25.10.08

நன்றி, அஞ்சா நெஞ்சர்களுக்கு...

மும்பையிலிருந்து மதுரைக்கு வருவதற்கு முன்பு, நாங்கள் எடுத்த ஒரு முக்கிய முடிவு, தொலைக்காட்சிக்கு கேபிள் இணைப்பு ஏதும், ஒரு வருடத்திற்காகவது பெறக்கூடாது. தொலைக்காட்சி இல்லாத வீடு எப்படித்தான் இருக்கிறது என்று பார்த்து விடலாம் என்று.

உண்மையிலேயே இனிமையான காலம் அது! காலை பாடலைக் கேட்டபடியே அலுவலகம் கிளம்ப முடிந்தது. விடுமுறை தின இரவுகளில், குறுந்தகடுகளில் நல்ல திரைப்படங்களை பார்த்து முடித்ததும், அதே நினைவுடன் படுக்கைக்கு செல்ல முடிந்தது.

முக்கியமாக வீட்டுக்கு வருபவருடன் முகம் பார்த்து பேச முடிந்தது...

-oOo-

டிசம்பர் மாதம் தமிழகத்தை தாக்கிய சுனாமி எங்களை அண்டவில்லை. பத்திரிக்கையில் படித்த செய்திகளோடு நின்று போனது சுனாமியின் தாக்கம். மனதைப் பிசையும் காட்சிகள் கண் முன்னே நிற்கவில்லை.

ஆனாலும் சுமார் ஒரு வருடம் கழித்து தற்செயலாக எடுத்த முடிவுதான்...கேபிள் இணைப்பு பெறலாம் என...மீண்டும் வந்து உட்கார்ந்து கொண்டது, சனியன்!

-oOo-

நேற்று மாலை வீடு திரும்புகையில், சுற்றுச்சுவர் கதவும் பூட்டியிருந்தது.

“ஆமா, ராயல் கேபிள் விஷனில் இருந்து வருகிறோம், இனி அவர்களிடம்தான் இணைப்பு பெற வேண்டும் என்று தொந்தரவு செய்தார்கள். அதான்”

“நம்ம ஆட்கள் என்ன சொல்கிறார்கள்”

“அவங்கல்லாம் இப்பத்தான், ரிமாண்ட்ல இருந்து வந்தாங்களாம். எல்லோரையும் போலீஸ் புடிச்சுக்கிட்டு போயிட்டாங்களாம். நீங்க டிடிஹெச் வாங்கிட்டீங்கன்னு சொல்லுங்கன்னு சொல்றாங்க”

“ஆமா, அப்படியே சொல்லிடு”

-oOo-

சிறிது நேரம் கழித்து, வேகமான வந்த மனைவி, ‘வெளியே நிறுத்தி வச்சிருந்த ஸ்கூட்டரில் என்னோட பர்ஸ வச்சிட்டு வந்திட்டேன். இப்ப காணோம்...மொபைல் போனும் போச்சி...அந்த ராய்ல் டிவிகாரங்கதான் தூக்கிட்டு போயிருக்கணும்”

உண்மைதான், எங்கள் வீடு டெட் எண்ட். வேறு யாரும் வருவதில்லை.


-oOo-

“கேபிளை கட் பண்ணிட்டாங்க. இனிமேல் நமக்கு வராது. அவங்கதான் ராயல்காரங்கதான்...”

இது வரை பத்திரிக்கையில் படித்தும், மற்றவர்கள் சொல்லக்கேட்டதுமான அராஜகம் இதோ என் கண் முன்னே எழுந்து நிற்க, ஏதும் இயலாதவனாகிப் போனவன் போல உணர்ந்ததில், பிறந்த அசதியிலும் அந்த வைராக்கியம் பிறந்தது.

“நமக்கு ஒருத்தனும் வேண்டாம்”

மதுரை
261008





Eravikulam National Park, Munnar

5 comments:

துளசி கோபால் said...

ஏழரைச்சனியன்களில் இந்த டிவியும் ஒன்னு.

Anonymous said...

/* ஏழரைச்சனியன்களில் இந்த டிவியும் ஒன்னு. */

வெறும் ஏழரைன்னா சொல்ரீங்க?

Anonymous said...

சட்டக்கல்லூரி வன்முறையைப் பத்தி விரிவா எழுதுவீங்கன்னு பார்த்தா ஆளே காணலையே?

.:d:.

Anonymous said...

சட்டக்கல்லூரி வன்முறையைப் பத்தி விரிவா எழுதுவீங்கன்னு பார்த்தா ஆளே காணலையே?

I second him ..

PRABHU RAJADURAI said...

எனது கருத்துக்கு தாங்கள் தரும் முக்கியத்துவத்துக்கு நன்றி....ஆனாலும் எனது கட்சிக்காரர்களை விட வலைப்பதிவிற்காக நான் அதிகமாக மெனக்கெடுவதைப் போல ஒரு பயம் தோன்றியதால் சற்று பேசாதிருக்கிறேன். அவ்வளவுதான்...