20.3.08

புனித வெள்ளியும், மூன்று மணி நேர பாடுகளும்!


நான் சிறுவனாயிருக்கையில், சலூனில் முடி வெட்டிக் கொள்வதை விட அச்சம் தரும் சடங்கு ஒன்று உண்டென்றால், அது புனித வெள்ளியன்று கோவிலுக்கு செல்வதுதான்!

கோடைக்காலம் தொடங்கியிருக்கும் மத்தியான வெயிலில் தொடர்ந்து மூன்று மணி நேரம் கோவிலுக்குள் உட்கார்ந்திருப்பது...இல்லை, உட்கார்ந்து, எழுந்து, பின் முட்டிக்காலிட்டு மீண்டும் உட்கார்ந்து, எழுந்து, முட்டிக்காலிட்டு என்று வறுத்து எடுக்கப்படுவது கொடுமை!

அதுவும் எங்கள் கோவில் உறுப்பினர்கள் பக்தியில் சிறந்தவர்கள், உடல் முழுவதும் வியர்த்துக் கொட்டினாலும் தொடர்ந்து ஜெபம் செய்வதில் சளைக்காதவர்கள்.

‘அடப்போங்கப்பா, இயேசுவுக்கே கஷ்டம் ஒரே நாளோடு போயிற்று...எனக்கு வருடா வருடம் இப்படி மூன்று மணிநேரம் இந்தப் பாடா’ என்று மனதிற்குள் நினைப்பதையும் வெளியில் சொல்ல முடியாது.

-oOo-

புனிதவெள்ளியில் கோவிலுக்கு செல்லும் பழக்கம் எப்போது நின்றது என்று நினைவில்லை. கல்லூரிக்கு சென்றதும், கொஞ்சம் கொஞ்சமாக கோவிலுக்கு செல்லும் பழக்கம் நின்று போனதோடு அதுவும் நின்றிருக்கலாம்.

ஆனால், மும்பையிலிருக்கையில் திடீரென ‘புனித வெள்ளிக்கு கோவிலுக்கு வர வேண்டும்’ என்று மனைவி வேண்டியதில், இது என்னடா புதுச்சோதனை என்றிருந்தது. நான் சார்ந்திருந்த புரொட்டஸ்டாண்ட் பிரிவினரைப் போல இல்லாமல், கத்தோலிக்கர்கள் ‘பூசை’யினை சுருக்கமாக முடித்துவிடுவார்கள் என்பதால் அவர்கள் மீது பரிவு இருந்தாலும், புனித வெள்ளி பூசையில் ஆழம் தெரியாமல் காலை விட நான் தயாராக இல்லை.

‘வெள்ளிக்கிழமை மத்தியானம் எல்லாம் ஆகாது. வேண்டுமானால் வியாழக்கிழமை மாலை பூசைக்கு வருகிறேன்’ என்றேன். இரவு நேரம், ஏதோ சினிமாவுக்கு போவது போல ஒரு மணி நேரத்தில் வந்து விடலாம் என்பதால்.

அதுவும் சரிதான் என்று சமரசமானார்கள். ஆனால் வியாழக்கிழமை மாலை எனது நண்பரை பார்க்க வேண்டியிருந்ததால், வெள்ளிக்கிழமை காலை பார்க்கலாம் என்றேன்.

வெள்ளிக்கிழமை காலையும் முடியவில்லை. அதற்காக மத்தியான நேரத்து மூன்று மணி நேர பூசையெல்லாம் வரமுடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டேன். யார் கோவிலுக்குள் மூன்று மணி நேரம் உட்கார்ந்திருப்பது?

ஈஸ்டருக்கு போய்விட்டால் போயிற்று!

ஆனால், கத்தோலிக்கர்களுக்கு கிறிஸ்துமஸ் என்றாலும் சரி, புதுவருடமென்றாலும் சரி., ஈஸ்டரும் ஆகட்டும். நள்ளிரவில் கோவிலுக்கு போனால்தான் திருப்தியாக இருக்கும். அதற்கும் வந்தது ஆப்பு, உச்ச நீதிமன்ற உத்திரவு ஒன்றின் மூலம்.

மும்பையில் தாண்டியா கொண்டாட்டங்கள் இரவு பத்து மணி தாண்டிதான் வேகம் பிடிக்கும். பல இடங்களில் பன்னிரண்டு மணியையும் தாண்டி பத்து நாட்கள் உறக்கத்தை கெடுக்கும். அது குறித்து எழுந்த ஒரு வழக்கில், ‘இரவு பத்து மணிக்கு மேல் பொதுவில் ஒலிபெருக்கியை பயன்படுத்தக் கூடாது’ என்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு கத்தோலிக்க நள்ளிரவு பூசைக்கும் வேட்டு வைத்து விட்டது.

