22.3.08

நிலைத்த அன்பின் நீடித்த அடையாளம்?



செய்தித் தாள் படிப்பவரா நீங்கள்? அவ்வாறென்றால் சில நாட்களுக்கு முன்னர் ஆயுள் காப்பீட்டுக் கழகம்' குறித்த வழக்கு ஒன்றில் சென்னை மாநில நுகர்வோர் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பினைக் குறித்த செய்தியினை படித்த ஞாபகம் இருக்கலாம். பலருக்கு ஞாபகம் இருக்க வாய்ப்பில்லை என்பது எனது கணிப்பு. அதாவது கொலையுண்ட ஒரு மனிதனின் மரணத்தினை விபத்தாகக் கருதி, டபுள் பெனிஃபிட்' எனப்படும் ஆயுள் காப்பீட்டின் இரட்டிப்பு பலனினை அவரது தந்தைக்கு அளிக்கச் சொல்லிய ஒரு தீர்ப்பு.


இச்செய்தியில் என்ன பெரிய கவனிக்கக் கூடிய அம்சம் என்று பலர் நினைக்கலாம். இவ்வாறாகவே நம்மில் பலர் ஆயுள் காப்பீட்டினை சற்று அலட்சியத்துடனே அணுகுவதாக எனக்குத் தோன்றுகிறது.


முதலில் காப்பீட்டுப் பத்திரத்திற்கான மனுவினை நிரப்புவதிலேயே பலர் அலட்சியப் போக்கினை மேற்கொள்கிறார்கள். "....ம்ம் எங்கே எங்கே கையெழுத்து போட வேண்டும் சொல்லுங்கள்!" என்று நமது அவசரத்தில் முகவர் எந்த எந்தக் கேள்விக்கு எவ்வாறு பதிலளித்துள்ளார் என்பதையே கவனிக்க மறந்து போகிறோம். முகவரோ, சங்கடமான கேள்விகளுக்கெல்லாம், அவரது விருப்பம் போலவே ஒரு பதிலினை எழுதி, பத்திரத்தினையும் வாங்கி நம்மிடம் அளிக்கிறார். நாமும், எவ்வித யோசனையுமின்றி அதனை மற்ற பத்திரங்களோடு பத்திரமாக வைத்துக் கொள்கிறோம். இவ்வித அலட்சியத்தின் பலனை பல வருடங்களுக்கு முன்னர் நான் ஏற்றுக் கொண்ட ஒரு வழக்கில் கண்ணுற நேர்ந்தது.

-oOo-


அந்த வழக்கின் வாதி மத்திய கிழக்கு நாட்டில் ஒரு தொழிலாளி. விபத்து ஒன்றில் காயமுற்ற அவர், வேலையிழக்க நேரிட்டது. இந்தியா திரும்பியவர் சிறிய இட்டிலிக்கடை நடத்தி வந்த தனது மனைவியின் பெயரில் அறுபதினாயிரம் ரூபாய்க்கு ஒரு காப்பீட்டுப் பத்திரம் வாங்கினார். ஏதோ ஒரு காரணத்தினால் மனைவி இறக்க நேரிட காப்பீடுப் பணத்தினை கோரியவருக்கு காப்பீட்டுக் கழகம் அளிக்க மறுத்தது. காரணம், மனுவில் அவர், 'பார்த்து வரும் வேலை' என்ற கேள்விக்கு, 'மத்திய கிழக்கு நாட்டில் தொழிலாளி' என்று பதிலளித்திருந்தார். 'ஆனால் காப்பீட்டுப் பத்திரம் வாங்கிய வேளையில் அவர் பணியில் இல்லை. எனவே தவறான தகவல் மூலம் பத்திரம் பெறப்பட்டது' என்பதே!

பலமுறை காப்பீட்டு நிறுவனத்துடன் முட்டி மோதிய பின்னர், நெல்லை நுகர்வோர் நீதிமன்றத்தினை அணுக, 'இந்தத் தவறான பதில், காப்பீட்டினை பாதிக்கும் அளவிற்குப் பெரிய தவறுதல் இல்லை' என்று கூறி அவருக்குச் சாதகமாக தீர்ப்பு கிடைத்தது.

