29.3.08

இந்திய ஆட்சி மொழியும் நீதிமன்ற நிலைப்பாடும் - பகுதி II


ஹிந்தி வேண்டாம் என்றால் ஆங்கிலம் மட்டும் அந்நிய மொழியில்லையா? அதன் தேவை என்ன? உணர்வு பூர்வமாக அணுகினால் இந்த வாதம் சரியே! ஆனால் நடைமுறையில், இந்தியா ஒன்றுபட்டிருப்பதற்கு ஆங்கிலம் முக்கியமான ஒரு காரணம் என்று நான் உணர்கிறேன். இதை நான் சந்தித்த பலரும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

உதாரணமாக, அரசியலமைப்புச் சட்டத்தின் 345வது பிரிவின் படி மாநில அரசுகள் ஹிந்தியையோ அல்லது அந்தந்த மாநிலத்தில் பயன்படுத்தப்படும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மொழியையோ தனது அலுவலகப் பணிகளுக்கான மொழியாக பயன்படுத்த அனுமதியளிக்கிறது.

348வது பிரிவின் படி குடியரசுத் தலைவரின் அனுமதி பெற்று மாநில அரசு ஹிந்தியையோ அல்லது அந்த மாநிலத்தில் அரசுப் பணிகளுக்காக பயன்படுத்தப்படும் மொழியையோ அந்த மாநிலத்தில் உள்ள உயர்நீதிமன்றத்தில் பயன்படுத்தலாம் என்று கூறுகிறது. இவ்வாறான ஒரு நிலையில் என்ன நிகழும்?

நீதிமன்றத்துக்கு நீதிமன்றம் குழப்பம் நிலவும். உயர் நீதிமன்றங்களில் இருந்து மேல் முறையீட்டுக்கு உச்ச நீதிமன்றம் செல்கையில் மேலும் குழப்பம். ஏறக்குறைய இவ்வாறான நிலையை கிறிஸ்தவர்களின் வேதத்தில் கூறப்படும் 'பாபேல் கோபுர' நிலைக்கு சட்ட மேதை எச் எம் சீர்வாய் ஒப்பிடுகிறார்.

ஆங்கிலம் ஒன்றே இந்த நாட்டு மக்களை ஒருங்கிணைக்கும் ஒரு கருவியாக, நாட்டின் பல மாநிலங்களுக்கும் பயணம் செய்திருக்கும் பலர் அறிவர்.

-oOo-

1952ல் ஹிந்தியும், தேவநாகரி எண்களும் மாநில ஆளுஞர்கள், உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோரை நியமிக்கும் உத்தரவில் பயன்படுத்தப்படலாம் என்பது நடைமுறைக்கு வந்தது.

1955ல் பிற அரசுப் பணிகளுக்காகவும் ஹிந்தி பயன்படுத்தப்படலாம் என்பது நடைமுறைப்படுத்தப்பட்டது.

1956ல் அரசியலமைப்புச் சட்டம் விரும்பியபடி, ஹிந்தியின் பயன்பாட்டை அதிகரிக்க ஆலோசனை வழங்க அமைக்கப்பட்ட பி.ஜி.கெர் ஆணையம் தனது அறிக்கையை குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பித்தது.

1959ல் கெர் ஆணையத்தின் அறிக்கையை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட கோபிந் வல்லப் பந்த் தலைமையில் அமைக்கப்பட்ட பாராளுமன்ற குழு தனது அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து ஆட்சி மொழியினைப் பற்றிய விவாதம் தொடங்கியது.

விவாதம் சூடு பிடிக்க, நேரு 'இந்தியாவின் அனைத்து மொழிகளும் அதன் தேசிய மொழிகளாக சமமாக மதிக்கப்படும். ஆங்கிலம் ஹிந்தியோடு தொடர்ந்து அரசுப் பணிகளுக்காக பயன்படுத்தப்படும். அதனை நீக்குவதற்கான கால அவகாசம் ஏதும் கிடையாது' என்று பாராளுமன்றத்தில் உறுதியளித்தார்.

ஆனால் தேசிய மொழி என்பது உணர்வு பூர்வமான பதம். சட்டபூர்வமான அங்கீகாரம் அதற்கு கிடையாது.

-oOo-

1960ல் ஹிந்தியை பரப்புவதற்காகவும், மைய அரசு அதிகாரிகளுக்கு ஹிந்தி பயிற்சி அளிப்பதற்காகவும், ஹிந்தி கலைச்சொற்கள், நடைமுறை வழக்கத்திற்காக ஹிந்தி கையேடுகள் உருவாக்கவும் மற்றும் உயர் நீதிமன்ற உச்ச நீதிமன்றத்தில் பயன்படுத்தப்படும் வண்ணம் ஹிந்தி சட்ட வரைவுகளை எழுதவும் அதிகாரமளித்து குடியரசுத் தலைவரின் உத்தரவு கையெழுத்தானது.

இந்த உத்தரவின்படி 45 வயதுக்கு குறைவான மைய அரசு அதிகாரிகள் கண்டிப்பான ஹிந்தி வகுப்புகளுக்கு செல்ல வேண்டும். அதில் தேறாவிட்டால் தண்டனை ஏதும் கிடையாது என்றாலும் தேறியவர்களுக்கு ஊக்கத் தொகை போன்றவை வழங்கப்படும். ஹிந்தி பேசும் பகுதிகளில் உள்ள மைய அரசு பணிக்கான பணியாளர்களை நியமிக்கையில் அவர்களுக்கு தேவையான ஹிந்தி அறிவு இருத்தல் வேண்டும்.

