4.10.08

நீதிபதிகள், சாருநிவேதிதா மற்றும் தவறுகள்!


நேற்று கணணியில் எனது பழைய குப்பைகளை மேய்ந்து கொண்டிருக்கையில் ஐந்து வருடங்களுக்கு முன்னர் எழுதிய ஒரு கடிதம் கண்ணில்பட்டது.

‘சமீபத்தில் மும்பை உயர்நீதிமன்ற கட்டிடம் தனது 125வது பிறந்த நாளைக் கொண்டாடியது. 125வது என்பதை விட முதலாவது எனவும் கூறலாம். எனெனில் இக்கட்டிடம் கொண்டாடும் முதல் பிறந்தநாள் இது!


இந்தக் காலத்தைப் போல எவ்வித படோடபகமும் இன்றி எவ்வித விழாவும் கொண்டாடப்படாமல் ஏன், சாதாரண ரிப்பன் வெட்டுதல் கூட இல்லாமல் வெறுமே நீதிபதிகள் தங்களது அறைகளை ஏற்றுக் கொண்டனராம்.

இக்கட்டிடம் திறப்பதற்கு முன்னர் 9 ஆண்டுகள் மும்பை உயர் நீதிமன்றம் வேறு கட்டிடத்தில் இயங்கி வந்தது. முதல் தலைமை நீதிபதி சர். மாத்தியூ சாவ்ஸே. இவரை 'சாவ்ஸே தி சைலண்ட்' அதாவது அமைதியான சாவ்ஸே என்று அழைத்தார்களாம். இவரை 'பேசாமடந்தை எனவும் மந்தகாசமானவர்' என்றும் பலர் அழைத்தனர். சிலர் 'இறுக்கமானவர் (cold, frigid and stern) என்றனர்.

இவர் யாருடனும் பழகுவதில்லை. எந்த விழா, சடங்கிலும் பங்கெடுப்பதில்லை. யாரையும் சந்திப்பதும் இல்லை. முக்கியமாக செய்தித் தாள்களைப் படிப்பதேயில்லை. அவரது ஒரே பொழுது போக்கு அப்பொழுது ஓவல் மைதானம் வரை சதுப்பு நிலமாக பரவியிருந்த கடற்கரையில், நீதிமன்ற நேரம் முடிந்த பிறகு தனியே நடப்பதுதான்.

ஞாயிற்றுக் கிழமை கிர்காம் தேவாலயத்தின் பிரார்த்தனை மட்டும்தான் அவரை பொதுவில் காண முடியும் ஒரே நேரமாம்..

இங்கு நாம் கவனிக்க வேண்டியது, அவர் செய்தித்தாள்களைப் படிப்பதில்லை. நீதிபதியானவர் முக்கியமாக அரசுக்கு எதிரான நீதிப் பேராணை (writ) மனுக்களை விசாரிக்கக் கூடிய அல்லது பெரிய குற்றங்களை விசாரிக்கக்கூடிய நீதிபதியானவர் செய்தித்தாள்களை படிப்பது நல்லதல்ல என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் நடைமுறையில் சாவ்ஸே மற்றும் மிக அரிதான சில நீதிபதிகளுக்கே அது சாத்தியம்.’


-oOo-


நீதிபதியானவர் ஒரு முற்றும் துறந்த முனிவரைப் (ascetic) போல இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற தீர்ப்பு கூறுகிறது. ஆனால் நடைமுறையில்?

சில நீதிபதிகளின் செயல்பாடுகள் குறித்து சமீபத்தில் நாம் படிக்க நேரிடும் செய்திகள், நீதித்துறையில் மாண்பையும் மதிப்பையும் கேள்விக்குறியதாக்குகின்றன. உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் முறையில் எவ்விதமான வெளிப்படையான பாங்கும் (transparency) கிடையாது. அதற்கு தனிப்பட்ட காரணங்கள் கூறப்படுகின்றன.

