8.7.08

உச்ச நீதிமன்றமும், குழப்பமான தீர்ப்புகளும்!



நமது உச்சநீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்பில் கூறப்படும் சட்டக் கருத்துகளை இந்தியாவில் செயல்படும் அனைத்து நீதிமன்றங்களும் பின்பற்ற வேண்டும். (Article 141 of Constitution of India) எனவே உச்சநீதிமன்றமானது தன் முன் உள்ள எந்த ஒரு வழக்கினையும் ஆய்ந்து அறிந்து தீர்க்க வேண்டிய அவசியம் உள்ளது.

ஏனெனில் அவர்கள் தீர்ப்பில் எழுதக் கூடிய ஒவ்வொரு வாசகமும், இந்தியா முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில் எடுத்துக் கூறப்பட்டு அந்த வாசகங்களில் கூறப்பட்டுள்ளவாறுதான், வழக்கானது தீர்மானிக்கப்பட வேண்டும் என்று வாதிடப்படுகிறது.

எனவே வேறு ஏதோ ஒரு நபர் நடத்திய வழக்கில் கூறப்படும் தீர்ப்பானது, அந்த வழக்கில் சம்பந்தப்படாத மற்றொரு நபரை பாதிக்கிறது!

ஆனால், பல்லாயிரக்கணக்கில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளால் எழும் வேலைப்பளுவின் காரணமாகவோ அல்லது வேறு காரணங்களாலோ, உச்ச நீதிமன்றமானது வழக்கின் மீது முழுக்கவனமும் செலுத்த இயலாமல்.....தவறான அல்லது முன்னுக்குப் பின் முரணாக தீர்ப்பு கூறும் பொழுது அது, மற்ற நீதிமன்றங்களில் பெரும் குழப்பத்தை விளைவிக்கிறது.

முக்கியமாக, சமீப காலங்களில் மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் ஏன் இவ்வாறு கூறுகிறது என்று புரிந்து கொள்ள முடியாமல், பல உயர்நீதிமன்ற நீதிபதிகளே புருவத்தை உயர்த்துகின்றனர்.

-oOo-

மோட்டார் வாகன சட்டப்படி மோட்டார் வாகனங்கள் கண்டிப்பாக காப்பீடு செய்திருக்க வேண்டும். அதனால், வண்டியினால் விபத்துக்குள்ளாகும் ஒரு நபருக்கு, அதன் உரிமையாளர் சார்ப்பில் காப்பீடு நிறுவனங்கள் நஷ்ட ஈட்டினை வழங்கும்.

ஆனால், வாகன ஓட்டியிடம் முறையான உரிமம் இல்லையெனில் (not duly licensed) காப்பீடு நிறுவனம் காப்பீட்டு விதிகள் மீறப்பட்டுள்ளது என வாதிடலாம் என்று சட்டம் உரிமையளித்துள்ளது.

காப்பீடு என்பது ஒரு ஒப்பந்தம். எந்த ஒரு ஒப்பந்தத்திலும் அதன் விதிகளை ஒருவர் மீறும் பொழுது பொழுது அதன் பலன்களை அவருக்கு மறுக்கலாம் என்பது நியாயமே!

ஆனால், மோட்டார் வாகன விபத்துகளைப் பொறுத்தவரை பலனடைவது, வண்டியில் அடிபடும் மூன்றாவது நபர். எனவே, வண்டியோட்டிக்கு உரிமம் இல்லை என்று காப்பீடு நிறுவனம் நஷ்ட ஈட்டினை வழங்க மறுக்கையில், அவர் அதனை வண்டி உரிமையாளரிடம்தான் பெற வேண்டும். உரிமையாளர் போதிய பண வசதி படைத்தவராக இல்லாத பட்சத்தில் அது இயலாது. மற்ற சந்தர்ப்பங்களிலும் அது கடினமான ஒரு காரியம்.

ஆக, தவறு ஏதும் செய்யாத மூன்றாவது நபரின் உரிமை மறுக்கப்பட வேண்டுமா?

இதனை அடிப்படையாக கொண்டே, பல உயர்நீதிமன்றங்கள் இவ்வாறான காப்பீடு விதி மீறல் என்றால், காப்பீடு நிறுவனம் தான் ஏற்றுக் கொண்டபடி நஷ்ட ஈட்டினை மூன்றாவது நபருக்கு அளித்து, பின்னர் வேறு வழக்கு ஏதும் தொடராமல், தவறு செய்த வண்டி உரிமையாளரிடம் இருந்து வசூலித்துக் கொள்ளலாம் என்று தீர்ப்புக் கூறின!

