட வேண்டும். இல்லை அம்னெச்டி இண்டர்நேசனலின் ‘மரணதண்டனன என்பது இங்கு ஒரு லாட்டரி’ என்ற குற்றச்சாட்டை உச்ச நீதிமன்றமே ஒத்துக் கொள்வது போல ஆகிவிடும்!

கீழமை நீதிமன்றத்தில், ஆயுள் தண்டனை வழங்க வேண்டிய குற்றத்திற்கு மரண தண்டனை தவறுதலாக வழங்கப்பட்டு அதனை உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக மாற்றுவது ஏதோ கருணைப் பிச்சையல்ல. மாறாக அது குற்றவாளியின் உரிமை!

கீழமை நீதிமன்றம் செய்த தவறுக்காக, குற்றாவாளிக்கு உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்படும் ஆயுள் தண்டனையினை மற்ற ஆயுள் தண்டனையிலிருந்து வேறுபடுத்திப் பார்ப்பது என்பது தர்க்க ரீதியில் மட்டுமல்ல, தார்மீக ரீதியிலும் சரியான ஒரு செயலல்ல என்பதே எனது கருத்து.


-oOo-


நீதிபதிகள், இவ்வாறு தள்ளுபடி இல்லாமல் ஒருவரை ஆயுள் முழுமைக்கும் சிறையில் வைத்திருப்பதற்காக கூறும் மற்றொரு கருத்தும் கவனிக்கத்தகுந்தது. அதாவது, ஒரு குற்றத்தின் தன்மையானது மரண தண்டனை வழங்குவதற்கு சற்று குறைவாக இருக்கிறது. அவ்வாறான சூழ்நிலையில் 14 ஆண்டுகள் என்பது மிகக் குறைவான தண்டனையாக கருதும் நீதிபதி, மரண தண்டனை அளிக்க தூண்டப்படலாம். எனவே இவ்வாறு 14 ஆண்டுகளுக்கும் மேலாக குற்றவாளியினை சிறையில் வைத்திருக்கும் வண்ணம் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

ஆனால், இங்கு நீதிபதிகள் கவனிக்க தவறுவது, ‘மக்களாட்சி அமைப்பில், நாகரீகமான குற்றவியல் முறையில், நீதிமன்றத்தின் பணியானது குற்றவாளி செய்த குற்றத்திற்கு அதிகபட்சம் இந்த அளவிற்கு தண்டிக்கலாம் என்று நிர்வாகத்திற்கு அனுமதி வழங்குவதோடு நின்று விடும்’ என்பதே!

குற்றத்திற்கு தண்டனை வழங்குவது என்பது, சமூகத்தின் ஒழுங்கினை குற்றச்செயல்களில் இருந்து பாதுகாப்பதற்கே!. அதற்காக குற்றவாளியை எவ்வளவு தூரம் தண்டிக்கலாம் என்பது மக்களோடு நேரடித் தொடர்பில் உள்ள நிர்வாகம் மற்றும் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சியாளர்களின் மனக்கவலை.

எனவே நீதிமன்றங்கள் இவ்வளவு தூரத்திற்கு நீங்கள் தண்டித்துக் கொள்ளலாம் என்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற வகையில்தான் குற்றவியல் நடைமுறைச்சட்டம் இயற்றப்பட்டுள்ளது.


-oOo-


சில குற்றவாளிகளை நீதிமன்றம் அனுமதித்த அதிகபட்ச அளவில் தண்டிக்கவும், சில குற்றவாளிகளை விடுதலை செய்வதிலும் அரசிற்கு உள்ள தேவைகளை உணர்ந்தே, நமது அரசியலமைப்புச் சட்டத்திலேயே குடியரசுத் தலைவருக்கும், மாநில ஆளுநருக்கும் குற்றவாளிகளை மன்னித்து விடுதலை செய்யும் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. (பிரிவு 72 மற்றும் பிரிவு 161).

இந்த அதிகாரமானது, அரசியலமைப்புச் சட்டத்திலேயே கொடுக்கப்பட்டுள்ளதால், இவற்றை உச்ச நீதிமன்றம் பறிக்க இயலாது. ஷக்கீரா தீர்ப்பிலும் நீதிபதிகள் ‘இந்த தீர்ப்பானது அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்ட அதிகாரத்தினைப் பற்றியதல்ல (Here it needs to be made absolutely clear that this judgment is not concerned at all with the Constitutional provisions that are in the nature of the State's sovereign power) என்று 56ம் பத்தியில் தெளிவாக குறிப்பிடுகிறார்கள்.

எனவே அரசியலமைப்புச் சட்டம் அளிக்கும் அதிகாரத்தினைப் பயன்படுத்தி நளினியை அல்லது சராதானந்தாவை விடுதலை செய்ய அரசு முடிவெடுக்கையில் உச்ச நீதிமன்றத்தினால் அதனை தடுக்க இயலாது.

அரசியலமைப்பு சட்டம் சரி, குற்றவியல் நடைமுறை சட்டத்தில் அரசிற்கு உள்ள அதிகாரத்தினை இந்த தீர்ப்பின் மூலம் பறிக்க முடியுமா என்பது அடுத்த கேள்வி...


-oOo-


மதுரை
16.10.08

12.10.08

நளினிக்கு கருணை, கானல் நீர்தானா? - 2




சக்கீராவின் கொலை, மனதைத் தைப்பதாக இருந்தாலும் இந்தியா முழுவதும் அவ்வப்பொழுது நிகழக்கூடிய சாதாரண ஒரு குற்றம்தான். சக்கீரா கொலையில் திவான் என்ற இடத்தில் தாசில்தார் அலுவலக எழுத்தர் எனவும், பெங்களூரு என்ற இடத்தில் மதுரை எனவும், தூதர் என்ற இடத்தில் வங்கி காசாளர் எனவும், கோடி என்ற இடத்தில் ஆயிரம் எனவும், லண்டன் என்ற இடத்தில் சென்னை என்றும் நிரப்பினால், தண்டனைக்காக நீதிபதிகள் இவ்வளவு தூரம் குழம்பியிருக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

எனவேதான், இதனினும் கொடூர கொலைகாரர்கள் ஆயுள்தண்டனையோடு தப்பிக்கையில், சாரதானந்தாவுக்கு மரணம்தான் தண்டனை என்ற முடிவுக்கு நீதிமன்றங்கள் வந்திருக்கலாம்.

கொலை செய்யப்படுபவர்களின் தகுதியும் இங்கு பல சமயங்களில் தண்டனையினை, குறிப்பாக மரண தண்டனையினன நிர்ணயித்திருக்கின்றன என்ற எனது சந்தேகத்திற்கு வலு சேர்க்கும் மற்றும் ஒரு வழக்கு சக்கீராவின் கொலை.

மேலும், அடுத்தவரின் மனைவியை அபகரிக்கும் ஒரு செயல், கொலைக்கான தண்டனையை நிர்ணயிக்கும் முக்கிய காரணியாக இங்கு கருதப்படுகிறது. நானாவதி, குறைந்த தண்டனையோடு தப்பித்ததற்கும், சாரதானந்தா தூக்கு மேடை அருகே சென்று திரும்பியதற்கும், இதுவே முக்கிய காரணி!


-oOo-


சக்கீராவின் வழக்கினைப் படிக்கும் எவருக்கும், முக்கியமாக ஆண்களுக்கு சாரதானந்தாவின் மீது கோபம் எழுவது இயல்பான ஒன்றே...அது பொறாமையால் விளைந்ததாக கூட இருக்கலாம்.

ஆயினும், அவரை தூக்கிலிடுவது தவறான ஒரு முன்னுதாரணமாகி விடுமோ, என்ற குற்றவுணர்வு நீதிபதிகளை, முக்கியமாக தண்டனையை பற்றி தீர்மானிக்க வேண்டிய மூன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் எழுந்திருக்கலாம்.

சரி, தூக்கு இல்லை என்றால்...ஆயுள் தண்டனை. ஆனால் ஆயுள் தண்டனை கைதிகள் 14 ஆண்டுகளில் வெளியே வந்து விடக்கூடிய ஆபத்து உள்ளது. சாரதானந்தா ஏற்கனவே பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்தாகி விட்டது. அவ்வளவுதானா தண்டனை?

இது என்ன, மரண தண்டனை இல்லையென்றால் 14 ஆண்டுகள்தான. இரண்டு வகை தண்டனைக்களுக்குமான இடைவெளி இவ்வளவு தூரமா, என்ற நீதிபதிகளின் மனவோட்டத்தின் வெளிப்பாடுதான்...சாரதானந்தாவை அவரது ஆயுட்காலம் வரை சிறையில் வைத்திருக்க வேண்டும் என்ற தண்டனை.


-oOo-


இதற்காக, சாதாரண ஆயுள் தண்டனை, மரணதண்டனைக்கு மாற்றாக வழங்கப்படும் ஆயுள் தண்டனை என்று ஆயுள் தண்டனையை, சட்டத்தில் அவ்வாறு இல்லையெனினும் இரண்டு வகையாக பிரிக்கும் முயற்சியில் நீதிபதிகள் ஈடுபட்டு பல்வேறு முன் தீர்ப்புகளை ஆராய்ந்து, எவ்வாறு சாரதானந்தாவை ஆயுள் வரை சிறையில் வைத்திருக்க இயலும் என்றும் தீர்ப்பு கூறியுள்ளனர்.

ஆனால், தங்களது தீர்ப்பு அரசியலமைப்புச் சட்டப்படியும், குற்றவியல் நடைமுறைச் சட்டப்படியும் சாத்தியமானதுதானா என்றும் முழுமையாக ஆராயவில்லை என்றே நினைக்கிறேன்.

தங்களது தீர்ப்பினை அவ்வாறு செய்ல்படுத்துவது சாத்தியமா? அதன் பின் விளைவுகள் என்ன என்று ஆராயாமல் விட்டது கூட முக்கியமல்ல...அப்படியே ஒருவரை ஆயுள் முடியும் வரை, வெளியே வருவதற்கு எவ்வித வாய்ப்பின்றியும் சிறையில் வைத்திருப்பதன் கொடூரத்தைப் பற்றி கொஞ்சம் கூட தங்கள் தீர்ப்பில் கவலைப்படாமல் போனதுதான்.....அதிர்ச்சியளிக்கும் ஒரு விடயம்.

தன் வாழ்நாள் முழுவதும் இனி இந்த நான்கு சுவர்களுக்குள்தான் என்ற நினைப்பில் ஒருவன் வாழ்வது, மரண தண்டனையை விட கருணை மிக்கதா என்ன?

இந்தச் சூழ்நிலையில் நளினிக்கு காட்டப்பட்டது உண்மையிலேயே கருணையா என்ற கேள்வி எழுகிறது.

பதினெட்டு ஆண்டுகளுக்கு மேலாக சிறையே தனது வசிப்பிடமாக கொண்டுள்ள பேரறிவாளனும், இதே கேள்வியைத்தான் கேட்கிறார், ‘ஒன்று என்னை தூக்கில் போடுங்கள்...அல்லது என்று விடுதலை என்று என்றாவது சொல்லுங்கள்’.


-oOo-


மதுரை
11.10.08

10.10.08

நளினிக்கு கருணை, கானல் நீர்தானா? - 1





ராசீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி, பேரறிவாளன் மற்றும் சில குற்றவாளிகள் தங்களது விடுதலைக்காகவும், தண்டனைக்குறைப்புக்காகவும் தமிழக அரசின் ‘கருணை’யை மட்டுமே எதிர் நோக்கியுள்ள நிலையில்...அவர்களது, மற்றும் அவர்களுக்காக களமிறங்கியுள்ளவர்களது நம்பிக்கைக்கு குறுக்கே நிற்கப்போவதாக கூறப்படுவது, சமீபத்தில் பெங்களூருவைச் சேர்ந்த சக்கீரா கொலை வழக்கில் நமது உச்ச நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பு!

முதலில், கொலைக்குற்றவாளிகளுக்கு தண்டனை விதிப்பதில் நீதிபதிகளுக்குள்ள மனவோட்டத்தினை அறிய, அந்த வழக்கின் தன்மையினை தெரிந்து கொள்வது அவசியம்.