எனவே, அந்தப் பணி, உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கைகளிலும் ஓரளவிற்கு அரசின் கையிலும் முழு நம்பிக்கையுடன் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால், மேலும் மேலும் நீதிபதிகளைப் பற்றிய தர்ம சங்கடமான செய்திகள் வெளி வர நேரிட்டால், நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் முறை மாற வேண்டும் என்ற பொதுக்கருத்து வலுப்பெறலாம்.


-oOo-


நீதிபதிகள் நியமனத்தில் வரவேற்கத்தகுந்த ஒரு மாற்றம் தற்பொழுது ஏற்ப்பட்டுள்ளது. நமது உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளாக நியமிக்கும் வண்ணம் உச்ச நீதிமன்றத்திற்கு 14 பெயர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றமோ, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நபர்கள், தங்களைப் பற்றிய விபரங்களை அளிக்க வேண்டுமென்று கோரியுள்ளது. அதற்காக தங்களது பணியில் அவர்கள் வெளிப்படுத்திய திறமை உட்பட பல விபரங்களை கோரும் வண்ணம் கேள்விகளை வடிவமைத்துள்ளது.

பெரிய அளவில் வெளிப்படையான பாங்கினை இங்கும் எதிர்பார்க்க முடியாது எனினும், இது ஒரு வழக்குரைஞரின் பார்வையில் பெரிய மாற்றம் எனலாம்.

இவ்வாறு கேள்விகளுக்கு பதிலாக தரப்படும் விபரங்கள், சம்பந்தப்பட்ட வழக்குரைஞர் சங்கங்கள் மற்றும் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு, ஏதேனும் ஆட்சேபணை இருந்தால் அதனை தெரிவிக்கவும் கோரலாம். ஆனால் அவ்விதமான மாற்றம் வருவதற்கு அதற்கு இன்னும் சில காலம் பிடிக்கலாம்.

நீதிபதிகள் மேலும் மேலும் தவறு புரிந்தால், விரைவில் சாத்தியமாகலாம்.


-oOo-


தமிழ்மணத்திலிருந்து சுட்டியினைப் பிடித்து உயிர்மை என்ற பத்திரிக்கையில் சாருநிவேதிதா எழுதிய “ஒலிம்பிக்ஸ்: துரோகங்களும் அவமானங்களும்” என்ற கட்டுரையினை படிக்க நேரிட்டது.

ஒரு கட்டுரை போல இல்லாமல், நண்பர்கள் குழுவாக அமர்ந்து ஒலிம்பிக் பற்றி அரட்டை அடித்தால் எப்படியிருக்குமோ அப்படி எங்கோ ஆரம்பித்து எங்கோ முடிகிறது.

ஆனால் பிரச்னை கட்டுரையில் கூறப்படும் சில விபரங்கள் பற்றியது.

1986 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் சார்பாக பதக்கம் வாங்கிய ஒரே நபர் பி.டி.உஷா என்கிறார் கட்டுரை ஆசிரியர். தவறு. இந்தியா ஐந்து தங்கப் பதக்கம் பெற்றது. பி.டி.உஷா வென்றது நான்கு தங்கம் மட்டுமே! ஐந்தாவது தங்கம் வென்றது கர்தார் சிங் என்ற குத்துச் சண்டை வீரர். மற்றபடி பதக்கம் என்று பார்த்தால் இந்தியா மேலும் 9 வெள்ளி, 23 வெண்கலம் வென்றது.

அடுத்து 1960 ரோம் ஒலிம்பிக்ஸில் மில்கா சிங் பக்கத்தில் ஓடுபவர் எங்கு இருக்கிறார் என்று திரும்பிப் பார்த்ததில் அவரது தங்கம் பறி போனதாக குறிப்பிடுகிறார். மில்கா சிங் தவற விட்டது, வெண்கலம். அதுவும் 1/10 வினாடி நேரத்தில். பி.டி.உஷா 1/100 வினாடி நேரத்தில்!

