Showing posts with label kamal. Show all posts
Showing posts with label kamal. Show all posts

26.9.09

யாருமற்ற ஒருவனும், மோடியும்!

சோம்பேறித்தனம் கெட்ட குணம்தான். ஆனால் ஒரு நன்மை இருக்கிறது. திரையரங்குகளுக்கு செல்லாமல் இருப்பது. ஆக, ‘உன்னைப் போல ஒருவ’னையும் பார்க்கவில்லை.

முன்பெல்லாம் திரைப்படம் பார்க்காவிட்டாலும், தொலைக்காட்சிகளில் துண்டு துண்டாக பார்த்து மனதில் கதையை ஒட்டிக் கொள்ளமுடியும். தற்பொழுது அந்த வசதியும் இல்லை. ஆனாலும், ‘உன்னைப் போல ஒருவ’னைப் பொருத்தவரை வலைப்பதிவுகளில் எழுதிக் குவிப்பவற்றைப் படித்து படித்து, ஏதோ படம் பார்த்தது போலவே இருக்கிறது.

கமல்ஹாசனின் ஆழ்மனதில் இருப்பதை பிய்த்துப் பிடிங்கி வெளியே எடுத்து, ‘பார், இந்துத்வா’ என்று ஒரு பக்கமும், ‘இல்லை, இல்லை முற்போக்குத்தனம்’ என்று இன்னொரு பக்கமுமாக நின்று பதிவர்கள் விவாதித்து வருவது என்னைப் போல வாசகர்களின் மனதை பெண்டுலம் போல இங்கேயும் அங்கேயும் அல்லாட வைக்கிறது!

‘இந்துத்வாவும் இல்லை, முற்போக்குத்தனமும் இல்லை. கமல் ஒரு வியாபாரி. அவருக்கென்று பெரிய கருத்து எல்லாம் அவரிடம் இல்லை. அவ்வப் பொழுது சந்தையில் எந்தக் கருத்து விலை போகுமோ, அதை வைத்து படமெடுப்பது அவரது தந்திரம்’ என்றும் சிலர்.

கலப்பு மணத்தை ஆதரிக்கும் எவரும், வகுப்புவாதியாக இருக்க முடியாது என்று நான் கருதுவதாலும், கமல் ஹாசன் என்றுமே ஒரு கருத்தினை தெளிவாக வெளிப்படுத்தியது இல்லை என்பதாலும்...நான் ‘வியாபாரி’ வகுப்பில் சேர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

கமல் திரைப்படங்களை வைத்து, பெரிதாக சொத்து சேர்க்க நினைக்கவில்லை என்றால், ஒரு வியாபாரி தனது வெற்றியை வெறுமே தான் பெறும் பண லாபத்தை வைத்து மட்டுமே கணக்கிடுவதில்லை என்பதுதான் என்னுடைய பதில்.

‘கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்...’ என கமல் எப்பொழுதெல்லாம் வேறு மொழித் திரைப்படமோ அல்லது காட்சியோ அவரை பாதிக்குமோ, உடனே அதனை தமிழில் எடுக்க முயலுவார். அப்படியே ‘வெட்னஸ்டே’ படக் கருத்தால் அல்ல, படத்தால் பாதிக்கப்பட்டே உபோஒ தயாரித்துள்ளார் என்று, பாவம் ஒரு பெனிபிட் ஆப் டவுட் கொடுத்து விடலாமே!

-oOo-

‘காமன் மேன்’ என்ற பொதுப்புத்திக்கு செலக்டிவ் அம்னீஷியா என்றும் அதற்கு வெடிகுண்டு வைத்த பயங்கரவாதம்தான் தெரியும் என்றும் அதற்கு முன் நடந்த பயங்கரவாதங்கள் தெரியாது என்றும் வாதிடுபவர்கள் கூறுவதைத்தானே, திரைக்கதையிலும் சொல்லப்படுகிறது. நடைமுறையில் என்ன இருக்கிறதோ, அதை மாற்றாமல் கமல் எடுத்திருக்கிறாரே!

-oOo-

தீவிரவாதிகளாக, இஸ்லாமியர்களை காட்டியுள்ளாராம். குண்டு வைத்த குற்றத்திற்காக, இஸ்லாமியர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டதே இல்லையா? இல்லாத ஒன்றை  படமெடுக்கவில்லையே. நிசத்தை பிரதிபலிப்பதுதானே திரைப்படமும்.

ஆனால் இந்த வாதத்திற்கு எதிராக ‘இஸ்லாமியர்கள் எல்லாம் தீவிரவாதிகள் இல்லை. ஆனால் தீவிரவாதிகள் அனைவரும் இஸ்லாமியர்கள்’ என்று ஒரு சந்திராயன் கண்டுபிடிப்பு எடுத்து வைக்கப்படுவதுதான் விந்தை!