-oOo-


சக்கீரா (Shakereh) மைசூர் சமஸ்தானத்தின் திவானாக இருந்தவரின் பேத்தி.. பல கோடி சொத்துக்களின் அதிபதி. முக்கியமாக, பெங்களூரு ரிச்மாண்டு சாலையில் இருந்த 38,000 சதுர அடியில் மற்றும் வெல்லிங்டன் வீதியில் 40,000 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள பங்களாக்களை கூறலாம். சக்கீராவின் கணவர் இந்திய அயலுறவுத்துறை அதிகாரி (IFS). நான்கு பெண் குழந்தைகள்.


1983ம் வருடம் ராம்பூர் நவாபின் விருந்தாளியாக சென்றிருந்த பொழுது, சக்கீராவுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட நபர்தான் முரளி மனோகர் மிசுரா என்ற சுவாமி சாரதானந்தா (Swamy Shraddananda). சக்கீராவுக்கு தனது நிலங்களை நிர்வகிப்பதில் பிரச்னை இருக்கவே அதில் உதவி புரிவதற்காக பெங்களூருவுக்கு வந்த சாரதானந்தா, ரிச்மாண்டு சாலை பங்காளிவிலேயே குடும்ப உறுப்பினர் போல தங்கினார்.

ஈரான நாட்டு தூதராக நியமிக்கப்பட்ட சக்கீராவின் கணவர், குடும்பத்தை பெங்களூருவிலேயே விட்டுச் செல்லும் நிலை ஏற்ப்பட்டது. தனது மாந்திரீக சக்தியினால் சக்கீராவுக்கு ஆண் வாரிசினை உருவாக்க முடியும் என்று அவரை நம்ப வைத்த சாரதானந்தா, பின்னர் சக்கீராவை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.

விரைவிலேயே சக்கீராவின் திருமணம் விவாகரத்தில் முடிய சாரதானந்தாவை மணமுடித்தார். மகள்கள் அனைவரும் வெளிநாட்டிலேயே தங்கி விட, சக்கீராவும் சாரதானந்தாவும் மட்டும் பெங்களூரிலேயே வசித்தனர்.

சக்கீரா தனது அன்பினை மட்டுமல்லாமல், சொத்துக்கள் அனைத்தையும் சாரதானந்தாவின் மீது கொட்டினார். தனது சொத்துக்களை குறித்த முகவராக (Power of Attorney) சாரதானந்தாவை நியமித்தது மட்டுமில்லாமல், அனைத்தையும் அவரது பெயரிலேயே உயில் எழுதினார். பல்வேறு வங்கி கணக்குகள், லாக்கர்கள் மற்றும் வியாபாரம் இருவரது கூட்டுப் பெயரில் ஆரம்பிக்கப்பட்டது.

ஆயினும், சக்கீரா மகள்கள் மீதான தனது தொடர்பினை துண்டிக்கவில்லை. அவ்வப்பொழுது அவர்கள் சந்தித்துக் கொண்டிருந்தனர்.


-oOo-


1991ம் வருடம் மே மாத இறுதியில் சக்கீரா திடீரென தனது 40வது வயதில் காணாமல் போனார். ஏப்ரல் மாதத்தில் அவரது மகளுடன் தொலை பேசியதுதான், குடும்பத்துடனான அவரது தொடர்பு.

வேலைக்காரன் ராசு அவரை இறுதியாக மே 28ம் தேதி சாரதானந்தாவுடன் பார்த்ததாக பின்னர் கூறினார்.

சக்கீராவின் மகள் சாபா (Sabah), சாரதானந்தாவை தனது அம்மா எங்கே என்று வினவும் பொழுதெல்லாம், அவர் ஐதராபாத் சென்றுள்ளதாகவும், கட்ச்சுவிற்கு (Kutch) வைர வியாபாரி ஒருவரின் திருமணத்திற்கு சென்றுள்ளதாகவும் சாக்கு கூறிவந்தார். பின்னர் வருமான வரிப் பிரச்னைகளுக்கு பயந்து வெளி வராமல் இருப்பதாகவும் கூறினார்.

வெறுப்படைந்த சாபா, பெங்களூருவுக்கு நேரில் வந்தால் சக்கீராவை காணவில்லை. இந்த முறை சாரதானந்தா, சக்கீரா பிரசவத்திற்காக அமெரிக்கா சென்றுள்ளதாக கூறினார். அமெரிக்க மருத்துவமனைக்கு தொடர்பு கொண்டால், அவ்வாறு யாரும் அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை!

சாரதானந்தா தளரவில்லை. சக்கீரா லண்டன் சென்றிருப்பதாகவும், அவரது இருப்பிடத்தை ரகசியமாக வைத்துள்ளதாகவும் கூறினார். ஆனால், சாரதானந்தாவை மும்பை விடுதி அறையில் சந்திக்க சென்ற சாபா, அங்கு தற்செயலாக சக்கீராவின் கடவுச் சீட்டை (Passport) காண நேரிட்டது.

உடனடியாக சாபா, பெங்களூரு அசோக் நகர் காவல் நிலையத்தில் தன் தாயார் காணாமல் போனதாக ஒரு புகார் அளித்தார். சாரதானந்தாவோ, முன் பிணை மனு (anticipatory bail) தாக்கல் செய்து, பிணை பெற்றார். பிணை மனுவில் தனது உறவினர்களுடன் ஏற்ப்பட்ட வழக்குகள் நிமித்தம் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான, சக்கீரா கோபத்துடன் வீட்டை விட்டு வெளியே சென்றதாக குறிப்பிட்டார்.

அசோக் நகர் காவல் நிலைய விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்ப்படவில்லை. ஆயினும் சாபாவின் முயற்சியில் வழக்கானது மத்திய குற்றப்பிரிவிற்கு மாற்றப்பட்டு அவர்களது தீவிர விசாரணையில், சாரதானந்தா தான் சக்கீராவை கொன்று தங்களது பங்களாவிலுள்ள படுக்கையறைக்கு கீழே புதைத்து வைத்ததை ஒத்துக் கொண்டார்.


-oOo-


விசாரணையில், சக்கீராவின் கொலைக்கு பின்னர் அவர் அளித்த முகவர் அதிகாரத்தினை பயன்படுத்தி அவரது பல்வேறு சொத்துக்களை விற்றதும் தெரிய வந்தது. மட்டுமல்லாது, கொல்லப்படுவதற்கு முன்னரே, சக்கீராவின் உடலை புதைப்பதற்காக கவனமாகவும் நிதானமாகவும் அவர் திட்டமிட்ட விபரமும் தெரிய வந்தது.
பெங்களூரு நகர அமர்வு நீதிமன்றம் (Sessions Court) திட்டமிட்ட கொலைக்காக, சாரதானந்தாவுக்கு மரண தண்டனை அளித்தது. அமர்வு நீதிமன்றம் மரண தண்டனை அளிக்கையில் குற்றவியல் நடைமுறை சட்டம் (Criminal Procedure Code) பிரிவு 366ன் உயர்நீதிமன்றம் தண்டனையினை உறுதி செய்ய வேண்டும்.

உயர்நீதிமன்றம் மரண தண்டனையை உறுதி செய்தது.

உச்ச நீதிமன்றத்தில் சாரதனந்தா மேல் முறையீடு தாக்கல் செய்தார். சாரதானந்தா குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால் ஒரு நீதிபதி குற்றவாளிக்கு மரண தண்டனை எனவும் மற்ற நீதிபதி ஆயுள் காலம் முழுவதும் வெளி வர இயலாத ஆயுள் தண்டனை எனவும் கூறினர்.

எனவே, தண்டனை குறித்து மட்டும் தீர்ப்பு கூற வழக்கானது மூன்று நீதிபதிகள் அடங்கிய மன்றத்தின் முன் வைக்கப்பட்டது.

அவ்வாறு மூன்று நீதிபதிகள் அடங்கிய மன்றம் அளித்த தீர்ப்புதான், தற்பொழுது பிரச்சினையாக எழப்போகிறது.

-oOo-


மதுரை
10.10.08



மேலே படத்தில் மீண்டும் 'Shimla Mall' தான். அங்கு சுவராசியமான இடம் இந்த கடைத்தெரு ஒன்றுதான்.

4.10.08

நீதிபதிகள், சாருநிவேதிதா மற்றும் தவறுகள்!


நேற்று கணணியில் எனது பழைய குப்பைகளை மேய்ந்து கொண்டிருக்கையில் ஐந்து வருடங்களுக்கு முன்னர் எழுதிய ஒரு கடிதம் கண்ணில்பட்டது.

‘சமீபத்தில் மும்பை உயர்நீதிமன்ற கட்டிடம் தனது 125வது பிறந்த நாளைக் கொண்டாடியது. 125வது என்பதை விட முதலாவது எனவும் கூறலாம். எனெனில் இக்கட்டிடம் கொண்டாடும் முதல் பிறந்தநாள் இது!


இந்தக் காலத்தைப் போல எவ்வித படோடபகமும் இன்றி எவ்வித விழாவும் கொண்டாடப்படாமல் ஏன், சாதாரண ரிப்பன் வெட்டுதல் கூட இல்லாமல் வெறுமே நீதிபதிகள் தங்களது அறைகளை ஏற்றுக் கொண்டனராம்.

இக்கட்டிடம் திறப்பதற்கு முன்னர் 9 ஆண்டுகள் மும்பை உயர் நீதிமன்றம் வேறு கட்டிடத்தில் இயங்கி வந்தது. முதல் தலைமை நீதிபதி சர். மாத்தியூ சாவ்ஸே. இவரை 'சாவ்ஸே தி சைலண்ட்' அதாவது அமைதியான சாவ்ஸே என்று அழைத்தார்களாம். இவரை 'பேசாமடந்தை எனவும் மந்தகாசமானவர்' என்றும் பலர் அழைத்தனர். சிலர் 'இறுக்கமானவர் (cold, frigid and stern) என்றனர்.

இவர் யாருடனும் பழகுவதில்லை. எந்த விழா, சடங்கிலும் பங்கெடுப்பதில்லை. யாரையும் சந்திப்பதும் இல்லை. முக்கியமாக செய்தித் தாள்களைப் படிப்பதேயில்லை. அவரது ஒரே பொழுது போக்கு அப்பொழுது ஓவல் மைதானம் வரை சதுப்பு நிலமாக பரவியிருந்த கடற்கரையில், நீதிமன்ற நேரம் முடிந்த பிறகு தனியே நடப்பதுதான்.

ஞாயிற்றுக் கிழமை கிர்காம் தேவாலயத்தின் பிரார்த்தனை மட்டும்தான் அவரை பொதுவில் காண முடியும் ஒரே நேரமாம்..

இங்கு நாம் கவனிக்க வேண்டியது, அவர் செய்தித்தாள்களைப் படிப்பதில்லை. நீதிபதியானவர் முக்கியமாக அரசுக்கு எதிரான நீதிப் பேராணை (writ) மனுக்களை விசாரிக்கக் கூடிய அல்லது பெரிய குற்றங்களை விசாரிக்கக்கூடிய நீதிபதியானவர் செய்தித்தாள்களை படிப்பது நல்லதல்ல என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் நடைமுறையில் சாவ்ஸே மற்றும் மிக அரிதான சில நீதிபதிகளுக்கே அது சாத்தியம்.’


-oOo-


நீதிபதியானவர் ஒரு முற்றும் துறந்த முனிவரைப் (ascetic) போல இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற தீர்ப்பு கூறுகிறது. ஆனால் நடைமுறையில்?

சில நீதிபதிகளின் செயல்பாடுகள் குறித்து சமீபத்தில் நாம் படிக்க நேரிடும் செய்திகள், நீதித்துறையில் மாண்பையும் மதிப்பையும் கேள்விக்குறியதாக்குகின்றன. உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் முறையில் எவ்விதமான வெளிப்படையான பாங்கும் (transparency) கிடையாது. அதற்கு தனிப்பட்ட காரணங்கள் கூறப்படுகின்றன.

எனவே, அந்தப் பணி, உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கைகளிலும் ஓரளவிற்கு அரசின் கையிலும் முழு நம்பிக்கையுடன் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால், மேலும் மேலும் நீதிபதிகளைப் பற்றிய தர்ம சங்கடமான செய்திகள் வெளி வர நேரிட்டால், நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் முறை மாற வேண்டும் என்ற பொதுக்கருத்து வலுப்பெறலாம்.


