30.3.08

‘ஞாநி’களுக்கு எதற்கு அறிவு?

மும்பையில் இருக்கையில், மிட் டே (Midday) டைம்ஸ் ஆப் இந்தியா (times of India) ஆகிய தினசரிகளில் ரஜ்தீப் சர்தேசாய், ஷோபா டே, கங்காதர், சுவாமிநாத ஐயர் மற்றும் பல பத்தி எளுத்தாளர்கள் (columnists) எழுதும் கட்டுரைகளை (column) மிகவும் ஆர்வமுடன் படிப்பேன். நாமும் இப்படி எழுதிப் பார்த்தால் என்ன என்ற ஆசை அவ்வப்பொழுது எழுந்தாலும், அவர்களைப் போல மொழியின் மீது ஆளுமையும், அறிவும் நமக்கு வாய்க்குமா என்ற பயத்தில், வெறுமே ஆசிரியருக்கு எழுதிய சில கடிதங்களோடு நிறுத்திக் கொண்டேன்.

முக்கியமாக எதாவது ஒன்றிற்கு பொருத்தமான ஆங்கில வார்த்தை என்னவென்று தெரியாமல் போய்விட்டால் என்ன செய்வது?

மதுரைக்கு வந்த கடந்த சில வருடங்களில் நான் இழந்தது, ஆங்கில பத்தி எழுத்தாளர்களின் கட்டுரைகளை. ஆயினும் தமிழிலும் பாமரன், ஞாநி, சாருநிவேதிதா போன்றவர்கள் தொழில் முறையில் பத்தி எழுதுகிறார்கள். பாமரன் சாரு நிவேதிதா போன்றவர்களைப் போல ஞாநி எனக்கு சுவராசியமாக இருந்ததில்லை எனினும், அவரது கருத்துகள் இணையத்தில் சமீப காலங்களில் அதிகம் விவாதிக்கப்படுகிறது.

ஆனால், நேற்று குமுதத்தில் வாசிக்க நேர்ந்த ஞாநி அவர்களது கட்டுரை, மும்பையில் நான் கொண்டது எத்தனை அர்த்தமற்ற பயம் என்பதை விளக்கியது.

மனிதர் மொழி ஆளுமை, தமிழ் அறிவு எதுவும் பற்றிக் கவலைப்படாமல், தானும் ஒரு பத்தி எழுத்தாளன் என்று கூறிக்கொண்டு, எங்கெல்லாம் முடியவில்லையோ அங்கெல்லாம் ஆங்கில வார்த்தைகளை உபயோகித்தே எழுதியிருக்கிறார்.

ஆரம்பத்திலேயே ‘அவையெல்லாம் ‘சப்ஜெக்ட்டுக்கு’ முழு நியாயம் செய்யவில்லை’ என்கிறார். தான் நினைப்பதை எழுத்தில் வடிக்க சிரமப்படும், இயலாதவர்களும் இங்கு தொழில் முறை எழுத்தாளர்கள் என்று கூறிக்கொள்ள முடியுமென்றால், அவரது அரைகுறை எழுத்தினை காசுக்கு விற்கும் பத்திரிக்கை வாசகனை கிள்ளுக்கீரையாக நினைக்கிறது என்பது அல்லாமல் வேறு என்ன இருக்க முடியும்?

ஹீரோ, சினிமா’ போன்ற வார்த்தைகள் எல்லாம் புறந்தள்ளப்பட்டு இன்று கதாநாயகன், திரைப்படம் என்ற வார்த்தைகள் சரளமாக எழுத்து உலகில் புழங்கி வந்தாலும் பாவம், அவருக்குத் தெரியவில்லை போலும். முரணாக, பின்னர் கதாநாயகன் என்ற வார்த்தையினை அவரே உபயோகிக்கிறார்.

கால்ஷீட் நேரத்துக்கு நடிக்க செல்லாமல்’ என்பதற்கு பொருத்தமான தமிழ் வார்த்தை என்ன என்பது ஏதோ, தன்னார்வர்த்தில் எழுதும் வலைப்பதிவாளர்களுக்கு தெரியாமல் இருப்பதில் அர்த்தமுண்டு. ஆனால், காசுக்கு எழுதும் ஞாநி போன்ற எழுத்தாளர்கள் அவசியம் அதனை கற்று பின் எழுத முயல வேண்டும்.

‘எழுப்பியிருக்கும் கேள்வி ஒரு படத்தின் கேப்டன் இயக்குஞரா? ஸ்டாரா? நடைமுறையில் அது ஸ்டார்தான் என்று இருந்த போதும் எல்லோருமே நியாயப்படி டைரக்டர்தான் கேப்டனாக இருக்க வேண்டும்’

தொடர்ந்து ஒரு விஞ்ஞானியைப் பற்றி எழுத முயல்பவர் ‘கணிதம், பயோமெடிக்கல், எஞ்ஜினீயரிங், மருத்துவம் சர்ஜரி................கார் டிரைவர், மெக்கானிக், டாக்டர், சினிமா இயக்குஞர், டி.வியில் வானிலை அறிவிப்பாளர்’ என்று இஷ்டத்துக்கு பண்பலை வானொலி அறிவிப்பாளர் மாதிரி பொளந்து கட்டுகிறார்.

