10.10.08

நளினிக்கு கருணை, கானல் நீர்தானா? - 1





ராசீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி, பேரறிவாளன் மற்றும் சில குற்றவாளிகள் தங்களது விடுதலைக்காகவும், தண்டனைக்குறைப்புக்காகவும் தமிழக அரசின் ‘கருணை’யை மட்டுமே எதிர் நோக்கியுள்ள நிலையில்...அவர்களது, மற்றும் அவர்களுக்காக களமிறங்கியுள்ளவர்களது நம்பிக்கைக்கு குறுக்கே நிற்கப்போவதாக கூறப்படுவது, சமீபத்தில் பெங்களூருவைச் சேர்ந்த சக்கீரா கொலை வழக்கில் நமது உச்ச நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பு!

முதலில், கொலைக்குற்றவாளிகளுக்கு தண்டனை விதிப்பதில் நீதிபதிகளுக்குள்ள மனவோட்டத்தினை அறிய, அந்த வழக்கின் தன்மையினை தெரிந்து கொள்வது அவசியம்.


-oOo-


சக்கீரா (Shakereh) மைசூர் சமஸ்தானத்தின் திவானாக இருந்தவரின் பேத்தி.. பல கோடி சொத்துக்களின் அதிபதி. முக்கியமாக, பெங்களூரு ரிச்மாண்டு சாலையில் இருந்த 38,000 சதுர அடியில் மற்றும் வெல்லிங்டன் வீதியில் 40,000 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள பங்களாக்களை கூறலாம். சக்கீராவின் கணவர் இந்திய அயலுறவுத்துறை அதிகாரி (IFS). நான்கு பெண் குழந்தைகள்.


1983ம் வருடம் ராம்பூர் நவாபின் விருந்தாளியாக சென்றிருந்த பொழுது, சக்கீராவுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட நபர்தான் முரளி மனோகர் மிசுரா என்ற சுவாமி சாரதானந்தா (Swamy Shraddananda). சக்கீராவுக்கு தனது நிலங்களை நிர்வகிப்பதில் பிரச்னை இருக்கவே அதில் உதவி புரிவதற்காக பெங்களூருவுக்கு வந்த சாரதானந்தா, ரிச்மாண்டு சாலை பங்காளிவிலேயே குடும்ப உறுப்பினர் போல தங்கினார்.

ஈரான நாட்டு தூதராக நியமிக்கப்பட்ட சக்கீராவின் கணவர், குடும்பத்தை பெங்களூருவிலேயே விட்டுச் செல்லும் நிலை ஏற்ப்பட்டது. தனது மாந்திரீக சக்தியினால் சக்கீராவுக்கு ஆண் வாரிசினை உருவாக்க முடியும் என்று அவரை நம்ப வைத்த சாரதானந்தா, பின்னர் சக்கீராவை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.

விரைவிலேயே சக்கீராவின் திருமணம் விவாகரத்தில் முடிய சாரதானந்தாவை மணமுடித்தார். மகள்கள் அனைவரும் வெளிநாட்டிலேயே தங்கி விட, சக்கீராவும் சாரதானந்தாவும் மட்டும் பெங்களூரிலேயே வசித்தனர்.

சக்கீரா தனது அன்பினை மட்டுமல்லாமல், சொத்துக்கள் அனைத்தையும் சாரதானந்தாவின் மீது கொட்டினார். தனது சொத்துக்களை குறித்த முகவராக (Power of Attorney) சாரதானந்தாவை நியமித்தது மட்டுமில்லாமல், அனைத்தையும் அவரது பெயரிலேயே உயில் எழுதினார். பல்வேறு வங்கி கணக்குகள், லாக்கர்கள் மற்றும் வியாபாரம் இருவரது கூட்டுப் பெயரில் ஆரம்பிக்கப்பட்டது.