மில்கா சிங் ஓடிய பொழுது அவர் உட்பட முதலில் வந்த நான்கு வீரர்களும் அது வரை இருந்த உலக சாதனையினை முறியடித்தார்கள்...அல்லது அது ஒலிம்பிக்ஸ் சாதனையா?

ஆனால் மில்கா சிங் திரும்பிப் பார்த்ததாக நான் படித்ததில்லை!

திரும்பிப் பார்த்தவர் பென் கிங்ஸ்லி.. ஆயினும் அதற்காக அவர் வெற்றி வாய்ப்பையும் உலக சாதனையையும் இழக்கவில்லை. இழந்தற்கான காரணம், தடை செய்யப்பட்ட அனபாலிக் ஸ்டிராய்ட் உட்கொண்டது.

இப்பொழுது எனக்கு, சாருநிவேதிதா தன்னுடைய கட்டுரைகளில் சும்மா வாயில் நுழையாத பெயர்களாக அடித்து ஆடுகிறாரே...உண்மையாக இருக்குமா, என்ற சந்தேகம் வந்து விட்டது!


-oOo-

மதுரை
031008
மேலே படத்தில் நீங்கள் காண்பது 'சிம்லா கடைத்தெரு'





13 comments:

PRABHU RAJADURAI said...

மன்னிக்கவும்...நேற்று காந்தி திரைப்படம் பார்த்த மயக்கத்தில் பென் ஜான்சனை பென் கிங்ஸ்லி என்று குறிப்பிட்டு விட்டேன்!

'நேம் டிராப்பிங்' ஒரு கலை போல :-))

Sridhar Narayanan said...

//'நேம் டிராப்பிங்' ஒரு கலை போல :-))//

:-)) படிக்கும்போது நானும் தவற விட்டுவிட்டேன்.

சாருவின் கலாகௌமுதியில் வந்த அணுசக்தி ஒப்பந்த கட்டுரையும் இப்படித்தான் இருக்கும். ஏனோ தானொவென்று.

இந்த வருடத்தில் (2008 பெய்ஜிங் ஒலிம்பிக்ஸில்) வென்ற உசேன் போல்டும் வெற்றிக் கோட்டை நெருங்கும்போது திரும்பி பார்த்தார். பின்னரும் ஜெயித்தார் :-)

பென் ஜான்சன் திரும்பி பார்த்ததற்கும், வலது கையை உயர்த்தியதற்கும் செலவழித்த நேரத்தையும், சக்தியையும் மிச்சப்படுத்தி இருந்தால் இன்னும் ஓரிரு மில்லி செகண்டுகள் முன்னேறியிருப்பாராம். அவர் வெற்றிபெற்ற நேரத்தில் இப்படி ஒரு செய்தி படித்ததாக நினைவு. ஆச்சர்யம் என்னவென்றால் இப்படியெல்லாம் சிந்திக்க முடிகிறதே என்பதுதான்.

புருனோ Bruno said...

//இப்பொழுது எனக்கு, சாருநிவேதிதா தன்னுடைய கட்டுரைகளில் சும்மா வாயில் நுழையாத பெயர்களாக அடித்து ஆடுகிறாரே...உண்மையாக இருக்குமா, என்ற சந்தேகம் வந்து விட்டது!//

எனக்கு நீண்ட நாட்களாகவே அந்த சந்தேகம் இருக்கிறது :) :)

எவ்வளவோ பார்த்துட்டோம். இதையும் பார்ப்போம்

துளசி கோபால் said...

வணக்கம் பிரபு.

சிம்லா கடைத்தெருவில் சிலை? அது நேருவா?

ஆமாம். சிலைகள் ஏன் எப்போதும் கையை உயர்த்திக்கொண்டிருக்கின்றன?

காக்காய் உட்காரும் வசதிக்காகவா?

Unknown said...

உங்கள் பாணியில் அழகாக எழுதியிருக்கிறீர்கள்.