பின்னர் கற்பிதங்கள் என்ற அதிகம் தெரிந்திராத வார்த்தையினை பயன்படுத்துபவருக்கு ‘பிரிலியண்ட்’ என்ற வார்த்தைக்கு தமிழில் தெரியாமல் தடுமாறுகிறார்.

இறுதியாக, ‘காற்றுப் பிரிதல்’ என்று எந்த மருத்துவரும், விஞ்ஞான மாணவரும் இயல்பாக பயன்படுத்தும் வார்த்தையினை தமிழில் எழுதினால், அதுவும் விஞ்ஞான ஆராய்ச்சியினைப் பற்றி எழுதுகையில் ‘பாரம்பரியம் மிக்க குமுதம்’ இதழுக்கு பொருந்தி வராது என்பதால் ‘farting’ என்று ஆங்கிலத்தில் எழுதுவதாக ஒரு சப்பைக்கட்டு வேறு!

அண்ணாமலையாரே இந்தப் புகழுரையினை கேட்டு சற்று, மேலுலகத்தில் நெளிந்திருப்பார்!

-oOo-

எனது சந்தேகம் இதுதான்.

பணம் வாங்கிக் கொண்டு எழுதும் ‘எழுத்தாளரான’ ஞாநிக்கு இருக்கும் தமிழ் அறிவினை விட எனது ஆங்கில அறிவு சற்று அதிகம் இருக்கலாம். ஏனெனில் நான் தமிழ் வார்த்தைகளை உபயோகித்து ஆங்கில கட்டுரை எழுதியதில்லை. ஹிந்துவில் எனக்கு பத்தி எழுத வாய்ப்பு தருவார்களா?

மதுரை
30.03.08

“Some men are born Mediocre, some men achieve mediocrity, and some men have mediocrity thrust upon them”


MY BELOVED THOOTHUKUDI

14 comments:

TBCD said...

செம நச்....


//
பணம் வாங்கிக் கொண்டு எழுதும் ‘எழுத்தாளரான’ ஞாநிக்கு இருக்கும் தமிழ் அறிவினை விட எனது ஆங்கில அறிவு சற்று அதிகம் இருக்கலாம். ஏனெனில் நான் தமிழ் வார்த்தைகளை உபயோகித்து ஆங்கில கட்டுரை எழுதியதில்லை. ஹிந்துவில் எனக்கு பத்தி எழுத வாய்ப்பு தருவார்களா?

மதுரை
30.03.08

“Some men are born Mediocre, some men achieve mediocrity, and some men have mediocrity thrust upon them”
//

TBCD said...

இங்கே வலைப்பதிவில் குட்டிஸ் ஜங்கசன் என்று ஒரு பதிவில், இப்படி ஆங்கில் வார்த்தைக்கு ஒரு நல்ல உரையாடல் நடந்தது.

பதிவில் இப்படி சிரத்தை எடுத்து எழுதும் போது, கண்டிப்பாக பணம் வாங்கி எழுதுபவர்களுக்கு நிறைய பொறுப்பு இருக்க வேண்டும்.

ஆனால், குமுதம் இந்நாளில், இளைஞர்களை கவரகிறேன் பேர்வழி என்று மொத்த புத்தகத்தையும்மே இப்படி, அரைகுறை ஆங்கிலமாகவே மாற்றியது.

அதனால், ஞாநி எழுதியதை வேறு யாரவது திருத்தியும் இருக்காலாம்..ஆவியில் இவ்வளவு ஆங்கிலம் கலந்தாற்போல் தெரியவில்லை..

மறுவாசிப்பு செய்து பார்த்தால் ஒரு வேளை தெரியலாம்..

சுந்தரவடிவேல் said...

முந்தாநாள் ஒரு தமிழ்/கன்னட நண்பரின் குடும்பத்தினரைச் சந்தித்தேன். அவர்கள் கன்னடத்தில் பேசும்போது ஆங்கிலச் சொற்களைக் கலக்காது பேசியதைக் கண்டு ஆச்சரியமடைந்தேன். அதே வேளை, தமிழர்கள் ஆங்கிலத்தைக் கலந்து பேசினால்தான் நாகரீகம் என்ற பிறழ்வு மனோநிலையில் பிதற்றுவதைக் காண்கிறோம்.

Anonymous said...

பிரபு - பதிலெழுத ஆரம்பித்துப் பெரிதாக ஆனதால் என் வலைப்பதிவில் எழுதியிருக்கிறேன்.
http://domesticatedonion.net/tamil/?p=755

துளசி கோபால் said...

உங்க பதிவைப்படிச்ச கையோடு இன்னிக்கு எழுதுன என் பதிவில் நீங்க சொல்வதுபோலத் தமிழ்ச் சொற்களையேப் பயன்படுத்தலாமுன்னு ஆரம்பிச்சேன்.

ரெண்டு பத்திக்குமேல் தாக்குப்பிடிக்கமுடியலை.