-oOo-


நீதிபதிகள் நியமனத்தில் வரவேற்கத்தகுந்த ஒரு மாற்றம் தற்பொழுது ஏற்ப்பட்டுள்ளது. நமது உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளாக நியமிக்கும் வண்ணம் உச்ச நீதிமன்றத்திற்கு 14 பெயர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றமோ, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நபர்கள், தங்களைப் பற்றிய விபரங்களை அளிக்க வேண்டுமென்று கோரியுள்ளது. அதற்காக தங்களது பணியில் அவர்கள் வெளிப்படுத்திய திறமை உட்பட பல விபரங்களை கோரும் வண்ணம் கேள்விகளை வடிவமைத்துள்ளது.

பெரிய அளவில் வெளிப்படையான பாங்கினை இங்கும் எதிர்பார்க்க முடியாது எனினும், இது ஒரு வழக்குரைஞரின் பார்வையில் பெரிய மாற்றம் எனலாம்.

இவ்வாறு கேள்விகளுக்கு பதிலாக தரப்படும் விபரங்கள், சம்பந்தப்பட்ட வழக்குரைஞர் சங்கங்கள் மற்றும் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு, ஏதேனும் ஆட்சேபணை இருந்தால் அதனை தெரிவிக்கவும் கோரலாம். ஆனால் அவ்விதமான மாற்றம் வருவதற்கு அதற்கு இன்னும் சில காலம் பிடிக்கலாம்.

நீதிபதிகள் மேலும் மேலும் தவறு புரிந்தால், விரைவில் சாத்தியமாகலாம்.


-oOo-


தமிழ்மணத்திலிருந்து சுட்டியினைப் பிடித்து உயிர்மை என்ற பத்திரிக்கையில் சாருநிவேதிதா எழுதிய “ஒலிம்பிக்ஸ்: துரோகங்களும் அவமானங்களும்” என்ற கட்டுரையினை படிக்க நேரிட்டது.

ஒரு கட்டுரை போல இல்லாமல், நண்பர்கள் குழுவாக அமர்ந்து ஒலிம்பிக் பற்றி அரட்டை அடித்தால் எப்படியிருக்குமோ அப்படி எங்கோ ஆரம்பித்து எங்கோ முடிகிறது.

ஆனால் பிரச்னை கட்டுரையில் கூறப்படும் சில விபரங்கள் பற்றியது.

1986 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் சார்பாக பதக்கம் வாங்கிய ஒரே நபர் பி.டி.உஷா என்கிறார் கட்டுரை ஆசிரியர். தவறு. இந்தியா ஐந்து தங்கப் பதக்கம் பெற்றது. பி.டி.உஷா வென்றது நான்கு தங்கம் மட்டுமே! ஐந்தாவது தங்கம் வென்றது கர்தார் சிங் என்ற குத்துச் சண்டை வீரர். மற்றபடி பதக்கம் என்று பார்த்தால் இந்தியா மேலும் 9 வெள்ளி, 23 வெண்கலம் வென்றது.

அடுத்து 1960 ரோம் ஒலிம்பிக்ஸில் மில்கா சிங் பக்கத்தில் ஓடுபவர் எங்கு இருக்கிறார் என்று திரும்பிப் பார்த்ததில் அவரது தங்கம் பறி போனதாக குறிப்பிடுகிறார். மில்கா சிங் தவற விட்டது, வெண்கலம். அதுவும் 1/10 வினாடி நேரத்தில். பி.டி.உஷா 1/100 வினாடி நேரத்தில்!

மில்கா சிங் ஓடிய பொழுது அவர் உட்பட முதலில் வந்த நான்கு வீரர்களும் அது வரை இருந்த உலக சாதனையினை முறியடித்தார்கள்...அல்லது அது ஒலிம்பிக்ஸ் சாதனையா?

ஆனால் மில்கா சிங் திரும்பிப் பார்த்ததாக நான் படித்ததில்லை!

திரும்பிப் பார்த்தவர் பென் கிங்ஸ்லி.. ஆயினும் அதற்காக அவர் வெற்றி வாய்ப்பையும் உலக சாதனையையும் இழக்கவில்லை. இழந்தற்கான காரணம், தடை செய்யப்பட்ட அனபாலிக் ஸ்டிராய்ட் உட்கொண்டது.

இப்பொழுது எனக்கு, சாருநிவேதிதா தன்னுடைய கட்டுரைகளில் சும்மா வாயில் நுழையாத பெயர்களாக அடித்து ஆடுகிறாரே...உண்மையாக இருக்குமா, என்ற சந்தேகம் வந்து விட்டது!


-oOo-

மதுரை
031008
மேலே படத்தில் நீங்கள் காண்பது 'சிம்லா கடைத்தெரு'





8.7.08

நீதிமன்ற புறக்கணிப்பும்...சோம்பேறி மனதும்





கடந்த ஒரு வாரமாக வழக்குரைஞர்கள் தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களை புறக்கணித்து வருகின்றனர். இவ்வாறான் தொடர்ச்சியான போராட்டங்களில் வழக்கமாக பங்கு எடுக்காத, மதுரை உயர்நீதிமன்ற கிளை வழக்குரைஞர்களும் நீதிமன்றங்களை புறக்கணிப்பதால், தமிழக நீதித்துறையில் பெரும் பிரச்னை எழுந்துள்ளது.

வழக்குரைஞர்கள் இவ்வாறு நீதிமன்றங்களைப் புறக்கணிப்பது, முறையல்ல என்று உச்ச நீதிமன்றம் கூறினாலும், இதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பது இது வரையில், தமிழகத்தை பொறுத்தவரை நீதித்துறை அறியாத ஒன்று.

ஏனெனில் நடவடிக்கை எடுக்க வேண்டிய நீதித்துறையினரும் வழக்குரைஞர் சமுதாயத்திலிருந்து தோன்றியவர்கள்தான் என்பதால், இருவருக்கும் இடையில் நிலவும் நெருக்கமான உறவு கடினமான நடவடிக்கைகளை எடுக்க தடையாக உள்ளது.

பல சமயங்களில், நீதிமன்ற புறக்கணிப்பு நடவடிக்கை என்பது மிகச்சிலரான வழக்குரைஞர்களால் முன் வைக்கப்பட்டு மற்றவர்கள் எதற்கு வம்பு என்று ஒதுங்கிக் கொள்ள நடைமுறைக்கு கொண்டு வரப்படுகிறது.

ஓரிரு நாட்கள் என்றால் பரவாயில்லை...தொடர்ந்த புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவது, கட்சிக்காரர்கள் பலரின் அடிப்படை உரிமையினை பாதிக்கும் ஒரு செயல் என்பதை பல வழக்குரைஞர்கள் அறிந்திருந்தாலும்...ஏதும் செய்ய இயலாத நிலையில் உள்ளனர்.

-oOo-

வழக்குரைஞர்களின் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டங்கள் பலமுறை வெற்றி பெருவதில்லை. ஓரளவிற்கு பிறகு வழக்குரைஞர்கள் சோர்ந்து...போராட்டங்கள் நீர்த்துப் போகிறது. வழக்குரைஞர்களும் அதற்காக வெட்கப்படுவதில்லை.

லாரி உரிமையாளர்கள் போராட்டம் நடத்தினால், அது பொது மக்கள் அனைவரையும் பாதிக்கிறது. போராட்டம் தொடங்கும் முன்னே பத்திரிக்கைகளில் தலைப்புச் செய்தியாகி...அரசு நடவடிக்கை எடுக்க முன் வருகிறது.


ஆனால் வழக்குரைஞர் போராட்டங்களில், நீதிமன்றத்தை அணுகும் மிகச் சிறிய அளவிலான, அதிலும் குற்றவியல் நீதிமன்றங்களை அணுகும் மக்கள் கூட்டத்தினரே பாதிக்கப்படுகின்றனர்.

தற்பொழுதும், ஒரு வாரமாக போராட்டம் நடைபெற்று வந்தாலும்...பெரிய செய்தி ஏதும் இல்லை. இறுதியில் வழக்குரைஞர்கள் அமைச்சர்களாக இருக்கும் தங்களது சமுதாயத்தை சார்ந்தவர்கள் மூலமாக காரியத்தை முடித்துக் கொள்வார்கள்...அதுதான் புத்திசாலித்தனமும் கூட!

-oOo-

கடந்த வாரம் எழுந்த தசவதார இரைச்சலில் அதிகமாக கேட்டது ‘ஹாலிவுட் படங்களுக்கு நிகரான உலகத்தரம்’ என்ற வார்த்தை!

‘அமெரிக்காதான் உலகம்’ என்று அமெரிக்கர்கள்தான் நம்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்தேன்...நாமும் கூடவா?

70 கோடியில் ஹாலிவுட் படங்களுக்கு நிகரான தொழில் நுட்பத்தில் எடுக்க முடியுமென்றால்...அந்த மடையர்கள் ஏன், 1000 கோடியினை படமெடுப்பதற்கு வீணாக்குகிறார்கள்?

-oOo-

வலைப்பதிவர்கள் அரைவேக்காடுகள் என்ற ரகசியம் உட்பட தமிழகத்தில் எல்லாவற்றையும் அறிந்த ‘ஞாநி’ இந்த வார குமுதத்தில் ஊட்டி மலையில் அமைக்கப்படும் ஆராய்ச்சி மையத்தினால் வனப்பகுதிக்கு ஏற்ப்படப் போகும் பாதிப்பினைப் பற்றி கவலைப்படுகிறார்.

ஆனால், ஊட்டி வனப்பகுதிக்கு பேரழிவை ஏற்ப்படுத்தியது அங்குள்ள தேயிலைத் தோட்டங்கள் என்பது புரியாமல்...புகைப்படங்களில் மட்டுமே அழகாகத் தோன்றும் தேயிலைத் தோட்டத்தின் படத்தை கட்டுரைக்கு பின்புலமாக பயன்படுத்தி கட்டுரையின் நோக்கத்தையே கேலிக்குறியதாக்கியதால், குமுதத்திற்கும் ஒரு குட்டு!

-oOo-

யார் கேள்வி கேட்டாலும், பக்கம் பக்கமாக எழுதி தன் ஞானத்தை முன்னிறுத்தும் ஜெயமோகன், வலைப்பதிவர்கள் சிலர் தர்மசங்கடமான கேள்விகளை எழுப்பியதற்கு மட்டும் ‘ஞாநி’யைப் போல பொங்கி பின் குமுதம் போல கேலி செய்து முடித்து விட்டார்.

கருணாநிதியின் ‘இலக்கியத்தை’ கேள்விக்குறியதாக்கிய பொழுதும், எம்ஜிஆர் சிவாஜியைப் பற்றி சுவராசியமாக கிண்டலடித்த பொழுதும்...ஜெயமோகனுக்கு அரணாக நின்றது வலைப்பதிவர்கள்தான்...

ஆனாலும், பயந்து போய் கட்டுரையைத் தூக்கி, ஆதரித்தவர்களை நட்டாற்றில் விட்டார் என்பது வேறு கதை!

-oOo-

உலக மகா இலக்கியம், சினிமா பேசும் சாருநிவேதிதா, ஜெயமோகன் போன்றவர்கள் இந்திய மசாலா திரைப்படங்களை அவ்வப்போது சற்று தடவிக் கொடுப்பது அவர்களின் நோக்கத்தினை சந்தேகிக்க வைக்கிறது.

தமிழ் வாசிக்கும் என் ஆர் ஐ இளைஞர்களை அடுத்து அவர்களது நம்பிக்கை......தமிழ் திரைப்படங்களாக இருக்குமா என்ற சந்தேகம்...

Lazy mind is devil’s workshop என்று சும்மாவா சொன்னார்கள்...I blame it on Advocate’s strike.

மதுரை
10.07.08




TERRACOTA IN MUMBAI BAZAR

உச்ச நீதிமன்றமும், குழப்பமான தீர்ப்புகளும்!



நமது உச்சநீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்பில் கூறப்படும் சட்டக் கருத்துகளை இந்தியாவில் செயல்படும் அனைத்து நீதிமன்றங்களும் பின்பற்ற வேண்டும். (Article 141 of Constitution of India) எனவே உச்சநீதிமன்றமானது தன் முன் உள்ள எந்த ஒரு வழக்கினையும் ஆய்ந்து அறிந்து தீர்க்க வேண்டிய அவசியம் உள்ளது.