நீங்கள் ஏன் உங்கள் பதிவின் முழு செய்தியோடையையும் கூக்ள் ரீடர் போன்றவற்றில் படிக்க ஏதுவாக திறந்து வைக்கக்கூடாது?

நன்றி

PRABHU RAJADURAI said...

"அவர் வெற்றிபெற்ற நேரத்தில் இப்படி ஒரு செய்தி படித்ததாக நினைவு"

ஸ்ரீதர்,அடுத்த நாள் ஹிந்துவில் நானும் படித்தேன். போல்ட் வெற்றி பெறுகையில் என் நினைவுக்கு வந்தது.

"ஆமாம். சிலைகள் ஏன் எப்போதும் கையை உயர்த்திக்கொண்டிருக்கின்றன?"

:-))

மேடம், படத்தை பெரிதாக்கி பார்த்திருந்தால் அது நேரு இல்லை எனத் தெரிந்திருக்கும்.

"படிக்க ஏதுவாக திறந்து வைக்கக்கூடாது?"

எனக்கும் மற்றவர்கள் போல அம்சமாக அனைத்து வசதிகளும் கொண்டு வலைப்பதிய வேண்டும் என்று ஆசைதான்...எப்படி என்று தெரியாது. யாராவது மெயில் மூலம் உதவி புரிந்தால் மகிழ்வேன்.

வேடிக்கை, இங்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நான்தான் கம்பியூட்டர் எக்ஸ்பர்ட்!!!

புருனோ Bruno said...

//எனக்கும் மற்றவர்கள் போல அம்சமாக அனைத்து வசதிகளும் கொண்டு வலைப்பதிய வேண்டும் என்று ஆசைதான்...எப்படி என்று தெரியாது. யாராவது மெயில் மூலம் உதவி புரிந்தால் மகிழ்வேன்.//

உதவத்தயார்...

Sridhar Narayanan said...

//உங்கள் பதிவின் முழு செய்தியோடையையும்//

உமையணன் குறிப்பிடுவது Site Feed முழுவதுமாக வெளியிடுமாறு நீங்கள் வைக்கவில்லை என்பதை.

இது blogger-ல் ஒரு சின்ன settings-தான்.

ப்ளாக்கரில் லாக்-இன் செய்து settings menu-வை தேர்வு செய்யுங்கள். அங்கே 'site feed' என்று ஒரு sub-menu தெரியும். அதை க்ளிக்கினால் கீழே ஒரு பக்கம் தெரியும். அதனில் 'Allow Blog Feeds' என்ற option list-ல் 'Full' என்று தேர்வு செய்யுங்கள். கூகுள் ரீடரில் உங்கள் பதிவு முழுவதுமாக வரத்தொடங்கும். அவ்வளவுதான் :-)

புருனோ Bruno said...

செய்ய வேண்டியது

http://feedproxy.google.com/march-of-law என்ற உங்களின் செய்தியோடையை அனைவரும் பார்க்கும் படி சுட்டி அளியுங்கள்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

சந்தேகப்படுங்க, சந்தேகப் படுங்க, படுங்க :)

PRABHU RAJADURAI said...

புரூனோ,
தங்களை தொலைபேசியில் தொடர்பு கொள்கிறேன்

ஸ்ரீதர்,
செய்தாகிவிட்டது...நன்றி!

சுந்தர்,
நீங்க படுங்க என்று சொல்லி சிரிப்பதைப் பார்க்கும் பொழுது வேறு அர்த்தம் இருக்கிறதோ என்று சந்தேகமாக இருக்கிறது :-)

Anonymous said...

charu cares only for intensity who cares about facts and truth. By his own words he seems to be drunk all the time.

dondu(#11168674346665545885) said...

