29.3.08

இந்திய ஆட்சி மொழியும் நீதிமன்ற நிலைப்பாடும் - பகுதி I


சமீபத்தில் 'பிராந்திய மொழிகளில் சிறந்த வலைப்பதிவாக' தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 'சைன் குவா நான்' என்ற வலைப்பதிவில் அதன் உரிமையாளரான வெங்கட் இந்து பத்திரிக்கையில் வெளிவந்த ஒரு செய்தியினை முன்னிறுத்தி தனது கருத்துகளை வெளியிட்டு இருக்கிறார். இந்துப் பத்திரிக்கையில் வெளிவந்த செய்தியின் தலைப்பும் ஏதோ இந்தியாவின் ஆட்சி மொழி 18லிருந்து 22க உயருவதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது. ஊடகங்கள் பல சமயங்களில் சட்டத்தினைப் பற்றிய தவறான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்கின்றன' என்று நான் அடிக்கடி கூறுவதற்கு 'இந்து'வின் செய்தியும் ஒரு உதாரணம்.

நமது அரசியலமைப்புச் சட்டப்படி இந்தியாவின் ஆட்சி மொழி 'தேவநாகரி உருவில் எழுதப்படும் ஹிந்தி மட்டுமேயன்றி வேறு எந்த மொழியும் கிடையாது (ஆர்டிகிள் 343).

ஆனால் அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்து (1950) முதல் பதினைந்து ஆண்டுகளுக்கு ஆங்கிலம் மத்திய அரசு அலுவலக பணிகளுக்காக நீடிக்கலாம். ஆனாலும், இதற்குள்ளான காலத்திலேயே குடியரசுத் தலைவர் உத்தரவுப்படி ஹிந்தியும் ஆங்கிலத்தோடு சேர்ந்து அரசு அலுவலக பணிகளுக்காக பயன்படுத்தப் படலாம். இறுதியாக பதினைந்து ஆண்டுகள் கழித்தும் ஆங்கிலத்தின் பயன்பாட்டினை பாராளுமன்றம் தகுந்த சட்டமியற்றுவதின் மூலம் தொடரலாம். இதுதான் இந்த அரசியலமைப்புச் சட்டம் கூறுவது.

இவ்வாறாக ஆங்கிலத்தின் பயன்பாட்டினையாவது தென்னிந்தியாவை சேர்ந்த அரசியலமைப்பு வரைவுக் குழு (Constituent Assembly) உறுப்பினர்கள் போராடிப் பெறுவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது!

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நமது அரசியலமைப்புச் சட்டத்தினை வடிவமைப்பதற்காக அரசியலமைப்பு சட்டவரைவுக் குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டது. பொதுவாக அனைவரும் இசைந்த ஒன்றுபட்ட கருத்துக்களினாலேயே சட்டப்பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டன என்றாலும், இந்த மொழிப் பிரச்னையில் ஹிந்தி ஆதரவாளர்கள் குழுவினை பிளக்கும் அளவிற்கு சென்றனர்.

-oOo-

மொகலாயர்கள் வருகைக்குப் பிறகே ஒன்றுபட்ட இந்தியா உருவானது. அவர்களது தாக்கத்தால், பெர்ஷியா நீதிமன்ற மொழியாகவும் உருது வணிக மொழியாகவும் உருப்பெற்றன. ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பின்னர் நமது நீதிமன்றங்கள், அரசு நிர்வாகம் மேலும் முறைப்படுத்தப்பட்டு ஆங்கிலத்தின் ஆட்சி ஏற்பட்டது.

சுதந்திரப் போராட்ட காலத்தில் மகாத்மா காந்தி ஹிந்துஸ்தானியை ஆட்சி மொழியாக வழி மொழிந்தார். அதாவது பெர்ஷிய தாக்கம் மிகுந்த உருதுவையும் சமஸ்கிருதத்தின் தாக்கம் மிகுந்த ஹிந்தியையும் இணைத்து உருவாக்க விரும்பிய மொழிதான் ஹிந்துஸ்தானி. காந்தியின் சமரசத்தின் நோக்கம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனால் இந்தியா மதரீதியாக பிளவுபட்டதும் ஹிந்துஸ்தானி முழக்கம் வலு இழந்து ஹிந்தி வலுப்பெற்றது.