ஏனெனில் அவர்கள் தீர்ப்பில் எழுதக் கூடிய ஒவ்வொரு வாசகமும், இந்தியா முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில் எடுத்துக் கூறப்பட்டு அந்த வாசகங்களில் கூறப்பட்டுள்ளவாறுதான், வழக்கானது தீர்மானிக்கப்பட வேண்டும் என்று வாதிடப்படுகிறது.

எனவே வேறு ஏதோ ஒரு நபர் நடத்திய வழக்கில் கூறப்படும் தீர்ப்பானது, அந்த வழக்கில் சம்பந்தப்படாத மற்றொரு நபரை பாதிக்கிறது!

ஆனால், பல்லாயிரக்கணக்கில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளால் எழும் வேலைப்பளுவின் காரணமாகவோ அல்லது வேறு காரணங்களாலோ, உச்ச நீதிமன்றமானது வழக்கின் மீது முழுக்கவனமும் செலுத்த இயலாமல்.....தவறான அல்லது முன்னுக்குப் பின் முரணாக தீர்ப்பு கூறும் பொழுது அது, மற்ற நீதிமன்றங்களில் பெரும் குழப்பத்தை விளைவிக்கிறது.

முக்கியமாக, சமீப காலங்களில் மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் ஏன் இவ்வாறு கூறுகிறது என்று புரிந்து கொள்ள முடியாமல், பல உயர்நீதிமன்ற நீதிபதிகளே புருவத்தை உயர்த்துகின்றனர்.

-oOo-

மோட்டார் வாகன சட்டப்படி மோட்டார் வாகனங்கள் கண்டிப்பாக காப்பீடு செய்திருக்க வேண்டும். அதனால், வண்டியினால் விபத்துக்குள்ளாகும் ஒரு நபருக்கு, அதன் உரிமையாளர் சார்ப்பில் காப்பீடு நிறுவனங்கள் நஷ்ட ஈட்டினை வழங்கும்.

ஆனால், வாகன ஓட்டியிடம் முறையான உரிமம் இல்லையெனில் (not duly licensed) காப்பீடு நிறுவனம் காப்பீட்டு விதிகள் மீறப்பட்டுள்ளது என வாதிடலாம் என்று சட்டம் உரிமையளித்துள்ளது.

காப்பீடு என்பது ஒரு ஒப்பந்தம். எந்த ஒரு ஒப்பந்தத்திலும் அதன் விதிகளை ஒருவர் மீறும் பொழுது பொழுது அதன் பலன்களை அவருக்கு மறுக்கலாம் என்பது நியாயமே!

ஆனால், மோட்டார் வாகன விபத்துகளைப் பொறுத்தவரை பலனடைவது, வண்டியில் அடிபடும் மூன்றாவது நபர். எனவே, வண்டியோட்டிக்கு உரிமம் இல்லை என்று காப்பீடு நிறுவனம் நஷ்ட ஈட்டினை வழங்க மறுக்கையில், அவர் அதனை வண்டி உரிமையாளரிடம்தான் பெற வேண்டும். உரிமையாளர் போதிய பண வசதி படைத்தவராக இல்லாத பட்சத்தில் அது இயலாது. மற்ற சந்தர்ப்பங்களிலும் அது கடினமான ஒரு காரியம்.

ஆக, தவறு ஏதும் செய்யாத மூன்றாவது நபரின் உரிமை மறுக்கப்பட வேண்டுமா?

இதனை அடிப்படையாக கொண்டே, பல உயர்நீதிமன்றங்கள் இவ்வாறான காப்பீடு விதி மீறல் என்றால், காப்பீடு நிறுவனம் தான் ஏற்றுக் கொண்டபடி நஷ்ட ஈட்டினை மூன்றாவது நபருக்கு அளித்து, பின்னர் வேறு வழக்கு ஏதும் தொடராமல், தவறு செய்த வண்டி உரிமையாளரிடம் இருந்து வசூலித்துக் கொள்ளலாம் என்று தீர்ப்புக் கூறின!

இது ஒரு சரியான அணுகுமுறை என்று பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

-oOo-

வண்டி உரிமம் பற்றிய பிரச்னைகள் தொடர்ந்து கொண்டிருந்ததால், உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய மன்றம் இந்த பிரச்னையில் பல்வேறு பரிமாணங்களை அலசி ஆராய்ந்து, முக்கியமான தீர்ப்பு ஒன்றினை வழங்கியது. சுவரண்சிங் வழக்கு என்று கூறப்படும் தீர்ப்பில் (2004 ACJ 1) உச்சநீதிமன்றம் இவ்வகையான விதி மீறல்களை சிறிய மீறல்கள் (minor breaches) அடிப்படை மீறல்கள் (fundamental breaches) என்று இரு வகையாக பிரித்தது. அதாவது காப்பீடு வழங்கும் தனது கடமையிலிருந்து விலக்கப்பட காப்பீடு நிறுவனமானது, வெறுமே விதி மீறலை சுட்டிக்காட்டினால் மட்டும் போதாது. மாறாக, ஓட்டுநரிடம் முறையான உரிமம் இல்லாததே, விபத்து நடந்ததற்க்கான காரணம் என்றும் நிரூபிக்க வேண்டும் என்றும் கூறுகிறது. (பாரா 82).

முறையான உரிமம் இல்லாதது என்பது இங்கு விபத்துக்குள்ளான வண்டியினை ஓட்டுவதற்கான உரிமம் இல்லாதது என்று எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது இலகுரகவாகன உரிமம் (LMV) உள்ளவர் கனரக வாகனம் (HMV) ஓட்டுவது போன்ற மீறல்கள்.

ஓட்டுநருக்கு உரிமமே இல்லாதா பிரச்னைகளையும் இந்த வழக்கில் சேர்க்க முடியுமா என்பது சற்று குழப்பமாக இருக்கிறது. (பாரா 100 மற்றும் 102(iii)).

வெறுமே மீறல் அல்ல அடிப்படை மீறல் என்று நிரூபிக்க வேண்டும் என்ற கடமையோடு வழக்கிலிருந்து தப்பிக்க காப்பீடு நிறுவனங்கள் அந்த வகையான அடிப்படை மீறல்கள் உரிமையாளரின் கவனக்குறைவால் நடந்தது என்பதையும் நிரூபிக்க வேண்டும். (பாரா 102 (vi)).

அதாவது விபத்துக்குள்ளான வண்டியின் ஓட்டுநரிடம் உள்ளது ஒரு போலி உரிமம். வண்டியில் உரிமையாளர், ‘அவர் என்னிடம் வேலைக்கு சேரும் பொழுது உரிமத்தை என்னிடம் காட்டினார். அதனை உண்மை என்று நம்பினேன். மேலும் அவர் நல்ல முறையிலேயே வண்டியினை ஓட்டினார்’ என்று சான்றளித்தால் உரிமையாளரின் கவனக்குறைவு என்று கூற இயலாது.

சரி, இவ்வாறு இரண்டு விடயங்களையும், காப்பீடு நிறுவனங்கள் நிரூபித்தாலும், நீதிமன்றங்கள் காப்பீடு நிறுவனத்தை அடிபட்டவருக்கு இழப்பீடு வழங்கக் கூறி அவற்றை வண்டி உரிமையாளரிடம் இருந்து வசூலிக்கும் உரிமத்தை அளிக்கலாம் என்று கூறப்படுவதுதான் இந்த தீர்ப்பின் சிறப்பம்சம்!

‘இந்த வழிமுறை பல்வேறு தீர்ப்புகளில் கூறப்படுகிறது. அதிலிருந்து விலக நாங்கள் விரும்பவில்லை’ என்று மூன்று நீதிபதிகள் அடங்கிய மன்றம் இந்த வழக்கில் கூறிய தீர்ப்பு உரிமம் சம்பந்தப்பட்ட வழக்குகளில் முக்கியமான ஒரு மைல்கல் எனலாம்.

-oOo-

சுவரன்சிங் வழக்கு தீர்ப்பு வெளிவந்த சில மாதங்களில் குசும் ராய் ((2006) 4 SCC 250) என்ற வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு புரிந்து கொள்ள இயலாத ஒன்றாக இருந்தது. அதாவது அந்த வழக்கில் கார் ஓட்டுநரிடம் இலகுரக வாகன ஓட்டும் உரிமம் இருந்தது. ஆனால் அவர் ஓட்டியது ஒரு வாடகைக்கார். வாடகை வண்டி ஓட்ட விரும்புவர்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வில்லை (badge or endorsement) பெற வேண்டும்.
யாருக்கும் எளிதில் இது ஒரு அடிப்படை மீறல் அல்ல என்பது புரியும். அதனையும் கவனத்தில் கொள்ளாமல், வண்டி உரிமையாளர் கவனக்குறைவாக இருந்தாரா என்ற கேள்வியினையும் எழுப்பாமல் மேற்போக்காக வில்லை இல்லாதலாம் முறையான உரிமம் இல்லை என்று கூறி காப்பீடு நிறுவனம் இழப்பீடு அளிக்க தேவையில்லை என்று கூறியது.

ஆனாலும் இந்த வழக்கின் இறுதியில், தனது சிறப்பு அதிகாரத்தைக் கொண்டு (Article 142 of Constitution of India) வேறு ஏதோ ஒரு வழக்கில் கூறப்பட்ட தீர்ப்பினை முன்மாதிரியாக (precedent) கொண்டு காப்பீடு நிறுவனம் இழப்பீட்டினை அளித்து பின்னர் உரிமையாளரிடம் வசூலித்துக் கொள்ளலாம் என்று கூறியது.

அவ்வளது தூரம் வேறு ஏதோ ஒரு வழக்கினை முன்மாதிரியாக கொள்வதற்கு பதிலாக உரிமம் பற்றிய வழக்குகளில் மைல் கல்லாக விளங்கிய சுவரன்சிங் வழக்கினை முன் மாதிரியாக கொண்டிருந்தால் இந்தப் பிரச்னை எழுந்திருக்காது.

வேடிக்கை என்னவென்றால், குசும்ராய் வழக்கினை விசாரித்த் இரு நீதிபதிகளில் ஒருவர் சுவரன்சிங் வழக்கினை விசாரித்த மூன்று நீதிபதிகளில் ஒருவர்!

ஆக, அடிப்படை மீறல் என்று சுவரண்சிங் வழக்கில் கூறப்பட்டது புறந்தள்ளப்பட்டு வாடகைக்கார் ஓட்ட தேவையான வில்லை இல்லாதது கூட காப்பீட்டினை மறுக்கும் ஒரு காரணியாக இந்த வழக்கு கூற முதல் குழப்பம்.

-oOo-

குசும்ராய் வழக்கிலாவது, கருணை கூர்ந்து நீதிபதிகள் காப்பீட்டு நிறுவனத்திற்கு இழப்பீட்டினை வழங்கி பின் உரிமையாளரிடம் வசூலித்துக் கொள்ள கூறினர். ஆனால், சமீபத்தில் வெளிவந்துள்ள ஒரு தீர்ப்பில் அந்தக் கருணை கூட இல்லாமல், விபத்தில் தனது கணவனை பறி கொடுத்த ஒரு மனைவியையும், தந்தையை பறி கொடுத்த மூன்று சிறு பிள்ளைகளையும் தவிக்க விட்டிருப்பதுதான் கொடுமை!

பிரேம்குமாரி வழக்கு என்று கூறப்படும் இந்த வழக்கின் (Appeal No.490/2008 Date 18/01/2008) தீர்ப்பினைப் படிக்கையில் லாரி ஓட்டுநருக்கு முறையான உரிமம் இல்லை என்றுதான் குறிப்பிடுகிறார்களே தவிர அது அடிப்படையான மீறலா? உரிமையாளரின் கவனக்குறைவு உள்ளதா? என்ற கேள்விகளை எழுப்பாமல், முன்னர் உரிமம் பற்றிய அனைத்து தீர்ப்புகளையும் பற்றி மட்டும் குறிப்பிட்டு, பாதிக்கப்பட்டவர்கள் வண்டி உரிமையாளரிடம் இருந்து இழப்பீட்டினை வசூலித்துக் கொள்ளலாம் என்று மட்டும் கூறி வழக்கினை முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர்.