ஆயினும், சக்கீரா மகள்கள் மீதான தனது தொடர்பினை துண்டிக்கவில்லை. அவ்வப்பொழுது அவர்கள் சந்தித்துக் கொண்டிருந்தனர்.


-oOo-


1991ம் வருடம் மே மாத இறுதியில் சக்கீரா திடீரென தனது 40வது வயதில் காணாமல் போனார். ஏப்ரல் மாதத்தில் அவரது மகளுடன் தொலை பேசியதுதான், குடும்பத்துடனான அவரது தொடர்பு.

வேலைக்காரன் ராசு அவரை இறுதியாக மே 28ம் தேதி சாரதானந்தாவுடன் பார்த்ததாக பின்னர் கூறினார்.

சக்கீராவின் மகள் சாபா (Sabah), சாரதானந்தாவை தனது அம்மா எங்கே என்று வினவும் பொழுதெல்லாம், அவர் ஐதராபாத் சென்றுள்ளதாகவும், கட்ச்சுவிற்கு (Kutch) வைர வியாபாரி ஒருவரின் திருமணத்திற்கு சென்றுள்ளதாகவும் சாக்கு கூறிவந்தார். பின்னர் வருமான வரிப் பிரச்னைகளுக்கு பயந்து வெளி வராமல் இருப்பதாகவும் கூறினார்.

வெறுப்படைந்த சாபா, பெங்களூருவுக்கு நேரில் வந்தால் சக்கீராவை காணவில்லை. இந்த முறை சாரதானந்தா, சக்கீரா பிரசவத்திற்காக அமெரிக்கா சென்றுள்ளதாக கூறினார். அமெரிக்க மருத்துவமனைக்கு தொடர்பு கொண்டால், அவ்வாறு யாரும் அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை!

சாரதானந்தா தளரவில்லை. சக்கீரா லண்டன் சென்றிருப்பதாகவும், அவரது இருப்பிடத்தை ரகசியமாக வைத்துள்ளதாகவும் கூறினார். ஆனால், சாரதானந்தாவை மும்பை விடுதி அறையில் சந்திக்க சென்ற சாபா, அங்கு தற்செயலாக சக்கீராவின் கடவுச் சீட்டை (Passport) காண நேரிட்டது.

உடனடியாக சாபா, பெங்களூரு அசோக் நகர் காவல் நிலையத்தில் தன் தாயார் காணாமல் போனதாக ஒரு புகார் அளித்தார். சாரதானந்தாவோ, முன் பிணை மனு (anticipatory bail) தாக்கல் செய்து, பிணை பெற்றார். பிணை மனுவில் தனது உறவினர்களுடன் ஏற்ப்பட்ட வழக்குகள் நிமித்தம் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான, சக்கீரா கோபத்துடன் வீட்டை விட்டு வெளியே சென்றதாக குறிப்பிட்டார்.

அசோக் நகர் காவல் நிலைய விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்ப்படவில்லை. ஆயினும் சாபாவின் முயற்சியில் வழக்கானது மத்திய குற்றப்பிரிவிற்கு மாற்றப்பட்டு அவர்களது தீவிர விசாரணையில், சாரதானந்தா தான் சக்கீராவை கொன்று தங்களது பங்களாவிலுள்ள படுக்கையறைக்கு கீழே புதைத்து வைத்ததை ஒத்துக் கொண்டார்.


-oOo-


விசாரணையில், சக்கீராவின் கொலைக்கு பின்னர் அவர் அளித்த முகவர் அதிகாரத்தினை பயன்படுத்தி அவரது பல்வேறு சொத்துக்களை விற்றதும் தெரிய வந்தது. மட்டுமல்லாது, கொல்லப்படுவதற்கு முன்னரே, சக்கீராவின் உடலை புதைப்பதற்காக கவனமாகவும் நிதானமாகவும் அவர் திட்டமிட்ட விபரமும் தெரிய வந்தது.
பெங்களூரு நகர அமர்வு நீதிமன்றம் (Sessions Court) திட்டமிட்ட கொலைக்காக, சாரதானந்தாவுக்கு மரண தண்டனை அளித்தது. அமர்வு நீதிமன்றம் மரண தண்டனை அளிக்கையில் குற்றவியல் நடைமுறை சட்டம் (Criminal Procedure Code) பிரிவு 366ன் உயர்நீதிமன்றம் தண்டனையினை உறுதி செய்ய வேண்டும்.