அரசிடமும், நிலுவையிலுள்ள சட்ட அமைப்புகளிலும் தங்களுக்கு நியாயம் கிடைக்காது என்று (தவறாக) நினைப்பவர்களால்தான், மற்றவர்களின் கவனத்தை கவர பயங்கரவாதம் முன்னெடுக்கப்படுகிறது.

‘அந்நியனி’ல் இருந்து ‘உபோஒ’ வரை இதைத்தானே சொல்கிறார்கள். ஏன், கமலே ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் வரும் பாடல் காட்சியில் ‘டுமீல் டுமீல்’ என்று சும்மா நிற்பவர்களைக் கூட போட்டுத் தள்ளுகிறாரே.

வேடிக்கை என்னவென்றால், காமன் மேனை, படத்தில் ஒரு இந்து என்று அந்தப்பக்கமும், இல்லை முஸ்லீம் என்று இந்தப்பக்கமும் வாதிடுகிறார்கள். ஆனால், மயிரினைப் பிளப்பது போல் ஆராய்ந்து, ‘...ம் காமன் மேன் குண்டு வைக்குமளவுக்கு துணிவதால்தான் அவரை முஸ்லீமாக காட்டியுள்ளார்கள்’ என்ற அளவிற்கு வாதம் வளரவில்லை!

எனவே படம் யதார்த்தத்தை பிரதிபலிப்பதுதான்...

-oOo-

அப்படியாயின், படத்தில் வரும் முஸ்லீம் தீவிரவாதிக்கு மூன்று மனைவிகளாமே? இங்கு இடிக்கிறது.

படத்திலுள்ள காமன் மேனுக்கு குண்டு வைப்பது மட்டுமே தீவிரவாதமாக தெரிந்தது யதார்த்தம். அவரது கேரக்டரை சிதைக்க கதாசிரியருக்கு உரிமை இல்லை. ஆனால் கதையில் வரும் ஒரு முஸ்லீம் பாத்திரத்திற்கு மூன்று மனைவியை உருவாக்குவது கதாசிரியர். ‘ஹம் பாஞ் அவுர் ஹமேன் பச்சீஸ்’ என்று குஜராத் முதல்வர் மோடியால் உருவாக்கப்பட்ட பொதுப்புத்தியால் கட்டமைக்கப்பட்டவர்தான் கதாசிரியர் என்று யாராவது வாதிட்டால்...என்னிடம் எதிர்வாதம் இல்லை.

வசனம் எழுதியவர் எனக்குத் தெரிந்தவரை அப்பழுக்கு இல்லாத மனிதாபிமானி. அவருக்குதான் முஸ்லீம் நண்பர்கள் நிறைய இங்கு உண்டே...கொஞ்சம் கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கலாம். எத்தனை முஸ்லீம்கள் இங்கு மூன்று, வேண்டாம் இரண்டு மனைவியாவது வைத்திருக்கிறார்கள் என்று.

எனக்குத் தெரிந்து இரண்டு மனைவிகள் கட்டியவர் எழுத்தாளர் பாலகுமாரன். ஆனால் அவர் இந்து. கலைஞர் இஸ்லாமியர் இல்லை.

கமல்?

அவர் யாருமற்றவர்

-oOo-

உபோஒனில் ஒரு நாளில் தீவிரவாதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று கமல் கேட்டு அவர்கள் கமலிடம் ஒப்படைக்கப்படுவதாக கதை செல்கிறது என்று அனுமானிக்கிறேன்.

ஒரு நாளில் அது சாத்தியமில்லை. காந்தகாரில் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்த விமான பயணிகளை மீட்க இந்திய சிறையில் இருந்த தீவிரவாதிகள் நாம் விடுவிக்கவில்லை. ஏனெனில் இவ்வாறு விடுவிப்பதற்கு சட்டம் இடம் கொடுக்காது. அவர்களுக்காக மனு தாக்கல் செய்யப்பட்டு பின்னர் விடப்பட்டார்கள். எதையும் சட்டப்படி செய்ய வேண்டுமே!

பொதுவாக தீவிரவாதிகளோடு பேரம் பேசுவது ஒரு கலை. அந்தக் கலையின் வெற்றி தீவிரவாதிகளோடு பேசி எவ்வளவு நேரம் வாங்க முடியுமோ அவ்வளவு நேரம் வாங்குவதில் இருக்கிறது. காந்தகார் விமான நிலைய கடத்தலில் அவர்களோடு தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருந்த உரையாடல்களை படித்திருக்கிறேன்.

மோகன்லால் சட்டச்சிக்கலை எல்லாம் கமல்ஹாசனிடம் எடுத்துச் சொன்னாரா என்பது தெரியவில்லை. அதற்காக படத்தை பார்க்கலாம் என நினைக்கிறேன். ஆனால் ரவி சிரீனிவாஸ் இங்கு அமைப்புகள் எவ்வாறு இயங்குகின்றன என்பது புரியாமல் எடுக்கப்பட்ட படம் என்று வாரியிருப்பதிலிருந்து, ஏமாற்றம்தான் மிஞ்சும் என நினைக்கிறேன்.