ஐயா, அடிப்படை மீறல், உரிமையாளரின் கவனக்குறைவு என்பது இந்த வழக்கில் நிரூபிக்கப்பட்டதாகவே கொள்வோம். ‘இழப்பீட்டினை வழங்கி வசூலித்துக் கொள்ளலாம்’ என்ற கொள்கையினை (pay and recover) சட்டக்கருத்தாகவே மூன்று நீதிபதிகள் அடங்கிய மன்றம் முன்மொழிந்த பின்னர் தந்தையினை இழந்த மூன்று சிறு பிள்ளைகள் சம்பந்தப்பட்ட வழக்கில் அதனை பின்பற்றாமல் வேறு எந்த வழக்கில் பின்பற்றுவதாம்?

தீர்ப்பு எழுதிய இரு நீதிபதிகளுக்குத்தான் வெளிச்சம்!

08.07.08
மதுரை


பி.கு. வேடிக்கை என்னவென்றால் இந்த தீர்ப்பில் மேற்கோள் காட்டப்பட்ட அனைத்து தீர்ப்புகளிலும், சம்பந்தமில்லாத லக்ஷ்மி நாராயணன் தூத் மற்றும் மீனா வரியால் வழக்கு தீர்ப்பு உட்பட அனைத்து தீர்ப்புகளிலும் இந்த வழங்கி வசூலிக்கும் முறை ‘மூன்றாவது நபர்கள்’ வழக்கில் கடைபிடிக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.





PETCHIPARAI DAM AND KALAKAD RANGE, WESTERN GHATS, INDIA

4.7.08

பயணம்-ரோடங் கணவாய் (Rohtang Pass)

மணாலி செல்கிறீர்களா? அங்குள்ள ரோடங் கணவாய் வரை செல்லாமல் திரும்புவதில் அர்த்தமேயில்லை. மணாலி எங்கிருக்கிறது என்பவர்களுக்கு ‘ரோஜா’ படம் எடுத்த இடம் என்றால் சட்டென்று புரியும்.

மணாலி என்பது இமயமலை அடிவாரத்தில், கடல் மட்டத்திலிருந்து சுமார் 2000மீ உயரத்தில் அமைந்துள்ள கோடை வாஸஸ்தலம். வருடம் முழுவதும் சுற்றிலும் பனிசூழ்ந்திருக்கும் சிகரங்களுக்கு நடுவே அமைந்திருக்கும் பள்ளத்தாக்கு.

பனிச்சிகரங்களில் இருந்து உருகி வழியும் நீர் பியாஸ் (Beas/Vyas) நதியாக நுரை பொங்க மணாலி நகரின் நடுவே வேகமாக ஓடுகிறது.

குளிர்காலத்தில் மணாலி நகர் முழுவதும் பனி சூழ்ந்து, அப்பொழுதும் செல்வதற்கு அருமையாக இருக்குமாம்.

-oOo-

ரோடங் கணவாய், மணாலியிலிருந்து 50 கி.மீ. தொலைவில் சுமார் 5500 மீ உயரத்தில் அமைந்துள்ள கணவாய். ரோடங் கணவாயினை கடந்து அந்தப்பக்கம் இறங்கினால் லெ பின்னர் லடாக் செல்ல பாதை உள்ளது.

ரோடங் பாதை கோடைக்காலத்தில்தான் திறந்திருக்கும். செல்ல விரும்புவர்கள் காலை 4 மணிக்கே மணாலியிருந்து கிளம்பிவிட வேண்டும். போகும் வழியிலேயே குளிர் உடைகள் வாடகைக்கு கிடைக்கும். பிரச்னை என்னவென்றால், பேரம் பேச நம்மை அனுமதிக்காமல் ஓட்டுநர்கள் அவசரப்படுத்துவார்கள்.
உண்மையில் ரோடங்கில் ஸ்வெட்டர் அதற்கு மேல் ஒரு ஜாக்கெட்டுடன் சமாளித்து விடலாம். முக்கியமான தேவை கையுறையும், காலுக்கு ரப்பர் பூட்டும்தான்.

மணாலிக்கு வரும் 90 சதவிகித பயணிகள் சுமார் 3500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மர்தி ஐஸ் பாயிண்ட் என்ற இடத்தோடு திரும்பி விடுவார்கள். ஆனால் பனியினை அதன் சுத்தமான அழகோடு (virgin beauty) பார்க்க விரும்பினால், மர்தியை 6 மணிக்குள்ளாக கடந்து விட வேண்டும். அதற்கு பிறகு அனுமதிக்க மாட்டார்கள்.

4 மணிக்கே கிளம்புவதற்கு காரணம் அதுமட்டுமல்ல. ரோடங்கில் முதல் பத்து வண்டிக்குள்ளாக நாம் போனால்தான் ரோடங் அருகே நிறுத்த இடம் கிடைக்கும்.

‘ரோடங்’கின் அழகு!

போய்த்தான் பாருங்களேன்...தற்பொழுதுக்கு புகைப்படத்தை அழுத்தி பெரிதாக்கிப் பார்க்கலாம்.

அது இந்தியாவின் ஸ்விட்சர்லாந்து!!!


(ZERO POINT...அந்தப் பக்கம் இறங்கினால்...லடாக் சென்று விடலாம்.











காலையில் முதல் ஆளாக சென்றால், ரோடங் முழுவதும் விலங்கினங்களின் கால்தடங்கள்!


-oOo-

ஞாநியைத் தொடருவது சுவராசியமாகத்தான் இருக்கிறது. ‘இந்தியாவில் ஓரின உறவு சட்டப்படி இன்னமும் குற்றமாக இருந்து வருகிறது’ என்பவர் அடுத்து ‘பலதார மணமும் இந்து(ச்) சட்டப்படி குற்றம்தான்’ என்கிறார்.

அப்படியா?

மதுரை
040708

1.7.08

கருத்தும், கவிதையும்...காமக்கதையும்...



அரிஜித் பசாயத்.....உச்ச நீதிமன்றத்தில் தற்பொழுது பணியாற்றும் நீதிபதிகளில் சுறுசுறுப்பு மிக்கவர். நெருங்கி வரும் தனது பணி ஓய்விற்குள்ளாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு வழக்குகளில் தீர்ப்பு கூற வேண்டும் என்ற தாகத்துடன் செயல்படுகிறார். அதே போல பரபரப்பிற்கும் பஞ்சமில்லாதவர்.

சமீபத்தில் பிரிந்து வாழும் கணவன் மனைவிக்கிடையே, ‘குழந்தை யாரிடமிருப்பது’ என்ற வழக்கினை விசாரித்த இவர், ‘இந்து திருமண சட்டம் திருமணங்களை உடைக்கவே பயன்படுகிறது’ என்பது போல ஒரு கருத்தினை உதிர்க்க அது பத்திரிக்கைகளில் பெரிய செய்தியாக வெளிவந்தது. அதற்கு சில நாட்களுக்கு முன்னர் இவரது நீதிமன்றத்தில் வாதிடப்பட்ட பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளியின் பெயர் நேரு என்பதை அறிந்தவர், ‘குற்றவாளிகளிடம் இருந்து தேசத்தலைவர்களின் பெயர்களை பறிக்க அரசு ஏதாவது செய்ய வேண்டும்’ என்று முழங்க அதுவும் செய்தியானது!

முதலாவது கருத்தாவது ஒரு விவாதப் பொருள். இரண்டாவது அபத்தம்.

எதுவாயினும், நீதிபதிகள் இவ்வாறு தங்களது சொந்த கருத்துக்களை உதிர்க்க நீதிமன்ற அறையினைப் பயன்படுத்துவது ஒரு வகையில் அதிகார துஷ்பிரயோகம்தான் என்பது எனது தாழ்மையான கருத்து.

தங்களது தீர்ப்புகளில் நீதிபதிகள் கவிதையினையும், திருக்குறள் போன்றவற்றை நுழைப்பது கூட அப்படித்தான்.

எனக்குத் தோன்றும் ஒரு கருத்தினை அல்லது நான் ரசித்த ஒரு கவிதையினை மற்றவர்களோடு இவ்வாறு ஒரு பதிவு எழுதுவதன் மூலம் பகிர்ந்து கொள்ளுவதில் எனக்கு ஒரு இன்பம் ஏற்ப்படுகிறது. ஆனால், இதற்காக நான் செலவழிப்பது, எனது கணனியும் மின்சாரமும்!

அவ்வாறின்றி அந்த இன்பத்தினைப் பெற எனது பதவி தரும் சில வசதிகளை நான் பயன்படுத்துவது, ஏறக்குறைய அலுவலக ஊர்தியினை சொந்த காரியங்களுக்கு பயன்படுத்துவது போன்ற ஒரு செயல்தான்.

-oOo-

எழுத்தாளர் ஞாநியை குறை கண்டுபிடிப்பது வரவர உற்சாகம் தரும் ஒரு செயலாக இருக்கிறது. கடந்த வார குமுதத்தில் ‘ஓரின சேர்க்கை’ என்பது இந்திய சட்டப்படி குற்றம் என்பது போல எழுதியிருக்கிறார். குறை என்று கூற முடியாது. ஆனாலும் ஆர்வம் உள்ளவர்களுக்கு சில விளக்கங்கள் உதவலாம் என்பதால்...கொஞ்சம் காமக்கதை!

இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 377ஐ மனதில் வைத்து எழுதியிருப்பார் என நினைக்கிறேன். தமிழில் மொழி பெயர்க்கப் போவதில்லை.

“Whoever voluntarily has carnal intercourse against the order of nature with any man, woman or animal, shall be punished with imprisonment for life, or with imprisonment of either description for term which may extend to ten years, and shall also be liable to fine.
Explanation. -Penetration is sufficient to constitute the carnal intercourse necessary to the offence described in this section”

ஆக இந்தப் பிரிவின் கீழ் குற்றம் என்பது ஓரினபாலரை மட்டும் குறி வைக்கவில்லை என்பதை அறியலாம்.

-oOo-

அது என்ன ‘carnal intercourse against the order of nature’?

சென்னை வழக்கு ஒன்றில் (Brother John Antony Vs State 1992 CrLJ Mad 1352) இதனை விரிவாக ஆராய்ந்த நமது நீதிமன்றம் மூன்று வகையான sodomy, buggery மற்றும் bestiality போன்ற பாலியல் வக்கிரங்கள் (sexual perversions) இந்த குற்ற விளக்கத்திற்குள் அடங்கும் என்று கூறுகிறது.

முக்கியமாக sodomy என்பதன் விளக்கம் கவனிக்கத்தக்கது. மீண்டும் தமிழில் மொழி பெயர்க்கப் போவதில்லை.

Non coital carnal copulation with a member of the same or opposite sex e.g. per anus or per os (mouth)

இந்த விளக்கத்தின் மூலம், ஓரினசேர்க்கையோ, ஈரினசேர்க்கையோ குற்றமும் தண்டனையும் அனைவருக்கும் பொதுதான் என்பதை அறியலாம்.

எனது கேள்வி இதுதான்...

Are you sure, you have not ever committed any crime, punishable under law with life imprisonment?

-oOo-

பதிவாளர் பாலபாரதி தனது விடுபட்டவை பதிவில், ‘காவல்துறை வாகனங்களுக்கு’ இன்ஸூரன்ஸ் (காப்பீடு) சென்னையில் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவது கிடையாது. அதனால் அதில் அடிபட்டு விட வேண்டாம் என்று எழுதியிருக்கிறார்.

காவல்துறை மட்டுமல்லாது, அனைத்து அரசு வாகனங்களுக்கும், மோட்டர் வாகன சட்டமானது (Motor Vehicle Act) கட்டாய காப்பீட்டிலிருந்து விலக்கு அளிக்கிறது. அதற்காக வண்டியில் அடிபடுபவர்களுக்கு நஷ்ட ஈடு கிடைக்காது என்பதல்ல. அரசிடம் இருந்து பெற முடியும்.

வாகன விபத்தில் அடிபடுபவர்களுக்கு வாகன உரிமையாளர் நஷ்ட ஈடு தர வேண்டும். உரிமையாளரிடம் அவ்வளவு பணம் இருக்காது என்பதால், காப்பீடு நிறுவனங்கள் தருகின்றன. அரசு அவ்வாறு கூற முடியாதே!