இது ஒரு சரியான அணுகுமுறை என்று பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

-oOo-

வண்டி உரிமம் பற்றிய பிரச்னைகள் தொடர்ந்து கொண்டிருந்ததால், உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய மன்றம் இந்த பிரச்னையில் பல்வேறு பரிமாணங்களை அலசி ஆராய்ந்து, முக்கியமான தீர்ப்பு ஒன்றினை வழங்கியது. சுவரண்சிங் வழக்கு என்று கூறப்படும் தீர்ப்பில் (2004 ACJ 1) உச்சநீதிமன்றம் இவ்வகையான விதி மீறல்களை சிறிய மீறல்கள் (minor breaches) அடிப்படை மீறல்கள் (fundamental breaches) என்று இரு வகையாக பிரித்தது. அதாவது காப்பீடு வழங்கும் தனது கடமையிலிருந்து விலக்கப்பட காப்பீடு நிறுவனமானது, வெறுமே விதி மீறலை சுட்டிக்காட்டினால் மட்டும் போதாது. மாறாக, ஓட்டுநரிடம் முறையான உரிமம் இல்லாததே, விபத்து நடந்ததற்க்கான காரணம் என்றும் நிரூபிக்க வேண்டும் என்றும் கூறுகிறது. (பாரா 82).

முறையான உரிமம் இல்லாதது என்பது இங்கு விபத்துக்குள்ளான வண்டியினை ஓட்டுவதற்கான உரிமம் இல்லாதது என்று எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது இலகுரகவாகன உரிமம் (LMV) உள்ளவர் கனரக வாகனம் (HMV) ஓட்டுவது போன்ற மீறல்கள்.

ஓட்டுநருக்கு உரிமமே இல்லாதா பிரச்னைகளையும் இந்த வழக்கில் சேர்க்க முடியுமா என்பது சற்று குழப்பமாக இருக்கிறது. (பாரா 100 மற்றும் 102(iii)).

வெறுமே மீறல் அல்ல அடிப்படை மீறல் என்று நிரூபிக்க வேண்டும் என்ற கடமையோடு வழக்கிலிருந்து தப்பிக்க காப்பீடு நிறுவனங்கள் அந்த வகையான அடிப்படை மீறல்கள் உரிமையாளரின் கவனக்குறைவால் நடந்தது என்பதையும் நிரூபிக்க வேண்டும். (பாரா 102 (vi)).

அதாவது விபத்துக்குள்ளான வண்டியின் ஓட்டுநரிடம் உள்ளது ஒரு போலி உரிமம். வண்டியில் உரிமையாளர், ‘அவர் என்னிடம் வேலைக்கு சேரும் பொழுது உரிமத்தை என்னிடம் காட்டினார். அதனை உண்மை என்று நம்பினேன். மேலும் அவர் நல்ல முறையிலேயே வண்டியினை ஓட்டினார்’ என்று சான்றளித்தால் உரிமையாளரின் கவனக்குறைவு என்று கூற இயலாது.

சரி, இவ்வாறு இரண்டு விடயங்களையும், காப்பீடு நிறுவனங்கள் நிரூபித்தாலும், நீதிமன்றங்கள் காப்பீடு நிறுவனத்தை அடிபட்டவருக்கு இழப்பீடு வழங்கக் கூறி அவற்றை வண்டி உரிமையாளரிடம் இருந்து வசூலிக்கும் உரிமத்தை அளிக்கலாம் என்று கூறப்படுவதுதான் இந்த தீர்ப்பின் சிறப்பம்சம்!

‘இந்த வழிமுறை பல்வேறு தீர்ப்புகளில் கூறப்படுகிறது. அதிலிருந்து விலக நாங்கள் விரும்பவில்லை’ என்று மூன்று நீதிபதிகள் அடங்கிய மன்றம் இந்த வழக்கில் கூறிய தீர்ப்பு உரிமம் சம்பந்தப்பட்ட வழக்குகளில் முக்கியமான ஒரு மைல்கல் எனலாம்.

-oOo-

சுவரன்சிங் வழக்கு தீர்ப்பு வெளிவந்த சில மாதங்களில் குசும் ராய் ((2006) 4 SCC 250) என்ற வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு புரிந்து கொள்ள இயலாத ஒன்றாக இருந்தது. அதாவது அந்த வழக்கில் கார் ஓட்டுநரிடம் இலகுரக வாகன ஓட்டும் உரிமம் இருந்தது. ஆனால் அவர் ஓட்டியது ஒரு வாடகைக்கார். வாடகை வண்டி ஓட்ட விரும்புவர்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வில்லை (badge or endorsement) பெற வேண்டும்.
யாருக்கும் எளிதில் இது ஒரு அடிப்படை மீறல் அல்ல என்பது புரியும். அதனையும் கவனத்தில் கொள்ளாமல், வண்டி உரிமையாளர் கவனக்குறைவாக இருந்தாரா என்ற கேள்வியினையும் எழுப்பாமல் மேற்போக்காக வில்லை இல்லாதலாம் முறையான உரிமம் இல்லை என்று கூறி காப்பீடு நிறுவனம் இழப்பீடு அளிக்க தேவையில்லை என்று கூறியது.