எனவே கிறிஸ்துமஸ், புதுவருட பூசைகள் மும்பை பாந்த்ரா (Bandra) கோவில்கள் முன்னாள் இரவு 8.30க்கு ஆரம்பித்து 9.30க்கெல்லாம் முடித்து விட்டார்கள். சரி, ஈஸ்டருக்கும் பிரச்னை இல்லை என நினைத்தேன்.

-oOo-

ஈஸ்டருக்கு மலாடிலுள்ள (Malad) அக்கா வீட்டுக்கு போவதென்று முடிவாயிற்று. அங்கும் பூசை இரவு 8.30க்குத்தான். போனதுமே அக்கா சாப்பிடுகிறாயா என்று கேட்டாள். உணவின் மணம் என்னை இழுத்தாலும், ‘இன்னும் பசிக்கட்டும், அதுதான் பத்து மணிக்கு வந்து விடலாமே’ என நினைத்து வேண்டாமென்று விட்டேன்.

எனது மனைவியோ, ‘மூணு மணி நேரம் கோவிலுக்குள் உட்கார வேண்டுமா’ என்று வெள்ளிக்கிழமை பூசைக்கு வரவில்லை என்று எனது அம்மாவிடம் புகார் வாசித்துக் கொண்டிருந்தார்கள்.

கோவிலில் பூசை சரியாக 8.30 மணிக்கு சாதாரணமாகத்தான் ஆரம்பித்தது. ஆனால், பாதிரியார் புரட்சிக்காரர் போல, இது என்ன அரசு உத்தரவு போடுவது என்று நினைத்தாரோ இல்லையோ, பேசினார் பேசினார் பேசிக்கொண்டே இருந்தார். எனக்கோ பசி வேறு, கோபம் தலைக்கேறியது. நாற்காலிகளை நெருக்கமாக வேறு போட்டிருந்ததால் அங்கும் இங்கும் அசைய முடியவில்லை.

பின்னரும் பூசையினை இழுத்தடித்தார்கள். கடைசியில் வீட்டுக்கு வருகையில் மணி பன்னிரண்டு. வந்த பின்னர்தான் புரிந்தது. பூசை முடிந்த நேரம் சரியாக 11.30!

‘வெள்ளிக்கிழமை கோவிலில் 3 மணி நேரம் உட்கார்ந்திருப்பதா, என்று கேட்டீர்கள் அல்லவா. அதற்குதான் இன்று 3 மணி நேரம் உட்கார்ந்தீர்கள்’ என்று எனது மனைவி கிண்டல் செய்ய, அக்காவும் நானும் ஒருவரையொருவர் பார்த்து அர்த்தமாக புன்னகைத்துக் கொண்டோம்.

அதன் அர்த்தம் எனது மனைவிக்கு புரியவில்லை.

-oOo-

வெள்ளிக்கிழமை பூசைக்கு கோவிலுக்கு போகும் கட்டாயம், எனக்கு எப்பொழுது நின்றது என்று தெரியவில்லையாயினும் எனது மூத்த அண்ணன் எப்பொழுது நிறுத்தினான் என்று எங்களுக்கு மறக்காது.

அவன் கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்த பின்னர், வீட்டு ஒழுங்குகளிலிருந்து தானாகவே சில சலுகைகளை உருவாக்கிக் கொண்டான். இவ்வாறுதான் புனித வெள்ளிக்கு முன்னர், ‘மூன்று மணி நேரமெல்லாம் என்னால் கோவிலில் உட்கார முடியாது’ என்று சொல்ல, ‘அப்படியென்றால் வியாழக்கிழமை மாலை சர்வீஸுக்கு போய் வந்து விடுவதாக எங்கள் அம்மாவுடன் சமாதானமாயிற்று.

அக்காவும் கூட போக, தனது நண்பர்களிடம் ‘இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் வந்து விடுவதாக’ அவன் கூறிப்போனது எனக்கு இன்றும் ஞாபகம் இருக்கிறது.

ஆனால், சர்வீஸ் (தியானம்) ஆரம்பிப்பதற்கு சில நிமிடங்கள் இருக்கையில், மிக மிக அரிதாகவே மின் சப்ளை நிறுத்தப்படும் எங்கள் தெர்மல் நகரிலேயே (Thermal Nagar) மின் இணைப்பு துண்டிக்கப்பட கோவிலுக்குள் இருட்டில் விசிறியும் இல்லாமல் வேர்த்துக் கொட்ட உட்கார்ந்திருக்கிறார்கள். கடைசியில் மின் இணைப்பு வந்து கோவில் முடிந்த பொழுது சரியாக ‘மூன்று மணி’ நேரம் கடந்திருந்ததாம்.

வீட்டுக்கு வந்து அக்கா சொல்லிச் சொல்லி சிரித்துக் கொண்டிருந்தார்கள்!