இவ்வாறு கிடைக்கும் நஷ்ட ஈடு, விபத்து நடந்தவுடன் அரசு தன்னிச்சையாக அறிவிக்கும் உதவித்தொகையல்ல. அது வேறு!

-oOo-



QUTUB MINAR, NEW DELHI



மதுரை
01.07.08

14.6.08

உயிரினம்-ஜூன் புகைப்படங்கள்

கோடை விடுமுறைக்கு மணாலி, சிம்லா சென்றிருந்த பொழுது ..... மனதில் உறைந்த காட்சிகள்!!!





சிம்லா, 'ஈ'க்கு அது முக்கியமில்லை! (போட்டிக்கு)




கடைத்தெரு (மால்), சிம்லா





மனாலி குல்லு சாலையோரம், பியாஸ் நதிக்கரையோரம் அமைந்திருந்த பழத்தோட்டத்தில்...
எனக்குப் பிடித்த காட்சி இதுதான்!




31.5.08

பன்றிக்கறியா, பால்பவுடரா?

சிந்திக்க உண்மைகள்’ என்ற வலைப்பதிவு கர்த்தரின் கட்டளைக்கு எதிராக கிறிஸ்தவர்கள் பன்றி இறைச்சியினை உண்ணலாமா? என்ற கேள்வியினை தனது இடுகையொன்றில் எழுப்புகிறது. அதற்கு ஆதாரமாக, பன்றியிறைச்சியினை உண்ணலாகாது என்ற கிறிஸ்தவ வேதாகமத்தின் லேவியராகமத்து (Leviticus) வசனத்தையும் மேற்காட்டுகிறது.

உண்மைதான். ஆனால் லேவியராகமம் கிறிஸ்துவுக்கு முந்தைய காலத்தைச் சார்ந்த பழைய ஏற்பாட்டிலுள்ளது (Old Testament). இயேசுவின் போதனைகளோ பழைய ஏற்பாட்டின் விதிகளை அப்படியே புரட்டிப் போட்டன! தயக்கமோ அல்லது பிற காரணங்களாலோ, இயேசு தன்னை ஒரு நாத்திகராக அறிவிக்காமல், பழைய யூதேய மதத்தின் நீட்சியாகவே கருத்துகளை முன்வைத்தார்.

மோசே ‘பல்லுக்குப் பல்’ என்றால் இயேசு ‘ஒரு கன்னத்தில் அறைந்தவனுக்கு மறு கன்னத்தைக் காட்டு’ என்கிறார். ஆயினும் கிறிஸ்தவர்களும் வேறு வழியின்றி பழைய ஏற்பாட்டினையும் வேதமாக ஏற்றுக் கொள்கின்றனர்.

இயேசு சிலுவையில் அறையுண்ட பின்னர் அவரது சீடரான பேதுரு (Peter) கிறிஸ்தவ மதத்தினை கட்டியெழுப்பினார். அவருக்கு பன்றியிறைச்சி சாப்பிடும் ஆசை வந்ததோ என்னவோ தெரியவில்லை, இறைவனின் தரிசனத்தில், ‘அனைத்து ஜீவராசிகளும் அவரது படைப்பாயிருக்க, பன்றி மட்டும் எப்படி சுத்தமில்லாததாயிருக்கும்’ என்று வெளிப்படுத்தியதாக கூற...கிறிஸ்தவர்களுக்கு அனைத்தும் அனுமதிக்கப்பட்டது.

நல்லவேளை, பேதுரு தரிசனம் கண்டார்...இல்லை, திருநெல்வேலி, கன்னியாகுமரியில் மிஷனரிகளுக்கு விசுவாச அறுவடைகளுக்குப் பதிலாக ஏமாற்றம்தான் மிஞ்சியிருக்கும். பின்ன! பால்பவுடருக்காக, முயல் கறியை தியாகம் பண்ண முடியுமா?

-oOo-

பேதுருவும், பாலும் (Peter and Paul) அனுமதித்தாலும், குஜராத் அரசு அனுமதிக்க மறுக்கிறது.

சமண மதத்தின் முக்கியமான விழா ஒன்றின் பொழுது தொடர்ச்சியாக ஒன்பது நாட்களுக்கு, ஆமதாபாத்தில் உள்ள கசாப்பு மையங்களை (slaughter house) மொத்தமாக மூடச் சொல்கிறார்களாம். ‘தொழில் செய்வதற்கான தங்களது அடிப்படை உரிமை’ (fundamental right to carry on trade) பாதிக்கப்படுவதாக கசாப்புக் கடைக்காரர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகினால்...முடிவு வழக்கம் போலத்தான்.

நீட்டி முழக்கி பல பக்கங்களில் ஏதேதோ கூறிவிட்டு இறுதியில் ‘கொஞ்ச நாள்தானே, அசைவ உணவுப் பிரியர்கள் ஒன்பது நாட்களுக்கு சைவ உணவுக்காரர்களாக இருக்கலாம், தப்பில்லை’ என்று பிரச்னையை முடித்து வைத்துள்ளார்கள். (As already stated above, it is a short restriction for a few days and surely the non-vegetarians can remain vegetarian for this short period)

சில உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை படிக்கையில் சட்டம் சார்ந்த தீர்ப்பா அல்லது ஆராய்ச்சி மாணவர் சமர்ப்பிக்கும் கட்டுரையா என்ற சந்தேகம் வருகிறது.

தற்பொழுது எனது சந்தேகம் இதுதான். கசாப்புக் கடைகளை மூடி, தொழிலாளர்களின் வயிற்றில் அடித்தால் மட்டும், அசைவர்களை ஒன்பது நாட்களுக்கு சைவர்களாக்கி விட முடியுமா?

ஸ்பென்ஸருக்கு போனால், பன்றி, மாடு, எறா எல்லாம் உறைந்த இறைச்சியாக கிடைக்கிறது. அட! வீட்டிலேயே குளிர்ப்பெட்டிக்குள் வாங்கி வைத்துக் கொள்ளலாம். இல்லை, இருக்கவே இருக்கு உப்புக் கண்டம், கருவாடு!

மார்க்கண்டேய கட்ஜுவுக்கு தெரியுமா, கருவாட்டு வாசனை!

-oOo-



OLD FORT : NEW DELHI




மதுரை
31.05.08

28.4.08

பொதுநல வழக்குகள், நீதிபதிகள் மற்றும் தமிழ்!


உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளைக் குறித்து, சட்ட நிபுணர்கள் பலர் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொள்ளும் பதிவு ஒன்றினைப் பற்றி எனது முந்தைய பதிவு ஒன்றில் குறிப்பிட்டேன். சமீபத்தில், உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூ அவர்கள் பொதுநல வழக்குகளைக் குறித்து தெரிவித்த கருத்துகளைக் குறித்து சில பதிவுகளை அங்கு கண்ணுற நேர்ந்தது.

ஒரு பிரச்சினையில் பாதிக்கப்பட்ட நபர் மட்டுமே வழக்கினை தாக்கல் செய்ய முடியும் என்பது பொது விதி.. பொதுநல வழக்கு என்பது, இந்த எல்லையினை உடைத்து வெளிக்கிளம்பியதாகும். அதாவது வழக்கில் நேரிடையாக சம்பந்தப்படாத ஒரு நபர் பொது நலனுக்குக்காக தொடரும் வழக்கே பொதுநல வழக்காகும் (Public Interest Litigation PIL).

பொதுநல வழக்குகளால் நீதிமன்றங்கள் மக்களிடையே அடைந்த புகழ் குறிப்பிடத்தக்கதாகும். ஆனாலும் அவ்வப்போது, இவற்றை Paisa Interested Litigation அல்லது Publicity Interested Litigation என்று நீதிமன்றங்கள் நிராகரிக்கும் போக்கும் அதிகரித்து வருகிறது.

முக்கியமாக, பல சமயங்களில் இவ்வகையான வழக்கினை நிராகரிக்கையில் பொதுநல வழக்கு என்றால் என்ன என்று நீதிபதிகள் இவற்றை எந்த எல்லையினை மீறி இவை தோன்றியதோ அதே போன்றதொரு எல்லைக்குள் இதனை அடைத்து வரைமுறைப்படுத்த முயல்வதுதான் வேடிக்கை!

பொதுநல வழக்கு என்பதற்கு வரைமுறையினை (definition) ஏற்ப்படுத்த முயலும் நீதிபதிகளைப் பார்த்தால் எனக்கு பதினெட்டாம் நூற்றாண்டில் ‘முடிவில்லாமல் இயங்கும் இயந்திரத்தை’ உருவாக்குகிறேன் என்று அலைந்த பெளதீகவியலாளர்கள்தான் ஞாபகத்துக்கு வருகிறார்கள்.

பொதுநல வழக்குகளை எந்த வரையறைக்குள்ளும் கொணராமல், அவற்றை அதன் போக்கில் நடை போட விடுவதுதான் சட்டத்தின் வளர்ச்சிக்கு நாம் செய்யக்கூடியது.

-oOo-

மார்கண்டேய கட்ஜூ நமது உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருக்கையிலும், அரசினை பல்வேறு பேராண்மை மனுக்களில் (writ petition) பாதுகாத்தார். ஆனால் அவரது உத்தரவுகள் செல்லாது என்று மூத்த வழக்குரைஞர் ஒருவர் கூறினார்.

‘அவருக்குதான் வயது பதினாறை தாண்டாதே...மைனர் தீர்ப்பு செல்லுமா?’ என்றாரே பார்க்கலாம்!

-oOo-

தீர்ப்பு என்றதுதான் நினைவுக்கு வருகிறது. இரு நாட்களுக்கு முன்னர் மேல்முறையீட்டு மனு (Appeal) தயாரிப்பதற்காக சார்பு நீதிபதி (Sub Judge) ஒருவரின் தீர்ப்பினை படித்த எனக்கு தீர்ப்பில் ஒரு வரி பிடிபடவில்லை. ‘இறந்தவர் இரும்பு முதலிய உலோகத்தால் செய்யப்பட்ட சாமான்கள் சம்பந்தப்பட்ட கணணியில் பட்டயப் படிப்பு படித்திருக்கிறார் என்பதை அறிய முடிகிறது’ என்ற வரிதான் அது.

Metallurgy ஆ? தென்காசியில் அதெல்லாம் படிக்கிறார்களா என்று குழம்பி பின்னர் வழக்கு கட்டினை முழுவதும் புரட்டிய பின்னர்தான் அது என்ன படிப்பு என்று புரிந்தது. Diplomo in Computer Hardware!

வாகன விபத்து இழப்பீடு சம்பந்தப்பட்ட பல தீர்ப்புகளில் ‘இயற்பியல் சிகிச்சை’ என்ற வார்த்தை இடம் பெறும். எனக்கு தற்பொழுது பழக்கப்பட்ட அந்த வார்த்தையின் ஆங்கில மொழியாக்கம் ‘Physiotherapy’!

நீதிபதிகளுக்கான பயிற்ச்சிக் களத்தில் தமிழ் மொழியாக்கம் பற்றி, இராமகி ஐயாவை வகுப்பெடுக்க வேண்டுகோள் வைக்கலாம்.

-oOo-

‘என் வருகையை அறிவித்தவர் சுஜாதா’ என்று ஜெயமோகன் கூறியதை ‘இது போன்றவர்களின் வருகையை அறிவிக்கும் அபோஸ்தலராக எப்போது மாறினார் சுஜாதா?’ என்று சாருநிவேதிதா தனது கட்டுரையொன்றில் கிண்டலடித்திருக்கிறார்.

மற்றொருவரின் வருகையினை உலகுக்கு அறிவிக்கும் நபரைக் குறிக்க அப்போஸ்தலரை உதாரணப்படுத்துவது சரியாக வருமா? கிறிஸ்தவ விவிலியத்தை படித்தவர்கள்தான் கூற வேண்டும்.

பிரபு ராஜதுரை
28.04.08

17.4.08

சாய் பாபாவும் இராமரின் மோதிரமும்!

கடந்த மாதம் ஏதோவொரு தொலைக்காட்சியில், புட்டபர்த்தி சத்திய சாய்பாபாவை பற்றிய அவரது நிறுவனம் தயாரித்த ஆவணபடம் ஒன்றினை பார்த்தேன். இறுதியில் பொது நிகழ்ச்சியில், தனது வாயிலிருந்து பெரிய பச்சைக்கல் பதித்த மோதிரமொன்றினை எடுத்துக் காட்டி, ‘திருமணத்தின் பொழுது ராமர் சீதைக்கு அணிவித்த மோதிரம்’ என்று தெரிவித்தார். கூட்டம் வியப்பிலாழ மோதிரத்தினை அவரது முன்னே வைத்தார்.