சரி. இப்போ ரெண்டு பத்தி. இனிமேல் மூணு நாலுன்னு முயற்சிப்பேன்.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

முக்கியமான, ஆனால் பலரும் கவனித்து இடித்துரைக்காத விசயத்தைச் சொல்லி இருக்கிறீர்கள். நன்றி.

**

tbcd கூறிய கருத்தும் கவனிக்கத்தக்கது. போன ஆண்டு சென்னை வலைப்பதிவர் பட்டறைக்கான அறிக்கையை ஒரு தமிழ் நாளிதழுக்கு அனுப்பிய போது, "கணினி, மென்பொருள்" போன்ற சொற்கள் புரியாதென்று அவற்றை "கம்பியூட்டர், சாஃப்ட்வேர்" என்று மாற்றச் சொன்னார்கள்.

**

வணிக நோக்கில் செயல்படும் இதழ்களைக் காட்டிலும் ஆர்வ மேலீட்டில் எழுதப்படும் தமிழ் இணையப் படைப்புகள் மேம்பட்ட தமிழில் இருப்பது தமிழின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையைத் தருகிறது.

PRABHU RAJADURAI said...

துளசி மேடம்

"செப்டம்பர் 19ம் தேதி நான் எழுதிய ஒரு மடலிலிருந்து....

{{முதன் முதலாக எனது மெயில் பாக்ஸ் நிரம்பி வழிகிறது. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன்னர், கம்ப்யூட்டர் வாங்கிய புதிதில் மெயில் அனுப்பவோ, பெறுவதற்கோ யாருமின்றி எனது ஒரு மெயில் விலாசத்திலிருந்து மற்றொரு விலாசத்திற்கு எனக்கு நானே மெயில் அனுப்பி மகிழ்ந்திருக்கிறேன். பின்னர் எந்த வலைத்தளத்திற்குச் சென்றாலும் முதல் வேலையாக ரிஜிஸ்டர் செய்து விடுவேன். முதலில் எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. பின்னர் அதுவே பெரிய தொல்லையாகி அன்சப்ஸ்கைரப் செய்வதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. ஆனால் எந்த நேரத்தில் சொன்னேனோ எல்லா படைப்புகளையும் அக்னாலட்ஜ் செய்யுங்கள் என்று, திடீரென வேலைப்பளு அதிகமாகி, எல்லா மெயில்களையும் சரியாகப் பார்க்கக்கூட நேரமின்றிப் போய் விட்டது}}

எத்தனை ஆங்கில வார்த்தைகள்... வரவரக் குறைந்து போனது. அக்னாலட்ஜ் என்ற வார்த்தைக்கு என்ன தமிழ் வார்த்தை என்று ஒரு விவாதம் நடைபெற்றது"

http://www.maraththadi.com/article.asp?id=299

மரத்தடி என்ற இணைய விவாதக்குழு ஆரம்பித்து ஒரு வ்ருட நிறைவில் பழைய விவாதங்களை அசை போடுகையில் நான் எழுதியது.

உங்களுக்கு நம்பிக்கை வருமே!

Bruno_புருனோ said...

//வணிக நோக்கில் செயல்படும் இதழ்களைக் காட்டிலும் ஆர்வ மேலீட்டில் எழுதப்படும் தமிழ் இணையப் படைப்புகள் மேம்பட்ட தமிழில் இருப்பது தமிழின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையைத் தருகிறது.//

என்க்கு முதலில் இந்த நம்பிக்கையை தந்தது விக்கீபிடியா. பின்னர் தமிழ் பதிவுலகம். நீங்கள் கூறுவது போல் ”சந்தை கட்டாயம்” இல்லாது வலைப்பூக்களின் ஒரு சாதகக அம்சம்.

ராஜதுரை சார், ரவியிடம் உரையாடுவதற்கு உங்கள் பதிவை உபயோகப்படுத்துவதற்கு மன்னியுங்கள்

Anonymous said...

//எளுத்தாளர்கள் (columnists)//

????
;-)

ஜமாலன் said...

இப்பதிவு குறித்த விவாதம் இங்கு

http://jamalantamil.blogspot.com/2008/04/blog-post.html

ramachandranusha(உஷா) said...

வக்கீல் ஐயா, ஆங்கில நாளிதழ்களில் இந்திலீஷ் பரவலாய் காணப்படும் பொழுது,தமிங்கீஷ் இந்துவில் வரும் என்று நம்புகிறேன் :-)

வரவனையான் said...

கும்மாங்குத்து வக்கீலய்யா !!!

அரவிந்தன் said...

//முந்தாநாள் ஒரு தமிழ்/கன்னட நண்பரின் குடும்பத்தினரைச் சந்தித்தேன். அவர்கள் கன்னடத்தில் பேசும்போது ஆங்கிலச் சொற்களைக் கலக்காது பேசியதைக் கண்டு ஆச்சரியமடைந்தேன்//

உண்மைதான்!!!

மெத்த படித்த கன்னடர்களும் ஆங்கிலம் கலக்காமல் இயப்பாக பேசுகிறார்கள்..

Anonymous said...

நானும் முயற்சி செய்கிறேன்

அன்புடன்
கே ஆர் பி
http://visitmiletus.blogspot.com/