Miracles do happen...sometimes

மதுரை
210308





VELANKANNI CHURCH

11 comments:

PRABHU RAJADURAI said...

கடந்த முகரம் அனுசரிப்பின் போது, புனித வெள்ளிக்கு முந்தைய உபவாசக் காலம். எனது மனைவி மாமிசம் சாப்பிடுவதில்லை என்று விரதம் (?) பூண்டிருந்தார்கள். நான் அவர்களைக் கேலி செய்து கொண்டிருந்தேன். பதிலுக்கு என்னை ‘லூசிபர்’ என்று அழைத்தார்கள்.
http://marchoflaw.blogspot.com/2006/05/blog-post_12.html

ushabalaji said...

God Bless You!!!

சிறில் அலெக்ஸ் said...

நான் ஆஃபீசிலிருந்து பெர்மிஷனெல்லாம் வாங்கிட்டு வீட்டுக்கு வந்தா அநியாயப் பனிப்பொழிவு இங்க. கோவிலுக்குப் போக முடியல.

Miracles Do happen at times!
:)

-L-L-D-a-s-u said...

Miracles didn't happen here ;(

ரவியா said...

I had the same experience too. well written.

துளசி கோபால் said...

நான் படிச்ச காலத்தில் கோயிலில் மதியம் பூராவும் இருந்தே ஆகணும். நாங்கதான் கொயர்லே பாடணும். நெத்தியில் பொட்டோடு கொயர் மெம்பரா இருந்த ஆளு நானாத்தான் இருந்துருக்கும்.

வெள்ளிக்கிழமை மத்தியானம் தயிர்சாதம்தான் ஹாஸ்டலில் தருவாங்க.

சனிக்கிழமை இரவு 12 மணிக்குக் கோயிலுக்குப்போவோம்.மறுநாள் ஈஸ்ட்டர் தினம் நல்ல விருந்து.

தருமி said...

prabhu,

நான் 'விசுவாசி'யா இருந்தப்போவே இந்த வியாழன் வெள்ளி ரெண்டு நாளும் கோவிலுக்குப் போனாலும் மனசு 'என்னவோ போல் கனமாக' இருக்கும்.

//நாற்காலிகளை நெருக்கமாக வேறு போட்டிருந்ததால் அங்கும் இங்கும் அசைய முடியவில்லை.//

அதனாலதான் நாமல்லாம் கையில் வாசிக்க ஏதாவது ஒன்றோடு -இந்து sunday magazine இல்லைன்னா ஏதாவது சின்ன புத்தகம் - outstanding christian- ஆக இருந்திர்ரது.

ஜோ/Joe said...

எனக்கும் இங்கே இரவு 8 மணிக்கு ஆரம்பித்த திருப்பலி 11.30-க்கு தான் முடிந்தது .ஆனால் பையன் பண்ணிய சேட்டையால் பாதி நேரம் வாத்தியார் சொன்ன மாதிரி outstanding catholic ஆயிட்டேன்.

enRenRum-anbudan.BALA said...

பிரபு,

வாசிக்க சுவாரசியமாக இருந்தது !

எனக்கென்னவோ, ஈஸ்டர், புனிதவெள்ளி என்ற பேச்சு வந்தாலே, நான் படித்த ஆரம்பப்பள்ளியின் தலைமையாசிரியை தான் ஞாபகத்துக்கு வருவார். அந்த கால கட்டத்தில், திருவல்லிக்கேணியில் உள்ள சர்ச்சுக்குப் போயிருக்கிறேன். ஒவ்வொரு மாதமும், ஒரு பாதிரியார் பள்ளிக்கு வந்து பைபிள் கதைகளை சுவாரசியமாகக் கூறுவார். Nostalagia !!!

"கண்டிப்பாக" வாசிக்கவும் :)
http://balaji_ammu.blogspot.com/2006/09/ii_30.html

எ.அ.பாலா

Kasi Arumugam said...

தமிழில் 'புனித வெள்ளி', 'நல்லவெள்ளி'... என் நண்பர் ஜேக்கப் பாலக்காட்டார், அவர்கள் சொல்வது 'துக்கவெள்ளி'. அதுதானே சரி?

PRABHU RAJADURAI said...

கிறிஸ்தவ மத கோட்பாட்டின்படி பார்த்தால், புனித வெள்ளி என்பது குட் பிரைடே என்பதை விட பொருத்தமான ஒரு வார்த்தை.

துக்க வெள்ளி என்று கிடையாது. ஏனெனின், மத அறிஞர்கள் கூறுவதுபடி இயேசு சிலுவையில் அறையுண்டதன் மூல்ம் பாவத்தை ஜெயித்து, இந்த உலகத்திற்கு அவர் வந்ததின் நோக்கத்தை நிறைவேற்றுகிறாராம்.

ஆனால். நான் சாமான்யன். நானறிந்த கிறிஸ்துவம் வேறு!