ஆவணப்படத்தில் வர்ணனை வழங்கியவர், அது பின்னர் மறைந்துவிடும் என்று கூற தொலைக்காட்சித் திரை முழுவதுமாக மங்க மோதிரம் மறைந்து போனது!

இவ்வாறாக சாய்பாபா நகைகளை கொணர்வது பற்றிய விபரங்கள் அவர்களது வலைத்தளத்திலும் கண்ணுற்றேன்.

-oOo-

ராமர் சீதைக்கு அணிவித்த மோதிரம் என்றால் அரிய பழம் பொருள் ஆயிற்றே. அரசுக்கு தெரிவிக்காமல் அதனை வைத்திருக்கலாமா என்ற இயல்பான சந்தேகம் எழுந்தது.

1958ம் வருடம் இயற்றப்பட்ட ‘The Ancient Monument and Archeological Sites and Remains Act’ என்ற புராதான சின்னங்களைப் பற்றிய சட்டத்தில் பழம்பொருட்கள் பற்றியும் கூறப்படுகிறது. ராமர் சீதைக்கு அணிவித்த மோதிரமென்றால், இந்த சட்டப்பிரிவில் பழம்பொருள் (antiquity) என்று விளக்கப்படும் பதத்திற்குள் வரும். ஆனால் இந்தச் சட்டப்பிரிவுகளின்படி, மத்திய அரசாங்கம் ஏதாவதொரு பழம்பொருளானது ஒரிடத்திலிந்து மற்றொரு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்படக்கூடாது எனில் அவ்வாறு அறிவிக்கலாம். அவ்வாறான உத்தரவு மீறப்பட்டாலே அது தவறாகும்.

எனவே சாய் பாபா ராமரின் மோதிரத்தினை வைத்திருப்பதில் ஏதும் தவறில்லை!

-oOo-

பின்னர் 1972ம் ஆண்டில், ‘The Antiquities and Art Treasures Act’ என்று பழம்பொருட்கள் மற்றும் கலைச்செல்வங்களுக்காக தனியே ஒரு சட்டமியற்றப்பட்டது.

இந்த சட்டப்பிரிவுகளின்படி பழம்பொருட்களை ஏற்றுமதி செய்தல், விற்றல் ஆகியவற்றில் பல கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டது. முக்கியமாக பழம்பொருட்களை வைத்திருப்பவர்கள் அவற்றை மத்திய அரசிடம் தெரிவித்து அதனைப் பற்றிய விபரங்களை பதிய (register) வேண்டும்.

ஆனால் மத்திய அரசு எந்த எந்த வகையான பழம்பொருட்களை பதிய வேண்டும் என்று அறிவிக்கிறதோ அவற்றை பதிந்தால் போதுமானது.

ராமர் சீதைக்கு அணிவித்தது, தங்க நகை/ ஆபரணம். இதனை பதிவு செய்ய வேண்டுமா என்று பார்த்தால் மத்திய அரசு இதற்காக 1976ம் ஆண்டு GSR 280(E) என்ற அறிவிக்கையினை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் ‘வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகைகள்’ பதிவு செய்யப்பட வேண்டிய பழம்பொருட்கள் பட்டியலில் வருகிறது.

ஆக, சாய்பாபா இந்தச் சட்டத்தின்படி தன்னிடம் உள்ள பழம்பொருளான நகை பற்றிய விபரத்தினை மத்திய அரசிடம் பதியாமல் விடுவது தவறுதான்.

ஆனால், 1980ம் வருடம் மத்திய அரசு S.0. 397(E) என்ற அறிக்கை மூலம் பதிவு செய்ய வேண்டிய பழம்பொருட்களின் திருத்தப்பட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் நகைகள் விடப்பட்டுள்ளது. எனவே சாய் பாபா தான் எடுக்கும் நகைகளை பதிய வேண்டியதில்லை.

எனவே 1976ம் ஆண்டிலிருந்து 1980ம் ஆண்டு வரைதான் இந்தப் பிரச்சினை. பின்னர் இல்லை. சாய்பாபா நகைகளை வைத்திருப்பதில் தவறு ஏதும் இல்லை!

-oOo-

இந்த வெட்டி ஆராய்ச்சிக்காக வலையினை மேய்கையில், இதை விட வெட்டி ஆராய்ச்சி செய்து ‘சாய்பாபா’ பக்தர்களுக்கு அளிக்கும் தங்க நகைகள் மூலம் தங்க கட்டுப்பாடு சட்டத்தினை மீறுகிறார் என்று பல ஆண்டுகளுக்கு முன்னரே அவர் மீது ஒருவர் வழக்கு தொடர்ந்த விபரம் கிடைத்தது

-oOo-

ஞாநி பிரச்சினை விடாது போலிருக்கிறது. சுடுவது சுகம் என்ற வலைப்பதிவில் காப்பிரைட் பற்றிக் கவலைப்படாமல் ஞாநியின் கட்டுரையொன்றினை பதிந்திருக்கிறார்கள். அதில் ஞாநி இவ்வாறு ஆரம்பிக்கிறார்

தனிநாடு கோருவது சட்ட விரோதம என்ற சட்டத்தை மத்திய அரசு 1963ல் கொண்டு வந்ததும, அதுவரை தன் திராவிடநாடு கோரி வந்த திராவிட முன்னேற்றக் கழகம் பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டது

நானறிந்த வரையில் அவ்வாறு 1963ம் வருடம் சட்டம் ஏதும் இயற்றப்படவில்லை!

இந்தியா - சீனா போர் சமயத்தில் நாடு முழுவதும் எழும்பிய தேசபக்தி அலையிலும், இம்மாதிரியான கொள்கைகளை கொண்டிருக்கும் கட்சிகள் தடை செய்யப்படலாம் என்ற மறைமுகமான மிரட்டல்களாலும்தான் திமுக பிரிவினை கோரிக்கையினை கைவிட்டது என்பது எனது அனுமானம்.

அவ்விதம் ஏதும் சட்டம் இயற்றப்பட்டு, யாரேனும் ‘பாபா’ உட்பட (சாய்பாபா இல்லை நம்ம பாபா) தெரிவித்தால் நன்றியுடையவனாக இருப்பேன்.

-oOo-

இந்திய நீதிமன்றத் தீர்ப்புகளை பற்றி சட்டபூர்வமாக அலசும் ஒரு ஆங்கிலப்பதிவில் சுட்டியினை பத்ரி தந்துள்ளார். மணற்கேணியினைப் போல இல்லாமல் மேலும் ஆழமாக சட்டத்தினை ஆழமாக படிக்க விரும்புவர்களுக்கு உதவும்.
http://lawandotherthings.blogspot.com/

மதுரை
18.04.08

31.3.08

‘ஞாநி’களும் மேற்போக்காக மேய்தலும்...

திருமணத்தை ரத்து செய்வதற்கான உரிமை குரான் விதிகளின்படி இஸ்லாமியப் பெண்களுக்கும் உண்டு என்று அறிவித்து அதற்கான விதிமுறைகளை வெளியிட்டிருப்பதற்காக அனைந்திந்திய முஸ்லீம் சட்ட வாரியத்துக்கு இ.வா.பூச்செண்டு” - எழுத்தாளர் ஞாநி!

‘ஞாநிகளுக்கு எதற்கு அறிவு? என்ற எனது பதிவினை தொடர்ந்து, தனது கருத்துகளை ‘செத்த மரங்களில் செதுக்கும் கலைஞர்கள்’ என்று தனது வலைப்பதிவில் எழுதிய வெங்கட் “அது பின்நவீனத்துவமோ, மரபு மாற்றமோ, சூடேற்றமோ, சூடான் அரசியல் விவகாரமோ இவர்கள் பல சமயங்களில் மேம்போக்காக மேய்ந்துவிட்டு அடுத்தவாரமே தங்கள் மேதமையை அச்சிலேற்றிவிடுவார்கள்” என்று எழுதியதற்கு ஒரு உதாரணம்தான் மேலே காணும் பூச்செண்டு!

முதலில் ஞாநி குறிப்பிடுவது முஸ்லீம் சட்ட வாரியம் அல்ல. மாறாக முஸ்லீம் பெண்கள் சட்ட வாரியம். அடுத்து மார்ச் மாதத்தில் வெளியிடப்பட்டது விதிமுறைகள் அல்ல. மாறாக, இஸ்லாமியர்களின் திருமண ஒப்பந்தமான நிக்காநாமாவின் வடிவம் (model form).

இஸ்லாமிய சட்ட வாரியம் (All India Muslim Personal Law Board) என்பது 1973ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு தன்னார்வ அமைப்பு. ‘அனைத்திந்திய’ ‘வாரியம்’ என்ற வார்த்தைகள் அதன் பெயரில் இருந்தாலு அரசு சார்ந்த ஒரு அமைப்பல்ல. மாறாக பொது சிவில் சட்டம் என்ற அரசின் கொள்கைக்கு எதிரான ஒரு அமைப்பு (pressure group).

2005ம் ஆண்டு நிக்காநாமா இவ்வாறு இருக்கலாம் என்று ஒரு வடிவத்தினை இந்த அமைப்பு வெளியிட்டது. இந்த அமைப்பின் தீர்மானங்கள் இஸ்லாமியப் பெண்களின் பிரச்னைகளை போக்குவதாக இல்லை என்று சில இஸ்லாமியப் பெண்களால் தோற்றுவிக்கப்பட்டதுதான் இஸ்லாமியப் பெண்கள் சட்ட வாரியம் (All India Muslim Personal Law Board). இரு அமைப்புகளையும் இங்குள்ள இஸ்லாமியர்கள் சீந்துவதில்லை.

இரு வாரங்களுக்கு முன்னர் இந்த பெண்கள் அமைப்பு தனது நிக்காநாமாவை வெளியிட்டது. உடனே, மற்ற நிறுவனத்திடம் இருந்து, தேவையற்றது (irrelevant) என்ற கண்டனம் வந்து விட்டது!

ஆனால் ‘ஞாநி’ நடப்பது என்ன ஏது என்று புரியாமலேயே கண்டனம் தெரிவித்த அமைப்பிற்கு பூச்செண்டைக் கொடுத்துவிட்டார்.

-oOo-

நான் மேலே கூறும் விபரங்கள் அனைத்தும், சிறிது நேரம் செலவழித்து இணையத்தில் தேடினாலேயே கிடைக்கும். எழுதும் விஷயத்தில் சிறு ஆராய்ச்சி கூட செய்ய விரும்பாதவர்கள்தான் இன்றைய தமிழ் பத்தி எழுத்தாளர்கள்.

சாருநிவேதிதா தனது கட்டுரையொன்றில் துருக்கி இந்தியாவை விட மிகவும் ஏழை நாடு என்று குறிப்பிடுகிறார். பின்னர் ஒரு முறை வெறுமே துருக்கியை ஏழை நாடு என்று தனது மற்றொரு கட்டுரையில் அவர் குறிப்பிட்டதையும் வாசிக்க நேர்ந்தது.

இந்தியாவிற்கு எதிரான துருக்கியின் பொருளாதார வலிமையினை சுமார் பத்து விநாடி நேரத்தில் இணையத்தில் கண்டுபிடித்து விடலாம். ஆனால், யார் எம்மை கேள்வி கேட்பது என்ற தைரியம்தானே இவ்வாறு இவர்களை எழுத வைக்கிறது.

சுசூகியும், யமாஹாவும் வரும் வரை இந்திய பஜாஜும், ராஜ்தூத்தும் இப்படித்தான் ‘வாகனம் என்றால் இரு சக்கரத்தில் சென்றால் போதும்’ என்ற வகையில் நடந்து கொண்டன. தற்பொழுது அவைகள் இருக்கும் இடம் தெரியவில்லை.