இந்தியாவில் தேசிய மொழி என்பது ஏதும் இன்று வரை கிடையாது. ஏனெனில் ஹிந்தியை தாய் மொழியாக கொண்டவர்கள் பெரும்பான்மையினர் கிடையாது. ஆனால் மற்ற மொழிகளை விடவும் ஹிந்தி பேசுபவர்கள் அதிகம் என்ற நிலையில் அரசியலமைப்புச் சட்டவரைவுக் குழுவிலும் அவர்களது தாக்கம் அதிகம் இருந்தது. அதில் சிலர் ஹிந்திதான் வேண்டும் என்ற தீவிரவாதிகளாக இருந்தனர்.

ஆனால் காங்கிரஸில் இருந்த மற்ற மொழி மிதவாதிகளின் ஆதரவாலும், அவர்களுக்கு நேரு அளித்த ஆதரவாலும் விளைந்ததே முன்ஷி-ஐயங்கார் பார்முலா என்றழைக்கப்படும் மேற்சொன்ன அரசியலமைப்பு சட்டப் பிரிவு.

'ஹிந்தி, ஹிந்துஸ்தானியை ஒதுக்காமல் அனைத்து மொழிகளிலிருந்து வார்த்தைகளை தழுவி நாட்டின் கலாச்சார ஒற்றுமையை பேணாத வகையில் அதை அரசு மொழியாக ஏற்றுக் கொள்ள மாட்டேன்' என்று நேரு சட்டவரைவுக்குழுவிடம் கூறியது குறிப்பிடத் தக்கது.

-oOo-

அவ்வாறு என்றால் ஹிந்துவின் செய்தியிலும், வெங்கட்டின் வலைப்பதிவிலும் குறிப்பிடப்படும் பதினெட்டு மொழிகள் என்ன வகையானவை? அரசியலமைப்புச் சட்டத்தின் இணைப்பாக பல பட்டியல்கள் (schedule) இருக்கின்றன. இவற்றில் இடம் பெற்றுள்ள மொழிகள்தான் இந்த பதினெட்டு மொழிகள். இவற்றை அட்டவனை மொழிகள் என்றே அழைக்க வேண்டுமேயொழிய ஆட்சி மொழிகள் என்று அழைப்பது தவறு.

இவற்றின் சிறப்புத் தகுதி என்ன?

எனக்கு அதிகம் தெரியவில்லை. தெரிந்தவரை ஆர்டிகிள் 344ன் படி அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்து ஐந்து மற்றும் பத்து ஆண்டுகள் கழித்து குடியரசுத் தலைவர் ஒரு ஆணையம் (Commission) ஏற்படுத்த வேண்டும். இந்த ஆணையத்தில் இந்த அட்டவணையில் இடம் பெற்றுள்ள மொழிகளில் ஒவ்வொன்றையும் பிரதிநிதித்துவம் செய்ய ஒரு உறுப்பினர் இடம் பெற வேண்டும்.

சரி, இந்த ஆணையத்தின் பணிதான் என்ன?

சுருக்கமாக கூறப் போனால் இந்திய அரசுப் பணியில் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளில் ஆங்கிலத்தை மட்டுப்படுத்தி ஹிந்தியை பயன்படுத்தும் வழிகள் குறித்து ஆலோசனைகளை வழங்குவது.

இதே பிரிவினை எழுதியவர்களுக்கு வேறு ஒரு பயம் வந்து விட்டது. அரசுப் பணி எப்படியெனினும், தொழில், வணிகத் துறையில் ஆங்கிலம்தானே கோலோச்சுகிறது. மேலும் வணிகம், தொழில் போன்றவை இந்தியா முழுவதும் ஏன் உலகம் முழுவதுமே பரவலானது. இப்படி ஹிந்தி ஹிந்தி என்று அடித்துக் கொண்டால் அவை பாதிக்காதா?

எனவே இத்தகைய ஆலோசனைகளை வழங்குபவர்கள் நாட்டின் தொழில், விஞ்ஞான மற்றும் கலாச்சார முன்னேற்றத்தையும் ஹிந்தி பேசாத மாநில மக்களின் நலன்களையும் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.

அடுத்து ஆர்டிகிள் 351லும் இந்த எட்டாவது பட்டியலில் கண்ட மொழிகள் பற்றி வருகிறது. இந்தப் பிரிவு முக்கியமானது. அதாவது மத்திய அரசாங்கம் இந்தியாவின் ஒன்றுபட்ட கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வண்ணம் அதனை வளப்படுத்த்தி அனைத்து மக்களும் அதை பயன்படுத்தும் வண்ணம் பரவலாக்க வேண்டும்.

எவ்விதம் வளப்படுத்த வேண்டும்?