உயர்நீதிமன்றம் மரண தண்டனையை உறுதி செய்தது.

உச்ச நீதிமன்றத்தில் சாரதனந்தா மேல் முறையீடு தாக்கல் செய்தார். சாரதானந்தா குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால் ஒரு நீதிபதி குற்றவாளிக்கு மரண தண்டனை எனவும் மற்ற நீதிபதி ஆயுள் காலம் முழுவதும் வெளி வர இயலாத ஆயுள் தண்டனை எனவும் கூறினர்.

எனவே, தண்டனை குறித்து மட்டும் தீர்ப்பு கூற வழக்கானது மூன்று நீதிபதிகள் அடங்கிய மன்றத்தின் முன் வைக்கப்பட்டது.

அவ்வாறு மூன்று நீதிபதிகள் அடங்கிய மன்றம் அளித்த தீர்ப்புதான், தற்பொழுது பிரச்சினையாக எழப்போகிறது.

-oOo-


மதுரை
10.10.08



மேலே படத்தில் மீண்டும் 'Shimla Mall' தான். அங்கு சுவராசியமான இடம் இந்த கடைத்தெரு ஒன்றுதான்.

3 comments:

PRABHU RAJADURAI said...

நளினிக்கு விடுதலை கிடைக்குமா? என்ற தலைப்பில் ரவி ஸ்ரீனிவாஸ் ஒரு பதிவு எழுதியிருக்கிறார்கள்.
http://www.google.co.in/search?hl=en&q=%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%2C+%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF&btnG=Google+Search&meta=

அதில் எதிர் வினையாற்றிய என்னையும் அது குறித்து எழுத கேட்டுக்கொண்டதால் உந்தப்பட்டு இந்த பதிவு எழுத தைரியம் கொண்டேன். அவருக்கு எனது நன்றி!

எனது ஆய்விற்காக, இந்தப் பதிவினை படித்த நபர்கள்...சாரதானந்தாவுக்கு தண்டனை குறித்தான அவரவர் கருத்தினை எழுதினால், நன்றியுடையவனாக இருப்பேன்.

சிறில் அலெக்ஸ் said...

ஆயுள்முடியும்வரை வெளியில் வரமுடியாத தண்டனை மரண தண்டனைக்கு சரியான மாற்றாயிருக்கலாம். கூடவே முதல் சில வருடங்களை கடுமையான சிறைத் தண்டனையாக (அப்படி ஏதும் இருக்குதா தெரியல) மாற்றலாம்.

டிஸ்கி:Bcomல படிச்ச Contract law தவிர்த்து வேறெந்த லாவும் எனக்குத் தெரியாதுங்க.

துளசி கோபால் said...

திட்டமிட்டக் கொலை என்றால் கட்டாயம் குற்றவாளிக்கு மரணதண்டனைதான் கொடுக்கணும்.

ஆயுள் தண்டனைன்னா வெளிவந்துருவார். ஆமாம், நீங்க சட்ட நிபுணர் என்பதால் கேக்கறேன், ஆயுள் தண்டனைன்னா அந்த நபரின் ஆயுள் முடியும்வரைன்னுதானே அர்த்தம்.

14 வருசத் தண்டனைக்கு ஏன் ஆயுள்தண்டனைன்னு பெயர்?

ராமாயணத்துலே ராமன் காட்டுக்குப்போன 14 வருசக் கணக்கா இது?


அந்த 'சாமியார்' பெயர் ஸ்ரத்தானந்தா.