சாருநிவேதிதா நான் மத்தியப் பொதுப்பணித் துறையில் பணியாற்றியபோது என்னுடன் நட்பாக இருந்த சிவில் E.E. ஐ நினைவுபடுத்துகிறார். நான் அச்சமயம் வெறும் ஜூனியர் இஞ்சினியர் மட்டுமே. ஹியரார்க்கி அதிகம் பார்க்கப்படும் அந்த வாரியத்தில் இது ரொம்ப அபூர்வமான விஷயம். காரணம் நாங்கள் இருவருமே பிரெஞ்சு கிளாஸுக்கு அச்சமயம் சென்றவர்கள்.

அந்த சிவில் கோட்டகப் பொறியாளருடன் எனக்கு ஒரு தனிப்பட்ட முறையில் நட்பு இம்முறையிலேயே வந்தது. அதைப் பற்றிக் கூறும் முன்னால் பின்புலனைக் கூறுவேன். சிவிலுக்கும் எலக்ட்ரிகல்லுக்கும் எப்போதுமே ஆகாதுதான். மேலும் கோட்டகப் பொறியாளருக்கும் என்னை போன்ற இளநிலைப் பொறியாளருக்கும் எப்போதுமே மேலே சொன்னது போல கடக்க முடியாத இடைவெளி உண்டு.

அந்த இடைவெளி நானும் சிவில் கோட்டகப் பொறியாளரும் பிரெஞ்சு வகுப்புக்கு போனதால் சுலபமாகக் கடக்கப்பட்டது. பிரெஞ்சு வகுப்பில் அவர் எனக்கு ஒரு வருடம் ஜூனியர்!! பாதியில் வகுப்பை வேறு விடவேண்டியதாயிற்று. நான் மட்டும் விடாமல் தொடர்ந்து எல்லா பரீட்சைகளையும் பாஸ் செய்ததில் அவருக்கு என் மேல் தனி அபிமானம். எப்போதுக்கு சைட்டுக்கு வந்தாலும் என்னைக் வரவழைத்து பேசுவார். சிவில் ஏ.இ.க்களுக்கெல்லாம் எரிச்சலாக இருக்கும்.

ஒரு நாள் அவர் என்னையும் சென்னை வரை தன் ஜீப்பில் வரச் சொன்னார். அவர் பக்கத்தில் முன் சீட்டில் அமர்ந்திருந்தேன். அவரிடம் "சார் இப்படி அனியாயமாக பிரெஞ்சு படிப்பை விட்டு விட்டீர்களே, எல்லாமே மறந்து விடுமே" என்று அங்கலாய்த்தேன். அவரும் "என்ன செய்வது ராகவன், வேலைப் பளு அம்மாதிரி. நீங்கள் கொடுத்து வைத்தவர். படிப்பை முடித்தீர்கள். இருப்பினும் நான் சில ஆண்டுகளுக்கு முன்னால் ஜெர்மன் படித்தேன். இப்போது கூட ஜெர்மன் பேசுவேன்" என்றார்.

எனக்கு ஒரே சந்தோஷம். எங்கு ஜெர்மன் படித்தார், அந்த நிலை வரை படித்தார், எப்போது படித்தார் என்பதையெல்லாம் மடமடவென்று ஜெர்மனில் கேட்டேன். ஜீப் மேலும் அரை கிலோமீட்டர் சென்றது.

அப்போது அவ்ர் மெதுவாகத் தமிழில் கூறினார். "ராகவன் உங்களுக்கு ஜெர்மனும் தெரியும் என்பது எனக்குத் தெரிந்திருந்தால் இதை நான் கூறியேயிருக்க மாட்டேன் தெரியுமா" என்று கூறிவிட்டு பெரிதாகச் சிரிக்க ஆரம்பித்தார். எனக்குத்தான் மிகவும் கஷ்டமாகப் போயிற்று. "மன்னிக்கவும் சார்" என்று கூற அவர் என் தோளில் தட்டி ஆறுதல் சொன்னார். உண்மையிலேயே உயர்ந்த மனிதர்.

ஆனால் சாரு நிவேதிதா?

அன்புடன்,
டோண்டு ராகவன்