ஆனாலும் இந்த வழக்கின் இறுதியில், தனது சிறப்பு அதிகாரத்தைக் கொண்டு (Article 142 of Constitution of India) வேறு ஏதோ ஒரு வழக்கில் கூறப்பட்ட தீர்ப்பினை முன்மாதிரியாக (precedent) கொண்டு காப்பீடு நிறுவனம் இழப்பீட்டினை அளித்து பின்னர் உரிமையாளரிடம் வசூலித்துக் கொள்ளலாம் என்று கூறியது.

அவ்வளது தூரம் வேறு ஏதோ ஒரு வழக்கினை முன்மாதிரியாக கொள்வதற்கு பதிலாக உரிமம் பற்றிய வழக்குகளில் மைல் கல்லாக விளங்கிய சுவரன்சிங் வழக்கினை முன் மாதிரியாக கொண்டிருந்தால் இந்தப் பிரச்னை எழுந்திருக்காது.

வேடிக்கை என்னவென்றால், குசும்ராய் வழக்கினை விசாரித்த் இரு நீதிபதிகளில் ஒருவர் சுவரன்சிங் வழக்கினை விசாரித்த மூன்று நீதிபதிகளில் ஒருவர்!

ஆக, அடிப்படை மீறல் என்று சுவரண்சிங் வழக்கில் கூறப்பட்டது புறந்தள்ளப்பட்டு வாடகைக்கார் ஓட்ட தேவையான வில்லை இல்லாதது கூட காப்பீட்டினை மறுக்கும் ஒரு காரணியாக இந்த வழக்கு கூற முதல் குழப்பம்.

-oOo-

குசும்ராய் வழக்கிலாவது, கருணை கூர்ந்து நீதிபதிகள் காப்பீட்டு நிறுவனத்திற்கு இழப்பீட்டினை வழங்கி பின் உரிமையாளரிடம் வசூலித்துக் கொள்ள கூறினர். ஆனால், சமீபத்தில் வெளிவந்துள்ள ஒரு தீர்ப்பில் அந்தக் கருணை கூட இல்லாமல், விபத்தில் தனது கணவனை பறி கொடுத்த ஒரு மனைவியையும், தந்தையை பறி கொடுத்த மூன்று சிறு பிள்ளைகளையும் தவிக்க விட்டிருப்பதுதான் கொடுமை!

பிரேம்குமாரி வழக்கு என்று கூறப்படும் இந்த வழக்கின் (Appeal No.490/2008 Date 18/01/2008) தீர்ப்பினைப் படிக்கையில் லாரி ஓட்டுநருக்கு முறையான உரிமம் இல்லை என்றுதான் குறிப்பிடுகிறார்களே தவிர அது அடிப்படையான மீறலா? உரிமையாளரின் கவனக்குறைவு உள்ளதா? என்ற கேள்விகளை எழுப்பாமல், முன்னர் உரிமம் பற்றிய அனைத்து தீர்ப்புகளையும் பற்றி மட்டும் குறிப்பிட்டு, பாதிக்கப்பட்டவர்கள் வண்டி உரிமையாளரிடம் இருந்து இழப்பீட்டினை வசூலித்துக் கொள்ளலாம் என்று மட்டும் கூறி வழக்கினை முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர்.

ஐயா, அடிப்படை மீறல், உரிமையாளரின் கவனக்குறைவு என்பது இந்த வழக்கில் நிரூபிக்கப்பட்டதாகவே கொள்வோம். ‘இழப்பீட்டினை வழங்கி வசூலித்துக் கொள்ளலாம்’ என்ற கொள்கையினை (pay and recover) சட்டக்கருத்தாகவே மூன்று நீதிபதிகள் அடங்கிய மன்றம் முன்மொழிந்த பின்னர் தந்தையினை இழந்த மூன்று சிறு பிள்ளைகள் சம்பந்தப்பட்ட வழக்கில் அதனை பின்பற்றாமல் வேறு எந்த வழக்கில் பின்பற்றுவதாம்?

தீர்ப்பு எழுதிய இரு நீதிபதிகளுக்குத்தான் வெளிச்சம்!

08.07.08
மதுரை


பி.கு. வேடிக்கை என்னவென்றால் இந்த தீர்ப்பில் மேற்கோள் காட்டப்பட்ட அனைத்து தீர்ப்புகளிலும், சம்பந்தமில்லாத லக்ஷ்மி நாராயணன் தூத் மற்றும் மீனா வரியால் வழக்கு தீர்ப்பு உட்பட அனைத்து தீர்ப்புகளிலும் இந்த வழங்கி வசூலிக்கும் முறை ‘மூன்றாவது நபர்கள்’ வழக்கில் கடைபிடிக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.





PETCHIPARAI DAM AND KALAKAD RANGE, WESTERN GHATS, INDIA

3 comments:

PRABHU RAJADURAI said...

The Link to Kusumrai's case Judgment
http://judis.nic.in/supremecourt/qrydisp.asp?tfnm=27593

PRABHU RAJADURAI said...

The Link to Premakumari's case Judgment

http://judis.nic.in/supremecourt/qrydisp.aspx?filename=30143

Boston Bala said...

பதிவிற்கு நன்றிகள் பல!