-oOo-

எழுத்தாளர் சுஜாதா கூட இதற்கு விதிவிலக்கல்ல... ‘சுஜாதா வீட்டு லாண்டிரிக்கணக்கை கூட வெளியிடுவார்கள்’ என்று வைக்கப்பட்ட ஒரு விமர்சனத்தை கிண்டல் செய்யும் நோக்கோடு, சாவி இதழ் ஒருமுறை தனது பக்கங்களில் ஒன்றினை ‘லாண்டிரிக் கணக்கு’ ஒன்றினை வெளியிட்டது. யாரையோ நக்கல் செய்கிறோம் என்ற பெயரில், மறைந்த சா.விஸ்வநாதன் காசு கொடுத்து, தனது பத்திரிக்கை வாங்கியவர்களை அவமானப்படுத்தினார்.

அந்நியனுக்காக சுஜாதா செய்த ‘ஆராய்ச்சி’யினை இங்கு குறிப்பிட்டுள்ளேன்!

-oOo-

இறுதியாக தமிழ், செம்மொழியாக அறிவிக்கப்பட்டது குறித்து விவாதங்கள் நடைபெற்ற காலத்தில் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி அவர்கள் ‘தீராநதி’ யில் எழுதிய கட்டுரையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினைப் பற்றி கூறுவதைப் பார்க்கலாம்

இன்னொரு பிரச்னையும் இருக்கிறது. தமிழ் மொழி செம்மொழி என்று கிவிட்டால், அரசியல் சட்டம் எட்டாம் பிரிவின்படி, நவீன இந்திய மொழி என்று அதற்குக் கிடைத்து வரும் உரிமைகளும் சலுகைகளும் பாதிக்கப் படமாட்டா என்பது என்ன நிச்சியம்? ஒரே மொழி இரண்டு தகுதிகளுக்கும் உரியது காது என்று, மனித வள மேம்பாட்டுத் துறை கூறாது என்பது உறுதியா?

எழுத்தாளரின் கட்டுரை ‘ராயர் காபி கிளப்’ என்ற வலைக்குழுமத்தில் விவாதப் பொருளாகிய பொழுது நான் எழுதியது

தேர்ந்த எழுத்தாளரான கட்டுரையாசிரியர், இந்தக் கருத்துக்காக எந்த ஆராய்வின் அடிப்படையில் இவ்வாறு கூறுகிறார் என்பது புரியவில்லை. அரசியல் சட்டத்தின் எட்டாம் பிரிவில் கண்ட மொழிகள் முதலில் நவீன இந்திய மொழிகள் என்று கூறப்படவில்லை. மேலும் அந்த அட்டவணையில் 14வது மொழி சமஸ்கிருதம். நான்காவது மொழி ஹிந்தி! அரசியலமைப்புச் சட்டத்தின் பிற பிரிவுகளில் பல சிறப்பு இடங்கள் ஹிந்திக்கும் சில சிறப்பு இடங்கள் சமஸ்கிருதத்திற்கும் உள்ளன. ஹிந்திக்கு அட்டவணைத்தகுதியும் ஆட்சி மொழித் தகுதியுமாக இரு தகுதிகள் இருக்கையில் தலையிடாத மனித வள மேம்பாட்டுத் துறை தமிழைக் கண்டதும் தலையிடுமோ?

அடுத்து அரசியல் சட்டத்தின் எட்டாம் பிரிவில் ஒரு மொழி இடம் பெறுவதால் அதற்கு ரூபாய் நோட்டில் இடம் பெறுவதை தவிர வேறு பெரிய உரிமையும், சலுகையும் இருப்பதாக நான் அறியேன். இல்லாத உரிமையும், சலுகையும் எவ்வாறு பாதிக்கப்படும் என ஆசிரியர் கூறுகிறார்? அரசியல் அமைப்புச் சட்டத்தில்இந்த அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள மொழிகளுக்கு சிறப்புச் சலுகைகள் ஏதும் கூறப்படாத நிலையில் இந்த அட்டவணையில் குறிப்பிடாத மொழிகள் கூட தங்கள் வளர்ச்சிக்கான தொகையினை வேண்டிப் பெறலாம்.
இந்த எட்டாவது அட்டவணையே ஒன்றுக்கும் உதவாத, பயனற்ற அட்டவணை என்று முன்பு 'இந்திய ஆட்சி மொழி' என்ற கட்டுரையில் விளக்கமாக எழுதியிருந்தேன். என்னிடம் தற்பொழுது இல்லை. இராயர் கிட்டங்கியில்
எங்காவது புதைந்து கொண்டிருக்கலாம்.

தமிழ் செம்மொழி என்று அறிவிப்பதால் நன்மை ஏதாவது இருக்கிறதோ இல்லையோ தீமை ஏதும் இருப்பதாக தெரியவில்லை. கட்டுரையாசிரியர் தனது கட்டுரையில் ஏதாவது தீமையை சுட்டிக்காட்டும் எண்ணத்துடன் பொதுவாக எழுதியது போல இருக்கிறது மேற்கண்ட வாசகம்


இன்று வரை எனது கருத்திற்கு யாரிடமிருந்தும் பதிலில்லை. எனது கருத்து தவறாகக் கூட இருக்கலாம். ஆனால், தகுந்த ஆய்வினன மேற்கொண்ட பின்னரே நான் எனது கருத்தினை எழுத துணிந்தேன். ஆனால், இந்திரா பார்த்தசாரதி அவர்கள் ஏதும் ஆய்வினை புரியாமலேயே, தனது கருத்தினை எழுதினார் என்றே இன்றளவும் நம்புகிறேன்.

மதுரை
31.03.08


THERMAL POWER STATION, THOOTHUKUDI

30.3.08

‘ஞாநி’களுக்கு எதற்கு அறிவு?

மும்பையில் இருக்கையில், மிட் டே (Midday) டைம்ஸ் ஆப் இந்தியா (times of India) ஆகிய தினசரிகளில் ரஜ்தீப் சர்தேசாய், ஷோபா டே, கங்காதர், சுவாமிநாத ஐயர் மற்றும் பல பத்தி எளுத்தாளர்கள் (columnists) எழுதும் கட்டுரைகளை (column) மிகவும் ஆர்வமுடன் படிப்பேன். நாமும் இப்படி எழுதிப் பார்த்தால் என்ன என்ற ஆசை அவ்வப்பொழுது எழுந்தாலும், அவர்களைப் போல மொழியின் மீது ஆளுமையும், அறிவும் நமக்கு வாய்க்குமா என்ற பயத்தில், வெறுமே ஆசிரியருக்கு எழுதிய சில கடிதங்களோடு நிறுத்திக் கொண்டேன்.

முக்கியமாக எதாவது ஒன்றிற்கு பொருத்தமான ஆங்கில வார்த்தை என்னவென்று தெரியாமல் போய்விட்டால் என்ன செய்வது?

மதுரைக்கு வந்த கடந்த சில வருடங்களில் நான் இழந்தது, ஆங்கில பத்தி எழுத்தாளர்களின் கட்டுரைகளை. ஆயினும் தமிழிலும் பாமரன், ஞாநி, சாருநிவேதிதா போன்றவர்கள் தொழில் முறையில் பத்தி எழுதுகிறார்கள். பாமரன் சாரு நிவேதிதா போன்றவர்களைப் போல ஞாநி எனக்கு சுவராசியமாக இருந்ததில்லை எனினும், அவரது கருத்துகள் இணையத்தில் சமீப காலங்களில் அதிகம் விவாதிக்கப்படுகிறது.

ஆனால், நேற்று குமுதத்தில் வாசிக்க நேர்ந்த ஞாநி அவர்களது கட்டுரை, மும்பையில் நான் கொண்டது எத்தனை அர்த்தமற்ற பயம் என்பதை விளக்கியது.

மனிதர் மொழி ஆளுமை, தமிழ் அறிவு எதுவும் பற்றிக் கவலைப்படாமல், தானும் ஒரு பத்தி எழுத்தாளன் என்று கூறிக்கொண்டு, எங்கெல்லாம் முடியவில்லையோ அங்கெல்லாம் ஆங்கில வார்த்தைகளை உபயோகித்தே எழுதியிருக்கிறார்.

ஆரம்பத்திலேயே ‘அவையெல்லாம் ‘சப்ஜெக்ட்டுக்கு’ முழு நியாயம் செய்யவில்லை’ என்கிறார். தான் நினைப்பதை எழுத்தில் வடிக்க சிரமப்படும், இயலாதவர்களும் இங்கு தொழில் முறை எழுத்தாளர்கள் என்று கூறிக்கொள்ள முடியுமென்றால், அவரது அரைகுறை எழுத்தினை காசுக்கு விற்கும் பத்திரிக்கை வாசகனை கிள்ளுக்கீரையாக நினைக்கிறது என்பது அல்லாமல் வேறு என்ன இருக்க முடியும்?

ஹீரோ, சினிமா’ போன்ற வார்த்தைகள் எல்லாம் புறந்தள்ளப்பட்டு இன்று கதாநாயகன், திரைப்படம் என்ற வார்த்தைகள் சரளமாக எழுத்து உலகில் புழங்கி வந்தாலும் பாவம், அவருக்குத் தெரியவில்லை போலும். முரணாக, பின்னர் கதாநாயகன் என்ற வார்த்தையினை அவரே உபயோகிக்கிறார்.

கால்ஷீட் நேரத்துக்கு நடிக்க செல்லாமல்’ என்பதற்கு பொருத்தமான தமிழ் வார்த்தை என்ன என்பது ஏதோ, தன்னார்வர்த்தில் எழுதும் வலைப்பதிவாளர்களுக்கு தெரியாமல் இருப்பதில் அர்த்தமுண்டு. ஆனால், காசுக்கு எழுதும் ஞாநி போன்ற எழுத்தாளர்கள் அவசியம் அதனை கற்று பின் எழுத முயல வேண்டும்.

‘எழுப்பியிருக்கும் கேள்வி ஒரு படத்தின் கேப்டன் இயக்குஞரா? ஸ்டாரா? நடைமுறையில் அது ஸ்டார்தான் என்று இருந்த போதும் எல்லோருமே நியாயப்படி டைரக்டர்தான் கேப்டனாக இருக்க வேண்டும்’

தொடர்ந்து ஒரு விஞ்ஞானியைப் பற்றி எழுத முயல்பவர் ‘கணிதம், பயோமெடிக்கல், எஞ்ஜினீயரிங், மருத்துவம் சர்ஜரி................கார் டிரைவர், மெக்கானிக், டாக்டர், சினிமா இயக்குஞர், டி.வியில் வானிலை அறிவிப்பாளர்’ என்று இஷ்டத்துக்கு பண்பலை வானொலி அறிவிப்பாளர் மாதிரி பொளந்து கட்டுகிறார்.

பின்னர் கற்பிதங்கள் என்ற அதிகம் தெரிந்திராத வார்த்தையினை பயன்படுத்துபவருக்கு ‘பிரிலியண்ட்’ என்ற வார்த்தைக்கு தமிழில் தெரியாமல் தடுமாறுகிறார்.

இறுதியாக, ‘காற்றுப் பிரிதல்’ என்று எந்த மருத்துவரும், விஞ்ஞான மாணவரும் இயல்பாக பயன்படுத்தும் வார்த்தையினை தமிழில் எழுதினால், அதுவும் விஞ்ஞான ஆராய்ச்சியினைப் பற்றி எழுதுகையில் ‘பாரம்பரியம் மிக்க குமுதம்’ இதழுக்கு பொருந்தி வராது என்பதால் ‘farting’ என்று ஆங்கிலத்தில் எழுதுவதாக ஒரு சப்பைக்கட்டு வேறு!

அண்ணாமலையாரே இந்தப் புகழுரையினை கேட்டு சற்று, மேலுலகத்தில் நெளிந்திருப்பார்!

-oOo-

எனது சந்தேகம் இதுதான்.

பணம் வாங்கிக் கொண்டு எழுதும் ‘எழுத்தாளரான’ ஞாநிக்கு இருக்கும் தமிழ் அறிவினை விட எனது ஆங்கில அறிவு சற்று அதிகம் இருக்கலாம். ஏனெனில் நான் தமிழ் வார்த்தைகளை உபயோகித்து ஆங்கில கட்டுரை எழுதியதில்லை. ஹிந்துவில் எனக்கு பத்தி எழுத வாய்ப்பு தருவார்களா?

மதுரை
30.03.08

“Some men are born Mediocre, some men achieve mediocrity, and some men have mediocrity thrust upon them”


MY BELOVED THOOTHUKUDI