நேரு விரும்பியபடி ஹிந்தியின் ஜீனியஸ்தன்மை கெட்டுவிடாத வண்ணம் ஹிந்துஸ்தானி மற்றும் எட்டாவது அட்டவணையில் கண்ட பிற மொழிகளின் அமைப்பு, ஸ்டைல், வெளிப்படுத்தும் தன்மை (expression) ஆகியவற்றை சுவீகரித்து வேண்டுமிடங்களில் வார்த்தைகளை முதற்கண் சமஸ்கிருதத்திலிருந்தும் இரண்டாவதாக மற்ற மொழிகளில் (அனைத்து மொழிகள்) இருந்தும் தழுவி வளப்படுத்தப்பட வேண்டும்.

எட்டாவது பட்டியலில் சேர்க்கப்படும் மொழிகளின் பணி இத்தோடு முடிந்தது. வேறு எந்தவிதமான சிறப்புத் தகுதியோ ஆட்சி மொழித் தகுதியோ இவற்றிற்கு இல்லை. ஒருவேளை மைய அரசுப் பணிக்கான தேர்வுகளை இந்த மொழிகளில் எழுதலாம் என்பது அடுத்த தகுதியாக இருக்கலாம். இதற்காக அரசியலமைப்புச் சட்டத்தை திருத்த வேண்டிய அவசியமில்லை. நிலைமை இப்படியிருக்கையில் இதற்கெல்லாமா ஒரு போராட்டம்?

இத்தனை குழப்பத்தில் தெளிவான, உருப்படியான ஒரு பிரிவு ஆர்டிகிள் 350. இதன்படி தனது குறைகளை போக்க மைய அரசுக்கு மனுச் செய்யும் ஒருவர் இந்தியாவிலோ பயன்படுத்தப்படும் எந்த மொழியிலும் மனுச்செய்யலாம். அது போலவே மாநில அரசுக்கு மனுச் செய்பவர் அந்த மாநிலத்தில் பயன்படுத்தப்படும் எந்த மொழியிலும் மனுச் செய்யலாம். ஆட்சி மொழியில் அல்லது பணிக்காக பயன்படுத்தும் மொழியில் இல்லை என்று நிராகரிக்க முடியாது. எந்த மொழியில் எழுதினாலும் குப்பைத் தொட்டிதான் என்பது வேறு விஷயம்.

பதினைந்து வருட காலத்தில் என்ன நிகழ்ந்தது என்பது அடுத்த பகுதியில்.

மும்பை
26.12.03


பி.கு. மொழி சரி, எண்களைப் பற்றி கூறுவது என்ன? அங்கும் குழப்பம். அரசியலமைப்பு சட்டம் இந்திய அரசுப் பணிக்காக 'சர்வதேச அமைப்பில் அமைந்த இந்திய எண்கள்' பயன்படுத்தப்பட வேண்டும் என்கிறது. மேலும் குடியரசுத் தலைவர் தேவநாகரி எண்களை பயன்படுத்தவும் உத்தரவிடலாம் என்கிறது. சர்வதேச அமைப்பில் அமைந்த இந்திய எண்கள் அரபிய எண்கள் என்பதற்கான இடக்கரடக்கலான பதம் என்கிறார் சட்ட மேதை எச்.எம்.சீர்வாய்.

2 comments:

பிரபு ராஜதுரை said...

பல ஆண்டுகளுக்கு முன்னர் நான் எழுதிய இந்தக் கட்டுரையினை இங்கு பதிவதில் சில முக்கியத்துவங்கள் உள்ளன. அப்பொழுது கட்டுரையினை படித்த இட்லி வடை :-))க்ருபா சங்கர், தமிழ்மணம் காசி போன்றவர்கள் வலைப்பதிவு ஒன்றினை ஏற்ப்படுத்தி, இதை வெளியிட வேண்டி எனது வலைப்பதிவுக்கு முதல் காரணமாக இருந்தனர்.

இரண்டாவது, இந்தக் கட்டுரைக்காகவும், பின் தொடர்ந்து 'நிழல்கள்'ஹரன்பிரசன்னாகேட்ட கேள்விகளுக்காகவும் நான் நிறைய படித்தேன். அப்போது தோன்றியதுதான் 'மணற்கேணி' என்ற இந்த வலைப்பதிவிற்கான் தலைப்பு!

புருனோ said...

//எந்த மொழியில் எழுதினாலும் குப்பைத் தொட்டிதான் என்பது வேறு விஷயம்.//

தகவல் அறியும் உரிமை சட்டம் வந்தபின் இந்த நிலைமை மாறியுள்ளது.

மனுமீது நடவடிக்கை இருக்கோ இல்லையோ, ஒரு பதில் வருகிறது.

இது ஒரு ஆரம்பமாக கொள்வோமே