மதுரை
26/09/09


பி.கு. ‘அவர் யார் என்ற கேள்விக்கு யாருமற்றவர் என்பதுதான் பதிலாக இருக்க முடியும்என்று யார் யாரைப் பற்றி குறிப்பிட்டார் என்ற கேள்விக்கு பதில் யாரிடமாவது உள்ளதா?

க்ளூ: ஈழத்தமிழர்களும் இந்த போட்டியில் பங்கு கொள்ளலாம். 

27.12.08

'கஜினி'யும், ஹிட்லர் சொன்னதும்...


கஜினி.....

மும்பை பயங்கரவாத தாக்குதலாலும் அதனைத் தொடர்ந்த தொலைக்காட்சி ஊடகத்தாக்குதல்களாலும் ஏற்ப்பட்டுள்ள விளைவுகளைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் வெளியிடப்பட்டுள்ள திரைப்படம். அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதல்களுக்கு பின்னர் புதிய பட வெளியீடுகளை ஹாலிவுட்டு நிறுவனங்களே தள்ளிப் போட்டன என்று படித்திருக்கிறேன்.

ஆனாலும், கஜினி தயாரிப்பாளர்கள் நம்புவது, படத்தில் செலவில் சுமார் 30 சதவீதத்தினை முழுங்கிய விளம்பரத்தினை.

சும்மாவா பின்னே...நமது தொலைக்காட்சி ஊடகங்கள் தேசபக்தியை வளர்ப்பதில் மிஞ்சிய நேரத்தை கஜினியை விற்பதில் செலவிடுகின்றன. அந்த ஊடகத்தாக்குதலில், இந்தியர்கள் மறந்து போனது ‘இந்திய திரைப்பட உலகின் மகா தயாரிப்பான (magnum opus) கஜினி’ மெமண்ட்டோ (Memento) என்ற ஆங்கிலப்படத்தின் தழுவல்’ என்பதை.

இந்த ‘தழுவல்’ என்பது காப்பி என்பதன் நாகரீகமான வார்த்தையாக இருக்கலாம். ஆனால் இந்திய காப்பி ரைட் சட்டப்படி ‘தழுவுதல்’ (adaptation) என்பதும் ஒரு காப்பிரைட் மீறல்தான். சட்டத்தை தள்ளுங்கள்...தார்மீக உரிமை?

ஐயா, தழுவுங்கள் அல்லது காப்பியடியுங்கள்...ஆனால் தயவு செய்து அதனை ஒத்துக் கொள்ளுங்கள். இணையத்தில் தேடினால்...அமீர் கான் கொஞ்சம் கூட கூச்ச நாச்சம் இல்லாமல், ‘கஜினி மெமண்டோவின் தழுவல் கூட இல்லை’ என்கிறார். இதற்கு பேசாமல், கஜினி பார்க்க காசு கொடுப்பவர்களுக்கு ஆளுக்கொரு செருப்படி கொடுத்திருக்கலாம்.

***

நம்ம ஊர் இயக்குஞர் மணிரத்னம் ‘இந்தியாவின் ஸ்பீல்பெர்க்’ என்று புகழப்படுவதும், கொஞ்சம் சங்கோஜமாகத்தான் இருக்கிறது. ஏனெனில், மற்ற திரைப்படங்களிலுள்ள சிறப்பான காட்சிகளை தழுவுவதும், காப்பிரைட் முறைகேடுதான்

இந்த ஒரு காரணத்திற்காகவே, எந்த ஒரு ராமராஜன் படமும், இந்தியாவின் முக்கிய படங்களுள் ஒன்றாக பட்டியலிடப்பட்ட நாயகன் படத்தை விட சிறந்த படம் என்று என்னால் கூற முடியும்.

கரகாட்டக்காரன் தவிர, ஏனெனில் அது தில்லானா மோகனாம்பாளின் தழுவல்!

***

தமிழகத்தின் தலைசிறந்த திரைப்பட அறிவுஜீவியாக புகழப்படும் கமல்ஹாசன் கூட தனது ‘அவ்வை சண்முகி’ படம் என்பது ஆங்கிலப்பட தழுவல் என்பதை தனது ரசிகர்களுக்கு துணிச்சலாக தெரியப்படுத்தினாரா என்பது தெரியவில்லை.

பிக்காசோவின் எந்த ஒரு ஓவியத்தையும், அசலைப்போலவே உருவாக்கும் ஓவியர்கள் உண்டு. ஆனால் அவர்கள் யாருக்கும் பிக்காசோவின் புகழில் ஒரு சதவீத பங்கினைக் கூட உலகம் அளிப்பதில்லை.

***

இந்தியாவின் முக்கிய திரைப்படமும், மூத்த இயக்குஞரும், முன்னணி நடிகரும் இப்படியென்றால்...என்ன சொல்வது?

நம்மவர்கள் வெள்ளையர்களை விட அறிவில் கொஞ்சம் குறைந்தவர்கள் என்றா?


மதுரை
271208