1962ல் வெளியான ரயில்வே போர்டு அறிவிப்பு, 'ஹிந்தி பயிற்சி மிகவும் மந்தமாக இருப்பதாக கவலைப்பட்டு பயிற்சிக்கு வராத அலுவலர்கள் வேலைக்கு வராதவர்களாக கருதப்படுவார்கள்' என்று எச்சரித்தது.

போதாதா? தமிழக அரசியல் மொழிப் பிரச்னையில் மெல்ல மெல்ல புகையத் தொடங்கியது.

இதற்கிடையில் அரசியலமைப்புச் சட்டத்தின் பதினைந்து வருட கெடு நெருங்கிக் கொண்டிருந்தது. நேருவுக்கோ இரு பக்கமும் நெருக்கடி!

-oOo-

பதினைந்து ஆண்டுகள் ஆனாலும், ஆங்கிலத்தின் பிடியை நீக்க முடியவில்லை. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு 1965ம் வருடம் ஆட்சி மொழிகள் சட்டம்'1963 நடைமுறைக்கு வந்தது.

ஆட்சி மொழி என்னவோ ஒன்றுதான் என்றாலும் ஆட்சி மொழிகள் சட்டம் என்று பன்மையில் இந்த சட்டத்தின் தலைப்பு அமைந்திருப்பது சட்டத்தை இயற்றியவர்களுக்கே வெளிச்சம்!

இதன் மூலம் ஹிந்தி ஆட்சி மற்றும் அரசுப் பணிகளுக்கான மொழியென்றாலும், ஆங்கிலம் ஹிந்தியோடு சேர்ந்து பயன்படுத்தப் படலாம் என்று கூறப்பட்டது. இதற்கிடையில் தமிழகத்தில் போராட்டம் தீவிரப்பட நேரு, 'ஹிந்தி பேசாத மக்கள் விரும்பி ஏற்றுக் கொள்ளும் வரை ஆங்கிலம் நீக்கி ஹிந்தி மட்டுமே அரசு பயன்பாட்டு மொழியாக மாற்றப்பட மாட்டாது' என்று உறுதி கூறினார்.

இந்த உறுதிக்கு சட்ட வடிவம் கொடுக்கும் வகையில் 1968ல் ஆட்சி மொழிகளின் சட்டத்தில் 'அனைத்து சட்ட மன்றங்களும் ஆங்கிலத்தை நீக்கி ஹிந்தியை மட்டும் அரசு பயன்பாட்டு மொழியாக பயன்படுத்தலாம் என்று தீர்மானம் நிறைவேற்றி அதை பாராளுமன்றத்துக்கு அனுப்பும் வரை, ஆங்கிலமும் ஹிந்தியோடு பயன்பாட்டு மொழியாக நடைமுறையில் இருக்கும்' என்று ஒரு திருத்தம் கொண்டு வரப்பட தமிழகம் அமைதியடைந்தது.

அதற்கிடையே இங்கு ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை முன்னின்று நடத்திய தி.மு.க ஆட்சிக்கும் வந்திருந்தது.

இதற்கிடையில் இந்த மொழிப்பிரச்னை முக்கியமான ஒரு மனிதரின் பதவியை காவு வாங்கியது. 1967ன் இறுதியில் 'ஆங்கிலத்தை விடுத்து ஹிந்திக்கு முதலிடும் கொடுக்கும் மந்திரி சபையின் கல்விக் கொள்கை' மீதான முடிவினை எதிர்த்து முன்பு கல்வி அமைச்சராக பணியாற்றிய வெளியுறவு மந்திரியும் சட்ட மேதையுமான எம்.சி. சாக்ளா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

எது எப்படியோ, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ஹிந்திக்கு மட்டுமே "முதலிடம்" என்று சொல்வதை விட ஹிந்திக்கு மட்டுமே "இடம்" என்று சொல்வதுதான் சரியானதாக இருக்கும்.

அடுத்து இந்த மொழிப் பிரச்னை எப்படி நீதிபதிகளையும் பாதிக்கிறது என்று பார்க்கலாம்.

மும்பை
26.12.03

1 comment:

செந்தில் said...

இத்தனை காலமாக தமிழும் இந்தியாவின் one of the offical langauage , hindiக்கு இணையான மொழி என்று நினைத்து வந்த எனக்கு ,உங்களின் தகவல் வருத்தத்தையளிக்கிறது. இது national languageக்கும் , official languageக்கும் வித்தியாசம் தெரியாமல் குழம்பியிருந்ததால் என்று நினைக்கிறேன். மிற்ற இந்திய மொழிகள் அனைத்தும் ஏதோ scheduled langauage என்பது நேர்மையான ஒன்றாக எனக்கு தோன்றவில்லை. சிங்கப்பூர் , இலங்கை கொடுத்திருக்கும் அங்கிகாரம் கூட இந்தியா மிற்ற மொழிகளுக்கு குடுக்கவில்லை. என்னதான் practical difficulties இருந்தாலும் இதை இந்தியா எதாவது ஒரு வழியில் இதை விட betterஆக handle செய்திருக்க வேண்டும் என்பது என் எண்ணம்.