காப்பீட்டு நிறுவனம் சென்னைக்கு மேல்முறையீடு செய்தது. மேல்முறையீட்டில் கூறப்பட்ட காரணம், 'காப்பீடு கிடையாது என்று மறுக்கப்பட்ட பின்னர் கொடுக்கப்பட்ட கால அளவிற்குள் அவர் நீதிமன்றத்தினை அணுகவில்லை' என்பதாகும். நல்ல வேளை, அவரோடு அவரது மைனர் மகன்களும் வாதிகள். மைனர்கள் மேஜராகும் வரை காலதாமத விதி பொருந்தாது. இதை நான் குறிப்பிட்ட மேல்முறையீட்டினை விசாரித்த நீதிபதிக்கும் நிம்மதி!


'நிலைத்த அன்பின் நீடித்த அடையாளம்' என்று விளம்பரப்படுத்தும் ஆயுள் காப்பீட்டு நிறுவனமா காலதாமத விதியினைக் கூறி ஒரு ஏழைத் தொழிலாளியின் வயிற்றிலடிப்பது?' என்ற வாதத்தினை நான் வைத்தாலும் நீதிமன்றம் அபராதத் தொகை ஏதும் விதிக்கவில்லை. ஏதோ இந்த மட்டுமாவது பணம் வந்ததே என்ற திருப்தி வாதிக்கும். ஆனால் அவர் இழந்தது சில வருடங்கள்!

-oOo-


பொதுவாக, ஆயுள் காப்பீட்டு மனுவினை ஒரு நகல் எடுத்து, நமது காப்பீட்டுப் பத்திரத்துடன் சேர்த்து பாதுகாத்தல் நலம். அதோடு நின்று விடாமல், நமது காப்பீட்டு பத்திரத்தில் உறுதி கூறப்பட்டுள்ள பலன்களைப் பற்றி, நமது வாரிசுகளிடம் சற்று விளக்கி வைத்திருத்தலும் நலம் பயக்கும். 'நெருப்பு என்றால் வாய் வெந்து விடாது'.


எனவே துரதிஷ்டமான ஒரு நிலைக்கு அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி விவாதித்தலில் தவறு ஏதும் இல்லை. ஏனெனில் பத்திரம் அளித்ததாலேயே, அதன்படி நிறுவனம் நடந்து கொள்ளும் என்பதற்கு உத்தரவாதமில்லை!


முக்கியமாக, இந்த 'விபத்திற்கான இரட்டிப்பு பலன்' (Double Benefit/ Accident Benefit) என்ற ஒரு உறுதியில் நிறுவனம் பின்வாங்கும் நிலை சில சமயங்களில் ஏற்படுகிறது. சில காப்பீட்டுப் பத்திரங்களில், 'With Accident Benefit' என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அதாவது, இயற்கையாக இன்றி விபத்தின் மூலம் மரணம் நேரிடுகையில் இவ்வகை காப்பீட்டின் பயனாளிகளுக்கு ஆயுள் காப்பீட்டுத் தொகை இரட்டிப்பாக வழங்கப்படும். விபத்து என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது, வாகன விபத்துதான். ஆனால் சட்டப்பிரகாரம், 'விபத்து' என்பதற்கு 'எதிர்பாராத நிகழ்வு' என்றே அர்த்தம்.

-oOo-


1993ம் வருடம் ஆந்திர மாநிலத்தினைச் சேர்ந்த கங்கா ரெட்டி என்பவர் வீட்டிலிருந்து வெளியே இழுத்து நக்ஸலைட்டுகளால் கொல்லப்பட்டார். நம்மில் பலரைப் போலவே இது ஒரு விபத்து அல்ல என்று கருதி விபத்தின் பலனினை அளிக்க மறுத்த காப்பீட்டு நிறுவனம், ஒரு படி மேலே சென்று, 'இது கலவரத்தில் நிகழ்ந்த மரணம். எனவே போர், மலையேறுதல், கலவரம் மூலம் நிகழும் மரணங்களுக்கு காப்பீடு அளிக்க வேண்டியதில்லை' எனவும் வாதிட்டது.


இந்த வாதங்களை நிராகரித்து தேசிய நுகர்வோர் தீர்ப்பாயம் (National Consumer Disputes Redressal Commission) கலவரம், போர் போன்றவை சட்டரீதியிலான பதங்கள் அல்ல என்று விபத்தின் இரட்டிப்பு பலனை அளிக்க தீர்ப்பு கூறியது. ஆயினும் இன்றும் இப்பதங்களை காப்பீட்டுப் பத்திரங்களில் நீங்கள் பார்க்கலாம். காப்பீட்டு நிறுவனத்தின் வாதம் சரியென்றால், 'அமெரிக்காவின் மீதான போர்' என வருணிக்கப்படும் செப்டம்பர் 11 தாக்குதலில் மரணமுற்ற மக்களுக்கு காப்பீடு கிடைக்க வாய்ப்பில்லை.


பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் மீண்டும் நீதிமன்றங்கள் பாம்பு கடித்ததால் நேரிடும் மரணமும் விபத்தே என்று காப்பீட்டு நிறுவனத்திற்கு அறிவுறுத்த நேரிட்டது. 2001ம் வருடம் குஜராத்தில் நிகழ்ந்த கோரமான பூகம்பத்தில், இழந்த உயிர்களுக்கு விபத்திற்கான காப்பீடு உண்டு என்று ஆயுள் காப்பீட்டு நிறுவனம் தாமாகவே வலிய அறிவித்தது.


சமீபத்தில் நடந்த ஒரு வழக்கின் தீர்ப்பும் இவ்வாறான ஒரு சிக்கலினை பின்னர் எதிர்கொள்ள நேரிடும் ஒருவருக்குப் பலனளிக்கலாம். இந்த வழக்கில் விபத்து நேரிட்ட ஒருவர், விபத்து நடந்து 180 நாட்கள் கழித்து மரித்துப் போனார். காப்பீட்டுப் பத்திரத்தின்படி இரட்டிப்பு பலனடைவதற்கு, விபத்து நடந்து 180 நாட்களுக்குள் மரணம் சம்பவிக்க வேண்டும். மண்டி நுகர்வோர் நீதிமன்றம், இவ்விதி சமூக நலனுக்கு எதிரானது என்று கூறி, 'மரணத்திற்குக் காரணம் விபத்து என்று நிரூபிக்கப்பட்டாலே போதுமானது' என்று கூறியது.



இறுதியாக முதலில் கூறிய சென்னை வழக்கு. இந்த வழக்கிலும் ஏற்கனவே தேசியத் தீர்ப்பாயம் கூறிய தீர்ப்பினைக் கண்டுகொள்ளாமல், மீண்டும் காப்பீட்டு நிறுவனம் கலவரம் (Riot) என்று பழைய பல்லவியைப் பாடியது. ஆனால், சென்னை நுகர்வோர் தீர்ப்பாயம் மீண்டும் காப்பீட்டு நிறுவனத்திற்கு அறிவுறுத்த வேண்டியதாயிற்று.இவ்வித சம்பவங்கள் அனைத்திலும், ஏதோ ஒரு உணர்வில் அல்லது அறிவுறுத்துதலில் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றம் சென்றுள்ளனர். ஆனால் இவ்விதப் புரிந்து கொள்ளுதல் இன்றி பலர், 'ஏதோ அவர்கள் அளித்ததுதான் காப்பீட்டு பணம்' என்று எவ்வித எதிர்ப்பும் இன்றி கொடுத்ததை வாங்கிச் சென்றிருக்கலாம்...

மதுரை
21.10.05


WHEN IT STOPPED RAINING...

4 comments:

PRABHU RAJADURAI said...

சில தினங்களுக்கு முன்னர், தூக்க கலக்கத்தில் மாடியில் இருந்து விழுந்து இறந்த ஒரு வழக்கில், வழக்கம் போலவே 'விபத்தில்லை' என்று கூறி காப்பீட்டு நிறுவனம் தப்பிக்கப்பார்த்ததை நீதிமன்றம் அனுமதிக்கவில்லை என்று செய்தித்தாளில் படித்தேன்.

Bruno_புருனோ said...

அரசின் நிறுவனங்களே இப்படி என்றால் தனியார் நிறுவனங்கள் எப்படியோ ???

நீங்கள் கூறியது போல பலரும் இது குறித்து விழிப்புணர்வு இன்றியே இருக்கிறார்கள்.

இதற்கு ஒரு காரணம் நாம் நிரப்பும் படிவத்தின் மேல் காட்டும் அலட்சியம். அதில் என்ன இருக்கிறது என்று பார்க்காமலே கையெழுத்து இடுவது !!

தமிழ்நாடு அரசு பொது தேர்வாணையம் நடத்தும் தேர்வுக்கு கையெழுத்து கூட போடாமல் விண்ணப்பம் அனுப்பியவர்கள் உண்டு தெரியுமா....

Sridhar V said...

மிகுந்த பயனுள்ள பதிவு. மிக்க நன்றி

Indian said...

நல்ல பயனுள்ள பதிவு.