12.10.08

நளினிக்கு கருணை, கானல் நீர்தானா? - 2
சக்கீராவின் கொலை, மனதைத் தைப்பதாக இருந்தாலும் இந்தியா முழுவதும் அவ்வப்பொழுது நிகழக்கூடிய சாதாரண ஒரு குற்றம்தான். சக்கீரா கொலையில் திவான் என்ற இடத்தில் தாசில்தார் அலுவலக எழுத்தர் எனவும், பெங்களூரு என்ற இடத்தில் மதுரை எனவும், தூதர் என்ற இடத்தில் வங்கி காசாளர் எனவும், கோடி என்ற இடத்தில் ஆயிரம் எனவும், லண்டன் என்ற இடத்தில் சென்னை என்றும் நிரப்பினால், தண்டனைக்காக நீதிபதிகள் இவ்வளவு தூரம் குழம்பியிருக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

எனவேதான், இதனினும் கொடூர கொலைகாரர்கள் ஆயுள்தண்டனையோடு தப்பிக்கையில், சாரதானந்தாவுக்கு மரணம்தான் தண்டனை என்ற முடிவுக்கு நீதிமன்றங்கள் வந்திருக்கலாம்.

கொலை செய்யப்படுபவர்களின் தகுதியும் இங்கு பல சமயங்களில் தண்டனையினை, குறிப்பாக மரண தண்டனையினன நிர்ணயித்திருக்கின்றன என்ற எனது சந்தேகத்திற்கு வலு சேர்க்கும் மற்றும் ஒரு வழக்கு சக்கீராவின் கொலை.

மேலும், அடுத்தவரின் மனைவியை அபகரிக்கும் ஒரு செயல், கொலைக்கான தண்டனையை நிர்ணயிக்கும் முக்கிய காரணியாக இங்கு கருதப்படுகிறது. நானாவதி, குறைந்த தண்டனையோடு தப்பித்ததற்கும், சாரதானந்தா தூக்கு மேடை அருகே சென்று திரும்பியதற்கும், இதுவே முக்கிய காரணி!


-oOo-


சக்கீராவின் வழக்கினைப் படிக்கும் எவருக்கும், முக்கியமாக ஆண்களுக்கு சாரதானந்தாவின் மீது கோபம் எழுவது இயல்பான ஒன்றே...அது பொறாமையால் விளைந்ததாக கூட இருக்கலாம்.

ஆயினும், அவரை தூக்கிலிடுவது தவறான ஒரு முன்னுதாரணமாகி விடுமோ, என்ற குற்றவுணர்வு நீதிபதிகளை, முக்கியமாக தண்டனையை பற்றி தீர்மானிக்க வேண்டிய மூன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் எழுந்திருக்கலாம்.

சரி, தூக்கு இல்லை என்றால்...ஆயுள் தண்டனை. ஆனால் ஆயுள் தண்டனை கைதிகள் 14 ஆண்டுகளில் வெளியே வந்து விடக்கூடிய ஆபத்து உள்ளது. சாரதானந்தா ஏற்கனவே பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்தாகி விட்டது. அவ்வளவுதானா தண்டனை?

இது என்ன, மரண தண்டனை இல்லையென்றால் 14 ஆண்டுகள்தான. இரண்டு வகை தண்டனைக்களுக்குமான இடைவெளி இவ்வளவு தூரமா, என்ற நீதிபதிகளின் மனவோட்டத்தின் வெளிப்பாடுதான்...சாரதானந்தாவை அவரது ஆயுட்காலம் வரை சிறையில் வைத்திருக்க வேண்டும் என்ற தண்டனை.


-oOo-


இதற்காக, சாதாரண ஆயுள் தண்டனை, மரணதண்டனைக்கு மாற்றாக வழங்கப்படும் ஆயுள் தண்டனை என்று ஆயுள் தண்டனையை, சட்டத்தில் அவ்வாறு இல்லையெனினும் இரண்டு வகையாக பிரிக்கும் முயற்சியில் நீதிபதிகள் ஈடுபட்டு பல்வேறு முன் தீர்ப்புகளை ஆராய்ந்து, எவ்வாறு சாரதானந்தாவை ஆயுள் வரை சிறையில் வைத்திருக்க இயலும் என்றும் தீர்ப்பு கூறியுள்ளனர்.

ஆனால், தங்களது தீர்ப்பு அரசியலமைப்புச் சட்டப்படியும், குற்றவியல் நடைமுறைச் சட்டப்படியும் சாத்தியமானதுதானா என்றும் முழுமையாக ஆராயவில்லை என்றே நினைக்கிறேன்.

தங்களது தீர்ப்பினை அவ்வாறு செய்ல்படுத்துவது சாத்தியமா? அதன் பின் விளைவுகள் என்ன என்று ஆராயாமல் விட்டது கூட முக்கியமல்ல...அப்படியே ஒருவரை ஆயுள் முடியும் வரை, வெளியே வருவதற்கு எவ்வித வாய்ப்பின்றியும் சிறையில் வைத்திருப்பதன் கொடூரத்தைப் பற்றி கொஞ்சம் கூட தங்கள் தீர்ப்பில் கவலைப்படாமல் போனதுதான்.....அதிர்ச்சியளிக்கும் ஒரு விடயம்.

தன் வாழ்நாள் முழுவதும் இனி இந்த நான்கு சுவர்களுக்குள்தான் என்ற நினைப்பில் ஒருவன் வாழ்வது, மரண தண்டனையை விட கருணை மிக்கதா என்ன?

இந்தச் சூழ்நிலையில் நளினிக்கு காட்டப்பட்டது உண்மையிலேயே கருணையா என்ற கேள்வி எழுகிறது.

பதினெட்டு ஆண்டுகளுக்கு மேலாக சிறையே தனது வசிப்பிடமாக கொண்டுள்ள பேரறிவாளனும், இதே கேள்வியைத்தான் கேட்கிறார், ‘ஒன்று என்னை தூக்கில் போடுங்கள்...அல்லது என்று விடுதலை என்று என்றாவது சொல்லுங்கள்’.


-oOo-


மதுரை
11.10.08

1 comment:

பிரபு ராஜதுரை said...

துளசி மேடம்,

இந்தப் படத்தில் நீங்கள் காணும் சிலை மகாத்மா காந்தியுடையது. இந்திரா காந்தி சிலையும் சிம்லா கடைத்தெருவில் உள்ளது.

ஆயுள் தண்டனை என்றால் ஆயுள்தான். ஏன் 14 வருடம் என கூற முயல்கிறேன்.

திட்டமிட்ட கொலைக்கு மரண தண்டனைதான் என்றால்...சட்டத்தின் வளர்ச்சியை தடுத்து அதை உங்களது, அதாவது 1956க்கு முந்தைய பழைய காலத்திற்கு கொண்டு செல்கிறீர்கள் என்று அர்த்தம்:-)